கிளாஸ்காரத் தெருவில் ஒரு நடைபயணம்! தேவதாஸ் -நாவல் விமர்சனம்

 கிளாஸ்காரத் தெருவில் ஒரு நடைபயணம்! தேவதாஸ் -நாவல் விமர்சனம்
Published on

மதுரையைச் சேர்ந்த தேர்ந்த எழுத்தாளரான ஆத்மார்த்தி எழுதிய தேவதாஸ் என்ற நாவல், எழுத்து அறக்கட்டளையால் திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. பரிசுத் தொகை ரூ 2 லட்சம்.

இந்நாவலில் பல பாத்திரங்கள் இருந்தாலும் முக்கியமான பாத்திரமாக இருப்பது மதுரை நகரம் தான்!   நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மதுரை தற்கால சூழலில் தமிழ்நாட்டின் பிற வேகமாக வளரும் நகரங்களுடன் ஒப்பிட்டால் சவலைப் பிள்ளைதான். கோவைக்கும் சேலத்துக்கும் இருக்கும் சூதானமானதொரு தன்மை மதுரைக்குக் கிடையாது. பழைமையின் பெருமையில் ஓடிக்கொண்டிருக்கும் நகரம். ஒரு எய்ம்ஸ் வந்து சேர்வதற்குள் திணறிவிடுகிறது. எங்கே மெட்ரோ ரயில் வருவது?

நாவலில் வரும் பிரதான பாத்திரம் தேவதாஸ். மனவளர்ச்சி குன்றிய இளைஞன். இட்லி சுட்டு வயிற்றைக் கழுவும் அன்னத்தாயின் மகன். கணவனை இழந்து கைப்பிள்ளையுடன் மதுரைக்கு வந்தவள். அவளை அரவணைத்த தூரத்து சொந்தமான ஆச்சியின் மறைவுக்குப் பிறகு சாலையோர இட்லிக்கடை நடத்தி ஜீவனம் தள்ளுகிறாள். இந்த விளிம்பு நிலை மனுஷியின் நிழலில் இன்னொரு ஆதரவற்ற பெண்ணாக வந்து சேர்கிறாள் பவளம். கடைகளில் சேலை திருடுவது அவளது பூர்வீகக் கதை. இவர்களுக்கெல்லாம் நிழலாக இருக்கிறார்கள் விடுதி முதலாளி அண்ணாச்சியும் அவரது மகன் சக்தியும். கிளாஸ்கார தெருவில் இந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு வாழ்க்கையை கேன்வாஸில் கோடுகளாகக் கிழித்துப்பார்க்கிறார் ஆத்மார்த்தி.

சக்தி மீது தேவதாஸ் வைத்திருக்கும் அன்பு அழகானது. அண்ணாச்சி முதல் அந்த தெருவே தேவதாஸை அப்பிராணிப் பையன் என்று அலுங்காமல் குலுங்காமல் பார்த்துக்கொள்கிறது. அப்படிப்பட்ட பையனை அவனுடைய உலகில் இருந்து அவனுடைய அனுமதி இன்றியே வேறொரு உலகத்துக்கு சரக்கு ரயிலில் ஏற்றிவிடுகிறார் ஆசிரியர். இத்தனைக்கும் அவனை எக்காலத்துக்கும் அலுங்காமல் பார்த்துக்கொள்ள அண்ணாச்சி வகையாறாக்கள் தயாராக இருந்தும் கூட. விதியின் கோடுகள் விசித்திரமானவை. பவளமல்லியைத் துரத்திவந்த பழைய சுவடுகளில் ஒன்று அவளைத் துரத்துகையில் அவள் எடுக்கும் விபரீத முடிவில் தேவதாஸ் பலியாகிப்போகிறான். யாரும் கெட்டநோக்கில் எதையும் செய்வதில்லை. ஆனால் சூழல் எல்லோரையும் உருட்டிப்போட்டு விளையாடுகிறது.

நாவலின் கதைப்போக்குக்கு எந்தவிதத்திலும் அவசியமில்லாத மனிதர்களும் இந்த கதையோட்டத்தில் வந்துபோகிறார்கள். நாவலின் ஆரம்பத்தில் சிட்டி லாட்ஜை கூட்டிப்பெருக்குகின்ற ராக்கம்மா, பானிபூரி  கடை போடும் சேட், கஞ்சா வாங்கிக் கொடுக்கும் நவீன்… என தேவதாஸின் உலகில் பலர் விரிவாக சஞ்சரிக்கிறார்கள்.

கோவையில் துணிக்கடையில் கைதாகி போலீஸ் கஸ்டடிக்குச் செல்கிற பவளத்தை அழைத்துச் செல்லும் போலீஸ்காரன், மதுரையில் பவளத்தை அடையாளம் கண்டுகொள்வதில் தொடங்குகிறது தேவதாஸுக்கான உலகின் சரிவு. தனக்கென்று யாருமற்ற அப்பாவிப் பெண்கள் யாரையும் எளிதில் நம்பி தங்களை இழந்துவிட எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் துயரம் மலையெனப் பெருகுகிறது. ஆத்மார்த்தியின் சொற்களில் ‘தலைக்குள் பாம்பு புகுந்ததுபோல்’ இருந்த போலீஸ்காரனின் திடீர் வருகை எனும் எச்சரிக்கை, பவளமல்லியின் முட்டாள்தனமான நம்பிக்கையில் காணாமல் போய்விடும்போது இந்த உலகமும் அப்பாவிப் பெண்களும் இப்படித்தான் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

மதுரையின் அன்றாட வாழ்வு, அதன் பெரிய மனிதர்களின் நிழல்வாழ்க்கை, கட்டபஞ்சாயத்துகள் எனச் சென்றாலும் மதுரை என்றாலே கொடூரமான அரிவாள் கலாச்சாரமாக எழுதாமல் எதையும் பேசித்தீர்த்துக் கொள்கிற சாமானிய மனிதர்கள் உலவும் உலகாகப் படைத்தமைக்காக ஒரு கும்பிடு அய்யா…

நாவல் முடிவு மிகுந்த சங்கடத்தைத் தருகிறது. எப்படி வேண்டுமானாலும் இதை ஆசிரியர் முடித்திருக்கலாம். இவ்வளவு துயரத்துடன் முடிக்கக்கூடாது எனத் தோன்றியது. நாவலாசிரியர் மீது கோபம் ஏற்பட்டதும் உண்மைதான். ஒருவேளை அவருக்குக் கிடைத்த வெற்றியே இந்த கோபம்தானோ?

logo
Andhimazhai
www.andhimazhai.com