
சுகதேவ்
’அர்த்தங்களை மாற்றிவைத்து வார்த்தையை, வாழ்க்கையை அழுக்காக்கி விடுகிறான் மனிதன். திசை மாற்றி வைப்பானோ மனிதன் என்று தினம் தினம் விடியல்கூடத் தடுமாறி விடுகிறது.'
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 'வணக்கம் வள்ளுவ' வரிகள் இவை.
“இந்தத் தொகுப்பு வள்ளுவம் என்ற படைப்பின் மீதான ஒரு படைப்பு'' என்று வரையறுக்கிறார் தமிழன்பன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தக் கவிதைத் தொகுப்புக்காக 2004-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறார் அவர். பேராசிரியர் எஸ்.கே. சங்கரநாராயணன் மொழிபெயர்ப்பில் இத்தொகுப்பு ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.
மக்களுக்காகக் கவிதை பயன்பட வேண்டும் என்ற சிலிக் கவிஞன் பாப்லோ நெரூடாவின் கோட்பாட்டைக் கொள்கைப் பிரகடனமாகக் கொண்டிருக்கும் தமிழன்பன், இதுவரை 29 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். குழந்தைகளுக்கான தொகுப்பு ஒன்றும் இதில் அடங்கும்.
கவிதைதான் தமிழன்பனின் முகம் என்றாலும் முதலில் வெளியான படைப்பு, நாவல், ‘நெஞ்சின் நிழல்' என்ற தலைப்பில் 1965-ல் வெளியான நாவல்தான் இவரது முதல் படைப்பு. பாவேந்தர் பாரதிதாசன், பாரி நிலையம் செல்லப்பனிடம் தன்னை அழைத்துச் சென்று அன்புக் கட்டளையிட்டு இந்த நாவல் வெளிவர ஏற்பாடு செய்தார் என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் தமிழன்பன்.
'மழை நாளில்' (தமிழ்ப் புத்தகாலயம்) இவரது சிறுகதைத் தொகுப்பு மரபுக் கவிதை, புதுக்கவிதை சார்ந்த 14 திறனாய்வு மற்றும் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். 1970 - களில் வெளியான ‘தமிழன்பன் கவிதைகள்' தான் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
'வானம்பாடி' இயக்கத்தின் முக்கியப் புள்ளியான தமிழன்பன், தொடர்ந்து சோதனை முயற்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவரது ‘கணீர்’ குரலைக் கடந்த தலைமுறை தொலைக்காட்சி நேயர்கள் கேட்டிருப்பார்கள். சென்னைத் தொலைக்காட்சியில் நீண்ட காலம் செய்தி வாசிப்பாளராக முத்திரை பதித்தவர்.
ஈரோடு அருகேயுள்ள சென்னிமலையைச் சேர்ந்த 69. முந்தைய வயது தமிழன்பனுக்கு இப்போது தலைமுறையைத் தூரத்தில் நிறுத்தும் வகையில் தமிழ்க் கவிதை உலகம் புதுப்புது அலைகளை உருவாக்கி வந்த போதிலும், சோர்வுற்றுப் பின்வாங்காமல் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
விருது பெற்ற ‘வணக்கம் வள்ளுவ' கூட ஒரு புதிய முயற்சிதான் என்கிறார்.
கதைத் தன்மை இல்லாத படைப்பை எடுத்துக் கொண்டு கதைத் தன்மையோடு, காவியப் பரிமாணத்தோடு நான் எழுத முயன்றதுதான் 'வணக்கம் வள்ளுவ' என்று சொல்கிறார்.
தொலைக்காட்சிப் பேட்டிக்காக அவர் புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மாலையில் தொலைபேசியில் உரையாடினேன்.
’பிரபல' கவிஞர்களுக்கே உரிய 'ஸ்பெஷல் எஃபெக்ட்' எதுவும் இன்றி நேராகவும் அதே நேரத்தில் நயமாகவும் பேசுகிறார்.
ஒரு படைப்பாளியாக இந்த விருது தக்க தருணத்தில் கிடைத்திருப்பதாகக் கருதுகிறீர்களா... அல்லது. தாமதம் என்று நினைக்கிறீர்களா?
தாமதம் என்றுதான் என் மீது உயர் மதிப்பு கொண்ட பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட, 'தீவுகள் கரையேறுகின்றன' என்ற எனது கவிதைத் தொகுப்பு ஏற்கெனவே விருதுக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறது. அதற்குப் பிறகும் கூட இதுபோன்று ஓரிரு முறை நடந்திருக்கிறது. என்றாலும் இப்போது தான் விருது கிடைத்திருக்கிறது. தாமதம் என்ற உணர்வு இருந்தாலும் இப்போதாவது கிடைத்திருக்கிறதே... என்ற வகையில் திருப்தி கொள்கிறேன்.
'வணக்கம் வள்ளுவ' விருதுக்குரிய படைப்பு என்று கருதுகிறீர்களா... அல்லது இதைவிடவும் சிறந்த படைப்புகள் உங்களிடம் உண்டென்று நினைக்கிறீர்களா?
இதற்கு முன்பும் எனது நல்ல படைப்புகள் விருதுக் களத்தில் இருந்தன. எனினும் கவிதை உலகம் மட்டுமன்றித் தமிழறிஞர் சார்ந்த புலமை உலகமும் இணைந்த தளத்தில் 'வணக்கம் வள்ளுவ' தொகுப்புக்குத் தனி இடம் உண்டு. அந்த வகையில் இதற்கு விருது கிடைத்ததும் சரியாகத் தான் தோன்றுகிறது.
வழக்கமாக ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட அடுத்த நாளிலிருந்தே பரபரப்பான விமர்சனங்கள் எழும்... விருது அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இந்த முறை அப்படிப்பட்ட காரசாரமான கணைகள் உங்களுக்கு எதிராகக் கிளம்பியது போலத் தெரியவில்லையே... 'சுனாமி' அலையில் ஓடுங்கிவிட்டதா... அல்லது இனிதான் கிளம்புமா?
பரவலாக மாற்றுக் குரல்கள் இல்லை. ஜெயமோகன் 'உயிர்மை'யில் 'இது ஒன்றுமில்லை' என்பது போல எழுதியிருக்கிறார். அவர் இப்படி எழுதுவது வழக்கம் தான். வள்ளுவருக்கு, பாரதியாருக்கு, பாரதிதாசனுக்கு விருது கொடுத்தால்கூட விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதனால் இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.
பரவலாக மாற்றுக் குரல் இல்லை என்று சொன்னீர்கள். அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்க் கவிதைத் துறையில் நான் தொடர்ந்து செய்து வரும் சோதனை முயற்சிகள்தான் முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். ஜப்பானிய ஹைக்கூ வடிவமும் மேல்நாட்டு லிமரிக் (5 வரிக் கவிதை) வடிவமும் இணைந்த புதிய கவிதை வடிவத்தைத் தமிழுக்குத் தந்திருக்கிறேன். தேநீர்க் கடைகளிலும் மதுக் கடைகளிலும் வளர்க்கப்பட்ட ஜப்பானியக் கவிதை வடிவமான 'சேன்ரியு' பாணிக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். 'உன் வீட்டுக்கு நான் வந்திருந்தேன் வால்ட் விட்மன்' என்ற பயணக் கவிதைத் தொகுப்பும் புது முயற்சிதான்.
நெருடா, தனது மரணப் படுக்கையில் இருந்த போது 74 கேள்விகளாலான கவிதை நூலைப் படைத்தார். அதுபோலக் 'கனாக் காணும் வினாக்கள்' எனும் தலைப்பில் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளாலான கவிதைகளைப் படைத்திருக் கிறேன்.
சுருங்கச் சொல்வதெனில் வெவ்வேறு வகைப்பாடுகள் எனது தனிச் சிறப்பு.
சீனிவாச ராகவன் (வெள்ளைப் பறவைகள் - கவிதை), பாரதிதாசன் (பிசிராந்தையார் - நாடகம்) கண்ணதாசன் (சேரமான் காதலி - நாவல்), அப்துல் ரகுமான் (ஆலாபனை - கவிதை), சிற்பி (ஒரு கிராமத்து நதி - கவிதை), வைரமுத்து (கரிசல் காட்டு இதிகாசம் -நாவல்) இவர்களைத் தொடர்ந்து சாகித்ய அகாதெமி விருது பெறும் ஏழாவது கவிஞர் நீங்கள். அதுவும் கவிதைக்கு மட்டும் என்று கணக்கிட்டால் நான்காவது நீங்கள்... தமிழ்க் கவிதை உலகின் பெறுமதி இவ்வளவுதானா?
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சாகித்ய அகாதெமி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நெடிய காலத்தில் தமிழில் நான்கு கவிஞர்களுக்குத் தான் கவிதைக்கு விருது கிடைத்திருக்கிறது.
தமிழ்க் கவிதைகள் தரம் குறைந்தவை என்பதல்ல இதற்குப் பொருள். விருதுக் குழுக்களில் இடம்பெற்றிருந்த நடுவர்களுக்குக் கவிதை குறித்த பார்வை ஆழமாக இல்லை என்பது தான் காரணம். நடுவர்களாக அமரும் தமிழர்கள் கவிதையை ஒரு படைப்பிலக்கியமாகக் கருதிப் பார்த்தால் தமிழ்க் கவிஞர்களுக்கு நிறைய விருதுகள் கிட்டும்.
வீதியில் செல்லும்போது கைதட்டி யாரையாவது அழைத்தால், திரும்பிப் பார்க்கும் ஒரு சிலரிலும் நிச்சயம் கவிஞர்கள் இருப்பார்கள் என்கிற அளவுக்குப் பெருகிவிட்ட எண்ணிக்கை கவிதையின் மதிப்பைச் சரித்து விட்டதாகக் கருதுகிறீர்களா?
இல்லை. அதிகமானவர்கள் ஈடுபாடு கொண்டிருப்பதாலேயே மலிவானதாக நினைக்கக் கூடாது. ஆனால் நீங்கள் சொல்வது போல அப்படி நினைக்கும் ஆபத்து இருக்கிறது. என்றாலும் இவ்வாறு நிறைந்திருக்கும் கூட்டத்திலிருந்துதான் நாம் சரியான கவிதைகளை, கவிஞர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
'வானம்பாடி' போல ஒரு கவிதை இயக்கம் இன்று தோன்றுவதற்கான அவசியமும் சாத்தியமும் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
முன்னைக்காட்டிலும் கூடுதல் அவசியம் இருப்பதாகவே கருதுகிறேன். உலகமயமாக்கலின் விளைவாகக் கலை, பண்பாட்டு நெருக்கடிகள் தீவிரமாகி வருகின்றன. நாடுகள் தனித் தன்மைகளை இழக்கக்கூடிய அதிகார வர்க்கத்தை உலகமயமாக்கல் உருவாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் எழுதப்படும் கலைக் களஞ்சியங்களிலும் தொகை நூல்களிலும், தமிழும் இதர இந்திய மொழிப் படைப்புகளும் இடம்பெறாமல் ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்தியப் படைப்புகள் மட்டுமே இடம்பெறக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சாகித்ய அகாதெமியின் செயலர் கவிஞர் சச்சிதானந்தன் எச்சரித்திருப்பது கவனத்திற்குரியது.
இந்தப் பின்னணியில் நிச்சயமாக ஒரு கவிதை இயக்கம் தேவை. எந்தத் தளத்திலிருந்து யார் உருவாக்குவது என்பது தான் கேள்வி.
நவீன கவிஞர்களின் படைப்புகளைத் தொடர்ந்து கவனிக்கிறீர்களா?
படிக்கிறேன். அடுத்த தலைமுறை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. புதிய இளைஞர்கள் ஒற்றைமுக, பன்முக அனுபவங்களை மிக நுட்பமாகக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அது வரவேற்கத்தகுந்தது. ஆனால் இதற்கிடையில் சமூக உணர்விலிருந்து பின்வாங்கிக் கொள்ளும் போக்குத் தலைதூக்கி வருவது மட்டுமே எனக்குக் கவலை அளிக்கிறது.
'வானம்பாடி' இயக்கம் முந்தைய தொடர்ச்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. நவீன கவிதை, தொடர்ச்சியிலிருந்து விலகிப்போகிறது என்றாலும் முற்றிலும் விலகிவிட முடியாது.
புரியும் கவிதை, புரியாத கவிதை -பற்றி உங்கள் கருத்து என்ன?
உள்நோக்கிப் போனால் கதவுகள் திறக்க வேண்டும். அதுதான் கவிதை. இன்னொன்று, படிப்பவனின் அனுபவம், படைப்பாளியின் நோக்கம் - ஆளுமை என்ற இருதரப்பும் சார்ந்தே இத்தகைய விமர்சனங்களைப் பார்க்க வேண்டும்.
நவீனப் பெண் கவிஞர்கள் பற்றி இப்போது நடக்கும் சர்ச்சையில் உங்கள் நிலை என்ன?
அவர்கள் ஒரு கலகக் குரல் எழுப்புகிறார்கள். முந்தைய பெண் கவிஞர்கள் மரபிலிருந்து விடுபட்டு எழுதுகிறார்கள். உடல் சார்ந்த அவர்களின் மொழி நடப்பியல் தன்மையுடையதாக இருக்கிறது. அது சிலருக்கு அருவருப்பு ஊட்டலாம். ஆனால் அதற்கு இடையில் இருக்கும் உண்மையை நாம் பார்க்க வேண்டும். மேலும் அவர்கள் எழுதுவதைக் கண்டிப்பதற்கு நாம் யார்...?
தமிழ்க் கவிதை, உலகத் தரத்தின் உயரத்தை எட்டி யிருப்பதாகக் கருதுகிறீர்களா?
நியூயார்க்கிலிருந்து வெளியான The World Poetry என்ற புத்தகத்தைச் சமீபத்தில் படித்தேன். ஒவ்வொரு கால கட்டத்தையும் சார்ந்த முக்கியமான உலகக் கவிஞர்களின் தொகுப்புதான் இந்த நூல். இந்தியப் பிரிவில் தமிழில் சங்கக் கவிதைகள், திருக்குறள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல் பற்றிய குறிப்புகளெல்லாம் இருக்கின்றன. 20-ம் நூற்றாண்டுப் பிரிவில் பாரதியார் பெயரோ, கவிதையோ இல்லை. இரா. மீனாட்சி (புதுவை) என்ற கவிஞரின் கவிதை மட்டும் இருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த கவிதை என்றால் இதைத்தானே சொல்ல வேண்டி வரும்...?
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
அமெரிக்காவில் வெளியிடுவது போல ஒவ்வொரு ஆண்டும் தமிழில் சிறந்த கவிதைகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அப்போது தான் உலகத் தரத்துக்கு நிகராகத் தமிழ்க் கவிதைகள் இருக்கின்றனவா என்று தெரியவரும்.
அடுத்து என்ன எழுத உத்தேசம்...?
நெரூடாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத விருப்பம். 'பொதுக் காண்டம்' என்ற தலைப்பில் 25,000 கவிதைகளை உள்ளடக்கிய நெடுங்கவிதையைப் பத்து வருடங்களில் நெரூடா எழுதியிருக்கிறார். அவருக்கு நோபல்பரிசு பெற்றுத் தந்த படைப்பு அது. அதுபோல ஒன்றை முயன்று பார்க்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.
படைப்பால் சமூக மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடையவரா நீங்கள்?
படைப்பால் உடனடி மாற்றம் நிகழாது. பெரிய மாற்றங்களை நோக்கி மக்களைப் பதப்படுத்துவதற்குக் கவிதையும் இதர படைப்புகளும் ஒரு கருவியாக இருக்கலாம். அதற்கும் கூட தகுந்த சூழல், தகுந்த படைப்பு தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட சூழல் இப்போது நிலவுகிறதா...?
இல்லை.
நன்றி: எழுத்தாளர் சுகதேவின் ‘உள்ளோம் ஐயா’ என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள நேர்காணல் (2005).கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவையொட்டி வெளியிடப்படுகிறது.