பிரபல பத்திரிகை ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வி : எழுத்தாளரின் மனைவியின் மனம் எப்படி இருக்கும்?
'இவர் எதை எழுதினாலும் படித்துத் தொலைய வேண்டி உள்ளது ;பாராட்ட வேண்டியுள்ளது என்று இருக்கும் ' என்பது பதில்.
எழுத்தை மட்டுமே முழு நேரமாக நம்பி இருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள் உலகியல் வாழ்க்கையின் நெருக்கடியில் இருப்பதால் ஓர் எழுத்தாளரின் மனைவியாக இருப்பது விசித்திரமான, அதிருப்தியான, மன நிறைவற்ற ஒன்று என்று பொதுவாகக் கூறப்படுவது உண்டு.
அதனால் எந்த எழுத்தாளர் மனைவியின் குரலும் பதிவு செய்யப்படுவதில்லை. அவர்களது மனப்பதிவு என்னவாக இருக்கும்? 'இதுதான் எனது வாக்குமூலம் 'என்று யாராவது சொல்வார்களா? யாருக்கும் தெரியாது.ஆனால் ஓர் எழுத்தாளருக்கான விழாவில் அவரது மனைவியைப் பேச வைத்தார்கள் .அவரோ மேடை ஏறிப் பேசியவர் இல்லை.எனவே என்ன பேசுவாரோ என்று அவரது கணவரான எழுத்தாளர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.பேசி முடிக்கும் வரை எழுத்தாளரின் முகம் பதற்றத்தில் இருந்தது. இப்படி ஒரு சுவாரஸ்யமான தருணத்தை கீரனூர் ஜாகிர் ராஜாவின் படைப்புலகம் சார்ந்த விழாவில் பார்க்க முடிந்தது.
நற்றுணை கலந்துரையாடல் என்கிற இலக்கிய அமைப்பு சார்பில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம், அவரது ஆளுமை மற்றும் நூல்கள் குறித்த ஆய்வுரைகள் கொண்ட விழா டிஸ்கவரி புக் பேலஸின் பிரபஞ்சன் அரங்கத்தில் நடைபெற்றது.
கீரனூர் ஜாகிர் ராஜா பத்து நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், ஏழு தொகை நூல்கள் போன்றவற்றை எழுதியவர். கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, இந்து குழும விருது, விகடன், உயிர்மை, தமுஎச , பிரபஞ்சன் விருதுகள் போன்று சுமார் 20 விருதுகள் பெற்றவர்.கீரனூர் ஜாகிர்ராஜா தமிழிலக்கியத்தில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுப் பதிவுகளை எழுதும் படைப்பாளி. தமிழ் இஸ்லாமியர்களின் அடித்தள வாழ்க்கையை எழுதியவர்.
விழாவில் கீரனூர் ஜாகிர் ராஜாவின் படைப்புலகம் குறித்து உரைகள் இடம் பெற்றன.
படைப்புலகம் மற்றும் ஆளுமை குறித்தும் முதலில் ஜாகிர் ராஜாவின் உறவினரும் வாசகருமான, கீரனூர் பாபுத்தா பேசும்போது,
''இதுவரை கீரனூர் ஜாகிர் ராஜா பத்து நாவல்கள் எழுதி இருக்கிறார் .பழைய படங்களிலிருந்து சூப்பர் சீன்ஸ் என்று சில காட்சிகளை தொலைக்காட்சிகளில்,யூடியூபில் பார்க்கலாம் .அது போல ஒவ்வொரு நாவலிலும் மறக்க முடியாத காட்சிகளைச் சொல்லலாம்.அப்படிப்பட்ட தருணங்களாக நாவலில் சில பக்கங்களைச் சொல்லலாம்'' என்று தொடங்கி அவரது நாவல்களிலிருந்து காட்சிகளை எடுத்துச் சொன்னார். நாவல் ஒவ்வொன்றின் முக்கியமான நுண் தருணங்களையும் அவர் எடுத்துக் கூறினார்.அவர் ஒரு பேச்சாளராக வெளிப்படாவிட்டாலும் பேச வேண்டியதைப் பேசினார்.
அடுத்து பேசிய ஜாகிர் ராஜாவின் நண்பரும் வாசகருமான நேசன் பேசும்போது,கட்டுரைகள் குறித்துப் பேசினார். அது எழுத்தாளர் வாசகநண்பர் சார்ந்த அனுபவமாக வெளிப்பட்டது.
நேசன் பேசும்போது, ஜாகிர் ராஜாவுடன், தான் வாசிப்பின் மூலம் படிப்படியாக நெருங்கியதையும் தனது வாசிப்பு உலகத்தை அவர் விரிவடையச் செய்த விதத்தையும் இலக்கிய உலகத்திற்குள் தன்னை ஈர்த்துக்கொண்ட அனுபவத்தையும் குடும்ப நண்பராக மாறி இன்று வரை அந்த நட்பு தொடர்வதையும் பற்றி நெகிழ்ந்து பேசினார்.
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் பேசும்போது அவரது கதைகளை சொல்லத்தக்கவை, சொல்லத் தகாதவை என்று பிரிக்கலாம் என்றவர், அவரது கதைகளில் அகவயத் தன்மையை விட புறவயத்தன்மை அதிகம் உள்ளது என்று கூறினார்.அவரது பேச்சு ஜாகிர் ராஜாவின் ஒட்டுமொத்த படைப்புலகம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்தது எனலாம்.
கீரனூர் ஜாகிர் ராஜாவின் அனைத்தும் படைப்புகளையும் தொகுக்கும் முயற்சியில் சுரேஷ் பிரதீப் உள்ளார் என்பதை அறிய முடிந்தது.
எழுத்தாளரும் நற்றுணை அமைப்பைச் சேர்ந்தவருமான காளிப்ரஸாத் பேசும்போது ,
"ஏற்கெனவே நிகழ்ச்சி நடத்துவதாக இருந்து பெரும் மழையால் ஒத்திவைக்கப்பட்டு பெரு முயற்சிக்குப் பிறகு தற்போது மூன்றாவது முயற்சியில் இது நடக்கிறது ''என்று கூறினார்.
"இவருடைய 'குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை' மற்றும் 'காலத்தை விஞ்சி நிற்கும் கலை ' கட்டுரைத் தொகுப்பு எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது பெரிய வியப்பு உண்டாகிறது.பல எழுத்தாளர்களின் புனைவும் அபுனைவும் ஒரே மாதிரியாகத் தோன்றும். ஆனால் இவரது கதை வேறு, கட்டுரை வேறு என்று மாறுபட்ட தன்மையோடு இருக்கும்.புனைவுகளில் கேள்விகள் கேட்கும் அவர். அபுனைவில் ரசனைகளை வெளிப்படுத்துகிறார். தஞ்சை பிரகாஷை ஒரு குரு இடத்தில் வைத்துப் பார்க்கும் மாணவராக இவரைப் பார்க்க முடிகிறது'' என்றார்.
எழுத்தாளர் விஷ்ணுபுரம் ஜா. ராஜகோபாலன் பேசும்போது, பல எதிர்ப்புகளை கடந்தும் ஜாகிர் சவாலான சிக்கல்களான சமூகப் பிரச்சினைகளை தனது படைப்பில் கொண்டு வந்தவர் என்று பாராட்டினார்.அதற்கு உதாரணமாக அமைந்த அவரது கதைகளைச் சுட்டிக்காட்டினார்.
'"அவர் வெறும் யதார்த்தவாத படைப்பாளி மட்டும்தானா? அவர் எதையும் நியாயப்படுத்துவதில்லை.அப்பொழுதுதான் அங்கு இலக்கியத்தின் மதிப்பு வருகிறது. இலக்கியம் எப்போதும் நீதிபதி வேலையைச் செய்வது இல்லை.இலக்கியத்தின் பணி அவற்றைக் காட்டுவது மட்டும் தான். நீயே முடிவெடுத்துக் கொள் என்று சொல்வதுதான்.வாசகர்களிடம் குறிப்பிட்ட தகுதி உடைய வாசகர்கள் தான் அவரது படைப்பை நெருங்க முடியும் அதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை'' என்றார்.
பத்திரிகையாளர் குறள் பிரபாகரன் கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'ஹலால்' படைப்பு பற்றிப் பேசினார். அவர்
பேசும்போது,
"எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவை கதை சொல்லி, எழுத்தாளர் என்கிற பாகுபாட்டை உணர்ந்து கொண்டு அவரது கதைகளை அணுக வேண்டும் .நான் ஒரு வாசகனாகவே அவரைப் பற்றிய கருத்துக்களைச் சொல்ல முடியும், தவிர விமர்சகனாக அல்ல" என்றவர் , அவரது' ஹலால்' படைப்பைப் பாராட்டிப் பேசினார்.
எழுத்தாளர் ஜா. தீபா பேசும்போது ,தன்னுடன் படித்த மாணவியின் வாழ்க்கையை நினைவுகூர்ந்து,
'தேய்பிறை இரவுகளின் கதைகளை'ச் சிலாகித்துப் பேசினார். ஒரு பெண் தனது கருத்துக்களை வெளிப்படுத்த எவ்வளவு தளைகளைக் கடந்து வர வேண்டி இருக்கிறது என்றும் அப்படிப்பட்ட சமூக கட்டுமானங்களைப் பற்றியும் பெண்களது உணர்வுகளைப் பற்றியும் ஜாகிர் ராஜா எழுதி உள்ளார் என்று குறிப்பிட்டார்.
"இந்த தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே ரமலான் காலத்தில் நடப்பதாக உள்ளன.இந்தத் தொகுப்பில் நிறைய பெண் மையமிட்ட கதாபாத்திரங்கள் உள்ளன .நிறைய வித விதமான பெண்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.இந்த தொகுப்பில் 'குடமுருட்டி ஆற்றின் கரையில்' என்கிற கதை எனக்கு மிகவும் பிடித்தது .அதில் பல அடுக்குகள் உள்ளன. கதைகளில் அவர் கேட்க வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அதற்கு தனது பலமான இலக்கியத்தையும் எழுத்தையும் கையாளுகிறார் என்று அவரைப் படிக்கும்போது தோன்றுகிறது" என்றார்.
ஜாகிர் ராஜாவின் பக்கத்து ஊர்க்காரராகவும் , எழுத்தில் சக பயணியாகவும் இருக்கும் என். ஸ்ரீராம் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ,ஜாகிர் ராஜாவின் ஆளுமை பற்றியும் படைப்புகள் பற்றியும் தொட்டுத் தொட்டுப் பேசினார்.
"இவர் தனது படைப்புகளில் எதையும் யாரையும் புனிதப் படுத்துவதில்லை.அகச்சிக்கலுக்கான முடிவையும் சொல்வதில்லை.அவர் எழுத்துக்கான வடிவங்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
எழுத்துக்குள் ஜாகிர் ராஜா இருக்கிறார், ஜாகிர்ராஜாவுக்குள் எழுத்து மட்டுமே இருக்கிறது.
மதம், நவீன இலக்கியத்தை மட்டுமல்ல சந்தோசத்தையும் துயரத்தையும் கூட பகடி செய்கிறார்.
எல்லா எழுத்தாளர்களுக்கும் பால்ய கால நினைவுகளையும் வேர் போல் இருக்கும் சொந்த மண்ணின் நினைவுகளையும் எழுதுவது என்பது நேர்ந்து கொண்டே இருக்கிறது. இவரும் அதை எழுத வேண்டும்.
இன்று படைப்பாளிகளுடன் உரையாடல் இல்லாமல் இருக்கிறது. எதைப் படித்தாலும் அதைப்பற்றி நல்லதோ கெட்டதோ கருத்தை கூறுங்கள்.ஒரு படைப்பைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதுங்கள் நன்றாக இருந்தாலும் சரி விமர்சனம் செய்வதாக இருந்தாலும் சரி.பிடிக்கவில்லை என்றால் கூட பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள். படைப்பாளிகளுக்கு அப்படிச் சொல்வது தான் பிடிக்கும் "
என்றார்.கொங்கு மண்ணின் நிலக்காட்சிகளை பற்றி விரிவாகப் பேசியவர் மேலும் இதைப்பற்றி ஜாகிர் ராஜா எழுத வேண்டும் என்றார்.
ஜாகிர் ராஜாவின் மனைவியான ராஜி என்கிற சல்மா பேசும்போது,
"இது எனக்கு முதல் மேடை எனவே பதற்றமாக இருக்கிறது பொறுத்துக் கொள்ளுங்கள்.
நான் அவரது முதல் வாசகி என்பதில் பெருமைப்படுகிறேன். திருமணமான புதிதில் எழுத்து ,வாழ்க்கை என்று அவர் இருப்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன.அவர் நாவல் எழுதத் தொடங்கும் போது அவரை விட எனக்கும் பதற்றமாக இருக்கும் .
'மீன்காரத்தெரு' எழுதும் போது முதலில் பதற்றமாக இருந்தது. அப்போது சென்னையில் அவர் வேலை பார்த்தார். வேலையில் சேர்ந்து மூன்று வாரத்தில் அதைத் தொடங்கினார் .அதற்கான வெற்றி என்ன என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை .ஆனால் ஈரோட்டில் விருது வழங்கும்போதுதான் அதைப் பற்றி எனக்குப் புரிந்தது.
கதை எழுதிவிட்டு அதை எனக்கு வாசித்துக் காட்டுவார். நான் சந்தேகங்களைக் கேட்டால் அதற்கு விளக்கம் அளிப்பார். வர்ணனைகள், அதில் ஏதாவது பிழைகள் தென்பட்டால் கூறுவேன் உடனே திருத்திக் கொள்வார்.
'மீன்காரத் தெரு 'நாவல் வந்த காலத்தில் மிரட்டல் போன்கள் வரும். நான் அதையெல்லாம் அவரிடம் சொல்வதில்லை.அவர் சென்னையில் வேலை பார்த்தபோது எட்டு ஆண்டுகள் அவர் இல்லாமல நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு தஞ்சையில் இருந்தேன் . மாதம் இருமுறை வந்து பிள்ளைகளை பார்த்துவிட்டுச் செல்வார் .அவருக்கு ஒரு முறை சாலை விபத்து ஏற்பட்டது. ஒரு காலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் அவரது வலிதெரியாமல் இருக்க நண்பர்களை அவருடன் பேச வைப்பேன்.
அப்போது அவர் 'வடக்கே முறி அலிமா 'எழுதினார். அவர் பிள்ளைகளுடன் உடன் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு. அது எங்களுக்கும் இருக்கும்.
அவர் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் பிள்ளைகளில் மகளுக்கு ஆயிஷா முத்தமிழ் என்றும் பையனுக்கு முகமது பாரதி என்றும் பெயர் வைத்தார். பிள்ளைகளும் வெளியே செல்லும்போது 'எங்களது அப்பா எழுத்தாளர்' என்று பெருமிதமாகக் கூறுவார்கள். அவர் எழுத்தாளராக இருப்பதால் அப்படிப் பெயர் வைத்திருப்பதால் பெருமையும் உண்டு; எங்களுக்கு இழப்புகளும் உண்டு.அடிக்கடி வெளியே செல்வதால் குடும்பத்தினருடன் நேரம் சரியாகச் செலவிட முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. என் பையனை எல்கேஜி யில் சேர்க்கும் போதும் அவர் இல்லை. அவன் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும்போதும் அவருடன் இல்லை. இப்படி ஏகப்பட்ட இழப்புகள் உண்டு. என் பையனுக்கு முகமது பாரதி என்று பெயர் வைத்த போது அதைப் பெரிய பெருமையாகச் சொல்வோம். அவன் அரபி பாடத்தை நன்றாகப் படிப்பான், அரபியில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினான். அவனுக்குத்தான் முதல் பரிசு என்று அறிவிக்கப்பட்டது ரூ5000 பரிசு, சான்றிதழ் என்றும் கூறினார்கள்.ஆனால் விழாவில் ஒன்றரை மணி நேரம் கடந்தும் அவனைப் பரிசு வாங்க அழைக்கவில்லை. இறுதியில் ஆறுதல் பரிசு என்றார்கள். ஏன் என்று அரபி ஆசிரியரிடம் கேட்டபோது 'உங்கள் பையன் பெயருடன் பாரதி பெயர் இருப்பதால் நிராகரிக்கப்பட்டது' என்றார்கள்.பையன் வருத்தமாக இருந்தான். அவருக்கு திருச்சி எஸ் ஆர் வி படைப்பு பரிசு கிடைத்த போது ஒரு பாரதிதாசன் சிலை கொடுத்தார்கள் .அதை அவனுக்கு அவர் பரிசாக அளித்தார் .அப்போது 'அந்த விருதை விட இதுதான் முக்கியமான விருது 'என்றார்.
அவன் மிகவும் மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டான் . அப்போது அது அவனுக்குப் புரியவில்லை ஆனாலும் அந்தச் சிலையை இப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கிறான்.
அவர் சென்னையில் வேலை பார்த்தபோது மகனின் கை எலும்பு முறிந்தது .அவர் எழுத்துப் பணி பாதிக்கக் கூடாது என்று நான் அதை அவரிடம் சொல்லவில்லை. அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து சரியாகி ஒருமாதம் கழித்துப் பார்த்தபோதுதான் கூறினேன் .அவரது எழுத்துப் பணி பாதிக்கக் கூடாது என்பதற்காகக் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் அவரிடம் சொல்லாமல் மறைப்பேன். இது மாதிரி பல சோகங்களை மறைத்துள்ளேன் .
அவர் ஒரு கதையோ நாவலோ எழுதுவதாக இருக்கும்போது அதற்கான சரியான வடிவம் வரும் வரை மிகவும் பதற்றமாக இருப்பார் . அப்படிச் சரியாக வந்த பிறகு உற்சாகம் வந்துவிடும். குடும்பத்துடன் மிகவும் ஜாலியாக சந்தோஷமாக பாட்டுப் பாடிக் கொண்டிருப்பார்.
எப்போதும் பிள்ளைகள் அவரை ஊக்கப் படுத்துவார்கள். எப்போதும் 'எழுதுங்கத்தா' என்றுதான் மகன் கூறுவான் .எனது பெண்ணும் யாருக்கும் தெரியாமல் அவரது புத்தகங்களை எடுத்துப் படிப்பாள்.அவர் கூட இல்லாத காலங்கள் எங்களுக்குப் பெரிய இழப்பாகும் .ஆனாலும் அதற்கு ஈடாக அவருக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களும் குடும்பங்களும் பெரிய விஷயமாக நான் நினைக்கிறேன்.
தமிழ்ச்செல்வன் அப்படி ஒருவர் .அவரை எனது பிள்ளைகள் பெரியப்பா என்று தான் கூப்பிடுவார்கள்.
கொரோனா வந்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.பல்ஸ் எல்லாம் குறைந்து நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அப்போது நேசன் தைரியமாக வந்து அவ்வளவு கவனித்துக் கொண்டார்.வீட்டில் கர்ப்பிணி மனைவி இருப்பதையும் பொருட்படுத்தாமல் இரவு இரண்டு மணிக்கு கூட வந்து நோய்த் தொற்று பற்றிக் கவலைப்படாமல் என்னை மருத்துவமனை அழைத்துச் சென்று பார்த்துக் கொண்டார்.
அப்படிப்பட்ட நண்பர்களைப் பெரிய சொத்து போல் நான் நினைக்கிறேன்.அதேபோல் குப்பு வீரமணி என்னை தனது பெண்ணாக பாவித்து அன்பு காட்டுகிறார்.ராயகிரி சங்கர் அண்ணன், சுனில் அண்ணன் சுரேஷ் பிரதீப், காளிப்பிரஸாத் எல்லாம் தாய்மாமன்கள் போல் எங்கள் குடும்ப உறவுகள் ஆகிவிட்டனர்.
இப்படிப்பட்ட நல்ல இதயங்கள் எல்லாம் அவரது எழுத்தின் மூலம் கிடைத்தவை.
திருமணமான பிறகு கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என் பெண் விருப்பப்பட்டாள்.ஆனால் முடியவில்லை. என் கணவரிடம் எனக்குப் பிடித்தது புதிதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்துவார் . அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தது. அவர் எப்போது எழுத ஆரம்பிப்பார் என்று சொல்ல முடியாது .'குடமுருட்டி ஆற்றின் கரையில்' நள்ளிரவு மூன்று மணிக்குத் திடீரென எழுந்து ஒரே அமர்வில் எழுதி முடித்தார். அதேபோல் 'வெம்மை'கதையையும் ஒரே நாளில் எழுதினார்
அவரிடம் பேசும் போது நாவல் பற்றி எல்லாம் நாங்கள் வெளியே மரத்தடியில் அமர்ந்து மூன்று மணி நான்கு மணி நள்ளிரவில் கூட பேசிக் கொண்டிருப்போம். விவாதித்துக் கொண்டிருப்போம். அப்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும். அவர் கதை சொல்வதை நான் மட்டுமல்ல அருகில் இருக்கும் மாமரமும் நெல்லி மரமும் கூட கேட்கும் .அவையும் அந்த உரையாடலுக்குச் சாட்சியாக இருக்கும். அவர் கதைகளை 'என்னுடையது ' என்று கூறும்போது எனக்கு வருத்தமாக இருக்கும். அவரது ஒவ்வொரு இடத்திலும் நான் உடன் இருக்கிறேன். அவர் எழுத்தில் கூடவே இருப்பதாக நினைக்கிறேன்.அவர் மேலும் பல விருதுகள் வாங்க ஆசைப்படுகிறேன். அவருக்கு எழுத நான் என்றும் உறு துணையாக இருப்பேன் .அவர் எழுதுவதைத் தவம் என்றால் நான் கூடவே இருப்பதை வரம் என்று நினைக்கிறேன்" இவ்வாறு பேசினார்.
ஏற்புரையாக எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா பேசும் போது,
''இது முழுக்க முழுக்க ரசனையைச் சார்ந்த உரையாடலாக இருந்தது அது எனக்கு மகிழ்ச்சி .விமர்சனம் என்கிற பெயரில் சுக்கு நூறாகக் கிழித்துத் துவைத்து போடுகிற விமர்சனங்கள் எல்லாம் இல்லாமல் நண்பர்கள் என்னைப் பாதுகாத்தார்கள். குறிப்பாக என் மனைவி பேசும்போது முதல் முதலில் பேசுவதால் சரியாகப் பேச வேண்டுமே என்று எனக்கு பக் பக் என்று இருந்தது. ஏனென்றால் என்னை முழுமையாகச் சகித்துக் கொண்டிருந்தவர் அவர்.
அங்கீகாரம் விருதுகளால் தீர்மானிக்கப்படுவது என்பது தமிழ் இலக்கியச் சூழலில் உள்ள நிலையாக உள்ளது.
எனக்கு 40 வயதை கடக்கும் போது இங்கே இப்போது இருக்கிற டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவரது நண்பர் சாகித்ய அகாடமி விருதுக் குழுவில் இருக்கும் ஒரு பேராசிரியர் நண்பரை அருகில் வைத்து கொண்டு போன் செய்தார். அண்ணே உங்கள் 'தேய்பிறை இரவுகளின் கதைகள்' யுவ புரஸ்கார் விருதிற்குத் தேர்வு ஆகும் நிலையில் இருக்கிறது என்றார். உங்கள் வயசு மட்டும் சொல்லுங்க என்றார்.அப்போது நான் 40 வயதைக் கடந்து விட்டேன்.அது 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கான விருது. நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?
ஒரு எழுத்தாளரின் வெற்றியைத் தீர்மானிப்பது விருதுகள் அல்ல. இங்கே பேசிய பேச்சாளர்கள் அனைவருமே எனது படைப்பை இவ்வளவு நுட்பமாக அணுகி இருக்கிறார்கள்;பேசிய ஒவ்வொருவரும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பேசினார்கள். என் மனைவியை எழுதச் சொல்லி இருந்தால் எழுதியிருப்பார்கள் .அவ்வளவு அனுபவங்கள் அவருக்கு உண்டு.குடும்பச் சுமை இருந்ததால் எழுதவில்லை.அது மட்டும் இல்லாமல் ஏற்கெனவே இவன் ஒருத்தன் இருக்கிறான். அதற்கே அடிக்கடி மிரட்டல் போன்கள் வந்து கொண்டிருக்கின்றன
இதில் நம்ம வேற எழுத ஆரம்பித்தால் என்ன ஆகுமோ என்கிற பயம் வேறு அவர்களுக்கு இருந்திருக்கலாம்.
படைப்பாளனைத் திகைக்க வைக்கிற தருணங்களை சில நேரம் விமர்சகர்கள் கொடுத்து விடுவார்கள்.
இங்கே பேசியதை எல்லாம் கேட்டபோது சிலர் அப்படித் திகைப்பூட்டினார்கள்.இந்த நாளை என் இலக்கியப் பயணத்தில் மறக்க முடியாது .மிக்க நன்றி" என்றார் நெகிழ்ச்சியுடன்..
ஏற்புரை ஆற்றிய கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கேள்விகள் கேட்டனர். அது ஓர் இயல்பான கலந்துரையாடலாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் கா.சிவா,வாசு முருகவேல், அகரமுதல்வன்,டிஸ்கவரி வேடியப்பன்,பரிசல் செந்தில்நாதன்,இயக்குநர் கே.பி . வினோத்,பாலைவன லாந்தர், நூல்வனம் மணிகண்டன், பிருந்தா சாரதி, வாசகர் ஜெயவேல் போன்ற இலக்கிய முகங்களும் தென்பட்டன.
நிகழ்ச்சியை விக்னேஷ் ஹரிஹரன்,காளிப்ரஸாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இலக்கியச் செயல்பாடுகள் அருகி வரும் இக்காலச் சூழலில் படைப்பாளிகளைக் கொண்டாடும் விதத்தில் இப்படிப்பட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நற்றுணை அமைப்பின் பணியையும் பாராட்டத்தான் வேண்டும்.