புலமைப்பித்தன்
புலமைப்பித்தன்

அமுதத் தமிழ்ப் புலவன்!

தமிழுக்கும் அமுதென்று பேர் என்பதைத் தனது ஒவ்வொரு திரையிசை பாட்டிலும் மெய்ப்பித்தவர் புலவர் புலமைப்பித்தன். நான் யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர்  யார் யார் ? என்று  ‘குடியிருந்த கோயில்' படத்தில் அவரது பாட்டுப்பயணம் தொடங்கியது. முதற் பாடலிலேயே அவருக்குள் குடியிருந்த தமிழ், கோலோச்சியது.

திரையிசைப் பாடலாசிரியர்களில் அவரளவுக்குத் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தெளிந்தவர் யாருமில்லை.

‘நாங்கள் எல்லாம் புலமைப்பித்தனிடம் நிரம்பக் கற்றுக்கொள்ள வேண்டும். அவன்தான் முழுமையாகவும் முறையாகவும் தமிழ்ப் படித்தவன்' - இது எம்.எஸ். விஸ்வநாதனிடம் கண்ணதாசன்

சொன்னது.

ஆண்: இனங்களிலே என்ன இனம்

பெண்ணினம்

பெண்: மெய் எழுத்துக்களில் இருக்குமந்த

மெல்லினம்

ஆண்: மனதுக்குள்ளே இருக்கும் ஆசை

வல்லினம்

பெண்: என் மன்னனுக்குப் பிடித்ததெல்லாம்

இடையினம்

இப்படிக் காதல் மயக்கமாக இருந்தாலும்,

காற்றும் நீரும் வானும் நெருப்பும்

பொதுவில் இருக்குது- &மனிதன்

காலில் பட்ட பூமி மட்டும்

பிரிந்து கிடக்குது -

என்கிற பொதுமை முழக்கமாக இருந்தாலும் அவர் எழுதினால் அந்தத் தமிழ் அவரது தனித்த அடையாளமாக இருக்கும்.

'நாயகன்' படத்தில் பாலியல் தொழிற்கூடத்தில் ஒரு பாட்டு -

‘நான் சிரித்தால் தீபாவளி

நாளும் இங்கே ஏகாதேசி

அந்தி மலரும் நந்தவனம் நான்

அள்ளிப் பருகும் கம்பரசம் நான்'

என்று பல்லவியில் கவித்துவமான அழைப்பில் நம்மை வசீகரிக்கிற அந்தப் பெண், சரணத்தில்

 ‘வந்தது எல்லாம் போவது தானே

சந்திரன் கூட தேய்வதுதானே

காயம் என்றால் தேகம்தானே

உண்மை இங்கே கண்டேன் நானே

யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்

யாரிசைத்தாலும் இன்னிசை கேட்கும்'

என்று வலிகளை வரிகளாக்கி சட்டென்று அழவைத்துவிடுவாள்.

புன்னகைக்கும் கண்ணீருக்கும் இடையில்,

இசைக்கும் மௌனத்துக்கும் இடையில் நமக்குள் சித்து விளையாடும் தமிழ் புலமைப்பித்தனுடையது

புலவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வு...

‘அடிமைப் பெண்' படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம்' என்றாராம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா' பாடலின் சரணத்தில்

“மன்னவனின் தோளிரண்டை

மங்கையெந்தன் கைதழுவ

கார்குழலும் பாய்விரிக்கும்

கண்சிவந்து வாய்வெளுக்கும்'

என்ற வரிகள் வரும்.

‘வாயின் சிவப்பை விழிவாங்க

மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க

தோயக் கலவி அமுது அளிப்பீர்

துங்கக் கபாடம் திறமினோ‘

என்று கலிங்கத்துப் பரணியில் வரும் வருணனைதான்  அது என்றார்.

இந்தப் பாடலைப் படித்த எம்.ஜி.ஆர், வரிகளின் அழகில் மயங்கி, புலவரின் விரல்களைப் பிடித்து முத்தமிட்டு... ‘மூன்றாவதாக இன்னொரு சரணம் எழுதுங்கள்; ஏதாவது நீர்நிலையில் வைத்துப் படம் பிடிக்கலாம்' என்றாராம். அதற்காக எழுதப்பட்ட வரிகள்தாம் -

‘பொய்கை என்னும் நீர்மகளும்

பூவாடை போர்த்திருந்தாள்

தென்றலெனும் காதலனின்

கைவிலக்க வேர்த்து நின்றாள்'

என்பது.

எம்.ஜி.ஆருக்கும் புலவருக்குமான நட்பு உன்னதமானது. அதற்கு எவ்விதத்திலும் குறையாத அன்பை அவர் தம்பி பிரபாகரனிடத்திலும் வைத்திருந்தார். ஈழப் பிரச்னைகளில் சில முரண்பாடுகளால் எம்.ஜி.ஆரிடம் கூட சில காலம் பேசாமல் இருந்திருக்கிறார்.

 ‘எம்.ஜி.ஆர் என்ற என் கண்ணாளன் மீது நான் பாசம் வைக்கவில்லை; பற்றுவைக்கவில்லை; காதல் வைத்திருக்கிறேன்.

ஆனால் அவர்மீது நான் வைத்திருக்கும் காதலைக் காட்டிலும் என் கொள்கை மீது அதிகமாக காதல் கொண்டிருக்கிறேன்.

தாழ்ந்த தமிழினத்தை தலைநிமிரச் செய்யத் தன்னையே கொடுக்க துணிந்த என் தம்பி மீது நான் கொண்ட காதலுக்கு, கடலும் நிகரில்லை, நிலமும் நிகரில்லை, வானும் நிகரில்லை'

இது - ‘தலைவர் - தம்பி - நான்' என்கிற நூலில் புலவரே குறிப்பிட்டிருக்கிற செய்தி.

‘உலகமெல்லாம் உண்ணும்போது

நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது

நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி'

என்று ‘அழகன்' படத்தில் எழுதியிருக்கிற புலவரின் வரிகள், புறநானூற்றின் பெருமிதம் பேசுகிற வரிகள்.

அகப்பாடல்களாக இருந்தாலும் புறப்பாடல்களாக இருந்தாலும் தன் பாட்டுத்திறத்தால் அவற்றைப் பாலித்தவர்  புலவர் புலமைப்பித்தன்.

‘எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே'

எங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருக்கிறது அவரது பாடல்.

அக்டோபர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com