'எல்லா வகை நூல்களையும் ஒரே முறையில் மொழிபெயர்க்க முடியாது!' - அலமேலு கிருஷ்ணன்
தமிழ், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வருபவர் மொழிபெயர்ப்பாளர் அலமேலு கிருஷ்ணன். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்து ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ள இவர் ,'எஸ்பிஐஓஏ' பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்னும் தனது பணிகளைத் தொடர்ந்து வரும் அவருடன் ஓர் உரையாடல்!
நீங்கள் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அப்போதைய குடும்பத்து சூழல் பற்றி?
தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அப்பாவும் கேரளத்தைச் சேர்ந்த என்னுடைய அம்மாவும் ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி என்ற கிராமத்திலிருந்து கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்குப் புலம் பெயர்ந்தனர். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் அங்கேதான். அப்பா ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அம்மா வீட்டை நிர்வகித்து வந்தார். எனக்கு மூன்று அண்ணன்கள். அவர்களில் மூத்த இருவர் கல்லூரியில் படிப்பதுடன் வீட்டில் பயிற்சி மையம் நிறுவி இந்தியும் ஸம்ஸ்க்ருதமும் கற்பித்து வந்தனர். எனது தாய்மொழி தமிழ். பள்ளியில் மலையாளம், ஆங்கிலம் கற்று வந்தேன். வீட்டில் இந்தி, ஸம்ஸ்க்ருதம் வகுப்புக்கள் நடைபெற்று வந்ததால் அந்த மொழிகளைக் கற்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போதே எங்கள் பயிற்சி மையத்தில் இந்தி கற்பிக்கத் தொடங்கினேன்.
ஒரு பெண்ணாகக் கல்வி கற்பதற்கு அந்தக் காலத்துச் சூழலில் தடை இருந்ததா?
கல்வி கற்பதற்கு வீட்டுச் சூழலில் எனக்குத் தடை என்று ஏதும் இருக்கவில்லை. நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இந்தி கற்பதற்குத் தடை இருந்தது. அந்தச் சூழலிலும் என் அண்ணன்கள் இந்தி கற்றுக் கொண்டனர். இந்தச் செய்தி அவர்கள் கூறக் கேட்டதுதான்.
நான் வீட்டிலேயே இந்தி கற்று இந்தி மொழியில் ப்ரவீண், ஸாஹித்ய ரத்னா மற்றும் சமஸ்கிருதத்தில் கோவித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தேன். புகுமுக வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றேன்.
ஒரே மகளாக இருந்ததால் எனது அம்மா அப்பா எனக்குத் திருமணம் செய்ய விரும்பினர். நான் படித்து பட்டம் பெற விரும்பினேன். திருமணம் நிச்சயமானால் கல்லூரிப் படிப்பைக் கைவிடவேண்டும் என்று கூறினர். எனக்குத் திருமணம் நிச்சயமானது. அதனால் தற்காலிகமாக என் படிப்பு தடை பட்டது.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு பணி செய்துகொண்டே படிப்பைத் தொடர்ந்தேன். பொருளாதாரத்தில் இளங்கலை, இந்தி, சம்ஸ்கிருதம், மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.
தாய், தந்தை வெவ்வேறு ஊர்கள் வெவ்வேறு தாய்மொழி என்கிற போது 'எது நம் மொழி ?' என்கிற அடையாளச் சிக்கல் இருந்ததா?
அவர்கள் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரின் தாய்மொழி தமிழே. அதனால், சிக்கல் எதுவும் இருக்கவில்லை.
தமிழ், மலையாளம் இவற்றில் எது உங்களுக்கு நெருக்கமாக மாறியது?
எனக்குத் தாய் மொழியாம் தமிழ் மொழிதான் நெருக்கமாக இருந்தது, இருக்கிறது. சிறுமியாக இருக்கும்போது என்னுடைய மூத்த அண்ணா விடுமுறையில் வரும்போது பரிசுப் பொருட்களுடன் சில தமிழ்ப் புத்தகங்களும் வாங்கி வருவார். அவற்றை மிக உற்சாகத்துடன் படிப்பேன். அன்றாடம் என்னுடைய அண்ணன்களும் அம்மாவும் விகடன், கல்கி ஆகிய பத்திரிகைகளில் வரும் சரித்திரத் தொடர்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவது வழக்கம். அதைக் கேட்டுக்கேட்டு எனக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உண்டாயிற்று.
உங்கள் அண்ணன்கள் மொழிபெயர்ப்புத் துறையில் இறங்கியது உங்களுக்கு எப்படித் தூண்டுதலாக அமைந்தது? அவர்களிடமிருந்து நீங்கள் பெற்ற பாடம் என்ன?
எனக்கு இயற்கையாகவே மொழியாக்கம் செய்வதில் ஆர்வம் இருந்தது. என்னுடைய மூன்று அண்ணன்களும் மொழியாக்கத் துறையில் ஈடுபட்டிருந்தனர். அது எனக்கு மேலும் ஊக்கமளித்தது.
ஒருமுறை, எனது மூத்த அண்ணா முனைவர் எச்.பாலசுப்பிரமணியம், ஹிமான்சு ஜோஷி என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் படைப்பான ‘யாதனா சிபிர் மேன்’ என்ற புத்தகத்தைக் கொடுத்து ‘நீ இதைத் தமிழில் மொழிபெயர்த்தால், உனக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார். அது எனக்குப் பெரிதும் தூண்டுதலாக இருந்தது.
எது உங்கள் முதல் மொழிபெயர்ப்பு ?
அண்ணனின் வேண்டுகோளை ஏற்று எனது மொழி பெயர்ப்புப் பணியைத் தொடங்கினேன்.அவர் பரிந்துரை செய்த ஹிமான்சு ஜோஷி அவர்களின்
‘யாதனா சிபிர் மேன்’ என்ற புத்தகத்தை ‘சித்திரவதை முகாமில்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தேன். அது புத்தகமாக வெளிவந்தது. இங்கிருந்து எனது மொழியாக்கப் பயணம் தொடங்கியது.
தமிழிலிருந்து மலையாளம், மலையாளத்திலிருந்து இந்தி, இந்தியில் இருந்து தமிழ், சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ், தமிழிலிருந்து சமஸ்கிருதம் என்று பரஸ்பரம் மாறி மாறி மொழி பெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். இப்படிக் கூடு விட்டு பாயும்போது என்ன உணர்வீர்கள்? அதன் வித்தியாசத்தைக் கூற முடியுமா?
மொழிபெயர்ப்பு செய்யும்போது ஒரு பண்பாட்டிலிருந்து மற்றொரு பண்பாட்டிற்குள் நுழையும் அனுபவம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் தனித்துவம் இருக்கிறது. எனவே, அதற்கேற்ப அணுகுமுறையை மாற்றிக் கொள்வேன்.
மலையாளத்திலிருந்தும் தமிழுக்கு மாற்றும்போது பால் திணை வேற்றுமை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, மலையாளத்தில் அவன் வருன்னு, அவள் வருன்னு, அவர் வருன்னு, வண்டி வருன்னு. தமிழில் அவன் வருகிறான், அவள் வருகிறாள், அவர்கள் வருகின்றனர். வண்டி வருகிறது.
பெயர் குறிப்பிடாமல் அவன் அவளிடம் சொல்கிறான் என்ற சொற்றொடருக்கு இந்தியில் வஹ் உஸ் ஸே கஹ்தா ஹை. இதில் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சொல்கிறான் என்பது தெளிவாக இல்லை.
மலையாளம், இந்தி மொழிகளில் நிறைய சம்ஸ்க்ருதச் சொற்கள் உள்ளன. ஆகையால் அவற்றிற்கிடையில் மொழிபெயர்ப்பு செய்வது சிறிது எளிதாக இருக்கும். ஆனால், இம்மொழிகளிலிருந்து தமிழுக்கு மாற்றும்போது சரியான தமிழ்ச் சொற்கள், பொருத்தமான இலக்கண அமைப்பு, வாக்கிய அமைப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது குறிப்பாக, சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது, அங்குள்ள தத்துவச் செறிவையும் தமிழின் இயல்பான இனிமையையும் சமநிலைப்படுத்த வேண்டும். அதேபோல் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழியாக்கம் செய்யும்போது, தமிழின் உணர்ச்சி நயத்தையும் கருத்தின் நுட்பத்தையும் சமஸ்கிருதத்தின் செம்மையான இலக்கண அமைப்பில் பொருத்துவது ஒரு சவாலாக இருக்கும்.
மலையாளம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம் இந்த நான்கு மொழிகளில் உறவு முறைகள் வேறுபாடுகள் சார்ந்து என்ன புரிதல் ஏற்பட்டது?
தமிழ் மொழி உறவுமுறைகளை மிக நுணுக்கமாக வேறுபடுத்திக் கூறுகிறது. தாய் வழி, தந்தை வழி, மூத்தவர், இளையவர் போன்ற உறவுகளுக்குத் தனித்தனியான சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தாயின் அண்ணா அல்லது தம்பி - மாமா, தந்தையின் அண்ணா பெரியப்பா, தம்பி – சித்தப்பா, தாயின் அக்கா – பெரியம்மா, தங்கை - சித்தி, தந்தையின் அக்காள் தங்கை இருவருமே அத்தை.
தமிழர்களில் ஒரு சமூகத்தினர் அத்தையின் கணவரை அத்திம்பேர் என்று அழைக்கின்றனர். அது தூய தமிழான அத்தையின் அன்பர் என்பதின் மரூஉ.
தமிழ் – மலையாள உறவுச் சொற்களில் அதிக ஒற்றுமை காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக அம்மா, மாமி, மாமன் போன்ற சில சொற்கள் இருமொழியிலும் ஒன்றே. தமிழிலிருந்து வேறுபட்ட பயன்பாடுகளும் உள்ளன. அப்பாவை அச்சன் என்றும் அக்காவை சேச்சி என்றும் தாத்தா – பாட்டியை அப்பூப்பன் - அம்மூம்ம என்றும் சொல்வார்கள்.
இந்தி மொழியிலும் உறவு வகைமைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. தந்தையின் அண்ணா – தாஊ, தம்பி – சாச்சா, தாயின் அண்ணா, தம்பி - மாமா, தந்தையின் அக்காள், தங்கை – புஆ, தாயின் தங்கை - மௌஸி, அப்பாவின் அப்பா – தாதா, அம்மா - தாதீ அம்மாவின் அப்பா - நானா அம்மா- நானீ, மகனின் மகன் - போதா மகள் – போதீ, மகளின் மகன்- நாதீ, மகள் - நாதின் போன்ற தனித்தனிச் சொற்கள் உள்ளன.
சமஸ்கிருதமும் குடும்ப உறவுகளுக்கு இலக்கண ரீதியாகத் துல்லியமான சொற்களைக் கொண்ட மொழி. அப்பாவின் அப்பா - பிதாமஹ: அம்மா - பிதாமஹீ, அம்மாவின் அப்பா மாதாமஹ:- அம்மா - மாதாமஹீ, மகனின் மகன் பௌத்ர:, மகள் – பௌத்ரீ, மகளின் மகன் –தௌஹித்ர:, மகள் - தௌஹித்ரி.
இந்த நான்கு மொழிகளின் உறவு வகைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது அவற்றில் ஒற்றுமையையும் ஒவ்வொரு மொழியின் தனித்துவமான மொழியியல் சிறப்புகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
பல மொழிகளில் புழங்கும் போது ஒரு மொழியில் உள்ள வளம், செழுமை இன்னொரு மொழியில் இருக்காது. ஒரு மொழியில் உள்ள பிரத்தியேகத் தன்மை இன்னொன்றில் காண முடியாது. இப்படி நீங்கள் புழங்கியமொழிகள் பற்றிய ஒப்பீட்டைக் கூற முடியுமா? ஒவ்வொன்றின் தனித்தன்மை பற்றிக் கூற முடியுமா?
நீங்கள் கூறுவதுபோல் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை இருக்கிறது.
தமிழ் மொழி மிகத் தொன்மையானது, தமிழின் சொல்வளம், குறைந்த சொற்களில் ஆழமான கருத்தைச் சொல்லும் ஆற்றல் தமிழின் தனிச்சிறப்பு. திருக்குறள் போன்ற நூல்களில் அடங்கியுள்ள பொருளை வேறொரு மொழியில் கொண்டு செல்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
மலையாளம் தமிழுடன் நெருங்கிய உறவுடைய மொழியாக இருந்தாலும், சமஸ்கிருதச் சொற்களை இயல்பாக உள்வாங்கிக் கொண்டிருப்பதால் தனித்துவமான சொல்வளத்தைப் பெற்றுள்ளது.
மலையாளத்தின் இனிமையும், இயற்கையோடு கலந்த உணர்வுகளும் என்னைக் கவர்கின்றன. தமிழ்–மலையாளம் இரண்டிலும் ஒரே சொல் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘அங்காடி’ சங்க காலத் தமிழிலேயே காணப்படும் சொல். தமிழிலும் மலையாளத்திலும் அங்காடி என்ற சொல் சந்தை, வணிகத் தெரு, என்ற பொருளில் இன்று வரை பயன்படுகிறது.
அதே நேரத்தில், சிறிய சொல் வேறுபாடுகளே சில சமயங்களில் பெரிய பொருள் வேறுபாட்டை உருவாக்குவதையும் அனுபவித்திருக்கிறேன். மலையாளத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் தமிழில் வெள்ளப் பெருக்கு, மலையாளத்தில் பனி - காய்ச்சல், தமிழில் பனித்துளி, மலையாளத்தில் மதி - போதும், தமிழில் - சந்திரன், இந்தி, மக்களை இணைக்கும் மொழி. பெரும்பாலான மக்கள் பேசும் மொழி. இந்தியாவின் பல மாநிலங்களின் இலக்கிய உலகை எனக்கு அது அறிமுகப்படுத்தியது. இந்தி வழியாக வடஇந்திய எழுத்தாளர்களின் சிந்தனைகள், சமூக அனுபவங்கள், கவிதை மரபுகள் ஆகியவற்றை நெருக்கமாக அறிய முடிந்தது. இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது, கருத்தை மட்டும் அல்ல, அந்த மொழியின் மனநிலையையும் கொண்டு வர வேண்டும் என்பதே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
சமஸ்கிருதம் தொன்மை வாய்ந்தது. சமஸ்கிருத மொழியின் இலக்கண ஒழுங்கும், தத்துவச் செறிவும், ஒரு சொல்லில் பல அடுக்குப் பொருள்களைச் சுமக்கும் திறனும் என்னை எப்போதும் வியக்க வைக்கின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், காவியங்கள், தத்துவ நூல்கள் ஆகியவற்றின் மூலம் உலகின் மிகப் பழமையான அறிவுச் செல்வங்களில் ஒன்றை அது பாதுகாத்து வருகிறது. சமஸ்கிருதத்தை மொழிபெயர்க்கும்போது, ஒரு சொல்லின் நேரடிப் பொருள் மட்டுமல்லாமல் அதன் தத்துவப் பின்னணியையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது, வெறும் சொற்களை மாற்றினால் போதாது; அதன் தத்துவ ஆழம் தமிழிலும் உயிருடன் ஒலிக்க வேண்டும். அதற்காக பலமுறை மூலநூலை மீண்டும் மீண்டும் வாசித்து, ஒரே சொல்லுக்காக நீண்ட நேரம் சிந்தித்திருக்கிறேன்.
இந்த அனுபவங்களின் மூலம் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் என்னவென்றால், மொழிபெயர்ப்பாளர் இரண்டு பண்பாடுகளுக்கு இடையே பாலம் அமைப்பவர். ஒரு மொழியில் இருக்கும் அழகை அப்படியே இன்னொரு மொழியில் கொண்டு வர முடியாவிட்டாலும், அந்த அழகின் உயிரை இழக்காமல் வாசகரிடம் சேர்ப்பதுதான் மொழிபெயர்ப்பாளரின் கடமை.
அதனால்தான், எந்த மொழியையும் நான் மற்றொரு மொழியுடன் ஒப்பிட்டு உயர்வு–தாழ்வு பார்க்கவில்லை. ஒவ்வொரு மொழியும் எனக்கு ஒரு புதிய பார்வையைத் தருகிறது. தமிழ் ஆழத்தை கற்றுக்கொடுத்தது; மலையாளம் மென்மையை உணர்த்தியது; இந்தி பரந்த இந்திய இலக்கிய உலகை அறிமுகப்படுத்தியது; சமஸ்கிருதம் சிந்தனையின் செறிவையும் ஒழுங்கையும் கற்றுக்கொடுத்தது. இந்த நான்கு மொழிகளும் சேர்ந்துதான் என்னை ஒரு மொழிபெயர்ப்பாளராக உருவாக்கியுள்ளன.
எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்ப்பது கடினமானது? எது சுலபமானது ?
மொழிகளில் கடினம் எளிது என்பதற்கே இடமில்லை. சவால்களை எதிர்கொண்டு மொழியாக்கம் செய்வதே சிறப்பு.
நீங்கள் சாமி சிதம்பரனார் முதல் கி. ராஜநாராயணன் வரை தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். இந்த இரண்டு வெவ்வேறு காலக்கட்ட மொழியை எப்படிப் புரிந்து கொண்டு செய்தீர்கள்?
ஓர் எழுத்தாளரின் மொழிக்குள் நுழையாமல், அவரது படைப்பை மொழிபெயர்க்க முடியாது. இரண்டு எழுத்தாளர்களை மட்டுமல்ல; இரண்டு காலங்களையும், இரண்டு மொழிநடைகளையும், இரண்டு பண்பாட்டு அனுபவங்களையும் வெளிப்படுத்துவதற்கு அவர்களுடைய படைப்புகளை ஒருமுறை அல்ல, பலமுறை வாசித்தேன்.
சாமி சிதம்பரனாரின் மொழி செவ்வியல் மரபையும், இலக்கிய ஒழுங்கையும், செறிவான நடையையும் தாங்கி நிற்கிறது. அவருடைய சொற்களின் பின்னால் தமிழ் இலக்கிய மரபும், பண்பாட்டு அடையாளங்களும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. எனவே, மொழிபெயர்க்கும்போது வெறும் பொருளை மட்டும் எடுத்துச் செல்லாமல், முடிந்த அளவுக்கு அந்தக் காலத்தின் மொழிநடையையும் கண்ணியத்தையும் கொண்டுவந்துள்ளேன்.
கி. ராஜநாராயணனின் மொழி மண்ணின் மணம் வீசும் பேச்சுமொழி. கரிசல் நில மக்களின் வாழ்க்கை, வட்டாரச் சொற்கள், நகைச்சுவை, நாட்டுப்புற உவமைகள் ஆகியவை அவரது எழுத்தின் உயிர். எனவே, மூலத்தின் சுவையை இழக்காமல், இலக்கு மொழி வாசகரும் ரசிக்கக்கூடிய சமநிலையைத் தேட வேண்டியிருந்தது.
சொற்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உரிய விளக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்து அடிக்குறிப்பில் விளக்கியுள்ளேன்.
சிறுகதைகள், சுய முன்னேற்ற நூல்கள், பயண அனுபவங்கள், தனிநபர் வரலாறு, நாவல்கள், பக்தி, தத்துவ நூல்கள், வரலாறு, இலக்கண நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்ற எல்லாவிதமான வகை நூல்களையும் மொழி பெயர்த்து இருக்கிறீர்கள். எந்த மொழிக்கு எப்படிப்பட்ட நூல் வகையை மொழிபெயர்ப்பது என்று ஏதாவது வரையறை வைத்துள்ளீர்களா?
நான் அப்படிப்பட்ட எந்தக் கடுமையான வரையறையையும் வைத்துக் கொண்டதில்லை. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, முதலில் என்னைக் கவர்வது அந்த நூலின் கருத்துகளும் அதன் இலக்கியத் தரமும். அதற்குப் பிறகுதான் அது எந்த வகையைச் சேர்ந்தது, எந்த மொழிக்குச் செல்ல வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்பேன்.
ஒவ்வொரு மொழிக்கும் சில இயல்பான பலங்கள் இருக்கின்றன என்பது உண்மை. பக்தி தத்துவ நூல்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருத மொழியிலிருந்து மொழியாக்கம் செய்கிறேன். அதைத் தமிழில் வழங்கும்போது முடிந்த அளவு சொற்களின் உச்சரிப்பு சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.
அதேபோல் வட்டார மொழி சார்ந்த சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றில் அந்த மண்ணின் மணமும், மக்களின் பேச்சு வழக்கும், வாழ்க்கை முறையும் பாதுகாக்கப்பட வேண்டும். வாழ்க்கை வரலாறு, பயணக் குறிப்புகள் போன்றவற்றில் தகவலின் துல்லியமும், மொழியின் இயல்பான ஓட்டமும் முக்கியம். ஆய்வுக் கட்டுரைகள், இலக்கண நூல்கள் போன்றவற்றில் அழகான மொழியை விட கருத்தின் துல்லியமும் கலைச்சொற்களின் சரியான பயன்பாடும் மிக முக்கியமானவை.
எனது அனுபவத்தில், ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளருக்கு எல்லா வகை நூல்களையும் மொழிபெயர்க்கும் திறன் இருக்க வேண்டும். ஆனால் எல்லா வகை நூல்களையும் ஒரே முறையில் மொழிபெயர்க்க முடியாது. மொழி மாறும்போது மட்டுமல்ல, வகை மாறும்போதும் மொழிபெயர்ப்பின் அணுகுமுறை மாற வேண்டும்.
அதனால், வகை அடிப்படையில் எனக்கென்று எந்த வரம்பும் இல்லை; ஆனால், ஒவ்வொரு வகைக்கும் அதற்கேற்ற மொழிநடை, சொற்தேர்வு, வாசகர் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மதிக்க வேண்டும் என்ற ஒரு மொழிபெயர்ப்பு ஒழுக்கம் மட்டும் இருக்கிறது. அதுவே நான் கடைப்பிடிக்கும் அடிப்படைக் கொள்கை.
மொழிபெயர்க்கும்போது மூல நூலைப் படிக்கும் போது உங்களை வியப்பில்,அதிர்ச்சியில், மகிழ்ச்சியில், நெகிழ்ச்சியில், குற்ற உணர்வில் ஆழ்த்திய வாசிப்பு அனுபவங்கள் ஏதாவது உண்டா?
ஆம். இப்படிப்பட்ட உணர்வுகளை வாசிப்பில் நான் நிறையவே சந்தித்து இருக்கிறேன்.அப்படிப்பட்ட அனுபவங்கள் நிறையவே உண்டு.
ஹிமான்சு ஜோஷியின் ‘யாதனா சிபிர் மேன்’ இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் அந்தமானிலுள்ள சிற்றறைச் சிறைச்சாலையில் அனுபவித்த தாங்கொணா சித்திரவதைகள் குறித்த நூல். எழுத்தாளர் அந்தமானிற்குச் சென்று அந்தப் போராட்ட வீரர்களின் இன்று உயிருடன் இருக்கும் சந்ததியினரைச் சந்தித்து அதை எழுதியுள்ளார். அந்த மூலநூலைப் படித்தபொழுது. ‘சும்மாவா கிடைத்தது சுதந்திரம்’ என்று என் மனது உருகியது.
அதுபோன்றே அவரது ‘ககார் கீ ஆக்’ நூலில் மலைவாழ் பெண்களின் துயரங்களைப் படித்தது மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
பிரமீளா தாகூரின் வஞ்சிதா, ஒவ்வொரு நிலையிலுள்ள பெண்களின் சமுதாய, குடும்பபிரச்சினைகளை விரிவாக விவரித்து அதற்கு தீர்வும் கூறியுள்ளது என்னை மிகவும் கவர்ந்தது.
வெண்ணிலாவின் ‘இந்திரநீலம்’ கண்ணகி, மாதவி, திரௌபதி முதல் ஆடர்மகளிர் வரையிலான பெண்களின் உள்ளுணர்வுகளை உளவியல் ரீதியாக புதியகோணத்தில் படைத்துள்ளது வியக்க வைத்தது.
மொழிபெயர்க்கும் போது மூலப்பிரதியின் ஆசிரியரைச் சந்தித்தது உண்டா? சந்திக்க வேண்டும் என்று விரும்பியது உண்டா?
சந்திக்க வேண்டும் என்று விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாக இருந்ததால் பெரும்பாலும் மூலப்பிரதியின் ஆசிரியரைத் தொடர்புகொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதுண்டு. ஆனால், ஹிமான்சு ஜோஷி அவர்களை மட்டும் ஒரு முறை சந்தித்திருக்கிறேன்.
உங்கள் மொழிபெயர்ப்புக்கு என்று ஒவ்வொரு மொழிக்கும். என்று ஏதாவது கோட்பாடுகள் வரையறைகள் வைத்துக் கொள்வதுண்டா?
ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக ஒரு கட்டாயமான "மொழிபெயர்ப்பு விதிமுறை" இல்லை. மொழியின் தன்மை, இலக்கிய வகை, நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்து அணுகுமுறைகள் மாறுகின்றன.
மூல நூலைப் படிக்கும் வாசகருக்கு ஏற்பட்ட அதே உணர்வை, மொழிபெயர்ப்பு வாசகருக்கும் ஏற்படுத்த வேண்டும். மூல மொழியின் அமைப்பு, சொற்கள், கருத்து ஆகியவற்றை முடிந்தவரை பாதுகாப்பது. ஒரு மொழியின் பண்பாடு, பழக்கவழக்கம், மரபுத்தொடர் போன்றவற்றை மற்றொரு மொழி வாசகர்களுக்குப் புரியும் வகையில் மாற்றி வழங்குவது என்பதே வரையறை.
இன்னொரு மொழிக்கு ஒரு படைப்பைக் கொண்டு செல்லும்போது அது மொழிபெயர்ப்பு என்று சொல்வீர்களா? மொழியாக்கம் என்று சொல்வீர்களா?
மூலமொழியின் பொருளை இலக்கு மொழியில் இயன்றவரை அப்படியே மாற்றுவது மொழிபெயர்ப்பு. தகவல், சட்டம், அறிவியல், தொழில்நுட்ப நூல்களை மற்றொரு மொழிக்கு எடுத்துச் செல்வதை மொழிபெயர்ப்பு என்று சொல்வேன்.
மூலமொழியிலுள்ள கருத்து, உணர்வு, நடை, பண்பாட்டு நயம் ஆகியவற்றை இலக்கு மொழிக்கேற்ப மறுஉருவாக்கம் செய்வது மொழியாக்கம்.
இலக்கியம், கவிதை, நாவல், நாடகம் போன்றவற்றை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எடுத்துச் செல்வதை மொழியாக்கம் என்று சொல்வேன்.
எது உங்களை மொழிபெயர்க்கத் தூண்டுகிறது? நூல்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
நான் படித்து ரசித்த புத்தகத்தை இன்னொரு மொழி வாசகர்களும் படித்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை மொழியாக்கம் செய்யத் தூண்டுகிறது.
கருப்பொருள், கருத்தைச் சொல்லும் விதம், சொல்ல வரும் வாழ்க்கைப் பாடம் அல்லது அறநெறிச் செய்தி ஆகியவை அடங்கிய புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன்.
ஆசிரியர் பணியில் உங்களது அனுபவங்கள் எப்படி இருந்தன? ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற இருவருக்குள் முரண்பாடுகள் மோதல்கள் வந்ததுண்டா?
ஏற்கெனவே சொன்னதுபோல் நான் இளம்வயதிலேயே கற்பிக்கும் பணியைத் தொடங்கிவிட்டேன்.சென்னையில் உள்ள பல மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி இருக்கிறேன். 1989 இல் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்க மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி இந்தி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து ஐந்தே ஆண்டுகளில் இந்தி துறைத்தலைவியாகப் பதவி உயர்வு பெற்றேன். பள்ளி பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதால் அதையும் கற்பித்தேன்.ஆகவே ஆசிரியர் பணியை நான் விருப்பத்துடன் மேற்கொண்டேன். அது மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் பணியாக இருந்தது. சொந்தக் கவலைகள்கூட வகுப்பறைக்குச் சென்று மாணவர்களின் முகத்தைப் பார்க்கும்போது மறைந்துவிடும். மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதைத் தவிர விளையாட்டுத்திறன், பேச்சுத்திறன், படைப்புத்திறன், ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளேன். பள்ளியில் சேரன், சோழன், பாண்டியன், மற்றும் பல்லவன் என நான்கு குழுக்களாகப் மாணவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். அதில் நான் சோழன் குழுவின் தலைவியாக இருந்தேன்.
மொழி ஆசிரியரான எனக்கு ஆசிரியப்பணிக்கும் மொழியாக்கப் பணிக்கும் எத்தகையை முரண்பாடும் ஏற்படவில்லை. உண்மையில் கற்றுக்கொடுப்பதில் மொழியாக்கம் உதவிகரமாகத்தான் இருந்தது.
மொழிபெயர்ப்பு நேரத்தையும் உடல் உழைப்பையும் கோருகிற ஒரு பணி. இந்த மொழிபெயர்ப்பிலிருந்து நீங்கள் என்ன அடைகிறீர்கள்?
இந்தப் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே சோர்வடைவதற்கு இடமே இல்லை. பணிநிறைவிற்குப் பிறகு நேரத்தை நல்ல வகையில் செலவிட முடிகிறது. பிற பகுதி மக்களின் பண்பாடு, பாரம்பரியம், மொழிநடை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சில விஷயங்களைக் குறித்து தெரிந்துகொள்வதற்காக பல குறிப்பு நூல்கள், இணைய தளங்கள் ஆகியவற்றை பார்த்துத் தெரிந்துகொள்வதால் அறிவு மேம்படுகிறது.
நீங்கள் பெரும்பாலும் மிதமான எழுத்து வகைமை நூல்களைத்தான் மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறீர்கள். நீங்கள் கவிதைகளை மொழி பெயர்த்ததுண்டா? தீவிர இலக்கியம் நவீன இலக்கியம் சார்ந்து எதுவும் செய்திருக்கிறீர்களா?
பொதுவாக சாகித்ய அகாதெமி போன்ற அமைப்புக்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க மொழியாக்கம் செய்து வருகிறேன். அவற்றில் கவிதைகளும் அடங்கும்.
முனைவர் ஸஞ்ஜீவ் குமார் அவர்களின் இந்திக் கவிதை நூலான வாஸவதத்தா - வாஸவதத்தை என்ற பெயரிலும், முனைவர் ஹர்ஷ தேவ் மாதவ் அவர்களின் சமஸ்கிருத கவிதை நூலான தவ ஸ்பர்சே ஸ்பர்சே – உன் ஒவ்வொரு தொடுதலிலும், என்ற பெயரிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும் சபரி சிக்ஷா ஸமாசார், நல்லி திசை எட்டும் ஆகிய பத்திரிகைகளில், மொழியாக்கம் செய்யப்பட்ட என்னுடைய சில கவிதைகள் பிரசுரமாகின்றன.
ஹிமான்சு ஜோஷி அவர்களின் 'ககார் கீ ஆக்’ என்ற புதினத்தை 'குன்றிலிட்ட தீ' என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளேன். இது தீவிர இலக்கியம் சார்ந்தது. இதற்கு 2011 இல் நல்லி திசை எட்டும் விருது கிடைத்தது.
உங்கள் பணியில் உங்கள் குடும்பத்தினரின் அணுகுமுறை ஆதரவு எப்படி இருந்தது?
அண்ணன்கள் மொழியாக்கத்துக்கு உந்து சக்தியாக இருந்தனர். ஓரிரு மொழியாக்கங்களை ஆய்வு செய்து திருத்தங்கள் செய்து கொடுத்துள்ளனர். கணவர் என்னுடைய படைப்புக்களின் முதல் விமர்சகர். குழந்தைகளும் பாராட்டி ஊக்குவிக்கின்றனர்.
உங்களது இந்தப் பணியில் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு, அங்கீகாரம், விருதுகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
விருது, பாராட்டு, அங்கீகாரம் ஆகிய அனைத்தும் ஒருவருக்கு ஊக்கமும் புத்துணர்வும் அளிக்கக்கூடியவை.
எனக்குக் கிடைத்த சில விருதுகளை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் - பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கக் கல்விக் குழுமம் வழங்கிய “சிறந்த ஆசிரியர் விருது”(2004)
மொழியாக்கப் பணியில் நான் பெற்ற முதல் விருது “நல்லி திசை எட்டும்' மொழியாக்க விருது” (2011).
மொழிகளுக்கிடையே பாலமாக இருந்ததற்காக உத்தரபிரதேச மாநில கேந்த்ரீய இந்தி ஸன்ஸ்தான், லக்னோ வழங்கிய "ஸௌஹார்த ஸம்மான்" (2019)
ஒரே ஆண்டில் எதிர்பாராமல் அடுத்தடுத்து கிடைத்த ஐந்து மொழியாக்க விருதுகள்
1. கே.எஸ். சுப்பிரமணியன் நினைவு மொழியாக்க விருது - விஜயா பதிப்பகம், வாசகர் வட்டம், கோவை. (2024)
2. ஸ்ரீ மோகன்லால் கோயங்கா வாழ்நாள் சாதனையாளர் விருது - தமிழ்நாடு இந்தி சாகித்ய அகாடமி, - தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வழங்கப்பட்டது. (2024)
3. மஹாகவி பாரதியாரின் பிறந்தநாள் மற்றும் பாரதீய பாஷா திவஸ் தமிழ்நாட்டின் ராஜ்பவனில் மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் வழங்கப்பட்டது. (2024)
4. தமிழக அரசு, தமிழ்வளர்ச்சித் துறை மொழிபெயர்ப்பாளர் விருது .- தமிழகத் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு எம்.பி.சாமிநாதன். அவர்களால் வழங்கப்பட்டது. (2024)
5. ‘வரிஷ்ட அனுவாதக் ஏவம் பஹுபாஷீய லேகக்’ விருது - எழுத்தாளர் த. நா. குமாரசாமி நினைவு அறக்கட்டளை (2024)
எதிர்காலத் திட்டங்கள் ஏதாவது உண்டா?
மலையாள மொழி இலக்கியங்களிலிருந்து பிற மொழிகளுக்கும் பிறமொழி இலக்கியங்களிலிருந்து மலையாளத்திற்கும் மொழியாக்கம் செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே கிடைத்தது. எனவே அந்தக் குறையை நீக்க விரும்புகிறேன்.
எனக்குத் தெரிந்த மொழிகளில் மொழியாக்கப் பணியைத் தொடர்ந்து அந்த மொழிகளுக்கு வளம் சேர்க்க வேண்டும். என்பதே என் ஆசை.
எனக்குத் தெரிந்தவர்களிடமிருந்தும் தொடர்புடையவர்களிடமிருந்தும் பெறும் மொழியாக்கப் பணியை நிறைவேற்றி வருகிறேன். அதைத் தொடரந்து செய்வேன்.
