லார்க் பாஸ்கரன் எழுதிய ஏழு கவிதை நூல்கள், ‘சட்டையின் நிழல்’ என்ற அவரது கவிதைகளின் தொகுப்பு நூல் ஆகியவை குறித்து உரையாடல் அரங்கம் சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது.
உரையாடல் அரங்கம் இரண்டு அமர்வுகளாக அரங்கேறியது. எழுத்தாளர் கரிகாலன் தலைமையேற்று உரையாடலை நிகழ்த்தினார்.
முதல் அமர்வில் இயக்குநர் சீனு ராமசாமி, ஹஸீன் ஆதம் ஆகியோர் உரையாடலை ஆரம்பித்து வைத்தனர். “ கவிதை மீதும் கவிஞர்கள் மீதும் தமிழ்நாட்டில் கொண்டாட்டங்கள் இல்லை. கவிஞன் தன் சுயநினைவை இழந்து, தான் படைப்பாளி என்பதையே மறந்தால் தான் தமிழ் சமூகத்தில் அவர்களுக்கு ’ஞானபீட விருது’வழங்கப்படும்”. என்று சீனு ராமசாமி குறிப்பிட்டார்.
ஹஸீன் ஆதம் பாஸ்கரனின் கவிதை நோக்கம் மற்றும் புரிதல் குறித்து பேசினார். இவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர் நட.சிவக்குமார் ‘றா’கவிதைத் தொகுப்பைப் பற்றி “இக்கவிதைத் தொகுப்பு தனிமனிதனுடைய வலி, இறுக்கம், புழுக்கம் ஆகியவற்றை பேசுகிறது. தனிமனிதனுடைய பிரஜையை கூட்டு மனிதர்களின் பிரஜையாக மாற்றுகிறது” என்று கூறினார்.
கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் அசதா ‘ஐந்தாம் திசை’ கவிதை தொகுப்பு குறித்து பெசினார். ” லார்க் ஒரு லயத்தைப் பிடித்துள்ளார், கவிதையின் நடையானது அவரது கவிதை என தனி அடையாளத்தை பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் இப்படிப்பட்ட படைப்புகள் பற்றி எங்குமே பேசியதில்லை” என குறிப்பிட்டார்.
இவரைத் தொடர்ந்து கவிஞர் வடலூர் ஆதிரை பேசுகையில் “சிறந்த கவிஞர்,சிறந்த கலைஞர், இயக்குநராகும் அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளது. இவரைப் போன்ற படைப்பாளிகளின் கவிதைகளை தமிழ்நாடு பாடநூல் கழக ஆய்வாளர்கள் கருத்தில் கொண்டு பாட புத்தகங்களில் குறிப்பிட வேண்டும்” என்றார்.
பாஸ்கரனின் கவிதைகளின் மொழி அமைப்புகள் குறித்து கவிஞர் ப்ரியம் பேசினார். “இவருக்கு தமிழ் மீது விருப்பம் இல்லையென்றாலும் தமிழுக்கும் இலக்கணத்திற்கும் இவர் மீது விருப்பம் உள்ளது. மொழியின் இலக்கணம் மீது லார்க் கவனம் செலுத்தவேண்டும்” என குறிப்பிட்டார்.
இவரைத் தொடர்ந்து சந்தோஷ் கொளஞ்சி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். “ இவை கவிஞரின் நினைவுகள் பற்றிய கவிதைகளாக இருக்கின்றன, ஒரு கவிதைக்குள்ளே நான்கு, ஐந்து படிமங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மொழி அமைப்பு சிறிது எளிமையாக இருந்திருக்கலாம்” என்றார்.
சிறிது இடைவேளைக்கு பிறகு இரண்டாவது அமர்வு தொடங்கியது. இரண்டாம் அமர்வை கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தொகுத்து வழங்கினார்.
எழுத்தாளர் தவசி, மரணக் குறிப்புகள் கவிதைத் தொகுப்பு பற்றி பேசினார். “கவிதைகள் தனிமனித கசப்பை, விரக்தியை, கையறுநிலையை, அவலத்தைப் பாடுகின்றன. துயரமான மனநிலையை கைக்கொண்டு மீண்டு வர முயற்சிக்கிறார். அவரது மொழி சில இடங்களில் ‘ ஓப்பனாகவும்’ சில இடங்களில் பூடகமாகவும் சென்று விடுகிறது. லார்க் தன் கவிதைகளை எந்த உயரம் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கடல் தன் மீனை சமைப்பதில்லை என்ற கவிதைத் தொகுப்பை பற்றி சுசித்ரா மாறன் பேசியதாவது:, “வரிகள் வாசகனை வசீகரிக்கின்றன. இந்த கவிதைத் தொகுப்பு முழுக்க இருத்தல், பிழைத்தல், வாழ்தல் இந்த மூன்றுக்கு இடையே ஊடாடும் உணர்ச்சிகள் தொகுப்பாக உள்ளன,’’ என்றார்.
இவரைத் தொடர்ந்து ப்ரியம் தொகுத்த லார்க் பாஸ்கரனின் சட்டையின் நிழல் என்ற கவிதைத் தொகுப்பு குறித்து வேல் கண்ணன் உரையாற்றினார். “ இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்து பதிவு செய்யும்போது அவரது கவிதையில் ஒரு அவசரத் தன்மை உள்ளது. எந்தவிதமான முகமூடியும் போடாத, எந்தவித வேஷமும் போடாத தன்மையாக உள்ளது. இக்கவிதைகளில் உலகம், காலம், இசை,பொய், உண்மை, தனிமை ஆகிவை தொடர்ந்து வந்துள்ளன. ‘காற்று’ என்ற சொல் அடுத்தடுத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டார். இறுதியாக அம்பிகா குமரன் நன்றி கூறினார்.
(தொகுப்பு: கீர்த்தி, தினோவிகா)