"கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்.
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து,
இருங்களிற்று இனநிரை தூர்க்கும்’’
-அகநானூறு:21
தாம் வளர்க்கும்
மாடுகளுக்காகத்
தண்ணீர் தேடி
வெட்டிய கிணற்றுப்
பள்ளங்கள்தாம்
அவை.
ஊற்றுநீர்
கசிய வழியில்லை
என்றபிறகு அப்படியே
விட்டுவிட்ட குழிகள்.
அந்த வழியே யானைக் கூட்டமொன்று
கடந்து போகிறது
அந்தக் குழிகளில்
தங்கள் குட்டிகள்
தவறி
விழுந்து விடாமல்
பாதுகாப்பாக
அழைத்துச் செல்லவேண்டிய
யானைகள்
அதற்கு மேலும்
சிந்திக்கின்றன.
தம் தந்தங்களுக்குக் குறிவைத்து
அன்பில்லா காட்டாளிகள்
சிலரால் வெட்டப்பட்ட
படுகுழிகளாகவும்
இவை
இருக்கலாம்தானே!
நாம் இவற்றில் விழாமல்
தப்பித்து விட்டோம்
என்பது உண்மைதான்.
நமக்குப் பின்னர்
வருகிற
நம் இனத்தைச் சேர்ந்த
யானைகள்
குழிகளில் தவறி விழ
வாய்ப்பிருக்கிறதில்லையா!
வேண்டாம்
நம் இனத்து
ஒரு யானைக்குக் கூட
அந்த நிலை
ஏற்படக்கூடாது.
ஆளுக்கு ஒரு கல் எடுத்து
அந்தக் குழிகளில் போட்டு
நிரப்பிவிட்டுப்
போகலாம் என்று
அந்த யானைகள்
அந்தக் குழிகளைத்
தூர்த்து விட்டுத்தான் போயினவாம்!
புரிகிறதா தமிழர்களே!
தம் கூட்டம்
தப்பித்தால் போதாது
தம் இனமும்
பாதுகாக்கப்பட வேண்டும்
என்று
நினைக்கிற
இந்த
யானைகளுக்குள்ளே வைத்துப்
புலவன்
என்ன
சொல்கிறான்…
"தமிழினமே…
உங்களுக்குக்குள்ளாகவே
குழிகள்
வெட்டிக் கொண்டு
புதைந்து
போகாதீர்கள்.
என்றுதானே!"