நீ சீதையை கண்முன்னாடி நிறுத்திட்டே குழந்தே.... அமெரிக்காவில் கம்பராமாயண இசைக் கச்சேரி!

கம்பராமாயணக் கச்சேரி
கம்பராமாயணக் கச்சேரி
Published on

கம்பராமாயணம் சார்ந்து கம்பன் விழாக்கள் நாடெங்கும் நடைபெறுகின்றன.அந்த விழாக்களில் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள்,சொற்போர்கள்,கவியரங்கங்கள். நாடகங்கள் என,கம்பராமாயணத்தைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதைப் பார்த்திருக்கலாம். கம்பராமாயணம் சார்ந்த ஒரு வித்தியாச நிகழ்வாக கம்பராமாயணம் பாடல்களைக் கொண்டு 'கடலோ? மழையோ 'என்கிற பெயரில் இசைக் கச்சேரி ஒன்று நடந்துள்ளது .அதுவும் அமெரிக்காவில் அந்த அரிய முயற்சியைச் செயல்படுத்தி உள்ளார்கள்.

அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்புதான் இந்தக் கச்சேரியை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் நகரில், நாக் தியேட்டரில் , அண்மையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ராலே ராஜன் ஒழுங்குப்படுத்தினார். இவர் ஏற்கெனவே சங்கப்பாடல்களுக்கு இசை அமைத்தவர்.அவரது இசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை கர்நாடக இசை கலைஞரும் திரைப்படங்களில் பாடியுள்ளவருமான ப்ரியா க்ருஷ் பாடினார். இசைக்கலைஞர்கள் , ராஜு பாலன் -மிருதங்கம், உமாமகேஷ் -வயலின், சாய் சங்கர் கணேஷ் -பியானோ, ஸ்கந்த நாராயணன் -கஞ்சிரா என பிற இசைக்கலைஞர்கள் கச்சேரிக்குப் பக்கபலமாக பங்காற்றினர்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நிகழ்வை அன்னபூர்ணா ஒருங்கமைத்திருந்தார்.

செல்வி காயத்ரி பாலாஜி, ஒவ்வொரு இசைக்கலைஞரையும் குறித்து சிறு குறிப்பு ஒன்றைக் கூறி மேடைக்கு வரவேற்றார். அப்போது சார்ந்த கலைஞருக்குரிய ஒளிப்படங்கள் திரையில் தோன்றின.

பழனி ஜோதி என்பவர் மேடையில் பாடப்படுகிற பாடல்களைக் குறித்து விளக்கினார். கம்பனின் கவிநயத்தையும் இசைக்கும் பாடலின் ஒலிநயத்தையும் அவர் அற்புதமாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு பாடலுக்குமான சூழலையும் முன் கதையையும் கூறி அவர் அளித்த விளக்கம் கம்பராமாயணம் அறியாதவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் இருந்தது.

பழனி ஜோதி இந்த நிகழ்ச்சிக்காக நியூ ஜெர்சியில் இருந்து டலாஸ்சுக்குச் சுமார் 2500 கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருந்தார் என்பது இன்னொரு ஆச்சரியம். அவ்வாறு பாடல் விளக்கம் சொல்லும் பொழுது திரையில் முழுப்பாடல் வரிகளும், பாடலுக்கு ஏற்ற பொருத்தமான,செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரையப்பட்ட படங்களும் ஒளிபரப்பப் பட்டன.

பாடல் பற்றிய பழனி ஜோதியின் விளக்கங்கள் ஒரு பக்கம் ருசிகரமாகவும் சரியான ஸ்வரங்களுடன் பாடிய பாடகி ப்ரியா க்ருஷா வின் குரல் இன்னொரு பக்கம் இனிமையாகவும் இருந்து பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.

நான்கு பாவங்களில் பாட வேண்டிய பாடல்களைக்கூட 12 பாவங்கள் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார் ப்ரியா க்ருஷா.

“அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்” - வரிகளை அத்தனைப் பாவங்களில் ப்ரியா பாடி அசத்தினார். இதற்குப் பார்வையாளர்கள் தரப்பில் இருந்து நல்ல நல்ல எதிர் வினைகள் வந்தன.

ஒரு ரசிகை மேடையேறி வந்து “ நீ சீதையை கண்முன்னாடி நிறுத்திட்டே குழந்தே ” என்று ப்ரியாவிடம் உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அதே போல , “தோள் கண்டார், தோளே கண்டார்” பாடலும் , பழனி - ப்ரியா பாஸ்பர புரிதல் கொண்ட ஒத்திசைவுடன் மேடையில் மாயம் நிகழ்த்தினார்கள் என்பதற்குச் சிறந்த சாட்சியங்களாக இருந்தன.

பழனிராஜன் விளக்கம் தர, ப்ரியா க்ருஷா பாடிப் பரவசமூட்டினார்
பழனிராஜன் விளக்கம் தர, ப்ரியா க்ருஷா பாடிப் பரவசமூட்டினார்

பாடல்களுக்கு இசை அமைத்த ராலே ராஜன் , பாடலின் இடையே மிருதங்கம், கஞ்சிரா கலைஞர்களைத் தனி ஆவர்த்தனம் செய்யவைத்து ,அவரவர் திறமை வெளிப்பட இடம் அமைத்து கொடுத்தார். அதன்படி மிருதங்கம் வாசித்த ராஜு பாலனும், கஞ்சிரா வாசித்த ஸ்கந்தாவும், தனிஆவர்த்தனம் வாசித்து வியப்பிலாழ்த்தினார்கள்.

பாடப்பட்ட 12 பாடல்களில் தனித்தனியான பாவங்களைக் காட்டி பாடகி ப்ரியா அனைவரையும் கவர்ந்தார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பாடிய உலகம் யாவையும்” பாடலில் கம்பன் காணும் பிரபஞ்சத்தைப் ப்ரியாவும் இசைக்குழுவினரும் காதில் இசையெனப் பொழிய ரசிகர்களின் மனக்கண்ணில் காட்சியானது. “தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில்” ஒரு பாணனைப் போல மிதிலைக்கு அழைத்துச் சென்றார் ப்ரியா, கடலோ மழையோ-வில் சீதையின் உள்ளமெனக் குழைந்தார்.

கம்பராமாயணத்தில் ஏராளமான பாடல்கள் இருந்தாலும் யுத்த காண்டத்திலிருந்து போர் வர்ணனைகள் சொல்லும் பாடல்களைப் பொதுவெளியில் இதுவரை இசையமைத்து யாரும் பாடியதில்லை என்றே தோன்றுகிறது. அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கிய உடனேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அது போர்க்களம் என உணர ஆரம்பித்துவிட்டார்கள்.

பாடல்களுக்கு விளக்கம் சொன்ன பழனி ஜோதி , கம்பனின் சொற்களில் சூரியனே வெடிக்கிறது என்றார். போரின் வன்மையை ப்ரியாவின் குரலும், இசையும் உணர்த்தியதாலோ என்னவோ, தங்களுக்குப் பிடித்தப் பாடலென பெரும்பாலான ரசிகர்கள் அதைக் குறிப்பிட்டார்கள்.

ராமாயண காவியத்தை எழுதிய கம்பன் ராமனைப் போற்றுவதிலும் இராவணனைப் போற்றுவதிலும் பாகுபாடு காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ராலே ராஜன்
ராலே ராஜன்

இலக்கியம் அறிந்த இசையமைப்பாளர், ராலே ராஜன், அதைச் சிறப்பிக்கும் விதமாக இராவணன் இறந்து கிடக்கும் போர்க்களத்தில் விபூஷனன் பார்வையில் உள்ள “போர் மகளை கலை மகளை புகழ் மகளை” பாடலுக்கு இசையமைத்திருந்தார்.

ப்ரியா-வின் குரலில் கேட்ட அனைவருக்குள்ளும் சோகம் பரவியது. வரவேற்புரை வழங்கிய காயத்ரி பாலாஜியும், அன்னபூர்ணாவும் இதைத்தான் தங்களுக்குப் பிடித்த பாடல் எனச் சொன்னார்கள்.

இப்படி ஒரு நிகழ்வை , மங்கலகரமான பாடலைப் பாடி முடிப்பதுதானே முறை என்கிற வண்ணத்தில் , “இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்” பாடல் பாட, பின்னணியில் திரையில் ராமனின் நீலவண்ணக் கால்களும், அதன் அருகில் அணிலும் அமைய,அந்தத் தருணம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தானது.

நிகழ்வின் முடிவில் ராலே ராஜனும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் சௌந்தரும் சிற்றுரையாற்றினர்.

ஆஸ்டின் சௌந்தர்
ஆஸ்டின் சௌந்தர்

சௌந்தர் பேசும்போது, "விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) நண்பர்கள் நடத்தும் பூன் இலக்கிய முகாமில் கம்பராமாயணம் அமர்வில் பேசப்பட்ட பாடல்கள்தான் இந்த இசை நிகழ்விற்கான ஆதாரக்கனவை உருவாக்கியது . கம்பராமாயணத்தையும் தமிழ் இலக்கியத்தையும் அமெரிக்காவில் வாழும் இரண்டாம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதன் அவசியத்தை உணர்ந்து,சிலர் பங்கேற்று இந்த நிகழ்வின் அங்கமாக இருப்பதை மறக்க முடியாது. இங்கே பாடிய பாடல்களிலேயே, அதிக ஸ்வரங்களைக் கொண்டது 'தோள்கண்டார் தோளே கண்டார் 'பாடல்தான்.அதைச் சாத்தியமாக்கியது ப்ரியா க்ருஷும் இந்தக் குழுவும்தான் " என்றார்.

"ஸ்கந்த நாராயணன் நல்ல தாளம் லயம் ஞானம் உள்ளவர் .இந்த நிகழ்வின் பயிற்சி முழுதும் சூம் இணைய சந்திப்பு வழியாக நடந்தாலும், மிருதங்கம் வாசித்த ராஜு பாலனும், வயலின் வாசித்த உமா மகேஷும் ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாசிப்பதைப் பிரமிப்புடன் பார்த்தோம் '',என்று அவர் கூறிய போது கரவொலியால் அரங்கம் நிறைந்தது.

"இந்த நிகழ்விற்காக ப்ரியாவும், ராஜனும் நான்கு மாதம் பயிற்சி செய்தனர். இப்படி ஒரு இசை அனுபவத்தை அனைவருக்கும் கொடுத்ததற்கு நன்றி. நியூ யார்க்கில் ஏப்ரல் 2026-ல் நடக்கவிருக்கும் வாழும் தமிழ் விழாவில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள், அமெரிக்க ஆங்கில எழுத்தாளர்கள், பதிப்பகத்தினர், இரண்டாம் தலைமுறையினர் எனக் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.தமிழ் நவீன இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கும், தமிழ் அறியாதோருக்கும் எடுத்துச்செல்லவிருக்கும் அந்த விழாவில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

கோடை வெயிலின் வெப்பம் தாக்கத் தொடங்கியிருக்கும் இப்போதைய அமெரிக்கச் சூழலில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சி தந்த நிறைவில் குளிர்ந்த மனதோடு விடைபெற்றனர் .

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com