மணற்கேணி: சமத்துவ ஆசிரியருக்கான விருதுகள் அறிவிப்பு!
மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் ’நிகரி’ சமத்துவ ஆசிரியருக்கான விருதுகள் ஆசிரியர் செந்தில் வேலன், பேராசிரியர் இரா. அழகரசன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மணற்கேணியின் ஆசிரியர் ரவிக்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“வகுப்பறையில் சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் 2013 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியர்’ என்னும் விருதளித்து சிறப்பித்து வருகிறோம். நிகரி விருது - நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான ‘நிகரி’- சமத்துவ ஆசிரியர்’ விருதுகளைப் பெற விழுப்புரம் அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.செந்தில் வேலன் அவர்களும்; சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.அழகரசன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
செப்டம்பர் 1 ஆம் நாள் காலை திண்டிவனத்தில் நடைபெறும் விழாவில் நீதிபதி கே.சந்துரு அவர்கள் நிகரி விருதுகளை வழங்குகிறார்.
ஆசிரியர் அ.செந்தில் வேலன் அவர்கள் மாணவர் இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காக:
i. பெண் கல்வியை ஊக்குவித்தல் கூட்டம்.
ii. இடை நின்ற மாணவர்களைப் பள்ளிக்கு வரவவைத்தல்.
iii. மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயில முயற்சிகள் மேற்கொண்டமை.
iv. மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைப் பெற ஊக்குவித்தல்.
v. இல்லம் தேடிக் கல்வியை ஊக்குவித்தல்.
எனப் பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளார்.
பேராசிரியர் இரா. அழகரசன் அவர்கள் தமிழ்-ஆங்கில நாட்டுப்புறவியல் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். இந்திய மற்றும் சர்வதேச இதழ்களில் தமிழ் இலக்கியம், பண்பாடு குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருகிறார். இவர், ரவிக்குமாரின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து venomous Touch என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். ரவிக்குமாருடன் இணைந்து Oxford Anthology of Tamil Dalit Writing- என்ற முக்கியமான தொகுப்பை பதிப்பித்திருக்கிறார். கேத்தரின் பெல்சியின் பின்னமைப்பியல் குறித்த நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்ததோடு, ‘பக்தி’ என்கிற கருத்தையொட்டிக் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.