'மொழிபெயர்ப்பாளர்கள் மீது பொறாமைப்படும் எழுத்தாளர்கள்!' ஜி.குப்புசாமி விரிவான நேர்காணல்
அயல்மொழி இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்வதில் நம்பகமான தனி இடத்தைப் பெற்றுள்ளவர் ஜி. குப்புசாமி. உலகின் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராய விருது, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, அருட்செல்வர் மொழிபெயர்ப்பு மையத்தின் விருது போன்ற பல விருதுகள் பெற்றவர்.இவற்றுடன் ‘கடல்’ நாவல் மொழிபெயர்ப்புக்காக அயர்லாந்து அரசின் இலக்கிய நல்கையும், ‘ஷகி பெய்ன்’ நாவல் மொழிபெயர்ப்புக்காக ஸ்காட்லாந்து கோவ் பார்க் எழுத்தாளர் உறைவிடமுகாம் நல்கையும் பெற்றவர். அவருடன் ஓர் உரையாடல்!
உங்கள் மொழிபெயர்ப்புகள் நீங்கள் ரசனை மிகுந்த ஒரு சிறந்த வாசகர் என்பதையே மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகின்றன என்று பாராட்டப்படுகிறீர்கள். நீங்கள் ரசனையுள்ள வாசகராக வளர்ந்த விதத்தைக் கூற முடியுமா?
என்னைச் சந்திக்கும் போது பலரும் இந்தக் கேள்வியை கேட்பதுண்டு. பதிலை மாற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதற்கு எப்போதும் நான் சொல்லும் பதில் இதுதான். அதற்குக் காரணம் என்னுடைய வீட்டுச் சூழல் தான். என்னுடைய தாத்தாவும் அப்பாவும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தாத்தா ஒரு பெரியாரிஸ்ட் மட்டுமல்ல, பெரியாருக்கு நேரடியாகப் பழக்கமுள்ள அவருடைய நண்பர். என்னுடைய அப்பா தி.மு.க. ஆரம்பித்த 1949லிருந்து, களத்தில் இறங்கித் தேர்தல் வேலை செய்யாத தி.மு.க. காரர். எங்கள் வீடு முழுக்க அரசியல், வரலாறு, தத்துவப் புத்தகங்கள் தான் இருக்கும். இது ஒரு பக்கம்.
எங்கள் அம்மாவுக்குச் சங்கீதம், இலக்கியம் இதிலெல்லாம் நல்ல ரசனை உண்டு.இது இன்னொரு பக்கம். இப்படி இது இரண்டும் கலந்ததாகவே நான் வளர்ந்தேன். என் சின்ன வயதிலேயே எங்கள் வீட்டுக்கு நிறைய பத்திரிகைகள் வரும். ஸ்பேன், லைஃப், டைம், ரீடர்ஸ் டைஜெஸ்ட் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், அயல் நாட்டுப் பத்திரிகைகள் வரும். அது ஆங்கில வாசிப்புக்குச் சுலபமான வழியாக இருந்தது. மாஸ்கோ நியூஸ் ,சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளும் வரும். அவையெல்லாவற்றையும் வீட்டுப்பாடம் போல படிக்கச் சொல்வார்கள். என் தாத்தா ஞாயிற்றுக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவரும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எழுதிய கட்டுரைகளைப் படிக்கச் சொல்லி அர்த்தம் கேட்பார். நான் சொல்வேன். ’அப்படி அல்ல இப்படி’ என்று அதைத் திருத்துவார். ஜார்ஜ் பெர்னாடஸ்ஸின் ஆங்கிலத்தை ரசித்துப் பாடம் எடுப்பார். இதனால் எனக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது கூட கோபம் வரும். தாத்தா, அப்பா இரண்டு பேருமே நல்ல படிப்பாளிகள். இப்படிச் சிறு வயதிலேயே எனக்குப் புத்தகங்கள் மீதும் ஆங்கில வாசிப்பின் மீதும் அச்சமே இல்லாமல் வாசிக்கும் தூண்டுதல் கிடைத்தது. இன்னொரு பக்கம் இலக்கிய வாசிப்பும் வந்துவிட்டது.
என்னை வாசிப்பில் உலக இலக்கியத்தை நோக்கி என்னை நகர்த்தியது எதுவென்றால்,எனது பள்ளிப் பருவத்திலேயே ஆரணி மாதிரி ஒரு சின்ன ஊருக்கு செக்காவையும் டால்ஸ்டாயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் கொண்டு வந்து சேர்த்த எங்கள் ஊருக்கு வந்த அந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வேனுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.இதுதான் என்னை வாசிப்பை நோக்கி நகர்த்திக் கொண்டு சென்றது என்று கூறலாம். அதற்குப் பிறகு சுய முயற்சியில் தேடித்தேடி வாசித்து வாசித்து வளர்ந்தேன் .
உங்கள் சொந்த ஊரான ஆரணியை ஏன் 'இலக்கிய மறைவுப் பிரதேசம்' என்று கூறி இருக்கிறீர்கள்?
இன்றைய காலகட்டத்தில் ஆரணியை இலக்கிய வறட்சிப் பிரதேசம் என்று சொல்லலாம். ஆனாலும் நவீன இலக்கியப் படைப்பாளிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் இப்போதும் சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். 18 - 19 ஆம் நூற்றாண்டில் வேலூர், திருவண்ணாமலை சார்ந்த தொண்டை மண்டலம் என்று கூறப்படுகிற பகுதி 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்று பெயர் பெற்றது. ரெங்கையா முருகன் ஆரணியைச்சுற்றி இருக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்த பல சான்றோர்கள், பிராமணரல்லாத சமஸ்கிருத தத்துவ அறிஞர்கள் பற்றிய பெரிய பட்டியலே போட்டுள்ளார். அதேபோல் அருணகிரிநாதர், அப்பைய்ய தீட்சிதர், சகஜானந்தர் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆரணி இப்போது வேண்டுமானால் இப்படி இருக்கலாம். ஆனால் எப்போதுமே எங்கள் பகுதி ’சான்றோர் உடைத்து’ தான். ஆரணி குப்புசாமி முதலியார் வெறும் துப்பறியும் கதைகள் எழுதியவரல்ல, மிகப்பெரிய சமஸ்கிருத அறிஞர். பல தத்துவ நூல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சார்வாகன் எங்கள் ஊர்தானே!
இப்போது எல்லா இடத்திலும் நவீன இலக்கிய வாசிப்பு என்பது குறைந்து தான் இருக்கிறது. ஆரணியில் இப்போது எனது நண்பர் சுதாகர் அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். புத்தகக் கண்காட்சிகள், எழுத்தாளர்கள் சந்திப்பு, இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது என்று தொடர்ந்து செய்து வருகிறார். இப்போது பள்ளிக்கூட பிள்ளைகள் புத்தகங்களில் ஒட்டுவதற்கு எழுத்தாளர்கள் படங்கள் அச்சிடப்பட்ட லேபில்களைத் தருகிறார்கள்.இந்த மாதிரியான முயற்சிகளை அவர் ஒரு தனி மனிதராகச் செய்து கொண்டிருக்கிறார். வெகு விரைவில் ஆரணியில் இருந்து ஒரு மகத்தான எழுத்தாளர் வருவார் என்று நினைக்கிறேன்.
'இது மொழிபெயர்ப்புகளின் இரண்டாம் பொற்காலம்' என்று கூறியிருக்கிறீர்கள். எதை வைத்து அப்படிக் கூறுகிறீர்கள்?
உலகமயமாக்கல் என்பது 90களில் ஆரம்பத்தில் தொடங்கியது. அதன் மூலம் உலகமே ஒரு கிராமம் என்று சுருங்கி விட்டது. இணைய வசதி இதற்கு ஒரு முக்கியமான காரணம். அதன் நீட்சியாக 2000 க்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் பற்றிய கவனம் அதிகமாகி இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் உரிமை பெறாத மொழிபெயர்ப்புப் படைப்புகள்தான் பெரும்பாலும் தமிழில் வந்து கொண்டிருந்தன. அயல்மொழி இலக்கியங்கள் சார்ந்த உரிமை வாங்கும் நடைமுறைகள் எல்லாம் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. அது அவ்வளவு செலவு பிடிக்கும் ஒன்றல்ல என்பதும் இப்போது புரிந்து இருக்கிறது. அதே நேரம் உரிமை பெறாமல் மொழிபெயர்ப்பது சட்டச் சிக்கலுக்கு உள்ளாகும் என்பதும் இப்போது புரிந்திருக்கிறது. எனவே முறைப்படி உரிமை வாங்கும் நடைமுறை வந்து முக்கியமான படைப்புகளும், சர்வதேச விருது பெறும் சமகால நூல்களும் உடனுக்குடன் தமிழில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு அரசு எடுத்துள்ள முன்னெடுப்புகள் பெரிய காரணம். முன்பெல்லாம் பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சிக்கு ஒன்றிண்டு பதிப்பாளர்கள் மட்டுமே செல்வார்கள்.இப்போது தமிழ்நாடு அரசு ஒரு குழுவையே கொண்டு செல்கிறது. இதற்கான பலமான அடித்தளம் சென்ற திமுக அரசால்தான் போடப்பட்டிருக்கிறது.இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் தமிழில் நேரடியாக வரும் நாவலைவிட மொழிபெயர்ப்பு நாவல்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறன. அதற்கு மொழிபெயர்ப்பின் மீது வாசகர்களுக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம். ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்கள் கூட அவர்கள் படித்த புத்தகத்தை தமிழில் வரும்போது அதை வாங்குவார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்தில் படிக்காமல் தமிழில் படிக்கும் வாசகர்களும் இப்போது அதிகமாக இருக்கிறார்கள். அதனால்தான் இதை இரண்டாம் பொற்காலம் என்கிறேன்.
முதல் பொற்காலம் என்பது பாரதி, புதுமைப்பித்தன் க.நா.சு என்று 40களில் தொடங்கி கசடதபற காலம் வரை இருந்தது. இரண்டாயிரத்துக்குப் பிறகு பெரிய எழுச்சி வந்திருக்கிறது அதனால் தான் இரண்டாவது பொற்காலம் என்றேன்.
முதலில் மொழிபெயர்ப்புக்கான ஆசிரியரை, அல்லது படைப்பை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
அது என்னுடைய தெரிவுதான். இதில் பிடித்த எழுத்தாளர்கள் என்று இல்லை . தமிழுக்கு எது தேவை என்ற அடிப்படையில் எனது தேர்வு இருக்கும் அவை என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனக்கெனச் சில அரசியல் -சமுதாய பார்வைகள் இருக்கின்றன. அதோடு ஒத்து இருப்பவற்றையே நான் தேர்ந்தெடுக்கிறேன். உதாரணமாக நான் எப்போதும் சமகாலப் படைப்புகளைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்திற்குப் பொருத்தமாக இருந்ததால்தான் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் 'தீரமிகு புது உலகம்' மொழிபெயர்த்தேன். நான் மொழிபெயர்க்கும் புத்தகங்களை நான்தான் தெரிவு செய்வேன் காலச்சுவடு கண்ணனிடம் இந்த மாதிரியான புத்தகங்கள் எல்லாம் நான் மொழிபெயர்க்க விரும்புகிறேன் என்றால் அவர் அதற்கான உரிமையை வாங்கிக் கொடுப்பார்.
உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் என்ன?
இதற்குப் பதில் சொல்வதைவிட எனது 'மூன்றாவது கண்' தொகுப்பைக் கையில் கொடுத்து விடுவது நல்லது. மொழிபெயர்ப்பு சார்ந்த என்னுடைய நம்பிக்கைகள், மொழிபெயர்ப்பை நான் எப்படி அணுகுகிறேன் என்பதைப் பற்றி எல்லாம் அந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசி இருக்கிறேன்.ஒரு மொழிபெயர்ப்பின்போது பல்வேறு சிக்கல்களையும் ஓரளவு சமாளித்துக்கொண்டு தனது பிரதியில் மூலப்படைப்பாளியைக் கொண்டுவர மொழி பெயர்ப்பாளன் எதிர்கொள்ளும் சங்கடங்களும், சறுக்கல்களும்,சவால்களும் அலைக்கழிப்புகளும் சமரசங்களும் எண்ணற்றவை.
சுருக்கமாகச் செல்ல வேண்டுமானால் மூல ஆசிரியரின் சொல்லுக்கும் உணர்வுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.
ஆனால் இது ஓர் எளிமையான வாக்கியமாக தோன்றலாம்.ஆனால் அது தான் முக்கியமானது.
மூலப் படைப்பில் இருந்து எதையும் திருத்துதல், மாற்றுதல், கூடாது என்கிற நீங்கள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கடத்துவதில் மொழித் தடை என உணர்ந்ததுண்டா?
திருத்துதல் மாற்றுதல் என்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. ஒரு மொழியின் வாக்கிய அமைப்பை அதே வாக்கிய அமைப்பில் இன்னொரு மொழியில் எழுத முடியாது. இது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஷயம் தான் .தமிழ் மொழிக்கு ஏற்றபடி அதன் அர்த்தமும் உணர்ச்சிகளும் சிதையாமல் நீங்கள் மொழி பெயர்த்தால் தான் அது தமிழுக்கு ஏற்றதாக அமையும். மொழிபெயர்ப்பு என்பது 100% முழுமையானதாக வருவதற்கு வாய்ப்பில்லை. சில மட்டும் அமைவதுண்டு. நீங்கள் யாருடைய படைப்பில் அந்த 100%-ஐ நெருங்கினீர்கள் என்று கூறலாம் என்று கேட்டால்,ஒன்றை மட்டும் சொல்வேன் அது அருந்ததி ராயின் ’சின்ன விஷயங்களின் கடவுள்.”
பிறமொழிகளின் புழக்கத்தில் பார்க்கும் போது தமிழ் மொழியின் வளம் அல்லது போதாமை என்று உணர்ந்ததுண்டா?
தமிழைப்போன்ற ஒரு மகத்தான மொழியைக் கையில் வைத்துக்கொண்டு தமிழில் போதாமை என்று யாராவது சொன்னால் மொழிபெயர்ப்பாளனான எனக்குக் கடும் கோபம் வரும். உண்மையில் தமிழ் எவ்வளவு மகத்தான மொழி என்பது எந்தத் தமிழ் அறிஞர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அரசியல்வாதிகளை விடவும் என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்குத்தான் தெரியும். தமிழில் சரியாக மொழிபெயர்ப்பு அமையவில்லை என்றால் அந்த மொழிபெயர்ப்பாளரின் தனிப்பட்ட மொழிவளம் தான் சந்தேகத்துக்குரியதாக இருக்கும். தவிர தமிழ்மொழியின் குறையல்ல. புனைவு இலக்கியத்தில் புழங்கும்போது தமிழால் முடியாதது எதுவுமே இல்லை என அறிய முடியும். அப்படிப்பட்ட தமிழ்மொழியில் நான் இயங்குவது எனக்கு பெருமிதமூட்டுகிறது.
'வாசகரைப் படைப்பாளியிடம் மொழிபெயர்ப்பாளர் கொண்டுசேர்க்க வேண்டும். படைப்பாளியை வாசகரிடம் கொண்டுவருதல் இலக்கிய மொழிபெயர்ப்பாகாது' என்று கூறியிருக்கிறீர்களே?
வாசகரைத்தான் படைப்பாளிடம் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். படைப்பாளியை வாசகரிடம் கொண்டு வருதல் கூடாது. அது சரியான மொழிபெயர்ப்பு அல்ல என்பது என் கருத்து. அதாவது வாசகருக்கேற்ற மொழிபெயர்ப்பாக அது இருக்கக் கூடாது. படைப்பாளியின் படைப்பைத்தான் மொழி பெயர்க்க வேண்டும். படைப்பாளியின் இடத்துக்கு வாசகனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மொழிபெயர்ப்புக்குத் தேவையான அடிப்படைப் பண்புகள் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, விடாமுயற்சிதான். மொழிப்புலமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்று அ. முத்துலிங்கம் கூறியுள்ளதை எந்த அளவிற்கு ஏற்பீர்கள்?
’மொழிப்புலமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான்’ என்று அ.முத்துலிங்கம் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அர்ப்பணிப்பும், கடும் உழைப்பும், விடமுயற்சியும் தேவை. இவற்றோடு மூல மொழியிலும் இலக்கு மொழியிலும் நல்ல தேர்ச்சி மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும்.
நீங்கள் மொழி பெயர்த்ததில் ஏறக்குறைய சரி பாதியாக இருப்பவை நாவல்கள். அப்படி நாவல்களை மொழிபெயர்ப்பது என்பது பெரிய மைதானத்தில் அடித்து ஆடும் வாய்ப்பு போன்றதல்லவா? சிறுகதை, கட்டுரை வடிவங்கள் நாவல் தரும் சவாலையோ நிறைவையோ கொடுக்குமா? நாவல்கள் தரும் அனுபவத்தை எப்படிக் கூறுவீர்கள்?
நாவல்கள் தரும் அனுபவத்தை சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற வடிவங்கள் கொடுக்காதா என்ன? அப்படியெல்லாம் கிடையாது. நாவலை மொழிபெயர்ப்பு செய்வது ஒரு பெரிய கேன்வாஸில் வரைவதுபோல. அப்படி மொழிபெயர்க்கும் போது நீண்ட காலத்துக்கு அதற்குள்ளேயே ஆழ்ந்து வாழ வேண்டும். அந்த நாவல் தரும் நீடித்த நிலைப்புத் தன்மையில் இருக்க வேண்டும்.ஒரு புத்தகம் ஒரு படைப்பாளியின் உயிர். அது 300 அல்லது400 பக்கத்தில் இருக்கலாம். அந்த நாவலை மொழிபெயர்க்கும் ஒன்றரை ஆண்டுகள் இரண்டு ஆண்டுகள் அதற்குள்ளேயே ஆழ்ந்து வாழ வேண்டும்.அந்த நீடித்திருக்கக் கூடிய தன்மை மிகவும் முக்கியம். ’இஸ்தான்புல்’ மொழிபெயர்க்கும் போது இருக்கிற மனநிலை வேறு.
அருந்ததிராயின் ’சின்ன விஷயங்களின் கடவுள்’ மொழிபெயர்ப்பு செய்யும்போது வேறு ஒரு மனநிலை.அது ஒரு சவால்.
சிறுகதை என்பது அளவில் சின்னதாக இருந்தாலும் அதற்கு வீரியம் அதிகம். சமீபத்தில் அருந்ததிராயின் நூலின் மொழிபெயர்ப்பு வேலை எல்லாம் முடித்த பிறகு சும்மா இருக்கும்போது ஏதாவது கதை எழுதக்கூடிய மனநிலை வந்து தொந்தரவு கொடுக்கிறது என்று ஒரு சிறுகதையை மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தேன்.ஒரு சின்ன கதை தான், ஆனால் அதற்குப் பின்னால் உள்ள சரித்திரப் பின்புலம் எல்லாம் சேர்ந்து ஒரு வாரத்துக்கு அந்தச் சிறுகதையின் உக்கிரம் பீடித்திருந்தது.நாவல் என்பது மாரத்தான் ஓட்டம் போல. சிறுகதை என்பது 100 மீட்டர் ஓட்டம் போல. அதனதற்கான முன் தயாரிப்பு,உழைப்பு ,வேகம், வீரியம் எல்லாம் தனித்தனியானவை.
நீங்கள் அபுனைவுகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துப் பெயர்க்கிறீர்கள்?
ஒரு மொழி பெயர்ப்பாளராக அபுனைவுகளை நான் தேர்ந்தெடுப்பது அது பேசும் அரசியலை வைத்துத்தான். பெரும்பாலும் நான் மொழி பெயர்த்த அபுனைவுகள் நான் நம்புகிற அரசியல் சார்ந்தவை அல்லது மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் சார்ந்தவை. இந்த இரண்டையும் தாண்டி எதுவும் இல்லை.
நீங்கள் மொழி பெயர்க்கும் போது பல்வேறு நாடுகளில் உள்ள அனுபவங்களைக் கொண்ட கதைகளைச் செய்து இருக்கிறீர்கள் .அப்போது ஒரு வாசகனாக அதில் ஆழமாக இறங்கி வாழ்ந்து ஒரு நிகர்நிலை வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தைப் பெற முடிந்ததா? அவற்றில் மறக்க முடியாதது?
உடைந்த குடை , பனி, கடல், போன்றவை மட்டுமல்ல இந்தியப்படைப்புகளில் சின்ன விஷயங்களின் கடவுள்,கடைசிப் புதிர்ப் பாதை என எல்லா நாவல்களை மொழி பெயர்க்கும் போதும் எல்லா நாவல்களிலும் நானும் ஓர் உபபாத்திரமாகவோ அல்லது நானும் ஓர் இணைப் படைப்பாளியாகவோ இருந்திருக்கிறேன்.
மொழிபெயர்ப்பு என்பது என்பது பல இழப்புகளைக் கொண்டது ,அதுவும் இடைமொழியான ஆங்கிலம் வழியாக வரும்போது மேலும் நீர்த்துப் போய் அந்த இழப்பின், சேதாரம் அதிகமாகும் என்பதைப் பற்றி?
ஓரான் பாமுக் எழுதிய படைப்புகளைத் துருக்கி மொழியில் நேரடியாக வாசித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் துருக்கியில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்று அதிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தான் படிக்க வேண்டி இருக்கிறது.அதற்காக நாம் துருக்கி மொழியைக் கற்றுக் கொள்ள முடியுமா? மிலன் குந்தேராவை வாசிப்பதற்கு செக் மொழியையும், குந்தர் கிராஸைப் படிக்க ஜெர்மன் மொழியையும், முரகாமியைப் படிக்க ஜப்பானிய மொழியையும், மார்க்கேஸைப் படிக்கவும் ஸ்பானிய மொழியையும் கற்றுக்கொண்டு மொழிபெயர்க்க முடியுமா? சாத்தியமில்லை. இடைமொழியான ஆங்கிலத்தில் இருந்து தான் செய்ய வேண்டி இருக்கிறது.அப்படிச் செய்யும் போது சில இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் ஆங்கிலம் ஒரு நல்ல இணைப்பு மொழி. ஆங்கில மொழிபெயர்ப்புகள் சர்வதேச சந்தையில் சர்வதேச பதிப்பகங்களில் பல்வேறு விதமான கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டுத்தான் ஆங்கிலத்தில் வருகின்றன. அப்படி வரும் ஆங்கிலப்பிரதிகளை, படைப்புகளை மூலப்படைப்புகளுக்கு கிட்டத்தட்ட இணையானது என்றே தான் கருதிச் செயல்பட வேண்டும். நமக்கு வேறு வழி இல்லை.
ஒரு மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புகளுக்கு எந்த அளவிற்கு இடம் உள்ளது? அடிக் குறிப்புகள் தவிர்க்கும் மொழிபெயர்ப்பே சிறப்பானது என்பதை ஏற்கிறீர்களா?
தனிப்பட்ட முறையில் அடிக்குறிப்புகள் புனைவுகளின் மொழிபெயர்ப்பில் இடம்பெறுவது எனக்குப் பிடிப்பதில்லை. அது கவனக்கலைப்பு என்பதால். ஆனால் விளக்கம் தேவைப்படும் இடங்களுக்கு அடிக்குறிப்புகள் அவசியம்தான்.
உங்கள் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசும்போது அருண் ஜோஷியும் குப்புசாமியும் சேர்ந்து எழுதிச் செல்கிறார்கள் என்ற விமர்சனத்தைப் பார்க்கமுடிந்தது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மொழிபெயர்க்கும் போது மானசீகமாக மூலப் படைப்பாளியுடன் சேர்ந்து எழுதுவதாக எப்போதெல்லாம் உணர்ந்திருக்கிறீர்கள்?
இந்த மானசீகமான தொடர்பு எல்லா மொழிபெயர்ப்பின்போதும் இருக்கும். எப்போது ஒரு மூலப்படைப்பாளியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறதோ அந்த மொழிபெயர்ப்பு சரியாக அமையாது. அப்படி ஒரு தொடர்பு இல்லை என்றால் நான் அந்த மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்ள மாட்டேன். எனது மொழிபெயர்ப்பை முடிவு செய்வது நான்தான்.
மூல ஆசிரியரோடும் அந்தப் படைப்போடும் ஆத்மார்த்தமாக தொடர்பு இல்லாமல் நான் மொழிபெயர்ப்பு செய்யவே முடியாது. நான் மொழிபெயர்க்கும் போதும் அந்த மொழி பெயர்ப்பாளரின் மீடியமாக மாறி விடுவேன். நான் என்னவோ இதை மகிமைப்படுத்துவதற்காகக் கூறவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளரின் சரியான இயங்குமுறை அப்படித்தான் இருக்க வேண்டும்.
ரேமண்ட் கார்வரின் மொழியை நான் முழுதாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.அதனால் தமிழில் கார்வர் எழுதும்போது இந்த வாக்கியத்திற்கு எந்தச் சொல்லை பயன்படுத்துவார் என்று நான் பார்ப்பேன். இதைக் ’கூறுவார் ’ என்று எழுதுவாரா ? ’சொல்வார் ’ என்று எழுதுவாரா ? என்றெல்லாம் யோசிப்பேன். இதைத் தர்க்கரீதியாகக் கேட்டால் பதில் கூற முடியாது. எனது எழுத்தாள நண்பர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள் , நீங்கள் மொழிபெயர்த்த ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு நடையில் இருக்கிறது என்று. அது எனது மொழிபெயர்ப்புக்குக் கிடைத்த பாராட்டு என்றே நினைக்கிறேன். கநாசுவின் மொழிபெயர்ப்புகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே நடையில்தான் இருக்கும். அது கநாசு வின் நடை. அவரைக் குறை சொல்ல முடியாது. அவர் ஒரு பரிந்துரையாளர் தான். அவர் படித்த உலக இலக்கியங்கள் எல்லாம் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வேகத்தில் செய்தது. கிட்டத்தட்ட அது ரீடெல்லிங் தான். மறு கூறுமுறை தான் என்று சொல்லலாம். ஆனால் மொழிபெயர்ப்பில் ஒரு பிரம்ம ராட்சசன் ஆக இருந்தவர் புதுமைப்பித்தன். நவீன மொழிபெயர்ப்புக் கொள்கைகள்,கோட்பாடுகள் எல்லாம் தெரியாத ஒரு காலத்திலேயே அவ்வளவு அற்புதமாக அவர் செய்திருந்தார்.
புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புகளைப் பார்த்தால் நமக்கு மூச்சடைத்துப் போகும். புதுமைப்பித்தனின் நடை நமக்குப் பழக்கமாக இருக்கும். ஆனால் அவரது மொழி பெயர்ப்பில் ஒவ்வொரு கதையும், புத்தகமும் ஒவ்வொரு நடையில் இருக்கும். புதுமைப்பித்தனின் உண்மையான உயரத்தை தமிழ் வாசகர்கள் உணரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மொழிபெயர்ப்பில் அவர் பயன்படுத்திய மொழியை- நடையை வைத்தே பத்து பி எச் டி செய்யலாம். மொழிபெயர்ப்பில் அவர் ஒரு ரியல் மாஸ்டர் என்றே கூற வேண்டும்.
ஒரு படைப்பாளரை விட மொழி பெயர்ப்பாளர் மொழியின் ஆழம் காணும் வாய்ப்பு பெற்றவர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
ஒரு வகையில் இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு படைப்பாளி தன் மனம் என்கிற கிணற்றில் ஆழமாக மூழ்கித் தனது உணர்ச்சிகளுக்கான சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சலித்து அதைப் படைப்பாகத் தனது குரலில் படைக்கிறார். மூல ஆசிரியரின் மனக்கிணற்றுக்குள் இறங்கி அந்தப் படைப்பாளியின் உணர்வுகளைத் தனது மொழியில் கொண்டு வருவதற்கு சற்று மேலான திறமை வேண்டும் என்றே சொல்ல வேண்டும். தமிழைப் பொறுத்தவரை நான் சொல்கிறேன், எந்தப் படைப்பாளியை விடவும், எந்தத் தமிழ் அறிஞரை விடவும், எந்த அரசியல்வாதியை விடவும் தமிழ் எவ்வளவு மகத்தான மொழி என்பது மொழிபெயர்ப்பாளனுக்குத்தான் தெரியும் என்பேன்.
தமிழில் எழுதப்பட்டது போல் இருப்பதே நல்ல மொழிபெயர்ப்பு என்பதை மறுக்கும் நீங்கள் அதற்கான உரையாடலே நிகழ்வதில்லை என்கிறீர்கள். எது மாதிரியான உரையாடல் நிகழ வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
இந்திய மொழிகளிலேயே மொழிபெயர்ப்பு என்கிற ஒரு விஷயம் ஆரம்பித்ததே தமிழில்தான். பலஆண்டு காலமாக மொழிபெயர்ப்புகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு மொழியில் ஒரு மொழிபெயர்ப்பு என்றால் என்ன அதை எப்படி அணுகுவது அதை எப்படிப் புரிந்து கொள்வது என்கிற புரிதல் பெரும்பாலான வாசகவர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பு குறித்த உரையாடலே இங்கு கிடையாது. மூலப்படைப்புடன் மொழிபெயர்ப்புப் பிரதியை வரிக்கு வரி ஒப்பிட்டு நடத்தும் ஆய்வுகள் அயல்நாட்டுப் பல்கலைகழகங்களில் உண்டு. இங்கு ஒரு மொழிபெயர்ப்பு நாவலின் பாத்திரங்களையும் இடங்களையும் தமிழில் மாற்றி விட்டால் தமிழில் எழுதப்பட்டதைப் போலவே இருப்பதுதான் சிறந்த மொழிபெயர்ப்பு என்கிற கருத்து இருக்கிறது. இதைவிட அபத்தம் இருக்க முடியாது.
ஒவ்வொரு மொழிபெயர்ப்பின் மீதும் அந்த நாட்டினுடைய பின்புலத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.ஒரு படைப்பாளி அவனுடைய நாட்டின் மண்ணின் மீது நின்று அந்தக் கலாச்சாரத்தைத் தனது படைப்பின் மூலம் சொல்கிறான். அது நமக்கு மாற்றாகத்தான் இருக்கும். அதை வேரோடு பிடுங்கி நம் நாட்டில் நட முயற்சிக்கக் கூடாது.
ஓர் ஆப்பிரிக்காவின் கதையை ஒரு ஆங்கிலேயன் பார்வையில் சொன்னால் அது எப்படிச் சரியாக வரும்? ஆப்ரிக்க இலக்கியத்தின் பிதாமகனான சினுவா ஆச்செபேவின் ’Things Fall Apart ’ ஆங்கில நாவலாக இருந்தாலும், சம்பிரதாய பிரித்தானிய ஆங்கிலநடையில் எழுதப்படாமல் நைஜீரிய சொலவடைகளுக்கும், கலாச்சாரத் தனித்துவத்துக்கும் ஏற்றாற்போல நாவலின் குரலை ‘இக்போ’ நடைக்கு மாற்றி எழுதியிருப்பது உதாரணம். அதுதான் நைஜீரியாவின் இகுபோ மக்களின் கலாச்சாரத்தைப் படைப்பில் காட்டுவதாக இருக்கும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதாலேயே ஆங்கிலக் கலாச்சாரத்துக்கு ஒரு படைப்பை மாற்றக்கூடாது.
ரஷ்ய மொழிபெயர்ப்பின் போது பல கூத்துகள் இப்படி நடந்துள்ளன .அதை எழுத்தாளர் விளாடிமிர் நபக்கோவ் போட்டுக் கிழித்திருப்பார். ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்’ என்ற அவரது கட்டுரை முக்கியமானது. பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்கள் செய்கிற முதன்மைத் தவறுகளாக அறியாமையால் தவறாக மொழிபெயர்த்தல், புரியாத சொற்களைத் தவிர்த்துவிடுதல், பிரதியின் நுட்பத்தைக் கொண்டுவர இயலாமல் எளிமைப் படுத்திவிடுதல் என்று மூன்று பாவங்களைச் சுட்டிக் காட்டுகிறார். பல ரஷ்ய மொழிப் படைப்புகளை, ரஷ்யகலாச்சாரத்தைப் பிரதிபலிப்பது போல் இல்லாமல் பிரிட்டிஷ் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பது போல் செய்திருப்பார்கள். இது நம் ஊருக்கும் பொருந்தும். நம் ஊரில் ஒரு துருக்கிய நாவலோ ஜப்பானிய நாவலோ தமிழ்நாட்டில் நடக்கிறது போல் இருந்தால் அந்த மொழிபெயர்ப்பாளர் நல்ல மொழி பெயர்ப்பாளர் என்கிறார்கள். கதையைப் படித்து விட்டு தங்களது மொழியில் அப்படியே சொல்லும் மொழி பெயர்ப்பாளர்கள் சிலர் உண்டு. சொந்தமாகக் கதை எழுத முடியாதவர்கள் இப்படி ஒரு ரகசிய சுய திருப்தி அடையும் நிலைக்கு செல்கிறார்கள்.
ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தனது சுயத்தை அழுத்திக் கொண்டு படைப்பாளியின் மொழியைக் கொண்டு வருவதில் தான் வெற்றி இருக்கிறது .தவிர அதை விட்டுவிட்டு தன்னுடைய குரலையோ தன்னுடைய மொழியையோ தனது மனச்சாய்வைக் காட்டுவதோ தவறு. அது கூடாது.
படைப்பிலக்கியத்துக்கு நிகராக வளர வேண்டிய மொழிபெயர்ப்பு இலக்கியம் அந்த வேகத்தில் வளர்கிறதா? இன்னும் பல நாடுகளில் இருந்து வரவுகள் வராமலே இருக்கின்றனவே?
ஆமாம். பல நாடுகளில் இருந்து படைப்புகள் வருவதே கிடையாது. தென்கிழக்காசிய நாடுகள், வியட்நாம் கொரியா, வளைகுடா போன்ற நாடுகளில் இருந்து வருவதே இல்லை.ஆனால் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வர ஆரம்பித்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் நைஜீரியா, தென்னாப்பிரிக்கா தவிர பிற நாடுகளில் இருந்து வருவதில்லை. அரசியல் காரணங்களுக்காக இஸ்ரேல் படைப்பாளிகளில் பலரும் நமக்கு அறிமுகமாகாமலே இருக்கிறார்கள். அமோஸ் ஓஸ் அற்புதமான எழுத்தாளர். அவர் ஒன்றும் இஸ்ரேல் நாட்டு அரசியலோடு ஒத்துப் போகிறவர் கிடையாது. எதிர்த்து எழுதுபவர்தான். எடித் கிராஸ்மன்னின் இரண்டு நாவல்கள் இப்போது வந்துள்ளன. எட்கர் கெரட்டும் அறிமுகமாகியுள்ளார். வியட் தான் எங்கூவென் தவிர வேறு நல்ல எழுத்தாளர்கள் வியட்நாமிலும் கம்போடியாவிலும் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் நிச்சயமாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இந்நாடுகளின் நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வாயிலாக வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதே இதற்குக் காரணம். தென் கிழக்காசிய நாடுகள் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை இருண்ட பிரதேசங்களாகவே இருந்து வருகின்றன. இதில் இஸ்ரேலையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தந்த நாடுகளின் நிலவும் அரசியல் இதற்கு ஒரு தடையாக இருக்கிறதோ என்று நான் நினைக்கிறேன். இன்னும் பல நாடுகளிலிருந்து படைப்புகள் வராமல் இருக்கிறது. ஓர் இலக்கிய ரசிகனாக ஆர்வலனாக என்னுடைய ஆதங்கம் எல்லா வாசல்களும் திறந்து விடப்பட வேண்டும் என்பதுதான்.
மொழிபெயர்ப்பாளருக்கு நேரடியான எதிர்வினைகள் வருவதில்லை. அந்த சூழலில் உங்களது 'கடல்' நாவல் மொழிபெயர்ப்பு, தேவிபாரதிக்கு 'நிழலின் தனிமை' நாவலுக்கான மொழிநடையைத் தீர்மானித்துக்கொள்ள உதவியதாகவும் 'உடைந்த குடை' , பா. வெங்கடேசனுக்குப் பெரும் ஊக்கம் அளித்ததாகவும் கூறியபோது என்ன நினைத்தீர்கள்?
மொழி பெயர்ப்பாளர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை, ஆனால் எனக்கு நோபல் பரிசு கிடைத்தது போல் மகிழ்ச்சியாக இருந்தது. தேவி பாரதியின் மனதில் இருந்த கதையைப் பல வருடங்களாக எழுதிப் பார்த்து அதற்கான நடையும் அதற்கான உருவமும் அவருக்கு வராமலேயே இருந்தது. நான் மொழி பெயர்த்த ஜான் பான் வில்லின் ’கடல்’ நாவலைப் படித்த பிறகு அந்த மொழி அவருக்குத் துலக்கமாகப் பிடிபட்டதாகவும் அதற்குப் பிறகு அந்தக் கதவு திறந்து ’நிழலின் தனிமை’ எழுதியதாகவும் கூறினார்.
அமெரிக்காவில் ஒவ்வோராண்டும் சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் தொகுப்பு வரும். அதேபோல் ஓ ஹென்றி பரிசு பெற்ற சிறுகதைகள் தொகுப்பு வரும். அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவந்த மிகச்சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அந்த ஆண்டின் இறுதியிலோ அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலோ இது வெளியாகும். இத்தொகுப்புகளின் பின்னிணைப்பாகச் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அந்தக் கதை எழுத எது தூண்டுதலாக இருந்தது என்று கேட்பார்கள். அந்த எழுத்தாளர்கள் கூறும் பதில்கள் பெரும்பாலும் ஐந்தாறு வகைமைகளுக்குள்ளேயே இருக்கும். ஒருவர் அந்தக் கதை அவருக்குள்ளே இருந்ததை அவரே அறிந்திருக்கவில்லையென்றும், ஒரு குறிப்பிட்ட பாடலைக் கேட்டபோது ஒரு திறப்பு கிடைத்ததாகக் கூறியிருந்தார். இன்னொருவர் வேறு ஒருவரின் கதையைப் படித்த போது அதில் இருந்த ஒரு வரி அந்தக் கதையை எழுதத் தூண்டியது என்றார். வானொலியில் கேட்ட ஒரு பழைய விளம்பரப் பாடல் தனக்கு அந்தக் கதையை எழுத வைத்தது என்றார் இன்னொருவர். உண்மையில் அந்த்த் தூண்டுதல்களுக்கும் அவர்களின் கதைக்கும் சம்பந்தமே இருக்காது.
ரேமண்ட் கார்வர் கலந்துகொண்ட விருந்து ஒன்றில் யாரோ ஒருவர் சொன்ன ஒரு வாக்கியம் – “This is the last Christmas you’ll ever ruin for us!” போகிறபோக்கில் காதில் விழுந்தது அவருடைய ’A Serious Talk ’கதையை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். என் மொழி பெயர்ப்பில் வந்த தாக் ஸூல்தாத்தின் ’உடைந்த குடை’ படித்து விட்டு அந்தக் கதையும் அந்தக் கதை சொல்லும் விஷயமும் தனக்கு ஒரு பெரிய மனத்திறப்பைக் கொடுத்தது என்று பா. வெங்கடேசன் கூறினார். எனக்கு அதுவே பெரிய ஊக்கமாக இருந்தது. அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளன் எப்போதுமே இலக்கிய உலகத்தில் புதிய திறப்புகளை உண்டாக்கிக் கொண்டே இருப்பான். அதற்குக் காரணம் நான் அல்ல சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் தான்.
ஒரு மொழிபெயர்ப்பு ஆற்றக்கூடிய மிகப் பெரிய பங்களிப்பு, இன்னொரு மொழியைச் சேர்ந்த வாசகர்களுக்கு ஒரு சிறந்த படைப்பை அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை; அவர்களே தங்களுக்கான கதைகளை எழுதுவதற்கான உத்வேகத்தையும் அளிப்பதுதான். ஒரு மொழிபெயர்ப்பு இன்னொரு எழுத்தாளரை எழுதத் தூண்டும்போது, இலக்கியம் மொழிகளுக்கு இடையே வெறுமனே பயணித்துக்கொண்டிருப்பதில்லை; அது புதிய உயிரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய மொழிபெயர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு தொலைவுக்குச் செல்லும் என்பதை ஒரு மொழிபெயர்ப்பாளரால் ஒருபோதும் அறிய முடியாது. இன்று மொழிபெயர்க்கப்படும் ஒரு வாக்கியம், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாவல் எழுதுவதற்கான தூண்டுதலாக அமையலாம்; அந்த நாவல், வேறொரு மொழியில் எழுதும் இன்னொரு எழுத்தாளருக்குத் தூண்டுதலாக அமையலாம்.
ஒரு மொழிபெயர்ப்பின் உச்சபட்சச் சாதனை, அது இன்னொரு மொழிக்குக் கொண்டுசேர்க்கும் நூலில் மட்டுமல்ல; அந்த மொழிபெயர்ப்பின் தூண்டுதலால் உருவாகும் புதிய நூல்களிலும் இருக்கிறது.
ரேமண்ட் கார்வர் ஒரு சிறுகதையை 11 முறை திருத்தி இருக்கிறார் என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் மொழி பெயர்ப்பு எத்தனையாவது திருத்தங்களுக்குப் பிறகு முழுமையடையும் ?
நான் அதிக முறை திருத்தம் செய்தது ’பெருமகிழ்வின் பேரவை’ நாவலைத்தான். அதைப் பத்து முறைக்கு மேல் நான் திருத்தம் செய்திருக்கிறேன். அதற்கு ஆறு மாத காலமானது. இப்படித் திரும்பத் திரும்ப திருத்தம் செய்துகொண்டிருந்தபோது அந்தத் தாமதத்தைப் பொறுத்துக் கொண்ட காலச்சுவடு பதிப்பாளருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இப்போது ’அன்னை மேரி என்னிடம் வருகிறார்’ நூலைக்கூட இதுவரை ஆறு முறை திருத்தி இருக்கிறேன்.
’உடைந்த குடை’ மிகவும் சிறிய நாவல் 160 பக்கம் தான் இருக்கும். அது கையால் எழுதிய காலம். எழுதி முடித்ததை விட எழுதி எழுதி அடித்துத் தள்ளியதுதான் அதிகமாக இருக்கும். ஆனால் அதை முடிப்பதற்கு 660 நாளுக்கு மேலானது. இதெல்லாம் ஒரு சாதனை கணக்கில் சேர்க்க முடியாது. மொழிபெயர்ப்பு என்றால் அப்படித்தான் இருக்கும். தமிழ் அந்த அளவிற்குச் சொற்கிடங்கை வைத்திருக்கிறது. முதலில் ஒரு சொல்லைப் பயன்படுத்துவோம், பிறகு அதை விடச் சரியாக இருக்கும் என்று வேறொன்றை மாற்றுவோம். அது வேறொரு சந்தர்ப்பத்தில் தோன்றும் உடனே அந்த வார்த்தையை மாற்றுவோம். தமிழ் உங்களை அமைதியாக இருக்கவிடாது .அப்படி ஒரு மகத்தான மாபெரும் சொற்கிடங்கை வைத்திருக்கும் மொழி. எந்த ஒரு மொழிபெயர்ப்பிலாவது மூலத்திற்கு நெருக்கமாக தமிழில் அமையவில்லையென்றால் அதற்குக் காரணம் தமிழ் மொழியாக இருக்காது, மொழிபெயர்ப்பாளர்தான் காரணமாக இருப்பார் என்று என்னிடம் ஒரு தீர்மானமான நம்பிக்கை உண்டு. என்னுடைய தமிழில் நிறைய போதாமைகள் இருக்கின்றன. தமிழின் பிரம்மாண்டத்திற்கு முன்பு அதைப் பயன்படுத்தும் நாம் எல்லோருமே சிற்றெறும்புகள் தான்.
ஒவ்வொரு மொழி பெயர்ப்பும் ஒவ்வொரு பிரசவம் என்ற வகையில் 25 வது பிரசவ அனுபவம் கூட உங்களுக்குண்டு. எதுவெல்லாம் சுகப்பிரசவம் ? எது தாங்க முடியாத துயரம் கொண்ட சிக்கலான-சிசேரியன் பிரசவம் என்று கூற முடியுமா?
ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட நூல் என்று கூற முடியாது. நான் முன்பு சொன்னது போல பத்து முறை திருத்தி எழுதுவது, 660 நாள் வேலை பார்ப்பது இதெல்லாம் ஒரு சிரமமோ சித்திரவதையோ கிடையாது. விரும்பித்தான் செய்கிறோம். ஒரு படைப்பை மொழி பெயர்க்கும் போது கண்ணுக்குத் தெரியாத மூலப் படைப்பாளி நம்மிடம் ஒரு சவால் வைக்கிறான். ’நான் இதைத்தான் எழுதி இருக்கிறேன், இதை உன் மொழியில் கொண்டு வா பார்க்கலாம் ’ என்கிற சவால் அது. எனவே மொழிபெயர்ப்பாளர் அந்த படைப்புகளின் ஒவ்வொரு வரியிலும் ஏன் ஒவ்வொரு சொல்லிலும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்.அவன் சொன்னதை அப்படியே என் மொழியில் சொல்ல முடியும் என்கிற ஒரு சவால். விம்பிள்டனில் நாலரை மணி நேரம் ஒரு போட்டி நடக்கிறது என்றால் பெடரரோ, நடாலோ, ஜோகோவிச்சோ மூக்கால் அழுது கொண்டா ஆடுகிறார்கள்? ஒவ்வொரு புள்ளியிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறியோடுதானே ஆடுகிறார்கள்? ஒவ்வொரு சொல்லை மொழிபெயர்ப்பதற்கு ரோஜர் பெடரர் எவ்வளவு முனைப்பாக ஆடுகிறாரோ அப்படித்தான் நானும் ஆடுவேன். அது ஓர் அனுபவம். அது ஒரு சவால். சில நேரம் மூலப் படைப்பாளியின் அந்த ஒரு சொல்லை, வாக்கிய அமைப்பைத் தமிழில் கொண்டுவர முடியாமல் போகலாம், அது தமிழின் தோல்வியல்ல, என்னுடைய போதாமை.
உங்கள் குருவாக சிவகுமார் அவர்களைக் கூறுகிறீர்கள் அவரிடம் எப்படிப்பட்ட யோசனைகளை வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?
ஆர்.சிவக்குமாரும் வெ.ஸ்ரீராமும் என் ஆதர்சங்கள். கோவையில் நடந்த பாராட்டு விழாவில் சிவகுமார் அவர்களைப் பற்றி நான் ஒரு விரிவான கட்டுரையை வாசித்தேன். அதில் எனக்கு அவர் என்ன என்பதைத் தெளிவாகக் விரிவாகக் கூறியிருந்தேன். எனது கல்லூரிக் காலத்தில் படித்த அவரது மொழிபெயர்ப்புகளை என்னால் மறக்க முடியாது. 'மீட்சி' இதழில் வந்த படைப்புகள், தென் அமெரிக்கச் சிறுகதைகள் தொகுப்பு, 'உரு மாற்றம்' போன்றவை மறக்க முடியாதவை.உருமாற்றத்தில் காஃப்காவுக்கு இணையாகச் சிவக்குமார் சாருக்காகவும் தான் அந்தக் கதையை நான் திரும்பத் திரும்ப படித்தேன்.அந்த வயதில் மொழிபெயர்ப்பாளர் மீது எனக்கு ஈர்ப்பையும் கிளர்ச்சியையும் உண்டாக்கியது அவரும் வெ.ஸ்ரீராமும். அந்நியனும் குட்டி இளவரசனும் என்னிடம் உண்டாக்கிய தாக்கம் ஆழமானது. அப்போதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களை யாரும் மதிக்கவே மாட்டார்கள். பேசும்போது மூல ஆசிரியர்களை மட்டும் தான் கூறுவார்கள். ஆனால் எனக்கு அவர்களுடைய மொழிபெயர்ப்புகளையெல்லாம் படித்த பிறகு அவர்கள் இருவரும்தான் என்னுடைய வழிகாட்டிகள் என்றானார்கள்.என்னுடைய மொழிபெயர்ப்புப் படைப்புகள் எல்லாம் காலச்சுவடு அலுவலகத்தில் மெய்ப்பு பார்த்துவிட்டு சிவக்குமார் சாரிடம் ஒரு முறை கொடுங்கள் என்று நான் சொல்வேன். சிவகுமார் சார் பார்த்துவிட்டு சுகுமாரன் சாரிடம் வரும். இந்த இரண்டு பேரும் எனக்கு முக்கியமானவர்கள்.
எழுத்தாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மீதான இளக்காரப்பார்வை இன்று மாறி இருக்கிறதா ?
எழுத்தாளர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களிடம் இளக்காரம் மட்டுமல்ல கூடுதலாக இப்போது பொறாமையும் சேர்ந்திருக்கிறது. எதற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருது தருகிறார்கள், எதற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு இவ்வளவு நிதி உதவி எல்லாம் கொடுக்கிறார்கள், எதற்கு வெளிநாடுகளுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள், அந்த நாடுகளில் மொழிபெயர்ப்பாளர்களை ஏன் கூப்பிடுகிறார்கள் என்றெல்லாம் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பொறாமைப் படுகிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் மீது அவர்களுக்கு உண்டாகியிருக்கும் எரிச்சல் நேர்ப்பேச்சுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த எரிச்சல்களைப் பார்த்து நான் கோபப்படவில்லை, மனதுக்குள் ரசித்து சிரித்துக்கொள்கிறேன். நான் இதை எப்படிப் பார்க்கிறேன் என்றால் ஆதிக்க சாதியினர் தலித்துகளை பார்க்கும்போது ஏற்படும் பார்வைதான் எழுத்தாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களைப் பார்க்கும்போது ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். அந்த இளக்காரம் எவ்வளவு தவறோ, அதேபோல இந்த இளக்காரமும் தவறுதான்.
எழுதுகிறவன் எழுத்தாளன். அவ்வளவுதான். எனக்கு ஒரு மனச்சித்திரம் தோன்றும். எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒரு குழுப் புகைப்படம் எடுக்க நேர்ந்தால், கவிஞர்கள் எல்லாம் நாற்காலிகளில் உட்கார்ந்து இருப்பார்கள்; அதற்குப் பின் வரிசையில் உயரமான நாற்காலி போட்டு நாவலாசிரியர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதற்குப் பின்னால் மேல் வரிசையில் சிறுகதை ஆசிரியர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். மொழிபெயர்ப்பாளர்களைத் தரையில் உட்கார வைத்திருப்பார்கள் என்று தோன்றும். அப்படி ஒரு தோற்றம்தான் என் மனதில் தெரியும் .
நான் மொழிபெயர்ப்பாளன் படைப்பாளிக்குச் சமமானவன் என்று பிரகடனமெல்லாம் செய்யவில்லை.அந்த மாதிரியான ஒப்பீடுகளுக்கும் வரவில்லை.யாருக்கு யார் சமம் ? யாருக்கு யார் நிகரானவன்? யாரை விட யார் உயர்ந்தவன்? எழுத்தாளன் என்பவன் அதிமனிதன்; சமூகத்தில் உள்ள எவரையும்விட கூடுதல் தகுதியும், உரிமைகளும் கொண்டவன் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. புத்தகங்களைப் படிக்காதவர்கள் நடுவில் நிற்பதற்கே எனக்கு அருவருப்பாக இருக்கிறது என்று ஒரு எழுத்தாளர் நினைத்தால், அவர் என்ன மனிதர்? நில உடைமைச் சமுதாயத்தின் பண்ணையார்த்தனமான பார்வையைவிட இது மோசமானது. எழுத்தாளன் எந்த விதத்தில் மற்ற துறைகளில் இருப்பவனை விட உயர்ந்தவன்? இப்படிச் சொல்லி தனக்குத்தானே கிரீடம் வைத்துக் கொள்வது என்பது என்பதை யார் செய்தாலும் தவறுதான்.
நான் தான் உயிரைக் காப்பாற்றுகிறேன் நான்தான் மனித இனத்திலேயே உயர்ந்தவன் என்று டாக்டர் சொல்வதோ, நான்தான் கற்றுக் கொடுக்கிறேன் நான்தான் உங்களை எல்லாம் உருவாக்குகிறேன் நான்தான் உயர்ந்தவன் என்று ஆசிரியர் சொல்வதோ, நான் தான் இதையெல்லாம் கட்டினேன் நான் தான் உயர்ந்தவன் என்று பொறியாளர் சொல்வதோ,நான்தான் அதிகாரம் செய்து நாட்டை ஆள்கிறேன் நான் தான் உயர்ந்தவன் என்று அரசியல்வாதிகள் சொல்வதோ தவறானது.எல்லாரும் அவரவர்களின் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் ஒன்றுமே கிடையாது.
மொழிபெயர்ப்பாளன் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டியதுதானே என்றொரு நினைப்பு இருக்கிறது. படைப்பாளிகளைப் போல இவனும் ஏன் எல்லாவற்றிலும் கருத்து சொல்கிறான், விமர்சனம் செய்கிறான், குரல் உயர்த்திப் பேசுகிறான் என்று நினைக்கிற ஒரு திமிர்த்தனம் சிலரிடம் இருக்கிறது.அப்படி இருக்கும் போது தான் அவர்களைச் சீண்ட வேண்டும் என்று நினைத்து நானும் கொஞ்சம் முறுக்காக இருக்க வேண்டி இருக்கிறது.நான் யாரையும் மேல் கீழ் என்று பார்ப்பது கிடையாது. யாரும் யாரை விட உயர்ந்தவனும் கிடையாது தாழ்ந்தவனும் கிடையாது .
நேர்த்திக்காகச் சமரசம் செய்துகொள்ளாத உங்கள் மொழிபெயர்ப்புப் பணிகள் மூலம் ஏற்படும் தாமதங்கள் யாரையாவது எரிச்சல் மூட்டி உள்ளதா?
நிச்சயமாக ஒருவரை எரிச்சல் மூட்டி இருக்கும். அவர் பெயர் கண்ணன். அவர் காலச்சுவடு என்கிற பதிப்பகத்தை நடத்துகிறார்.
ஒரு சமயம் நினைக்கும் போது என்னிடம் அவர் சிக்கிக் கொண்டதாகவும் மற்றொரு சமயம் அவரிடம் நான் சிக்கிக் கொண்டதாக தோன்றும் .அவ்வளவு தாமதப்படுத்துவேன். இருந்தாலும் அவர் ஒன்றும் சொல்லாமல் இருப்பார். ஒரு நாளும் என்னை அவசரப்படுத்தியதில்லை.
வேறு பதிப்பாளர்கள் போல அவர் அவகாச எல்லை கொடுக்காதவர்; எனக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர். செய்தது போதும் அனுப்பி வையுங்கள் என்று ஒரு நாளும் சொன்னதில்லை. காலச்சுவடைப் பொறுத்தவரை குப்புசாமி மட்டும்தான் மொழிபெயர்ப்பாளராக இருக்கிறாரா என்ன ? அவர்களுக்கு எவ்வளவோ ஒப்பந்தங்கள் உள்ளன. ஆட்கள் இருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் கொண்டு வருவார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாம் செய்யும் தாமதத்திற்கு அவர்கள் எரிச்சல்தான் பட வேண்டும். ஆனால் ஒருபோதும் அவர் எரிச்சல் பட்டதில்லை.
இது எல்லாம் போதும் இருந்தவரை முடித்துக் கொடுக்கலாம் என்று ஒரு முறையும் சொன்னதில்லை; யாருக்கும் சொன்னதில்லை. சுந்தர ராமசாமியின் ’லெகசி’ அது. அவர் ஓர் உதாரண பதிப்பாளர்.
சர்வதேச எழுத்தாளர்களுக்கான உறைவிட முகாம்களில் அயர்லாந்து , ஸ்காட்லாந்து நாடுகளில் கலந்து கொண்டது உங்களுக்குள் ஏற்படுத்திய பார்வை மாற்றம் என்ன?
நான் ஸ்காட்லாந்துத சர்வதேச எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு அழைக்கப்பட்டது அந்த நாட்டு எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் 'ஷகி பெய்ன்' நாவலை மொழிபெயர்ப்பு செய்வதற்காக. அந்த நாவல் நடக்கும் இடங்களை எல்லாம் போய்ப் பார்த்தேன். பிறகு ஒரு வாரம் லண்டன் சென்று வந்தேன். இரண்டு மாதம் காடுகள் சூழ்ந்த பகுதியின் நடுப்பகுதியில் தங்கி இருந்து அந்த நாவலை மொழிபெயர்த்து வந்தேன்.
2009 இல் அயர்லாந்து டப்ளின் சென்ற போது நன்றாக ஊர் சுற்றினேன். பல ஊர்களுக்கு சென்றேன் பல நூல் வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றேன். முக்கியமாக ஐரிஷ் எழுத்தாளர்கள் பால் மல்டூன் (Paul Maldoon)என்கிற கவிஞர், ஸ்டார் ’Star of the Sea ’ எழுதிய நாவல் ஆசிரியர் ஜோசப் ஓ கானர்(Joseph O'Connor), இன்னொரு எழுத்தாளர் கோலம் டொய்பின் (Colm Tóibín) ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவங்கள்.இந்த மூன்று எழுத்தாளர்களுடன் நான் கழித்த பொழுதுகளை அனுபவங்களை எழுதாமல் விட்டதுதான் என் சோம்பேறித்தனம்.
இம்மாதிரியான முயற்சிகள் நம் நாட்டில் ஏன் நிகழ்வதில்லை?
கடந்த திமுக அரசு அந்த திசையில் முன்னெடுத்துச் சென்றது. நிறைய எழுத்தாளர்களுக்கு நல்கைகள் எல்லாம் கொடுத்தார்கள். பன்னாட்டு புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு மானியம் வழங்கினார்கள். அயல்நாட்டு மொழிபெயர்ப்பாளர்களை வரவழைத்து இங்கே முகாமில் தங்க வைத்து மொழிபெயர்க்கும் திட்டமெல்லாம் இருந்தது. அதேபோல் ’ரைட்டர்ஸ் ரெசிடென்சி’ என்று எழுத்தாளர்களுக்கான குடியிருப்பு தமிழக அரசின் சார்பில் அமைப்பதாக எல்லாம் திட்டமிருந்தது. அதை எல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும் . இப்போதுள்ள அரசு செய்வார்களா என்று தெரியவில்லை. செய்ய வேண்டும்.
மொழிபெயர்க்க விரும்பும் நாவல்களின் பட்டியல் என்று?
Gabriel Vasquez இன் 'The Sound of Things Falling,’ Yuri Herrera வின் ‘Signs Preceding The End of the World’ ,Javier Marias ஸின் ‘A Heart So White’ ,Chigozie Obioma வின் ‘The Fishermen’ ,NoViolet Bulawayo வின் ‘We Need New Names’ ,Ben -ன் ‘The Famished Road’ ,Mieko Kawakami யின் ‘Breasts and Eggs...என்ற பட்டியல் கூட பழையதுதான். இப்போது நீண்டுவிட்டது. அதற்குப் பிறகு நிறைய சேர்ந்திருக்கிறது.
அருந்ததிராயின் 'அன்னை மேரி என்னிடம் வருகிறார்' உங்கள் மொழி பெயர்ப்பு அனுபவத்தைப் பற்றி உங்கள் மனைவி கூறியுள்ளது பிரமிக்க வைக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் கனவில் இருந்து கூட இந்த வார்த்தைகளுக்குப் பொருள் தட்டச்சு செய்தீர்கள் என்று கூறியிருக்கிறாரே?
நாம் மொழிபெயர்க்கும் போது சில வரிகள் நம் மனதில் உருவாகாது, கொஞ்ச நேரம் போராடிப் பார்ப்பேன். அதற்குப் பிறகு அதை விட்டுவிட்டு அடுத்த வரிக்குச் சென்று விடுவேன் .ஆனால் அந்த முதல்வரி என் மனதிற்குள் குடைந்து கொண்டே வேலை செய்து கொண்டிருக்கும். பல நேரம் சாப்பிடும் போது தலை நீட்டும். எனது பணிக்காலத்தில் திருவண்ணாமலைக்குப் பேருந்தில் செல்லும் போது கலசப்பாக்கம் தாண்டியவுடன் எனக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த சொல்லோ, வாக்கியமோ எனக்குத் தோன்றும். பல முறை அப்படி வந்திருக்கிறது. அந்த கலசப்பாக்கம் என்கிற மண்ணுக்கு ஒரு மாய சக்தி இருப்பதாக நான் நினைப்பேன். ஆரணியில் இருந்து களம்பூர் ,போளூர் என அந்த ஊர்கள் எல்லாம் தாண்டி கலசப்பாக்கத்தில் பஸ் நுழைந்த உடனே ஒரு மாயம் போல என் மனதில் விளக்கெரியும். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கும்.அப்போது நான் நினைப்பேன் இந்த கிராமத்தில் ரூம் போட்டு எழுதினால் நன்றாக எழுத வருமோ என்று. சில நேரம் தூக்கத்தில் வரும்; சில நேரம் பாதி கனவில் வந்து எழுப்பும். இரவு இரண்டு மணிக்குக் கூட அந்த வாக்கியம் வரும். அருந்ததி ராய்க்கு மட்டுமல்ல எல்லா மொழிபெயர்ப்புகளின்போதும் அது நடக்கும்.
உங்கள் இணையர் நர்மதா குப்புசாமி மொழி பெயர்த்த டோனி மாரிசனின் 'Beloved' நீங்கள் மொழிபெயர்க்க விரும்பிய படைப்பு. அவர் செய்துள்ள 'செல்லமே' மொழிபெயர்ப்பு பற்றி உங்களது மதிப்பீடு என்ன?
’பிலவ்டு ’எனக்கு மிகவும் பிடித்த நாவல். நான் மொழி பெயர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காத்திருந்த நாவல் அது. மொழிபெயர்ப்பதற்கு எந்த நூல் என்று நர்மதா கேட்டபோது ’பிலவ்டு’ செய்கிறாயா என்றேன். உடனே உரிமை வாங்கி கொடுத்து விட்டார்கள் அப்படிச் செய்ததுதான் அது. திருமணமான புதிதிலேயே ’பிலவ்டு’ நாவலை நான் படிக்கச் சொன்னேன். அப்போது அதை ஆழமாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை.பிறகு ஒரு மொழிபெயர்ப்பாளராக தஸ்தயெவ்ஸ்கி எல்லாம் மொழிபெயர்க்கும் அளவுக்கு வந்த பிறகு இந்த நாவலை எடுத்தபோது அந்த நாவல் பற்றி நான் சேகரித்து வைத்திருந்த கட்டுரைகள், பல்வேறு குறிப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தேன். அந்த நாவலின் சிறப்பை உணர்ந்து மிகக் கடினமாக உழைத்தார். அந்த நாவலை மூன்று முறை திருத்தம் செய்து விட்டுக் கடைசி வடிவத்தைத்தான் என்னிடம் கொடுத்தார். அந்த வேலை முடிவதற்கு மூன்றரை ஆண்டுகள் பிடித்தன.
எங்கள் வீட்டில் இருந்து அந்த நாவல் மொழிபெயர்த்து வந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். கடுமையான உழைப்புக்குப் பிறகு வந்த மொழிபெயர்ப்பு அது. ஆனால் அப்படிப்பட்ட நூலுக்கு தமிழில் முழுமையான வெளிச்சம் கிடைக்காமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்படி என்றால் தமிழில் நல்ல வாசகர்கள் இல்லையென்று அர்த்தமில்லை. நமது தமிழ் இலக்கிய உலகில் நல்ல படைப்புகளைப் படித்து விட்டுக் கமுக்கமாக அமைதியாக இருப்பது வழக்கம்தான்.
ஒரே உறையில் இரண்டு கத்திகள் எப்படி இருக்க முடிகிறது? ஜி. குப்புசாமி- நர்மதா என்று ஒரே கூரையின் கீழ் இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் எப்படி இயங்க முடிகிறது ? அவர் கவிஞரும் கூட, அவரை எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள்? ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆதரவாக, தொந்தரவாக இருக்கிறீர்கள்?
நர்மதா திருமணத்திற்கு முன்பு கவிதைகள் எல்லாம் எழுதுவார். அவர் கவிஞர். பிறகு தீவிர இலக்கியத்தின் பக்கம் வந்தார் .நான் மொழிபெயர்ப்பதைப் பார்த்துவிட்டு அவரும் மொழி பெயர்க்க ஆரம்பித்தார். இயல்பிலேயே அவருக்கு எழுத்தார்வம் உண்டு .
இலக்கியத்தில் ஆர்வமே இல்லாத ஒருவரை இலக்கியத்திற்குள் கொண்டு வர முடியாது. அடிப்படையில் அவர் எழுதுபவர் என்பதால் இதுவொன்றும் பெரிய விஷயம் இல்லை.
ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் வேறு வேறான மொழி பெயர்ப்பாளர்கள்தான். அவர் ஆசிரியர். வீட்டு வேலை, கற்பித்தல் பணி இவற்றோடு இலக்கியப் பணியையும் பார்க்க வேண்டும். நான் பணிநிறைவு பெற்று ஓய்வில் இருக்கிறேன். அவர் எப்போதும் பரபரப்பாக இருப்பவர். .அவரால் எனக்குத் தொந்தரவு இல்லை. நான்தான் அவரைத் தொந்தரவு செய்வேன், ”அந்தப் புத்தகத்தைப் படித்தாயா? இந்தக் கட்டுரையைப் படித்தாயா?” என்று. ”நான் சமைக்கவா? படிக்கவா? எதைச் செய்ய வேண்டும்?” என்பார் .”இதை முதலில் படி. சாப்பாடு வேண்டுமானால் நான் ஆர்டர் செய்கிறேன்” என்பேன். இப்படி அவருக்கு என்னால் தான் தொந்தரவு உண்டு.
அவர் உங்களைப்போன்று அதே மனநிலையோடு மொழிபெயர்ப்பில் இயங்குகிறாரா? அவரது உலகம் வேறு மாதிரி உள்ளதா?
ஒரே வீட்டில் இருந்தாலும் இரண்டு பேரும் வேறு மன நிலையில் தான் இருப்போம். நானும் அவரும் வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள்தானே? மொழிபெயர்க்கும் விதத்தில் இருவருக்கும் இடையே வேறுபாடு இருக்கவே செய்யும். அவர் தனது வேலையில் உண்மையாக இருக்கும் மொழிபெயர்ப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. இருவருமே தனித்தனியானவர்கள் அல்லவா ? அவர் நூறு சதவீதம் ஜி.கே கிடையாது. அவரது உலகம் வேறு என்னுடைய உலகம் வேறு.
நீங்கள் அருந்ததிராயை மொழிபெயர்க்கும் போது அவருக்கும் உங்களுக்குமான ஓர் அரூபஇணைவு இருந்ததாகவும் கூறியிருக்கிறாரே? அருந்ததியின் எழுத்து உங்களை ஆட்டிப்படைத்த பூதம் என்றே கூறுகிறார் அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? படைப்பாளி போல மொழிபெயர்ப்பாளருக்கும் பித்து மனநிலை வந்துவிடுமா?
என்னைப் பொறுத்தவரை நான் மொழிபெயர்க்கும் போது மூல ஆசிரியருடன் ஆத்மார்த்தமான பிணைப்பு இல்லாமல் நான் எழுதுவதே கிடையாது. அருந்ததி ராயைப் பொறுத்தவரை அது கூடுதலாகவே இருக்கும். பித்து நிலை என்பதெல்லாம் அதிகமான வார்த்தை. ஆட்டிப்படைக்கும் பூதம் என்றெல்லாம் கவர்ச்சிகரமான வார்த்தை போட்டு அதை அதிமனித செயல்பாடாக ஆக்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்படிப்பட்ட படைப்புச் செயல்பாடும் அது ஒரு மனித செயல்பாடுதான். பித்து நிலை, ஆட்டிப் படைக்கும் பூதம் என்பதெல்லாம் ‘ரொமாண்டிசைஸ்’ செய்வது. அந்த படைப்புக்கு உண்மையாக இருக்கும் போது நம்மை ஒப்புக் கொடுத்து விடுவோம். அதுதான் அந்தப் படைப்புக்குச் செய்யும் நியாயம் என்று நான் நம்புகிறேன். அதுதான் மொழிபெயர்ப்பாளரின் தொழில் தர்மம்.
அருந்ததிராயின் மதர் மேரி கம்ஸ் டு மீ மொழிபெயர்ப்பு மலையாளத்திலும் ஹிந்திலும் வந்துவிட்டது. தமிழில் செய்யும் போது அதை ஒப்பீடு செய்ய நேர்ந்ததா? அது மாதிரி அமையக்கூடாது என்பதற்காக அதைப் பற்றி அறிய விரும்பினீர்களா?
நான் ஏன் அந்த மொழிபெயர்ப்புகள் எல்லாம் பார்க்க வேண்டும்? மலையாளம் இந்தி எனக்குத் தெரியாது என்பது வேறு விஷயம். என் சந்தேகங்களை கவிஞர் சுகுமாரன், சில நேரங்களில் அருந்ததி ராயிடமே கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறேன்.
அருந்ததி ராய்க்கும் உங்களுக்கும் நல்ல புரிந்துணர்வு வந்துள்ளது. அவரை நேரில் சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றிக் கூற முடியுமா? சந்தித்துப் பேசிய போது உங்கள் பேச்சு எதைப் பற்றி இருந்தது ?
அருந்ததிராய் அவர்களை நான் 2011 புத்தகக் கண்காட்சியில்தான் முதலில் சந்தித்தேன். அப்போது 'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவலை நான் மொழிபெயர்த்த அனுபவங்களை அவரிடம் சொன்னேன். குறிப்பாக மெட்ராஸ் மெயில் என்கிற ஒரு நான்கு பக்க அத்தியாயத்தை ஒரு வாரத்துக்கு அவஸ்தைப்பட்டு மொழிபெயர்த்த அனுபவத்தைச் சொன்னேன்.நான் வேகமாகப் பேச பேச அவர்கள் திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கி கொண்டிருந்தார்கள். பிறகுதான் I have touched a raw nerve என்றுணர்ந்து பேச்சை திசை மாற்றினேன்.அவர்களுக்கும் எனக்கும் இருக்கும் உறவு வெறும் ஒரு எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் என்கிற உறவல்ல. எஸ்தாவுக்கும் ராஹேலுக்கும் இருக்கிற இரட்டை சகோதர சகோதரி உறவு.அவர்கள் என்னை எஸ்தாசாமி என்று கூப்பிடுவார்கள்.நான் அவரை அருந்ததி ராஹேல் என்றுதான் கூப்பிடுவேன்.எங்களது மெயில் அப்படித்தான் ஆரம்பிக்கும்.நாங்கள் இருவரும் ஒரே கருவில் உருவான சகோதர சகோதரிகள் போல.
முகநூலில் ’மரோ சரித்ரா ’ படம் பார்த்த இருவர் (எஸ்., வி) பற்றியும், மிரட்டிய உங்கள் வகுப்பு மாணவன் பற்றியும், எஸ்பிபி யின் நினைவுகள் பற்றியும் விரிவாகவும் உணர்ச்சிகரமாகவும் எழுதுகிறீர்கள். நீங்கள் ஏன் உங்களிடம் உள்ள புனைவு எழுத்தாளரை ஊக்கப்படுத்தவில்லை? ஏன் சிறுகதைகள் எழுதுவதில்லை?
பல கதைகள் அப்படி என்னிடம் உள்ளன. உண்மையில் இரண்டு நாவல்கள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் கதை என்பதால் சொல்வதற்குப் பயமாக இருக்கிறது, கண்டுபிடித்து விடுவார்களோ என்று. அருந்ததிராயின் 'அன்னை மேரி என்னிடம் வருகிறார்' நூலை மொழிபெயர்த்து முடித்துவிட்டு ஆகஸ்ட் 16 முதல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஏதேதோ புதிது புதிதாக மனதில் கதைகள் தோன்றுகின்றன.மொழிபெயர்ப்பு வேலைகள் இல்லாததால் ஏதாவது எழுதும் துடிப்பிலேயே மனம் இருந்தது. அன்று நான் தூங்கி எழுந்து போது தலைவலியாக இருந்தது. சாய்வு நாற்காலியில் படுத்திருந்தேன் ஒரு காபிக்காக காத்திருந்தேன். காப்பி குடித்துவிட்டு ஏதாவது ஒரு பாடல் கேட்கலாம் என்று ரேண்டமாக ஒரு பாடலை வைத்தபோது ’மரோசரித்ரா’ வின் ’பதஹாரேல்லஹு’ பாடல் வந்தது. அந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குள் ஏதோ ஒரு கதவு திறந்து, பல நினைவுகள் வந்தன. எழுதுவதற்கு வந்து கொண்டே இருக்கின்றன. அதைத்தான் நான் முகநூலில் எழுதியிருந்தேன்.அடுத்த மொழி பெயர்ப்புக்கு காலச்சுவடு கண்ணன் ஒப்பந்தம் செய்து விட்டார். அது ஆரம்பித்தவுடன் ,கைகால்களை உதைத்துக் கொண்டு வரும் சொந்தக் கதைகளை எல்லாம் அடக்கி வைக்க வேண்டும்.
வண்ணதாசன் மட்டும்தான் நீண்ட நாட்களாக என்னை எழுதுங்கள் எழுதுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். என் முதல் சிறுகதைத் தொகுப்பு வந்தால் உங்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்வேன் என்று சொல்லி இருக்கிறேன். அவருக்காக மட்டுவாவது நான் எழுதுவேன்.
சோமு என்கிற உங்கள் நண்பரைப் பற்றி எழுதும்போது பள்ளிக்காலத்தில் நீங்கள் ஓவியம் வரைந்ததாகவும் கவிதைகள் எழுதியதாகவும் 'கனவுப்பாதைகள்' என்ற பெயரில் கெயெழுத்துப் பத்திரிகை நடத்தியதாகவும் கூறியிருக்கிறீர்கள். பிற்பாடு அந்த நுண்கலைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளவில்லையா ?அல்லது மொழி பெயர்ப்பு அதை விழுங்கி விட்டதா?
சோமு என்னுடன் ஏழாம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தவன். என்னைப் போலவே அவனும் கவிதை எழுதுவான். அதுவும் யாப்பிலக்கணத்தோடு எழுதுவான். கதை எழுதுவான், ஓவியம் வரைவான். எங்கள் பள்ளிக்காலங்களில் ஆரணிக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வேன் வரும்போது நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து புத்தகங்கள் வாங்குவோம். ஆரணிக்கு இலக்கியக் கூட்டத்திற்கு ஜெயகாந்தன் வந்தபோது நாங்கள் இருவரும் சென்று அவரைச் சந்தித்திருக்கிறோம். கல்லூரிக் காலங்களில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். இன்றுவரை நட்பு தொடர்கிறது. என்னைப் பொறுத்தவரை எனக்கு பலதரப்பட்ட ஆர்வங்கள் உண்டு. எதிலும் நான் தொடர்ந்து ஆழ்ந்து இறங்கிக் கவனம் செலுத்துவதில்லை. முன்பே சொன்னபடி படம் வரைவது என்றால் ஒன்றரை ஆண்டுகள் படம் வரைந்து தள்ளிக் கொண்டே இருப்பேன். பிறகு திடீரென்று செஸ் விளையாட ஆரம்பித்து விளையாடிக் கொண்டிருப்பேன். செஸ் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு செஸ் விளையாடிக் கொண்டிருப்பேன். ’மென்ஸா கிளப்’பில் சேர்ந்துவிடவேண்டுமென்று அவர்கள் புதிர் புத்தகங்களை வாங்கிப் பழகிக்கொண்டிருந்தேன். டென்னிஸ் பைத்தியம் சில வருடங்களுக்கு இருந்தது. அதன் பிறகு கிரிக்கெட். மைதானத்தில் போய் கிரிக்கெட் விளையாடுவோம். அதே நேரத்தில் இலக்கிய வாசிப்பும் எழுதுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. எதுவுமே நீண்ட காலமாக நீடிப்பதாக இருக்காது .மொழிபெயர்ப்பு என்பது பிறருடைய படைப்புகளைச் செய்வதால் அது மட்டும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் பழைய ஆர்வங்கள் எல்லாம் என்னை விட்டுச் சென்றுவிடவில்லை. இப்போதும் நல்ல இசையைக் கேட்பேன் .நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ரசிப்பேன்.
இன்றும் நல்ல செஸ் விளையாட்டைக் கவனிப்பேன். அண்மையில் கூட டென்னிஸ் ஆட முயற்சி செய்து பார்த்தேன். இப்போது கூட என்னால் சுமாராக சர்வீஸ் போட முடியும் என்று தெரிந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு கூட படம் வரைந்து பார்த்தேன்; நன்றாகத்தான் வந்தது. இப்படி நமக்கு ஆர்வமான கலைகள் எதுவும் மறந்து விடுவதில்லை. அதனால் படைப்பு ரீதியாகப் பயணம் செய்யாமல் போய் விட்டதே என்கிற வருத்தம் எல்லாம் என்னிடம் இல்லை.
அறிவியல் முன்னேற்றத்தில் தானியங்கி மொழிபெயர்ப்பான்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?சிலர் ஏ ஐ கருவிகள் மூலம் மொழியாக்கம் செய்து அதைத் திருத்துகிறார்கள். இது சரியா?இதனை எந்த அளவில் நாம் அனுமதிக்கலாம் ?
செயற்கை நுண்ணறிவு எல்லா தளங்களிலும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியைப் போலவும் செயற்கை நுண்ணறிவையும் தடுக்க முடியாது. ஆனால் எந்தெந்த இடங்களில் அதைப் பயன்படுத்த வேண்டும், எங்கெல்லாம் அதன் குறுக்கீடு இருக்கக் கூடாது என்று நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். கலைப் படைப்புகளின் உருவாக்கத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைச் சகித்துக்கொள்ள முடியாது. தில்லியில் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் அக்ஷர்தாம் ஆலயத்தில் மிக நுட்பமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன. எல்லாமே கணினி இயந்திரங்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை ரசித்துப் பார்ப்பதற்கு என்னால் ஆகாது. தாராசுரத்தையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் கிருஷ்ணாபுரத்தையும் கண்டு ரசிப்பவர்களால் அக்ஷர்தாமை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. சொந்தமாக மொழிபெயர்க்க வக்கற்றவர்களுக்கும், ஒரே வாரத்தில் நானூறு பக்க நாவலை மொழிபெயர்த்து வெளியிடத் துடிக்கும் பதிப்பாளர்களுக்கும் இவை வரப்பிரசாதம்.
என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்க்கும்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள முன்பு கூகுளையும் அகராதிகளையும் பயன்படுத்தியதைப் போல ‘சாட்ஜிபிடி’ யைப் பயன்படுத்திக்கொள்கிறேன். பாரம்பரிய கூகுள் தேடல்களில் கிடைக்காத கூடுதல் தகவல்களை இது தருகிறது. உதாரணத்துக்கு அருண் ஜோஷியின் ‘கடைசி புதிர்ப்பாதை’ மொழிபெயர்ப்பின்போது எனக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. நாவலின் நாயகன் அவன் அப்பாவிடம் டட்சு தத்துவவியலாளர் பரூக் ஸ்பினோஸா உருப்பெருக்கக் கண்ணாடிகளை இழைத்துப் பிழைத்ததாகச் சொல்கிறான். புகழ்பெற்ற தத்துவவியலாளர் உருப்பெருக்காடிகள் செய்தாரா என்று குழப்பமாக இருந்தது. சாட்ஜிபிடியிடம் கேட்டபோது ஸ்பினோஸா உருப்பெருக்காடிகள் இழைத்துத்தான் பொருளீட்டிக்கொண்டிருந்த விவரத்தை அளித்தது. அதே போல என் மனைவி ‘செல்லமே’ மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, டோனி மாரிஸன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளைப் பூடகமாகக் குறிப்பிட்டுச் செல்கையில், அவற்றுக்கான விளக்கத்தை செயற்கை நுண்ணறிவே அளித்தது.
இப்போதும் எனக்கு எழுகின்ற பல்வேறு அறிவியல், மருத்துவ, வரலாற்று விவரங்களைச் செயற்கை நுண்ணறிவில் கேட்டுத் தெளிவு பெறுகிறேன். முட்டி வலிக்கு குளூக்கோஸாமைன் உண்மையிலேயே நல்ல தீர்வா, என்பதுபோல!ஆனால் நான் மொழிபெயர்க்கவேண்டியதை, என்னால் மொழிபெயர்க்க முடியாது என்பதை, மொழிபெயர்க்க நேரமில்லை என்பதை இந்தச் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களிடம் ஒருபோதும் ஒப்படைக்கமாட்டேன். அது என்னைப் பொறுத்தவரை கேவலம். என்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு.
ஒரு ஏ.ஐ மொழிநடை இன்னொரு மொழிக்கு ஏ.ஐயால் மிக எளிதாக மொழியாக்கம் செய்யப்படலாம். அதுதான் வருங்கால உலகுக்கு வசதி. உலகம் முழுக்க ஒரே மொழி, வேறுவேறு சொற்கள் – இதுதான் எதிர்காலம். ஆகவே நம் அன்றாட மொழி ஏ.ஐ மொழிக்கு மாறுவதை எவராலும் தடைசெய்ய முடியாது என்று ஜெயமோகன் கூறி இருக்கிறாரே?
மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட கூற்று. தனது வசதிக்கேற்றபடி இதுபோன்ற சமாதானக் கருத்துக்களை எல்லாத் தரப்புகளிலிருந்தும் முன்வைத்துவிடலாம். AI என்பது ஒரு மேம்படுத்தப்பட்ட humanised tool – மனிதத்தன்மையேற்றப்பட்ட கருவி. ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் எண்ணற்ற இணையத் தகவல் தொகுப்புகளிலிருந்து நாம் கேட்கும் விவரத்தை ‘மனித தர்க்கத் திறனோடு’ எடுத்துக் கொடுக்கிறது. வெற்றிடங்களை இதே தர்க்கத் திறனால் நிரப்பவும் அதனால் முடிகிறது. அதன் எல்லை வரையறுக்கப்பட்ட ஒன்றுதான்.
இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொற்களுக்குஇலக்கு மொழியில் சமமான சொற்களைப் போட்டு பதிலீடு செய்வது அல்ல. ஒரு மொழிபெயர்ப்பாளரின் இயங்குமுறை இயந்திரத்தனமானதல்ல. அவர் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் மூலப்படைப்பின் குரலை முதலில் உள்வாங்கிக்கொள்கிறார். ஒரு வாக்கியம் ஏன் அப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், படைப்பாளியின் பிரத்தியேக மொழிநடையையும் புரிந்துகொள்கிறார். ஆசிரியரின் தொனி, நகைச்சுவை, கலாச்சாரப் பின்னணி, சொல்லப்படாத இடைவெளிகள், பூடகமாக உணர்த்தவிரும்பும் செய்திகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். ஒரு சொல் அகராதியில் என்ன பொருள்கொண்டிருக்கிறது என்பதற்கும், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் எதைக் குறிக்கிறது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கிறார். மொழிபெயர்ப்பாளர் மிகக் கவனமாக இருக்கவேண்டிய இடம், ஏற்கெனவே சொல்லப்பட்ட, அல்லது கோடிகாட்டப்பட்ட விஷயத்தை பல அத்தியாயங்களுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரும்போது, அந்த உணர்விழையை அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்வது. இது மனித சாத்தியத்தால் மட்டுமே முடியக்கூடிய காரியம். இன்னொரு முக்கிய அம்சம், மொழிபெயர்ப்பு எங்கு இலக்கு மொழிக்கு இயைந்து இருக்கவேண்டும், எங்கு மூல மொழிக் கட்டமைப்புக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பது. கூட்டு வாக்கியங்களை உடைக்காமல் மொழிபெயர்ப்பது எந்த இடங்களில் அவசியம், எங்கு உடைக்கலாம் என்பதுபோன்ற தீர்மானங்கள். AI இவற்றில் சிலவற்றை மிகவும் திறமையாகச் செய்யமுடியும். ஆனால் ஒரு இலக்கியப் படைப்பை வாசித்து, அதன் பின்னால் இருக்கும் அழுத்தங்களையும், பொதிந்திருக்கும் உட்பிரதியையும் புரிந்துகொண்டு, ‘இங்கே நான் இப்படி எழுதினால் மூல ஆசிரியரின் குரல் மாறிவிடும்’ என்று அது முடிவு செய்யுமா? அடுத்த தலைமுறை AI மாடல்கள் அவற்றைச் செய்யும் என்று வாதிட்டாலும், சொற்களைத் தாண்டி உள்ளிருக்கும் தொனியை எந்த இயந்திரமும் தொடமுடியாது என்றே நம்புகிறேன். AI எட்டமுடியாத இடம் ‘மொழிபெயர்ப்பு’ அல்ல; ’இலக்கியத் தீர்ப்பு’ (literary judgment).
மனித மொழியின் தனித்துவமும் ஏஐயின் உலகளாவிய கட்டமைப்பும் இணைந்த ஒரு புதிய கலப்பு மொழி வடிவம் உருவாகும் சாத்தியம் இருக்கிறதா?
ஏற்கெனவே உருவாகத் தொடங்கிவிட்டதாகப் படித்தேன். அதனைப் புதிய மொழி என்பதை விடவும் புதிய கலப்பு மொழி (hybrid linguistic register) என்று வகைப்படுத்தலாம் என்று அந்தக் கட்டுரையில் வாதிட்டிருந்தார்கள். ஆனால் மனித மொழியின் தனித்துவம் அழியாது, அதன் வெளிப்பாட்டு முறை மாறும். மனித மொழி வெறும் தகவல் பரிமாற்றச் சாதனம் மட்டுமல்ல. அதில் அம்மொழியின் பிரதேசம், அரசியல், வரலாறு, கலாச்சாரம், வர்க்கம் எல்லாமே கலந்திருக்கின்றன. AI உலகின் ஆயிரக்கணக்கான மொழிகளிலிருந்து ஒரு patternஐக் கற்றுக்கொள்கிறது. அதில் உயிரியல்-வரலாற்று அடையாளங்கள் இருக்காது.
ஆனால் AI, மொழிகளுக்கிடையிலான எல்லைகளைத் தளர்த்தும். அதனால் நாம் பேசுகின்ற எழுதுகின்ற மொழிகளில் உலக மொழிகளின் மறைமுகச் சுவடுகள் அதிகரிக்கலாம்.இப்போது எல்லா முக்கியமான அயல்நாட்டு இதழ்களிலும் AI பற்றிய கவலைகள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. ’நியூயார்க்கர்’ , ‘ டைம்’ நமது நாட்டின் ‘ஃபிரன்ட்லைன்’ ஆகிய இதழ்களில் பல முக்கியமான கட்டுரைகள் நாம் விவாதிக்கும் இந்தப் பொருளைப் பற்றி ஆழமாக அலசியிருக்கின்றன. பெரும்பாலான மொழியியலாளர்கள் தெரிவிக்கும் ஆபத்து என்பது உலகளாவிய AI மொழி ஒரு ‘தட்டையான சராசரி மொழி’யை உருவாக்கிவிடும் என்பதாகத்தான் இருக்கிறது. AI எல்லா மொழிகளுக்கும் இடையே ஒரு global linguistic middle உருவாக்கத் தொடங்கினால் உலக மொழிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகிவிடும், ஆனால் அவற்றுக்கான தனித்துவ இயல்புகள் தேய்ந்து காணாமலாகிவிடும்.அதனால் எதிர்காலத்தில் முக்கியமான போராட்டம் ‘மனித மொழி vs AI மொழி’ என்று இருக்காது. அது ‘உலகளாவிய புரிதலுக்காக எவ்வளவு மொழிகளை ஒரே மாதிரியாக்கலாம், தனித்துவமான மனிதக் குரலை இழக்காமல் எவ்வளவு வேறுபாடுகளைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும்’ என்று Nature Human Behaviour’ இதழில் வெளிவந்த கட்டுரை அனுமானிக்கிறது.
ஓரான் பாமுக்கு நிழல் பங்காளியாக ஜி குப்புசாமி தன்னை நிறுவியுள்ளார் என்ற பாராட்டைப் பெற்ற நீங்கள் ஓவியனாக இருந்து எழுத்தாளனாக மாறிய பாமுக் கின் 'இஸ்தான் புல்'லில் எந்த இடத்திலாவது உங்களைக் காண்பதாகவோ பிரதிபலிப்பதாகவோ உணர்ந்தீர்களா?
'இஸ்தான்புல்' நூலில் ஓவியம் வரையும் அத்தியாயங்கள் எழுதி இருப்பார் . ‘என் பெயர் சிவப்’பிலும் குதிரை ஓவியம் வரையும் அத்தியாயங்கள் உண்டு. அவற்றை மொழிபெயர்க்கும்போது என்னுடைய ஓவிய நாட்களும் கூடவே நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. மிகவும் லயித்து, ரசித்து மொழிபெயர்த்த கணங்கள் அவை.
உங்கள் மனம்கவர்ந்த ஹாருகி முரகாமி, ஓரான் பாமுக் ஆகியோரை சந்தித்துப் பேசுவதாக இருந்தால் நீங்கள் கேட்கும் முதல் கேள்வி எதுவாக இருக்கும்?
ஏற்கெனவே இதே கேள்வியை அ.முத்துலிங்கம் 'என் பெயர் சிவப்பு' மொழிபெயர்ப்பு வந்திருந்த போது செய்த நேர்காணலில் கேட்டார். பாமுக்கை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டார்.அப்போது நான் அவருக்கு ஒரு பதில் சொன்னேன். 'அபா த மூவி' (Abba The Movie ) என்ற ஒரு படம் வந்தது. அபா இசைக் குழு ஆஸ்திரேலியாவில் இசை சுற்றுப் பயணம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பேட்டி காண்பதற்காக ஒரு ரேடியோ ரிப்போர்ட்டர் அவர்கள் பின்னால் அலைந்துகொண்டிருப்பான், நெருங்கவே முடியாது. கடைசியில் எதேச்சையாக ஒரு லிப்டுக்குள் சென்றால் அங்கே அந்த அபா குழுவினர் இருப்பார்கள். அவர்களிடம் எதுவும் கேட்பதற்கு இவனுக்கு வாயே வராது. இவன் திணறுவதைப் பார்த்து அவர்களே ஒரு பாடல் வாசித்துப் பாட ஆரம்பித்து விடுவார்கள். பாமுக்கை நேரில் பார்த்தால் கேட்பதற்கு என்னிடம் ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கும். ஆனால் முதலில் எதுவுமே கேட்கத் தோன்றாது. பிறகு எனது தயக்கத்தை உடைத்து நிறைய கேட்கலாம். முரகாமியிடமும் மறக்காமல் அப்படிக் கேட்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவர்களை மொழிபெயர்க்கும் போது நான் சந்தித்தவை என்னென்ன என்பது பற்றி எல்லாம் பேசுவதற்கு ஏராளம் உள்ளன.
உங்கள் உள்ளங்கவர் ஓரான் பாமுக் மற்றும் ஹாருகி முரகாமி இவர்களை எப்படி ஒப்பீடு செய்வீர்கள்?
இது மாதிரி ஒப்பீடுகள் எனக்குப் பிடிப்பதில்லை இருவரும் வேறு மாதிரியான படைப்புகள் எழுதும் வேறு மாதிரியான எழுத்தாளர்கள்.
இந்த ஒப்பீடுகள் எல்லாம் வெகுசனப் பத்திரிகைகளில் சுவாரசியத்திற்காகச் செய்பவை. தீவிர இலக்கியப்பரப்பில் இதற்கெல்லாம் இடமில்லை.
மொழிபெயர்ப்பு பயிற்சிகள் இப்போது நடத்துகிறீர்களா? இப்போது வந்திருக்கும் புதிய இளைய மொழிபெயர்ப்பாளர்களில் நம்பிக்கை தருபவர் யார் ?
கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஒரு மொழிபெயர்ப்பு பயிற்சிப் பட்டறையை நடத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அழைக்கப்பட்டேன். 20 இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தேன். நேரடியாகப் பயிற்சி அளித்தது இரண்டு நாள்கள் தான் என்றாலும் இணைய வழி சந்திப்பாகத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பென் ஓக்ரியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை இம்மாணவர்கள் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரும்.
இந்த இளைய மொழிபெயர்ப்பாளர்கள் நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள். ஷாலினி பிரியதர்ஷினி, அஜய் சுந்தர், ஜி.ஏ.கௌதம், ஸ்ரீவித்யா வெங்கடேசன், ரகுநாதன், அகிலா ஸ்ரீதர், ராம்பிரசாத், ஸ்ரீவித்யா, சாய் ஹரிதா இவர்கள் எல்லாருமே மிகச் சிறப்பாக மொழி பெயர்க்கக்கூடிய இளம் மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கிறார்கள்.இன்னும் ஐந்து ஆண்டுகளில் இப்போது தமிழில் அறியப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களாக இருக்கும் எங்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட போகிறவர்கள் இவர்கள்தான். அந்த அளவிற்கு நேர்த்தியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகம் கமல்ஹாசனுக்கும் ஜி.குப்புசாமிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
நிலையாமை பற்றி நம் நாட்டில் இலக்கியங்கள் அந்தக் காலத்தில் இருந்து பேசிக் கொண்டுள்ளன.ஓரான் பாமுக் கூட 'படைப்புகளின், படைப்பாளிகளின் சாஸ்வதத்தில் நம்பிக்கை தனக்கு குறைந்து கொண்டே வருகிறது' என்றார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
எல்லா கலைஞர்களுக்கும் தங்கள் காலத்திற்குப் பிறகும் காலகாலத்திற்கு தங்கள் படைப்பு நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இந்த ஆசையின் அபத்தத்தைப் பற்றி பாமுக் சொல்கிறார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒவ்வொரு பாடகருக்கும் தங்கள் காலம் முடிந்த பிறகு தங்களது எழுத்தும் பாடலும் ஓவியமும் நீடித்திருக்குமா என்று தெரியவா போகிறது? பல எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்பு அவர்கள் காலத்திலேயே இறந்து விடுகிறது. தஸ்தயெவ்ஸ்கிக்குத் தெரியுமா இன்றும் அவரது நாவல்கள் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன என்பது. ரேமண்ட் கார்வரின் உருவத்தை இன்னும் அமெரிக்காவில் டீ ஷர்ட்டில் போட்டுக் கொண்டு போகிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா?
படைப்பாளிக்கு அப்படி ஒரு ஆசை இருப்பது அபத்தம் என்பதைத்தான் அவர் சொல்கிறார். படைப்புக்கு வலிமை இருந்தால் காலத்தைக் கடந்து நிற்கும். ஷேக்ஸ்பியரை எடுத்துக் கொள்ளுங்கள்.அவருடைய காலம் என்ன? நம்முடைய காலம் என்ன? இன்றும் வாழ்கிறார் அல்லவா? திருவள்ளுவர் காலம் என்ன கம்பனின் காலம் என்ன? இன்னும் ஆயிரம் வருடத்திற்கும் பிறகும் கம்பராமாயணம் இருக்கும் அல்லவா? திருக்குறளும் இருக்கும் அல்லவா? படைப்புக்கு வலிமை இருந்தால் காலத்தைக் கடந்து நிற்கும். தனது படைப்பு எவ்வளவு காலத்திற்கு நிற்கும் என்று படைப்பாளி கவலைப்படுவது அபத்தம். அதை ஒரு படைப்பாளியாகவே பாமுக் சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இளையராஜா என்று வந்து விட்டால் மட்டும் உங்களது கால வயது , மனவயது முதிர்ச்சியைத் தாண்டி ரசிகமணியாக மாறிவிடுகிறீர்களே…எப்படி?
இளையராஜாவைப் பொறுத்தவரை என்னைப்போல் 1962 ல் பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்பேன். எனக்கு ரசனையுணர்வு முழுதாக மலர்ந்த வாலிபப் பருவத்தில் இளையராஜா என்ற அபூர்வக் கலைஞனின் படைப்பூக்கம் உச்சத்தில் இருந்தது. 1980-லிருந்து 85 வரைக்குமான காலகட்டம் அவரது உன்னதப் பருவம். அந்தக்காலகட்டமே என் வாழ்விலும் மிகவும் ரம்யமான பருவமாகவும் இருந்தது. அந்த வருடங்களில் ராஜாவிடமிருந்து உருவான இசை எனக்கே எனக்கென்று நான் ரகசியமாகச் சொந்தம் கொண்டாடக்கூடியதாகவும் இருந்தது. அப்படி என்றால் அதற்குப் பிறகு இசையமைத்ததெல்லாம் நன்றாக இல்லையா என்று கேட்கக் கூடாது. அது அவரது உச்ச காலம், அவ்வளவுதான். அவரது உச்சகாலத்தில் எனது இளமைக்காலம் இருந்ததால் அவரது இசைக்கும் எனக்கும் என இரண்டுக்கும் ஒரு பிணைப்பு உண்டாகிவிட்டது. இளையராஜா அன்று முதல் இன்று வரை என்ஆழ்மனதை ஆக்கிரமித்து நினைவில் இருந்து கொண்டே இருக்கிறார்.
'டோரதி' படத்தில் 'முத்து மணி' பாடலில் பவதாரணி இழப்பின் துயரம் இருப்பதாகக் கூறுகிறீர்கள்.இந்த அளவிற்கு எப்படி இளையராஜாவுடன் ஒன்றி நெருங்க முடிகிறது?
அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனாலும் அந்தப்பாடல் எந்தச் சூழலில் வருகிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் பாடலை முதலில் நான் கேட்டபோது அந்தக் குரலில் இருந்த ஏக்கமும் அந்த வரிகளும் அந்தக் குரலில் இருந்த துயரமும் மகளை இழந்த ஒரு தந்தையின் துயரமாகவே எனக்குத் தோன்றியது. பவதாரணி இறந்த போது அந்தத் துயரத்தை அவர் வெளிப்படையாகக் காட்டவில்லை. ஒரு தந்தையின் புத்திர சோகத்தை அந்தப் பாடலில் வெளிப்படுத்தி இருந்ததாகவே தோன்றியது. அந்த வகையில் முத்துமணி பாடலில் ஒலிப்பது கதாபாத்திரத்தின் குரலாகவோ கதைக்கு சம்பந்தப்பட்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை. அதில் இளையராஜாவின் வரிகளில் இருப்பதால் அது அவரது துயரத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது. அதனால் அந்த பாட்டைக் கேட்ட போது அது என்னால் தாங்க முடியாத துயரமாக இருந்தது.
பணி நிமித்தமாக உங்கள் துறையின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது மறக்க முடியாத அனுபவம் ஏதாவது இருக்கிறதா ?
பணி சார்ந்ததாகவும் எனது பணியாளர் சங்கம் சார்ந்தும் எனது அலுவலகச் சூழலில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் எழுதுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்றே ஒன்று, அவர் என்னுடைய மேலதிகாரியாக இருந்தவர்; மிகப்பெரிய உயர்ந்த பதவியில் இருந்தவர் .அவரைச் சமீபத்தில் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அவர் பற்றி எழுத ஒரு நாவல் இருக்கிறது. என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. நான் நன்கறிந்த ஒரு மனிதரின் வீழ்ச்சி! அது உண்மையில் வீழ்ச்சியா, அல்லது மனித வாழ்க்கையில் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஒரு பரிமாணமா என்று விளங்கவில்லை. இந்தக் குழப்பம்தான் அக்கதையின் மையம். என்னுடைய மிக நெருங்கிய நண்பரிடம் அந்தக் கதையைக் கூறி எழுதுங்கள் என்று கூறியிருக்கிறேன். என்னையே எழுதச் சொன்னார். நீங்களே எழுதுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் அந்தக்கதை எழுதப்பட வேண்டியது. அவர் எழுதுவார் என்றுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் நாமே எழுத வேண்டியது தான். இது மாதிரி நிறைய கதைகள் இருக்கின்றன.
