இலக்கியம், மொழி, இனம், பண்பாடு, அரசியல், ஆன்மீகம் குறித்தெல்லாம் ஆழமாகப் பேசிய ரமேஷ் பிரேதனின் கடைசி நேர்காணலாக இது அமையும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. விஷ்ணுபுரம் விருது பெற்றதையொட்டி, ‘அந்திமழை’ இதழுக்காக அவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். வாழ்த்துகளைக் கூறியவுடன் உற்சாகமானார். நீண்டநாள் கழித்து, சிலாகித்து உரையாடிய மகிழ்ச்சி அவருக்கிருந்தது. பா.இரவிக்குமார் மற்றும் ப.கல்பனா மொழிபெயர்த்த ‘காயங்களால் மறைக்கப்பட்டவர்கள்’ (பர்மியக் கவிதைகள்) நூலையும், இரா.வீரமணி எழுதிய ‘வாழ்க்கை எனும் மொழிவிளையாட்டு’ நூலையும் பெற்றுக் கொண்டு இயல்பாக உரையாடினார். இந்த நேர்காணலை அச்சில் காண அவர் உயிருடன் இல்லை என்பதுதான் இத்தருணத்தில் எங்களுடைய ஒரே வருத்தம்.
ஆரம்பக் காலத்தில் பாரதிதாசனைப் பின்பற்றி நிறைய மரபுக் கவிதைகளை எழுதியுள்ளீர்கள்… உங்கள் இலக்கிய வாழ்க்கையின் தொடக்கத்தைப் பற்றி இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
உண்மைதான். கவிதை எழுத வரும்போது பாரதிதாசன்தான் என்னுடைய ஆதர்சம். பாரதிதாசனைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான விருத்தப்பாக்களையும் ஆசிரியப்பாக்களையும் எழுதினேன். தமிழின் நீண்ட இலக்கிய மரபில் பாரதிதாசன்தான் மரபுக் கவிதைகளினூடாகப் புரட்சிகரமான குரலைப் பதிவு செய்தவர். தமிழ் மொழி, இனம் குறித்துப் பாவேந்தனைப் போல சிந்தித்த கவிஞன் என்று என்னால் எந்தக் கவிஞனையும் அப்போது அடையாளப்படுத்த முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் கவிதையின் அழகியலுக்கு அடையாளம் பாரதி என்றால், கவிதையின் அரசியல் அடையாளமாக பாரதிதாசனைத்தான் என்னால் சிந்திக்க முடிந்தது.
பாரதிதாசனுக்குப் பிறகு வந்தவர்கள் பாரதிதாசனை நகலெடுத்தார்களே தவிர, பாரதிதாசனைப் போல சுயமாக எழுதமுற்படவில்லை. புதுவையில் தடுக்கி விழுந்தால், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கவிஞர்கள் இருப்பார்கள். இவர்கள் எழுதுவதெல்லாம் கவிதைகள்தானா என்பது வேறு கேள்வி. பாரதிதாசன் பெயரில் விருதுகள் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வதற்குத் தெருவுக்கு ஒரு கவிஞன் கியூவில் நிற்கக் காத்திருக்கிறார்கள். பாரதிதாசன் படைத்த இலக்கியத்திற்கு இவர்களெல்லாம் நியாயம் சேர்த்ததாக நான் நினைக்கவில்லை. தமிழ் இலக்கியவுலகமும் பாரதியைப் பற்றிப் பேசிய அளவிற்குப் பாவேந்தனைப் பற்றிப் பேசவில்லை. தமிழ்… தமிழ் என்று முழங்கும் தமிழின உணர்வாளர்கள் பாரதிதாசனுக்கு எவ்வளவு செய்திருக்கவேண்டும். பாரதிதாசனைச் சிந்திக்கும்போது இப்படியெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.
ஒரு கவிஞன் தன்னுடைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கவேண்டும். அதைத்தான் கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக நான் செய்து வருகிறேன். பாரதிதாசனுக்குப் பிறகு, இலக்கியவுலகம் எவ்வளவோ மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. தொடக்கத்தில் பாரதிதாசன் எனக்கு ஆதர்சமாக விளங்கினாலும், அவருடைய பாதையில் என்னுடைய இலக்கியப் பயணத்தை மேற்கொண்ட நான், அவருடைய இலக்கியத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு எவ்வளவோ தூரம் கடந்துவந்துவிட்டேன். ஆனால், உலக இலக்கியங்களை ஏராளமாகப் படித்தாலும் பாரதிதாசனை ஒருபொழுதும் என்னால் விட்டுக்கொடுக்க இயலாது. தமிழில் எழுதிய உலகக் கவிஞன் பாரதிதாசன் என்பதுதான் இப்பொழுதும் எனக்கிருக்கும் எண்ணம். ஆனால், என்னுடைய மொழிநடை வேறு; உணர்வுகள் வேறு; புரிதல்கள் வேறு.
2009இல் நடந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை உங்கள் எழுத்துப் பயணத்தைப் பாதித்ததாகச் சொல்லலாமா?
வரலாறு முழுவதும் உலகெங்கும் நடைபெற்ற, நடைபெறுகின்ற பாசிசப் போர்கள் குறித்து நான் நிறைய பேசியிருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு எழுத்தும் பாசிசத்திற்கு எதிரானதுதான். 2009இல் நடைபெற்ற படுகொலைகள் குறித்து சர்வதேச அளவில் எந்த விசாரணையும் நியாயமான முறையில் நடந்ததாகச் சொல்லமுடியாது. புதுச்சேரியின் ஒரு மூலையில் வாழும் எளிமையான உயிரி நான். சொல்லப்போனால், இந்தப் பிரபஞ்சப் பெருவெளிக்கு முன்னால் ஒரு துகள்கூட இல்லை நான். போர் என்பதன் நேரடிப்பொருள் உயிர்க்கொலைதான். அது எந்த மண்ணில், எந்த மக்களுக்கு எதிராக நிகழ்ந்தால் என்ன? இவ்வளவு பேர் கொல்லப்பட்ட பிறகு, வாழ்க்கை எனக்கு சூன்யமாகத்தான் தெரிந்தது. ஆனாலும், என்னுடைய இருப்பை நிரூபிக்கத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டேன். உங்களுடைய கேள்வியை அரசியல் சார்ந்ததாகப் புரிந்துகொள்கிறேன். என்னுடைய எழுத்திலும் அரசியல் உண்டு. ஆனால், அது நேரடியான அரசியல் இல்லை. அநேர்க்கோட்டு முறையைப் பின்பற்றி எழுதினாலும், என் சிந்தனையின் மீது பாதிப்பைச் செலுத்தியவர் வள்ளலார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இந்தச் சிறிய அறையில், கடந்த சில வருடங்களாக வள்ளலாரை ஆராதித்து வருகிறேன். உங்கள் அருகிலிருக்கும் வள்ளலாரின் நிழற்படத்தைப் பாருங்கள். எனக்குள் இருக்கும் உயிர் நேயமிக்க வள்ளலாரை எனக்கு மட்டுமே தெரியும். நீங்கள் கேட்டதற்கு நேரடியான பதிலைச் சொல்லவேண்டுமென்றால், ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போர் என்னைக் கடுமையாகப் பாதித்தது. ஆனால், என் எழுத்தைத் தவிர இந்தச் சமூகத்திற்குக் கொடுக்க என்னிடம் ஏதுமில்லை.
உங்கள் இலக்கியங்களுக்கு வாசகர்களிடையே அல்லது திறனாய்வாளர்களிடையே எத்தகைய வரவேற்புக் கிடைத்துள்ளது?
வரவேற்புக் கிடைக்கவேண்டும் என்பதற்காக நான் எழுதுவதில்லை. ஒரு கவிஞன் அல்லது எழுத்தாளன் அவ்வாறு எழுதவும் முடியாது. தமிழ்ச் சூழலில் இயங்கும் திறனாய்வாளர்கள் அல்லது வாசகர்கள் என் எழுத்துகளை உரிய முறையில் அங்கீகரித்தார்களா என்று எனக்குத் தெரியாது. தொடர்ந்து, என்னால் எழுதத்தான் முடியும். வாசிப்புச் சூழலும் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மாறிக்கொண்டு வருகிறது. உடனடியாகச் சேரவேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து முகநூலில் இயங்கிக் கொண்டு வருகிறேன். என்னைக் கட்டிலில் முடக்கிப் போட்ட இந்த நோய்மைக்குப் பிறகு, ஒற்றை விரலில் தட்டச்சு செய்து நான் படைத்த கவிதைகளும் நாவல்களும் பதினைந்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. என் எழுத்தைத் தொடர்ந்து வாசித்துவரும் நீங்கள் கூட, என்னை எங்கும் பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, வகுப்பறையிலோ, இலக்கிய மேடைகளிலோ பேசியிருக்கலாம். எழுதுவது மட்டும்தான் நான் முழுமனதுடன் செய்யக்கூடிய காரியம். திறனாய்வாளர்கள் பற்றி நான் சிந்திப்பதில்லை. ஒருவேளை, ஐம்பது வருடங்கள் அல்லது நூறு வருடங்கள் கழித்து என் எழுத்துகள் பேசப்படலாம். பேசப்படவேண்டுமே என்பதற்காக என்னால் யதார்த்தவாத எழுத்துகளை எழுதமுடியாது. அப்படி எழுதியிருந்தால், நானும் பிரபஞ்சனைப் போலவோ, இமையத்தைப் போலவோ பேசப்பட்டிருப்பேன்.
யதார்த்தவாத எழுத்துகளில் உங்களுக்கு உடன்பாடில்லையா?
உடன்படுவதும், உடன்படாததும் அவரவர்களின் இலக்கியப் புரிதலைப் பொறுத்தது. கி.ரா.வின் படைப்புலகத்தைப் பற்றிய தொகுப்பொன்றினைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞன் பதிப்பகத்தின் வாயிலாகக் கொண்டுவர நேரிட்டது. எல்லோருக்கும் பரிச்சயமான கதவு, வேட்டி, மாயமான் போன்ற கதைகளைத் தவிர்த்துவிட்டு, பேதை, கோமதி போன்ற அவரின் வித்தியாசமான கதைகள் அடங்கிய தொகுப்பாக அது வெளிவந்தது. கலாப்பிரியா அந்தத் தொகுப்பைப் பார்த்துவிட்டு, “அண்ணாச்சியை உங்களுக்கேத்தாமாறி கொண்டுவந்திட்டீங்களே” என்றார். இதை எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால், யதார்த்தவாத எழுத்துகளின் எதிரியல்ல நான். ஆனால், அது அதிகாரத்தைக் கட்டமைக்குமானால், மீண்டும் மீண்டும் எழுதப்படும் தேய்வழக்காக இருக்குமானால், மாயவாத எழுத்துகளை ஓர் எழுத்தாளன் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க முடியாது.
எம்டிஎம் மொழி பெயர்ப்பில் வெளியான உம்பர்டோ எக்கோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே… வெளிவந்தவுடன் உங்களுக்கு இந்த நாவல் எப்படிக் கிடைத்தது?
யாவரும் பதிப்பகத்தின் ஜீவ கரிகாலன். புதிய நூல்களை எனக்கு வழக்கமாக அனுப்புவார். எம்.டி.முத்துக்குமாரசாமி இந்த நூலை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே. நாவலை நான் ஏற்கெனவே ஆங்கிலத்தில் படித்திருந்ததால், சுலபமாக என்னால் இந்த மொழிபெயர்ப்புக்குள் நுழைய முடிந்தது. ஆனால், பல இடங்களில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் வாசகர்கள் தடுமாறக்கூடும். சில இடங்களை வாசிக்கும்போது எனக்குள் நானே இந்த நாவலை மொழிபெயர்த்துப் புரிந்துகொண்டேன். சாருநிவேதிதா இந்த மொழிபெயர்ப்புக் குறித்து அவ்வளவு ஆபாசமாக எதிர்வினையாற்றியிருக்க வேண்டிய தேவையில்லை. மொழிபெயர்ப்பில் எந்த இடங்களில் குறைபாடு இருக்கிறதென்பதை அவர் நியாயமாகச் சுட்டியிருக்கவேண்டும். இந்த மொழிபெயர்ப்புக் குறித்து எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு என்றபோதும், எம்.டி.எம்-இன் இந்த மொழிபெயர்ப்பு நூலை நான் வரவேற்கிறேன்.
கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறீர்கள்… உங்கள் எழுத்துலகின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?
கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக எழுதிவருவது உண்மைதான். ஆனால், ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் எழுதப்பட்ட பிரதிகளையே எனக்கானவையாக நான் உணர்கிறேன். அந்த வகையில், என்னுடைய காமத்துப்பா லரசிய லறிக்கை, பொந்திஷேரி, சூன்யதா, ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து, ஐந்தவித்தான் போன்ற சமீபத்திய நூல்களுக்காகத்தான் விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இந்தத் தருணத்தில் என் பரிசோதனை எழுத்துகளை அங்கீகரித்த ஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பைச் சார்ந்த நண்பர்களுக்கும் என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த விருதால் என்னுடைய இலக்கியங்கள் கவனிக்கப்படலாம். ஒரு பத்துப் பேராவது படிப்பார்கள் என நம்புகிறேன்.
‘அவன் பெயர் சொல்’ உள்பட உங்களின் பல பிரதிகளில் திருநங்கைகள், திருநம்பிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களை உங்களின் படைப்புகளில் கொண்டுவரவேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
தமிழ் இலக்கியப் பெருவெளியில் ஏராளமான பாத்திரங்களை ஏராளமான எழுத்தாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கிய பாத்திரங்களும், அப்பாத்திரங்களின் வழி அவர்கள் நிகழ்த்தும் பாலியல் அரசியலும் பழக்கப்பட்டதே. சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மாற்றுப் பலினத்தவர்களின் வாழ்வியலைப் பேசிய எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஹெலன் சீக்சூ கூறியதைப் போல், உலகில் மானிடராய்ப் பிறக்கும் ஒவ்வொரு உயிரிக்குள்ளிருக்கும் பால்தன்மை என்பது ஒருபடித்தானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவன் நான். இங்கே, ஸ்தூலமாக இருக்கும் உடலின் உறுப்பினை வைத்துக்கொண்டு ஒருவரின் பால் தன்மையை நிர்ணயிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படியிருந்தால் அதுவும் ஒரு அதிகாரம்தான். இங்கு யாரும் முற்றுமுழுதான ஆணாகவும் இல்லை. பெண்ணாகவும் இல்லை. அப்படி இருப்பதாக உணர்ந்தால், அவர்களுக்குள் செயல்படும் அதிகாரத்தை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள் என்பதாகத்தான் பொருள். இந்த அதிகாரத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஆபெண் எழுத்து எனும் சொல்லாடலைக் கட்டமைக்க முனைந்தேன்.
தற்காலச் சூழலில் இந்தப் புனைவாக்க முறையைத் தமிழிலக்கிய உலகம் ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறீர்களா?
அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. பாரதியின் எழுத்தை அவருடைய காலகட்டத்தில் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்களா என்ன? காலத்தை மீறிச் சிந்திக்கும் எழுத்தாளனாக என்னை இத்தருணத்தில் உணர்கிறேன். என்னுடைய எழுத்துகள் ஏற்றுக்கொள்ளப்படலாம். புறந்தள்ளப்படலாம். ஆனால், வாசிக்கப்படவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன். ‘மீமெய்யழகி’ எனும் தலைப்பில் புதிய பாணியிலான கவிதையாக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். முகநூலிலும் அவ்வப்பொழுது பதிவிட்டு வருகிறேன். அவை யாவற்றையும் வாசிக்கிறார்களா என்கிற கவலை எனக்கில்லை. உலகளவில் வெற்றி பெற்ற பெரும் எழுத்தாளுமைகள் யாரும், அவர்கள் வாழும் காலத்திலேயே அங்கீகரிக்கப்படவில்லை. முழுமையாக அவர்களின் எழுத்துகள் வாசிக்கப்படவுமில்லை. ஆனால், அவர்களின் எழுத்துகள் அவர்களின் மறைவிற்குப் பிறகு, கொண்டாடப்படலாம். செகாவ், காம்யு, காஃப்கா போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்கள் மறைந்த பிறகு கவனம் பெற்றது. என்னுடைய எழுத்துகளும் என் காலத்திற்குப் பிறகு கவனம் பெறும் என்று நம்புகிறேன்.
இனம், மொழியைப் பற்றிய உங்களுடைய புரிதல்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
வரலாற்றில் அடையாளம் என்பது அவசியம்தான். தமிழினத்தையும் தமிழையும் சிதைப்பதுதான் வரலாறாக இருந்துவந்துள்ளது. அத்தகைய சூழல்களில், தமிழர்கள் மொழியின் மூலமாகத் தங்களை நிறுவிக்கொள்வது அவசியம். தமிழர்களின் சிந்தனையே உலகம் தழுவியதாகத்தான் இருந்தது. பின்நவீனத்துவச் சூழலில், இந்த மொழி மற்றும் இன அடையாளங்களை இன்னும் கவனமாகக் கொண்டு செல்லவேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசியம் என்பது இன்று பல்வேறு வகையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது என நினைக்கிறேன். வரலாற்றின் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எதையும் கட்டமைக்க வேண்டும். அதிகாரத்தைக் கட்டமைக்கும் எந்த அடையாளத்தையும் என் எழுத்து நிராகரிக்கிறது. அதே நேரத்தில், உலகில் நடைபெறும் பல்வேறு போர்களை நான் கவனித்துக்கொண்டு வருகிறேன். நிலம், மொழி, இனம், பாலினம், பண்பாடு போன்ற எல்லாவற்றையும் கடந்ததாக என் எழுத்துகள் இருந்தாலும், பின்நவீனத்துவச் சூழலில், மொழி மற்றும் இன அடையாளங்கள் இந்த நூற்றாண்டில் நீடிக்கும் என்பதுதான் என் கணிப்பு.
பொதுவெளியின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டு, அறைக்குள்ளேயே முடங்கியிருக்கும் உங்களுக்குப் பொழுதுபோக்குகளாக இருப்பவை என்ன?
எழுதுவதுதான் என்னுடைய பிரதானப் பணி. முகநூலில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். நண்பர்கள் கையளிக்கும் நூல்களை வாசிப்பதுண்டு. திரைப்படங்கள் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். அண்மையில் வெளிவரும் தமிழ்ப் படங்களைக் கண்டால் எரிச்சலாக உள்ளது. தற்பொழுது வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகக் கருதுகிறேன். பா.ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை. அழகிய பெரியவன் சிறந்த படைப்பாளி. ஆனால், அவரை இந்தப் படத்தில் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. அதீதமான மாய யதார்த்தவாதக் காட்சிகளுக்குள் படத்தின் கரு கரைந்துபோய்விட்டதாக உணர்கிறேன். ஆனால், ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. நிறைய மலையாளப் படங்களை விரும்பிப் பார்க்கிறேன். செயற்கைத்தனங்கள் இல்லாமல் அவை மனதுக்கு இதமாக இருக்கின்றன.
இளையராஜா குறித்து உங்கள் நூலொன்று முன்னதாக வந்தது. அவருடைய ஐம்பதாண்டு கால இசை வாழ்க்கைக் குறித்து உங்கள் எண்ணங்களைப் பகிர முடியுமா?
இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி. கடந்த ஐம்பதாண்டுகளில் இளையராஜாவின் இசை இல்லாமல் தமிழனின் வாழ்க்கை இ்ல்லை. அவருடைய இசையை உணர்வதென்பது பேரனுபவம். தமிழனுடைய நிலப்பரப்பை இசையின் மூலமாக ஆட்கொண்டவர் அவர். உலக அளவில் கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால், தமிழ் நாட்டில் பிறந்ததுதான் அவருடைய துரதிர்ஷ்டம். இசைஞானி மட்டுமல்ல. சிவாஜிகணேசனும்தான். தமிழர்களாக அவர்கள் பிறக்காமல் இருந்திருந்தால், உலகம் அவர்களைக் கொண்டாடியிருக்கும். ஆனால், காலம் கடந்தாவது இன்று இளையராஜாவின் சிம்போனி இசை உலகை ஆள்கிறது. தமிழக அரசும், அவரின் ஐம்பதாண்டு காலக் கலையுலக வாழ்க்கையைப் பெருமைப்படுத்தியுள்ளது. உறக்கம் வராத பல இரவுகளில், இளையராஜாவின் இசைதான் எனக்கு ஆறுதலாக இருந்துள்ளது. என் எழுத்துலக வாழ்க்கையில், இளையராஜா குறித்து எழுதியுள்ளதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
உங்களுடனான உரையாடல்களில் அவ்வப்போது மரணம் பற்றியே பேசுகிறீர்களே? வாழ்க்கையின் மீது அவ்வளவு அவநம்பிக்கையா?
அப்படியில்லை. நான் ஓர் உருவிலி. என் உடம்பைப் பிரிந்து, எந்தவொரு பால் அடையாளத்திலும் உறைந்துவிடாமல் தனித்து இயங்குகிறேன். விட்டு விடுதலையாகி நிற்கிறேன். மொழியைப் பிசைந்து பிசைந்து என்னை நானே வடிவமைக்கிறேன். பாரதி சொன்னது போல, இயேசு சிலுவையில் மாண்டிருக்கலாம், கண்ணனும் இறந்துபோயிருக்கலாம். ஆனால், பாரதி போல் எனக்கும் மரணமில்லை. என் உடல் வேண்டுமானால், இறந்து போகலாம். ஆனால், மொழியுருவாக எண்ணங்களால் தொடர்ந்து உயிர்பெற்று இயங்குவேன். மரித்த பன்றிக் குட்டியைப் போல, என் உடலை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆனால், என் எண்ணங்களின் மூலமாக உங்களுக்குள்ளும் (வாசர்களுக்குள்ளும்) நான் தொடர்ந்து உயிர்த்தெழுவேன். அவ்வாறு, இயங்கும்போது மரணம் குறித்த கேள்விக்கே அங்கு இடமில்லை. ‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ என்பது வள்ளலாரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட தத்துவம். வள்ளலார் மரித்துவிட்டாரா என்ன?