வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

மொழியால் உயரலாம்!

கடந்த 42 ஆண்டுகளாக ஷார்ஜா என்கிற இந்த சிறிய நாட்டில், பெரிய அளவில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட அரங்குகள். 200க்கும் மேற்பட்ட மொழிகள். உலகளவில் புத்தகங்களை நேசிக்கக் கூடிய நாடுகளின் பங்களிப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இந்திய மதிப்பில் பல கோடிகளில் பதிப்பகத்துறை சார்ந்த வணிகம்.

தன் புத்தக நேசிப்பால் தன் தாய்மொழி அரபிக் மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளை கற்றுத் தேர்ந்த ஷார்ஜாவின் ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காசிமி அவர்கள் தான் இதற்கெல்லாம் காரணமானவராக திகழ்கிறார்.

 இந்த புத்தகக் கண்காட்சியில் உலகளவில் சுமார் 2200 பதிப்பாளர்கள் பங்குபெற்று அவரவர் நாடு திரும்பியுள்ளார்கள். இதில் குறிப்பாக அரபிக் மொழியில் நூல்களை வெளியிடுவோர் மட்டும் ஆயிரத்தைத் தாண்டுகிறார்கள். மிச்சமுள்ளவர்கள் ஆங்கிலம் மற்றும் இதர மொழி நூல்களை வெளியிடுவோர்.

இப்புத்தகக் கண்காட்சிக்காக சென்னையில் உள்ள டிரேடு சென்டர் போன்று ஷார்ஜாவில் ஏழு கூடங்களை அமைத்திருக்கிறார்கள். இதில் தான் அத்தனை பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகளும் இடம்பெற்றன. சிறார் புத்தகங்களுக்கு என  தனிக் கூடமும், அரபிக் மொழிக்கு என தனி இரண்டு கூடங்களும், புகழ்பெற்ற ஆங்கில பதிப்பாளர்களுக்கு என தனி கூடமும், இந்திய பதிப்பாளர்களுக்கு என ஒரு தனி கூடமும் இப்படி ஏழு கூடங்களை ஒதுக்கி இருந்தது ஷார்ஜா அரசு.

இந்திய பதிப்பாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கூடம் 7 என்பது தற்காலிக கூடாரம் தான். இதில் தான் இந்திய மொழிகள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. இந்த கூடாரத்தில் இடம்பெற்றிருந்த அரங்குகளில் பெரும்பாலானவை மலையாளப் புத்தக அரங்குகள். தினந்தோறும் மலையாளத்தில் புதுப்புது புத்தகங்கள்  வெளியிடப்படுகின்றன. இதற்காக குடும்பம் குடும்பமாய் வந்து பங்கேற்கிறார்கள்.

கடந்த 2018 முதல் தமிழ்ப் பதிப்பாளர்கள் இங்கே தங்கள் புத்தகங்களை இடம்பெறச் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் வாசகர்களிடமும், அந்நாட்டு அரசிடமும் தமிழ் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சார்ஷாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் முதன் முறையாக ‘நூல் குடில் பதிப்பகம்' தனி அரங்கு அமைத்திருந்தது. இவ்வரங்கில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல நூல்களுடன் என்னுடய நூல்களும் இருந்தன.

நான்  எழுதிய ‘அங்கம் நிறைந்த சங்கம்', ‘மறைந்த தலைவர்கள் மறையாத நினைவுகள்' என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இங்கே நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இஸ்லாமிய நண்பர்கள், ஷார்ஜா நகரத்தார் சங்கம், துபாய் நகரத்தார் சங்கம் போன்ற அமைப்புகளிலிருந்தும், அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக் கொண்டு அந்தப் பாடல்கள் இக்காலத்துக்கு ஏற்ப எப்படி பொருந்திப் போகிறது என்ற ஆய்வுக் கட்டுரைகளை  ராணி வார இதழில் 25 வாரங்களாக தொடர்ந்து எழுதிவந்தேன்.  அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இன்று நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. தலைவர்கள் மறைந்திருக்கலாம், ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் நம்மிடையே மறக்காமல் இருக்கிறதல்லவா, அந்த நினைவுகள் கட்டுரைகளாக 25 வாரங்கள் கல்கி வார இதழில் வெளிவந்தன. அந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘எந்தத் தமிழை நேசித்தேனோ, அந்தத் தமிழின் அமைச்சராக திகழ்ந்தேன். ஐநா சபையில் உறையாற்றினேன். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் பங்குபெற்றிருக்கிறேன். இந்தப் பெருமை எனக்கான பெருமையாக கருதவில்லை. என் தாய்த் தமிழ் என்னை உயர்த்தி இருக்கிறது என்று கருதுகிறேன். ஒருவர் மொழியால் உயரலாம் என்பதற்கு நானே சாட்சி' என்றேன் அந்த விழா மேடையில்.

 ஷார்ஜா அரசு இந்த ஆண்டு தென் கொரியாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தார்கள். அத்துடன் “நாம் புத்தகங்களைப் பற்றியே பேசுவோம்' என்ற வாசகத்துடன் புத்தகக்காட்சியை ஷார்ஜா புத்தகக் கண்காட்சி குழு நடத்தி முடித்திருக்கிறது.

(கட்டுரையாளர் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com