தமிழ்நாடு இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது!-ஜெயமோகன்    

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது சோ விஜயகுமாருக்கு வழங்கப்பட்டபோது
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது சோ விஜயகுமாருக்கு வழங்கப்பட்டபோது
Published on

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பில் 2025 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் இலக்கிய விருது விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. 2025 க்கான விருதாளராக இளம் கவிஞர்  சோ. விஜயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விழாவில் விருது வழங்கப்பட்டது.

விஷ்ணுபுரம் விருது விழாக்கள் எப்போதுமே விருது கொடுப்பதுடன் நின்றுவிடும்  சம்பிரதாய விழாவாக இல்லாமல் அதை முழுநாள் இலக்கிய விழா கொண்டாட்டமாக நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் குமரகுருபரன் விருது விழாவின் முதலில் இடம்பெற்றது சிறுகதை அரங்கு. இதில் எழுத்தாளர்கள் விஜயராவணன் ,ரம்யா பங்கேற்றனர். 

எழுத்தில் சிறுகதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதைப் பற்றிக்  கேட்கப்பட்டது.

ரம்யா பேசும்போது,  "முதலில் சிறுகதை வடிவத்தைத்தான் எழுத முடியும் .சிறுகதையில் உச்சம் தொட்டவர்கள்  ஏராளம் பேர் இருந்தாலும்,நான் முதலில் வாசித்தது ஜெயமோகனின் புனைவுக் களியாட்டுச்சிறுகதைகள் தான். அதன் பிறகு வடிவம் எனக்கு பிடிபட்டது. அதனால் முதலில் சிறுகதை வடிவத்தைத் தேர்வு செய்தேன். எனக்குள் எழும் கேள்வியை எழுதிப் பார்க்கும்போது சிறுகதை  ஏற்ற வடிவமாகவும் இருந்தது.எனவே சிறுகதையைத் தேர்ந்தெடுத்தேன்"என்றார்.

விஜயராவணன் பேசும்போது, "சிறுகதை வடிவத்தை நான் தேர்ந்தெடுத்த காரணம், அது தான்  சமீபத்திய வடிவமாக இருக்கிறது.கதைக்கரு, உத்தி, வடிவம் சார்ந்து நிறைய சோதனை முயற்சிகள் செய்வதற்கு வாய்ப்புள்ள ஒரு வடிவமாக இருப்பதால் அது எனக்கு நெருக்கமான வடிவமாக இருந்தது. எனவே அதை நான் தேர்ந்தெடுத்தேன்" என்றார். இந்த அமர்வை விஜய பாரதி நெறிப்படுத்தினார்.

 கவிதை அரங்கில் றாம் சந்தோஷ் வடார்க்காடு, சசி இனியன் கலந்து கொண்டனர். றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முகவேல் விமல் குமார். இவர் 8 புனைபெயர்களில் எழுதி வருகிறார். இதுவரை 8 நூல்கள் எழுதியுள்ள இவர், ஆத்மாநாம் விருது பெற்றவர். உடன் உரையாடலில் இடம்பெற்ற சசிகலா தேவி என்கிற இயற் பெயரைக் கொண்ட சசி இனியன் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்.

கவிதை எழுத வந்தது பற்றி சசிஇனியன் பேசும்போது, 

"நான் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவள். அதனால்  சைவ சித்தாந்தத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு விஷயத்தை சாதாரணமாகவும் பார்க்கலாம். தத்துவார்த்தமாகவும் பார்க்கலாம்.அப்படி தத்துவார்த்தமாக அணுகிப் பார்க்கும்போது எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. இப்படித்தான் கவிதை எழுத ஆரம்பித்தேன். அப்படித்தான் ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலம் கடந்து பெண்மையின் உணர்வுகளைக் கவிதைகளில் சொல்லி இருப்பேன் "என்றார்.

தத்துவத்தின் தாக்கம் பற்றி றாம் சந்தோஷ் பேசும்போது, 

 " என் எழுத்தில் வைஷ்ணவத்தின் தாக்கம் உண்டு. ஆனால் அது  கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு என் கவிதைகளில் இருக்கும். தத்துவத்தை நோக்கி நான் செல்லவில்லை.தத்துவத்தை சாராம்சப்படுத்துவது எனக்குப் பிடிக்காது "என்றார். இருவரும் வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள்.

இந்த அமர்வை ஆனந்தகுமார் நெறிப்படுத்தினார்.

அடுத்ததாக இடம்பெற்றது, மனுஷ்யபுத்திரன், போகன் சங்கர் ,வெய்யில் ஆகியோரின் கவிதை குறித்தான விவாத அரங்கு.

 'சமகால கவிதைப் போக்கும் இளம் கவிஞர்களுக்கான சாத்தியங்களும் 'என்ற தலைப்பில் கலந்துரையாடினார்கள்.

நன்றாக ஆரம்பித்த கலந்துரையாடல், வெய்யில் பேசும் போது சூடு பிடித்தது.

" புதிதாக எழுத வருபவர்கள் வளரும் கவிஞர்கள் unlearn செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது மனுஷ்ய புத்திரன், போகன் சங்கர் இருவரும் அதை மறுத்து தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் வெய்யில் அதே கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

அந்த உரையாடலின் ஒரு சிறு இழையாக இடம் பெற வேண்டிய அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அது அந்த உரையாடலின் பல்வேறு திறப்புகள் நிகழும் சாத்தியங்களுக்கு இடையூறாகிவிட்டது. பிறரைப் பேச விடாமல் அவரே பேசியது ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி விவாதமோ என்று தோன்றியது. மற்ற இருவரும் வேறு திசையில் கதவுகளைத்திறந்தாலும் வெய்யில் அனைத்தையும் மூடிக்கொண்டே இருந்தார். இறுதியில் நினைத்ததை விட்டு எங்கோ சென்று விட்டோம் என்று அவரே பேசும் அளவிற்கு திசை மாற்றம் நிகழ்ந்தது.கன்னட சாகித்ய விருது இரண்டு முறை பெற்ற கன்னட - ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திராவின் அரங்கு அடுத்ததாக இடம்பெற்றது .

சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர், "ஒவ்வொருவரிடமும் நல்ல அழகான ஒரு கதை இருக்கிறது .பிறந்த இடத்தை வைத்து இலக்கியத்தை பாகுபடுத்தி விட முடியாது. பால்புதுமையினர் பற்றி முதலில் நான் எழுதிய போது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பலரும் இது பற்றி ஏன் எழுதுகிறாய் என்றார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமான பிறகு சமூகம் மாறி உள்ளது" என்றார். தனது பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ள 110 நூல்களில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை 36 என்றும் வெளி மொழி சிந்தனைகளுக்கு வாய்ப்பு அளித்து வருவதைப் பற்றியும் குறிப்பிட்டுக் கூறினார். அவரது உரையாடல் தங்கு தடை இல்லாமல் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. இவ்வரங்கை பேராசிரியர் பத்மநாபன் தொகுத்தளித்தார்.

 இந்த அரங்கில் ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நூலின் கன்னட மொழியாக்கம் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பாளர் சாந்தி கே. அப்பண்ணா.இன்னொரு நூல் 'விந்தியா என்னும் தீற்றல்' வெளியிடப்பட்டது. இதை நீலி பதிப்பகம் முதன் முதலில் வெளியிடுகிறது.

பார்வையாளர்கள் கூட்டம்
பார்வையாளர்கள் கூட்டம்

கன்னட சாகித்ய விருது இரண்டு முறை பெற்ற கன்னட - ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திராவின் அரங்கு அடுத்ததாக இடம்பெற்றது .

சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர், "ஒவ்வொருவரிடமும் நல்ல அழகான ஒரு கதை இருக்கிறது .பிறந்த இடத்தை வைத்து இலக்கியத்தை பாகுபடுத்தி விட முடியாது. பால்புதுமையினர் பற்றி முதலில் நான் எழுதிய போது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பலரும் இது பற்றி ஏன் எழுதுகிறாய் என்றார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமான பிறகு சமூகம் மாறி உள்ளது" என்றார். தனது பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ள 110 நூல்களில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை 36 என்றும் வெளி மொழி சிந்தனைகளுக்கு வாய்ப்பு அளித்து வருவதைப் பற்றியும் குறிப்பிட்டுக் கூறினார். அவரது உரையாடல் தங்கு தடை இல்லாமல் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. இவ்வரங்கை பேராசிரியர் பத்மநாபன் தொகுத்தளித்தார்.

 இந்த அரங்கில் ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நூலின் கன்னட மொழியாக்கம் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பாளர் சாந்தி கே. அப்பண்ணா.இன்னொரு நூல் 'விந்தியா என்னும் தீற்றல்' வெளியிடப்பட்டது. இதை நீலி பதிப்பகம் முதன் முதலில் வெளியிடுகிறது.

மேடையில் விருந்தினர்கள்
மேடையில் விருந்தினர்கள்

மாலையில் குமரகுருபரன் விருது விழா தொடங்கியது. கவிஞர் விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். விழா சிறப்புரைகள் எழுத்தாளர் வசுதேந்திரா,  கவிஞர் போகன் சங்கர் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன. குமரகுருபரன் குறித்த உரை ஒன்றை அவரது நண்பரும் சென்னை மண்டல அஞ்சல்துறைத் தலைவருமான மருத்துவர் ஜி.நடராஜன் வழங்கினார்.

இளம் கவிஞர் விருதை சோ. விஜயகுமார் விருப்பப்படி அவரது தாயார் பெற்றுக் கொண்டார். அப்போது போகன் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கினார். 

விருதைப் பெற்றுக் கொண்ட பின் சோ. விஜயகுமார் ஏற்புரையாற்றினார். அவர் தன் பேச்சில் இறுதியாகச் சொன்னது, " என் சொல் அழியாது; என் சொல்லால் அழியும் 'என்கிற மனுஷ்ய புத்திரனின் வார்த்தையைத்தான்.

நிறைவாக எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்:

 " காலை முதலே ஒரு இலக்கிய விழாவாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு முழுநாள் நிகழ்ச்சியாக இதை நடத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை முன்வைப்பது என்பது அந்த அரங்கினுடைய நோக்கம். இந்த ஆண்டு கூடுதலாக இளம் எழுத்தாளர்களைப் பற்றி முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் பேசக்கூடிய ஒரு அமர்வு நிகழ்ந்தது மிகச் சிறப்பான ஒரு உரையாடலாக அது அமைந்தது. இந்த நிகழ்வு அதனுடைய முத்தாய்ப்பு முடிச்சு . குமர குருபரன் மறைந்த பிறகு தொடங்கப்பட்ட இந்த விருது தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இது எட்டாவது விருது. இந்த விருதை இதற்கு முன்பு பெற்றவர்கள் மிகத் தீவிரமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விருதுகளைக் கொடுப்பதில் இரண்டு கோணங்கள் இருக்கின்றன. நாங்கள் அளிக்கக்கூடிய மூன்று விருதுகளில் இரண்டு விருதுகளுமே பெரும்பாலும் சாதனையாளர்களுக்கு அளிக்கப்படுவை. அவர்கள் ஏற்கெனவே தங்களுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான பணிகளை ஆற்றி அதற்கான ஏற்பைப் பெறாதிருந்தவர்கள் . எங்களுடைய மரியாதையை அந்த விருதின் வழியாகத் தெரிவிக்கிறோம். இந்த ஒரு விருது சாதனை படைக்க போகிறவர்களுக்கான விருது. அவர்களை அடையாளம் காட்டுவது என்பது ஒரு சவாலான பணி, சிக்கலானதும் கூட. அது ஒரு கூட்டு முடிவாகத்தான் எடுக்க முடியும்.    பெரும்பாலும் இந்த ஒரு விருதுக்கான விவாதங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக எங்கள் நண்பர் குழுவில் நடப்பது வழக்கம். வெவ்வேறு பெயர்கள் வந்து செல்லும். அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்போம். சில சமயம் மிகை உற்சாகத்தோடு சிலர் சில பெயர்களை சொல்லுவார்கள். அப்படி சொல்லப்பட்ட ஒரு பெயர்தான் விஜயகுமாருடைய பெயர்.

சென்ற புத்தக கண்காட்சி முடிந்த உடனே ஊருக்குத் திரும்பி போகும்போதே கடலூர் சீனு போன் போட்டு இந்த விருது, இவர்களுக்கு எல்லாம் கொடுக்கப் போகிறோம் என்றார். "இல்ல நீங்க மட்டும் முடிவு பண்ண முடியாது சீனு" அப்படின்னு சொன்னேன். "இல்ல இல்ல நான்    முடிவு பண்ணிட்டேன்" அப்படின்னார். கிட்டத்தட்ட அவர் முடிவு பண்ண படியே இந்த விருது விஜயகுமாருக்கு அளிக்கப்படுகிறது.நம்முடைய நண்பர்கள் விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் ஒரு 15 -20 பேர் முழுநேர கவிதைத் தேடலில் இருக்கக்கூடியவர்கள் .எல்லா ஆண்டும் எல்லா நாளும் கவிதையைத் தேடிப் படிக்கக் கூடியவர்கள் . தமிழில் எழுதப்படும் எல்லா கவிதையும் படிக்கக் கூடியவர்கள் . ஆனால் கவிஞர்கள் அல்ல. கவிதை எழுதாமல் கவிதை படிக்கக்கூடிய ஒரு 15 -20 பேர்தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே விஷ்ணுபுரம் அமைப்புக்குள்தான் இருக்கிறார்கள். ஆகவே  ஒரு பொது விவாதத்தின் வழியாகத்தான் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மனுஷ்யபுத்திரன் இங்கே இருக்கிறார் அவருடைய மரபைச் சேர்ந்தவர் என்று சொல்லத்தக்கவர் இரண்டாவது விருது பெறப்போகிறார் .முன்பு சதீஷ்குமார் சீனிவாசனும் அவருடைய பாணி அல்லது அவருடைய எழுத்து முறையில் இருந்து இன்ஸ்பயர் ஆனவர். ஆனால் இவர்களுக்கும் அவருக்கும் எந்த பொதுத்தன்மையும் இல்லை என்பது சுட்டிக்காட்ட வேண்டியது. அதாவது சதீஷ் குமார் சீனிவாசன் கவிதையில் ஒரு துளி கூட மனுஷ்யபுத்திரன் இல்லை. அதேபோல   விஜயகுமாருடைய கவிதையில் ஒரு துளி கூட மனுஷ்யபுத்திரன் இல்லை. அதுதான் சுவாரசியமானது. ஒருவரை முன்னுதாரணமாக கொள்வது அல்லது அவரிடமிருந்து இன்ஸ்பையர் ஆவது ஒன்று .ஆனால் இன்ஸ்பிரேஷன் மட்டுமே.  பாணியையோ மொழியையோ எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அது .ஆனால் மானசீகமாக தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்து கொண்டிருப்பது .இதுதான் இலக்கியத்தினுடைய சரியான தொடர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.

விழா அரங்கில்
விழா அரங்கில்

ஆளுமையை உருவாக்குதல்

 அன்பர்களே இந்த விருது குமரகுருபரன் நினைவைத் தொடர்ந்து பேணி வருகிறது . கேள்வி ஒன்று எழலாம், சில சமயம் விவாதங்களில் இது வருவதுண்டு.   ஒரு கவிஞனுடைய பெயர் ,குமரகுருபரன் என்ற பெயர் ஒரு புகைப்படம் அவனைப் பற்றிய ஒரு சித்திரம் தொடர்ந்து ஏன் பேணப்பட வேண்டும் ?கவிதை இங்கேதான இருக்கப்போகிறது கவிதை இருந்தால் போதுமே கவிஞன் என்று ஒருவனை அதற்கு பின்னாலே தொடர்ந்து ஏன் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறோம்? ஒன்று சொல்லப்போனால் இது ஒரு ஆளுமை உருவாக்கம், ஒரு ஆளுமையை முன்னிறுத்துவதுதான் , மிக முக்கியமானது.  அந்த ஆளுமையுடைய குரலாக முகமாக வெளிப்பாடாகத்தான் கவிதை இருக்க முடியும் . ஆகவே நாம் குமர குருபரனின் அத்தனை கவிதைகளுக்கும் பின்புலமாக ஒரு குமர குருபரனை நிலைநிறுத்த வேண்டி இருக்கிறது . 30 ஆண்டுகளாக தொடர்ந்து இதைச்செய்து வந்திருக்கிறோம். நண்பர்களே இன்றைக்கு நமக்கு வள்ளுவருக்கு ஒரு முகம் இருக்கிறது. அது நாம் உருவாக்கி கொண்ட முகம். வள்ளுவர் எப்படி நமக்குத் தெரியாது. வள்ளுவரைப் பற்றிய மிக பழைய முகம் என்பது ஒரு சமணத் துறவி தியானத்தில் அமர்ந்திருக்கக்கூடிய    முகம்தான். இன்று இருக்கக்கூடிய முகம்  18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்கு தமிழகத்திலே மிகப்பெரிய சிலையை நாம் வைத்திருக்கிறோம். கம்பனுடைய முகம் நாம் வரைந்து உருவாக்கினது. அப்படி தொடர்ந்து நாம் கவிதையை ரசிக்கும் போது அதற்கான ஆளுமையை கவிஞன் என்ற ஆளுமையை பின்னால் புனைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் .இதிலேயே இரண்டு கட்டங்கள் இருக்கின்றன .நம் முன் மனிதனாக கவிஞன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவனுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள்,   பிரச்சினைகள் அவனுக்கும் நமக்குமான உறவு எல்லாம் சார்ந்து ஒரு கவிஞனின் சித்திரம் ஒன்று இருக்கிறது. அப்புறம் அந்தக் கவிஞன் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி இருப்பான். அதெல்லாம் சேர்ந்துதான் அந்தக் கவிஞன் என்கிற அந்த உருவகம் இருக்கிறது. ஆனால் அவன் ,மறைந்த பிறகு நாம் வேறொரு வகையில் அவனைத் திருப்பி புனைய ஆரம்பிக்கிறோம். வேறொரு வகையில் அவனை டிஃபைன் பண்ண ஆரம்பிக்கிறோம். கிராப்ட் பண்ண ஆரம்பிக்கிறோம். அதிலிருந்து சில விஷயங்கள் வெளியே போகும். அதில் சில விஷயங்கள் கூடுதலாகும். சில விஷயங்கள் மிகைப்படுத்தப்படும். உதாரணமாக புதுமைப் பித்தனைப் பற்றி நமக்கு இன்றைக்கு இருக்கக்கூடிய சித்திரம். சில பல விஷயங்கள் க.நா.சு போன்றவர்களால் மிகையாக கொஞ்சம் சொல்லப்பட்டவை, அவருடைய ஜோவியல்னஸ் அல்லது அவருடைய ஒரு சினிக்கல் தன்மை என்பது க.நா.சு -வால் திருப்பித் திருப்பி அடிக்கோடிடப்பட்டு அது கொஞ்சம் மேல வருகிறது. உங்களுக்கெல்லாம் தெரியும் புதுமைப்பித்தன் சொல்லும்போதே உதாரணமாக வரக்கூடிய ஒரு கதை உண்டு. ஒரு உடைந்த நாதஸ்வரத்தை வைத்துக் கொண்டு வந்து தன் வீட்டு முன்னால உட்கார்ந்து அபசுரமா வாசித்து தள்ளிட்டு இருந்தார். யாரோ ஒருத்தர் கேட்டாங்க என்னங்க இது கொடுமை    பண்றீங்க அப்படின்னு. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதறாரே அங்க போய் கேட்டியா அப்படின்னார். இந்த தன்மை புதுமைப்பித்தன் வந்து ஒரு ஆளுமை அதில் வருகிறது. இது நாம் புனைந்து அவர் மேல ஏற்றக்கூடியது.  இதுபோல ஒரு கவிஞனை நாம் மரணத்துக்குப் பிறகு மறுபடியும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் .இப்படி தொடர்ந்து ஆளுமை உருவாக்கங்கள் வழியாகத்தான் கவிதைகள் நிலைகொள்கின்றன. வரலாற்றில் பாரதி கூட யாமறிந்த கவிஞர்களில் என ஆளைத்தான் சொல்கிறார் .கவிதையை அல்ல . அந்த பட்டியலில் இருக்கக்கூடிய பெயர்கள் தான் முக்கியம்; அந்த ஆளுமைதான் முக்கியம். அந்த ஆளுமையை உருவாக்குவதற்காகதான் இந்த விருது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது அவ்வாறு ஆளுமையைக் கட்டமைப்பதற்காக அல்லது வலியுறுத்துவதற்காக அல்லது முன்வைப்பதற்காகத்தான்.

பார்வையாளர்களில் ஒரு பகுதி
பார்வையாளர்களில் ஒரு பகுதி

கவிஞனின் இயல்பு

இங்கே விவாதத்தில் வந்தது இரண்டு விஷயங்கள்தான் .ஒன்று ஒரு சூழலுடைய அல்லது வெளியே எங்கேயோ ஒரு எழுத்தாளன் கவிஞன் படிக்கக்கூடிய சூழலுடைய ரெஸ்பான்ஸ் மட்டுமாக அல்லது அதனுடைய பாதிப்பு மட்டுமாக அல்லது அதனுடைய விளைவு மட்டுமாக ஒரு கலைஞனோ கவிஞனோ இருக்கிறானா? அல்லது அதற்கு     நேர் எதிராக அதனுடைய ரெசிஸ்டன்ஸ் ஆக அவன் இருக்கிறானா? இதனுடைய  ஒரு எக்ஸ்டென்ஷனாக இன்னொரு கேள்வி கேட்கலாம். ஒரு சூழலுடைய சரியான பிரதிநிதித்துவமாக ஒரு கவிஞன் பேசுகிறானா? இல்லை ஒரு சூழலுடைய நேர் எதிரான ஒரு ஆளாகக் கவிஞன் நின்று கொண்டிருக்கிறானா?. இரண்டுக்கும் சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது .ஒரு சூழல் மேல இருக்கக்கூடிய கடும் கசப்பு, ஒவ்வாமை ,விலக்கம் ஒரு கவிஞன் உருவாக்க முடியாதா? இந்தக் கவிஞன் இந்த காலகட்டத்தின் ஒன்றைக் கூட பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, எனவே அவன் மகா கவிஞன் என்று ஒரு கவிஞனை நம்மால் சொல்ல முடியாதா ?அப்படிப்பட்ட கவிஞர் இருக்கதானே    செய்கிறர்கள். ஏன் என்றால் நான் இப்போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்  தொடராக வந்து கொண்டிருக்கிறது .அது இந்திய மரபு உருவாக்கிய மகத்தான மூன்று கவிஞர்கள் என்று தொடர்ந்து சமஸ்கிருத கவிஞர்கள் அத்தனை பேரும் சொல்லக்கூடிய மூன்று பேர் ஒருவர் வால்மீகி, இன்னொருத்தர் வியாசர், மூணாவது ,குணாத்தியர் .அந்தக் குணாத்தியர் கதையைத்தான் எழுதி கொண்டிருக்கிறேன் .ஆனால் குணாத்தியர் முன்னாடி எழுதின யாருடைய மரபையும் சேர்ந்தவர் அல்ல. பைசாசிக மொழியில் எழுதினார் என்று சொல்லப்படுகிறது. மொத்தமாக வேறு ஒரு உலகத்தை சார்ந்தவர் என்று   சொல்லப்படுகிறது .

 ஒரு கவிஞனுடைய இயல்பு என்பது என்ன?   என்னுடைய பார்வையில் கவிஞனுக்கு ரெப்ரசென்டேஷன் என்பது இரண்டாம் பட்சமானது என்றுதான் நான் நினைக்கிறேன். வேறுமாதிரி நினைக்கக் கூடியவர்கள் இங்கே இருக்கலாம்.  ரெப்ரசென்டேஷன் என்பது அதாவது பிரதிநிதிப்படுத்துவது கவிஞனுடைய வேலை அல்ல என்று எனக்கு தோன்றுகிறது. கவிஞனுடைய தனித்தன்மை கொடுக்கக்கூடிய ரெசிஸ்டன்ஸ் அதுதான் ஒரு கவிஞனை முக்கியமாக்குகிறது. ஒன்று அவனுடைய சமகாலத்திற்கு அவன் கொடுக்கக்கூடிய கடும் எதிர்வினை.அந்த எதிர்வினைதான் சமகாலத்துடைய எந்த ரசாயனத்தாலும் வேதிவினைக்கு ஆளாகாத ஒரு உலோகமாக நின்று கொண்டிருக்கக்கூடிய ஒரு தன்மை. அதுதான்    கவிஞனுடைய முக்கியமான பண்பு என நான் நினைக்கிறேன். அந்தக் சமகாலத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை அம்சங்கள் மட்டுமல்ல நல்ல அம்சங்களுக்கு அவனுக்கு பெரிய செல்வாக்கு இல்லாமல் இருக்கும். திருப்பி நான் இப்போது யோசித்துப் பார்த்தால் புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட சாத்தியமான ஒரு காலத்தில் வாழ்ந்தவர். தன்னுடைய தனிப்பட்ட கடிதங்களில் சுதந்திர போராட்டத்தை நிறைய எழுதி இருக்கிறார். ஒரே ஒரு கதைதான் சுதந்திர போராட்டத்தைப் பற்றி எழுதி இருக்கிறார். அதுவும் நக்கல் அடிச்சு எழுதி  இருக்கிறார்.தன்னுடைய காலகட்டத்தில் இருந்த ஒட்டுமொத்த தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பற்றி  ஒரே ஒரு கதைதான் எழுதி இருக்கிறார். அது நக்கலடிச்சு எழுதப்பட்ட கதை .ஆனால் இவரைத்தான்   மரபின் முதன்மை படைப்பாளியாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.ஆகவே எதிர்வினை என்பதும் அல்லது எதிர்நிலை என்பதும் கூட மிக முக்கியமான ஒரு விஷயம் என நான் நினைக்கிறேன். ஏன்?

ஜெயமோகன் உரையாற்றுகிறார்
ஜெயமோகன் உரையாற்றுகிறார்

ஒவ்வாமை அளிக்கும் சமகாலம்

ஒவ்வொரு காலமும் அந்த முந்தின காலத்தில இருந்து அப்படியே மாறிக்கொண்டே இருக்கும். இந்த வயதில் நாம் உணரக்கூடிய ஒன்று என்னவென்றால் காலத்திற்கோ வாழ்க்கைக்கோ தொடர்ச்சி என்று ஒன்று உண்டு என்பது நாம் உருவாக்கிக் கொள்ளக்கூடிய, நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு மாயை மட்டும்தான். நேற்றுக்கும் இன்றுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த காலம் என்பது முற்றிலும் வேறொன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தொடர்ச்சி ஒன்று இருக்கிறது. அது நாம் நாம் உருவாக்கிக் கொள்ளக்கூடியது .அதை உருவாக்குவது இலக்கியம் மட்டும்தான். புனை கதை மட்டும்தான். அதனுடைய ஒரு வடிவமாகிய இலக்கியம். அதாவது  நீண்ட காலமாக காவியங்கள். தொடர்ந்து கதைகளைச் சொல்லி, கவிதைகளைச் சொல்லி அதை நினைவில் நிறுத்தி நிறுத்தி காலத்தைப் புனைந்து கொண்டு வந்திருக்கிறோம்.  நீங்கள் வரலாறு என்று சொல்வது, பண்பாடு என்று சொல்வது இந்த நினைவுத் தொகுப்புதான்.   நினைவில் இருக்கிறது இலக்கியம் மட்டும்தான். ஆகவே இந்தத் தொடர்ச்சி என்பதே  தொடர்ந்து நாம் புனைந்து கொண்டிருக்கக்கூடியது. அந்தத் தொடர்ச்சியை உருவாக்கக்கூடிய ஒரு பணியில் தான் ஒரு கவிஞனும் எழுத்தாளனும் இருந்து ஒரு மாறாத அம்சத்தோடு தன்னைத் தொடர்படுத்திக் கொண்டு இருக்கிறான். ஆகவே ரெப்ரசென்டேஷன் என்பதை விட எதிர்வினை   என்பதுதான் ஒரு கலையினுடைய அடிப்படையான விஷயமாக இருக்குமா? ஏன் எல்லா மகத்தான கலைஞர்களுக்கும் சமகாலம் ஒவ்வாமை அளிக்கிறது?  ஒரு ஆர்டிஸ்ட் என்று ஒருத்தன் பொதுவெளிக்கு வந்து பேச ஆரம்பிக்கும் போது சாமானியர்கள் ஏன் பதற்றம் அடைகிறார்கள்? மனுஷ் சொன்னார் மனுஷ்யபுத்திரனுடைய கவிதைகளைப் பற்றிய பாமர எதிர்வினைகளைப் பற்றி சொன்னார் .ஏன் அது வருகிறது 'நீ ஏன் அந்த கசப்பு வச்சிருக்கே ?உனக்கு என்ன? உனக்கு என்ன குறை ?உனக்குதான் எல்லாம் இருக்கே? எவ்வளவோ கஷ்டப்படுறாங்களே நீ ஏன்     அப்படி மனக்குறையோடஇருக்கே? ஏன் கசந்துட்டு இருக்கே? நீ ஏன் அழுதுட்டு இருக்கே?' என்பது தான்.

எல்லா கலைஞர்களுக்கும் சமகாலம் சார்ந்து விமர்சனங்களும் ஒவ்வாமைகளும் தான் இருக்கும். அடுத்த காலகட்டத்தைப் பற்றி ஒரு கனவு இருக்கும். இறந்த காலத்தைப் பற்றி ஒரு சென்டிமெண்ட் இருக்கும். நேற்றைய மகத்துவங்கள், இன்றைய ஒவ்வாமை, நாளைய கனவு இதுதான் ஒரு ஒரு செயல்பாடாக இருக்கிறது.

சாமானியர்களுக்கு நேற்று கிடையாது; நாளை கனவும் கிடையாது .இன்று பற்றின பற்றும் அது சார்ந்த ஈடுபாடுகளும் தான் இருக்கிறது. அவர்கள் ஒரு உலகத்தில்  வாழ்கிறார்கள். ஆகவே இந்த ஒவ்வாமை கசப்பு என்ற ஒரு அம்சம் அதுதான் வந்து பெரும்பாலும் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்.  அந்த ஒவ்வாமை கசப்பைக் கடந்து ஒரு பெரும் கனவை அவன் சென்றடைகிறான். இந்த விவாதம் தொடர்ந்து என்னுடைய தளத்தில நம்முடைய நண்பர்கள் குழுவில்  இருக்கிறது.ஏனென்றால்  ஒரு மிக கசப்பான ஒரு நாவலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒருத்தர் கேட்டார். இவ்வளவு கசப்பான ஒரு நாவல் ஏன் எழுதுறீங்க. அப்போ வேற படைப்புகளை பற்றி சொல்றீங்க. உலக படைப்புகள் பற்றி சொல்றீங்க. நான் சொன்னேன் கம்பராமாயணத்துடைய ஒட்டுமொத்தத்தில் யுத்த காண்டம் மட்டும் தனியாக எடுத்தா மற்ற அத்தனை காண்டங்களை உள்ளே வைக்கிற அளவுக்கு பெரியது. கம்பராமாயணத்தில் வன்முறை மட்டுமே எடுத்துப் பார்த்தால் 80 சதவீதம் இருக்கும். எல்லாமும் போர்க்கள வர்ணனைதான் . மகாபாரதத்தில 80 சதவீதம் வன்முறைதான்.

 எதிர்மறைத் தன்மை என்பது இதிகாசத்தின் அடிப்படை. எதிர்மறை இருட்டு என்பது  ஒவ்வாமையில இருந்து அது உருவாகிறது. ஆனால் அது கனிந்து உயர் கனவாக மாறக்கூடிய ஒரு தருணம் அதில் சாத்தியமாகிறது. அது மாமரத்தின் வேரில் இருக்கக்கூடிய கசப்பு கனியில் இருப்பதில்லை என்று சொல்வது போலதான். அது எப்படி அந்த மாயம்? எப்படி நடக்கிறது? ஒவ்வொரு முறையும் அது மாயம்தான் ?அந்த மாயத்தைதான் திரும்பி திரும்பி கலை என்றும் சொல்லிக் கொண்டே இருக்கும். 

 தமிழ் கவிதையில் உருவாகி வந்த ஒரு இலகுத்தன்மையை பற்றி முன்பு சொன்னேன் .நினைவில் இருக்கலாம். அது ஒரு அம்சம் ஆனந்தகுமாருடைய விருது விழாவில் திருப்பி வலியுறுத்திச் சொன்னேன். மென்மையாகத் தொடுவதின் கலை  வெளிவந்த கவிதைகள் அவை. பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகள்.

குழந்தைகளைப் பற்றி மட்டுமே எழுதக்கூடிய கவிதைகள் ஒரு வகைமை என்று அன்று தோன்றி வந்தது. அந்த வகைமைக்கு இன்றைக்கு சம்பந்தமே இல்லாத வேறொரு வகையான கவிதையாக இவருடைய கவிதைகள் இருக்கின்றன . அன்று அந்த மெல்லிய அழகிய இனிமைக்கு எப்படி விருது கொடுக்கப்பட்டதோ அதே காரணத்துக்காகத்தான் இவருடைய கவிதையில் இருக்கக்கூடிய வலுவான தொடர்ச்சியான கசப்புக்கும் விருது கொடுக்கப்படுகிறது. இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது இந்தக் கவிதைகளில் இருக்கும் ஒரு கசப்பும் ஒவ்வாமையும் வெளிப்படக்கூடிய தன்மை, இந்தக் கசப்பும் ஒவ்வாமையும் இன்றைய தமிழ்ச் சூழலுக்கு பிரதிநிதித்துப்படுத்துமா என்று கேட்டால் கிடையாது.

தமிழ்நாட்டின் மகிழ்ச்சி

 நண்பர்களே என்னுடைய 40 -50 ஆண்டுகள் நான் பார்த்த வகையில இந்த காலகட்டத்தில் தான் தமிழகம் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இதை நான் சொல்லும்போது பலர் அதை நம்ப மாட்டீர்கள். ஆனால உங்களுக்கு அந்த அளவு அனுபவம் இருக்காது. இதே தமிழகத்தில பெரும்பாலான வீடுகளில் ரேஷன் மட்டுமே உணவாக இருந்தது. ரேஷன் அரிசி மட்டும் உணவாக இருந்த காலம் எனக்குத் தெரியும்.  ஒருவருடைய வருமானத்தில 90% உணவுச் செலவு மட்டுமே இருந்த காலம் எனக்குத் தெரியும். தமிழகத்தில மிக உச்சகட்ட குடும்ப  வன்முறைகள் இருந்த காலம் எனக்குத் தெரியும். ஒவ்வொரு காலத்திலும் அது விடுதலையாகி  இன்னும்  மேம்பட்டு மேலே வந்திருக்கிற சித்திரம்தான் இன்று எனக்குத் தெரிகிறது.

எனக்கு ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது எவ்வளவு நன்றாக மாறி இருக்கிற நினைவுதான் இருக்கிறது.ஏன் என்றால் என்னுடைய நினைவுகள் எல்லாமே எதிர்மறையானவை. எவ்வளவோ விஷயங்கள் சொல்ல முடியும். முதலில் உணவுக்கான வறுமை தமிழகத்திலே நீங்கி, அதை நான் கண்ணால் பார்ப்பேன் என்று எண்பதுகளில்  நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. எந்த இடத்திலும் உணவுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இதே  சென்னையில உயர்நீதிமன்றத்துக்கு முன்னால் உணவில் மிஞ்சின எச்சில் சோற்றை உருட்டி ஒரு உருண்டை 50 பைசாவுக்கு விற்றதை நான் பார்த்திருக்கிறேன். எல்லா சோற்றையும் கலந்த எச்சில் சோறு அது. அதை வாங்கி ஆட்கள் உட்கார்ந்து சாப்பிட்டதை நான் கண்ணால பார்த்திருக்கிறேன். இன்னைக்கு நீங்கள் விற்க முடியுமா? ஆக ஒரு பக்கம் தமிழகம் மகிழ்ச்சியானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை எந்த கவிதையும் ரெப்ரசென்ட் பண்ணவில்லை.

ஒரு தனிப்பட்ட தீவில் இருந்து கொண்டு கவிஞனுடைய கசப்பைத்தான் சொல்லிட்டு இருக்கு. கவிஞனுடைய கைவிடப்பட்ட நிலையை தான் சொல்லிட்டு இருக்கு. ஒவ்வாமையைத்தான் சொல்லிட்டு இருக்கு. அதுவும் இயல்புதான். அது ஒரு கவிஞன் கொடுக்கக்கூடிய ரெசிஸ்டன்ஸ் என்று நான் நினைக்கிறேன். இது இல்ல, இன்னும் இன்னும் என்று அவன் கேட்கிறான். இன்னும் வேறொன்றை பற்றின ஒரு கனவு அவனுக்கு இருக்கிறது. அந்த கசப்பினுடைய கவிதையாக இது இருக்கிறது.

இந்த கவிதையில் நாம் பார்க்கும்போது ரெண்டு படிமங்களை இவரை அடையாளப்படுத்துவதற்கான உதாரணமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன். ஒன்று ஒரு உறவுக்கு பதிலாக ஒரு கசப்பு செடியை நட்டு வைக்கிறது ஒரு படிமம் ஒரு கவிதையில் வருது.  ஒரு உறவுக்கு பதிலாக ஒரு கசப்பு செடியை நட்டு வைத்தல் எனக்கு அந்த படிமம்  ஒரு கவிஞனை தொட்டு உணரக்கூடிய படிமமாக இருந்தது.

 உறவினுடைய பதிலாக ஒரு கசப்புச் செடியை நட்டு வைக்கக்கூடிய ஒரு கவிதை பெரும்பாலான கவிதைகள் இந்த இமேஜ் வந்து வேற வேற வகையில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

 இதற்கு எதிர்மறையாக வேறு வகையான ஒன்று உதாரணத்துக்காக சொல்கிறேன் டீக்கடையில் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புக்கு சிந்தக்கூடிய ஒரு துளி தண்ணீர் ஒரு மழை என்று ஒரு வரி வருகிறது .

இந்த இரண்டு எல்லைகளுக்குள் இந்த கவிதைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கவிஞனை ஒரு விருது கொடுத்து முன்னிறுத்தும்போது நாம் செய்வது .

 கவிஞர்கள் ரிப்பீட் பண்ணுவாங்க. ரிப்பீட் பண்ணலன்னா அவன் நல்ல கவிஞன் கிடையாது.  உலகத்தை முழுக்க எழுதுறதுக்காக ஒரு கவிஞன் வரல. அவன் அவனுடைய பாட்டை பாடிட்டுதான் வரான். தினமும் காலையில் ஒரு பாட்டை பாடுறதுக்காக குயில் நம்ம தோட்டத்துக்கு வரல. ரிக்வேத காலத்தில இருந்து இன்னைக்கு வரைக்கும் அது ஒரு பாட்டைத் தான் பாடிட்டு இருக்கு . ஒரு கவிஞன் ஒரு வரியைத்தான் எழுதிட்டே இருக்கான். ஒரு துயர், ஒரு குரல் ,ஒரு ஆற்றாமை ஏதோ ஒன்று அது கொஞ்சம் கொஞ்சமா உருமாறிட்டே இருக்கு .அது வண்ணம் மாறிட்டே இருக்கு -நாம் பார்த்துட்டு இருக்கும் போதே பச்சையில சிவப்புக்கு மாறக்கூடிய சில உருவகங்களைப் போல அந்த பரிணாமம் நமக்குத் தெரியும். இப்ப அவனுடைய எல்லா கவிதையும் முக்கியமாகணும் என்றால் அவன் முக்கியமாகும், அவன் முக்கியமாகணும்னா அவன் கூட நாம வளர்ந்து வரணும். அவனைத் தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் நாம கவனிக்கணும் அவன் எழுதக்கூடிய எல்லாமே கவிதைதான். அவன் எழுதுனதுல நல்ல கவிதை நமக்கு பிடித்த கவிதை பிடிக்காத கவிதை இருக்கலாம். ஆனா எல்லாமே முக்கியம் எல்லாமே அவனுடைய குரல்தான். எல்லா வார்த்தையும் கவனிக்க கூடிய ஒன்றாக ஒரு கவிஞன் தொடர்ந்து போகணும்.

அதற்கு சரியான வழி என்பது ஒரு கவிஞன் தன்னுடைய இருப்பைத் தெரிவிக்கும் போதே அவனை முன்னிறுத்துவதுதான். இப்ப எழுத ஆரம்பிக்கும் போது கவிஞனை முன்னிறுத்துறோம். கவனிங்க அடுத்த 20 -30 ஆண்டுகளுக்கு அவனை கவனிங்க தொடர்ந்து அவன் கூட இருங்க என்பதற்கான ஒரு வேண்டுகோள்தான் இந்த விருது என்பது. இந்த விருதைப் பெற்று எங்கள் அமைப்பிற்குப் பெருமை சேர்த்திருக்கும் திரு சோ. விஜயகுமார் அவர்களுக்கும் அவருடைய பெற்றோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்."

இவ்வாறு ஜெயமோகன் பேசினார்.

 இந்த விழாவுக்குப் பார்வையாளர்களாக வந்திருந்த பேராசிரியர் மு. இளங்கோவன், யோகேஸ்வரன் ,கவிதா சொர்ணவல்லி. செந்தில்குமார் ,கடலூர் சீனு போன்றவர்களை நினைவுப் பரிசுகள் வழங்க வைத்து பங்கேற்பாளர்களாக மாற்றினார்கள்.

காலை நிகழ்ச்சிகளை காளி ப்ரஸாத்தும்  மாலை நிகழ்ச்சிகளை சிறில் அலெக்ஸும் ஒருங்கிணைத்தார்கள். நிறைவாக ஜா. ராஜகோபாலன் நன்றி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com