தன்னிடம் பணியாற்றிய ஒருவரை, தான் இறந்து விட்டதாக நம்பி இரங்கல் குறிப்பும் எழுதிய பிறகு அவர் உயிருடன் வந்த கதையை சுவாரசியமாக இறையன்பு ஒரு விழாவில் கூறினார்.
இறையன்பு தொலைபேசியில் தினசரி அனுப்பி வந்த பொன்மொழி வாசகங்களைத் தொகுத்து எஸ்.வி. சீனிவாசன் என்பவர் Sparkles from Iraiyanbu என்கிற நூலாக வெளியிட்டுள்ளார்.
நூலைக் கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
அந்த நூலின் வெளியீட்டு விழா அண்மையில் துரைப்பாக்கம் ராஜ் பவன் கிளார்க் இன் ஓட்டலில் நடைபெற்றது.
அந்த நூலை இறையன்பு வெளியிட பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் பெற்றுக் கொண்டார்.
நூலைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கிய சுந்தரபுத்தன் பேசும் போது,
இறையன்புடன் தனக்குள்ள நட்பைப் பற்றிப் பேசியவர், முதலில் கல்லூரி மாணவனாக தான் படித்த கல்லூரிக்கு வருகை தந்த இறையன்புவை, சென்னை வந்து சந்தித்தது முதல் இன்று வரை நண்பராக இருப்பதையும் அது 30 ஆண்டு கால நட்பாக இருப்பதையும் குறிப்பிட்டார்.அவரிடம் தான் கற்றுக் கொண்டதாக நேரம் தவறாமை, சுருங்கச் சொல்லுதல், எளிமை,நேர்நிலைச் சிந்தனை,நகைச்சுவை உணர்வு,நட்புக்கு மரியாதை போன்ற பண்புகளைக் கூறி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் வெ .இறையன்பு பேசும்போது ,
"தன்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொருட்டு இங்கு நம்மையெல்லாம் வரவழைத்து வரவேற்று பகிர்தலே பண்டிகை அளித்தலே ஆனந்தம் என்கிற வகையில் இறையன்புவின் வெளிச்சப் புள்ளிகள் என்கிற தொகுப்பு நூலை இங்கே வெளியிட்டு இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு எஸ். வி. சீனிவாசன் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது தந்தையின் நூற்றாண்டு விழாவைத் தனது சொந்த விழாவாகக் கொண்டாடாமல் அதை முன்னிட்டு நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து ஒரு வெற்றிகரமான விழாவாக ஆக்கி இருப்பது சிறப்பானதாகும்.அதைச் செய்திருக்கும் சீனிவாசன் அவர்கள் நமது அனைவரது பாராட்டுகளுக்கும் உரியவர்.
சிலர் பெயருக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பார்கள் குணசீலன் என்று பெயர் வைத்திருப்பார்கள். அவர் பார்க்கிறவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவார். அமாவாசை என்று பெயர் வைத்திருப்பார்கள் அவர் போகிற இடம் எல்லாம் வெளிச்சத்தைப் பரப்புவார்.
அதற்கு விதிவிலக்கு சுந்தர புக்தன். தன் பெயரில் சுந்தரமும் இருக்கிறது புத்தனும் இருக்கிறது. ஒரு வகையில் பார்த்தால் அவர் அழகாகத்தான் இருப்பார். அவரை இங்கு அழைத்து இருப்பதற்குக் காரணம் எனது அனைத்து நூல்களையும் அவர் படித்திருக்கிறார். கறாரான விமர்சகர் .நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார். இல்லை என்றால் இல்லை என்றே சொல்வார்.அதற்குக் காரணம் அவர் நிறைய நூல்களை வாசிப்பவர்.எனக்கு ஏதாவது நூல் தேவைப்பட்டால் கூட அவர் அந்த மாதிரியான நூல்களைத் திரட்டிக் கொண்டு வந்து கொடுப்பார்.
அவரது வாழ்க்கை என்னமோ சிரமமானது தான். எப்படி புயலில் கரை அடைவதற்கு ஒரு கலம் சிரமப்படுகிறதோ அதை போல.பொருளாதார ரீதியாக அவர் சிரமத்தில் இருப்பவர் தான் .ஆனால் அதையும் தாண்டி புத்தகங்களுக்காகச் செலவிடுபவர்; தேடிச் செல்பவர்.தன்னை வளர்த்துக் கொள்பவர்; நண்பர்களிடம் விவாதிப்பவர்.
என்னை அவர் சுமார் 30 ஆண்டுகளாகச் சந்தித்து வருகிறார். ஆனால் அவர் ஒருபோதும் தனிப்பட்ட முறையில் தனக்காக எதுவும் கேட்டதில்லை.
நல்ல நண்பர். நல்ல படிப்பாளி நல்ல படைப்பாளி . அவர் இன்னமும் ஒரு குடத்தில் இட்ட விளக்காகத்தான் இருக்கிறார் அவரைக் குன்றில் இட்ட விளக்காக நாம் பார்க்க வேண்டும்.
கற்பகம் புத்தகாலயத்தின் பதிப்பாளர் மாப்பிள்ளை என்று அழைக்கப்படுபவர் நல்லதம்பி அவர்கள் .பாரதியார் கவிதைகளுக்கு உரை வெளியிட்டவர்கள், அவர்கள் மட்டும்தான். அபிதான சிந்தாமணி, நீதி நூல்கள் என அவர்கள் வெளியிட்ட தொகுப்புகள் மிகவும் பயனுள்ளவை.
நண்பர்கள் பலரும் கூடி இருக்கிற இந்த இடத்தில் நான் எனது அலுவலகத்தில் சந்தித்தவர்களைப் பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் அரசுப் பணியாற்றிய எனது அனுபவத்தில் எத்தனையோ பேர் என்னுடன் பணியாற்றி இருக்கிறார்கள். எத்தனையோ உதவியாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள் .ஆனால் யாரோ சிலரை மட்டுமே என் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.அப்படி மனதில் பதிந்த சிலரைப் பற்றிக் கூற வேண்டும்.
நான் தஞ்சாவூரிலே பயிற்சி உதவி ஆட்சியராக எனது இந்திய ஆட்சிப் பணியைத் தொடங்கினேன்.
அப்போது எனக்கு ஒரு நேர்முக உதவியாளர், ஓர் அலுவலக உதவியாளர்.
அந்த அலுவலக உதவியாளரின் பெயர் கணபதி. அவர் அன்புமயமானவர்.
அவர் உண்மையிலேயே நான் அதிகம் சாப்பிட வேண்டும் என்று வருந்தி வருந்தி பரிமாறுவார்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்று வற்புறுத்துவார், ஒரு தாயைப் போல அன்பு காட்டுவார்.
அவர் வாழ்க்கை சோகமானது. சின்ன வயதிலேயே ஒரு தொடர் வண்டியில் ஏறி காணாமல் போனவர்.அனேகமாக அவர்களது பெற்றோர் தொடர் வண்டி சம்பந்தமாகப் பணியாற்றி இருக்க வேண்டும் .அல்லது வீடு தொடர் வண்டிப் பாதைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் .இவர் விளையாடுவதற்காக வந்தவர் அருகில் நின்றிருந்த தொடர்வண்டியில் ஏறி காணாமல் போய்விட்டார்.அப்படிச் சின்ன வயதிலேயே தொடர்வண்டியிலிருந்து தஞ்சாவூரில் இறங்கி விட்டார். பெற்றோர்கள் பெயர் தெரியாது, சொந்த ஊர் தெரியாது.
அவரை எடுத்து வளர்த்தவர், அனாதையாக வளர்ந்த ஒருவர் .அவரது மனைவியும் கூட அப்படியே . அந்த அனாதைகள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
அவர்களுக்கு ஆறு குழந்தைகள். ஆறு குழந்தைகளா ?என்று கேட்ட போது நாங்கள் தான் அனாதையாகப் போய்விட்டோம். எங்களுக்காவது நிறைய குழந்தைகள் இருக்கட்டுமே என்றார்கள்.
கணபதி அற்புதமான மனிதர் அவரைப் பற்றி எனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.
நான் தஞ்சாவூர் செல்லும்போதெல்லாம் அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று நினைப்பேன். ஏனென்றால் அவ்வளவு அன்பு காட்டியவர், நெருக்கமாக இருந்தவர்.
அப்போது ஒரத்தநாடு செல்லும் போது நான் பேருந்தில் செல்வேன். அப்போது எங்களுக்கு வாகன வசதிகள் கிடையாது. உதவி ஆட்சியராக இருக்கும் போது பேருந்தில் தான் செல்ல வேண்டும்.
மிதிவண்டியில் கூட மாவட்ட ஆட்சியரைப் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறேன்.
பேருந்தில் செல்லும்போது அருகில் இருக்கும் இருக்கையில் கணபதியை அமரச் சொல்வேன். அவர் வெட்கப்படுவார்.வேண்டாம் என்பார். அப்போது நான் சொல்வேன் யாராவது குடிகாரர் வந்து அமர்வதற்கு நீங்கள் அமரலாம் .நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள் என்று சொல்வேன்.கணபதியுடன் நான் திரைப்படங்களுக்குக் கூட சென்றிருக்கிறேன் அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவர்.
ஒருமுறை தஞ்சாவூர் சென்றபோது அவரைப் பற்றி விசாரித்த போது கணபதி இல்லை என்று சொன்னார்கள்.
அவர் இல்லாமல் போய்விட்டார் என்ற தகவல் எனக்கு இடியைப் போல இதயத்தில் இறங்கியது.
அதனால் அதைப் பற்றி நான் குறிப்பிட்டுக் கணபதியை இழந்து விட்டேன் என்று ஒரு புத்தகத்தில் எழுதினேன். சில நாட்கள் கழித்து ஒருநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுமுனையில் கணபதிதான் பேசுகிறார். ஐயா நான் கணபதி பேசுகிறேன், நான் உயிரோடு தான் இருக்கிறேன். யாரோ இந்தப் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள், படித்தேன் என்றார்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது .அடுத்த முறை செல்லும்போது கணபதியை அவசியம் சந்திப்பேன்.நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நாம் எவ்வளவோ பேரைச் சந்திக்கிறோம். எல்லாரும் இதயத்தைத் தொடுவதில்லை. கணபதி என் இதயத்தை தொட்டிருக்கிறார்.
நான் எங்கு சென்றாலும் வந்து என்னைச் சந்திப்பவர்.
அப்போதெல்லாம் பழைய ஞாபகங்களுக்கு சென்று சந்தித்து விட்டுத் திரும்புவோம்.
அப்படி சார் ஆட்சியராக நாகப்பட்டினத்தில் பணியாற்றிய போது ஆரிஃப் என்றொரு உதவியாளர் இருந்தார். அவரது கையெழுத்து அச்சு கோர்த்தது போல் இருக்கும். கோப்புகளில் அவர் எழுதியிருப்பதைப் பார்க்கிறபோது தட்டச்சு செய்ததை விட அவ்வளவு அழகாக இருக்கும்.அதனால் நெருக்கமாகிவிட்டார்.
அவர் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றார் .ஆனாலும் நான் நாகப்பட்டினம் செல்லும் போதெல்லாம் என்னை வந்து சந்திப்பார் .என்னுடன் முழு நாளையும் கழிப்பார்.
பிறகு கடலூரில் நான் பணியாற்றிய போது அங்கு சிறைச்சாலைகளில் சமூகக்காடுகளை வளர்ப்பது குறித்து பேசியபோது அங்கே குமார் என்பவர் இருந்தார். அவர் தனது பணியைச் செம்மையாக செய்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இப்படி இன்னும் காஞ்சிபுரத்தில் ,மதுரையில் எல்லாம் பணியாற்றிய போது அங்கு சிலருடன் நெருக்கமாக இருந்திருப்போம். அவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் வந்து என்னைச் சந்திக்கிறார்கள். இதை நான் சொல்வதற்குக் காரணம் நான் பணிபுரிகிற இடத்தில் பழகும் மனிதர்களிடம் சிலர் தான் நமது இதயத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள்.
நிரந்தரமாகத் தங்கி விடுகிறார்கள்.
இந்த சீனிவாசனை நான் பத்தாண்டுகளாக அறிவேன். அப்படிப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பணியாற்றுகிற போது அவரை முதலில் சந்தித்தேன்.
நேர்மையானவர், கடின உழைப்பாளி, எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடிய இயல்பு கொண்டவர். அதனால் அவர் மிக எளிதாக அந்த இருக்கையைச் சிறப்பாக்கி விட்டார். அவர் என் மீது மிகவும் பிரியமாக இருப்பார்.
நாம் பலரையும் பார்த்திருப்போம். சிலர் அந்த அலுவலர்களிடம் பணியாற்றும் போது முகஸ்துதி செய்வார்கள்; அதிகமாகப் புகழ்வார்கள்; கூழைக் கும்பிடு போடுவார்கள். நீங்கள் வந்த பிறகு தான் இந்த அலுவலகமே செம்மையானது என்றெல்லாம் பேசுவார்கள்.
நான் ஒரு வாசகம் கூட எழுதினேன் 'கூழைக் கும்பிடு போட்டுப் பிழைப்பதற்கு கூழைக் குடித்துப் பிழைக்கலாம் 'என்று எழுதினேன்.
இந்த காலைச் செய்தி அனுப்பு வது எப்படி வந்தது என்றால் ஒரு காலத்தில் நாம் யாரைப் பார்த்தாலும் நேரில் பார்க்கும்போது வணக்கம் வைப்போம். சிலரை வணக்கம் வைக்க வேண்டி இருக்கிறதே என்று வணக்கம் வைப்போம்.
வைத்துத்தான் தீர வேண்டும் என்று வணக்கம் வைப்பவர்களும்,நாமாகத் தேடிச் சென்று வணக்கம் வைப்பவர்களும் இருக்கிறார்கள்.
அலுவலகங்களில் யார் முதலில் வணக்கம் சொல்வது என்கிற மரபு கூட இருக்கும்.
அப்படிப்பட்ட அலுவலர்களின் சிரிப்பில் கூட சிவப்பு நாடா கட்டப்பட்டிருக்கும்.
மிடுக்குத் தொலைபேசி வந்த பிறகு வணக்கம் வைப்பது அதிகமாகிவிட்டது. விழாக் காலங்களில் முக்கியமான நாட்களில் எல்லாம் வாழ்த்துச் செய்திகளை தட்டி விடுபவர்கள் உண்டு. இன்று வாழ்த்து தெரிவிப்பது அதிகமாகி விட்டது. அப்படி நான் வெறுமனே காலை வணக்கம் என்று குறிப்பிடுவதை விட ஏதாவது ஒரு செய்தி தகவல் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்தது தான் இந்த காலைச் செய்திப் பழக்கம்.
ஒரு காலத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் அட்டைகளில் இருக்கும். அதை அழகழகான படங்களாகத் தேடிப் பார்த்து வாங்கி அனுப்புவார்கள்.
இப்படி காலையில் அனுப்பும் காலைச் செய்திகளில் இடம்பெறும் வாசகம் முக்கியமானதாக இருக்க வேண்டும் நான் நினைக்கிறேன். ஏனென்றால் நாம் பெரிய நூல்களைப் படித்தால் கூட அதில் உள்ள சிறு வாசகம் தான் நம் மனதில் நிற்கும்.
உன்னை நீ அறி என்கிற வாசகத்தை மனதில் கொள்கிறோம் .அதனை உயர்ந்த வாசகமாக மதிக்கிறோம்
எவ்வளவு நீளமான பயணமாக இருந்தாலும் ஒரு சின்ன அடியில் தான் தொடங்குகிறது என்பது அற்புதமான வாசகம்.
திருக்குறளில் ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு வாசகம் எழும். நான் எப்பொழுதும் போற்றுகிற வாசகம் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் .நான் உலகை உலுக்கிய வாசகங்கள் என்று ஒரு தொடரை எழுதினேன் அதில் நாமார்க்கும் குடியல்லோம் போன்ற வாசகங்கள் எல்லாம் இடம்பெற்றன.
இப்படிப்பட்ட காலை வாழ்த்துச் செய்திகளைத் தினமும் காலையில ஒரு 40 -50 பேருக்கு அனுப்புவேன். உங்களுக்குக் காலையில் அனுப்புவது தொந்தரவாக இருக்காதா என்று கேட்ட பிறகுதான் அனுப்புவேன். சிலர் எனக்கு அனுப்ப மாட்டீர்களா என்பார்கள். அதன் பிறகு அப்படி நான் அனுப்புவதுண்டு அப்படித்தான் இந்த சீனிவாசனும் கேட்டுக் கொண்டதன் பேரில் அவருக்கு அனுப்பி இருந்தேன் .வாழ்த்துச் செய்திகளை வாசகங்களை எல்லாம் தொகுத்து ஏற்கெனவே நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
நான் எழுதிய ஆங்கில வாசகங்களை இவர் தனியாக சேகரித்து வைத்து வந்துள்ளார் .ஒருநாள் நான் எழுதிய ஆங்கில வாசகங்களை எல்லாம் வைத்திருப்பதாகச் சொன்னார் .இதைச் சரியாக மொழிபெயர்த்து தொகுத்து வெளியிடலாலாமா? என்றார். நான் அக மகிழ்ந்து போனேன் அப்படி உருவானது தான் இந்த நூல். சரியாக வடிவமைத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார் .தனது தந்தையின் நூற்றாண்டு விழாவில் அதை வெளியிடலாமா? என்றார். நான் ஒப்புக்கொண்டேன். அப்படித்தான் இந்த நூல் இங்கு வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி" என்று இறையன்பு பேசினார்.
புத்தகத்தை வெளியிட்டுள்ள கற்பகம் புத்தகாலயம் பதிப்பாளர் ஆர்.நல்லதம்பி அனைவருக்கும் நன்றி கூறினார்.