தடை செய்யவேண்டிய ஆயுதம் புத்தகமா?

தடை செய்யவேண்டிய ஆயுதம் புத்தகமா?

உ லகம் முழுக்க ஒரு விஷயத்துக்கு மக்கள் அஞ்சுகிறார்கள். அது புத்தகம்! அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் பாதிரியார் ஒருவர் ஒரு செயலில் இறங்கினார். அவர் புத்தக எரிப்புக்காக ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அதாவது தீயவிளைவுகளைத் தரும் புத்தகங்களை எரிப்பது. உள்நாடு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட நூல்களை மக்களே கொண்டுவந்து எரியும் தீயில் போட்டனர். பாதிரியார் ஹாரிபாட்டர், ட்விலைட் போன்ற புத்தகங்களையும் எரித்தார்.  வாசிப்பு உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் இது.

இனப்பாகுபாடு பற்றிப் பேசும் நாவல் ‘அவுட் ஆப் டார்க்னெஸ்‘. இது வெளியாகி ஆறேழு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் இந்த நாவலில் ஆபாசமான வரிகள் இருப்பதாக பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள இரு நடுநிலைப் பள்ளிகளின் நூலகத்தில் இருந்து அந்த நூல் நீக்கப்பட்டது. அதைப்போல் வேறு சில பள்ளிகளிலும் அந்த நூல் நூலகங்களில் வைக்கத் தடை கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ரயான் ஹாலிடே என்பவர், பிரபல மின்னணு நூல் இணையதளமான ஸ்கிரிப்ட்(குஞிணூடிஞஞீ) உடன் இணைந்து தடை செய்யப்பட்ட நூல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

பொதுவாக மக்களே முன்வந்து அரசு நடவடிக்கை இன்றி ஒரு நூலை தடை செய்துகொள்வது என்பது அமெரிக்கா தவிர வெளியே இருக்கும் மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால் ரயான் ஹாலிடேவுக்கு இது அச்சம் தரக்கூடியதாக இருந்தது. அடுத்தாண்டு உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் தன் மகனும் இதுபோன்ற ஜனநாயக நூல் தடையை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர் கருதுகிறார்.

வலதுசாரி, இடதுசாரி அமைப்புகள் ஜனநாயக நாடுகளில் குறுகிய பார்வையுடன் அழுத்தம் ஏற்படுத்தி மக்களே நூல்களை தடைசெய்யும் சூழலை உருவாக்குகின்றன.

‘அமெரிக்காவில் நிறைய பிரச்னைகள் உள்ளன. ஆனால் நூல்களை வாசிப்பது நிச்சயமாக ஒரு பிரச்னை இல்லை' என்று சொல்லும் ரயன் ஹாலிடே “நாம் மற்ற தலைமுறைகளை விட அதிகமாக ஆன்லைனில் நேரம் செலவழித்து தவறான தகவல்களை, ஒரு சார்பான தகவல்களையே பெற்றுவருகிறோம். அனுபவம் என்பது மிகப்பெரிய ஆசான் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இப்படி அனுபவம் பெற்ற பெரிய மனிதர்கள் எழுதி வைத்திருப்பதை வாசிப்பதில்லை. நீங்கள்  வாசிக்கவேண்டும்; இல்லையென்றால் நீங்கள் என்னபடித்திருந்தாலும் எழுத்தறிவு இல்லாதவராகவே கருதப்படுவீர்கள்” என்று வலியுறுத்துகிறார்.

இதன் நீட்சியாகவே அவர் தடை செய்யப்பட்ட புத்தகங்களை ஸ்கிரிப்ட்  மூலம் கிடைக்கச்செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கிறார்.

அமெரிக்காவில் மட்டுமா? இந்தியாவிலும் அதுபோல் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்தில் பல நூல்கள் எதிர்ப்புகளை அடுத்து தடைசெய்யப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. இதில் அரசே தடை செய்யும் புத்தகங்கள் வேறு இருக்கின்றன.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங் சொல்கிறார்: ‘நீங்கள் எதெல்லாம் படிக்கக்கூடாது என்று சொல்கிறார்களோ அவைதான் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை.' ஒருவேளை ஸ்டீபன் கிங் சொல்வது பிழையான தகவல்கள் நூல்வடிவில் குவிந்திருக்கும் இந்த வேளையில் சரியில்லாதது போல் தோன்றினாலும் சமூகம் செல்வதற்கான ஒரு திசையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

மார்ச், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com