வள்ளுவர் மறை, வைரமுத்து உரை. இது அண்மையில் கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கும் நூல். தனது பாணியில் வள்ளுவர் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். பலராலும் கவனிக்கப்படும் இந்த திருக்குறள் உரை குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழ்நாட்டில் பல்வேறு உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பட்டுள்ளன. நீங்க அடிப்படையிலேயே ஒரு தமிழ் மாணவர். திராவிடக் கொள்கைகளின் அடிப்படையில் வருகிறவர். தெய்வம் என்ற சொல்லுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாதது இல்லை போல் தெரிகிறதே?
தெய்வத்தைத் திட்டமிட்டுத் தவிர்க்கவில்லை. சொல்லப் போனால் தெய்வம் என்பது எனக்கு உடன்பாடு. கடவுள் என்பதுதான் உடன்பாடு இல்லை. கடவுள் வேறு; தெய்வம் வேறு. கடவுள் என்பது கற்பிக்கப்பட்டது. தெய்வம் என்பது வாழ்ந்த மனி தனின் குணாம்சங்கள் தான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
அதாவது வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவனை தெய்வமாகக் கொண்டாடுகிற மரபு தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுதான் நடுகல். அதுதான் முன்னோர் வழிபாடு. அதுதான் குலதெய்வ வழிபாடு. அதன்மீது எனக்கு நம்பிக்கை உண்டு. முன்னோர்களை நானும் வழிபடுகிறவன். என் தாய் மறைந்த பொழுதும் என் தந்தை மறைந்த பொழுதும் நான் அவர்கள் உடல் மீது மாலை இட்டு, மரியாதை செலுத்தி, வணங்கி, என் உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்ட செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தந்தையே தாயே, எங்களை வாழ்த்துங்கள், உங்களின் நல்லண்ணங்களும், நல்ல வாழ்க்கையும் எனக்கும், குடும்பத்துக்கும், பரம்பரைக்கும், தலைமுறைக்கும் தொடரட்டும்.
எனக்கு சில குறைகள் இருப்பது மாதிரி என் தாய்தந்தைக்கும் குறைகள் இருக்கலாம், ஆனால் அவர்களின் நற்குணங்கள் மட்டுமே, அவர்களின் எங்கள் பரம்பரையைத் தொடரவேண்டும் என்று கேட்டு கொண்டேன்.
இதுதான் நடுகல் வழிபாடு, இதுதான் முன்னோர் வழிபாடு, என் தாயை தெய்வத்தில் வைக்கிறேன், என் தந்தையை தெய்வத்தில் வைக்கிறேன், தமிழ் மரபில் நான் இதை வழிபடுகிறேன். எனவே கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தைத்தான் நான் அறிவு வணக்கம் என்று மாற்றினேனே தவிர, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற குணப் பெருமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
அறத்தான் வருவதே இன்பம் என்ற குறள் உரையில் இன்பப்பொருளில் பெண்ணை சேர்த்திருப்பதை விமர்சித்தார்களே?
பெண் என்பவளை ஏன் இன்பத்துக்குப் புறம்பாக நினைக்கிறீர்கள்? காமத்துப்பால் என்று குறிக்கப்படுகிற இன்பத்துப்பாலைப் பெண்ணைக் கழித்துவிட்டுப் பார்க்க முடியுமா? எனவே பெண்ணைப் பெருமை ஆகக் கருதுங்கள். பெண்ணை அறத்தின் ஊற்று என்று கருதுங்கள். பெண் ஆணுக்கு இன்பத்தின் ஊற்று ஆகவும் ஆண் பெண்ணுக்கு இன்பத்தின் மழை ஆகவும் இருப்பதனால்தான் உலகம் இயங்குகிறது அதனால்தான் அறம்பொருள் இன்பம் என்ற வரிசை முறையே வாழ்கிறது. எனவே பெண்ணைத் தவிர்க்க வேண்டும் என்ற கூற்றை நான் அன்போடு மறுக்கிறேன்.
நிறைய இடங்களில் உங்களுடைய நடைச்சிறப்பு விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. நீங்க எழுதியபோது அதை எண்ணி நீங்களே வியந்துகொண்ட இடம் ஏதேனும் உண்டா?
மயிர்நீப்பின் வாழா கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
- இந்த குறளுக்கு எழுதிய உரையை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவனூற்கு எல்லை உரை செய்தாரிவர் என்பது பழைய வெண்பா. இந்த பத்து பேர் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். ஐந்து பேர் உரை கிட்டி இருக்கிறது ஐந்து பேர் உரைகள் கிட்ட வில்லை. இதில் பரிமேலழகர் தன்னுடைய நெறிக்கு ஏற்ப தன்னுடைய நம்பிக்கைகளுக்கு ஏற்ப பொருள் சொல்லியிருக்கிறார் மணக்குடவர் அந்த சார்பிலிருந்து சற்றே விலகியிருக்கிறார். எனவே பரிமேலழகர் உரையைவிட மணக்குடவர் உரையே சிறந்தது என்று ஒரு கருத்து, அறிஞர் உலகில் இன்னும் நிலவுகிறது .
சொல்லப் போனால் பரிமேலழகருக்கு முற்பட்டவர் மணக்குடவர். அந்த மணக்குடவர் இந்த குறளுக்கு உரை செய்யும்போது கவரிமான் என்றே பொருள் கொண்டு இருக்கிறார். கவரிமான் வேறு கவரிமா வேறு என்று நான் இதில் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். கவரிமான் என்று ஒரு மான் இருக்கிறது, மானமுள்ள இனம் கவரிமான் இனம் என்று சொல்லுகிறார்கள். மானினமே மானமுள்ள இனம் என்றுதான் ஒரு கருத்து இருக்கிறது. மானுக்கும் மானத்துக்கும் என்ன தொடர்பு என்று இதுவரைக்கும் எனக்கு சரியாக தெரியவில்லை. ஒரு மான் தனக்கு இழுக்கு ஏற்பட்டால் மலையிலிருந்து குதித்து இறந்துவிடும் என்று ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? இப்படி கர்ணபரம்பரையாக செவிவழிச் செய்தி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் இது வரைக்கும் இல்லை.
இதை ஆராய்கிறபோது உள்ளே ஆழ்ந்து பார்த்தால் கவரி மானன்னார் என்று னகரம் இடம்பெறவில்லை கவரி மா வன்னார் என்று வகர உடம்படுமெய்யால் ஆளப்பட்டு இருக்கிறது. வகர உடம்படுமெய் வந்தால் அது மானாக இருக்க முடியாது, கவரி மாவாகத்தான் இருக்க முடியும். மா எனில் விலங்கு, கவரி என்றால் மேல் மயிர் என்ற பொருள். எனவே அந்த கவரி என்பது விலங்குகளின் மயிர்க்கற்றை என்று நாம் பொருள் கொள்ள முடியும். பல நுட்பமான பொருட்களை எல்லாம் அறிந்திருக்கிற வள்ளுவர், குளிர் நாட்டில் வாழுகிற கவரியை உடம்பெல்லாம் கொண்டு இருக்கிற விலங்குளைப் பற்றி அறிந்திருக்க மாட்டாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பனிக்காடுகளில் வாழுகிற விலங்குகள் உடம்பெல்லாம் கற்றை முடி கொண்டவையாக இருக்கும். எனவே அப்படிப்பட்ட கவரியின் மொத்த முடியும் உதிர்ந்து விட்டால் அதை தாங்குகிற குளிரை தாங்குகிற தோல் மட்டும் தான் தெரியும் அந்த தோல் குளிரை தாங்காது அந்த மா இறந்து விடும். இந்த பொருளை நான் சொல்வதற்கு காரணமே என் முன்னோர்களான உரை ஆசிரியர்கள் அத்தனை பேரும் செய்த ஒரு சின்ன பிழையாகவே நான் கருதுகிறேன்.
எனவே இப்போது நான் சொன்ன இந்த அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுக்கு உட்பட்ட, நடைமுறைக்கு ஏற்ற, இந்தப் பொருளை அறிவுலகம் எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டு விட்டது என்பதை தான் எனக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் நான் என்னை நானே முதுகில் தட்டிக்கொண்டேன்.
இந்த விஷயத்தை முன்பே ஆய்வாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் உரையாசிரியராக இதை நீங்கள் முன்வைத்திருப்பதை முக்கியமானதாகக் காண்கிறேன்.
இது முன்னால் சொல்லப்பட்டு இருந்தாலும் நான் கண்டுபிடித்து சொல்லியிருந்தாலும் உண்மை எப்போதும் உண்மைதான். உண்மையின்பால் திருக்குறளை நிறுத்துவதற்கு யார் பாடுபட்டு இருந்தாலும் அவர்களை நாம் வாழ்த்துவோம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்ற குறளைப் பற்றி எழுதுகையில் அதன் இறுதிச்சீரையும் வள்ளுவனின் இரு கால்களையும் பற்றிகொண்டு கதறவேண்டும் போலிருக்கிறது என சொல்லி இருக்கிறீர்கள்?
உயிருக்கு என்கிற அந்த ஒரு வார்த்தை போதும் அல்லவா? எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப, இவ்விரெண்டும் கண்ணென்ப, வாழும் உயிருக்கு. செத்த உயிரைப் பற்றிக் கவலைப்படாதே, அது போகட்டும். வாழும் உயிர்களைப் பற்றிக் கவலைப்படு, என வள்ளுவர் சொல்கிறார். அப்படிக் கவலைப்பட்டால் வாழும் உயிர்கள் அத்தனை உயிர்களுக்கும் கல்வியைப் பொதுவுடைமை செய். கல்வி கற்பதற்கு நால் வர்ணத்தால் பிரிக்காதே, ஏழைப் பணக்காரன் என்று பிரிக்காதே, ஆண்டான் அடிமை என பிரிக்காதே, ஆண் பெண் என பிரிக்காதே யார் யாருக்கு உயிர் இருக்கிறதோ, அவனுக்கு எல்லாம் கல்வி கொடு என்ற வள்ளுவனைப் பார்த்து நான் வணங்குகிறேன், அவன் கால்களைக் கட்டிக்கொண்டு கதற வேண்டுமென்று எழுதியது, அந்த நிமிடத்து உணர்ச்சி. இப்ப நீங்க சொல்லுங்க... இப்ப கல்வி எனக்குத்தான் சொந்தம் என்று யாராவது வந்து உரிமை கொண்டாட முடியுமா?
இந்த உரையில் பெண்ணுரிமை சார்ந்து நிறைய பேசி இருக்கிறீர்கள்?
வரைவின் மகளிருக்கு வைரமுத்து என்ன உரை எழுதி இருக்கிறான் என திறனாய்வாளர்கள் அருள்கூர்ந்து உற்று கவனிக்க வேண்டும். அவர்கள் தொழிலுக்காக நேர்ந்து விடப்பட்டவர்கள் அல்ல. அந்த வாழ்வுக்குத் ஆண் வர்க்கத்தால் தள்ளப்பட்டவர்கள் என்று அதில் நான் மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் ஒரு வரைவின் மகளிருக்கு ஆயிழை என்று ஒரு வார்த்தை வருகிறது. ஆயிழை என்றால் தேர்ந்தெடுத்து நகை அணிகிறவள் என்று பொருள். அடி பாவி, உன்னால் நகையை தேர்ந்தெடுக்க முடிந்ததே தவிர, உன் துணையை தேர்ந்தெடுக்க முடியவில்லையே பெண் வழிச்சேறல் அதிகாரத்திலும் பெண் சொல்வதெல்லாம் பிழை; பெண் பேச்சை கேட்காதே என்று வள்ளுவர் சொல்லியிருந்தால் அது பெண்களுக்கான ஒரு பின்னடைவு என்றே நான் கருதுவேன். நான் அப்படிக்கருத வில்லை. எந்த ஓர் ஆடவன் காமத்தை முன்வைத்து காமத்தின் பின்னால்சென்று பெண்ணின் பேச்சை கேட்கிறானோ, அவன் அப்படி கேட்கக்கூடாது. அறிவை முன்வைத்துக் கேட்கவேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன்.
காமத்துப் பால் பகுதியில் உங்களுக்குப் பிடித்த குறள்?
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்குரை.
நீ ஊருக்கு போகவில்லை என்னைப் பிரியமாட்டேன் என்றால் என்னிடம் சொல்லு. செல்லாமை உண்டேல் எனக்கு உரை … மற்றுன் வல்வரவு… நீ எப்ப திரும்பி வருவாய் என்பதை யாரு உயிரோட இருப்பாங்களோ அவர்களுக்கு சொல்லிட்டுப் போ…என்ன அருமையான குறள்.
எழுதுங்கால் கோல்காணா கண்ணேபோல்
உன்கண் பழிகானேன் கண்ட விடத்து..
மைதீட்டும் பொழுது கோல் கண்ணருகே செல்லும். ஆனால் கோலை அந்த கண் பார்ப்பது இல்லை. தூரத்தில் இருக்கிற போது தெரிகிற கோல் கிட்டே வந்த பிறகு மறைந்து விடுகிறது. நீயும் அப்படித்தாண்டா. தூரத்தில் இருக்கிற போது பழி தெரிகிறது பக்கத்தில் வந்தா அந்த பழி அற்று போகிறது. நான் கண்ணுக்கு மைதீட்டும் அஞ்சனக் கோல்தான் என் காதலனும் என் கணவனும்.
உலக இலக்கியங்களைத் தேடிப் படித்துள்ளேன். எங்கும் இப்படிக் கண்டதில்லை. கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். ஏ வள்ளுவப் பெருமானே, நீ ஒரு காவியம் எழுதாமல் கடந்து போய்விட்டாயே. நீ மட்டும் ஒரு பெரிய காவியத்தை, ஒரு நாட்டை அல்லது காதலை அல்லது அறத்தை முன்னிலைப்படுத்தி எழுதி இருந்தால் எவ்வளவு செம்மையாக இருந்திருக்கும்? கம்பன் காணாமல் போயிருப்பான். கம்பன் என்று ஒருவன் தோன்றட்டும் என்று வள்ளுவர் அந்த வெற்றிடத்தை விட்டு விட்டு போய்விட்டான் என்று எனக்குத் தோன்றுகிறது.
கவிஞரின் முழு நேர்காணல்: