
அவர்கள் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட ஏழு பேர். அவர்கள் தங்கள் வாழ்வின் உச்சகட்ட சவாலை எதிர்கொண்டனர். உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஏஎஸ் தேர்வுதான் அது. கடும் உழைப்புக்குப் பின்னர் அதில் வெற்றி பெற்றனர். இவர்களின் உண்மைக் கதைகளை மிக அழகாகக் தொகுத்து எழுதி உள்ளார் சஜ்ஜன் யாதவ். Scaling Mount Everest UPSC என்ற இந்த நூலை இலக்கு ஐஏஎஸ் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பி.எஸ்.வி.குமாரசாமி.
சமீபத்தில் சென்னை வந்திருந்த சஜ்ஜன் யாதவ் ஐஏஎஸ் தேர்வுக்காக படித்துவரும் 1200 மாணவர்களிடம் ஊக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு குடிமைப் பணி தேர்வு பயிற்சி நிறுவனம் இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சஜ்ஜன் யாதவ், டெல்லியில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றுகிறவர். அவரிடம் அந்திமழைக்காக உரையாடினோம்.
நீங்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதிய வெற்றி பெற்ற சொந்தக் கதையைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?
ஹரியானாவில் ஓர் குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தந்தை ராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றினார். 12ஆம் வகுப்பு முடித்தபின்னர் ஹிஸார் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் படித்து பட்டம் பெற்றேன். அங்கே படிக்கும்போதே யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரிக்க ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள் படித்தேன். முதல் முறை எழுதியபோது முதல் கட்டத்தேர்விலும் இரண்டாம் கட்டத் தேர்விலும் வெற்றிபெற்றேன். நேர்காணலிலும் கலந்துகொண்டேன். ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. 1995 இல் மறுபடியும் எழுதியபோது வெற்றிபெற்றேன். ஆல் இண்டியா ரேங்க் 26 பெற்றேன். அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போன்றவற்றில் பணியாற்றும் பிரிவு ஒதுக்கப்பட்டது. அருணாசலம், மிசோராம், டெல்லி போன்ற இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
பிற்கு டெல்லியில் எம்பிஏ, அமெரிக்காவில் ஆட்சி நெறியியலில் முதுகலையும் லண்டலில் முனைவர் பட்டமும் பெற்றேன். லண்டனில் பயின்றபோது ஆய்வுக்கட்டுரைகள் எழுத வேண்டி இருந்தது. அது எனக்கு எழுதுவதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது. கொரோனா சமயத்தில் தடுப்பூசிகள் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. எனவே Indias vaccine growth storiy: from cow pox to Vaccine Maitri என்ற என்னுடைய முதல் நூலை எழுதினேன். Scaling Mount UPSC என்பது என்னுடைய இரண்டாவது நூல். இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் வெற்றிக்கதைகளைப் பற்றியது இது. இதற்கான ஊக்கம் பரத் என்ற இளம் ஐஏஎஸ் அதிகாரியை சந்தித்தபோது ஏற்பட்டது. பரத், 2021-22 ஆண்டு தேர்வானவர். அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசின் அமைச்சகங்களில் பயிற்சி எடுக்கவேண்டும். அப்படி ஒருநாள் நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்தின் என்னுடைய அறையில் அவர் வந்து சந்தித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவரைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது கதை மிகவும் ஊக்கம் அளிப்பது. பரத், ஒரு வீட்டுப் பணிப்பெண்ணின் மகன், மத்திய அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய சொந்த உழைப்பால் ஐஏஎஸ் அதிகாரியாக ஆனார். அவர் உண்மையில் ஏராளமான இளம் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஹீரோ.
நம் இளந்தலைமுறையினரை கடுமையாக உழைக்கத் தூண்டவேண்டும் என்பது இந்நூலை எழுத ஒரு காரணம். உழைத்துப்படித்தால் எப்படியும் வெல்லலாம் என உணரச் செய்வது என்பது இரண்டாவது நோக்கம் லட்சக்கணக்கான குடிமைப்பணி தேர்வு எழுதுகிறவர்களுக்கு வழிகாட்டுவது இன்னொரு நோக்கம். ஏராளமான கிராமப்புற மாணவர்களுக்கு எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் இருக்கிறது. இந்த நூலின் கடைசி அத்தியாயத்தில் என்ன படிக்கவேண்டும்? எப்படிப் படிக்கவேண்டும் என்ன நூல்கள் என்றெல்லாம் விளக்கிச் சொல்லி இருக்கிறேன்.
பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் சொந்தமாகத் தயாரித்தே தேர்வெழுதலாம் எனச் சொல்லிவருகிறீர்கள். அது பற்றி?
பயிற்சிமையங்களில் சேராமலே சுயமாகப் படித்து தேர்வில் வெற்றி பெறலாம். நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும். என்னையும் ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நூலில் நான் ஏழு பேரைப் பற்றி எழுதி உள்ளேன். அதில் மூன்று பேர் எந்த பயிற்சி மைய வகுப்புக்கும் செல்லாதவர்களே. கண்பார்வையை இழந்த அஞ்சலி சர்மா சிக்கிமைச் சேர்ந்தவர். அங்கே பயிற்சி மையங்கள் இல்லை. சுயதயாரிப்பின் மூலமே அவர் பீகார் சிவில் சர்வீஸ், யுபிஎஸ்சி ஆகியவற்றில் வெற்றி பெற்றார். தற்போதுநிறைய வழிகாட்டுதல்கள், யூட்யூப், இணையத்தில் கிடைக்கின்றன. தேர்வுக்கான தயாரிப்பு இப்போது மிகவும் சிக்கலானது அல்ல. பாடத்திட்டம் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. அதைப் படித்தால் போதுமானது. தேர்வுக்கான பாடங்கள் இளநிலைப் படிப்பு அளவிலானவை மட்டுமே. பொதுஅறிவுத் தேர்வுக்கான பாடங்கள் 10, 11, 12 ஆம் வகுப்பில் உள்ளவையே. என்சிஆர்டி புத்தகங்கள், சில ரெபரன்ஸ் புத்தகங்கள் படித்தால் போதும். ஆகவே பயிற்சி மையம் எதற்கு? தினமும் குறைந்தது 12 மணி நேரம் படியுங்கள். தினமும் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஓவ்வொரு நாளுக்கும் ஒரு இலக்கு வைத்து அதை முடியுங்கள். பாடத்திட்டம் விரிவானது. அதை 2-3 தடவை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுக்கொள்ளுங்கள். மாதம் தோறும், வாரந்தோறும் படிக்கவேண்டியவை என இலக்குகளை நிர்ணயித்து அவற்றை முடிக்கவேண்டும். படிப்படியாக உச்சியை அடையவேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வு மிகக் குறைவான பணி இடங்களுக்குத் தான் நடத்தப்படுகிறது. தோல்வி விகிதம் மிக அதிகமாக இருக்கும் அல்லவா?
உண்மைதான். சுமார் பத்து லட்சம் பேர் இந்த தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு ஆவதோ சுமார் ஆயிரம் பேர்தான். தேர்வு விகிதம் 0.001% தான். இதைப் பார்த்தால் அச்சமாகத்தான் இருக்கும். உண்மையில் இதைப் பார்க்காதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். பத்து லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால், அதில் ஐந்து லட்சம் பேர் தேர்வு எழுத வரமாட்டார்கள். காரணம் இந்த அச்சம்தான். மீதி ஐந்துலட்சம் பேரில் தீவிரமாக இருப்பவர்கள் ஒரு லட்சம் பேர்தான் இருப்பார்கள். இந்த பிற போட்டியாளர்களைப் பார்க்காதீர்கள். நீங்கள் உங்களுடன் தான் போட்டியிடவேண்டும். நம்மை விட நல்ல பின்னணியும் கல்வித் தகுதியும் இருப்பவர்கள் எல்லாம் எழுதுவார்களே என்று நினைத்தால் உங்களுக்கு அச்சமே மிஞ்சும். பாடத்திட்டத்தில் உள்ளதைப் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஓவ்வொரு அடியிலும் முன்னைவிட சிறப்பாகச் செயல்படுங்கள். போனவாரம் 70 மணி நேரம் படித்தேனா.. இந்த வாரம் 75 மணி நேரம் படிப்பேன். கடந்த வாரம் டெஸ்டில் 80 மதிப்பெண் என்றால் இந்த வாரம் 82 எடுப்பேன் என உழையுங்கள். உங்களை நீங்களே வென்றுகாட்டுங்கள்! உங்கள் சாதனைகளை நீங்களே முறியடியுங்கள். ஊக்கத்துடன் உழைத்தால் உங்களை யாரும் வெல்ல முடியாது! நானே அதற்கான உதாரணம்தான். சிறு கிராமத்திலிருந்து, சிறு நகரக் கல்லூரியிலிருந்து வந்தவன் தானே… ஐஐடி பட்டதாரிகள், டெல்லியில் சிறந்த பயிற்சி மையங்களில் படித்தவர்கள்.. இவர்களுடன் எப்படிப் போட்டிபோடுவது என நினைத்துள்ளேன். ஆனால் அதை நான் புறந்தள்ளினேன், என்னுடைய இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்.
இந்த நபர்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?
என்னுடைய நோக்கம் லட்சக்கணக்கான இளம் மாணவர்களுக்கு வழிகாட்டுவது. எனவே நான் எழுதக்கூடிய கதைகள் சமீபத்தில் யுபிஎஸ்சி வென்றவர்களுடையதாக இருக்கவேண்டும். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வென்றவர்களாக இருக்கவேண்டியது இல்லை, எனவே 20, 21, 22 ஆண்டு பேட்ச் ஆக இருக்கவேண்டும். திருமணமான பின் தேர்வுக்குத் தயார் செய்தவர், பேட்சில் முதலிடம் பிடித்த ஒருவர், முதல்முறையே தேர்வில் பாஸ் ஆன ஒருவர், ஏதோ ஒருவிதத்தில் மாற்றுத் திறனாளியாக இருப்பவர்... இந்த வகையினரைத் தேடி எழுதவேண்டுமென திட்டமிட்டேன். இந்த வகைகளில் அடங்கக்கூடியவர்களைத் தேடினேன். மூன்று பேட்ச்சில் சுமார் 300 ஐஏ எஸ் அதிகாரிகள் இருப்பர். அவர்களில் எனக்குத் தேவையான கதைகள் கொண்ட அதிகாரிகளைக் கண்டறிந்தேன். அவர்களின் நேர்காணல்களை வைத்து எழுதியவற்றை அவர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இளம் அதிகாரிகளான அவர்கள் தங்கள் வாழ்க்கை பலருக்கு ஊக்கமளிக்கும் என்பதில் இயற்கையாகவே மகிழ்ந்தனர்.
பலர் இந்த தேர்வில் உள்ள ஐந்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கடைசியில் தோல்வியைத் தழுவிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
உண்மையில் அது துயரமானதுதான். இந்த தோல்விக்கு தனிப்பட்ட பல காரணங்கள் இருக்கும். ஆனால் ஏகப்பட்ட பாடங்களைப் படிப்பதால் அந்த அறிவு வேறு வேலைகளுக்குத் தேர்வு ஆகவும் உதவியாக இருக்கும். அத்துடன் ஆரம்பகட்டத் தேர்வில் வெற்றி பெறுவதே பெரிய சாதனை தான். விண்ணப்பம் செய்யும் பத்து லட்சம் பேரில் 15-20 ஆயிரம் பேர்தான் ஆரம்பகட்டத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். நிச்சயமாக இவர்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும். கெடுவாய்ப்பாக நான் தேர்வாகவில்லை. ஆனால் மற்றவர்களைவிட நான் சிறந்தவன் என அவர்கள் நினைக்கலாம். இது பிற வேலை வாய்ப்புகளில் நன்றாக முன்னுக்கு வர உதவுகிறது. இப்போது பிற அரசுத் துறைகளில் கூட இதுபோன்று பிரதானதேர்வில் பாஸாகியும் பணிக்கு வெற்றி பெற இயலாத நபர்களை பணி நியமனம் செய்கிறார்கள். தனியார் துறையிலும் இதுபோன்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதுபோல் சிவில் சர்வீஸில் மெயின் தேர்வுகளை வெற்றி பெற்று பல துறைகளில் இருப்பவர்கள் பலரை நான் சந்திக்கிறேன். அதுமட்டுமல்ல, இவர்களுடன் தேர்வுக்குப் படித்த பலர் அரசு உயர்பதவிகளுக்குச் செல்வதால் இவர்களுக்கு நல்ல தொடர்புகள் ஏற்படும். எனவே நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.
கோவாஸ்ஜீஸ் நியூ நோஸ் என்கிற குழந்தைகள் புத்தகம் எழுதி உள்ளீர்கள்.
ஆம். கோவாஸ்ஜீஸ் என்பவர் ஆங்கிலப்படையில் வண்டிஓட்டுபவராக வேலைப்பார்த்தவர். 1882-இல் திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் பிடிக்கப்பட்டு அவரது மூக்கு துண்டிக்கப்பட்டது. ஆங்கில மருத்துவர்களுக்கு அவரது மூக்கை ஒட்டவைக்க முடியவில்லை. எனவே கோவாஸ்ஜி, உள்நாட்டு மருத்துவர் ஒருவரை அணுகி, அந்த மூக்கை ஒட்ட வைத்துக்கொண்டார். இது ஆங்கில மருத்துவர்கள் முன்னிலையில் நடந்தது. அவர்களும் இதுபற்றி கட்டுரைகள் எழுதினர். லண்டனில் இருந்து மருத்துவக் குழு வந்து இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையைக் கற்றுக்கொண்டது. ஆகவே பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் இருந்துதான் தொடங்கியது என்பதைச் சொல்லும் நூல் அது.
ஐ ஏ எஸ் என்ற பதவிக்கு வர எல்லோரும் ஆசைப்படு கிறார்கள். ஏன் இந்த பதவி முக்கியமானது என்று கருதுகிறீர்கள்?
இந்த பணி பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. களத்துக்குச் சென்று கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, தலைமைச் செயலகத்துக்கு வந்து மாநிலக் கொள்கைகளை உருவாக்கும் வாய்ப்பு, ஒன்றிய அரசின் பணிக்குச் சென்றால் அங்கே நாடு முழுவதற்குமான கொள்கைகளை உருவாக்கும் வாய்ப்பு, மீண்டும் மாநிலத்துக்குத் திரும்பிவந்து கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் வாய்ப்பு என பல பணியம்சங்கள் கொண்டது. களப்பணி ஆற்றுகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் திறமை வளர்கிறது. 50,60 துறைகளை ஒருங்கிணைக்க வேண்டி இருக்கும். இதை வைத்துத்தான் அரசு, மக்களுக்காகப் பணியாற்ற முடியும். அத்துடன் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்றவற்றையும் செய்வதால் ஐஏஎஸ் பணி மிக முக்கியமானது.