ஓவியம்
ஓவியம்ரவி பேலட்

வீடியோ சினிமாக்காரன்

முள்ளரும்பு மலர்கள் -6

தவணை முறையில் பணம் செலுத்தி பல புத்தகங்களை வாங்கியிருந்தான் நண்பன் பிகெ ஸ்ரீநிவாசன்.ஷாஜி என்றுதான் அவனுடைய விளிப்பெயருமே. என்னைவிடநான்கு வயது பெரியவன். சினிமா மேலும் இலக்கியத்தின்பாலும் இருந்த மோகம்தான் எங்களை நண்பர்களாக்கியது. அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கி நானும் படித்தேன். ஆனால் சினிமா திரைக்கதைப் புத்தகங்கள் மட்டும்

அவன் எனக்குப் படிக்கத் தரவில்லை. யாருக்குமே கொடுக்காமல் சதாநேரமும் அவற்றைப் படித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது சில நாடகங்களை எழுதவும் அவற்றில் நடிக்கவும் செய்தான். ஆனால் பட்டப் படிப்பை முடித்தவுடன் தனது அண்ணன் பின்னால் குஜராத் சென்று அங்கு ஏதோ பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தான். சிலகாலம் கழித்து அவன் ஊருக்குத் திரும்பி வந்தது ஒரு மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக!

கமல்ஹாஸன் கதாநாயகனான ‘ஞான் நின்னெ பிரேமிக்குந்நு', ஸ்ரீதேவியை முதன்முதலில் கதாநாயகியாக்கிய 'நாலுமணிப் பூக்கள்', மது - ஜெயபாரதி இணைந்து நடித்த ‘காயலும் கயறும்' போன்ற பெரும் படங்களை இயக்கிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம்.பல பிரபலநடிகர்கள் நடிக்கும் அப்படத்தின் இசை தமிழ்த் திரையிசையின் இதிகாசமாகயிருந்த கே வி மகாதேவன். சங்கராபரணம் படத்தின் இசைவழியாக அவர் புகழின் உச்சத்தில் இருந்த காலம். எல்லா வகையிலுமே நம் நண்பன் எழுதும் படம் ஒரு வலுவான சினிமா முயற்சி. ஆனால் பல சிக்கல்களைத் தாண்டி காலங்கடந்து அப்படம் வெளியானபோது அதில் அவன் பெயரே இருக்கவில்லை. ஏன்,இயக்குநரின் பெயர்கூட அதில் இருக்கவில்லை!

அதற்குள்ளேஇயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் மேல் பலான படங்களை மட்டுமே எடுப்பவர் என்ற கெட்ட பெயர் பதிந்திருந்தது. கௌதம் எனும் யாரோ ஒருவர் இயக்கியதாக ஓரிரு திரையரங்குகளில் மட்டுமே அப்படம் வெளியானது. எங்கள் ஊர்களில் வராததால் நண்பன் எழுதிய படத்தை நம்மால்பார்க்க முடியவில்லை. இருந்தும் முதன்முதலில் ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி ஒரு பாடல் காட்சியில் தலையைக் காட்டவும் செய்த நம்மூர் கலைஞன் என்று அவனைப்பற்றி பெருமிதங்கொண்டோம். நெருங்கிய நண்பன் திரைத் துறையின் அங்கமாகிவிட்டானே என்ற சந்தோஷம் எனக்கு.

அப்படம் வழியாக அவன் பெற்ற அனுபவங்களைப் பரிசீலித்துப் பார்க்க விரைவில் எங்கள் ஊரிலேயே ஒரு வாய்ப்பு வந்தது.வி பி ராஜன் எனும் எங்கள் பொதுநண்பன் வெளியூர்க் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நக்சலைட்டாக மாறிவிட்டிருந்தான். படிப்பை உதறி சிலகாலம் நக்சல் குழுக்களுடன் அலைந்தபின் நீண்ட தாடியும் அதுவுமாக ஊருக்குத் திரும்பி வந்தான். 'சமூக ஆராய்ச்சி மையம்' எனும் ஓர் காகித அமைப்பை உருவாக்கி அதன் பெயரில் ஒரு வீடியோ சினிமாவை எடுக்கத் திட்டம்போட்டான். தனது உறவினரான ஒரு மளிகை மொத்த வியாபாரியின் மகனை எப்படியோ அதன் தயாரிப்பாளராக சம்மதிக்க வைத்தான். படத்தின் பெயர் ‘ஒரு கிராமத்தில் ஒரு வசந்த காலத்தில்'. துணை எழுத்து, துணை இயக்கம் நண்பன் ஸ்ரீநிவாசன். திருமணக் காணொளிகளை எடுத்துக் கொடுக்கும் ஒருவர்தான் ஒளிப்பதிவு. தனது நண்பர்கள் பலரை அந்தப் படத்தில் பணிபுரிய வைத்தார் ‘இயக்குநர்' ராஜன். எனக்கும் தந்தார், ஒரு வேலையை.

ஷாஜி
ஷாஜி

விளம்பரம் ராஜன் இயக்குநரின் தன்னம்பிக்கையை வானளவு உயர்த்தியது. ‘‘கிராமத்து நூலகங்களின் உதவியுடன் நமது படத்தைக் கேரளம் முழுவதும் திரையிட்டு, பயங்கரமான வசூலைக் குவிக்கவில்லையென்றால் என் பெயர் வி பி ராஜன் இல்லை'' என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

படப்பிடிப்பிற்காக ஒளி ஒலிக் கருவிகளுடன் குழு வந்திறங்கியது. கதாநாயகனாக நடிக்க கம்யூனிஸ்ட் இளைஞர் அணித்தலைவர் கோபிநாத் ஆயத்தமானார். ஆனால் கதாநாயகியான முஸ்லீம் பெண்ணாக நடிக்க யாருமே வரவில்லை. தான் அழைத்ததும் ஓடி வருவார்கள் என்று ராஜன் நினைத்த பெண்கள் அனைவருமே முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர். இறுதியில் நடிகையைக் கண்டுபிடிப்பதும் எனது வேலை என்றார் ராஜன்! ‘‘ஒரு சினிமாவின் பி.ஆர்.ஓன்னா என்னான்னு நெனச்சே?'' என்னவென்று நினைக்கணும்? எனக்கு என்ன தெரியும்! ஆனால் நடிகை கிடைக்கவில்லை என்றால் படம் நடக்காது. ஒரு சினிமாவின் எதிர்காலமே இப்போது நம் கையில். வேறு வழியேதுமில்லாமல் வருவது வரட்டுமென்று நடிகையைத் தேடிப் புறப்பட்டேன்.

முன்பு ஒரு திரையிசைக் கச்சேரியில் என்னுடன் பாடிய சேச்சியின் முகவரியைத் தேடிப்பிடித்து வீட்டிற்குச் சென்று உதவி கேட்டேன். அவர் ஒரு நாடக நடிகையின் முகவரியைத் தந்தார். அந்த நடிகை சினிமா என்று கேட்டவுடனேயே அரண்டுபோய் ‘‘முடியாது'' என்று முடிவாகவே சொன்னார். மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிப்போய் அலையும்போது சிலநாள் முன்பு ஒரு துக்கடா திரையிசைக் கச்சேரியில் என்னுடன் பாடிய நஸீமா எனும் பெண்ணின் நினைவு வந்தது.

ஒரு தேயிலைத் தோட்டத்தின் புறம்போக்கு நிலத்தில் உள்ள அவரது வீட்டைத் தேடிப்பிடித்தேன். அவருக்குத் தெரிந்த யாராவது நடிக்க வருவார்களா என்று தயக்கத்துடன் கேட்டேன். ‘‘நா வந்தாப் போதுமா? நாடாத்திலெல்லாம் நடிச்சிருக்கே''. அவர் அப்படிச் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பார்க்க அழகான பெண். மட்டுமல்லாமல் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர். முஸ்லீம் பெண் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவார்.

அரைமணி நேரத்தில் நஸீமா என்னுடன் புறப்பட்டு வந்தார். துணைக்கு யாருமே இல்லை. பேருந்தில் ஒரே இருக்கையில் அவருடன் அமரத் தயங்கி நின்றுகொண்டிருந்த என்னிடம் ‘‘எங்கூட ஒக்கார வெக்கப்படுறியா இல்ல அசிங் கமா நெனக்கிறியா?'' என்று கேட்கிறார். வெட்கம் இருக்கிறது. ஆனால் அசிங் கமாக நினைக்க என்ன இருக்கிறது! அவர் என்னுடன் வந்தது எனக்குப் பெருமிதமாகவே இருந்தது. அழகான ஒரு பெண் தன்னுடன் வருவதை எந்தப் பதின்பருவத்தினன் விரும்ப மாட்டான்? நான் நஸீமாவின் அருகில் (கொஞ்சம் தள்ளி) அமர்ந்தேன்.

‘‘நல்ல குடும்பத்துல நல்ல நெலயில வாழ்ந்தவங்க நாங்க. எஸ்டேட்டுல கங்காணி வேல பாக்கும்போது மோட்டார் பைக்கு சரிந்து வாப்பாக்கு ஒடம்பு முடியாமப் போயிடுச்சி. நான்தான் மூத்தவ. மூணு தங்கைங்க. என்ன பண்றது? பாட்டு பாட, நாடாத்துல நடிக்க எறங்கிட்டேன். இதுல என்ன தப்பு, இல்ல? கல தானே! சின்ன வயசுலேர்ந்தே கலைக்காரி ஆகணும்னுதான் ஆசப்பட்டேன்...''. நில்லாமல் பேசும் குணம்கொண்ட நஸீமா தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். ‘மெல்ல தொறந்ந கதகு' படத்தோட ‘தரிசனம் பூங்கிரிச்சு' பாட்டக் கேட்டியா? நல்ல ஒண்ணாம்தரம் பாட்டு''. அவர் பாடத் தொடங்கினார். ‘தரிசனம் பூங்கிரிச்சு... பூதக்காட்டும் கடிச்சிடிச்சு...' அந்த ஊரில் ஒரு தமிழ்ப் பாடகியாகவே அறியப்படும் நஸீமாவுக்கு தமிழ் அறவே தெரியாது என்று எனக்குப் புரிந்தது. ‘மெல்லத் திறந்தது கதவு' படத்தின் ‘ஊரு சனம்' அவருக்கு ‘தரிசன'மாகிப் போனது.

நடிகையை ராஜன் இயக்குநருக்கு மிகவும் பிடித்தது. அவரது அக்காவின் வீட்டில் மகிழ்வாகத் தங்கிக்கொண்டு நஸீமா படப்பிடிப்பில் பங்கேற்றார். வேலையும் கூலியும் இல்லாமல் சதா நேரமும் ஊர் முச்சந்தியில் அமர்ந்து வெற்றுப் பேச்சு பேசும் ஆட்களில் ஒருவனாக நானும் ஒரு துண்டுக் காட்சியில் நடித்தேன். அதுதான் கேமராவுக்கு முன் எனது முதல் நடிப்பு. ஆனால் தொழில்நுட்பச் சிக்கல்கள் எங்கள் சினிமாவை முன்நகர விடவில்லை.

தூக்க முடியாத அளவுக்கு எடைமிக்க கேமராவாகயிருந்தும் எடுக்கப்படும் காட்சிகளை உடனுக்குடன் பார்க்கும் வசதி எதுவும் அதில் இருக்கவில்லை. உள்ளேயிருக்கும் ஒளிநாடாப் பேழையை எடுத்துக்கொண்டு சற்றுத் தொலைவில் உள்ள மைக்கேல் வக்கீலின் வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் காணொளிக் கருவியில்தான் படம் பார்க்கவேண்டும். ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கும் பொழுது சினிமா எடுப்பது குறித்து நம் இயக்குநருக்கு மட்டுமல்ல ஒளிப்பதிவாளருக்கும் ஒன்றுமே தெரியாது என்பது எங்களுக்கு விளங்கியது. எடுத்தவை எதுவுமே சரியில்லை என்கின்ற உணர்வு இயக்குநரைத் தவிர அனைவருக்கும் மேலோங்கியது.

‘‘அதெல்லாம் உங்க பிரச்னை பிரதர். இத நான் எடிட் பண்ணி எப்டி மாத்றேன் பாரு'' என்றார் இயக்குநர். ‘‘இத எடிட் பண்ணியெல்லாம் ஒண்ணுமே புடுங்க முடியாது. ஒட்டுமொத்தச் சொதப்பல். இப்டியெல்லாம் சினிமாவும் எடுக்க முடியாது, ஒரு மண்ணாங்கட்டியும் எடுக்க முடியாது'' என்று கடுமையாகச் சொல்லிவிட்டு நண்பன் ஸ்ரீநிவாசன் துணை இயக்குநர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தான். அன்றைக்கே நானும் அங்கிருந்து கிளம்பினேன். ஓரிரு நாட்களில் ‘இந்தச் சிறுபிள்ள வௌயாட்டுக்கு இனிமேப் பணம் செலவு செய்ய முடியாது' என்று தயாரிப்பாளரும் விலகிக்கொண்டாராம். ஒரு கிராமத்தின் ஒரு வசந்தகாலம் நாலைந்து நாட்களிலேயே முடிந்துபோனது. நடிகை நஸீமாவுக்குச் சரியாகப் பணம் கொடுத்திருப்-பார்களா? அவர் சந்தோஷமாக வீடு திரும்பியிருப்பாரா? எதுவுமே எனக்குத் தெரியவில்லை. நான் வேறு எது எதற்கோ திசைமாறிப் போய்விட்டிருந்தேன்.

அந்த வீடியோ சினிமாவில் பலவகையான பணிகளைப் புரிந்து ‘அனுபவம்'மிக்க என்னையும் தான் இயக்கும் வீடியோப் படத்தில் பங்கேற்க வைக்கலாமென்று என்னைத் தேடினார் எனது நலன் விரும்பியும் கருவியிசைக் கலைஞரும் கலா யூனியன் தலைவருமான கலாராஜன். என்னைத் தேடி வீட்டுக்கு வந்த அவரது ஆட்களை ‘‘அவன் ஏற்கெனவே ரொம்பக் கெட்டுபோயிட்டான், இந்தமாதிரி ஆபாசக் கூத்துக்கெல்லாம் அவன அனுப்ப முடியாது'' என்று உதாசீனப்படுத்தி அனுப்பிவிட்டார் எனது அம்மா. காலங்கடந்து அதை அறிந்த நான் பதைபதைப்புடன் ஓடிச்சென்று கலாராஜனைப் பார்ப்பதற்குள் எல்லாமே தாமதமாகிப்போயின.

‘‘இத்தின நாள் நீ எங்கேபோய் தொலஞ்சே? இப்ப வந்து என்ன லாபம்? ஷூட்டிங் தொடங்கியாச்சு''.

‘‘அப்டி சொல்லாதீங்க மாஷே. எதாவதொண்ணுக்கு என்னயும் சேத்துக்குங்க''.

‘‘செட்டுல இப்பவே ஆள் அதிகம்ன்னாரு பிரொட்யூசரு. இனிமே சொல்லிப் புரோஜனமில்ல. எதுக்கும் நீ நாளைக்கி சும்மா சோலா ஓட்டலுக்கு ஷூட்டிங் பாக்க வந்திரு''

அடுத்தநாள் நான் அங்கே செல்லும்போது வெள்ளை நிறச் சேலை கட்டிய, மெலிந்த ஓர் இளம்பெண் நடந்துவருவதுபோன்ற காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தனர். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கக் கூட்டம் குழுமியிருந்தது. அவர்கள் முன்னால் துணை இயக்குநர் என்கின்ற தோரணையில் அசத்த வேண்டிய நான் இதோ கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருக்கிறேன். காலக்கேடு. கதாநாயகியின் அம்மா என்று நினைக்கிறேன், தடித்த ஒரு பெண்மணி ஏதோ துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டிருக்கும் முகபாவனையுடன் அலட்சியமாகக் கால்மேல் கால்வைத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். திரைப்பட இயக்குநர்கள் அணிவதுபோன்ற தொப்பி ஒன்றைக் கலாராஜன் அணிந்திருந்தார். அத்தகைய சினிமாத் தொப்பிகளும் கறுப்புக் கண்ணாடிகளும் அணிந்த வேறு சிலரும் அங்கு நடமாடிக்கொண்டிருந்தனர். நாயகியின் அப்பாவாக நடிப்பவர் ஓர் ஏலத்தோட்டமுதலாளி.

ஓவியம்
ஓவியம்ரவி பேலட்

‘‘மகளே... நீ எங்கே சென்று வருகிறாய்?''

‘‘நான் தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன் அப்பா''

‘‘நன்றாக ஜபித்தாயா மகளே?''

‘‘நன்றாக ஜபித்தேன் அப்பா''

‘‘கட்'' என்று கத்திக்கொண்டு திரும்புகையில் கலாராஜன் என்னைப் பார்த்தார். உடன் ‘‘ஷாஜீ, வாடோ'' என்று அவர்பக்கம் என்னை அழைத்தார். ‘‘இந்த பையன் நம்ம ஃபிரண்டு. முந்தி நின்னுபோன ஒரு வீடியோ சினிமால அஜிஸ்டன்டா ஒர்க் பண்ணியிருக்கான்'' என்று ஒளிப்பதிவாளருக்கு என்னை அறிமுகம் செய்தபின் மற்ற வேலைகளுக்குப் போய்விட்டார். அக்கறையுடன் எனது கையைக்குலுக்கிய ஒளிப்பதிவாளர் ''இப்ப எடுத்த ஷாட்டை கொஞ்சம் பாருங்க'' என்று கேமராவின் நோக்குக் கருவியை என்னிடம் திருப்பினார். அதில் ஒரு கண்ணை ஆழ்த்தி கதாநாயகி நடந்துவருவதன் கருப்பு வெள்ளைக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனது முதுகில் அழுத்தமான ஓர் அடி விழுந்தது. வலியில் நடுங்கித் திரும்பினேன்.

கருப்புக் கண்ணாடியும் சினிமாத் தொப்பியும் வைத்து நீலவண்ண ஜீன் பேன்டும் வெள்ளைச்

சட்டையும் அணிந்த குட்டையான ஒருவர் ‘‘யாருடா நீ? ஒனக்கிங்க என்ன வேல?'' என்று கடுமையாகக் கேட்கிறார். அந்த நடிகையும் அவளது அம்மாவும் படப்பிடிப்பைப் பார்க்கவந்த கூட்டமும் அதை வேடிக்கைப் பார்க்கின்றனர். நடந்தது என்னவென்று ஒளிப்பதிவாளர் விளக்க முயன்றார். அது எதுவும் அந்த ஆளின் காதில் விழவில்லை. ‘‘கண்டகண்ட வழிப்போக்கனும் தெருப்பொறுக்கியும் ஏறி மேஞ்சு எட்டிப் பார்க்க என் கேமராவும் செட்டும் அவங்க அப்பா வீட்டுச் சொத்துக் கெடயாது''. அவர்

சத்தமாகக் கத்துகிறார்.

கலாராஜன் கூப்பிட்டதால்தான் வந்தேன் என்றும் ஒளிப்பதிவாளர் அழைத்து காட்டியதால்தான் கேமராவுக்குள் பார்த்தேன் என்றும் பலவீனமாகச்

சொல்ல முயன்றேன். ‘‘அவங்கல்லாம் இல்ல நான்தான் இந்தப் படத்தோட புரொட்யூசரு. இங்கே வந்து எவனுமே ஆட்டம்போடக் கூடாது...'' எந்தவொரு தவறுமே செய்யாமல் அனைவரின் முன்னும் அவமானப்படுகிறேன்! எனது தன்மானம் ஆழமாகப் புண்பட்டது. நான் அங்கிருந்து வெளியேற முயன்றதும் அவர் எனது சட்டையைப் பிடித்து இழுத்து ‘‘நீ எங்கப் போறே? எல்லாத்தயும் பண்ணிப்புட்டு லேசா இங்கேர்ந்து நழுவப் பாக்கிறியா?'' என்று கத்தினார்.

சண்டைச் சத்தங்களைக் கேட்டு ஓடிவந்த கலாராஜன் நான் ஒரு பாடகன் என்பதையும் முன்பு ஒரு வீடியோ சினிமாவில் பணிபுரிந்தவன் என்பதையும் எடுத்துரைத்தபோது தயாரிப்பாளர் அடங்கினார். அவர் தனது கருப்புக் கண்ணாடியை கழற்றியபோதுதான் ஆளை எனக்கு அடையாளம் தெரிந்தது. களப்புர அந்தோணி. துபாயில் வேலை செய்பவர். எனது அம்மாவின் அக்கா அம்மிணிப் பேரம்மாவின் பக்கத்து வீட்டுக்காரர். ஆனால் கடும் அவமானத்தில் வெளிறிப்போய் அங்கே நின்றுகொண்டிருந்த நான் யாரென்று என்னை அறிமுகப்படுத்த முயலாமல் அங்கிருந்து வெளியேறினேன். ‘‘ஷாஜீ நில்லெடோ'' என்று கலாராஜனும் ‘‘எடோ நில்லெடோ,

சொல்றேன்...'' என்று அந்தோணியும் பின்னாலிருந்து கூப்பிடுவதைப் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்தேன்.

சிலமாதங்கள் கடந்து ஒருநாள் சாலையோரத்தில் பேருந்தை எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்தேன். ஒரு அரதப் பழைய ஜீப் என்னைக் கடந்து போனது. சற்று தொலைவு சென்று அது நின்று பின்பக்கம் வரத்தொடங்கி, எனதருகே வந்து நின்றது. உள்ளே அதோ லுங்கியும் கட்டம்போட்ட சட்டையுமாக களப்புர அந்தோணி! அவரைப் பார்த்ததும் எனக்குக் கோபம் தலைக்கேறியது. ‘‘எடோ.. ஜீப்புல ஏறிக்கோ.. நான் கொண்டுவிடுறேன்''. அதைக் கேட்டதாகவே பாவிக்காமல் மறுபக்கம் பார்த்து மரம்போல் நின்றேன். ‘‘ஹா.. வண்டியில எறுங்க மாப்ளே.. சொல்றேன்.. நீ நரிக்குழை அம்மிணிச் சேச்சியோட தங்கச்சி மவன் தானே?''

‘அதனால என்ன? அந்த நடிகையையும் அவளது அம்மாவையும் கரெக்ட் பண்ண அவங்களுக்கு முன்னே ஒரு பெரும் புடுங்கின்னு காட்ட, நீ அத்தனைப் பேர் முன்னால் என்னை அவமானப்படுத்தினியே... அப்போ ஒனக்கு இது தோணலயா?' என்று

சத்தமாகக் கேட்க என் நாக்கு அரித்தது. இருந்தும் திரும்பியே பார்க்காமல் மௌனமாக நின்றேன். அந்தோணி ஜீப்பை விட்டு இறங்கி வந்தார். எதுவுமே நடக்காததுபோல் அருகில் வந்து எனது தோளில் கைவைத்தார். நான் பலவீனமாக அவரைத் தள்ளி அகற்ற முயன்றேன். ‘‘ஹா.. இப்டி கோவப்பட்டால் எப்டி? அன்னிக்கி ஏதோ ஒரு மூடுல ஆளறியாம அப்படி நடந்து போச்சு. மன்னிச்சிரு மாப்ளே.. வாங்க.. நாம ஒரு கோல்டு ஸ்போட்டு குடிக்கலாம்''

கோல்ட் ஸ்பாட்! இரண்டு மூன்று ரூபாய் விலை இருக்கும் புட்டிக் குளிர்பானம். ஹிந்தி நடிகை ரேகா போன்றவர்கள்தாம் அதன் விளம்பரங்களில் வந்தனர். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஒருமுறையாவது அதைக் குடிக்கவேண்டுமே என்று வாயில் எச்சில் ஊறியிருக்கிறது. அந்தோணியின் கோல்ட் ஸ்பாட் ஆசைகாட்டலில் நான் குப்புற விழுந்தேன்.தனக்கு நன்கு அறிந்த ஒரு குடும்பத்தின் அங்கமான பையனை ஆளறியாமல் வசைபாடியதில் அவருக்கு மனவுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம். அச்சம்பவத்தை நான் யாரிடமுமே சொல்லாதது அவருக்குக் கூடுதல் குற்றவுணர்வை உருவாக்கியிருக்கலாம். திரும்பி வந்தவனை திருக்கை வாலால் அடிக்கக் கூடாது அல்லவா! கோல்ட் ஸ்பாட்டின் கமலாப்பழச் சுவையைக் குடித்த வண்ணம் அந்தோணியுடன் ஜீப்பில் கிளம்பினேன்.

அந்த வீடியோ சினிமா என்னவாயிற்று என்று அவரிடம் கேட்டேன். ‘‘அது அந்த மாங்கா மடையங்க ஒரு மண்ணும் தெரியாம நம்மள ஏமாத்திப் பண்ன பெருங்கூத்து. அதுக்கு பின்னால சுத்திச் சுத்தி நேரத்துக்கு துபாய் திரும்பிப் போக முடியல. வேலயும் போச்சு. கையில இருந்த காசும் போச்சு. ஒருநாள் அவங்கக்கிட்ட என்னோட கணக்கிலே ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாடான்னு சொன்னேன். வாங்கிட்டு வந்தாங்க. அத ஊத்தி வீடியோ சினிமாவ நீங்களே கொளுத்துங்கடான்னு கத்தினே. தயங்கி நின்னாங்க. அடி அடின்னு அடிச்சு அவங்களயே கொளுத்த வெச்சேன்.. த எண்டு...''

 (வளரும்..)

shaajichennai@gmail.com

ஜனவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com