
தஞ்சாவூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவப் பேராசிரியர் புண்ணியமூர்த்திக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை நோய்களுக்கு மரபு மூலிகை மருத்துவத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அறிவிப்பு வந்துள்ளது. அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினோம். மரபுசார் மூலிகை மருத்துவத்தை கால்நடைகளுக்குப் பயன்படுத்தியது பற்றிய தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“அடிப்படையில் மருத்துவத்தின் கூறுகள் நோய், நோய் நாடல். வழக்கமான நவீன மருத்துவம் நோய்க்கிருமிகளை அழிப்பதில் கவனம் செலுத்துகிறது. இன்றைய பல்லுயிர் சூழலில் மையமாகக் கருதப்படுவது நுண்ணுயிரிகள்தான். அவற்றைப் பற்றி வெகுகாலம் அதிகமாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது ஏராளமான தரவுகள் வந்துள்ளன, குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில். இச்சூழலில் நுண்ணுயிரிகளை மட்டும் குறிவைக்கும் ஒற்றை முனைகொண்ட அணுகுமுறை என்பது போதாமை உடையதாகத் தோன்றுகிறது. மாற்றம் தேவை எனப் புரிகிறது. ஒரு மாடோ ஆடோ கோழியோ ஏன் மனிதனோ தாவரமோ கூட அவற்றிடம் இயற்கையாகவே ஒருவித எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த எதிர்ப்புச் சக்தியை ஊக்கப்படுத்துவதே சித்த மருத்துவ மரபின் அடிப்படை தன்மையே. இது நோய்க் கிருமிகளைக் கொல்லும் நவீன மருத்துவக் கொள்கையிலிருந்து மாறுபட்டது.
மருந்துகளும் மருத்துவ சேவையும் எளிதில் கிடைக்கவேண்டும்; அவற்றின் விலையும் அனைவருக்கும் கட்டுப்படியாகவேண்டிய நிலையில் இருக்கவேண்டும். இது எல்லா மருத்துவ முறைகளிலும் கிடைக்கக்கூடியதுதான். இவை இல்லாமல் மூன்றாவது அம்சம் ஒன்று உள்ளது. இந்த மருந்தைக் கொடுத்தால் இந்த விளைவு ஏற்படும்.. இத்தனை நாளில் சரியாகும் என்கிற அம்சம்தான் அது. மடிநோய் வருகையில் மாடுகளுக்கு சோற்றுக்கற்றாழை, சுண்ணாம்பைப் போட்டால் 80-90 சதவீத மாடுகளுக்கு சரியாகிவிடும் என்பதைச் சொல்லமுடியும். ஆனால் இதை வேறு மருத்துவ முறைகளில் உறுதியாகச் சொல்ல முடியாததால்தான் மாற்றுமுறைகளைத் தேடினேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் சித்த மருத்துவ பாரம்பரிய மரபு முறைகளைத்தேடினேன். இவை கடுமையான சித்த மருத்துவ விதிகளைக் கடைப்பிடிப்பவை அல்ல. தேவைக்கு ஏற்ப மாற்றக்கூடியவை. இது எனக்கு உதவியாக இருந்தது. சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் உதாரணத்துக்கு திரிபலா என்றால் நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் –இவற்றை குறிப்பிட்ட அளவில்தான் சேர்க்கப்படவேண்டும். அதில் ஒரு நூல் அளவுகூட மாறக்கூடாது. ஆனால் இங்குதான் நான் வேறுபடுகிறேன். கடுக்காயை, நெல்லிக்காயை, தான்றிக்காயைத் தனியாகப் போட்டு செய்யமுடியும். இது பாரம்பரிய நாட்டுப்புற முறைகளின் வலிமையான அம்சம் ஆகும். சித்தா, ஆயுர்வேத முறைகளுக்குள்ளேயே நான் நுழையவில்லை. இவற்றின் அறிவைக் கொண்டு அவற்றுக்கு வெளியேதான் நான் செயல்படுகிறேன்.
விவசாயிகளின் பிரச்னைகளை உணர்ந்து அவற்றுக்கு ஒரு கல்வியாளனாக நான் மரபுமூலிகை மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தினேன். மடிநோய்க்கு முந்தைய முறைகளின்படி ஸ்டீராய்டு சேர்த்து அளிப்பார்கள். அப்போது பால் உற்பத்தியும் குறைந்துவிடும். ஆனால் சோற்றுக்கற்றாழையைப் பயன்படுத்தினால் அதில் வீக்கம் குறைப்பு, நோய்கிருமி எதிர்ப்பு, நோயெதிர்ப்புத் திறன் அதிகரிக்கச் செய்யும் திறன் எல்லாம் உள்ளன. பால் உற்பத்தியும் குறையாது. மாட்டின் சுய எதிர்ப்புத்திறன் மேம்பாடு இங்குதான் வருகிறது.
மாடுகளுக்கு வரும் கோமாரி வைரஸ் நோய் உடலில் உள்ள சிலேட்டுமப் படலங்களை அழித்துவிடுகிறது. இந்நிலையில் ஆண்டிபயாட்டிக், வீக்கத்தைக்குறைக்கும் மருந்துகள் ஆகியவற்றைக் கொடுக்கும்போது அதனால் மேலும் சிலேட்டுமப் படலத்தில் புண் உருவாகிறது. கால்நடை மருத்துவராக நாம் உடனடியாக நீர்ம சுரப்பை நிறுத்தவேண்டும் என்றே நவீன மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி வந்தோம்; என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். பயன் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நான் சீரகம், வெந்தயம், பூண்டு, மிளகு, மஞ்சள், நாட்டுசர்க்கரை, உப்புப் போட்டு பிசைந்து தேங்காய் துருவலைக் கலந்து கொடுக்கச் செய்தேன்.
இவை சிலேட்டுமப் படலத்தில் இதமூட்டும் காரணியாக வேலை செய்து புண்ணை ஆற்றிவிடுகின்றன. மறுநாளே மாடு தீவனம் சாப்பிட ஆரம்பித்துவிடுகிறது. சில நாட்களில் கோமாரி நோய் கட்டுக்குள் வந்துவிடுகிறது. மாடுகளுக்கு 70-90 லிட்டர் உமிழ்நீர் தினமும் சுரந்தாகவேண்டும், அவை சாப்பிட்டதை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து அசைபோடுவதற்கு… வாயில் புண் இருந்தால் இந்த உமிழ்நீர் சிந்தி 30-40 சதவீதம் வீணாகிவிடும். மாடு இதனால் நீரிழப்புக்கு உள்ளாகிறது. இந்த மருந்தை மூன்று வேளையும் கொடுக்கும்போது புண் ஆறி, மறுநாள் மாடு தீவனம் எடுத்துக்கொள்கிறது. இதுவும் பாதிக்கப்பட்ட விலங்கின் சுய எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துவதால் நடக்கிறது. இப்படி எந்த நோயை எடுத்துக்கொண்டாலும் என்னால் இந்த அடிப்படையை விளக்க முடியும்.
இந்த முறைகளை நான் சொன்னபோது அரசு அமைப்புகள் ஆரம்பத்தில் தயக்கத்துடனே முன்வந்தனர். ஆனால் தீர்வுகள் சரியாகக் கிடைப்பதைப் பார்த்ததும் முழு ஆதரவு அளித்தனர். தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் அமைப்புகளும் இதைப் பரிசோதித்துப் பார்த்து நல்ல முடிவுகள் கிடைப்பதைக் கண்டறிந்தனர். தேசிய பால்வள நிறுவனம் இதைப் பெரிய அளவில் எடுத்துச் சென்றது. 1.3 லட்சம் மாடுகளில் கோமாரி நோய்த் தாக்குதலுக்கு இந்த மருந்து அளிக்கப்பட்டு அதன் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 85% வெற்றிகரமான பலன்கள் கிடைப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. மடிநோயைப் பொறுத்தவரை 82% சதவீத வெற்றி கிடைக்கிறது. 12 லட்சம் கால்நடைகளில் இது பரிசோதிக்கப்பட்டு தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதை பெரிய அளவில் சிகிச்சை முறையாகப் பரிந்துரைக்கும்போது இதில் ஏதேனும் பிரச்னை வருமா என்ற கேள்விதான் பிரதானமாக நிற்கும். இந்த பொருட்களில் விஷத்தன்மை கொண்ட எந்த வேரோ மூலிகையோ பயன்படுத்தப்படவில்லை. பாதுகாப்பானவையாக மனிதர்களால் அறியப்பட்ட உபபொருட்களையே பயன்படுத்தினேன். பத்து மாடுகளில் ஆரம்பித்து, ஆயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் மாடுகள் என இச்சிகிச்சை முறை செய்துபார்க்கப்பட்டபோது நமக்கு வெற்றிக்கான மிகப்பெரிய தரவுகள் கிடைக்கின்றன. Down to Earth என்ற இதழை நடத்தும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தினர் (CSE) அசாம் முதல் கேரளா வரைக்கும் இச்சிகிச்சை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பன்னாட்டு மாநாடு ஒன்றில் இந்த பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளைப் பரிந்துரைத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், தமிழக அரசும் இந்த முறைகளை அங்கீகரித்துப் பயன்படுத்துகின்றன.
இந்த பத்ம அங்கீகாரம் எனக்கு இம்முறைகளைப் பற்றி திறந்த மனத்துடன் பேசுவதற்கான தளங்களை ஏற்படுத்தித் தரும் என்பது என்னுடைய நம்பிக்கை,” என்று முடித்தார் பேராசிரியர் புண்ணிய மூர்த்தி.