நானும் என் வெப் சீரியல்களும்

நானும் என் வெப் சீரியல்களும்

நீங்கள் 2017 ஆம் ஆண்டு வரை எத்தனை வெப் சீரிஸ் பாத்திருப்பீர்கள்? வெப் சீரிஸ் என்ற வார்த்தை கூட அவ்வளவாக பிரபலம் ஆகாத நேரமது.  ஓடிடி என்ற வார்த்தை புழக்கத்துக்கே வந்திருக்காத காலமது. அந்த காலகட்டத்தில்தான், நான் வெப் சீரிஸ் எழுதி இயக்கத் தொடங்கி இருந்தேன்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எல்லோர் மனதிலும் ஓர் உத்வேகத்தை உண்டாக்கி இருந்தது. அப் போராட்டம் நடந்த சமயத்திலும் அதற்குப் பின்பும் நண்பர்களுடன் இணைந்து யூடியூப்பில் அரசியல் நையாண்டி வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அவை அனைத்தும் Non-fiction  வகையறாக்கள். என்னுடைய ஆர்வம் எப்போதும் ficton ஏரியாவில் தான் மையம் கொண்டிருந்தது. எனவே, வெப் சீரிஸ் செய்யலாம் என்று முடிவு செய்தேன். பட்ஜெட், இன்ன பிற காரணங்களால் உடனிருந்த யூடியூப் நண்பர்கள் யாருக்கும் அதில் நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. நானும் பின்வாங்குவதாக இல்லை. அப்போது தமிழில் Half boil , I am suffering from kadhal ஆகிய சீரிஸ்கள் மட்டுமே வந்திருந்தன.

கல்லூரி நண்பன் ஜெயபிரகாஷ் நாராயணனும் நண்பர் கபிலன் சிவபாதமும் வீடியோ உபகரணங்கள் வாங்க உதவினார்கள். கல்லூரித் தோழி வர்ஜீனியா ஜோசபின், அவர் வாடகைக்கு இருந்த வீட்டில் சூட்டிங் நடத்த அனுமதித்தார். கேமிராமேன் சேதுராஜன் இராஜகோபால் என் மீது நம்பிக்கை வைத்து உடன் நின்றான். பிளாக் பசங்க என்று யூடியூப் சேனல் தொடங்கினேன்.  என் மனைவி ஜெயாவுக்கும் எனக்கும் இடையிலான காதலை மையமாக வைத்து கால் கட்டு என்ற வெப்சீரிஸை எழுதினேன்.

முதல் எபிசோட்  ' Wife ஊருக்குப் போறா' வெளி வந்த உடனே கவனம் பெறத் தொடங்கியது. சத்யா - பிரதீப் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப் போனது. அடுத்தடுத்த எபிசோடுகள் செய்யத் தொடங்கினேன். சீசன் 3 வரை போனது. நான்கு வீடியோக்கள் செய்யலாம் என்று நம்பி ஆரம்பித்த கால்கட்டு சீரிஸ் 25 எபிசோடுகளுக்கு மேல் வெளிவந்தது. அனைத்தையும் நானே எழுதி இயக்கினேன்.

கால்கட்டு சீரிஸ் பார்த்துவிட்டு yuv app ஓடிடியில் இருந்து அழைப்பு வந்தது. கால்கட்டு சீரிஸ் மென்மையான உணர்வுகளை பிரதிபலித்தது. அதற்கு முற்றிலும் மாறுபட்டு கஞ்சா என்ற 15 எபிசோட்கள் கொண்ட வெப்சீரிஸை எழுதி இயக்கினேன். அதுவும் பரவலாக கவனம் பெற்றது.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடையாளங்களின் ஒன்றான விகடனில் இருந்து அழைப்பு வந்தது. அவர்களின் யூடியூப் சேனலுக்காக கப்ஸா கல்யாணம் என்ற காமெடி சீரிஸ் 10 எபிசோடுகள் இயக்கினேன். விகடனுக்காக தொடர்ந்து வெப்சீரிஸ்கள் இயக்க அருமையான வாய்ப்பு இருந்தது. ஏனோ அது கை கூடி வரவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம். அதன் பின்பு, என்னுடைய பிளாக் பசங்க சேனலில் ஆசை நூறு வகை என்ற சீரிஸும், இன்னும் பிற சேனல்களுக்கு காத்துவாக்குல 3 காதல், மாயநதி, டூடேஸ் லவ், பிரா மேன் என தொடர்ந்து சீரிஸ்களை செய்து கொடுத்திருக்கிறேன். அடுத்த மாதம் கூட லிப்லாக் என்ற சீரிஸ் வெளிவர இருக்கிறது. தற்காலிகமாக யூடியூப்க்கு தொடர் எழுதி இயக்குவதை நிறுத்தி இருக்கிறேன்.

இப்போது பிரபலமான ஓடிடி பிளாட்பார்ம் ஒன்றுக்கு 100 எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸ்க்கு கதை திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த மாதம் அதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆன பீட்சா - 3 படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருந்தேன்.

சீரியல், சீரிஸ், சினிமா என மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எழுதுகிறேன்.  இந்த மூன்றுக்கும் வெவ்வேறு பரிமாணங்களில் திரைக்கதை வசனம் எழுத வேண்டி இருக்கும். அதிலும் ஓடிடி பிளாட்பார்ம் சீரிஸுக்கும் யூடியூப் சீரிஸுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காட்ட வேண்டி இருக்கும். முக்கியமாக ஓடிடி பிளாட்பார்முக்கு எழுதுவது, சவாலான பணி. உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் மிக நெருக்கமாக திரைக்கதை அமைக்க வேண்டும்.

வெப் சீரிஸ்களின் வருகை திரைப்படங்களின் உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெற்றி மாறன் சொல்லியிருந்தார். அதே போல ‘ஓடிடி வருகையால் திரை எழுத்தாளர்கள் பிஸியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டிய காலம் வரும்' என்றும் சொன்னார். அந்தக் காலம் வந்து விட்டது. தமிழில் வாரா வாரம் புதுப் புது வெப் சீரிஸ்கள் வரத் தொடங்கிவிட்டன். இடையில் எழுத்தாளனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் தொலைந்து போன உறவை வெப்சீரிஸ்கள் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

இதோ, இப்போதும், என் மடிக்கணினி முன்பு திரைக்கதை எழுத தயார் நிலையில் அமர்ந்திருக்கிறேன். ஒரு திரை எழுத்தாளனுக்கு தான் எழுதிய எழுத்துகள் திரையில் காட்சிகளாக விரிவதைப் பார்ப்பதைவிட, வேறு எது மகிழ்ச்சி தந்துவிடப் போகிறது?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com