பண்டிகைநாதன்கள்

பண்டிகைநாதன்கள்
Published on: 

தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது பகவான் நரகாசுரனோ, அவரது பகைவன் கிருஷ்ணனோ கிடையாது. மாறாக சாந்தி சுவீட்சும், சிவகாசி வெடியும், போத்தீசின் கடுத்த தள்ளுபடியும், ஆம்னி பஸ்ஸின் அடிபிடிகளும் என்பதுதான் சோகம். மலையாளிகள் ஒருபோதும் பொங்கல் கொண்டாடுவது கிடையாது. குஜராத்திகள் எப்போதும் ஓணம் கொண்டாடுவது கிடையாது. ஆனால் தமிழர்களாகிய நாம் ஹாலோவீன் தவிர்த்து அத்தனைப் பண்டிகைகளையும் கொண்டாடுவதுதான் உலகமகா விந்தை எனலாம்.

சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தீபாவளி மற்றும் வேறு பண்டிகைக் கால விடுமுறைகளுக்கு சொந்த ஊர்களுக்குத் திரும்புதல் என்பது ஒரு அகில உலக வியாபாரத்திற்கான முகாந்திரம் என்பது பெரும்பாலும் யாரும் அறிவதில்லை. இவர்கள் ஏறி இறங்கும் ஆம்னி பேருந்தின் ஓனர் அடுத்த தீபாவளிக்கு மேலும் இரண்டு பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆகுதல், தேசிய நெடுஞ்சாலைக் கடைகளின் உரிமையாளர்கள் மேலும் இரண்டு கிளைகளைத் தொடங்குதல், பட்டாசுக் கடைக்காரர்கள் கூட மூன்று நான்கு கடைகளை ஆரம்பித்தல் என்று தொழில் வளர்ச்சியில் இவர்களது பங்கு பெரியதாக இருக்கும்.

ஆனால் பண்டிகை விடுப்புக்கு ஊர் திரும்பும் மேப்புடியான்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று யோசித்தால் அங்குதான் ஒரு வெடிக்குண்டான கரிமருந்து இருப்பது கண்ணுக்குப் புலப்படும். வீட்டிற்கு வந்தவுடன் லேப் டாப்பை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். ‘டேய் எதுக்குடா ஊருக்கு வந்தீங்க?’ என்பது போலத்தான் இவர்களது விஜயம் இருக்கும். பிள்ளைகளுக்கு ஒரு பெட்டி நிறைய வெடிகள் வாங்கி வைத்துவிட்டு ஒரு டன் இனிப்புகளையும் ஆர்டர் செய்து வரத்திவிட்டு அதுகளை ஒரு ஓரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.

தீபாவளியன்று காலையில் எழுந்து குளித்து மினுக்கி விட்டு அருகாமையில் இருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று ஐந்தாறு செல்ஃபிகளை எடுத்து இன்ஸ்டாகிராமிலோ, ஃபேஸ்புக்கிலோ போட்டு ‘தீபாவளி ஃபோல்க்ஸ்’, ‘தீவாலி வித் மை கசின்ஸ்’ என்று ஹேஷ்டேக் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து படுத்து விடுவார்கள். இவர்கள் போன பிற்பாடு அந்த கசின்ஸ் இவர்களைக் கஞ்சிக்கி செத்த பயல் என்று தள்ளைக்கு விளிப்பது வேறு கதை. வாங்கி வைத்த பட்டாசை வெடிக்காமல் பிள்ளைகள் மொபைல் ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்து விடுவார்கள். சுகர் மாத்திரை போட்டியா? என்று கேட்க வேண்டியவர்களிடம் சுவீட் சாப்பிட்டியா? என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்?

நம்முடைய காலத்தில் (1880 ஆம் ஆண்டா என்று கேட்க வேண்டாம்) கொண்டாடப் பட்ட தீபாவளிதான் உண்மையான தீபாவளி என்று இன்றைக்குச் சொல்ல வேண்டிய காலகட்டம்தான் நரகாசுரனையே நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடும். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே கடைகளில் போய் நின்று ஒரு பாக்கெட் பிஜிலி வெடி பத்து ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு வந்து அடி பம்பில் வைத்து வெடித்தல், நமக்கு வேண்டாதவர்களின் வீட்டின் முன்பாக பற்ற வைத்து வீசுதல், வழியில் கிடக்கும் சாணி மீது வெடியைக் கொளுத்தி வருவோர் போவோர் மீது சாணி தெளித்தல், வயலில் திரியும் பாம்புகளைப் பிடித்து ராக்கெட்டில் கட்டி விண்ணில் ஏவுதல் என்று அது ஒரு வெடிக்காலம்.

வீட்டுத் தலைவன்மார்களின் தீபாவளி இன்னொரு கோணத்தில் இருக்கும். கரிநாள் என்று சொல்லி விட்டுக் கறிக்கடையில் வரிசையில் நின்று வெறுமனே கறியை மட்டும் தின்றால் தமக்காக உயிர்நீத்த அந்தப் பாவப் பட்ட ஆடுகள் என்ன செய்யும் என்று ஜீரண காரியத்திற்கான ஜீரகாரிஷ்டங்களைக் கொள்முதல் செய்து அதைக் குடலுக்குள் வீசி வீட்டில் மனைவிமார்களிடம் வெள்ளாவி வைக்கப் பட்டு சாயங்காலம் மயக்கம் தெளிந்து மீண்டும் பானக்கடைக்குச் சென்று மறுநீர் பாவித்து வெடிச்சப்தங்களுக்கு மத்தியில் வீட்டுக்கு வந்து படுப்பதற்குள் நரகாசுரனுக்கே ‘இதுக்காடா என்னைய கிருஷ்ணன் வதம் செய்தான்?’ என்று ஆகிவிடும்.

இப்படியெல்லாம் ஒரு பண்டிகையைக் கொண்டாட முடியுமா? என்று காலையில் காவல் நிலையத்தில் கண்விழிக்கும் பிரகஸ்பதிகளின் முகங்களைக் கண்டால் மீன் சந்தையில் லோடு இறக்கிவிட்டு வெளியில் வரும் லாரிகளைப் போல இருக்கும். இதுவல்லவா தீபாவளி என்றும் எண்ணுமளவிலான தீபாவளி வாய்க்கப் பெற்றவர்கள் சமீபத்தில் தங்கள் வாழ்க்கையில் தாங்களே வெடியைக் கொளுத்தி வைத்திருக்கும் புதுமாப்பிள்ளைகள். மாமியார் வீட்டில் தீவாளி குளித்து விட்டு சீர் செனத்திகளோடு பிறந்தகம் புறப்படும் அவர்களுக்கு அடுத்த தீபாவளி அல்லேலுயா என்பது தெரியாது.

இப்போது கதைக்கு வருவோம். தற்சமயம் தீபாவளிக்கு ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பெருநகரங்களுக்குப் புறப்படும் ஆசாமிகளைக் கண்டால் ஈமுகோழி வகையறா ப்ராடுத்தனங்களுக்கு ஆட்பட்டவர்களைப் போல இருப்பது மிகவும் கொடுமை. எதற்காக ஊருக்கு வந்தோம்? எதற்காக இத்தனை செலவீனங்கள்? இந்தச் செலவுகளால் தாம் பெற்ற பயன் என்ன? உண்மையிலேயே இது சொந்த ஊரா? அல்லது நொந்த ஊரா? இங்கிருந்து புறப்பட்டுப் போய் என்ன செய்யப் போகிறோம்? என்பதே புரியாமல் ஆம்னி பஸ்ஸில் ஏறி அமர்ந்து வண்டி பெருங்களத்தூர்ல நிக்குமா? என்று டிரைவர்களிடம் விசாரணை செய்பவர்களைப் பார்த்தால் பகவான் நரகாசுரன் மீது பரிதாபம் வராமல் பகுமானவான் கிருஷ்ணன் மீதுதான் சங்கடம் வருகிறது. எதுக்கு நரகாசுரனை வதைத்ததைப் போல இந்த மேப்புடியான்களை வதைக்க வேண்டும்?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram