பேரா.டி.தருமராஜ்
பேரா.டி.தருமராஜ்

"கரப்பான் போராட்டமா? வட இந்திய அரசியலில் கற்பனைக்கு இடம் இல்லை"

Published on

ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலாசிரியர் டி. தருமராஜூடன் ஒரு உரையாடல்.

எழுத்தாக்கம்: வெ. மாசிலாமணி

Q

உங்கள் ஜல்லிக்கட்டு நூலை ஒரு பண்பாட்டு ஆய்வு நூலாகக் கருதலாமா? அல்லது அரசியல் நூலாகவா?

A

இரண்டையும் தாண்டிய நூல். வெளிப்படையாக இது ஜல்லிக்கட்டைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் அதன் அடியாழத்தில் தமிழ் வெகுஜனத்தின் அரசியல் நினைவுகள், அதிகார உறவுகள், எதிர்ப்பின் வரலாறு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சி இருக்கிறது. எனக்கு ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு அல்ல; ஒரு அரசியல் குறியீடு.

Q

ஜல்லிக்கட்டை ஏன் ஒரு அரசியல் குறியீடாகப் பார்க்கிறீர்கள்?

A

ஒரு பண்பாட்டு வடிவம், சமூகத்தின் வரலாற்று அனுபவங்களைத் தன்னுள் சுமந்து செல்லும்போது அது அரசியல் குறியீடாக மாறுகிறது. 2017 எழுச்சியில் மக்கள் காளையைப் பாதுகாக்கவில்லை; தங்களது பண்பாட்டு தன்னாட்சியையும், கண்ணியத்தையுமே பாதுகாத்தனர். 

Q

2017 மெரினா எழுச்சியின் தனித்துவம் என்ன?

மெரினா புரட்சி
மெரினா புரட்சி
A

அது தலைவரற்ற மக்கள் எழுச்சி. அரசியல் கட்சிகள் இல்லாமல், இளைஞர்கள் தன்னிச்சையாக உருவாக்கிய பொதுவெளி அது.  தமிழ் சமூகத்தின் புதிய அரசியல் கற்பனையை அது வெளிப்படுத்தியது.

Q

அந்த எழுச்சி ஏன் இவ்வளவு பெரியதாக மாறியது?

பேரா.டி.தருமராஜ்
பேரா.டி.தருமராஜ்
A

உடனடி காரணம் ஜல்லிக்கட்டு தடை. ஆனால் ஆழமான காரணம் வரலாற்று நினைவுகள். பல தலைமுறைகளாகத் தேங்கியிருந்த பண்பாட்டு மற்றும் அரசியல் அனுபவங்கள் ஒரே தருணத்தில் வெடித்தெழுந்தன.

Q

உங்கள் நூலில் ‘தமிழ் வெகுஜன வரலாறு’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

A

அது அரசர்களின் வரலாறு அல்ல; சாதாரண மக்களின் அரசியல் அனுபவங்களின் வரலாறு. மக்கள் எவ்வாறு அதிகாரத்தை எதிர்கொண்டார்கள் என்பதன் வரலாறு.

Q

களப்பிரர் காலத்தை ஏன் முக்கியமாக எடுத்துக்கொள்கிறீர்கள்?

A

அது தமிழ் சமூகத்தில் நிலவிய அதிகார அமைப்புகளில் ஏற்பட்ட ஒரு பெரிய இடைவெளியை நினைவூட்டும் காலம். அதன் வரலாற்றுப் பொருளைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும், அதிகார மாற்றத்தின் சாத்தியத்தை அது சுட்டிக்காட்டுகிறது.  யவன வணிகம் உருவாக்கியிருந்த ஆதி முதலீட்டியத்தின் செல்லக் குழந்தையாக பவனி வந்த மூவேந்தர்களின் ஆட்சியை, 2017ல் நடைபெற்றது போன்றவொரு வெகுஜன எழுச்சியே மாற்றியமைத்தது என்ற அரசியல் நனவிலியை நான் ஞாபகப்படுத்த விரும்பினேன்.  

Q

பக்தி இயக்கத்தை நீங்கள் எவ்வாறு வாசிக்கிறீர்கள்?

A

பக்தி இயக்கம் வெறும் சமய இயக்கம் மட்டுமல்ல. அது சமூகத்தின் பல அடுக்குகளை மறுசீரமைத்த ஒரு வரலாற்றுத் தருணம். அதில் அதிகாரமும் எதிர்ப்பும் இணைந்த சிக்கலான உறவுகள் உள்ளன. 

Q

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன தொடர்பு?

A

இரண்டிலும் பண்பாட்டு தன்னாட்சிக்கான கோரிக்கை இருக்கிறது. மொழியும் பண்பாடும் வெறும் அடையாளங்கள் அல்ல; அரசியல் உரிமைகளின் அடித்தளங்கள். 

Q

‘பிராமணியம்’ என்று நீங்கள் குறிப்பிடுவது யாரைக் குறிக்கிறது?

A

எனது பயன்பாட்டில் ‘பிராமணியம்’ என்பது ஒரு சமூக அதிகார அமைப்பையும், மேலாதிக்கக் கருத்தியலையும் குறிக்கிறது. அதை ஒரு தனிநபர் அல்லது ஒரு சமூகத்துடன் முழுமையாக ஒப்பிடக் கூடாது.

Q

உங்கள் நூல் பிராமண எதிர்ப்பை மையமாகக் கொண்டதா?

A

எனது முயற்சி, தமிழ் வெகுஜன அரசியலில் ஆதிக்கத்திற்கு எதிரான நினைவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்வதே. அந்தப் பின்னணியில் பிராமணியம் ஒரு முக்கியமான வரலாற்றுக் கூறாக இடம் பெறுகிறது.

Q

‘பொதுப்புத்தி’ (Common Sense) என்ற கருத்துக்கு உங்கள் நூலில் என்ன இடம்?

A

ஒரு சமூகத்தின் அரசியல் உணர்வு அதன் அன்றாட வாழ்விலும் பண்பாட்டிலும் உருவாகிறது. ஜல்லிக்கட்டு போன்ற மரபுகள் அந்தப் பொதுப்புத்தியை வெளிப்படுத்தும் வடிவங்களாக மாறுகின்றன. 

Q

உங்கள் நூலில் கிராம்சியின் தாக்கம் உள்ளதா?

A

நான் நேரடியாக கிராம்சியை விவாதிக்கவில்லை. ஆனால் பண்பாட்டு மேலாதிக்கம், பொதுப்புத்தி, மேலாதிக்க எதிர்ப்பு போன்ற சிந்தனைகள் என் வாசிப்புடன் உரையாடுகின்றன.

Q

சபால்டர்ன் ஆய்வுகளுடன் உங்கள் அணுகுமுறைக்கு தொடர்பு இருக்கிறதா?

A

ஆம். வெகுஜன மக்களின் அரசியல் அனுபவங்களுக்கு தனித்த வரலாற்று தர்க்கம் உண்டு என்ற சபால்டன் ஆய்வுக் கருத்து எனக்கு முக்கியமானது. 

Q

ஜல்லிக்கட்டு ஒரு சாதி சார்ந்த மரபு என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில்?

A

ஒரு மரபில் உள்ள சமூக முரண்பாடுகளை மறுப்பது சரியல்ல.  ஏறு தழுவுதல் என்ற தமிழ் மரபு, வீர விளையாட்டாக மாற்றப்படுகையில் அதை சில சாதிகள் தங்களது பாரம்பரியமாக மாற்ற நினைத்தன என்பது உண்மை.  ஆனால், அந்த சாதியக் கோரிக்கைக்கு வலுவான எதிர்ப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், ஒரு வரலாற்றுத் தருணத்தில் அந்த மரபு பெறும் புதிய அரசியல் அர்த்தத்தையும் கவனிக்க வேண்டும். இந்த இரண்டும் ஜல்லிக்கட்டில் சாத்தியமாகிறது.

Q

மெரினா எழுச்சியின் மிக முக்கியமான பாடம் என்ன?

A

தமிழ்ச் சமூகத்தில் அரசியல் கற்பனை இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதே அதன் மிகப்பெரிய செய்தி.

Q

உங்கள் நூல் ஒரு வரலாற்று நூலா அல்லது விளக்கவியல் நூலா?

A

இது வரலாற்று நிகழ்வுகளை மறுவாசிப்பு செய்யும் விளக்கவியல் முயற்சி. நிகழ்வுகளின் அரசியல் அர்த்தத்தைத் தேடுவதில்தான் எனது முழுக்கவனமும் இருக்கிறது.

Q

இந்த நூலை எழுத உங்களைத் தூண்டியது என்ன?

A

2017 எழுச்சியைப் பற்றி பல விளக்கங்கள் இருந்தன. ஆனால் அதன் பின்னால் இருந்த நீண்ட வரலாற்று நினைவுகளைப் பற்றிய விவாதம் குறைவாக இருந்தது. அந்த இடைவெளியை நிரப்பவே இந்த நூலை எழுதினேன்.

Q

உங்கள் நூல் வாசகர்களிடம் எந்தக் கேள்வியை விட்டுச் செல்ல விரும்புகிறது?

A

தமிழ் சமூகத்தின் அரசியல் நினைவு எவ்வாறு உருவாகிறது? பண்பாட்டு வடிவங்கள் ஏன் மீண்டும் மீண்டும் அரசியல் அர்த்தங்களைப் பெறுகின்றன? என்ற கேள்விகளை வாசகர்கள் தொடர்ந்து சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

Q

உங்கள் நூலின் முக்கிய வரம்பு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

A

ஒவ்வொரு நூலும் ஒரு குறிப்பிட்ட கோணத்தை முன்னிறுத்துகிறது. நான் உருவாக்கிய விளக்கவியல் வாசிப்புடன் மாற்றுக் கருத்துகள் உரையாட வேண்டும். அந்த விவாதங்களே இந்த நூலின் பயனை அதிகரிக்கும்.

Q

ஒரு வாக்கியத்தில் ‘ஜல்லிக்கட்டு: கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்?

பேரா.டி.தருமராஜ்
பேரா.டி.தருமராஜ்
A

‘ஜல்லிக்கட்டு’ என்பது ஒரு காளையைப் பற்றிய நூல் அல்ல; தமிழ் வெகுஜனத்தின் அரசியல் நினைவு, பண்பாட்டு தன்னாட்சி மற்றும் மேலாதிக்க எதிர்ப்பின் வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் ஒரு அறிவுசார் முயற்சி.

Q

சரி, முக்கியமான அந்தக் கேள்வியையும் கேட்டு விடுகிறேன்.  உங்கள் புத்தகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார முறைகளைச் சுட்டிக் காட்டி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அறிகுறிகள் தெரிவதாக எழுதியிருக்கிறீர்கள்.  இப்பொழுது நடிகர் விஜய் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.  தமிழர்களின் அரசியல் கற்பனை வறண்டு விட்டது என்று சொல்லலாமா?

A

திரைப்பட நடிகர் முதல்வரானதை அரசியல் கற்பனையின் நிகழ்கால வடிவம் என்று சொல்ல வேண்டும்.  உலகின் பிற பகுதிகளில் இனவாதமும் மதவாதமும் ஆதிக்கம் செலுத்துகிற போது, தமிழர்களின் வேட்கைப்பொறி, கலை வடிவங்கள் என்பதில் நாம் கொஞ்சம் நிம்மதியடையலாம்.  இலக்கியம், மேடைப்பேச்சு, நாடகம், திரைப்படம், சமூக ஊடகம் என்று ஒரு நூற்றாண்டாக நம் அரசியல் கற்பனைகள் வெகுஜனக் கலை மூலமே காட்சிப்படுத்தப்படுகின்றன.  அந்த வகையில், நம் கற்பனைகள் கொடூரமாய் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

Q

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டமும் இப்படியானது தானா?

A

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. வடக்கே வெகுஜனம் திரளும் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. அங்கே சாதியும் மதமும் ஆழமாக வேரூன்றி உள்ளன. அவர்கள் இன்னமும் தங்களுக்கான பொதுத் தன்மையை கண்டு பிடிக்கவில்லை. தமிழ் போன்ற மொழியோ பண்பாட்டுத் தன்னுணர்வோ அவர்களின் வரலாற்றில் இல்லை. சொல்லப்போனால், வட இந்திய அரசியலில் கற்பனைக்கான இடம் இல்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com