
வாழ்விடங்கள் பற்றிய தகவல்கள் தகவல்களின் எல்லைக்கோடுகளைத் தாண்டி படைப்பு வெளியில் உயிர்ப்புடன் தன்னை ஆவணப்படுத்திக் கொள்கிறது. அந்த ஜீவனுள்ள உயிர்த்துடிப்புதான் வாழ்விடத்தை கதை மாந்தர்களின் முதற்பொருளாக மட்டுமின்றி அதுவே ஒரு கதைப்பாத்திரமாக மாறி கதையுடன் இணைந்து பயணிக்கிறது. இரண்டையும் பிரித்துவிட முடியாத அளவுக்கு வாழ்விடம் கதையுடனும் கதை மாந்தர்களில் உணர்வுகள் வாழ்க்கை மதிப்பீடுகள் வாழ்வியல் சிந்தனைகள் அன்றாட அரசியல் ஆண் பெண் உறவு என்று பல அம்சங்களைத் தீர்மானிக்கும் சக்திமிக்கதாக இருக்கின்றன.
அசோகமித்திரனின் ஹைதராபாத் செகந்திரபாத் இரட்டை நகரங்களும் நாஞ்சில் கதைகளில் அன்றைய பம்பாயும் சுந்தர்ராமசாமி கதைகளில் புளியமரத்தைச் சுற்றி நாகர்கோவிலும் திலீப்குமாரின் கதைகளில் கோவையும் தி. ஜா வின் கும்பகோணமும் நீலபத்மநாபனின் பள்ளி கொண்டபுரமும் வாழ்விடத்தை உயிரூட்டி படைப்புவெளியில் பிரிக்க முடியாத ஓர் அடையாளத்தை அப்பிரதிக்கு கொடுத்திருக்கின்றன. . முழுக்கவும் புனைவுகளினூடாக எழுதப்பட்ட கல்கியின் சிவகாமி சபதம் வாசித்த எம் கல்லூரி காலத்தில் மாமல்லபுரத்தில் சிலைகளுக்கு நடுவில் சிவகாமியைத் தேடி அலைந்திருக்கிறோம்! இவை எல்லாமே வாழ்விடம் கலையாகும் தருணங்கள்.
அண்மையில் வாசித்த எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவின் பறதி நாவலும் வடசென்னைக்கு உயிரூட்டி இருக்கிறது. அங்கு வாழும் பல மனிதர்களின் சுவாசக்காற்று மேல் எழும்பி வடசென்னை ஆன்மாவை அடையாளம் காட்டுகின்றன. எதார்த்தவெளியில் விளிம்புக்கும் மையத்திற்கு நடக்கும் போராட்டத்தில் மையத்தின் எழுதப்பட்ட அதிகாரவெளியை தங்களின் அன்றாட வாழ்க்கையின் இலகுவாக தூக்கி எறிகிறது வடசென்னை.. கோஷங்களின் அரசியலுக்கும் போராட்டங்களின் அரசியலுக்கும் எழுதப்பட்ட வரலாறுக்கும் எழுதப்படாத சாமானியனின் வாழ்கைக்குமான வேறுபாடுகளை வடசென்னை கதை மாந்தர்களைக் கொண்டு பேச வைக்கிறது பறதி.
குறிப்பாக ஆண் பெண் உறவில் பொதுச்சமூகத்திலிருந்து விலகிய மறுபாதியைக் காட்டுவதுடன் அதில் பொதிந்திருக்கும் மனித உணர்வுகள் அதனூடாக அவர் ஊடறுக்கும் பொதுப்புத்தியின் அறத்தை பறதி உடலுறவுகள் வெளிப்படுத்துகின்றன.
‘முனியம்மா ஒரு காலத்தில என்னைக் காதலிச்சவளாச்சே. காதலிச்சவ மட்டும்தான்டா பழிவாங்க மாட்டா. நமக்காக சாமிக்கிட்ட வேண்டிப்பா. அவ யாருக்கு பெண்டாட்டியா இருந்தாலும்” – பக். 77
ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர புரிதல் ஒப்புதலுடன் கணவன் மனைவியாக கல்யாணச்சடங்குகள் இன்றி இணைகிறார்கள். பாஞ்சாலி துரியோதனன் கதைப்பாத்திரத்தைக் கொண்டு இதைப் போகிற போக்கில் சொல்கிறார் கதையாசிரியர்.
அந்த மழைக்காலத்தில் பாஞ்சாலி துரியோதனன் உடலுறவு இயல்பாக நடக்கிறது. அதன் பின் பாஞ்சாலி “ ஏய், டீ பொற வாங்கிக் கொடுத்திட்டு அப்புறமா சாவகாசமா ஊர் சுத்திட்டு வா “ என்ற வரியில் வீட்டில் கணவனுக்காகக் காத்திருக்கும் இல்லாள் ஆகிவிடுகிறாள் பாஞ்சாலி.
“கலியாணம் தாலி ஐயர் கோவில் ஒரு கண்றாவியும் இல்ல. இப்படியாக கல்யாணம் முடிந்தது. பரஸ்பர புரிதல், காதல், ஆத்மார்த்தமாய் அங்கீகரித்தல், ஒப்புதலோடு உடலால் இணைதல், வெட்கம் கெளரவம் இன்றி தம் இணைப்பை பகிரங்கமாக அறிவித்தல் , வாழத் தொடங்குதல் , அவ்வளவுதான், வாழ்க்கை இயங்க ஆரம்பித்துவிடும் “ பக் 195
இதெல்லாம் எப்படியும் பேசிவிட வேண்டும் என்ற குறிப்புகளுடன்தான் எழுத்தாளர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வாசிக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
· களப்பிரர்கள் யார் ?
· பி அண்ட் சி தொழிற்சாலை வேலை நிறுத்தம் , புளியந்தோப்பு கலவரம்.
இந்த இரண்டும் வடசென்னை அரசியலைத் தனித்துவப்படுத்திக் காட்டுவதற்கு ஆசிரியருக்குத் துணைபுரிகின்றன.
இவற்றைச் சொல்வதற்காக ஆசிரியர் ரொம்பவும் சிரமப்படவில்லை.. எளிதாக ஒரு டிரங்க் பெட்டியைத் திறக்கிறார். அவ்வளவுதான். அலாவூதினின் விளக்கு போல டிரங்க் பெட்டி களப்பிரரை மட்டுமல்ல, தாசிகளையும் திரு வி க , எம் சி இராஜா என்ற அசல் வரலாற்று மாந்தர்களையும் வெளியில் எடுத்துக்கொண்டு வருகிறது.
ஆனால் டிரங்க் பெட்டியிலிருந்து வெளியில் வருவதைப் பற்றி எல்லாம் எதுவும் கேட்க முடியுமா ? முடியாது. அது அப்படித்தான் என்று டிரங்க் பெட்டி சத்தியமா இதுதான் நவீன எழுத்துனு ஒரு போஸ்டர் ஒட்டி விடுகிறார் எழுத்தாளர்.
“இது 90களில் நடந்த கதைனு இப்பவே சொல்லிறேன். அப்புறம் கதையில் காலம் இல்லைனு ஆல் இன் அழகு ராஜா போல அவுத்து வுட கூடாது. சரியா ? உடனே தொண்ணூறாம் வருடத்தை எடுத்து ஆரய்ஞ்சி பார்த்து இது நொட்ட அது நொட்டனு சொல்லக் கூடாது. கதையை கதையா படிச்சிச் சாப்பிடணும். சரியா “ – பக். 38.
படைப்பாளர் எப்படி வாசிக்கணும் எப்படி சாப்பிடணும்னு சொன்னாரே தவிர வாசிச்சது ஜீரணிக்காட்டி என்ன செய்யணும்னு சொல்லவே இல்ல. ஆகையினாலே அஜீரணங்கள் அவரவர் பிரச்னை.
அதில் மிக முக்கியமான அஜீரண பிரச்சனை சோ. தர்மன் பார்முலாதான்.
கதையை ஆரம்பிக்கும்போதே அண்ணாதுரைனு ஒரு கதைப் பாத்திரம் வருகிறது. சத்தியமா .. கதையை கதையா மட்டுமே வாசித்தேன் என்பதை அக்கதைப் பாத்திரத்தின் மீது சத்தியம் செய்து சொல்றேன்.
அண்ணாதுரையை விடுங்க. எதோ வருகிறார். போனார். எதுவும் செய்யலைனு இருக்கட்டுமே.. இப்போ என்ன.. – நான் கதையைச் சொல்றேன்.
ஆனா கதையில் நிஜமாவே வருகிறார் (தந்தை ) பெரியார். அதாவது பெரியார் என்ற பெயர் அண்ணாதுரை என்ற பெயரைப் போல ஒரு கதைப்பாத்திரத்தின் பெயரல்ல. ஒரு நிஜ வரலாற்றின் அதே பெரியார்தான் இந்தப் பக்கத்தில் பேசப்படும் பெரியார்.
ஆண் பெண் பரஸ்பர புரிதல் என்பதை தன் கதை மாந்தர்களின் வாழ்க்கையில் கண்ட எழுத்தாளருக்கு பெரியார் மணியம்மை பரஸ்பர புரிதல் மட்டும் புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது !
பெரியாரை எப்படியும் எதாவது ஒரு வகையில் கதைப் போக்கில் தேவையில்லாமல் திணித்து ஒரு எதிர்மறையை வைப்பது என்பது சோ. தர்மன் அவர்களின் நாவல் பார்முலா.
இப்போதைக்கு இந்த பார்முலாவை எழுத்தாளர் தொட்டுக்கிற ஊறுகாய் மாதிரி பறதியில் தொட்டுக் கொள்கிறார். அவ்வளவுதான்..
மேலும் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பி அண்ட் சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம். புளியந்தோப்பு கலவரம் திரு வி க மற்றும் எம் சி இராஜா முரண்பாடு என்று பல அரசியல் கதையினூடாக கதை மாந்தர்களின் வாழ்க்கையுடனும் சாதி அரசியலுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. இதற்கும் மறுபக்கம் ஒன்றுண்டு. அப்போது ஆட்சியாளர்களாக நீதிக்கட்சியினர் இருந்தபோது ( 1921 ) தந்தை பெரியார் நீதிக்கட்சிக்கு வரவில்லை. அவர் அப்போது தீவிர காங்கிரசு தொண்டர். கள்ளுக்கடை போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். நீதிக்கட்சி பெரியார் திராவிட அரசியல் இதெல்லாம் அடுத்தடுத்து வந்த அரசியல் போக்குகள். நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தப்போது தொழிலாளர்களுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் செயல்பட்டிருப்பார்கள். வரலாற்றில் எந்த ஆட்சியாளர்கள்தான் தொழிலாளர்களுக்கும் தலித்துகளுக்கும் ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்கள்?!
புனைவுகளில் வரலாறு எடுத்தாளப்படும்போது அதன் ஒரு பக்கத்தை மட்டும் போகிற போக்கில் சொல்வது சொல்வதை மட்டுமே நியாயப்படுத்திவிடும் ஆபத்தைச் செய்துவிடும். வரலாற்றில் யாரும் கடவுள்களோ புனிதர்களோ இல்லை. யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களும் இல்லை..
வடசென்னை எப்படி இருக்கும் ? பறதி வடசென்னையை ஒரு தீரைச்சிலையில் தனக்கே உரித்தான பல வண்ணங்களுடன் ஓவியமாக தீட்டி இருக்கிறது. சாதி குறித்தும் சாதி அரசியல் குறித்தும் சாதி நிரந்தமான பல்லி போல என்று படிமமாக குறிப்பிடும்போது பறதி தனக்கான தனித்துவத்துடன் வட சென்னையை பிரதி எடுத்திருக்கிறது.
நாவல் : பறதி ஆசிரியர் : அமிர்தம் சூர்யா வெளியீடு ஜெய்கிரி, பெங்களூர். @ 2025 பக் 240 விலை ரூ 300/