
"உயர்நிலை வான்தோய் மாடத்து
வரிப் பந்து அசைஇ"
- பெரும்பாணாற்றுப்படை
கட்டுமரங்கள் நாவாய்களாய்மாறிய
காலத்தில்
மீனவர்களில் ஒரு பகுதியினர்
வணிகர்கள்
ஆயினர்
நான் சொல்லவில்லை
இதோ கழக உரையில்
பெருமழைப் புலவர்
பொ வே சோமசுந்தரனார்
கூறுகிறார்.
“மாடம் ஓங்கிய மணன் மலி மறுகு
என்றது
வணிகர் தெருவை என்க
பரதர்- வணிகர்
பாடினமாகலின்
பரதர் தெரு பற்பலவாயின
என்க’’
கட்டுமர மீனவர்கள்
குடிசைகளில் வாழ்ந்தார்கள்
நாவாய்களின் வணிகர்கள்
நகரில்
வாழ்ந்தார்கள்.
ஆம். நகர் என்பது
கல்வீடு
எனும்
பொருள் கொண்டது.
நகரத்தார் என்பது
கல் வீட்டுக்
காரர் எனும்
பொருள் குறிப்பது.
இவர்களின் கல்வீடுகள்
எழுநிலை
மாடங்களாகவும்
வான்
தொட
உயர்ந்து நின்றன
எனவும்
பிற புலவர்களாலும்
பேசப்படுகின்றன.
இங்கேயே
ஏழாவது மாடத்தில்
எம் தமிழ்ப் பெண்கள்
நுண்ணிய ஆடை உடுத்தி
பொற்சிலம்புகள்
அணிந்த
கால்களோடு
வளையல்கள்
அணிந்த
கைகளால்
ஆடுகிற ஆட்டம்
என்ன தெரியுமா...
பந்தாட்டம்!
அதுவும்
வான்தொடும்
மாடத்தில்!