தொல்லியல் ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், அருங்காட்சியகக் காப்பாட்சியர்,கீழடி முதல் கட்ட அகழாய்வில் பங்கேற்றவர், தமிழகக் கல்வெட்டு, தொல்லியல் இடங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறவர் என்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் முனைவர் வெ.வேதாசலம். மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை ஆய்வு செய்து இவர் எழுதிய 'எண்பெருங்குன்றம்' மாபெரும் ஆவணமாகத் திகழ்கிறது. தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலைக் கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதுகள், கல்வெட்டியலுக்காக வெங்கையா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் இப்போது 'தமிழ் விக்கி தூரன் விருது-2025 ' பெறவுள்ளார். இந்த நிலையில் அவருடன் ஓர் உரையாடல் .
நீங்கள் பிறந்து வளர்ந்த போது உங்கள் குடும்பச்சூழல் எப்படி இருந்தது ?
மதுரையின் மதிச்சியம் என்ற பகுதியில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது மதுரை பேருந்து நிலையத்திலிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அந்தப் பகுதி அப்போது ஒரு சிறிய கிராமம் போல் இருந்தது. அங்கே மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி எல்லாமும் இருந்தன. எங்கள் பகுதி
வைகை ஆற்றின் வடகரையில் இருந்தது. நாங்கள் வடகரையில் இருந்து நகரத்திற்கு ஆற்றைக் கடந்து தென்கரை வர வேண்டும்.
இப்போது 30 கிலோமீட்டர் தூரம் விரிந்து விட்ட மதுரையின் முக்கியமான ஓர் அங்கமாக மதிச்சியம் மாறிவிட்டது. எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம் தான். எங்களிடம் வீடும் கொஞ்சம் நிலமும் இருந்தன. இருந்தாலும் என் பெற்றோருக்கு 13 பிள்ளைகள். எனவே வாழ்க்கையில் போராட்டம் இருந்தது . எனது எட்டு சகோதரிகளும் மூத்தவர்கள். அவர்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று அப்போது ஒரு நெருக்கடியில் தான் குடும்பம் இருந்தது. இருந்தாலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க எங்கள் தந்தையும் தாயும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார்கள். அவர்களுக்காக நிலத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டுமென்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதற்காக நிலம் கூட விற்க வேண்டி இருந்தது.
உங்களது பெரிய குடும்பத்திற்குள் நீங்கள் கல்வி பெறுவது சுலபமாக இருந்ததா?
அது சிரமமாகத்தான் இருந்தது. சகோதரிகளைத் திருமணம் செய்து வைக்கும் வரை பிள்ளைகள் வளர்ந்து படித்து வேலைக்குச் செல்லும் வரை இந்தப் போராட்டம் நீடித்தது.
மூத்த சகோதரிகள் இரண்டு பேர் படிக்கவேயில்லை. சிலர் எஸ்எஸ்எல்சி வரை படித்தார்கள். அவர்களைச் சரியான இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். அப்படியே செய்தும் வைத்தார்கள். அவர்களும் இன்று உலகம் மதிப்பவர்களாக இருக்கிறார்கள். குடும்பத்துப் பிள்ளைகளில் நான்தான் கடைக்குட்டி. பிள்ளைகள் அனைவரும் குடும்பத்தின் சூழலை அறிந்தவர்களாக இருந்தார்கள். மூத்த பிள்ளைகள் இளைய பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டார்கள். குடும்பம் ஒரு அனுசரணையில் இருந்தது. எனவே சிரமத்திலும் ஒரு நிம்மதி இருந்தது. பிள்ளைகள் பெற்றோருக்கு ஒத்துழைத்து ஆதரவாக இருந்தது ஒரு சின்ன மகிழ்ச்சியாக இருந்தது.
நீங்கள் கல்வி கற்ற சூழல் பற்றி?
நான் மதுரை ஷெனாய் நகர் முனிசிபல் பள்ளியில் எஸ்எஸ்எல்சி வரை படித்தேன். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பியூசி. முதுகலைப் படிப்பை தியாகராசர் கல்லூரியில் படித்தேன். எனது கல்லூரிக் காலத்தில் பொருளாதார சிரமத்தை உணர்ந்தேன்.
கல்லூரிப் படிப்பு முடிக்க ஐந்தாண்டுகள் கடக்க வேண்டும். ஒரே நேரத்தில் பிள்ளைகள் படித்ததால் அதற்குக் கட்டணம் கட்டுவதற்காக அப்பா மிகவும் சிரமப்பட்டார். நான்தான் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவன். மற்றவர்கள் எல்லாரும் விடுதியில் தங்கிப் படித்தார்கள். ஒரு சமயம் நான் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாததால் எனது பெயர் நீக்கப்பட்டது. அந்த அளவிற்குக் குடும்பத்தின் பொருளாதார நிலைமை அப்போது இருந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பி.யூ.சி படித்த போது, கல்லூரி நடக்கும் தூரம்தான். எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. நான் நன்றாகத்தான் படிப்பேன். எப்போதும் முதல் இரண்டு இடங்களில் வருவேன். அப்படி நான் படித்தாலும் மருத்துவம் படிக்க உதவும் அளவுக்கு பியூசியில் மதிப்பெண் கிடைக்கவில்லை. குறைந்துவிட்டது.
தமிழ் முதுகலைப் படிப்பு, விரும்பித் தேர்ந்தெடுத்ததா?...
எனக்குத் தமிழில் ஆர்வம் உண்டு. எனது நண்பர்களும் எனது நலம் விரும்பிகளும் மொழி ,கலாச்சாரம், பண்பாடு என்று ஆர்வமாக இருப்பவர்கள் . எனவே நான் தமிழில் முதுகலை படித்தேன். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1974 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் படித்து முடித்தேன்.அந்தக் கல்லூரி என் வாழ்க்கையில் அமைந்த திருப்பு முனை என்று கூறலாம். அங்கே பணியாற்றிய பேராசிரியர்களிடம் அவ்வளவு கற்றுக் கொண்டேன்.
மதுரை தியாகராசர் கல்லூரி என்றதும் இப்போது பட்டிமன்றங்களின் புகழ் பெற்ற பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நினைவுக்கு வருவார். நான் தொல்லியல் துறையில் பணியாற்றும் போது அவர் பள்ளிக்கூட மாணவர். மிகவும் துடிப்பாக ஆர்வமாக இருப்பார். எங்களது களப்பயணங்களுக்கு எல்லாம் அவர் உதவி இருக்கிறார்.
தொல்லியல் துறைக்கு எப்படி வந்தீர்கள்? யார் தூண்டுதலாக இருந்தார்கள்?
எனக்கு வரலாற்றில் ஆர்வம் உண்டு. தமிழில் முதுகலைப்படிப்பு முடித்தவுடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தொல்லியல் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். அதற்கு தமிழ், இலக்கியம் , முதுகலைப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே நான் அதற்கு உடனே விண்ணப்பித்தேன். அதற்கான 8 பேரில் ஒருவராகத் தேர்வானேன்.
அப்போது தொல்லியல் துறை இயக்குநராக பேராசிரியர் டாக்டர் நாகசாமி இருந்தார். தொல்லியல் படிப்புக்காக மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணப்பட்டேன். மாதம் 120 ரூபாய் உதவித்தொகையுடன் அந்த படிப்பு ஓராண்டு காலம் கொண்டது.
மதுரையிலிருந்து சென்னை வந்த நான், சென்னையில் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தேன். அறை வாடகை மாதம் முப்பது ரூபாய்தான். சாப்பாடு ஒரு ரூபாய். அதிலும் குறிப்பாக 15 நாள் களப்பயணம் என்று வெளியூர் சென்று விடுவேன் . மிகச் சிக்கனமாக இருந்து 120 ரூபாய்க்குள் எல்லாவற்றையும் முடித்துக் கொள்வேன்.
தொல்லியல் துறையில் முதல் பணியேற்பு பற்றி?
இந்தத் தொல்லியல் படிப்பு என்பது செய்முறை சார்ந்த ஒன்றாக இருந்ததால் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது. படிப்பில் நான் முதல்தர மாணவனாக இருந்தேன். படிப்பு முடித்தவுடனேயே எனக்கு பத்து நாளில் வேலை கிடைத்தது என்றால் நம்புவீர்களா ?
அதே துறையில் இயக்குநராக இருந்த நாகசாமி படிப்பு முடித்தவுடன் ''இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டாம் இங்கேயே இரு; வேலையுடன் வீட்டுக்குப் போ'' என்று தங்க வைத்தார். அதே மாதிரி வேலையோடு வீட்டுக்குச் சென்றேன். குடும்பத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். அதற்குப் பிறகு பணிக்குப் போனதிலிருந்து மாதாமாதம் முதல் நாள் சம்பளம் வாங்கியதும் உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவேன். இப்படி 1975 அக்டோபரில் பணியேற்றிய நான் 2009 வரை பணியாற்றினேன்.
இன்று ஆய்வு என்றால் முனைவர் பட்ட ஆய்வு என்று ஒரு சம்பிரதாயத்துடன் நின்று விடுகிறது. ஆனால் நீங்கள் தொடர முடிந்தது எப்படி?
ஆய்வு என்பது ஒரு திட்டத்துடனும் ஒரு பயணத்துடனும் முடிவதில்லை. ஆயுள் முழுவதும் தொடர்வதுதான் ஆய்வு. ஆனால் ஆய்வில் ஆர்வம் உள்ளவர்கள் கூட ஒரு முனைவர் பட்டம் பெற்று விட்டவுடனோ, வேலை வாய்ப்பு வந்தவுடனோ அதை விட்டு விடுகிறார்கள். அவர்கள் ஆய்வை விடக்கூடாது.
நான் கூட 'பாண்டிய நாட்டு சமுதாயமும் பண்பாடும் ' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவன் தான். ஆனால் அத்துடன் விட்டுவிடவில்லை. நான் இந்தத் துறையை மிகவும் நேசித்ததால் அதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆய்வுகள் நமது ஆயுள் வரை தொடர்வது என்பதால் தான், நான் ஓய்வு பெற்ற பிறகும் கூட ஏராளமான பயணங்கள் செய்து வருகிறேன்; ஆய்வுகளைச் செய்து வருகிறேன்.
தொல்லியல் என்பது ஓர் அறிவுத்துறை. கடின உழைப்பையும் நேரத்தையும் கோருவது. அதில் நீங்கள் எப்படி ஈடு கொடுத்தீர்கள்?
தொல்லியல் ஆய்வுப் பணி என்பது வெளியிலிருந்து பார்க்கும் போது கவர்ச்சியாகத் தெரியலாம். ஆனால் இது மிகவும் பொறுப்பும் சிரமமும் கொண்ட பணி என்றே கூற வேண்டும்.
தொல்லியல் படிப்பின் போது ஆராய்ச்சியின் விதிமுறைகள் படிக்க வேண்டும். சமஸ்கிருதம் படிக்க வேண்டியிருந்தது. எழுத்தின் வடிவங்கள் பற்றி அறிய வேண்டியிருக்கும். இப்படி எல்லாமும் கற்றேன். ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் கற்றுக் கொண்டேன்.
தொல்லியல் ஆய்வு என்பது மேசை முன் அமர்ந்து செய்யும் வேலை அல்ல. பெரும்பாலும் களப்பணியாகவே இருக்கும். அதற்காக வெளியே செல்ல வேண்டி இருக்கும். வெளியில் செல்லும்போது பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம் போன்ற இடங்களில் தங்க வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் நான் தினமும் 40 கிலோ மீட்டர் தூரம் கூட சைக்கிளில் சென்றிருக்கிறேன். அகழ்வாராய்ச்சி என்றால் மூன்று மாதம் ஒரே இடத்தில் தங்க வேண்டியிருக்கும். நேரம் காலம் பார்க்கவே முடியாது.
விருப்பமில்லாத வேலை கசக்கும். விரும்பிச் செய்வதால் பிடித்துச் செய்ய முடிகிறது. நான் விருப்பமாகச் செய்ததால் அது வேலையாகவோ கடினமாகவோ சுமையாகவோ எனக்குத் தெரிந்ததில்லை. எனவே இப்பணியை மகிழ்ச்சியுடன்தான் தொடர்ந்து வருகிறேன்.
இதில் நேரம் பார்க்க முடியாது. உண்ணும் உணவு பார்க்க முடியாது. தங்கும் இடம் பார்க்க முடியாது. செல்லும் தூரம் பார்க்க முடியாது. எனது களப்பயணத்தில் இந்தச் சிரமங்கள் எல்லாவற்றையும் ஓர் அனுபவமாக எடுத்துக் கொண்டதால் எதுவுமே எனக்குச் சுமையாகத் தெரிந்ததில்லை. அதனால்தான் ஆர்வமாகத் தொடர்ந்து இதில் இயங்க முடிந்தது.
ஆய்வு முடிவுகள் பெரும்பாலும் பரபரப்பு ஏற்படுத்தா விட்டால் அதை யாரும் கண்டு கொள்வதில்லையே?
ஓர் உண்மையான ஆய்வாளர் பரபரப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. பரபரப்புகளைப் பரப்பக் கூடாது. உண்மை நோக்கிய பயணமாகவே அவனது பாதையும் பயணமும் இருக்க வேண்டும். வெற்று ஆரவாரங்களுக்கு அங்கே இடமில்லை . எப்போதும் உண்மை அமைதியாகத்தான் இருக்கும். ஆரவாரம் செய்யாது. அறிவார்ந்த செயல் செய்யும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் வெற்றுக் கவர்ச்சிதான் சமூகத்தில் கவனம் பெறுகிறது . எனது வழிகாட்டிகள் எல்லாரும் அப்படிச் செய்யக்கூடாது என்றும் ஆய்வில் மனச் சமநிலை இருக்க வேண்டும் என்றும் தான் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஆய்வின் போது கிடைக்கும் தரவுகள், தகவல்கள் ஒற்றைத் தரப்பு அல்ல என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்?
என்றுமே ஆய்வின் நோக்கம் உண்மையைத் தேடுவதாக இருக்க வேண்டும்; அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். பல்வேறு ஒப்பீடுகளுக்குப் பிறகு அதை முடிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆய்வுகள் ஒருதலைப் பட்சமாக, இருக்கக் கூடாது. ஆய்வாளர்களுக்கு எந்தப் பக்கச் சார்பும் இருக்கக் கூடாது. பரபரப்பு தேடும் மனநிலையில் ஆய்வுகள் செய்யக்கூடாது. அது ஒரு அறிவியல் நோக்கில் இருக்க வேண்டும். எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும்படியான தெளிவுடன் ஆய்வுகள் இருக்க வேண்டும். உதாரணமாக முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வாதாபியை அழித்து தீக்கிரையாக்கி சில காலம் அங்கே தங்கி இருந்து கல்வெட்டு வடித்தான் என்று கல்வெட்டு உள்ளது. உண்மையாகப் போய்ப் பார்த்தால் வாதாபியில் அந்த கல்வெட்டைக் காண முடியும்.
அருங்காட்சியகம் சார்ந்த படிப்பு பற்றிக் கூறுங்கள்?
அது, ஒன்றரை மாதச் சான்றிதழ் பயிற்சி. அதற்காக புதுடில்லி தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தேன். அப்பயிற்சியின் மூலம் இந்திய அளவில் வரலாறு, பண்பாடு, நினைவுச் சின்னங்கள் பற்றி ஏராளம் அறிய முடிந்தது. ஒரு அருங்காட்சியகம் அமைப்பது எப்படி ? அதற்கான பொருள்களைத் தேர்வு செய்வது எப்படி? அந்தப் பொருள்களைக் காட்சிப்படுத்துவது எப்படி? அதை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி? புராதன பொருள்களை ரசாயனம் கொண்டு பாதுகாப்பது எப்படி? போன்றவை பற்றி இந்தியாவின் துறை சார்ந்த முதல் தர பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சியில் கலந்து கொண்டிருந்த எங்களை வட இந்தியா முழுக்க நினைவுச் சின்னங்கள் உள்ள பல இடங்களுக்குப் அழைத்துச் சென்றார்கள். அது ஒரு செய்முறைப் பயிற்சியாக இருந்ததால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து சிந்து சமவெளி காலம் வரை எங்களுக்கு அங்கே வகுப்புகள் எடுத்தார்கள்.
சிந்து சமவெளியில் புதை பொருளாகக் கண்டெடுக்கப்பட்ட நாட்டிய மங்கை சிலையைக் கையில் தூக்கிப் பார்த்த போது எனக்கு பரவசமாக இருந்தது. அப்படி அப்பயிற்சி எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதுவரை தமிழ்நாடு சார்ந்து தொல்லியல் ஆய்வாளராக இருந்தேன். அதன் பிறகு என் பார்வை இந்தியப் பார்வையாக மாறியது. இந்தப் பயிற்சிக்குப் பிறகு நான் தமிழ்நாட்டு அருங்காட்சியகப் பணிகளில் செயல்பட்டேன். பள்ளிகளில், கல்லூரிகளில் கண்காட்சி நடத்துவது எப்படி தற்காலிகக் கண்காட்சி நடத்துவது எப்படி என்றெல்லாம் அங்கே கற்றுக் கொண்டதைத்தான் இங்கே வந்து செயல்படுத்தினேன். அதன்படிதான் தமிழ்நாடு முழுக்க கண்காட்சிகள் நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் அந்த ஒன்றரை மாத காலப் பயிற்சி எனக்குப் பெரிய கண் திறப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
மாணவப்பருவத்தில் 1976-இல் வெளியிட்ட 'திருவெள்ளறை ' நூல் வெளியான தருணம் எப்படி இருந்தது ?
எதையும் எழுத்தாக எழுதுவது வேறு ,அதை அச்சில் கொண்டு வந்து காண்பது வேறு வகையான அனுபவம். நான் எனது ஆய்வுக்காக எழுதிய 'திருவெள்ளறை ' என்கிற சமூக வரலாற்று ஆய்வு நூலை அச்சாகிப் பார்த்த தருணம் ஒரு சிலிர்ப்பான அனுபவம். அது நூலாகும் என்று எனக்குத் தெரியாது. அப்போது நான் மதுரையில் இருந்தேன். ஒரு மாநாட்டிற்காக கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அங்கே இயக்குநர் நாகசாமி வந்திருந்தார் .அப்போது இதைப் பாருங்கள் என்று ஒரு நூலை என்னிடம் காட்டினார். அதைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது ஆய்வுக் கட்டுரையை நூலாக அச்சில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.
டாக்டர் நாகசாமி அதற்கு முன்னுரை எழுதியிருந்தார். 'இதை எழுதியிருக்கும் வேதாசலம் எதிர்காலத்தில் தொல்லியல் ஆய்வில் சிறந்த ஆய்வாளராக வருவார், அதில் ஐயமே இல்லை' என்று எழுதி இருந்தார். அவரது சொல் பலித்து விட்டது. டாக்டர் நாகசாமி பற்றி இங்கே ஒன்றைச் செல்ல வேண்டும் அவரிடம் பணியாற்றியது ஒரு குருகுல வாசம் போல் தோன்றியது. ராணுவம் மாதிரி கட்டுப்பாடு கொண்டவர். கடுமையாக வேலை வாங்குவார். அதேநேரம் தகுதியானவர்களை உயர்த்தி விடுவதற்கு அவர் எப்போதுமே தயங்க மாட்டார்.
உங்கள் ஆய்வுகள் பெரும்பாலும் மதுரை மண்ணைச் சுற்றியே நிகழ்ந்ததன் காரணம் என்ன? சொந்தமண் என்பதாலா?
அப்படி எதுவும் கிடையாது. மதுரை, ராமநாதபுரம்,திருநெல்வேலி போன்ற பகுதியில் நான் அதிகம் பயணம் சென்றிருக்கிறேன்.
தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும் வட பகுதிகளிலும் நான் ஆய்வு செய்திருக்கிறேன். என் ஆய்வைப் பொறுத்தவரை அதுவரை ஆய்வு செய்யப்படாத ,ஆய்வு வெளிச்சம் படாத , யாரும் சென்றிடாத பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பது எனது ஆய்வுக் கொள்கையாக வைத்திருந்தேன். அப்படி வெளிச்சம் படாத பகுதியாக தமிழ்நாட்டின் தென்பகுதி இருந்தது. எனவே நான் அங்கே ஆய்வு செய்தேன் என்று கூறலாம். மற்றபடி சொந்த ஊர் என்கிற பிரதேச சார்பெல்லாம் எனக்குக் கிடையாது.
சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் உள்ள ஆதாரங்கள் சான்றுகள் போல் விரிவான வரலாறும் ஆதாரங்களும் பாண்டியர்களுக்கு இல்லாமல் இருந்தது. எனவேதான் அதைச் செய்தேன். மற்றபடி எல்லா வரலாறும் ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு முக்கியம்தான்.
தொல்லியல் இடங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
தொல்லியல் இடங்கள் என்று வரும்போது துறை சார்ந்த வகையில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளுக்கு அனுப்புவார்கள். அப்போது சென்று வந்திருக்கிறேன். இது ஒரு வகை. நானாக சுயவிருப்பத்தில் செல்வது இன்னொன்று. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள்,தொல்லியல் துறை சாராத ஆனால் இத்துறையில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பலரும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தகவலின்படி நான் புதுப்புது இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வேன்.
'எண்பெருங்குன்றம்' ஆய்வுகளின் பின்னணி என்ன ?அதன் முடிவு பற்றி?
மதுரை ஒரு காலத்தில் சமண சமய மையமாக இருந்தது. இந்தியாவில் எந்த பெருநகரத்திற்கும் இல்லாத பெருமை இது. சங்க காலம் முதல் 14ஆம் நூற்றாண்டு வரை இந்தச் செல்வாக்கு இருந்தது. இந்தியாவில் வேறெங்கும் இதைக் காண முடியாது.
மதுரையில் எட்டு சமணக் குன்றங்கள் உள்ளன. இவை மிகவும் பழமையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சி கொண்டவை. சமணர்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே மதுரையில் வந்து தங்கினார்கள். ஞானசம்பந்தர் கூட அது பற்றிப் பாடியது சான்றாக இருக்கிறது. ஞானசம்பந்தருக்கு முன்னும் பின்னும் சான்றுகள் உள்ளன. சமணர் பள்ளிகள் இருந்த புனித குன்றங்கள் பற்றி ,பாண்டிய நாட்டு சமண சமயம் பற்றி நான் ஆய்வு செய்து இருக்கிறேன். கழுகுமலை என்றொரு வழிபாட்டுத் தலத்தை பற்றி நான் எழுதி இருக்கிறேன். சமணப் பள்ளிகள் குன்றங்களில் இருந்தன என்பதன் அடிப்படையில் அந்த நூலை நான் எழுதி இருக்கிறேன். இது எனது ஆராய்ச்சியின் முடிவாக எழுதப்பட்ட நூல்.
கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி இரண்டுக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது?
கல்வெட்டுக்கும் அகழ்வாராய்ச்சிக்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் வேறு வேறு வகையிலான ஆய்வுகள் சார்ந்தவை. ஆனால் வரலாற்றில் இரண்டுக்கும் தொடர்பும் இடமும் உண்டு. கல்வெட்டு வெளிப்படையாகத் தெரியும், பூமியின் மேற்பரப்பில் உள்ளவை. ஆலயங்கள், பொது இடங்கள், ஏரிகள் கரைகள் போன்றவற்றில் கல்வெட்டுகள் காணப்படும். இவை வெளியே தெரியும்படியான ஆதாரங்களாக உள்ளவை.
அகழ்வாராய்ச்சி என்பது பூமியைத் தோண்டி உள்ளே உள்ளதை வெளிக்கொணர்வதாகும். இப்படி புதை பொருளாக கிடைத்த பானையோடுகளில் உள்ள எழுத்துக்களையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ் பிராமி எழுத்துகளையும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்க முடியும். கல்வெட்டில் உள்ள எழுத்துகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த எழுத்து வடிவம் பற்றிய அறிவு தேவை. தொல்லியல் துறையில் கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கல்வெட்டுகள் உள்ளன. சேர சோழ , பாண்டிய மன்னர்களின் அரசுகள் , விஜயநகர பேரரசு போன்றவற்றைப் பற்றி ஏராளமான கல்வெட்டுகள் கண்டுபிடிப்புகள் உள்ளன.
கல்வெட்டுகளைப் படியெடுத்த பணி, பதிப்பித்த பணி பற்றிய அனுபவங்கள்?
கல்வெட்டுகளைச் சுத்தப்படுத்த வேண்டும் அதுவும் சேதம் இல்லாமல் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கான காகிதங்களில் மையொற்றி அதைப் படியெடுப்பது பெரிய வேலை ஆகும் . பொறுமையும் நிதானமும் சகிப்புத்தன்மையும் நேரம் காலம் பார்க்காத மனமும் தேவை. இப்படி மதுரை அழகர் கோவில் கல்வெட்டுகளை படி எடுப்பதற்கு நான் ஒன்றரை மாதம் செலவிட்டேன். இந்தக் கல்வெட்டு படி எடுக்கும்போது எனக்கு அப்படி ஒரு வெறியாக இருந்தது.இப்படி நான் மதுரை மாவட்ட கல்வெட்டுகள், விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள் போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து படியெடுத்து நூலாக்கியிருக்கிறேன்.
இந்த ஆய்வுப் பணிகளில் நீங்கள் சந்தித்த தடைகள், சவால்கள் என்னென்ன?
ஆய்வு என்று வெளியே வந்து விட்டாலே தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கும். அதற்கெல்லாம் மனதைத் தயார் படுத்திக் கொண்டுதான் ஆய்வுக்குப் புறப்பட வேண்டும். முதலில் அந்த ஊர் சின்னஞ்சிறிய கிராமம் என்றால் கூட நம்மை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள். அத்தனை சுலபமாக நம்மை ஏற்க மாட்டார்கள். சந்தேகப் பார்வையோடு தான் நம்மைப் பார்ப்பார்கள். கிராம மக்கள் நம்பிக்கை நிறைய உள்ளவர்கள்,சில தவறான நம்பிக்கைகளும் அவர்களிடம் உண்டு. சிலர் பிள்ளை பிடிக்க வருபவர்களைப் போல் பார்ப்பார்கள், சிலர் திருடன் என்று கூட பார்ப்பார்கள். ஏன் இவர்களுக்கு இந்த வேலை? இதை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் இந்த ஊருக்கு என்ன லாபம் ?என்று நினைப்பார்கள், இது குறித்துக் கேள்விகள் கேட்கவும் செய்வார்கள். மலைப்பகுதிகளுக்குச் சென்றால் தங்களைக் குற்றவாளிகள் என்று பிடித்துக் கொண்டு போய்விடும் 'ரேஞ்சர்கள்' என்று நினைத்துக் கொண்டு பயந்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
ஒருமுறை எனது மூத்த அலுவலர்கள் ஆய்வுக்காகத் தங்கள் உதவியாளர்களை அனுப்பிய போது அவர்கள் மையொற்றுத்தாள் கொண்டு அந்தச் சிலைகளின் மீது தட்டித் தட்டி ஒற்றிப்படியெடுத்தபோது, அந்தச் சிலைகளை அவர்கள் தாக்குவதாக எண்ணி ஊர் மக்கள் அவர்களைக் கட்டி வைத்து விட்டார்கள். அதிகாரிகள் சென்று மீட்க வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு.
சில இடங்களில் கல்வெட்டுகளைப் பயபக்தியுடன் தெய்வமாக வணங்குவார்கள். அப்போது அதற்குரிய மரியாதையோடு சென்று அணுக வேண்டும். அப்போதெல்லாம் செருப்பு போட்டுக் கொண்டு செல்லக்கூடாது. நாம் துறை சார்ந்த அதிகாரிகள் போல் செல்லக்கூடாது. அதிகார மனநிலையை கழற்றி வைத்துவிட்டு, அன்போடு அணுகி நண்பர்கள் போல் பேச வேண்டும், பழக வேண்டும். அவர்களுடன் இணக்கமாக உரையாடி உறவாடி நல்ல புரிதலையும் நல்ல நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே அந்த ஆய்வுப் பயணத்தின் முதல் படியாக இருக்கும். இப்படி நாங்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் உள்ள நடுநற்களைப் பார்க்கச் சென்றோம். அவை அங்கே வழிபாட்டுக்குரியவையாக இருந்தன. முறைப்படி அணுகி அந்த 1500 ஆண்டுகால நடு கற்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்தோம்.
சமணர் கழுவேற்றம் பற்றி எதிரெதிர் என இருதரப்பாரும் பேசுவதும் மறுப்பதும் நடக்கிறது. உங்கள் ஆய்வுக் குறிப்புகள் சொல்வதென்ன?
சமணர் கழுவேற்றம் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால் அதற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லை என்பதை எனது நூலில் நான் எழுதி இருக்கிறேன்.ஒரு காலத்தில் சமணம், சைவம் சார்ந்து பகையுணர்வும் சர்ச்சைகளும் பரபரப்புகளும் இருந்தன. ஆனால் கழுவேற்றம் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை.16ஆம் நூற்றாண்டு முதல் இது பற்றிப் பேசப்படுகிறது. நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் இதைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஞானசம்பந்தர் எழுதியதில்லை. சமகாலச் சான்றுகள் எதுவும் இல்லை. ஏழாம் நூற்றாண்டுகளில் சமணம் , சைவம் சார்ந்த மோதல்கள் நடந்திருக்கலாம். இது சார்ந்த வாதங்களில் ஈடுபட்டு ஞானசம்பந்தர் அதில் வென்றிருக்கலாம். இதை சைவ சமயம் சார்ந்த ஒரு வளர்ச்சியாக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எட்டாம் நூற்றாண்டில் புதிய சமணப் பள்ளிகள் தோன்றியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சமணப் பள்ளிகள் இருந்ததாகச் சான்றுகள் உள்ளன. எட்டாம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை இந்தச் சான்றுகள் உள்ளன. ஞானசம்பந்தருக்கு முன்பும் பின்பும் சமணம் வீழ்ந்ததாகக் கூற முடியாது. இது சார்ந்த பரப்புரைகள், தங்கள் சமயங்களைப் பரப்பிக் கொள்வதற்காக செய்யப்பட்ட உத்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்பது தான் உண்மை.
'ஆவணம்' இதழ் ஆசிரியர் பணி அனுபவம் பற்றி ?
தொல்லியல் துறை ஆய்வாளர்களால் 'தொல்லியல் கழகம்' என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குப் பேராசிரியர்கள் சுப்பராயலு, நாச்சிமுத்து, டாக்டர் இரா.கலைக்கோவன், ராஜகோபால் போன்றவர்கள் முன்னெடுப்பாளர்களாக இருந்தனர். தொல்லியல் துறை சார்ந்த வெளிவராத ஆவணங்களைப் பதிப்பிப்பது, புதிய ஆவணங்களை வெளியிடுவது போன்ற பதிவுப் பணிகளை 'ஆவணம் ' இதழ் செய்து வந்தது. நான் அதில் ஆறாண்டுகள் ஆசிரியராக இருந்தேன். ஆய்வாளர்கள் மத்தியில் அவர்களுக்கு இந்த இதழ் பெரும் பயனுள்ளதாக இருந்தது.
தமிழ் நாட்டு 2000 ஆண்டு வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம் எது? எதைப் பொற்காலம் எனலாம்?
எனக்குப் பொற்காலம் என்பதிலோ இருண்ட காலம் என்பதிலோ நம்பிக்கை இல்லை. ஒரு ஆய்வாளனுக்கு அந்தப் பேதம் பார்க்கும் வார்த்தை வரக்கூடாது. எதையும் மிகைப்படுத்திக் கூறுவதோ, பெருமைப்படுத்திக் கூறுவதோ, சிறுமைப்படுத்திக் கூறுவதோ அவனுக்கு இருக்கக்கூடாது. அவனுக்கு எல்லாக் காலமும் முக்கியமான காலம்தான். எல்லா அரசர்களின் வரலாறுகளையும் முக்கியமாக நினைப்பதுதான் ஓர் ஆய்வாளனுக்கு அழகாகும். எந்தக் கால வரலாற்றையும் பெருமையாகக் கூறுவதும் தாழ்வாக கூறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இதில் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது. 'களப்பிரர் காலம் இருண்ட காலம் 'என்று ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் அது தவறு என்பதற்கு ஆதரவாக ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. அக்காலத்தில் சமண , பௌத்த ஆதரவு இருந்ததால் அப்படிப் பேசப்படுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் சைவம் மறுமலர்ச்சி அடைந்தது அந்தக் களப்பிரர் காலத்தில் தான். அந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்டன. ஏராளமான அற இலக்கியங்கள் தோன்றியதும் அந்தக் காலத்தில் தான்.
வட இந்தியாவின் குப்தர்களையும் குஷாணர்களையும் நாம் படிக்கிறோம். அவர்கள் தமிழ்ப் பேரரசர்களான சேர, சோழ, பாண்டியர்களைப் படிக்கிறார்களா?
இந்தப் பார்வை இப்போது மாறி இருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் உபிந்தர் சிங் 'A History of Ancient and Early Medieval India' என்று ஒரு வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதினார் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. மேலும் சில வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களின்படியும் வட இந்தியர்களின் வரலாற்றுப் பார்வை மாறி இருக்கிறது. தென்னிந்திய வரலாறு பற்றியும் பெருமைகள் பற்றியும் அறிவதற்கு அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் தென்னிந்திய வரலாறு முக்கியம் என்று உணர்ந்து இருக்கிறார்கள். நமது தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் இந்திய அளவில் ஏற்படுத்திய விழிப்புணர்வும் தாக்கமும் கூட இந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று கூறலாம்.
அமெரிக்காவில்தான் அதிக அருங்காட்சியகங்கள் உள்ளன. அதன் பின்னணி என்ன?
அமெரிக்காவுக்கு 400 - 500 ஆண்டு கால வரலாறு தான் உள்ளது. ஆனால் உலக வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஏராளமான அருங்காட்சியங்கள் உள்ளன. அவர்கள் தொன்மையான பொருள்களைப் பாதுகாப்பதிலும் காட்சிப்படுத்துவதிலும் அவர்களுக்குப் பெரிய ஆர்வம் உள்ளது. இதே மனநிலையைத்தான் லண்டனிலும் நான் பார்த்தேன். உலகில் உள்ள எல்லா புராதன பொருள்களும் அங்கே உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன. அவர்கள் தங்கள் நாட்டு வேற்று நாடு என்று பார்க்காமல் உலகில் தொன்மையானவற்றைப் பாதுகாப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். இந்த உணர்வு இந்தியாவில் குறைவு என்பதுதான் கசப்பான உண்மை.
வெளிநாட்டு வரலாற்று மையங்களுக்குப் பயணம் செய்த அனுபவம் உணர்த்துவது என்ன?
கிரீஸில் இன்று கிறிஸ்தவர்கள் தான் இருக்கிறார்கள். அங்கே முற்காலத்தில் இருந்தவர்கள் இன்று இல்லை. ஆனால் இந்தியாவில் பழைய நாகரிகத்தின் -மரபின் தொடர்ச்சியை இன்றும் காணலாம். சங்க காலத்தின் தொடர்ச்சியை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகிறது. சங்க காலத்தில் பேசிய தமிழ் மொழியும் அதன் சொற்களும் இன்றும் இங்கே பேசப்படுகின்றன.
இன்று உலகமயமாக்கல் பற்றிப் பேசுகிறோம். ஆனால் அன்றும்
உலகம் ஒரு வலைப் பின்னல் போல் இருந்திருக்கிறது என்பதை பல்வேறு நாடுகளுக்குச் சென்ற போது அறிய முடிகிறது. முசிறியில் இருக்கும் ஒரு வியாபாரி பல்வேறு நில எல்லைகளைக் கடந்து, கடல், பாலைவனம் நைல் நதி என்று பல்வேறு பருவநிலை கொண்ட புவியியல் இடங்களைக் கடந்த அலெக்சாண்ட்ரியா சென்று ஒரு பொருளை சேர்க்க வேண்டி இருந்தது என்று வியன்னா அருங்காட்சியத்தில் ஒரு ஓலையில் குறிப்பு இருந்தது. அதை பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. நானும்
அலெக்சாண்ட்ரியா சென்றிருக்கிறேன். மும்பை துபாய், கெய்ரோ என விமானத்தில் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் அலெக்சாண்ட்ரியா சென்றேன். இப்போது உள்ள வசதியில் ஒரே நாளில் சென்று விட்டேன். அந்தக் காலத்தில் இதனைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் அந்த வியாபாரம் நடந்திருக்கிறது. அந்தக் குறிப்பைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
இன்னும் மேலை நாடுகளில் உள்ள மிகத் தொன்மையான கட்டடங்களையும் ஓவியங்களையும் பார்க்கும்போது அந்த அற்புத அழகை பார்க்கும்போது நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். உலக நாடுகளை சுற்றிய பிறகுதான் ஒப்பீடு பற்றி எனக்கு ஒரு புரிதல் கிடைத்தது. முதலில் தமிழ்நாட்டு அளவில் பார்க்க வேண்டும்;பிறகு இந்திய அளவில் பார்க்க வேண்டும்;அதன் பின்பு உலக அளவில் பார்க்க வேண்டும் என்கிற பார்வை எனக்கு விரிவடைந்தது.
தமிழ் பிராமி, வட்டெழுத்து தமிழ் கிரந்த எழுத்துகளை ஆராய்ந்த முடிவில் தெரிவது என்ன?
தமிழ் எழுத்துக்களை மூன்று நிலையாக வேறுபடுத்தலாம். பிராமிஎழுத்து, வட்டு எழுத்து, இன்று நாம் எழுதுவது என்று மூன்று நிலைகளைப் பார்க்கிறோம். சமஸ்கிருதத்தை எடுத்துக் கொண்டால் அதன் எழுத்துகளை கிரந்த எழுத்து முறையில் எழுதுகிறோம். சமஸ்கிருதத்தை நாகரி எழுத்து முறையில் எழுதப்பட்டதை ராஜராஜன் காலத்து காசுகளும், ராஜசிம்மன் காலத்து காசுகளும் கூறுகின்றன.
அனைத்து வகைமை எழுத்துகள் குறித்த அறிவும் ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளனுக்குத் தேவை. அவை காலத்தை உணர்த்துவதற்கும், யார் யார் காலத்தில் எப்படிப்பட்ட தமிழ் வரி வடிவம் இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் நம் மொழி வடிவம் வளர்ந்துள்ள நிலையை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. ராஜராஜன் காலத்து தமிழ் வேறு ,நாயக்கர் காலத்து தன்மை வேறு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அந்த வரி வடிவத்தின் தெளிவு இருந்தால் தான் கல்வெட்டுகள் உள்ள வாசகங்களைப் படிக்க முடியும்; முடிவுகளைக் கண்டெடுக்க முடியும்.
இன்று 'வாட்சப்' யுகத்தில் தொன்மை என்று பரப்பப்படும் போலிச் செய்திகளை, தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வது? எப்படி வடிகட்டுவது?
இன்றைய தகவல் தொடர்பு வளர்ச்சி அடைந்த காலத்தில் தகவல்களை எளிதில் பரப்ப முடியும் என்பது ஒரு சாதகமான அம்சம்தான். ஆனால் போலித் தகவல்கள் நிறைய வருகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். சில உண்மையான தகவல்களையும் பரப்புகிறார்கள், அது பாராட்டப்பட வேண்டியதுதான். அப்படிப்பட்ட பரப்புதல்கள் நாட்டுக்குத் தேவைதான். ஆனால் உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் பரப்புவது ஆபத்தானது .அந்தப் போக்கு தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். எந்தச் செய்தி என்றாலும் அதன் உண்மைத் தன்மையை அறிந்து பகிர வேண்டும்; பரப்ப வேண்டும். தொன்மை பெருமை என்கிற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.
உங்கள் மொழி சார்ந்த ஆய்வுகள்,இன்றைய இரு மொழிக் கொள்கைக்கு எந்த அளவிற்கு ஊக்கம் தருகிறது?
தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாக அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்தன. அப்படித்தான் செப்பேடுகள் கல்வெட்டுகள் போன்றவை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டன. தாய்மொழி தமிழுடன் ஒரு அறிவு சார்ந்த மொழியாக அப்போது சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர். அதனால் இரண்டு மொழிகளில் எழுதப்பட்டது -ஆங்கிலேயர் வரவுக்குப் பிறகு அந்த அறிவு சார்ந்த மொழியாக, உலகத் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தினை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆவணங்கள் செய்யப்படுகின்றன. என்றுமே தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி இருந்தது இல்லை. தாய் மொழி தவிர அறிவு சார்ந்த மொழியாக இன்னொன்றாக ஒரே ஒரு மொழியை மட்டுமே ஏற்றுக் கொண்டு வந்துள்ளனர்.
சில கல்வெட்டுகள் தெலுங்கு கன்னடத்தில் இருந்தாலும் கூட அவற்றை இரண்டாவது மொழியாக ஏற்றுக் கொண்டதில்லை. அவை இரண்டாவது மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாமல்தான் இருந்துள்ளன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பும் தாக்குப் பிடித்து தமிழ் மொழி நிற்பதன் காரணியாக எதைக் கூறுவீர்கள்?
கால மாற்றங்களை ஏற்றுக் கொண்டு புதுமைகளை உள்வாங்கிக் கொண்டு பழமையைப் போற்றி வளர்வதுதான் தமிழ்மொழியின் சிறப்பாகும். எல்லாவிதமான காலத்தின் ரசவாதங்களையும் உள்வாங்கி, உட்கிரகித்து, சுயத்தன்மையை இழக்காமல் கடந்து நிற்பது அதன் சிறப்பு. சங்ககாலப் பின்புலம் இருந்தாலும் இப்போது நவீனகால இலக்கியம் சார்ந்த பெரிய மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு வளர்வது அதன் தனித்த இயல்பாக இருக்கிறது எனலாம்.
நீங்கள் குறிப்பாக பாண்டியநாடு குறித்தும் சமணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளக் காரணம் என்ன? சோழர் அளவுக்குப் பாண்டியர் பற்றி எழுதப்படாதது ஏன் ?
ஒரு காலத்தில் பாண்டிய நாட்டில் சமணம் தழைத்தோங்கி யிருந்தது. இதனை அறிந்த நான் அதைப்பற்றிய ஆய்வு செய்ய இறங்கினேன். அதன் விளைவாகவே பாண்டிய நாட்டில் சமண சமயம், எண் பெருங்குன்றம், கழுகுமலை சமணப்பள்ளி போன்ற நூல்களை நீண்ட ஆய்வுகளுக்குப் பின் எழுதினேன்.
சோழர்கள் பல்லவர்களுடன் ஒப்பிடும் போது பாண்டியர்கள் பற்றி அதிகம் எழுதப்படாத நிலையைக் கண்டேன். பாண்டியநாடு இருக்கும் நிலப்பகுதி ஒரு காரணமாக இருக்கலாம். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்றவற்றில் தாமிரபரணி பாயும் பகுதி தவிர மற்றவை வறண்ட பகுதிகளாக உள்ளவை. சோழர், பல்லவர் காலத்திற்குச் சரியான சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல் பாண்டியர்கள் ஒரே பெயரில் பல அரசர்கள் ஆட்சி செய்தார்கள்.
உதாரணமாக பராக்கிரம பாண்டியன், ஸ்ரீ வல்லப பாண்டியன், சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன், விக்ரம பாண்டியன் என இந்த ஆறு பெயர்களே மீண்டும் மீண்டும் இரண்டாவது, மூன்றாவது என்று மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இந்த பெயர்க் குழப்பம் கூட பாண்டியர்கள் பற்றிப் பெரிய ஆய்வுகள் நடைபெறத் தடையாக அமைந்து பின்னடைவாக இருந்திருக்கலாம்.
இலங்கை அரசின் இந்து சமய கலாச்சார துறையில் 8 ஆண்டுகள் கல்வெட்டு சார்ந்த பயிற்சி அளித்த அனுபவம் எப்படி இருந்தது ?
இலங்கை அரசின் இந்து சமய கலாச்சார திணைக்களத்தின் சார்பில் 2000இல் அங்கே ஒரு மாநாட்டுக்குச் சென்று இருந்தேன் . யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வரலாற்று அறிவு ஊட்டப்பட வேண்டும், இதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தொல்லியல் சார்ந்த இலங்கைப் பேராசிரியர் பத்மநாபன் என்னிடம் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். அவர்களின் அழைப்பின் பேரில் அதற்காக பயிற்சி வகுப்பு நடத்துவது என்று திட்டமிட்டோம்.
யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு, என்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், வரலாறு, சமஸ்கிருத மாணவர்கள் என்றும் 75 பேருக்குப் பயிற்சி கொடுத்தோம். இந்தப் பயிற்சி 15 நாட்கள் கொழும்பில் நடந்தது. காலை முதல் மாலை வரை பயிற்சி தொடரும். தொல்லியல் சார்ந்து அடிப்படைப் புரிதல் அளிக்கும்படி அந்தப் பயிற்சி இருந்தது. இப்படி எட்டு ஆண்டுகள் ஆண்டுதோறும் இந்தப் பயிற்சியை அளித்து வந்தேன். அதில் பலரும் பிஎச்டி மாணவர்களாகி ஆய்வில் பெரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததாக அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
25 நூல்கள் , நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மூலம் நீங்கள் அடைந்த இலக்கு எது ?
எனது நூல்கள் ஆய்வுக் கட்டுரைகள் சார்ந்து எனக்கு ஒரு சிறு மனநிறைவு உள்ளது. இப்போது அவை மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல சென்று வருகின்றன என்கிற மகிழ்ச்சி உள்ளது. அதே நேரம் விரிவாகப் படிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை உள்ளது. முதலில் இது பற்றி யாரும் கண்டு கொள்ளாமலே இருந்தார்கள். மெல்ல மெல்ல சில நூறு பேர் கூட்டமாகச் சேர்ந்து இப்போது பல்வேறு இடங்களில் அந்த நூல்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன. நூலைப் படித்துவிட்டு , அட அதை எழுதியது நீங்களா? என்கிறார்கள். ஆனால் பரவலாக அறியப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனது ஆராய்ச்சி முடிவுகள் அறிவியல் சார்ந்தவை; நிதானமாக இருப்பவை; சம நிலையில் நிற்பவை. அன்றாடப் பரபரப்புக்கும் கவர்ச்சிக்கும் அங்கு இடமில்லை. இப்போது பரபரப்புகளை விரும்பும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. மயிலை சீனி வேங்கடசாமி, ‘சிறந்த ஆய்வாளர் பாடுபட்டுத் தேடி உழைத்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் சிறந்த ஆய்வுகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் தமிழ்நாட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அவர்களுக்குரிய இடம் தமிழ்நாடு இல்லை’ என்று ஆதங்கப்பட்டுள்ளார். இந்த நிலை இப்போது மாறிருக்கிறது . ஆய்வாளர் பேசப்படுவதற்கு அவருக்குப் பின்புலம் இருக்க வேண்டும் என்கிற நிலை உள்ளது. ஆனால் அவர்களுக்கு இப்போது வெளிச்சம் கிடைக்கலாம். எதிர்காலம் அவர்களைப் பற்றிப் பேசாது. காலம் கடந்து அவர்கள் ஆய்வுகள் நிற்காது. எதிர்காலத்தில் உண்மையான ஆய்வாளர்கள் தேடப்படுவார்கள்; பார்க்கப்படுவார்கள்.
தொல்லியல் ஆய்வுகள் என்பது அறிவியல் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் .அதில் நம்பிக்கையைச் சேர்ப்பது சரியா?
தகவல்கள் தரவுகள் என்பதை நம்பிக்கைகள் , பேச்சு மொழிகள், கதைகள், செவி வழிச் செய்திகள் என்று ஒரு பக்கம் இருக்கும். இன்னொரு பக்கம் அறிவியல் சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுகள் செப்பேடுகள் என்று இருக்கும். வரலாற்று ஆய்வு என்பது அறிவியல் பூர்வமாகத்தான் இருக்க வேண்டும். அதே நேரம் நம்பிக்கை சார்ந்து மக்களிடம் பரவி இருக்கும் புராணக் கதைகள்,பல்வேறு கதைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் புறந்தள்ளி விடக்கூடாது. இரண்டையும் ஆராய்ந்து எது எப்படித் திரிக்கப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது போன்றவற்றை அறிந்து பார்க்கும் பார்வை நமக்கு வேண்டும். அவற்றில் உள்ள அடிப்படை உண்மைகளை எடுத்துக் கொள்ளலாம்.வரலாற்று ஆய்வில் நம்பிக்கைகளுக்கு இடமில்லை. புராணங்கள் நாட்டுப்புற பாடல்கள் போன்றவற்றைப் புறந்தள்ளவும் முடியாது. அதன் வழியாக சொல்லப்படும் அதில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன என்று வடிகட்டி எடுத்துக் கொண்டு ஆய்வுகளுக்கு வலுவூட்ட உதவுமானால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில் பாதையில் இருக்கும் இரண்டு தண்டவாளங்களை போல் இரண்டும் வெவ்வேறு பார்வை கொண்டதாக இருக்கலாம். இரண்டையும் இணைக்கக் கூடாது. அவை வெவ்வேறு வகை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனைமலை சார்ந்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. யாகம் செய்ததாகவும் உண்டு. ஆனால் யானை போன்ற தோற்றம் உள்ளதால் தான் அது யானைமலை என்று அழைக்கப்படுவதாக சம்பந்தர் பாடலிலேயே கூறப்பட்டுள்ளது. இப்படி அடிப்படை ஆதாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
வரலாற்றை அது சுமந்த பெரும் பண்பாட்டை, கடந்து போனவை , பழையவை என்று புறந்தள்ளுகிற குணம் ஆபத்தான போக்கு அல்லவா?
இது எப்போதும் இருந்து வருவது தான். நம்மிடையே வரலாற்று ஆர்வம் எந்த அளவிற்கு உள்ளது? மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஏன் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்? இதனால் என்ன பயன்? யாருக்கு என்ன லாபம் ? என்று பார்க்கிற பார்வை சராசரியான மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதிலிருந்து நாம் மெல்ல மெல்ல மாறி வர வேண்டும். உலகின் வரலாற்றைப் புரிந்து கொண்டவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். கடந்த கால வரலாறு எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையானது. நிகழ்கால வரலாறு எதிர்காலம் பற்றிய திட்டமிடல்களுக்கும் அவசியமானது. இதற்குப் பதிலாகச் சொல்ல வேண்டுமென்றால் கண்ணதாசன் எழுதிய ஒரு வரி தான் நினைவுக்கு வருகிறது. ’வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி’ . அப்படி வாழ்ந்தவர்களைப் பாடமாகக் கருதுவது தான் வரலாறு.
நாம் வரலாற்றைக்கற்றுக் கொள்ள வேண்டும். நமது வரலாறு நமது பெருமை என்பதனை உணர வேண்டும். அதற்காகப் பழம் பெருமை மட்டுமே பேசிக்கொண்டும் இருக்கக்கூடாது -வரலாற்றின் தொடர்ச்சியை அறிந்து கொண்டு அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.
மாதம் ஒரு மலையைச் சுற்றிக் காட்டும் திட்டம் எப்படி வந்தது?
மாதம் ஒன்று என்று கணக்கில்லை, எப்போது நினைக்கிறோமோ அப்போது செல்வது என்பதுதான் திட்டம். பள்ளி, கல்லூரிகளில் தொல்லியல் சார்ந்த, வரலாறு சார்ந்த முன் அறிதல். விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று பயிற்சிகளைக் கொடுக்கிறோம். இதன்படி ஆயிரக்கணக்கான
மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்திருக்கிறேன். தமிழ்நாடு, நெல்லை போன்ற பல்கலைக்கழக வகுப்பு மாணவர்களுக்கும் இதைக் குறுகிய காலத்தில் கொடுத்திருக்கிறோம். நான் என் ஓய்வுக்குப் பிறகு 'தான் அறக்கட்டளை ' மூலம் இந்தப் பயிற்சிப்பணியைச் செய்து வருகிறேன்.
அது என்ன பாரம்பரிய நடைப் பயணம்?
ஊரகப் பகுதி மக்களிடமும் இந்தப் பயிற்சியைக் கொடுத்து வருகிறோம். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமம் கிராமமாகப் போய் மக்களைச் சந்தித்து ஒரு வாரம் தொல்லியல் சார்ந்து பேசி வருகிறேன். அப்போது மேடை எதுவும்இல்லாமல்,ஒலி பெருக்கி எதுவும் இல்லாமல், விழா அலங்காரமும் இல்லாமல் 100 பேரை ஒன்று கூட வைத்து பேசுகிறோம். அவ்வப்போது ஆங்காங்கே
கிடைக்கும் குறைந்தபட்ச வசதியை வைத்துக் கொண்டு பெரிய மரத்தடி, மைதானம், ஆலயம், போன்ற பொது இடங்களில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 300 கூட்டம் நடத்தி இருக்கிறோம். இதற்குப் 'பாரம்பரிய நடைப் பயணம்' என்று பெயர் . ஓர் ஆய்வாளராக பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் பேசுவது ஒருமுறை. மக்களிடம் பேசுவது வேறு விதமாக இருக்கும் .அவர்களோடு சரி சமமாக இரண்டறக் கலந்து இதைச் செய்து வருகிறோம். அவர்களிடம் அவர்களில் ஒருவராக நின்று பேசுகிறோம்.
இந்தக் கூட்டத்தில் வரலாறு பற்றிய அறிமுக புரிதல் அளிக்கிறோம். தொல்லியல் என்றால் என்ன என்று கூறுகிறோம். தொல்லியல் சான்றுகள் பற்றிய விளக்கங்கள் அளிக்கிறோம். எல்லா ஊருக்கும் உள்ள பெருமையையும் வரலாற்று ஆதாரத்தையும் எப்படிப் புரிந்து கொள்வது என்பது பற்றிய பயிற்சியை அளிக்கிறோம். அவர்களுடன் உரிய உரையாடல்கள் மூலம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் இதைச் சார்ந்து கேள்விகள் கேட்கிறார்கள். தங்கள் ஊருக்கு எதனால் இந்தப் பெயர் உள்ளது? என்னென்ன பெருமைகள் உள்ளன? போன்றவற்றையெல்லாம் நாங்கள் செல்லும்போது கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.குறிப்பாகத் தங்கள் பாரம்பரியத்தை அறியக்கூடிய ஒரு பயணம் தான் இந்த பாரம்பரிய நடைப் பயணம்.
இதைச் செய்வதற்கும் எல்லா இடங்களிலும் சுலபமாக அனுமதியும் ஏற்பும் கிடைப்பதில்லை. பல பிரச்சினைகள், தடைகள், இடையூறுகள் என்று கடந்துதான் இதைச் செய்து வருகிறோம்.
பணி ஓய்வு பெற்ற பிறகும் ஆய்வுகளைத் தொடர்வது எப்படி? அவ்வகையில் சிந்து சமவெளி நாகரிக நேரடி தேடல் அனுபவங்கள் எப்படி?
சிந்து சமவெளி நாகரிகம் தொல்லியல் சான்றுகள் அதிகம் கிடைக்கப்பட்ட ஒரு நாகரிகமாகும். சிந்து சமவெளி என்றதுமே மொகஞ்சதாரோ - ஹரப்பா தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அவற்றை இன்று பார்ப்பதில் சிரமம் உள்ளது ஏனென்றால் அவை பாகிஸ்தான் பகுதியில் உள்ளன.
இந்தியாவிலேயே சிறந்த தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்கள் இருக்கின்றன. நேரடியாகப் பார்த்தால் தான் தெரியும் ராக்கிக்கடி என்ற இடத்தில் ஏழு மேடுகள் உள்ளன. மூன்று முறை அங்கே நான் சென்று இருக்கிறேன் . கி.மு 2500 இல் மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. ராஜஸ்தானில் உள்ள காளி பங்கன் என்ற இடத்திற்கு சென்று வந்திருக்கிறேன். குஜராத்தில் உள்ள லோத்தால், நகர அமைப்பு இங்கு வாழ்ந்த மக்களின் நவீனமான வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றன. அங்குள்ள குடியிருப்பு வசதிகளைப் பார்க்கும் போது இந்தக் காலத்தில் உள்ள மூடிய குழாய்கள் கொண்ட சாக்கடை வசதி வரை பல்வேறு வசதிகள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது -ஒரு நவீன நகரத்திற்குரிய கட்டுமானத்துடன் இருந்தது கண்டு வியப்படைந்தேன்.
கோட்டை சார்ந்த நகரம் என்றால், அரச மரபினர், அரசு நிர்வாக அலுவலர்கள் , மேல் தட்டு, இடைத்தட்டு,கீழ்த்தட்டு மக்கள் என வெவ்வேறு சமூகத்தினர் வாழ்ந்த பகுதிகள் அங்கே காணப்படுகின்றன. சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களைப் பார்ப்பதற்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போக வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட சான்றுகளை இந்தியாவில் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் என இங்குள்ள நான்கு மாநிலங்களிலேயே பார்க்கலாம். இங்கெல்லாம் நான் அடிக்கடி செல்வது உண்டு. ஒரு பத்து நாள் பயணத்திட்டம் போட்டு சென்று வருவேன். இவை அனைத்துக்கும் நான் பணிநிறைவு பெற்ற பிறகுதான் சென்றேன்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் நான் சென்று இருக்கிறேன். என்னுள் இருக்கும் வடியாத ஆர்வமும் ஈடுபாடும் தான் என்னை அங்கெல்லாம் அழைத்துச் செல்கின்றன என்று சொல்வேன்.
உங்கள் பணிகளுக்கான பாராட்டு, விருதுகள், அங்கீகாரங்கள் பற்றி?
பராக்கிரம பாண்டியபுரம், பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு என எனது இரண்டு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு கிடைத்திருக்கிறது. தமிழ் ஹெரிடேஜ் டிரஸ்ட் வழங்கும் கல்வெட்டு ஆய்வாளருக்கான புகழ்பெற்ற விருதான ’வி.வெங்கையா விருது’, ’பிரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ் விருது’ எனப் பெற்றுள்ளேன். அடுத்து தமிழ் விக்கியின் ’தூரன் விருது’ கிடைத்து உள்ளது. நான் எந்த அங்கீகாரத்தையும் பலனையும் எதிர்பார்த்து நான் என் பணிகளைச் செய்வதில்லை. ஏனென்றால் நான் ஓய்வு பெற்ற பிறகு கூட நிறைய களப்பயணம் செய்திருக்கிறேன். இதனால் எனக்கு எந்தப் பதவி உயர்வும் கிடைக்காது என்று தெரிந்து தான் செய்கிறேன்.
வரலாற்று விழிப்புணர்வோ பெருமிதமோ இல்லாத மக்களின் தேசத்தை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம். என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருக்கிறாரே?
அவர் கூறியிருப்பது சரிதான். ஒரு நாட்டு மக்களுக்கு தங்கள் நாட்டைப் பற்றி, வரலாற்றைப் பற்றி அதன் சிறப்புகளைப் பற்றி தெரிந்திருந்தால்தான் அதன் மீது ஒரு பெருமித உணர்வு ஏற்படும். தங்களது நாட்டின் மீது பற்று ஏற்படும். தங்களது நாடு என்று வரும் போது நாடு, இனம்,மொழி, பண்பாட்டை விட்டுக் கொடுக்க கூடாது என்ற எண்ணம் வரும் . அது ஒரு பலமாக அமைந்து அவர்களைக் காப்பாற்றும்.
வியாபார மதிப்போ விளம்பர லாபமோ பொருளாதார அனுகூலமோ எதுவும் கிடைக்காத பெரிதும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகின்ற இந்தப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய எது உங்களை உந்தித் தள்ளுகிறது?
நான் முன்பே கூறிய படி நான் எந்த பலாபலனையும் எதிர்ப்பலனையும் நினைத்து இதைச் செய்வதில்லை. நாம் வாழ்கிற சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும், ஏதாவது நல்லபடியாக உருப்படியாகச் செய்ய வேண்டும் என்கிற உணர்வு தான் என்னைச் செய்ய வைக்கிறது. அந்தச் சமுதாய பொறுப்பின் காரணமாகவே இதைச் செய்கிறேன். இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் என்னை இதையெல்லாம் செய்வதற்கு உந்துசக்தியாக இருக்கிறது.
நான் செய்த பணிகளுக்கு உரிய அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லைதான். ஆனால் அதை நினைத்து வருத்தமில்லை. அதை விட என் பயணத்தை தொடர்ந்து செல்வது மேல் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதன் மூலம் எனக்குக் கிடைப்பது ஒரு மன நிறைவு மட்டும்தான். அதுதான் என்னை மேலும் இயங்க வைக்கக்கூடிய ஊக்க சக்தியாக இருக்கிறது.
தமிழ் விக்கியின்' தூரன் விருது' கிடைத்துள்ளது பற்றி என்ன உணர்கிறீர்கள்?
எழுத்தாளர்ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சிறந்த இலக்கிய செயல்பாடுகளைச் செய்து வருகிறது. அவர்கள் தீவிர வாசிப்புக் குழுமத்தை வைத்திருக்கிறார்கள். இந்தத் தமிழ் விக்கியின் தூரன் விருது அறிவிப்புக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள வெளிச்சம், வந்துள்ள எதிர்வினைகள் ஆச்சரியம் தரும் வகையில் உள்ளன. அவ்வளவு பேர் விசாரித்து இருக்கிறார்கள். எனது நூல்கள் நிறையவே விற்பனையாகி உள்ளன. இதனை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த விருதைப் பெறுவதற்குக் காரணமான சம்பந்தப்பட்ட விருதுக் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு விருது கிடைத்ததற்கு எனது மாணவர்கள் வாழ்த்தவில்லை என்று ஜெயமோகன் வருத்தப்பட்டுள்ளார். அதைக்குறிப்பிட்டு என்னிடம் இது பற்றிக் கேட்டார்கள். என்னிடம் படித்த மாணவர்களும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஜெயமோகன் தளத்தில் இது சார்ந்து அவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லையே தவிர என்னிடம் நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் வாட்ஸ் அப்பிலும் நிறைய பேர் விருதுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
உங்கள் தொடர்ச்சியாக உங்கள் மாணவர்கள், பின் தொடர்பவர்கள்,எந்த அளவுக்கு நம்பிக்கை தருகிறார்கள்?
எனது மாணவர்கள் இந்திய அரசின் தொல்லியல் துறையிலும் தமிழக தொல்லியல் துறையிலும் பணியாற்றி வருகிறார்கள். என்னிடம் படித்த மாணவர்கள் நிறைய பேர் கல்லூரிகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களை நான் பார்ப்பதுண்டு. அவர்கள் தங்களால் ஆன ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
உங்களது குடும்பம் பற்றி?
எனது மனைவி கலாவதி கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவர், நான் நூல் எழுத ஊக்கம் தருபவர் மட்டுமல்ல அதில் திருத்தங்கள் மேற்கொண்டு நூல் தயாரிப்பில் உதவி வருகிறார். மகள் பெயர் திருநங்கை. எம். ஏ வரலாறு படித்து முனைவர் பட்டம் பெற்றவர். மகன் திருநம்பி எம்.டெக் படித்துள்ளார். ஜெர்மானிய நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றுகிறார்.குடும்பம் எனக்குக் கொடுக்கும் ஆதரவால்தான் என்னால் தொடர்ந்து இயங்க முடிகிறது. இன்றைக்கும் நான் தேடித்தேடி பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் குடும்பம் கொடுத்துள்ள ஆதரவுதான். நான் லண்டன், பிரான்ஸ் , பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ரோம், கிரீஸ் , துருக்கி, எகிப்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, சீனா என்று உலகின் பல பகுதிகளுக்கு நினைவுச் சின்னங்களைத் தேடிச் சென்றிருக்கிறேன். இப்படி 24 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இதற்கான பயணத்தில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் என் சொந்தப் பணத்தில் செலவு செய்திருக்கிறேன். இதற்கு என் குடும்பம் அனுமதித்தது எனது நற்பேறு. என் மனைவி பணியாற்றியதால் என் குடும்பத்தின் ஆதரவு எனக்கு இருந்ததால் இது எனக்குச் சாத்தியப்பட்டது.
உங்களது எதிர்காலத் திட்டம் ?
கடைசிக் காலம் வரை ஆய்வுகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். நூல்களை எழுத வேண்டும் என்று நிறைய கனவுகள் உள்ளன. அதற்கு உடல் நலமும் காலமும் ஒத்துழைக்க வேண்டும் .
நீங்கள் எழுதிய முக்கிய நூல்களை ஆங்கிலத்தில் கொண்டு வரலாமே?
எனது நூல்களை ஆங்கில மொழியில் கொண்டு வருவது பற்றி நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.எனது வரலாற்று நூல்கள் தமிழர்கள் மத்தியில் பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்கிற ஆசைதான் எனக்குப் பெரிதாக உள்ளது. அதற்குப் பிறகுதான் வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முதலில் இந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களே தங்கள் வரலாறுகளைப் படிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.