‘அருவி நுகரும்
வான் அர மகளிர்
வருவிசை தவிராது
வாங்குபு குடைதொறும்
தெரி இமிழ் கொண்ட
நும் இயம்போல்
இன்னிசை'
- மலைபடு-294-296
‘ஆழ் அருவி அர மகளிர் ஆடுபவே'
- கலித்-40
`வானர மகளிர்'
`நீர ர மகளிர்'
`சூர ர மகளிர்'
சங்க இலக்கியங்களில்
அங்கங்கே
தென்படுகிற
இந்த
மகளிர்
மானுடவியல் தேடலில்
இன்னும்
மூடுபனியால்
மூடப்பட்ட
முகங்களாகவே தென்படுகிறார்கள்!
மலை
உச்சிக்
குகைகளில்
வாழ்கிறவர்களாக
பொதுவெளி
மக்களின்
கண்களுக்கு
அவ்வளவு எளிதாய்
அகப்படாதவர்களாக
அகப்பட்டாலும்
`அணங்கு'
`சூர்'
என
அச்சமூட்டும்
தொன்மச்
சொல்லாடல்களுக்குள்
தொடர்பு படுத்திப்
பேசப் படுபவர்களாக
இருக்கிறார்கள்!
அருவியாடலில்
இவர்கள்
ஆர்வமிக்கவர்களாக
அறியப்படுகிறார்கள்!
இதோ
இந்த
வானர மகளிர்
பாறையின்
வழி
இறங்குகிற
அருவிக்கு
முன்
வரிசைகட்டி
நிற்கிறார்கள்.
மெதுவாக
சற்று
வேகமாக
மிக
வேகமாக
இறங்குகிற
அருவித்
தண்ணீரைத்
தம்
உள்ளங்
கைகளில்
வாங்கி
வாங்கி
ஓர்
இசைக்கோர்வையை
உருவாக்கிக்
கேட்டுக்
கேட்டுக் கிறங்கிப்
போகிறார்களாம்!
இசையால்
உயிர்
நனைத்த பிறகே
அருவியால்
உடல்
நனைத்தல்
செய்துள்ள
இவர்களை
`நீரிசை மகளிர்'
என்றும்
அழைக்கலாம்தானே!