எழுத்தாளர் பாவண்ணன்
எழுத்தாளர் பாவண்ணன்

‘வாசகர்கள் யாரும் புத்தகத்தை எரிப்பதில்லை. ஆனால் பிழையான புத்தகத்தை ஒதுக்கி விடுகிறார்கள்’

தமிழின் அத்தனை இலக்கிய வகைமைகளில் எழுதி வருகிறவர் எழுத்தாளர் பாவண்ணன்.நூறு நூல்களைத் தொட்டுள்ள இவர், தனது படைப்புகளில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்தவர். இலக்கிய சிந்தனை விருதுகள், புதுச்சேரி, தமிழக அரசுகளின் விருதுகள், சுஜாதா உயிர்மை அறக்கட்டளை விருது, என் சி பி எச் விருது,விளக்கு விருது,எம்.வி வெங்கட்ராம் நூற்றாண்டு விருது என்று இவர் பெற்றுள்ள விருதுகள் ஏராளம். அண்மையில் கனடா சென்று இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருதினைப் பெற்றுக் கொண்டு வந்துள்ளவரிடம் ஓர் உரையாடல்!

உங்களுக்குள் இருந்த எழுத்தாளரை எப்படிக் கண்டெடுத்தீர்கள்?

 என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் பாடப்புத்தகங்களுக்கு அப்பால்   புத்தகங்களைத் தேடிப் படிக்கிற பழக்கம் இருந்தது. புதுசோ, பழசோ கையில் எது கிடைத்தாலும் படிப்பேன். சித்திரக்கதைகள். சிறுவர் கதைகள். புராணக்கதைகள். நாட்டுப்புறக்கதைகள். வாழ்க்கைவரலாறுகள். வாரப்பத்திரிகைகள். எதையும் விட்டுவைக்கமாட்டேன். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள அக்காமார்களிடமிருந்தும் அண்ணன்மார்களிடமிருந்தும் புத்தகங்களைக் கேட்டு வாங்கிவந்து படிப்பேன். பள்ளிக்கூட நூலகத்தின் நூலகரோடும் எங்கள் ஊர் கிளைநூலகத்தின் நூலகரோடும் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. நான் கேட்கும் புத்தகங்களை அவர்கள் கொடுத்துதவினார்கள். எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் தங்கமானவர்கள். இப்படி எல்லாத் திசைகளிலிருந்தும் எனக்குக் கிடைத்த ஊக்கமே என்னை நல்ல வாசகனாக்கியது. பிறகு கவிஞனாக்கியது. அதைத் தொடர்ந்து எழுத்தாளனாகவும் ஆக்கியது. யாப்பிலக்கணத்தில் பயிற்சி பெற்ற பிறகு, ஒரு காலகட்டம் வரைக்கும் மனத்தில் தோன்றும் எண்ணங்களை அறுசீர் விருத்தங்களாகவும் எண்சீர் விருத்தங்களாகவும் எழுதிக்கொண்டிருந்தேன். நான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்த சமயத்தில், துயர நினைவுகளின் அழுத்தத்தில் இருந்து விடுபடும் ஒரு முயற்சியாக ஒரு சிறுகதையை எழுத முயற்சி செய்தேன். அதுதான் என் முதல் சிறுகதை.  முதல் முயற்சியே சரியாக அமைந்துவிட்டது. என்னால் எழுதமுடியும் என்கிற நம்பிக்கையை எனக்கு அக்கதை அளித்தது. அதைவிட, எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் சரி, அதை ஒதுக்கிக் கடந்து செல்லக்கூடிய மனத்தெளிவையும் அக்கதை அளித்தது. இனி நான் எழுத்தாளன் என அன்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அந்தத் தன்னம்பிக்கைதான் அந்தக் கதை வழியாக நான் பெற்ற பெருஞ்செல்வம். அந்தச் சிறுகதையை படியெடுத்து அன்று இலக்கிய இதழாக வந்துகொண்டிருந்த 'தீபம்' பத்திரிகைக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் அது பிரசுரமாகவில்லை. திரும்பி வந்துவிட்டது. இன்னொரு சிறுகதையை எழுதி அனுப்பிவைத்தேன். அது பிரசுரமானது. பிறகொரு தருணத்தில் 'தீபம்' அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது நா.பார்த்தசாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று பிரசுரிக்காத அந்த முதல் கதையைப்பற்றித்தான் அவர் அதிக நேரம் உரையாடினார். சொந்த அனுபவம் சார்ந்து கதையை எழுத நினைப்பதைவிட, சொந்த அனுபவம், பிற அனுபவம் என்பதைத் தாண்டி அதை கலையழகுடன் மதிப்பிடும் பார்வையே ஒரு எழுத்தாளனுக்கு முக்கியம் என்று அவர் சொன்னார். இன்றளவும் அவர் சொற்கள் என் நெஞ்சில் ஒளிபாய்ச்சிக்கொண்டிருக்கின்றன. அன்றுமுதல் எழுத்தாளனாக என் பயணம் தொடங்கிவிட்டது.

நீங்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என   பல்வேறு வகைமைகளில் எழுதி  இருக்கிறீர்கள். எந்த வடிவத்தின் மீது ஆர்வம் அதிகமுள்ளது?

எல்லா வகைமைகளும் எனக்கு உவப்பானவையே. நெருக்கமான வடிவத்தைக் குறிப்பிடவேண்டுமென்றால் நான் சிறுகதையைத்தான் தேர்ந்தெடுப்பேன்.சிறுகதை வடிவத்தின் மீது மட்டும் கொஞ்சம் கூடுதலான விருப்பம்  உண்டு. பெற்றொருக்கு தம் பிள்ளைகளில் யாரோ ஒரு பிள்ளை செல்லப்பிள்ளையாக இருப்பதுபோல.

உங்கள் பார்வையில் ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் ? நல்ல மொழிபெயர்ப்புக்கான தடைகள் என்று எதைக் கூறுவீர்கள்?

மதுரையில் தமிழ்ச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்த பாண்டித்துரைத்தேவரின் வாழ்க்கை வரலாற்றில் நான் படித்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஸ்காட் என்னும் ஆங்கிலேயர் அவரைச் சந்திக்க வருகிறார். திருக்குறளில் எண்ணற்ற பிழைகள் இருப்பதை, தன் வாசிப்பில் கண்டுபிடித்ததாகவும் பிழைநீக்கிய குறளை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் சுகாத்தியர் திருத்திய திருக்குறள் என புதிதாக ஒரு நூலை எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு பக்கத்தைப் புரட்டிப் பார்க்கிறார் தேவர். அதன் தகுதி என்ன என்பதை அவர் அக்கணமே புரிந்துகொள்கிறார். பிழை மலிந்த புத்தகம் யாருடைய கைக்கும் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் விற்பனையாகாமல் அவரிடம் தேங்கியிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் கொண்டுவரச் சொல்லி அவையனைத்தையும் பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறார். அவர் வெளியேறிய பிறகு தோட்டத்தில் குழிதோண்டி அப்புத்தகங்களைக் கொட்டி எரித்து சாம்பலாக்கிவிடுகிறார்.  இன்று வாசகர்கள் யாரும் புத்தகத்தை எரிப்பதில்லை. ஆனால் பிழையான புத்தகத்தை ஒதுக்கிக் கடந்துசென்று விடுகிறார்கள். நல்ல மொழிபெயர்ப்புகள் நம் மனத்தில் அப்படியே நீடிக்கின்றன. பாரதியார், சுத்தானந்த பாரதியார், புதுமைப்பித்தன், ஆர்.ஷண்முகசுந்தரம், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோரின் மொழிபெயர்ப்புகளை இன்றும் நாம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம் அல்லவா? அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கிளைநூலகத்துக்குச் சென்று மொழிபெயர்ப்புநூல்கள் என்னும் பிரிவில் அடுக்கப்பட்டிருக்கும் நூல்களைப் புரட்டிப் பார்த்தால், நம் நினைவைவிட்டு மறைந்துபோன மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை எத்தனை பேர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.  தமிழின் மொழியமைப்புக்கும் தேவநாகிரியை அடிப்படையாகக் கொண்ட பிற இந்திய மொழிகளுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. நம் மனம் ஒருவித வாக்கிய அமைப்புக்குப் பழக்கப்படிருக்கிறது. பிறமொழி வாக்கியங்களை தமிழ் வாக்கியங்களாக மொழிபெயர்க்கும்போது நாமாக எதையும் சேர்க்காமலும் குறைக்காமலும்  தமிழ்வாக்கியங்களாகவே அமைத்து எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். பிறமொழித்தன்மை மாறாமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மொழிபெயர்த்து எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். நடை மாறும்போது தடை தானாகவே உருவாகிவிடுகிறது. சொந்தமாக ஒரு படைப்பை எழுதும் எழுத்தாளருக்கு இருக்கும் சிரத்தையைவிட கூடுதலான சிரத்தையும் மொழிப்பயிற்சியும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கவேண்டும்.

உங்கள் படைப்புகள் பெரும்பாலும் துயரத்தைப் பேசுகின்றன.  பூர்வீக சொத்துக்கள் எல்லாம் பங்காளித் தகராறில் அழிந்தது,கோயில் நிலத்தில் கூரை வீடு கட்டிக் கொண்டு வந்தது,  கேழ்வரகுக் கூழ்,  முருங்கைக் கீரை அடை, மண் எண்ணெய் விளக்கு, வறுமை துன்பம் , மன அழுத்தம் என…. போராட்டம் சார்ந்த உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை உங்கள் அடி மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதா?.

உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் எல்லாவற்றையும் ஒரு சாட்சியாக நின்று பார்த்திருக்கிறேன். கிணற்றுக்குள் நீங்கள் வீசும் எடைமிக்க ஒரு பொருள் ஆழத்துக்குச் சென்று அங்கேயே தங்கிவிடுவதுபோல அவை அனைத்தும் ஆழ்நெஞ்சில் நின்றுவிட்டன. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் அந்நினைவுகளை மீட்டி தேவைப்படும் அளவுக்கு என் சிறுகதைகளில் பயன்படுத்திக்கொள்வேன். 

ஓர் எழுத்தாளர் முதலில் குடும்பத்தின் தடைகளை மீறி மேலே வர வேண்டும் என்பார்கள். குடும்ப உறவுகளுடன் பயணம் செய்வதில் ஓர் எழுத்தாளராக  அசெளகரியங்களை எதிர் கொண்டதுண்டா?

குடும்பத்தையும் குடும்ப நடவடிக்கைகளையும் ஒரு தடையாக நினைப்பதே பெரும்பிழை. குடும்பவாழ்க்கை வழங்கும் எல்லா நலன்களையும் இன்பங்களையும் பெற்றுக்கொண்டு குடும்பத்தை ஒரு தடையாக நினைப்பது பெரும்பாவம். நம் குடும்பத்துக்காக நாம் செயலாற்றாமல் வேறு யார் வந்து ஆற்றுவார்கள்? ஓர் எழுத்தாளனுக்கு தன்னைப் பலவிதமாக வகுத்துக்கொண்டு செயலாற்றவேண்டிய கடமை இருக்கிறது. ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, ஓர் அலுவலக ஊழியராக ஆற்றவேண்டிய பொறுப்புகளை திறமையுடன் ஆற்றும் ஒருவரே எழுத்துத்துறையிலும் திறமையாக செயலாற்ற முடியும். என்னைப் பொறுத்தவரையில் என் குடும்பம் எனக்கு மிகவலிமையான துணை. என் எழுத்து முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்து வருகிறது. அலுவலக நிமித்தமாக நான் செய்த பயணங்கள் மட்டுமே தனித்தும் சக அலுவலர்களோடும் செய்த பயணங்களாகும். மற்றபடி சொந்தமாக மேற்கொண்ட எல்லாப் பயணங்களிலும் என் குடும்பத்தினரும் உண்டு. பல எழுத்தாளர் சந்திப்புகளுக்குக் கூட நான் குடும்பத்துடன் சென்றிருக்கிறேன். கனடாவுக்கு நான் என்னுடைய துணைவியாருடன்தான் சென்றுவந்தேன்.

1982 முதல் 2023 வரை 100  நூல்கள். திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? மன நிறைவா? விரும்பியதை நிறைவேற்ற முடியாத நிறைவில்லாத ஏக்கமா?

என் எழுத்துப்பயணம் எனக்கு நிறைவளிப்பதாகவே உள்ளது. எங்கும் தேங்கி நின்றுவிடாமல் ஓடிவரக்கூடிய நதியாகவே இருந்திருக்கிறேன். நாவல் களம் சார்ந்து நான் இன்னும் சற்று தீவிரமாக இயங்கியிருக்கலாம். என்ன காரணத்தாலோ, அப்படி அமையாமல் போய்விட்டது. இரண்டு நாவல்கள் தொடங்கி அப்படியே அரைகுறையாக நின்றுவிட்டன. அது மட்டுமே சற்று வருத்தமளிக்கக்கூடிய செய்தி.

 இலக்கியத்தில் குழு மனப்பான்மை கவலை அளிக்கிறதே. இது தவிர்க்க முடியாததா?

இலக்கியம் எதற்காக வேண்டும் என்னும் கேள்வியை நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்களிடம் கேட்டு, எத்தனை பதில்கள் கிடைக்கின்றன என்பதைப் பாருங்கள். சமூகக் கொடுமைகளுக்கு எதிரான குரல்களைப் பதிவு செய்ய இலக்கியம் வேண்டும் என்பது ஒரு பதில். ஏழை எளியவர்களின் இயலாமையைப் பதிவு செய்யும் ஆவணமாக இலக்கியம் அமையவேண்டும் என்பது இன்னொரு பதில். உலகில் அறம் பிறழும் தருணங்களை அடையாளம் காட்டும் ஆயுதமாக இலக்கியம் இருக்கவேண்டும் என்பது மற்றொரு பதில். மனத்தில் சேர்ந்துவிட்ட கசடுகளை அகற்றி தூய்மை செய்து அங்கே உண்மையைத் திகழவைக்கும் சுடராக இலக்கியம் இருக்கவேண்டும் என்பது ஒரு பதில். சலிப்பு மிக்க அன்றாடங்களின் சுமையைக் கரைத்து மனத்துக்கு ஊக்கமூட்டும் விசையேற்றியாக இலக்கியம் இருக்கவேண்டும் என்பது பிறிதொரு பதில். சகல வேறுபாடுகளுக்கும் அப்பால் மானுட உறவின் மேன்மையை உணர்த்துவதாக இலக்கியம் அமையவேண்டும் என்பது ஒரு பதில். வாழ்க்கையின் சாரம் என்ன  என்பதை மதிப்பிட்டு உணரும் கலையே இலக்கியம் என்பது ஒரு பதில். இப்படி பல பதில்கள் இம்மண்ணில் திகழ்கின்றன என்னும் நிலையில் அப்பதில்களை நம்புகிறவர்களும் அதற்காக இயங்குகிறவர்களும் குழுக்களாக அமைந்திருப்பது இயற்கை அல்லவா? அவற்றை தனக்குள் மோதிக்கொள்ளும் அரசியல் குழுக்களாக நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. தன் தரப்புக்காக நம்பிக்கையுடன் செயல்படும் ஆர்வம் கொண்டவர்களாக நினைத்துக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. எந்தக் கருத்தையும் தாழ்வாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உயர்வானதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். எதையும் வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையே நமக்கு முக்கியம்.

வெளி மாநிலங்களில் பணியாற்றும் பலருக்கும் பணி முடித்துவிட்டுத் தமிழ்நாட்டுக்குச் சென்று விட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். ஆனால் நீங்கள் கர்நாடகாவில் நிரந்தரமாகத்   தங்கி விட்டீர்கள்.  அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.  அம்மாநில மக்களின் பண்பாடு கலாச்சாரத்தில் உங்களைக் கவர்ந்தது எது?

என் பயிற்சிக்காலம் முடிவடைந்ததும் எனக்கு பெல்லாரி கோட்டத்தில் சென்று சேரும் வகையில் பணியமர்த்தல் ஆணையைக் கொடுத்தார்கள். பெல்லாரியைப் பார்த்தபோது, அந்த ஊரும் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊரும் ஒன்றுபோலவே இருந்தது. சற்றே வறட்சி. சற்றே செழுமை. எல்லாம் கலந்த கலவை. அந்த ஊரில் ஒரு பெரிய சிறை இருந்தது. சுதந்திரப்போராட்ட காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தியாகிகள் அச்சிறையில் அடைபட்டிருந்தார்கள். அவர்கள் எல்லாம் வந்து சென்ற மண் அது என்ற எண்ணம் என் நெஞ்சில் ஓடியது. பெல்லாரியில் காந்தியடிகள் உரைநிகழ்த்திய இடத்தைப் பார்த்தேன். இந்த மண்ணில்தான் நம் வாழ்க்கை என்றொரு எண்ணம் எப்படியோ தோன்றிவிட்டது. அன்றே அரிச்சுவடி வாங்கி கன்னடத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அங்கு சில மாதங்கள் பணியாற்றிவிட்டு ஹொஸபேட்டைக்கு வந்தேன். துங்கபத்திரை நதிக்கரையில் விஜயநகரப் பேரரசு கோலோச்சிய ஹம்பி நகரத்துக்கு அருகில் அது இருந்தது. மனதில் அவையெல்லாம் ஒரு துள்ளலை ஏற்படுத்தியது.   நிறைந்த அரங்குகளில் நடைபெற்ற யட்சகான நிகழ்ச்சிகளும் நாடகங்களும் என்னைக் கவர்ந்தன. படிப்பதற்கு நல்ல புத்தகங்கள் கிடைத்தன. ஒவ்வொரு வாரமும் பயணம் செல்ல பொருத்தமான எண்ணற்ற ஊர்கள் இருந்தன. எல்லா ஊர்களிலும் எனக்கு நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். எல்லாமே என் சுவையுணர்வை மேம்படுத்திக்கொள்ள இசைவாக அமைந்தன. சரி, எதுவரை இருக்கமுடிகிறதோ, அதுவரை இங்கே இருப்போம் என தீர்மானித்து வாழ்க்கையைத் தொடங்கினேன். இதோ, என் பணிக்காலமே முடிவடைந்து ஓய்வும் பெற்றுவிட்டேன். இன்னும் இந்த ஊர்மீது கொண்ட பற்றும் பாசமும் குறையவில்லை.

இந்தியாவில் நீங்கள் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன என்று கூறி இருக்கிறீர்கள் .போக விரும்பும் இடங்கள் எவை? காரணங்கள்?

ஆம். இந்தியாவில் பயணம் செய்யவேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுலாத்தலங்கள் என ஒரு பட்டியல் இருக்கும். பலர் அதை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு பயணப்பாதையை வகுத்துக்கொள்வார்கள். அது ஒரு வகை. அவ்வளவுதான். அதைவிட சிறந்த பல வழிமுறைகள் உண்டு. இந்தியாவில் உள்ள அருவிகளையெல்லாம் பார்த்தபடி பயணம் செய்தவர் காகா காலேல்கர். அவர் தம் அனுபவங்களை ஜீவன் லீலா என்றொரு புத்தகமாக எழுதியிருக்கிறார். கெளதம புத்தரின் அடிச்சுவட்டில் என்றொரு புத்தகத்தை அந்தக் காலத்தில் சோ.சிவபாதசுந்தரம் என்னும் எழுத்தாளர் எழுதினார். புத்தர் பயணம் செய்த அதே பாதையில் பயணம் செய்து பெற்ற அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்திருந்தார். காந்தியடிகள் மேற்கொண்ட தண்டி யாத்திரையின் தடத்தில்  மீண்டும் நடந்து சென்று காந்தியடிகள் தங்கிய அதே கிராமங்களில் தங்கி மக்களைச் சந்தித்து பெற்ற அனுபவங்களில் அடிப்படையில் தாமஸ் வெபார் என்பவர் எழுதிய ஒரு புத்தகம் சில ஆண்டுகள் முன்னால் வந்திருக்கிறது. இப்படிச் சில வரையறைகளை வகுத்துக்கொண்டு பயணம் செய்வது, நகரங்களை மட்டுமல்ல, வரலாற்றையும் நல்ல விதமாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். எடுத்துக்காட்டாக இந்தியாவின் நதிப்படுகைகளை ஒரு வரையறையாக வைத்துக்கொண்டு பயணம் செய்ய விருப்பமுண்டு. கோதாவரி ஆற்றுப்படுகை ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், சத்தீஷ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் விரிந்து பரந்திருக்கிறது. கோதாவரியும் அதன் இடப்புறமும் வலப்புறமுமாக கிளைத்து விரியும் அல்லது வந்து சேரும் இருபதுக்கும் மேற்பட்ட ஆறுகளும் மிக அழகானவை. அதுபோலவே கிருஷ்ணா ஆற்றுப்படுகை மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரம், கர்நாடகம் என நான்கு மாநிலங்களில் விரிந்து நீளும் படுகையாகும். இங்கும் இருபதுக்கும் மேற்பட்ட துணையாறுகள் உள்ளன. இப்படியே பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகை, மேக்னா ஆற்றுப்படுகை, நர்மதை ஆற்றுப்படுகை, சிந்து ஆற்றுப்படுகை என திட்டமிட்டுப் பயணம் செய்யவேண்டும். இது என்றைக்கு சாத்தியமாகுமோ தெரியவில்லை. ஆனால் அப்படிச் சில கனவுகள் இருக்கின்றன.

பயணத்தில் ஆர்வம் காட்டும் நீங்கள், அதன் மூலம் எதை அடைய விரும்புகிறீர்கள்?

பயணத்தில் நமக்குக் கிட்டும் அனுபவம் மகத்தானது. பயணங்களால் அறிவதை விட உணர்வது அதிகம் .புதிய காற்று. புதிய நீர். புதிய மண். புதிய மனிதர்கள். நம்மைச் சுற்றி புதுமைகள் நிகழ்ந்தபடியே இருக்கும். நாமும் நம்மையறியாமல் புதுமையாக மாறிக்கொண்டே இருப்போம். அதற்கு இணையாகச் சொல்ல இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த மண் எவ்வளவு விரிந்தது என்பதை நம் கண்களால் நாமே பார்த்து அறிவதைவிட பெரிய ஆனந்தம் என்ன இருக்கமுடியும். பனி என்று படிக்கிறோம். பேசுகிறோம். எல்லாம் சரி. பனி மட்டுமே திகழ்கிற பனிக்குன்றுகளையும் பனிச்சரிவுகளையும் பயணம் செய்தால் மட்டுமே பார்க்கமுடியும் அல்லவா? பனி கொடுக்கும் உற்சாகம் எத்தகையது என்பதை பனியைப் பார்த்தால் மட்டுமே ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். பயணத்தால் அடைவது என்ன என்பதைப்பற்றி பக்கம்பக்கமாக எழுதினாலும், அது ஒருபோதும் முழுவிளக்கமாக அமையாது.

இன்று விரல் நுனியில் உலக இலக்கியங்களைக் கண்டடையும் சௌகரியங்கள்,தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்போது வாசிப்பார்வம் மட்டும் குறைந்து வருவது துரதிர்ஷ்டம் தானே?

குறைந்துவிட்டது என யார் சொன்னார்கள்? தொழில்நுட்ப வசதிகள் பெருகும்தோறும் வாசிப்பாளர்களின் எண்ணிக்கை பெருகுவதாகவே நான் நினைக்கிறேன். சமீபத்தில் நடந்துமுடிந்த புத்தகக்ககாட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாவல்கள் வெளிவந்த செய்தியைப் படித்தேன். காலச்சுவடு, புலம், டிஸ்கவரி, எதிர், சந்தியா, கிழக்கு, சாகித்திய அகாதெமி என பல பதிப்பகங்கள் புதிதாக நூல்வடிவம் தந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டும் ஐம்பதுக்கும் குறைவில்லாதவை. புதிய வாசகர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கவில்லை என்றால், இவையெல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கமுடியும்? யோசித்துப் பாருங்கள்.

நூறு நூல்கள் என்பது ஒரு சாதனை தான். இவ்வளவு எழுதிக் குவித்திருக்கும் நீங்கள் அந்த எண்ணிக்கைக்கேற்ற  உயரத்தை சென்றடையவில்லை என்கிற வருத்தம் உள்ளதா? உங்களை முன்னிறுத்தாத குணம் இதற்குக் காரணமாக இருக்கலாமா ?

எந்த வருத்தமும் என் நெஞ்சில் இல்லை. நான் நிறைவாகவே இருக்கிறேன். இதோ என் வாசகர்கள் என உங்களிடம் சுட்டிக் காட்டுவது என்பது இக்கணத்தில் எனக்கு இயலாத செயலாக இருக்கலாம். ஆனால்,  எங்கோ சில வாசகர்கள் என் படைப்புகளை எல்லாக் காலத்திலும் படித்துக்கொண்டேதான் இருப்பார்கள் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது அனுபவம்?

விருது விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி 04.06.2023 அன்று சரியாக மாலை ஆறேகால் மணிக்குத் தொடங்கி இரவு எட்டேகால் மணி வரைக்கும் நடைபெற்றது. ஒவ்வொருவருமே குறித்த நேரத்தில் தன் உரையைத் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்தார்கள். இயற்கையாக அமைந்த அந்தக் கச்சிதமும் ஒழுங்கும் மிகவும் பிடித்திருந்தன. டொரோன்ட்டோவிலிருந்தும் கனடாவின் பிற பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் பல நண்பர்களும் எழுத்தாளர்களும் விழாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடியது இனிய அனுபவமாக இருந்தது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம்தான் அந்த அமைப்பின் செயலாளர். எண்பத்தைந்து வயதைத் தொட்டவர் என்றபோதும் உற்சாகமுடன் நடமாடிக்கொண்டிருந்தார். அவருடைய இருப்பே கிரியா ஊக்கியாக அங்கிருந்தவர்கள் அனைவரையும் தூண்டியபடி இருந்ததைப் பார்த்தேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரும் நானும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பில் இருக்கிறோம். முதன்முதலாக அவரை அன்றுதான் நேருக்கு நேர் பார்த்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம், மொழிபெயர்ப்பாளர் என்.கே.மகாலிங்கம், இயல் விருதாளரும் இலங்கை எழுத்தாளருமான முருகபூபதி, சிறுகதையாசிரியர் ஜயகரன், கட்டுரையாளர் ஆனந்த பிரசாத், உஷா மதிவண்ணன், திருமூர்த்தி, ஆஸ்டின் செளந்தர், ராஜா சோமசுந்தரம் என ஏராளமான நண்பர்களைச் சந்தித்துப் பேச அந்த விழாக்கூடம் வழிவகுத்துக் கொடுத்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளர் சாம்ராஜ் வந்திருந்தார். நான் அங்கே தங்கியிருந்த எட்டு நாட்களிலும் ஏதோ ஒரு பொது இடத்தில் தொடர்ந்து நானும் அவரும் சந்தித்து உரையாடினோம். அவருடைய நினைவாற்றல் வியப்பூட்டக்கூடிய ஒன்று. பழைய சிறுகதைகளையும் அவற்றில் மையப்பொருளாக இருக்கும் அபூர்வமான தருணங்களையும் நினைவுபடுத்தி பேசிக்கொண்டே இருந்தார். எழுத்தாளர் சிவசங்கரி அவர்களை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு விழாவில் சந்தித்தேன். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தாமஸ் ஹிடோஷி ப்ருக்‌ஷ்மாவும் கிம் எச்லினும் ஆற்றிய உரைகள் மிகச்சிறப்பாக இருந்தன. ப்ருக்‌ஷ்மா திருக்குறளை ஆங்கிலத்தில் ஓசை நயத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார்.' ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு ' என்னும் குறளை அவர் தன் இனிய குரலால் பாடிக் காட்டினார். மிகச்சிறப்பான அனுபவம் அது. விழாவை முடித்துக்கொண்டு திரும்பிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அந்த நினைவுகளையே அசைபோட்டபடி இருக்கிறேன்.

கனடாவில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பு  ஏதேனும் நிகழ்ந்ததா? அதையொட்டி நினைவில் பதிந்தவை பற்றிக் கூற முடியுமா?

எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு ஒன்று பத்தாம் தேதி மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைப்பற்றிய தகவல் எனக்குக் கிடைப்பதற்கு முன்பாக நான் பத்தாம் தேதி காலையில் புறப்படும் வகையில் பயணச்சீட்டு எடுத்திருந்தேன். அதனால் அச்சந்திப்பில் நான் கலந்துகொள்ள இயலவில்லை. எழுத்தாளர்கள் முருகபூபதியும் சாம்ராஜும் கலந்துகொண்டு உரையாற்றினர். ஆனால் நான் அங்கே தங்கியிருந்த எட்டு நாட்களும் யாரோ ஒரு நண்பர் வீட்டில் தற்செயலாக சந்தித்து இலக்கியம் சார்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் வகையிலேயே பொழுதுகள் அமைந்தன. சில சமயங்களில் நாலைந்து மணி நேரம் கூட தொடர்ந்து  பேசிக்கொண்டே இருந்தோம். ஒருநாள் அ.முத்துலிங்கம் தன் வீட்டில் எல்லோருக்கும் ஓர் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதுவும் எல்லா நண்பர்களும் உரையாடிக்கொள்ள வழிவகுத்தது. உஷா மதிவண்ணன் வீட்டில் ஒருநாள். வெங்கடரமணன், ஆஸ்டின் செளந்தர், ராஜா சோமசுந்தரம், உஷா, சாம்ராஜ் என பலரும் கூடி பேசிக்கொண்டிருந்தோம். இப்படியே ஜயகரனோடு ஒரு நாள். செல்வத்துடன் ஒருநாள். மகாலிங்கத்துடன் ஒருநாள். என ஒவ்வொரு நாளும் இலக்கிய உரையாடல்களோடு பொழுதுகள் கழிந்து இனிய அனுபவமாக அமைந்தது.

மறக்கமுடியாத அனுபவம் என்று கூறத்தக்க அளவில் ஏதேனும் அந்த நகரத்து அனுபவங்களில் உண்டா?

இரண்டு அனுபவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். டொரோன்ட்டோ நகரத்திலிருந்து சற்று தொலைவில் ஸ்ட்ராட்ஃபோர்ட் என்னும் நகரத்தில் அழகான ஓர் ஏரிக்கு எதிரில் மிகச்சிறந்த நாடக அரங்கம் ஒன்று இருக்கிறது. அங்கே ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஒவ்வொரு பருவத்திலும் அரங்கேற்றப்படுகின்றன. நாங்கள் சென்றிருந்தபோது அங்கே கிங் லியர் நாடகம் நடைபெற்றது. அந்நாடகத்தைப் பார்க்க எங்களை அழைத்துச் செல்லும் ஏற்பாட்டை முத்துலிங்கம் செய்திருந்தார். ஏற்கனவே ஷேக்ஸ்பியர் நாடகங்களை கன்னட மொழியில் பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அவையெல்லாம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில உரையாடல்களை மொழிபெயர்த்து கச்சிதமாக உருவாக்கப்பட்டவை.  ஷேக்ஸ்பியரின் மொழியிலேயே நிகழும் உரையாடல் காட்சிகளைப் பார்க்க நான் ஆவலோடு காத்திருந்தேன். பெரியதொரு அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட உள்ளரங்கில் மற்றொரு சிறு அரைவட்டமாக மேடை அமைந்திருந்தது. அதனால் நடிகர்கள் எல்லாத் திசைகளிலும் திரும்பவும் நடமாடவும் வசதியாக இருந்தது. நடிகர்கள் மிக அற்புதமாக நடித்தனர். லியர் அரசனாக நடித்த நடிகர் உணர்ச்சிகரமான அரசனாகவும் தந்திரங்களை எதிர்கொள்ள முடியாத சூழல்களின் கைதியாகவும் மனமுடைந்த தந்தையாகவும் வெவ்வேறு விதமாக நடித்து  மனத்தைக் கொள்ளைகொண்டார். இன்னும் கூட அந்நாடகத்தின் காட்சி அனுபவங்களை ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் உரையாடலில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நாங்கள் அந்நகரில் தங்கியிருந்த சமயத்தில் எங்களுக்கு முத்துலிங்கம் வழியாக அறிமுகமான நண்பர்களில் ஒருவர் முரளி. என் வயதுடையவர். உரையாடலில் பெரிதும் விருப்பமுள்ளவர். அவருடைய வாழ்க்கையில் அமைந்த ஏற்ற இறக்கங்களைக் கேட்டபோது வருத்தமாக இருந்தது. மூன்று நாடுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக சிறையில் அடைபட்டு வாடியிருக்கிறார். அவருடைய மகன் பெயர் பிருந்தன். பத்து வயதில் அவன் மறைந்துவிட்டான். அவன் மறைந்த விதத்தைக் கேட்டபோது மனம் துயரத்தில் மூழ்கிவிட்டது. ஒருநாள் அவன் ஓர் ஏரிக்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்தான். அருகில் இன்னொரு சிறுவனும் விளையாடிக்கொண்டிருந்தான். அது நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறும் காலம். ஏரி நீர் உறைந்து ஒரு பெரிய தட்டுபோல இருந்தது. அச்சிறுவன் உற்சாகத்தில் துள்ளிக்கொண்டே சென்று அந்த நீர்த்தட்டில் ஏறிக் குதித்து விளையாடினான். எதிர்பாராத கணத்தில் தண்ணீர்த்தட்டு உடைந்து உறைந்திருக்கும் ஏரிக்குள் மூழ்கிவிட்டான். ஏரியைச் சுற்றி எண்ணற்றோர் அக்காட்சியைப் பார்த்தும் ஒருவித இயலாமையுடன் அதிர்ச்சியில் பார்த்தபடியே நின்றிருந்தனர்.  இதைப் பார்த்த பத்து வயதான பிருந்தன் துணிச்சலுடன் ஓடிச் சென்று தண்ணீர்த்தட்டின் மறுபக்கம் ஏறி நின்று அச்சிறுவனின் கையைப்பற்றி இழுத்து தரையை நோக்கி வீசிவிட்டான். துரதிருஷ்டவசமாக அவன் நின்றிருந்த புள்ளியில் ஏற்பட்ட அளவுக்கதிகமான அழுத்தத்தின் காரணமாக அவன் அதே தண்ணீருக்குள் மூழ்கி உயிர்துறந்தான். முரளி அப்போது கனடா குடியுரிமைக்காக கோரிக்கை மனுவை அனுப்பிவிட்டுக் காத்திருந்தவர். ஆயினும் கனடா அரசு அச்சிறுவனின் தியாகத்தைப் பாராட்டும் விதமாக விருது கொடுத்து முரளியின் குடும்பத்தைக் கெளரவித்தது. நகரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பூங்காவுக்கு பிருந்தன் பூங்கா என அச்சிறுவனின் பெயரைச் சூட்டியது. எங்களை அப்பூங்காவுக்கு அழைத்துச் செல்லும்படி முரளியிடம் கேட்டுக்கொண்டோம். முரளி எங்களை அங்கே அழைத்துச் சென்றார். அந்தப் பெயர்ப்பலகையை ஒரு பலகையாக மட்டும் என்னால் பார்க்க இயலவில்லை. நல்ல உடல்வாகு கொண்ட ஓர் இளைஞனைச் சந்தித்து அவன் தோளைத் தொடுவதுபோல அப்பலகையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். அப்பலகையின் அருகில் முரளியோடு நின்று நானும் சாம்ராஜும் படமெடுத்துக்கொண்டோம். கனடா பயணத்தை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் இந்த இரு அனுபவங்களும் நினைவுக்கு வருகின்றன.

பாவண்ணன், தன் துணைவியாருடன்
பாவண்ணன், தன் துணைவியாருடன்

உங்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால  எழுத்து இலக்குகள், திட்டங்கள்?

குறுகிய காலத்துக்கானவை, நீண்ட காலத்துக்கானவை என ஏராளமான திட்டங்களை வகுத்துவைத்திருக்கிறேன். ஆனால் அவை திட்ட அளவிலேயே இருக்கின்றன.  திட்டமிடாத வேலைகளைத்தான் ஒவ்வொரு முறையும் செய்துகொண்டிருக்கிறேன். அதைக் குறிப்பிடும்போது கூச்சமாகவே இருந்தபோதும், அதுதான் விசித்திரமான உண்மை. இரவு முழுக்க ஒரு திட்டம் மனத்தில் ஓடும். ஆனால் விடிந்ததும் அவற்றையெல்லாம் மீறிக்கொண்டு ஏதோ ஒரு காட்சி நெஞ்சில் மிதந்து வந்து சட்டென அதற்கு ஒரு எழுத்துவடிவமும் பீறிட்டு வந்துவிடும். எதை எழுதுவதற்கு உந்துதல் நிகழ்கிறதோ, அதைத்தான் எழுதமுடியும். கனவு ஒருநாள் வசப்படும் என்னும் நம்பிக்கையுடன் பழைய திட்டத்தை மறக்காமல் ஒவ்வொரு நாளும் ஒருசில கணங்களாவது மீட்டிமீட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இரண்டு நாவல்களை அரைகுறையாக எழுதி தொடர்ந்து மேற்செல்ல இயலாமல் அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். இருபதாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. நினைக்கும்போது சங்கடமாகவே இருக்கிறது. அதைத் தொட்டு தொடர்ந்து எழுதி முடிக்கும் தருணம் விரைவில் அமையவேண்டும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com