'இந்த வசை இன்றோடு ஒழிந்தது!' - மா.அரங்கநாதன் விருது விழா 2026

'இந்த வசை இன்றோடு ஒழிந்தது!' - மா.அரங்கநாதன் விருது விழா 2026
Published on

இலக்கியக் கூட்டங்கள், விருது விழாக்களுக்கு என்று பகட்டுகள் அலங்காரங்கள் இல்லாமல் சில எளிய ஏற்பாடுகளுடன்தான் நடைபெறுவது வழக்கம். அதற்கேற்ப சொற்ப எண்ணிக்கையில்தான் பார்வையாளர்கள் வருவார்கள். இதிலிருந்து மாறுபட்டு ஒரு கார்ப்பரேட் துல்லியத்துடன்- நேர்த்தியுடன் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் அண்மையில் ஒரு விருது விழா நடைபெற்றது. அதுதான் மா. அரங்கநாதன் விருது விழா. எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவைப்போற்றும் வகையில் அவர் பெயரிலான மா.அரங்கநாதன் விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பின் சார்பில் 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ம் தேதியன்று வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகள் இலக்கியத்திற்காகப் பல்வேறு வகையில் பணியாற்றிய இருவருக்கு அவர்களது ஒட்டுமொத்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகின்றன.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுக் கேடயத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் சேர்த்து வழங்கப்படுகிறது.தேர்வு முறையில் கறார்த்தன்மை பின்பற்றப்படுவதால் படைப்புலகில் இயங்கும் அனைவராலும் உயரிய விருதாக இது கருதப்படுகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது எழுத்தாளர் கி.விட்டல்ராவ் மற்றும் ஆவணப்பட இயக்குநர் அம்ஷன்குமார் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த விருது விழா இராணி சீதை அரங்கத்தில் 16-04-2026 மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் தொடக்கத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருமுறை ஓதுவார் சற்குருநாதன் இறைவணக்கப் பாடலைப் பாடினார்.

அடுத்ததாகக் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியன் விருத்தாளர்களுக்கான தகுதி உரையை வாசித்தார்.

அவர் தனது தகுதியுரையில்,

"இன்று நாம் கௌரவிக்க இருப்பது, விட்டல் ராவ், அம்ஷன் குமார் என்ற இரு பெயர்களைக் கொண்ட மனிதர்களை அல்ல. இடையறாது கலையின் பாதையில் பயணம் மேற்கொண்ட இரு மேன்மையாளர்களைக் கெளரவிக்க இருக்கிறோம்.

ஒரு கால கட்டத்தின் கலையின் சாட்சியமாக வாழுகிற இரு கலைஞர்களை, ஒரு மொழியின் சிந்தனையை தத்தமது ராகங்களில் பாடிக்காட்டிய விற்பன்னர்களை, அவர்தம் படைப்பாற்றலை, அவர்களின் பங்களிப்பை - இன்று நாம் கெளரவிக்க இருக்கிறோம். இவர்களைப் பற்றிய குறிப்புகளை மிகக் குறைந்த அவகாசத்தில் வாசிப்பது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்கிற எண்ணத்தோடுதான், நான் ஆரம்பிக்கிறேன்" என்றவர் முதல் விருதாளர் எழுத்தாளர் விட்டல் ராவ் பற்றிக் கூறும்போது,

"ஒருவருடைய பிறந்த தேதி, படித்த படிப்பு, எழுதிய புத்தகங்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டால், ஒரு மனிதனின் வாழ்வு பற்றிய சுருக்க விவரங்கள் கிடைத்துவிடும். ஆனால், ஒரு காலகட்டத்தின் நினைவுகளையும், ஒரு நகரத்தின் மூச்சையும், ஒரு சமூகத்தின் மாறுதல்களையும் தனது எழுத்தில் பதித்து வைத்திருக்கும் ஓர் அபூர்வ படைப்பாளியை நமக்கு அறிமுகப்படுத்துபவை வெறும் தன் விவரக் குறிப்புகள் அல்ல. அவர் படைப்புகள் சார்ந்து நம் நினைவின் குளத்தில் வட்ட வட்டமாய்ப் பரவுகின்றன மென்குளிர் அலைகள். அந்த அலைகள் கன்ணுக்கும் கருத்துக்கும் ஒரு சுகானுபவத்தை வழங்குகின்றன. அந்த அனுபவத்தின் பெயர்தான் விட்டல்ராவ்.

1942-ஆம் ஆண்டு ஓசூரில் இவர் பிறந்திருந்தாலும் ஒரு ஊர் தண்ணீர் குடித்து வளர்ந்தவர் அல்ல விட்டல்ராவ்.

ஓசூர், நாமக்கல், திருச்செங்கோடு, தருமபுரி, ஓமலூர், சேலம், பெங்களூரு என பல ஊர் தண்ணீர் குடித்து வாழ்ந்து வருபவர். இவர் வாழ்வைத் தொட்டுச் சென்ற அத்தனை நிலப் பரப்புகளும் இவர் எழுத்துக்களிலும் பரவி நிற்பதுதான் ஆச்சர்யம்.

இவரது மூத்த தமக்கையார் கன்னட சினிமாவின் நடிகையாக இருந்தவர். அவரைப்போலவே விட்டல் ராவும் வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது. எக்ஸ்-ரே தொழில் நுட்ப வல்லுநர், ஆசிரியர், அலுவலக எழுத்தர், தொலைபேசி இயக்குநர், நுண்கலை எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் என அவர் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் இந்த எல்லாவற்றையும் தாண்டி, அவர் இன்று வரை நின்று நிலைத்திருப்பது எழுத்தாளர் என்ற ஒரே அடையாளத்தில் தான்.

தலைக்காவிரியைப் போல் 1967-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ இதழில் சிறுகதையாய் தொடங்கிய இந்த ஊற்றின் ஓட்டம், நாவல்கள், கலை எழுத்து, கட்டுரைகள் என நதிகளாய் பரவி இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறது.

இவரது ‘போக்கிடம்’, ‘நதிமூலம்’, ‘வண்ண முகங்கள்’, ‘நிலநடுக்கோடு’ போன்றவை வெறும் நாவல்கள் அல்ல. ஒரு காலகட்டத்து மனிதர்களின் மனப்போக்குகளைப் பதிவு செய்த எழுத்தாவணங்கள்.

உதாரணத்துக்கு, இவரது ‘நிலநடுக்கோடு’ நாவல் கதை என்பதைத் தாண்டி, அறுபதுகளின் சென்னை நகரத்தின் சமூக வடிவமைப்பை, குறிப்பாக ஆங்கிலோ - இந்தியர்களின் வாழ்வியலை, மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள ஒரு கலாச்சார கூகுள் மேப் என்று சொல்லலாம்.

இவரது ‘வாழ்வின் சில உன்னதங்கள்’ நூல் ஒரு மனிதனின் நினைவுகளை மட்டுமல்ல, நகரத்திலிருந்து மறைந்து போகும் வாசனைகள் குறித்தும் கேள்விகள் எழுப்புகின்றன. குறிப்பாக ஏன் வாசனை என்கிறேன் என்றால் சென்னையின் மூர் மார்க்கெட் போன்ற இடங்களைப் பற்றி அவர் எழுதிச் செல்கிற போது, அது ஒரு சந்தை பற்றிய விவரணையாக மட்டும் நின்றுவிடவில்லை. அங்கு புழங்கும் மனிதர்களுக்கு இடையேயான உறவுகள், உணர்வுகள், மதிப்பீடுகள், அவர்களது நம்பிக்கைகள், காலத்தின் மெல் நகர்வு இவைகளோடு நமது புத்தகங்களின் பழம் காகிதப்பால் வாசனையையும் சேர்த்துத் தருகிறார். இவரது இந்த நாவல் சாகித்ய சம்மான் விருது பரிசீலனைக்கு வந்த போது விருதுக்குழுவில் நானும் சா. கந்தசாமியும் இருந்தோம். அதை ஏற்கெனவே படித்திருந்த லயிப்பின் மகிழ்வில் உடனே அந்நூலை பரிசுக்கு உரியதாய்த் தேர்ந்தெடுத்தோம்.

இலக்கியம் மட்டுமல்லாமல், ஓவியம், சிற்பம், சினிமா என எந்த கலை வடிவத்தைப் பற்றியும் சிந்தித்து, அதை எளிமையாக எழுதிப் பகிர்ந்தவர் விட்டல் ராவ். ‘தமிழகத்துக் கோட்டைகள்’ என்ற நூலில் வரலாறும் பயணமும் ஒன்றாக கலக்கிறது என்றால் ‘கலை இலக்கியச் சங்கதிகள்’ நூலில் கலைஞர்களின் உலகம் உயிர் பெற்றெழுகிறது.

விட்டல் ராவ் தனியேதான் வாழ்கிறார். ஆனால் அவர் தனி மனிதர் இல்லை. அவர் ஓர் இயக்கம். அவர் சந்தித்த மனிதர்கள், அவர் நடந்து சென்ற பாதைகள், கோட்டை மதில்கள், அவர் பார்த்த நகரங்கள் இவை அனைத்தும் சேர்ந்த மனிதர் அவர். அதனாலேயே அவை எல்லாமும் அவர் எழுத்தின் ஆகிருதியாய் செம்மாந்து நிற்கிறது. அவர் படைப்புகளை வாசிக்கையில் நாம் ஒரு காலத்தைத்தான் வாசிக்கிறோம். அந்த காலம் இப்போது இல்லாமலிருக்கலாம். ஆனாலும், பல காரணங்களுக்காக அவர் தன் படைப்புகளெனும் தன் சின்னஞ்சிறு சிமிழ்களில் இவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு, அவரை நாம் சந்திக்கையில் மூலக்கடை அப்துல்லா பாய் சிறு குப்பியிலிருந்து ஒரு சொட்டு அத்தரை எடுத்து நம் முன் கைமுனையில் பூசுவது போல இன்னமும் நமக்குப் பூசிவிட்டுகொண்டே அமர்ந்திருக்கிறார். தன் படைப்பின் அத்தரை இப்படி காண்பவர்களையெல்லாம் அழைத்து புன்னகை பூக்க பூசியபடி இருக்கும் விட்டல் ராவ் சாகிப்க்கு நாம் வேறென்ன செய்துவிட முடியும். அவருக்கும் அவர் படைப்புகளுக்கு நாம் சொல்லும் எளிய லால் சலாம்தான் இவ் விருது" என்றார்.

ரவிசுப்ரமணியன்
ரவிசுப்ரமணியன்

இன்னொரு விருதாளர் அம்ஷன்குமார் பற்றிக் குறிப்பிடும்போது,

"1972-ஆம் ஆண்டு ‘கணையாழி’யின் ஒரு பக்கத்தில் தெரியத் தொடங்கிய இந்த பெயர்ச்சொல், நம் மொழியின் சில சாளரங்களைத் திறக்கும் காற்றாய் கொஞ்ச காலத்தில் மாறியது. சிறுகதையில் தொடங்கிய அந்தப் பயணம், திரைப்படம் மற்றும் ஆவணப்படங்கள் சார்ந்த எழுத்தாகப் பரந்து விரிந்தது. அதில் சிந்தனைகளை விதைத்து எழுத்து ஆவணங்களை முதலில் உருவாக்கத் தொடங்கியது.

எண்பதுகளில் ‘எழுத்தும் பிரக்ஞையும்’ என்ற தலைப்பில் ஆரம்பித்த இவரது நூல் வரிசை, மெல்ல நகர்ந்து, ‘சினிமா ரசனை’, ‘பேசும் பொற்சித்திரம்’, ‘மாற்றுப் பாதைகளும் மாற்றுச் சிந்தனைகளும்’, ‘ஆவணப்படம் எடுப்பது எப்படி’, ‘திரைப்படக் கலை’ என்று விரிந்தது. திரைக்கலை என்பது ரசிக்க மட்டுமல்ல அதனை நாம் அதன் அர்த்த விரிவுகளோடு புரிந்துகொண்டால் நம் பார்வையில் என்னென்ன நிகழும் என்பதை அவை கற்றுத்தந்தன. அதனால் பார்க்கும் கண்களின் பார்வை மாறின. கேட்பதற்கான காதுகள் கூர்மையாயின.

அம்ஷன் குமாரின் படங்கள் வெறும் படங்களல்ல. மௌனமாக வாழும் பல மனித உள்ளுணர்வுகளின் பிரதிபலிப்புகள். இவரது ‘ஒருத்தி’ படத்தில் நாம் கேட்பது ஒரு பெண்ணின் குரலை மட்டும் அல்ல, அது பல பெண்களின் கூட்டுக்குரல். அதுபோலவே ‘மனுசங்கடா’ திரைப்படம் ஒரு சமூகத்தின் உள்ளுணர்வினையே கேட்க வைக்கிறது.

இந்த படங்கள் விருதுகளை வென்றதில் ஆச்சர்யமில்லை. அவை அங்கேயே நின்றுவிடாமல் மக்கள் மனங்களையும் சேர்த்து வென்றுவிட்டன.

இவரது ஆவணப்பட உள்ளடக்கங்கள் பல தரப்பட்டவை. பாரதியின் வாழ்வினை, பணியினை ஒரு படம் சொல்லுமென்றால், சர்.சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பை இன்னொரு படம் சொல்லும். பாதல் சர்கார், ஈழக்கூத்தன் தாஷீயஸ் போன்ற படங்கள் நாடகக்கலைகள் பற்றிச் சொல்லும் என்றால், எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் அலையாத்திக் காடுகள் போன்றவை சுற்றுச் சூழலைச் சொல்லும். இதற்கு மத்தியில் பண்டிட் ராஜீவ் தாரா நாத், யாழ்ப்பாணம் தட்ஷ்ணாமூர்த்தி என்று கீதத்திலும் லயத்திலும் சில படங்கள் நம்மைத் திளைக்க வைக்கும்.

இவையெல்லாம் வெறும் ஆவணப்படங்கள் மட்டுமல்ல. நம் கலாச்சார அடையாளத்தின் உயிர்த்துடிப்புகள். ஒரு ஆவணப்பட இயக்குநராக அவற்றுள் நான் உள் நுழைந்து மேலும் சில விஷயங்களைச் சொல்ல முடியும் .

ஆனால், நீயும் இந்த முன்றில் குழுவில் தானே இருக்கிறாய், ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு ஏன் இதுவரை இந்தப் பரிசுகள் வழங்கப்படவில்லை என்ற வசையை இன்றோடு ஒழித்த அண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள்.

மானுட நேயம் கொண்ட ஒரு கலைஞன் பல வடிவங்களில் வாழ முடியும் என்பதற்கு அம்ஷன் ஒரு உதாரணம். அவர் ஓர் எழுத்தாளர், இயக்குநர், மொழிபெயர்ப்பாளர், ஊடக ஆசிரியர். இந்த ஆசிரியர் அடுத்த தலைமுறைக்கு கடத்தியிருப்பது உள்ளீடற்ற வெற்று அலங்காரக் கலை அல்ல. அர்த்த சாரமுள்ள ஒரு பொறுப்பு.

இன்று கௌரவம் பெறும் இந்த இரு படைப்பாளிகளும் காலத்தின் நினைவுகளை , பண்பாட்டை கலாச்சாரத்தை - எதிர்கால வரலாறு - கடந்த பாதைகளின் வழியை கண்டு உரசிப்பார்த்துக்கொள்வதற்கான சாட்சியங்களை - நமக்கு கையளித்துள்ள கலைஞர்கள். இந்த விருதுகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் வெறும் பாராட்டப்பட்ட தருணங்களல்ல. இந்த சமூகம் நெகிழ்வுடன் திரும்பச் செலுத்திய நன்றியின் தருணங்கள். நன்றி. வணக்கம்"என்று குறிப்பிட்டார்.

நீதிபதி அரங்க மகாதேவன்
நீதிபதி அரங்க மகாதேவன்

விருதாளர்களுக்கு விருதுகளை அளித்துவிட்டு உச்ச நீதிமன்ற மாண்பமை நீதியரசர் அரங்க மகாதேவன் பேசும்போது,

"2026 ஆம் ஆண்டின் மா. அரங்கநாதன் விருது வழங்கக் கூடிய இந்த விழாவில் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் ,சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள், வழக்கறிஞர் நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உங்கள் அனைவரோடும் கலந்து கொள்வதில் ஆகப்பெரும் மகிழ்ச்சி எனக்கு .ஒவ்வொரு ஆண்டும் நடக்கக் கூடிய இந்த விழா உங்கள் அனைவராலும் மட்டுமே சிறப்புடையதாக மாறுகிறது .அதனால் என்னுடைய தனிப்பெரும் நன்றி உங்கள் அனைவருக்கும்.

தன்னுடைய எழுத்து ஆற்றலால் பரந்து பட்ட படைப்பெனும் ஆகிருதியை தனது பேனாவால் வடித்துக்காட்டிய விட்டல்ராவ் அவர்களோடும் வாழ்க்கையை இப்படித்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் மனித இனம் நகர்ந்து கொண்டிருக்க மனிதர்களின் மன அவசங்களை அவர்கள் வாழ்வின் போக்கை துன்பங்களை அவர்களுடைய அயர்ச்சி அனைத்தையுமே தன்னுடைய படைப்பின் மூலம் மா. அரங்கநாதன் இலக்கிய விருது என்கிற இந்த பயணத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட அமுஷன் குமார் அவர்களோடும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

கலாச்சாரத்தாலும் பண்பாட்டாலும் தனித்துவம் மிக்க ஒரு மண் தமிழ் மண். இந்த மண்ணின் பெருமை எடுத்துச் சொல்வதற்கு அளவற்றது. முத்தமிழ் ஓங்கி வளர்ந்த இந்த மண் அற்புதமான படைப்பை இந்த மண்ணிலே வாரி வழங்கிருக்கும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண் எதைச் சொன்னது என்பதை உணர்ந்து பார்த்தவர்கள் தந்த படைப்புக்கள் இந்த மண்ணின் மொழியின் அற்புதத்தை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையான கூற்று அல்ல.

இப்படி படைத்து விட்ட பல்வேறு படைப்பாளிகளை பின்னால் வந்த படைப்பாளிகள் உணர்ந்து பார்த்திருக்கிறார்கள்; உணர்ந்து வைத்திருக்கிறார்கள். தங்களையே அதில் மூழ்கடித்து தங்களின் படைப்புக்களாக மாற்றித் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு படைப்பாளியாக நீங்கள் மா. அரங்கநாதனைப் பார்க்க முடியும் .

அவருடைய படைப்புக்களின் அடி நாதமாக அன்பு எழுந்து நின்றது .தன்னையே இழந்து விட்டு, தான் இழந்தவற்றை இந்த உலகத்திற்குச் சொல்ல முடியுமா என்று பார்த்து அந்த பார்வையில் தன்னை வெளிப்படுத்திக் காட்டிய ஒரு படைப்பாளியாக அவரும் எழுந்து நின்றார்.

'யாதும் ஊரே யாவரும் யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா 'என்பது அவரை வசீகரித்தது.அப்படித்தான் அவர் இலக்கியத்தைப் பார்த்தார். உலகத்து மாந்தர்கள் அனைவரும் ஒன்று ஒரு அறைகூவல் விடுக்கப்பட்டதே அதை உள்ளத்தால் உணர்ந்து பார்த்த ஒரு படைப்பாளியாக எழுந்து நின்றார் .அவர் படைப்பின் அடி நாதமாக அந்த சிந்தனை ஒவ்வொரு வரியிலும் எழுந்து நின்றது.

'பல்சான்றீரே பல்சான்றீரே ' பாடலில் முடிந்தால் நல்லவற்றைச் செய்து பாருங்கள்; அனைவரையும் நேசித்துப் பாருங்கள்; முடியாவிட்டால் அமைதியாக இருந்து செல்லுங்கள் என்று சொன்ன அந்த வரிகளினால் ஈர்க்கப்பட்ட அரங்கநாதன், எங்கேயோ போதல் என்ற ஒரு அருமையான படைப்பின் மூலம் அந்த தாக்கத்தை இந்த தமிழ் உலகத்திற்குத் தந்தார்.

உலகத்தின் சிறந்த கதைகளை நீங்கள் தொகுத்தால் அந்த கதைகளில் ஒன்றாக அவருடைய கதை அவசியம் இருக்கும் "என்றவர் இலக்கியங்களில் இருந்து குறிப்பாக சங்க இலக்கியங்களில் இருந்து பாடல்களை எடுத்துக் கூறி அவையினரை வசீகரித்தார். விருதாளர்கள் இருவருக்கும் தனது தந்தைக்குமான உறவைப் பற்றியும் எடுத்து கூறி விருதாளர்களை வாழ்த்தினார்.

விட்டல்ராவ்
விட்டல்ராவ்

விருதினைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் விட்டல் ராவ் தனது ஏற்புரையில் பேசும்போது,

"என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 1967 இல் என்னுடைய முதல் சிறுகதையை நான் அச்சில் பார்க்க நேர்ந்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.என் நண்பன் Let us celebrate என்றான். இதைக் கொண்டாடலாமே என்று அவன் கூறவே நாங்கள் ஒரு திரையரங்கு சென்றோம்.பிறகு அந்த நண்பனின் அறைக்கு அழைத்துச் சென்றபோது அங்கே தான் அறிமுகமானார் மா. அரங்கநாதன். அவரது எழுத்தார்வம் ஈடுபாடு பற்றி எல்லாம் சொன்னார்கள்.

பிறகு ஒரு நாள் ஒரு காப்பியுடன் நட்பானார். பிறகு என் அலுவலகம் வந்து சந்தித்தார். போகப்போக மிகவும் நெருக்கமானார். அதற்குப் பிறகு நாங்கள் பேசியவை பகிர்ந்து கொண்டவை ஏராளம் ஏராளம். அவர் என் எழுத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தவர்.

அவர் ஏதாவது செய்ய வேண்டும் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைச் சொல்வார்.என் ஓவியம் முதல் பரிசு பெற்ற போதும் அப்படியே பாராட்டினார். அதற்கு பிறகு நாங்கள் எல்ஐசி கட்டிடத்தில் அடியில் அமர்ந்து கொண்டு ஆங்கிலப் படங்கள் பற்றி இரவு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.அத்தனையும் பேசும் அவர் புதுக் கவிதையைப் பற்றி ஏராளம் பேசியதும் வியப்பாக இருந்தது.இப்படிப்பட்ட உயர்ந்த எழுத்தாளர் பெயரில் அவருடைய அருமை மைந்தரால் வழங்கப்படும் இந்த அரிய விருதை நான் பெறுவதில் மன நிறைவும் மன மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்றார்.

அம்ஷன்குமார்
அம்ஷன்குமார்

இன்னொரு விருதாளர் அம்ஷன்குமார் தனது ஏற்புரையில் பேசும் போது,

" பொதுவாக ஆவணப் படங்கள் பற்றிய தவறான புரிதல் உள்ளது. திரைப்படம் பார்ப்பவர்கள் அந்தப்படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லையென்று சொல்வதற்குப் பதிலாக ஆவணப் படங்கள் போல் இருக்கிறது என்பார்கள். நீங்கள் ஏதாவது ஆவணப்படங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நாங்கள் பார்க்கவில்லை ஆனால் எல்லாரும் அதைத்தான் சொல்கிறார்கள் என்பார்கள். ஆவணப் படங்கள் என்றால் நன்றாக இருக்காது சுவாரஸ்யம் இல்லாது போரடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மை அல்ல.அந்தக் காலத்தில் நியூஸ் ரீல் பார்த்த அனுபவத்தில்தான் அப்படி நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நான் நல்ல சுவாரஸ்யமான ஆவணப்படங்களைப் பார்த்து விட்டுத்தான் இந்தத் துறையில் இறங்கினேன்.ஆவணப் படங்களையும் சுவாரஸ்யமாக எடுக்க முடியும்.ஒரு முறை எம்ஜிஆர் ,சரோஜாதேவி எல்லாம் நற்புறவுப் பயணமாக இலங்கை சென்ற போது எடுக்கப்பட்ட ஆவணப் படம் எனக்குப் பிடித்திருந்தது.

நான் 30 ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறேன் .திரைப்படங்கள் எடுக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்து முடிக்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்கள் அதிகம் . ஆனால் ஆவணப் படங்களை எடுக்கும்போது இந்த அழுத்தங்கள் இருக்காது. நமக்குச் சுதந்திரம் இருக்கும். நமது விருப்பம் போல் பயணம் செய்து எடுக்க முடியும்.எனது ஆவணப்படங்கள் முக்கியமாகக் கல்வியை மையமாகக் கொண்டவை.

எனக்கும் மா.அரங்கநாதனுக்கும் நல்ல பழக்கம் . ஒரு முறை மா. அரங்கநாதன் இங்கே வந்துள்ள விட்டல்ராவ் நான் என்று மூன்று பேரும் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதைப் பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் "என்றார்.

நிகழ்ச்சியை சுஜாதா நடராஜன் தொகுத்து வழங்கினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com