'வீட்டுக்குப் போனால் முதலில் ஊற்றிக் கொடுப்பது வோட்கா தான்!'

'வீட்டுக்குப் போனால் முதலில் ஊற்றிக் கொடுப்பது வோட்கா தான்!'

ரஷ்யாவில் அதிர்ச்சி அனுபவம்!
Published on

ரஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்ப்பு செய்பவர் அரும்பு சுப்ரமணியன். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழிகள் கற்றவர். ரஷ்யாவில் தங்கிப் படித்து ரஷ்ய மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். விமான நிர்வாகப் பணி அனுபவமும் கொண்ட இவர் சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் மொழியாசிரியராகவும் பணியாற்றியவர். கோவை  விஜயா வாசகர் வட்டம் வழங்கும் மொழிபெயர்ப்பாளருக்கான கே.எஸ்.சுப்ரமணியன் விருது பெறும் அவருடன் ஓர் உரையாடல்.

Q

நீங்கள் பிறந்து, வளர்ந்து, படித்தது மற்றும் குடும்பப் பின்னணி பற்றி ?

A

நான் பிறந்து வளர்ந்தது ஈரோட்டில். தமிழ் வழிக் கல்வி முறையில், என்னுடைய தாத்தாவுடைய பள்ளியான கலைமகள் கல்வி நிலையத்தில் படித்தேன். வீடு பள்ளிக்கு எதிரிலேயே இருந்ததால், காலை ஆறு மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று தோட்டத்திலுள்ள பூக்களைப் பறித்துச் சாமிக்கு அர்ப்பணித்து விட்டு, சிவபுராணம், கந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பாடல்களைப் பாடி விட்டு, நேராக விளையாட்டு மைதானத்திற்குப் போய் விடுவேன். கூடைப் பந்து, வாலி பால், டென்னிகாய்ட் மற்றும் ஈட்டி எறிதல், வட்டு எறிதல், உயரக் குதித்தல், நீளக் குதித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடிவிட்டுப் பள்ளிக்குச் செல்வேன். பள்ளியில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப்போட்டி என்று எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். பேத்தி என்பதாலேயே சலுகைகள் குறைவாகவும் கண்டிப்பு அதிகமாகவும் இருக்கும். அதன் பிறகு ஈரோட்டிலுள்ள வேளாளர் கல்லூரியில் ஆங்கில  இலக்கியம் இளங்கலை படித்தேன்.

Q

உங்கள் தாத்தா சமய இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தவர். நீங்கள் தந்தையின் மார்க்சீய வழிக்கு எப்படி மாறினீர்கள்?

A

என்னுடைய பெரியப்பா திரு. எஸ்.பி.வெங்கடசாலம் அவர்களும் என்னுடைய அப்பா எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்தார்கள். அவர்களும் அவர்களது நண்பர்கள்
எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களாகக் கட்சிக்கு உழைத்ததைப் பார்த்துத்தான் நானும் அந்தப் பாதைக்கு மாறினேன். அவர்கள்தான் என்னை ரஷ்ய அரசாங்க உதவியுடன் ரஷ்ய இலக்கியம் பயில ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தார்கள். 

என்னுடைய பெயர் அரும்பு என்று சூட்டப்பட்டதற்கான விளக்கத்தை  இங்கே  கொடுக்க வேண்டும். என்னுடைய தந்தையும் ரஷ்யரான செமியோன் கெர்மானவிச் ரூதின் என்பவரும் 1950 ஆம் ஆண்டுகளில் பேனா நண்பர்களாக இருந்தனர். அப்போது லெனின்கிராத், இப்போது சான்க்த் ( புனித ) பீத்தர்புர்க் என்றழைக்கப்படும் நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் ரூதின் இந்தியவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். அவர் பெங்காலி, மலையாளம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளைத் தெரிந்த ஒரு மொழி வல்லுனராக இருந்தார்.  1960 களில் அவர் ரஷ்ய- தமிழ் அகராதியைப் பதிப்பித்தார்.  தமிழில் அவர் என் தந்தைக்கு எழுதிய பல கடிதங்கள் என்னிடம் 2004 ஆம் ஆண்டு வரை இருந்தன. பிறகு அவை மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஆக, செமியோன் ரூதின் எனக்கு வைத்த பெயர்தான் அரும்பு. அவர் மூன்று முறை ஈரோட்டிற்கு வந்திருந்தார். கலைமகள் கல்வி நிலையத்தில் தமிழ் இலக்கியம் பற்றி சொற்பொழிவாற்றி இருக்கிறார். எங்களுடன் காவேரி ஆற்றில் குளித்து, வேட்டி அணிந்து, வாழை இலையில் நம் உணவை மண்டியிட்டுத் தரையில் அமர்ந்து உண்டிருக்கிறார். அவருடைய விருப்பம்தான் நான் ரஷ்யா சென்று படிப்பதற்கான அச்சாணியாக இருந்தது. பல மொழிகள் தெரிந்த அவருக்குத் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றால் தன்னுடைய பெயரை அவர் செம்பியன் என்று மாற்றிக் கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு விபத்தில் அவர் 1970 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.

Q

உங்கள் வாசிப்புதான் ஆங்கில இலக்கியம் படித்த உங்களுக்கு ரஷ்ய மொழி கற்கத் தூண்டுதலாக அமைந்ததா?

A

இலக்கியத்தின் மீது ஆர்வமும் ஈடுபாடும் இள வயதிலிருந்தே இருந்ததற்குக் காரணம் என்னுடைய பெற்றோர்கள்தான். என்னுடைய தந்தை எஸ்.பி.சுப்பிரமணியன் வீட்டிலேயே 'கல்பனா நூலகம்' என்றொரு நூலகத்தை வைத்திருந்தார். அதிலிருந்த ஒவ்வொரு புத்தகத்திற்கும் அவர் ஒரே மாதிரியான மேல் அட்டையை வெகு நேர்த்தியாகப் போட்டு, புத்தகம் வாங்கிய தேதியையும், புத்தகத்தைப் பற்றிய குறிப்பையும் எழுதி வைப்பார். அவருடைய கையெழுத்து உருண்டு திரண்ட வெண்ணெய் போல அவ்வளவு அழகாக இருக்கும். எத்தனை முறை அந்தக் கையெழுத்தைப் பார்த்து நான் ரசித்திருப்பேன்!இன்றும் அந்தப் புத்தகங்கள் எல்லாம் ஈரோட்டிலுள்ள என்னுடைய அண்ணன் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் உருவாக்கிய சித்தார்த்தா மேல்நிலைப் பள்ளியில் இருக்கின்றன. அதை இப்போது அவருடைய தங்கை ஜெயபாரதி நடத்தி வருகிறார். 'கல்பனா' என்பது மருத்துவர் ஜீவானந்தத்தின் உடன் பிறந்த அக்கா. அவர் பிறந்து சில மாதங்களிலேயே தவறான சிகிச்சையால் இறந்து விட, அவருடைய நினைவால் என் தந்தை இட்ட பெயர்தான் 'கல்பனா நூலகம்'. ஹிந்தி வித்வானாக இருந்த  என்னுடைய அம்மா ஜோன்மேரியைத் தமிழ் வித்துவான் ஆக்கியதும் என்னுடைய தந்தைதான். வீட்டில் பெரும்பான்மையான நேரம் தமிழ் இலக்கியத்தோடுதான் கழிந்தது. நான் என்னுடைய பெற்றோருக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தேன். என்னுடைய பெரியம்மா, பெரியப்பாவிற்கு நான்கு குழந்தைகள். அதில் பெரியவர் கல்பனா சொற்ப காலத்திலேயே இறந்து விட்டார். அடுத்தது மருத்துவர் ஜீவானந்தம், அதற்கடுத்தது பல் மருத்துவர் ரமணி மற்றும் ஜெயபாரதி. இவர்களுடன் சேர்ந்து தான் நான் வளர்ந்தேன். அப்போதெல்லாம் வாரம் இருமுறை உடம்புக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஒருமணி ஊற வைத்துப் பிறகு  குளிப்பது வழக்கமாக இருந்தது. எங்கள் நான்கு பேருக்கும் என் பெற்றோர் எண்ணெய்யைத் தேய்த்து விட்டு திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, பாரதியார் பாட்டு என்று கொடுத்து அவற்றை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைப்பார்கள். அப்படியே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நாங்கள் காலை ஆறு மணிக்கே காவிரி ஆற்றுக்குப் போய் குளித்துவிட்டு மாலை வரை அங்கு அமர்ந்து செய்யுள்களைப் படித்து மனப்பாடம் செய்வோம். இது பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கல்வியாகத்தான் இருந்தது. அம்மா நன்றாகக் கவிதை எழுதுவார்கள். இப்படி என்னுள் வளர்ந்ததுதான் இலக்கிய ஆர்வம். தமிழிலிருந்து அது ஆங்கிலத்திற்கும் பிறகு அது ரஷ்ய மொழிக்குமாக மாறியது. எனக்குப் பெயர் வைத்த செம்பியன் அவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கற்றுத் தேர்ந்த போது, அவரைப் போலவே நானும் அவருடைய மொழியான ரஷ்ய மொழியையும் இலக்கியத்தையும் பயில வேண்டும் என்று எனக்குத் தோன்ற, நான் ரஷ்ய இலக்கியத்தைப் பயின்றேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு மிஹாயில் அலெக்சாந்த்ரவிச் ஷோலஹவ் அவர்களுடைய படைப்புகளைத்தான் எடுத்துக் கொண்டேன்.

Q

நீங்கள்  IATA எனப்படும் சர்வதேச விமானப் போக்குவரத்து உரிமம் பெற்றதைப் பற்றிக் கூற முடியுமா?

A

1991 ஆம் ஆண்டு நான் ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃபிளாத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் இந்தச் சர்வதேச விமானப் போக்குவரத்து உரிமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தத் தேர்வை எழுதி இந்த உரிமத்தை வாங்கினேன். ஒரு பயண நிறுவனத்தை ஆரம்பிக்கும் நோக்கத்தில் நான் இதைச் செய்தேன்.

Q

ரஷ்ய விமான நிறுவனம் ஏரோஃபிளாத்(Aeroflot), சென்னை அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

அரும்பு சுப்ரமணியன்
அரும்பு சுப்ரமணியன்
A

முதல் முதலாகச் சென்னையில் ரஷ்ய விமானச் சேவை, சரக்குப் பிரிவு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து சரக்குகள் ரஷ்யாவுக்கு   அனுப்பப்பட்டன. பல விமான நிறுவன அதிகாரிகளுடன் பழகக் கூடிய வாய்ப்பும், சென்னை விமான ஓடுதளம் வரை சென்று விமான சேவையைக் கையாளக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. ரஷ்ய விமான நிறுவனம் சென்னை அலுவலகத்தில் மேலாளரின் செயலாளராகவும், சரக்குப் பிரிவின் (cargo) மூத்த அனுப்புனராகவும் பணியாற்றினேன். அது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, 1996 ஆம் ஆண்டு ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் மூடப்பட்டு விட்டது. ஆனாலும் ரஷ்ய விமான நிறுவன நிர்வாகப் பணி அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது.

வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களை அது கற்றுத் தந்தது. காலை எட்டு மணிக்கு அலுவலகம் திறந்து விடும். 7.55 மணிக்குள் அலுவலகத்தில் இருக்கப் பழகிக் கொண்டேன். பொறுமையுடனும் இன்முகத்துடனும் வாடிக்கையாளர்களைக் கையாளும் பக்குவத்தையும், அன்றைய தின வேலைகளை அன்றே முடிக்கும் திறனையும் வளர்த்துக் கொண்டேன். நேர மேலாண்மை, யோசித்துத் திட்டமிட்டு வேலையை முடிப்பது, குறைந்த நேரத்தில் எவ்வளவு அதிகமாக, பயனுள்ள வேலைகளை முடிப்பது, வகுத்து வைத்த இலக்கை எப்படி அடைவது போன்ற அனுபவமிக்க பார்வை எனக்குக் கிடைக்கப் பெற்றது. அது மட்டுமல்ல சென்னையில்   ’அக்சீனியா சர்வதேச பயண முகமை நிறுவனம்’ என்பதையும் நடத்தி வந்தேன்.அக்சீனியா என்ற பெயரே ஷோலஹவின் படைப்பான ' 'அமைதியாக ஓடுகிறது டான் நதி' என்ற நாவலில் வரும் முக்கிய கதாப்பாத்திரத்தின் பெயராகும். ரஷ்யாவிற்குப் பயணிப்பவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான சேவைகளையும் செய்து வந்தேன். மன நிறைவுடன் எட்டு வருடங்கள் இந்த அலுவலகத்தை நடத்தினேன்.

Q

சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் ரஷ்ய மொழி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் பற்றி?அங்கே எப்படிப்பட்டவர்கள் கற்றுக் கொள்ள வந்தார்கள்?

A

ரஷ்ய மொழியுடனான தொடர்பு இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே சில காலம் நான் ரஷ்ய மொழியைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். அப்போது  முருகப்பா குழுமம், பி.எச்.இ.எல் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிர்வாக அதிகாரிகளுக்காக ரஷ்ய மொழியைக் கற்றுக் கொடுத்தேன். அப்படியே வேறு சில தனி நபர்களுக்கும் கற்றுக் கொடுத்தேன். ரஷ்யா சென்று தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டார்கள். நிறுவனத்தில் வேலைப் பளு இருந்தாலும், மிகக் கவனத்தோடு அவர்கள் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வகையில் ரஷ்ய மொழியுடனான தொடர்பு என்றுமே இனிமையானதாக, மனதுக்கு நெருக்கமானதாகவே இருந்தது.

Q

ரஷ்ய மொழி உரையாளர் (Interpreter) மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வருகிற அனுபவம் எப்படி இருந்தது?

A

மிக இனிமையான அனுபவம் என்றே சொல்வேன். மொழி உரையாளராகப் பணியாற்றும் போது பல துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். வங்கித் துறை, மருத்துவத் துறை, சுற்றுலாத் துறை, வணிகத் துறை, இயந்திர ஆலை சார்ந்தது என்று பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கு மொழி உரையாளராகப் பணியாற்றியிருக்கிறேன்.

Q

மொழிபெயர்ப்புக்குள் எப்படி வந்தீர்கள்?

A

ரஷ்ய இலக்கியம் படித்துக் கொண்டிருந்த நாள் முதலே நான் வாசித்த எல்லாவற்றையும் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உள்ளூர நான் ஆசைப்பட்டேன். அதற்கான தருணம் கனிந்து வந்ததும் அதைப் பற்றிக் கொண்டேன். இது நீண்ட காலமாக என்னுள் அடைகாத்து வந்த எண்ணம்தான்.

Q

 ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ’கரமாஸவ் சகோதரர்கள்’  நாவலை ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த அனுபவம் எப்படி? 

A

இது மூன்று ஆண்டு கால அனுபவம். இந்த மூன்று ஆண்டுகளும் தஸ்தயேவ்ஸ்கி என்னுடனேயே வாழ்ந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த மொழிபெயர்ப்பைச் செய்தோம். அதற்கு எனக்கு ரஷ்ய மொழியறிவு தேவைப்பட்டது, அவருக்கோ மொழியையும் தாண்டிய, என்னுடைய பேரார்வமே போதுமானதாக இருந்தது. என் கரம் பற்றி என்னை வழி நடத்திச் சென்றார். வலிகளால் நிரம்பி வழிவதுதான் வாழ்க்கை, அதை ரசித்து, ருசித்து வாழ வேண்டும் என்ற பக்குவத்தைக் கற்றுக் கொடுத்தார். இந்தப் பயணம், வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத ஒரு ஆழ் மனப் பயணம். ஒவ்வொரு முறை இதை விளக்க முயலும் போதும் நான் முழுமையாகத் தொலைந்து, என்னை நானே தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய புள்ளியில் வந்து நிற்கிறேன். அந்த நாவல் எந்த அம்சத்தில் என்னைக் கவர்ந்து மொழிபெயர்க்கத் தூண்டியது என்றால் முதலில் இது என் மொழியில், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதுதான் . அடுத்து, மனித  மனத்தின் அடி ஆழத்திலிருக்கும் அடர், கரும் இருளைத் துளைத்தெடுத்து வந்து இதோ, இதுதான் மனிதனின் இன்னொரு முகம், உள்ளுக்குள் பதுங்கியிருக்கும் வேறொரு முகம் என்பதைக் காட்டிய அம்சம் என்னை மிகவும் கவர்ந்தது. என்றாவது ஒரு நாள் இந்த அனுபவத்தைக் கைமாற்றிக் கொடுப்பேனா என்பதும் சந்தேகம்தான்.

Q

ஆரம்பத்திலேயே அவ்வளவு பெரிய படைப்பை எடுத்துக் கொண்டது சவாலாக இருந்ததா?

A

இந்த நாவலை மொழிபெயர்க்க வேண்டும் என்று முடிவு செய்ததும் என்னை வழி நடத்த தஸ்தயேவ்ஸ்கியே வந்து விட்டதால், இது சவாலாக இருந்ததை விடப் பேராவலாகத்தான் இருந்தது.

Q

அந்த நாவலை மொழிபெயர்க்கும் போது நீங்கள் பரவசப்பட்டது எப்போது? இடர்பட்டுச் சிரமப்பட்ட இடங்கள் எங்கே?

A

யாருமறியாத மனித மனங்களின் மற்றொரு பக்கத்தை தஸ்தயேவ்ஸ்கி வெகு சாதாரணமாகத் திறந்து காட்டிய போது நான் பரவசப்பட்டு அந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன். மொழிபெயர்க்கச் சிரமப்பட்ட இடங்கள் ஏராளம். 15வரிகள், 16 வரிகள் என்று இருக்கும் ஒரு வாக்கியத்தைப் பிரிக்காமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வருவதில் இருந்த சிரமத்தையும், சுவாரஸ்யத்தையும் சவாலாக ஏற்றுக்கொண்டு செய்த போது, சில நாட்கள் நான் ஒரு வாக்கியத்தை மட்டுமே மொழிபெயர்த்து விட்டு எழுந்து விடுவேன். அதை ஜீரணிக்க எனக்கு அந்த நாள் முழுவதும் தேவைப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் படைப்பை முடிக்க எனக்கு மூன்று வருடங்கள் பிடித்தன. இந்த நாவலில்  வியந்த அம்சம் எது என்றால் இது நாவலா அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியா என்பதுதான்.

Q

ரஷ்ய மொழியின் 15 வரிகள் கொண்ட நீண்ட வாக்கியங்களைத் தமிழில் எப்படிக் கையாண்டீர்கள்? வாசகர்களுக்காக எளிமைப்படுத்தினீர்களா? அல்லது ?

A

ரஷ்யப் படைப்புகளில் பொதுவாகவே நீண்ட நீண்ட வாக்கியங்கள் இருப்பதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இது அந்த மொழியின் தனித்துவமும் கூட. வாசகர்களுக்காக நான் அவற்றை எளிமைப்படுத்தித் தரவில்லை. அப்படியேதான் அவற்றை  மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளேன். மொழிபெயர்ப்புப் படைப்பை வாசிக்கும் வாசகனுக்கு மொழிச்சரளம் என்பது கண்டிப்பாகக் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், வாசகர்கள் படைப்பைப் படிக்காமல் சோர்ந்து போய்விடுவார்கள். மேலே படிக்காமல் அதை விட்டு விடவும் செய்வார்கள்.

Q

பொதுவாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் வழியாக இலக்கு மொழிக்குச் செல்லும். நீங்கள் நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்த்த அனுபவம் எப்படி இருந்தது?

A

ரஷ்ய மொழியைப் படித்திருந்ததால், அதிலிருந்து மொழிபெயர்ப்பது இலகுவாகவும், அர்த்தமுள்ளதாகவும் பட்டது.

Q

ரஷ்யாவில்  தங்கிப் படித்த காலத்தில் ரஷ்யாவில் உங்களைக் கவர்ந்தது எது?
அங்குள்ள மக்கள், அரசு, பண்பாடு, கலாச்சாரம்,உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி?

A

ஒன்பது ஆண்டுகள் நான் ரஷ்யாவில் படித்தேன். மாஸ்கோவிலிருந்து 1082 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ,ரஸ்தோவ் - ந- தனு, அதாவது ரஸ்தோவ்- ஆன்- டான், டான் நதிக்கரையிலுள்ள ரஸ்தோவ் என்ற ஊரில்   ரஸ்தோவ்-ஆன்-டான் என்ற பல்கலைக்கழகத்தில் நான் ரஷ்ய மொழியையும் இலக்கியத்தையும் படித்து ரஷ்ய இலக்கியத்தில் எம்.ஏ. எம்ஃபில் (பி.எச்.டி) செய்தேன். 


ரஷ்யர்களுக்குப் பொதுவாக இந்தியர்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.  குளிர்காலத்தில் உடல்நலம் சரியில்லாத போது, வகுப்புக்குப் போகாமல் இருந்தால், ஆசிரியரே நான் தங்கியிருக்கும் அறை தேடி வந்து பாடம் எடுத்து விட்டுப் போவார்கள். காரணம், ரஷ்ய இலக்கியம் படிக்க இந்தியாவிலிருந்து வந்தவர்களில், நான் படித்த காலத்தில், நான் மட்டுமே இருந்தேன். அது மட்டுமல்லாமல், மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் அப்போதிருந்த ஆசிரியர்களுக்கு ஆர்வம் இருந்தது. ரஷ்ய உணவு மசாலாப் பொருட்கள் இல்லாத, காரசாரம் இல்லாத உணவு. அசைவ உணவுதான் அந்தக் குளிருக்கு ஏற்ற உணவாக இருக்கிறது.   அவர்கள் தயாரிக்கும் ரொட்டி, இங்கு தயாரிக்கப்படும் ரொட்டியைப் போல இருக்காது. அது மிகுந்த சுவை உடையது. அவர்களுடைய உணவு , மூன்று பிரிவுகளாக இருக்கும். முதல் உணவு என்று  சொல்லப்படுவது - சூப். இரண்டாவது உணவு என்று சொல்லப்படுவது - வேகவைத்த ஒரு துண்டு இறைச்சி அல்லது கோழி அல்லது மீன், கொஞ்சம் வேக வைத்த காய்கறிகள், வேக வைத்த பருப்பு வகையில் ஒன்று, சில சமயம் ஒரு கப் சாதம்.மூன்றாவது பிரிவாக இருப்பது - வேக வைத்த பழச்சாறு. ஆப்பிள், பியர் ஆப்பிள், ஆப்ரிகாட், ப்ளம்ஸ் இது போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றைத் தண்ணீரில் போட்டு வேகவைத்துத் தரப்படும் தண்ணீர். ரஷ்ய உணவில் உப்பு மட்டும்தான் இருக்கும். மிளகுதூள் காரத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும். வேண்டுமென்றால்,  பயன்படுத்திக் கொள்ளலாம்.


ரஷ்யக் கலாச்சாரத்தில் எனக்குப் பல அம்சங்கள் பிடித்திருந்தாலும், மனதை உலுக்கக்கூடிய விஷயமாக நான் கருதுவது, திருமணம் முடிந்ததும், தம்பதிகள் நேராக வீர மரணம் எய்திய படைவீரர்கள் சமாதிக்குச் சென்று பூங்கொத்தை வைத்து விட்டு, இன்று நாங்கள் உயிருடன் இருப்பது உங்களுடைய தியாகத்தால்தான் என்று அவர்களை நினைவு கூர்வது. இந்த நாட்டுப் பற்றை விளக்க வார்த்தைகளே இல்லை. அவர்களுடைய பண்பாட்டைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையாக உழைப்பார்கள். சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் முற்றிலுமாக ஓய்வெடுப்பார்கள். குளிர்காலத்தில் ஒரு வாரம் முதல் பதினைந்து நாட்கள் வரை விடுமுறை இருக்கும். கோடைக்காலத்தில் இரண்டு மாதங்கள் மே, ஜுன் விடுமுறை மாதங்கள். சூரியன் இருக்கும் இந்த இரண்டு மாதங்களும் அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். கடற்கரைப் பகுதியில்  ஓய்வெடுப்பதை  எல்லா ரஷ்யர்களும் விரும்புவார்கள். ஏனெனில், வருடத்தில் நான்கு மாதங்கள்தான் அவர்களுக்குச் சூரிய வெளிச்சமே கிடைக்கும்.
அரசு மக்களின் நலனுக்காகப் பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிப் படிப்பு இலவசம், அடிப்படையான மருத்துவம் இலவசம். வாழ்வதற்கு எல்லோருக்கும் வீடு உண்டு.

நூல் வெளியீடு
நூல் வெளியீடு
Q

சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ’ப்ராண்ட் கசாண்ட்ரா  ’ நாவலை ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த அனுபவம் பற்றி?

A

அது இதுவரை யாரும் கற்பனை செய்து எழுதாத நாவல் என்று சொல்வேன். முதன் முதலாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி வீரர், தன்னுடைய ஆராய்ச்சி மக்களுக்குப் பயனில்லாமல் போனதை அறிந்து விண்வெளியில் தற்கொலை செய்து கொள்கிறார். சோவியத் அரசாங்கம் முன் எடுத்த பல ஆராய்ச்சிகளில், முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆராய்ச்சியை அது விவரிக்கிறது.அதே போல மரியா ஸ்தெப்பனோவா எழுதிய ’32 ஆகஸ்ட்’   நூலையும் ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன்.ஆழி பதிப்பகத்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த நூலை நான் மொழிபெயர்த்தேன். இது சிறுவர்களுக்கான புனைவுக் கதை. கற்பனை அம்சம் கொண்ட வித்தியாசமான கதை இது. தலைப்பே ’32 ஆகஸ்ட்’ என்று வித்தியாசமாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.அதே போல எவ்கேனி வதலாஜ்கின் எழுதிய ’விமானி’ நாவலை ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன்.
இந்த நாவல் மிக வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசாட்சியில் 1900 ஆம் ஆண்டு பிறந்த ஒருவரை உறைநிலையில் வைத்து விட்டு, பிறகு 1980 ஆம் ஆண்டு அவரை உறைநிலையிலிருந்து மீட்கிறார்கள். அப்படி மீட்கப்பட்டவருடைய வரலாற்றைச் சித்தரிக்கும் நாவலாக இது இருக்கிறது. இதைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்ததும், இந்தப் படத்தையும் தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இது ஒரு வித்தியாசமான படமாகக் கண்டிப்பாக இருக்கும்.

Q

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவை பற்றி?

A

ரஷ்ய மொழியிலிருக்கும் ஏராளமான ஆவணங்களை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறேன். அவையெல்லாம் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவை.

Q

அஃபனாசி நிகிதின் எழுதிய ’மூன்று கடல்களுக்கு அப்பால்’ என்ற  பயண நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் இருந்தும் ரஷ்யனில் இருந்தும் மொழிபெயர்ப்பதற்கு என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்? மொழி அமைப்பில் காணும் ஒற்றுமைகள் என்ன?

A

இது ஒரு பயண நாட்குறிப்பேடு. 1466 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள த்வேர் நகரத்திலிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய அஃபனாசி நிகிதின், 1469 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த முதல் ரஷ்யராவார். ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி இனத்தாலும், இலக்கணத்தாலும், கலாச்சாரத்தாலும், காலத்தாலும் வேறுபட்ட மொழிகள். ரஷ்ய மொழி, ஸ்லாவிக் மொழியை அடிப்படையாகக் கொண்டது. அதனால், இவற்றைக் கருத்தில் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும். மொழி அமைப்பில் இருக்கும் ஒற்றுமை என்று பார்த்தால், வாக்கிய அமைப்பு, பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், பெயரடைச் சொற்கள், வினையுரிச் சொற்கள் எல்லாம் ஒன்றாக இருக்கும்.

Q

ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்த போது, அதாவது தாய்மொழி அல்லாத அந்த இரண்டு மொழிகளின் பரிமாற்ற அனுபவம் எப்படி இருந்தது?

A

ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு நான் மொழிபெயர்த்தவை எல்லாம் பல்வேறு நிறுவனங்களுடைய ஆவணங்களைத்தான். இலக்கியம் சார்ந்தவற்றை அல்ல. எந்தவிதப் பிசகும் இல்லாமல் அவற்றைத் துல்லியமாக மொழிபெயர்ப்பதில் நான் மிகுந்த கவனம் கொண்டிருந்தேன். இரண்டு மொழிகளையும், அதாவது தாய்மொழி அல்லாத ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளைக் கையாள்வதில் ஒரு பேரானந்தம்தான். எடுத்துக் கொண்ட வேலையைக் கச்சிதமாக முடிக்கும் போது, சுமையில்லாத ஒரு இறகு போல மனது பறப்பதை உணர்ந்திருக்கிறேன்.

Q

ரஷ்ய இலக்கியத்தில் காலநிலை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கூறி இருந்தீர்களே?எப்படி?

A

ரஷ்ய இலக்கியத்தில் காலநிலை மாற்றம் பெரிய பங்கு வகிக்கிறது. நாம் படிக்கும் போதே தெரியும், இலையுதிர் கால வர்ணனை சுற்றி உள்ள அனைத்தையும் இழப்பது போலவும், குளிர்காலச் சித்தரிப்பு ஒற்றை நிறத்தில்,  வெள்ளை நிறத்தில் இருப்பதையும், வசந்த காலம் பூக்களின் உலகமாக இருப்பதையும், கோடைகாலம் உலகிலுள்ள அனைத்து சந்தோஷமான, மனதிற்கு இனிய விஷயங்களைக் கொண்டாடுவதாக இருக்கும். அப்படியே மக்களின் மனநிலையும் மாறுவதை நாம் பார்க்கலாம்.

Q

ரஷ்யாவில் கண்ட கலாச்சார வியப்பு அல்லது அதிர்ச்சி என்று ஏதாவது  உண்டா?

A

பொதுவாக, ரஷ்ய மரியாதை என்பது ஒருவருடைய வீட்டிற்குப் போனால், அவர்கள் கொடுக்கும் வோட்கா என்ற மதுபானத்தை அருந்த வேண்டும். மது என்ற வார்த்தையே நல்ல வார்த்தை இல்லை என்ற குடும்பத்திலிருந்து போன எனக்கு அது அதிர்ச்சியோ அதிர்ச்சி, பேரதிர்ச்சி!
அடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிஸ்கோ எனப்படும் நடனத்தை ஆடுவது. அதுவும், ஒரு ஆண் ஆட அழைக்கும் போது, அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆடுவது. இது ஒரு பெரிய கலாச்சார வியப்பாக இருந்தது.

Q

ஒரே கட்சி ஆட்சியில் உள்ள அந்த நாட்டில் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள்?

A

நான் படிக்கப் போன போது (1981 ஆம் ஆண்டு) சோவியத் அரசாங்கம் இருந்தது. எல்லோருக்கும் படிப்பு,  வேலை, வீடு, எல்லோரும் சமம் என்ற  அடிப்படையில் இருந்தது. 1985-91 ஆம் ஆண்டுகளில், கர்பச்சோவ் காலத்தில்  ' பெரிஸ்த்ரோய்கா' ( சீரமைப்பு அல்லது மறு கட்டமைப்பு) வந்து போது, சோசியலிஸம் தோற்றுப் போன ஒரு 'இஸமாகி' விட்டது. அப்போது பொருட்களின் விநியோகம் சீராக இல்லாமல், எல்லோருக்கும் உணவுச் சீட்டு தரப்பட்டு அதன்படி உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. சற்றுச் சிரமமான காலமாக இருந்தது.

Q

இந்தி தெரிந்த நீங்கள் ஏன் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கவில்லை?

A

மொழிபெயர்க்கும் அளவுக்கு இந்தி தெரியாததால்தான். ஓரளவுக்குப் பேசத் தெரியும். அவ்வளவே.

Q

மொழிபெயர்ப்பில்  உங்களுக்கான  கொள்கை, வரையறை என்று உள்ளதா?

A

மூல நூலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். நீரில் பஞ்சை வைத்தால் எப்படி அது நீரை உறிஞ்சிக் கொள்ளுமோ, அப்படியே மூல நூலின் படைப்பை உள் வாங்கி வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

Q

மொழிபெயர்ப்பாளருக்குரிய கடமைகள் என்ன? படைப்புகளை இலக்கு மொழிக்கு எளிமைப்படுத்தலாமா?

A

1. மூல நூலில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும்.
2. ஆசிரியர் வாழ்ந்த, வாழும் காலத்தைப்  பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
3. அந்த நாட்டுக் கலாச்சாரத்தை, வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்திருக்க வேண்டும்.
4. எழுத்தாளரின் குடும்ப, வாழ்க்கைப் பின்னணியைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
5. சொற்களஞ்சியம், பொருத்தமான சொற்களைத் தேர்வு செய்ய உதவும்.

மொழிபெயர்ப்பு சில நேரம் மொழியாக்கமாக மாறுவதுண்டு.இப்படி இரண்டும் இரண்டு விதம். இரண்டுமே இரண்டு விதமான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது.  
மூலப் படைப்பு நடை எப்படி இருக்கிறதோ அப்படியே இலக்கு மொழிக்குக் கொண்டு வர வேண்டும். உதாரணமாக, மூலப் படைப்பில் ஒரு வாக்கியம் 16 வரிகளைக் கொண்டிருந்தால், அதை உடைக்காமல் அப்படியே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அதை எளிமைப்படுத்த நமக்கு அதிகாரம் இல்லை.
வேண்டுமானால் இரண்டு வித மொழிபெயர்ப்புகளைச் செய்யலாம். ஒன்று மூல நூலில் இருப்பது போலவே செய்வது.
இரண்டாவது, 'எளிமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது'  என்ற தலைப்பின் கீழ் செய்வது.

Q

உங்கள் மொழிபெயர்ப்பு சரியான தரத்தில் இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்?
அதற்கான அளவீடு என்ன?

A

முதலில், என்னுடைய மனசாட்சிதான். மொழிக்குத் துரோகம் செய்யாமல் படைப்பை மொழிபெயர்ப்பது. மூல நூலில் உள்ளதை மொழிபெயர்ப்பில் படித்துப் பார்க்கும் போது, அப்படியே வந்திருக்கிறதா என்று பார்ப்பேன். அதே தொனி இருக்க வேண்டும். அதனால்தான் நீண்ட வாக்கியங்களை நான் உடைப்பதில்லை. அப்படியே மொழிபெயர்க்கிறேன்.அதற்கான அளவீடுகளும்  இவைதான்.
 மொழிபெயர்த்த பின், மூல நூலோடு ஒப்பிட்டுப் பார்த்துப் படிக்கும் போது, மொழிபெயர்ப்பு சரியாக வந்துள்ளது என்பதை அறிந்ததும் மனம் அவ்வளவு குதூகலிக்கும். அதற்கு இணை வேறெதுவும் இல்லை. அப்போது மொழிபெயர்ப்பு, படைப்பு முயற்சியாகத் திருப்தி தந்த அனுபவமாக மாறும்.

Q

நீங்கள் சொந்தமாக படைப்பு எழுதும் முயற்சியில் ஈடுபட்டதுண்டா?

A

நான் கவிதைகள் எழுதுவேன். புதுக்கவிதைகள் தான். வாழ்க்கை சார்ந்து நிறைய எழுதி வைத்திருக்கிறேன். தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும். 

Q

ரஷ்ய மொழியில் எழுத முயற்சி செய்தது உண்டா?

A

எனது கவிதைகளை மட்டும் மொழிபெயர்த்துப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்.

Q

விஜயா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளருக்கான  'கே.எஸ்.சுப்ரமணியன் விருது' பெறுவது பற்றி?

A

திருமிகு. வேலாயுதம் ஐயா இந்த வருட விருது எனக்குக் கொடுக்கப் போவதாகச் சொன்ன போது, இதற்குத் தகுதியானவளா நான் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.  இப்படிப்பட்ட பெரிய வெளிச்சத்திற்கானவள் அல்ல நான். பூக்கள், செடி, கொடிகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என்று இயற்கையை ரசித்தபடி மொழிபெயர்ப்பு வேலையை ஒரு மூலையில் அமர்ந்து மனங்கனியச் செய்பவள். அவ்வளவே. இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியை விட, கூச்சமே அதிகமாக இருக்கிறது.நான் பெறப் போகும் இந்த விருதுதான் பெரிய பாராட்டும் முதன் முதலாக எனக்குக் கிடைக்கும் அங்கீகாரமும். இதற்கு நான் மறுபடியும் திருமிகு. வேலாயுதம் ஐயாவுக்கு  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Q

உங்கள் குடும்பம் பற்றி?அது உங்களுக்கு எவ்வளவு துணையாக இருக்கிறது?

A

என்னுடைய இணையரும் என் மகன் மருமகளும் எந்தவிதத்திலும் என்னுடைய எழுத்துப் பணிக்கு இடையூறாக இருப்பதில்லை. மாறாக, எனக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பைத் தருபவர்களாக இருப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. 

Summary

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com