கதை விடாதே! மேலே வானம் மட்டுமே

ரவிபேலட்
ரவிபேலட்
Published on

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகள் ஆஅய் அலன்
— புறநானூறு 134

மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர் வறுமை நோக்கின்று
அவன் கை வண்மையே.
— புறநானூறு 141

சான்றோர்

சென்ற நெறியே

தமிழர் நெறி.

எதையும் எதிர்பார்க்காமல்
ஈவதே தமிழ் மரபு.

களத்திலே நெல் ஆயினும்,
கடலிலே மீன் ஆயினும்,
போர்க்களத்தில் பொருள்கள் ஆயினும்,
இரவலர்க்கு வழங்கி இன்புறுதலே
வழி வழியாக வந்த
தமிழ் வழிச் சிந்தனை மரபு.

இதற்கு எதிராய்
ஒரு சிந்தனை மரபை
தமிழ் வாழ்வில் திணிக்க முயலும்
ஒரு சூழ்ச்சியையே
இந்தப் புலவன்
எதிர்த்துப் பேசுகிறான்.

மண்ணுலகில் ஒரு நல்லது செய்வது
இறந்த பிறகு
விண்ணுலகில்
ஒரு நல்லிடம் பெறுவதற்கு
என்கிற சிந்தனையைத்தான்
புலவன் எதிர்க்கிறான்.

“இது எம் தமிழ் அறிவுக்கு
எதிரானது” என்கிறான்.

அறம் என்பது தமிழ் இயல்பு;
தமிழர்தம் மரபணு இயல்பு.

அதன் இயல்பறிவை
இடறுகிறபோது,

“ஏய்! நாங்கள்
அறத்தை விலைபேசும்
வணிகர்கள் இல்லையடா!”

என்று
சினந்து சீறுகிறான்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com