
என்னுடைய கல்லூரி நாட்களில் தான் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை எனக்கு அறிமுகம் ஆனது. அது எனது பாடத்திட்டத்தில் இருந்தது. அந்த வகுப்பை எடுத்த ஆசிரியர் மிகவும் உணர்வுபூர்வமாக அந்தக் கதையை விளக்கினார். பின்னர் என் இலக்கிய ஆர்வத்தினால் என் தேடலும் வாசிப்பும் விரிவடைந்தன. க.நா சுப்பிரண்யம் மொழிபெயர்த்த விலங்குப் பண்ணை, 1984 நாவல்களைப் படித்தேன். ஆர்வெல்லின் சில படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய ஒவ்வொரு படைப்புகளையும் படிக்க தொடங்கினேன். பல தலைசிறந்த புத்தகங்கள் பட்டியல்களில் இடம்பெற்றவை.
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால், அது ஒரு நீண்ட தொடர் கதையைப் போலத் தோன்றும் . ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனிக் கதை, அவை வெவ்வேறு பொருண்மைகள் போலத் தோன்றினாலும், உள்ளார்ந்த செய்தி ஒன்றே. அதிகாரம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, உண்மை எப்படிப் பொய்யாகத் திரிக்கப்படுகிறது, மனித சுதந்திரம் எவ்வாறெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதையே அவர் தொடர்ந்து சொல்கிறார்.
“பர்மிய நாட்கள்” (Burmese Days) என்ற நாவலில் இருந்து தான் அது தொடங்குகிறது,. இதில் காலனிய ஆட்சியின் உண்மையான முகம் காட்டப்படுகிறது. அந்நியர்களின் ஆட்சி எப்படி சொந்தநாட்டினரை அடக்குகிறது, இனவெறியுடன் நடத்துகிறது என்பதுதான் அதன் கதை இது பர்மாவைப் பற்றிய கதை மட்டுமல்ல. அனைத்துக் காலனிய ஆட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய கதை தான் இது
அடுத்த கதை ஏழை மக்களின் கொடுமையான வாழ்க்கைக்குள் செல்கிறது. “பாரிஸ்–லண்டனில் வறுமை வாழ்க்கை” (Down and Out in Paris and London) என்ற நூலில், வறுமை என்பது ஒரு கருத்தாக்கமாக இல்லாமல், அது நேரடி அனுபவமாக இருக்கிறது. பசி, வேலையில்லாத் திண்டாட்டம் எளியமனிதர்களின் வாழ்வில் ஏற்படும் , அவமானம் போன்றவை மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாகக் காட்டப்படுகிறது. இந்தக் கதையில் எந்த வித அலங்காரமும் இல்லை. வாழ்க்கை எப்படியோ அப்படியே சொல்லப்படுகிறது.
ஜார்ஜ் ஆர்வெல் பர்மாவை விட்டுத் திரும்பிய பின்னர் அவர் வசதியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, லண்டனிலும் பாரிஸிலும் ஏழைகளுடன் வாழ முடிவு செய்தார். பாத்திரம் கழுவும் வேலை, தரமற்ற விடுதிகள், பசி, அவமானம் – இவை அனைத்தையும் நேரில் அனுபவித்தார். அந்த வாழ்க்கையின் கதைதான் இந்த “பாரிஸ்–லண்டனில் வறுமை வாழ்க்கை” (Down and Out in Paris and London) யாகமாறியது.
இதன் தொடர்ச்சியாக “விகன் கப்பல்துறைக்குச் செல்லும் பாதை” (The Road to Wigan Pier) 1937 இல் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரை. இதில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் துன்ப வாழ்க்கை காட்டப்படுகிறது. மோசமான குடியிருப்புகள், கடின உழைப்பு, குறைந்த ஊதியம் என வாழ்க்கையை எவ்வளவு சிரமமாக மாற்றுகின்றன என்பதை இந்த நூல் சொல்லுகிறது.
சமூக சமத்துவமின்மை என்பது அரசியல் சொல் அல்ல; அது மனித வாழ்க்கையைப் பாதிக்கும் உண்மை இதைத்தான் இந்தப் புத்தகம் நிதர்சனமாகக் காட்டுகிறது ஆர்வெல், சுரங்கத் தொழிலாளர்களின் வீடுகளில் அவர்களோடு தங்கி, அவர்களின் தினசரி வாழ்க்கையை நேரடியாக அனுபவித்துத்தான் இதை எழுதினார் முதல் பகுதி சமூக ஆய்வாகவும், இரண்டாம் பகுதி சோசலிசத்தின் மீதான விமர்சனமாகவும் உள்ளது, இது இங்கிலாந்தின் தொழிலாளர்களின் உண்மையான நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் துணிச்சலான , நேர்மையான, காரணத்தால் அழியாத படைப்பாகப் போற்றப்படுகிறது.
பின்பு கதை போர் என்ற திசைக்கு மாறுகிறது. “கத்தலோனியாவுக்கு அஞ்சலி” (Homage to Catalonia) என்ற நூலில், ஸ்பெயின் போரின் அனுபவங்களை விவரிக்கிறது. சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களுக்குள்ளேயே பொய், துரோகம், அதிகார ஆசை இருப்பதை அவர் காண்கிறார். எதிரி வெளியில் மட்டுமல்ல; உள்ளேயும் இருக்கிறான் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. அரசியலில் உண்மை தான் முதலில் பலியாகிறது என்ற உணர்வு இங்கே தெளிவாக வருகிறது.
இந்த அனுபவங்களின் சுருக்கமே “விலங்கு பண்ணை” (Animal Farm) ஆகிறது. இது விலங்குகள் பேசும் கதை போலத் தோன்றினாலும், உண்மையில் மனித சமூகத்தின் கதை. சமத்துவம் என்ற பெயரில் தொடங்கிய ஒரு புரட்சி, மெதுவாகத் தடம் மாறுகிறது. அதிகாரம் சிலரிடம் சேர்ந்தவுடன், அவர்கள் மற்றவர்களை ஒடுக்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதை எளிமைதான் ஆனால் அதன் பொருள் மிகவும் ஆழமானது.
இதற்குப் பிறகு வரும் “பத்தொன்பது எண்பத்திநான்கு” (Nineteen Eighty-Four) நாவல், இந்தக் கதை நம்மை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்கிறது. எப்போதும் கண்காணிப்பு வளையம், திரிக்கப்படும் உண்மை, சிந்திப்பதே குற்றம் என்ற ஒரு உலகம் இதில் காட்டப்படுகிறது.
ஆர்வெலின் மனதில் ஒரு பயம் தங்கி இருந்தது. அது ,அதிகாரம் எல்லையின்றி வளர்ந்தால், எதிர்காலத்தில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும்? அந்த கேள்வியிலிருந்து பிறந்ததுதான் அது தான் “பத்தொன்பது எண்பத்திநான்கு” (Nineteen Eighty-Four). இந்த நாவல் ஒரு கற்பனையான எதிர்காலம் என்றாலும், அது மனிதர்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையாக இருந்தது. “பிக் பிரதர்” என்ற சொல்லே பயத்தின் அடையாளமாக மாறியது.
இந்த நீண்ட கதையின் நடுவே, ஆர்வெல் எழுதிய கட்டுரைகள் சிறு இடைவேளை போல வருகின்றன. “யானையைச் சுடுதல்” (Shooting an Elephant) அதிகாரத்தில் இருக்கும் மனிதனின் மன அழுத்தத்தைச் சொல்கிறது. “நான் ஏன் எழுதுகிறேன்” (Why I Write) என்ற கட்டுரை, இந்த எல்லா கதைகளையும் அவர் ஏன் எழுதினார் என்பதை விளக்குகிறது. “அரசியலும் ஆங்கில மொழியும்” (Politics and the English Language) மொழி எப்படி பொய்களை மறைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எளிதாகச் சொல்கிறது.
இளம் வயதில், ஜார்ஜ் ஆர்வெல் பிரிட்டிஷ் பேரரசின் காவலராகப் பர்மாவுக்கு சென்றார். அங்கு காலனிய ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை நேரில் பார்த்தார். ஆட்சியாளர்கள் எப்படி மக்களை அடக்குகிறார்கள், அதிகாரம் எப்படி மனிதர்களைக் கொடுமைப்படுத்துகிறது. என்பதனைக்கண்டார், அது மனதுக்குள் விழுந்தது. ஒரு யானையை சுட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட ஒரு அதிகாரியின் மனநிலை தான் “யானையைச் சுடுதல்” (Shooting an Elephant) என்ற கட்டுரை, அந்த அனுபவம் தான்அவரை காலனிய ஆட்சியிலிருந்து விலகச் செய்தது.
இப்படிப் பார்க்கிறபோது, ஜார்ஜ் ஆர்வெலின் படைப்புகள் தனித் தனியாக இல்லை. அவை எல்லாம் ஒன்றோடொன்று இணைந்த ஒரு தொடர்கதைதான் என்பது புரியும் . காலனிய ஆட்சி, வறுமை, தொழிலாளர் வாழ்க்கை, போர், புரட்சி, எதிர்காலம்—எல்லாவற்றையும் தொட்டு அந்த நெடுங்கதை நகர்கிறது.
இந்தக் கதைகளின் வழியே சொல்லப்படும் ஒரே ஒரு செய்தி இது தான்: அதிகாரத்தை எப்போதும் கேள்வி கேள். உண்மை என்ற எதையும் எளிதில் நம்பிவிடாதே. எந்தநிலையிலும் உன் சுதந்திரத்தை இழந்து விடாதே.
ஜார்ஜ் ஆர்வெல் 1903 ஆம் ஆண்டு நமது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மோதிஹாரி என்ற சிறிய நகரில் பிறந்தார், அவரின் இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளேர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில், ஒரு சாதாரண அரசு ஊழியரின் மகன், அதிகம் வசதி இல்லாத நடுத்தரக் குடும்பம். சிறுவயதில் தாயுடன் இங்கிலாந்து சென்ற அவர், தந்தையிடம் இருந்து பிரிந்து வளர்ந்த தனிமை, அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்த தனிமையே, மனித மனத்தை கூர்ந்து கவனிக்கும் திறனை அவருக்குத் தந்தது.
பள்ளிப் பருவத்தில் ஆர்வெல் புத்திசாலி ஆனாலும் பணக்கார மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் அளிக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் அவர் இளம் மனதைச் சுட்டது. ஈட்டன் கல்லூரியில் படித்தபோது, அவர் அதிகமாக வாசித்தார்; அதிகமாகச் சிந்தித்தார். ஆனால் பல்கலைக்கழகம் செல்லப் பணம் இல்லை. அதனால் அவர் தேர்ந்தெடுத்த பாதை, அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.
அதற்குப் பிற்பாடு அவரை அரசியல் அழைத்தது. சமூகத்தில் சமத்துவம் வேண்டும் என்ற எண்ணம் அவருள் வலுவடைந்தது. ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் பங்கேற்றபோது, சுதந்திரத்திற்காகப் போராடும் இயக்கங்களுக்குள்ளேயே பொய், துரோகம், அதிகார ஆசை இருப்பதை அவர் கண்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், உயிர் தப்பி வந்தார். அந்த அனுபவங்களின் கதையே “கத்தலோனியாவுக்கு அஞ்சலி ” (Homage to Catalonia). அங்கு அவர் உணர்ந்த உண்மை ஒன்று தான் அரசியலில் முதலில் பலியாகுவது உண்மையே.
இந்த எல்லா அனுபவங்களை எல்லாம் சேர்ந்து, பிறந்ததுதான் ஒரு சிறிய பண்ணைக் கதை. விலங்குகள் பேசும் கதை. ஆனால் அது உண்மையில் மனிதர்களின் கதையாக இருந்தது. “விலங்கு பண்ணை” (Animal Farm) என்ற அந்த நாவலில், சமத்துவக் கனவுடன் தொடங்கிய ஒரு புரட்சி, அதிகாரத்தின் காரணமாக மாறும் கதையை அவர் அற்புதமாக விவரிக்கிறார்.. பன்றிகள் மெதுவாக மற்ற விலங்குகளை அடக்குவது, மனிதர்களைப் போலவே அது மாறுவது – இது ஒரு பண்ணையின் கதை அல்ல; உலக அரசியலின் கதையாக அது தோன்றியது.
காலப்போக்கில் ஜார்ஜ் ஆர்வெல் உடல்நலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. காசநோய் அவரது உடலை மெதுவாகப் பலவீனப்படுத்தியது.. தனது 46 வயதில் அதாவது 21 ஜனவரி 1950 அவர் மறைந்தார், அவர் எழுதிய கதைகள் இன்னும் நம்முடன் உயிர்ப்புடன் இருக்கின்றன.
(21 ஜனவரி 2026, ஜார்ஜ் ஆர்வெல்லின் 76 ஆவது நினைவுதினம்)