பொருநை தமிழர் பெருமை

பொருநை தமிழர் பெருமை
Published on

பொருநை அருங்காட்சியகத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் தொல்லியல் துறை ஆணையரிடமிருந்து வந்த நிமிடம் முதல் எப்படியேனும் நிகழ்ச்சிக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது.

20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திறப்பு விழா. ஆனால், அதே நாள் நான் சென்னையில் அலுவலகத்தில் இருந்தாக வேண்டிய கட்டாயம்... சிரமப்பட்டு மாலையில் புறப்படும் விமானத்திற்கு அன்புத்தம்பி ஒருவர் மூலம் கடைசி நிமிடத்தில் பயணச்சீட்டு வாங்கினேன்.

நெல்லைக்குப் போய்ச்சேர்ந்தபோது இரவு வண்ண விளக்கு ஒளியில் பொருநை அருங்காட்சியகம் கண்ணைப் பறித்தது. அலுவலகத்தில் இருந்த பணி நெருக்கடிகள் காரணமாக  இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடைபெற்ற குடும்பவிழா ஒன்றுக்கு சொந்த ஊரான நெல்லைக்குச் செல்வதை தவிர்த்து விட்ட நான் பொருநை விழாவுக்கு மட்டும் புறப்பட்டு வந்தது குறித்து அம்மாவுக்கு முக்கால் பங்கு மகிழ்ச்சி கால்பங்கு கோபம்.

விழாமுடிந்து மறுநாள் காலை அருங்காட்சியகத்தில் தனது அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்த தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் அவர்களைச் சந்தித்தேன். உங்கள் ஊர் என்றதும் ஓடோடி வந்து விட்டீர்கள் போல.. என்று சொல்லி சிரித்தார். எங்கள் அருகில் நின்று கொண்டு இருந்த இளைஞரை காட்டினார்...

 “இவர் யார் தெரியுமா?”

 "தெரியவில்லையே.. சார்" என்றேன்.  “ஆசிரியர் மாணிக்கத்தின் மகன்... இவர் பெயர் சுப்ரமணியன். அருங்காட்சியகத்தில் கணினி பொறுப்பாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார். "ஓ அப்படியா! மிக்க மகிழ்ச்சி சார்," என்றேன். என்னுடன் வந்த நண்பருக்கு ஆசிரியர் மாணிக்கம் யார் என்று தெரியவில்லை...

ஆணையரிடம் பேசி விடைபெற்று வரும் பொழுது நண்பர் கேட்டார், “ யார் சார் அந்த ஆசிரியர் மாணிக்கம் என்று...”

இந்தப் பொருநை அருங்காட்சியகத்திற்கான விதை தூவிய சாமானியர்களில் அவரும் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் துறை ஆணையரான  உதயச்சந்திரன் சாருக்கு  சிவகளையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பியவர். அந்தக் குறுஞ்செய்தியை மதித்து ஆணையர் தனது அலுவலர்களை ஆசிரியர் மாணிக்கத்தின் வீட்டுக்கு அனுப்பினார். அலுவலர்கள் மாணிக்கம் வீட்டுக்குச் சென்று ஆசிரியர் மாணிக்கம் இல்லையா?  என்று விசாரித்தார்கள். எப்போதும் தொல்லியல் மீது அதீத ஆர்வம் காட்டும் தன் கணவர் மீதான சலிப்போடு ஆசிரியர் மாணிக்கத்தின் மனைவி  சொன்னார்.." ஏதேனும் சுடுகாட்டில் திரிந்து கொண்டிருப்பார் பாருங்கள்" என்று. அலுவலர்கள் அதிந்தார்கள். ஆனால், அவர் மனைவி சொன்னபடி மாணிக்கம் ஒரு இடுகாட்டின் பக்கத்தில் தான் யோசனையோடு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவிக்கு தெரிந்திருக்காது, கணவரின் தொல்லியல் ஆர்வம்,  தன் மகனுக்கு அருங்காட்சியகத்தில் எதிர்காலத்தில் வேலை வாங்கித் தரப்போகிறது என்று.

பொருநை என்ற சொல்லே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் உலகம் தழுவியக் கருத்தை உணர்த்தித் தொடங்கும் சங்கப்பாடலில் இடம்பெற்ற 'கல் பொருது இறங்கும் மல்லல் பேராறு ' எனும் தொடரிலுள்ள 'பொருது ' என்ற சொல்லை அடியொற்றிப் பிறந்ததாகக் கருதப்படுகிறது. பொருது என்றால் மோது, போராடு என்பது பொருள். கல்லில் மோதிப் புறப்பட்டு வரும் பொருநை ஆற்றைத் தமிழ் பண்பாட்டுப் பழைமையை நிலைநிறுத்தும் போராட்டத்தின் குறியீடாகவும் கொள்ளலாம்.

 தமிழகத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைகிறது திருநெல்வேலியில் 12 ஏக்கர் பரப்பில் சுமார் 52 ஆயிரம் சதுர அடியில் 24 காட்சிக் கூடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025 - ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு திறந்து வைத்தார்.

அந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான பழம்பொருள்கள் காட்சி்க்கு உள்ளன. அத்தனையும் நம் வரலாற்றில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமிதங்கள்.

இங்கே கற்கால, புதிய கற்கால  கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றைப் பொருத்தமட்டில் பழைய கற்காலம் என்பது 17,00,000 – 40,000 ஆண்டு வரை.  நுண்கற்காலம்  எனப்படும் இடைக்கற்காலம் 40,000 – 7,000 வரை.  புதிய கற்காலம் 7000 - 4000 வரை. பழைய கற்கால கருவிகள் அச்சிரம்பாக்கத்தில் கிடைத்துள்ளது. முன் கற்கால கருவிகள் சாயர்புரத்தில் கிடைத்துள்ளன.

இரும்பு காலம் உலோக காலத்தில் வருகிறது. பொதுவாக அது கிமு 4000 முதல்- கிமு 700  வரை. சிவகளையில் கிடைத்த இரும்பின் காலம் கிமு 3345 என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு கால கருவி இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில்  கிடைத்த இரும்புக்கால கருவி கிமு 2522 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. சிவகளை நெல்மணி  கிமு 1155 ஆண்டைச் சேர்ந்தது.

சிவகளையின் இரும்புவாளின் காலம் கிமு 3345  என்று கூறுகிறோம் அல்லவா? அதுதான் இதுவரையான உலகத் தொல்லியல் ஆய்வுகளில், உலகின்  முதல் முதலாக இரும்பு பயன்பாட்டிற்கு சான்று என்ற  பெருமிதச் செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில கால வரையறைகளைக் காண்போம்.

தமிழகத்தில் தொடக்க வரலாற்றுக்காலம்  காலம் கிமு 700 முதல் - கிமு 300 வரை.

கொற்கை (கிமு 795 ), துலுக்கர் பட்டி போன்ற இடங்களில் கிடைத்த தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 வரலாற்றுக்காலம் கிமு 300 -  லிருந்து ஆரம்பிக்கிறது. இதுதான் பாட்டும் தொகையும் என்று அழைக்கப்படும் சங்க இலக்கியங்களின் காலம்.

புறநானூற்றின் 128 -வது பாடலில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவர் கடையேழு வள்ளல்களில் ஒருவனும் பொதிகை மலையை ஆட்சி செய்த மன்னனும் ஆன ஆய் அண்டிரனுடைய  பொதிகை மலையின் சிறப்பைப் பாராட்டிப் பாடிய பாடல் தமிழிலும் ஆங்கிலத்திலும் இக்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஊர் பொதுவிடத்தில் இருக்கும் பலாமரத்திற்கு பெரிய கிளை; அதில் இருக்கும் மந்தி (பெண் குரங்கு ) அந்த மரத்தில் இரவலர்கள் கட்டியிருந்த ஒரு முழவினை பலாப்பழம் என நினைத்துத் தட்டுகிறது.   அப்பொழுது அந்த மரத்தில் வாழும் அன்னச்சேவல் இந்த ஓசைக்கேற்ப பறந்து ஒலி எழுப்புகிறது. அத்தகைய  முகில்கள் தவழும் பொதிகை மலை என புறநானூறில்  128 வது பாடல் கூறுகிறது.

'கழல் தொடி ஆய் மழை தவழ் பொதியில்' என்று பொதிகை மலை சிறப்பிக்கப்படுகிறது. பிற்காலத்தில் திருஞானசம்பந்தர் பாடிய திருவையாறு பற்றிய வர்ணனை பாடலில் இந்த சங்கப் பாடலின் தாக்கம் இருப்பதை பக்தி இலக்கியம் படித்தவர்கள் அறிந்து கொள்ளலாம்.

கொற்கை அகழ்வாராய்ச்சியில் பானை ஒன்று கிடைத்துள்ளது. இது தமிழ்நாடு தொல்லியல் துறையால் 1968 - 69 ல் கண்டெடுக்கப்பட்டது ஆகும்.

அந்த பானையோட்டில்  த, ந ஆகிய தமிழி எழுத்துகள் உள்ளன.  அதேபோல் கொற்கையில் பெண் சுடுமண் உருவம் (Terracotta figurine) கிடைத்துள்ளது.

அழகிய தலைப்பின்னல், அகன்ற நெற்றி, நீண்டவிழிகள், நேர்த்தியான முகம்  கொண்ட பெண்சுடுமண் உருவத்தின் தலைப்பகுதி கிடைத்துள்ளது. அது இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி,  இரும்புக்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரை இங்கு மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ள விவரம் தெரிகிறது. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரும்பு கருவியின் காலம் கிமு 2522. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கு இரும்பு, வெண்கலம், தங்கம் போன்றவற்றின் பயன்பாடு தெரிந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

அதற்கு ஆதாரமான தொல்பொருள்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெண் கல வடிகட்டும் கிண்ணம் ( Strainer bronze bowl), இரும்பினால் செய்யப்பட்ட  ஈட்டி முனை ( Spearhead iron),  தங்க  நெற்றிப்பட்டம் (Gold Diadom) போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் கண்ணாடியும், சிந்துவெளி கண்ணாடியும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உப்போடை, சிற்றாறு, கடனாநதி, ராமாநதி, சேர்வலாறு, பச்சையாறு ஆகிய பொருநையின் ஆறு துணையாறுகள் பாயக்கூடிய ஐவகை நிலங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கீழடி தமிழரின் தாய்மடி ; பொருநை தமிழரின் பெருமை - என்ற சொற்றொடர் மனதில் பதிகிறது. சிறார்களைக் கவரும் வண்ணம் பல முப்பரிமாணக் காட்சிகள் அமைக்கப்பட்டு தமிழர் வரலாறு எளிதாக மனதில் பதிய வைக்கப்படுவது சிறப்பம்சம். தமிழ்ப் பெருமிதத்்தில் இன்னொரு மைல் கல். தென் தமிழக சுற்றுலா பட்டியலில் இந்த காட்சியகமும் இனி கட்டாயமாக இணைந்துகொள்ளும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com