பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் சமீப காலத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய நிகழ்வு. கட்சி வேறுபாடின்றி இச்சம்பவம் அனைவரின் மனச்சாட்சியையும் உலுக்கிய ஒன்று. இந்த குற்ற வழக்கில் தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் எழுத்தாளரும் விமர்சகருமான ந.முருகேச பாண்டியனிடம் இது பற்றிப் பேசினோம்.
பொள்ளாச்சியில் நடந்த சம்பவம், அது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தீர்ப்பு.. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நாம் நாகரிகமும் பண்பாடும் தோய்ந்த சமூகத்தில்தான் வாழ்கின்றமோ என்ற கேள்வியை எழுப்புகிறது; வேதனையளிக்கிறது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் கல்வியறிவு பெற்றிருந்தாலும் சக மனுஷியான பெண்ணை வெறுமனே நுகர்பொருளாகப் பாவித்துச் செய்த பாலியல் வன்முறைகள் கொடூரமானவை. தனிமனிதரீதியில் துய்த்திடும் பாலியல் உறவைக் காட்சியாகப் பதிவாக்கிய செயல், மனிதத்தன்மையற்றது. பெல்ட்டினால் அடிக்கப்படும்போது வலி தாங்காமல் கதறுகிற பெண்ணை ஓலமிடும் குரலுடன் வீடியோ காட்சிப்படுத்தியவர்கள் மனவக்கிரம் பிடித்தவர்கள். குற்றவாளிகளான இளைஞர்களின் அம்மா, அக்கா, தங்கை, பாட்டி, அத்தை போன்ற நெருங்கிய பெண் உறவினர்களின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை யோசிக்கவே முடியவில்லை. ஆத்திரத்தில் ஒரு கணம் உணர்ச்சி வயப்பட்டுக் கொலை செய்த கொலையாளிகளைக்கூட மன்னித்துவிடலாம். திட்டமிட்டுத் தொடர்ந்து பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்த கொடியவர்களுக்குச் சட்டபடி கடுமையான தண்டனை வழங்கிய தீர்ப்பு, அறம் நிச்சயம் வெல்லும் நம்பிக்கையை அளிக்கிறது. ஒருவகையில் தீர்ப்பு, காலங்காலமாக நிலவிடும் தமிழ்ச் சமூக அறத்தின் தொடர்ச்சிதான்.
இந்த தீர்ப்பு இதுபோல குற்றம் செய்பவர்களை தடுக்குமா...?
கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா? என்று கிராமத்துப் பழமொழி நினைவுக்கு வருகின்றது. தண்டனைக்குப் பயந்துதான் உலகம் இயங்குகிறது என்ற நிலை வெறுப்பை அளிக்கிறது. ஏதோவொரு முறையில் தங்களிடம் சிக்கிய பெண்களைக் கூட்டமாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிடும் இளைஞர்கள், ஒட்டுமொத்தச் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்தான். இப்படியான சம்பவம் ஏன் நிகழ்ந்தது? இனிமேல் இப்படிப்பட்ட சம்பவம் நிகழக்கூடாது என்பதுதான் தண்டனையின் நோக்கமாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வகையில் கலை , இலக்கியம் என்ன செய்ய வேண்டும் ?
பெண் புதிர் அல்ல சக உயிர் என்ற புரிதலைப் ஏற்படுத்திடும்வகையில் இலக்கியப் பிரதிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். குறிப்பாக மின்னணு ஊடகங்களில் கொட்டிக் கிடக்கிற படத் துணுக்குகளையும் கேளிக்கைகளையும் இளைய தலைமுறையினர் எப்படி அணுகிட வேண்டுமெனப் போதிப்பதுதான் இன்றைய உடனடித் தேவை. திரைப்படத்தில் ஆண் எது வேண்டுமானாலும் செய்வான் என்று கட்டமைக்கப்படுகிற பிம்பங்கள் சிதலமாக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழ்த் திரைபடங்களில் கதாநாயகிகளைச் சீண்டும் வகையில் பேசியும் கேவலப்படுத்திப் பாட்டுப் பாடுகின்ற அறுவெறுப்பான போக்குகளைத் தடுத்திட வேண்டும்.
ஆண்களுக்கு எத்தகைய கல்வி வேண்டும்?
பள்ளிக் கல்வியிலே ஆண்-பெண் சமமானவர்கள் என்ற அடிப்படையில் பாடத்திட்டத்தை வகுத்திட வேண்டும். கல்வி மட்டும் போதாது. சமூகரீதியில் ஆண்-பெண் உறவு பற்றிய புரிதல் ஏற்படுமாறு பொதுப்புத்தியில் மாற்றங்களை உருவாக்கிடுமாறு பண்பாட்டுச் சூழலை மாற்றியமைத்திட வேண்டும்.
இன்று மிடுக்கு அலைபேசிகளின் தொடுதிரைக் காட்சிகளில் பெரும்பாலான நேரங்களில் செலவழிக்கிற இளைய தலைமுறையினர், எல்லாம் தெரிந்த மாயைக்குள் மூழ்கித் தங்களைப் பற்றிய சூப்பர் மேன் பிம்பத்தைக் கட்டமைத்துள்ளனர். நுகர்பொருள் பண்பாட்டில் பெண்ணுடலும் சந்தைக்கானதாக மாற்றப்படுகின்ற சூழலில் இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த மதிப்பீடுகள் அர்த்தமிழக்கின்றன. மூன்று லட்ச ரூபாய் ஸ்போர்ட்ஸ் மாடல் வண்டியில் அதிவிரைவாக ஓட்டுகின்ற இளைஞன் உள்ளிட்ட சிலர் உலகமே தங்களுடைய காலடியில் என்ற பிரமையில் மிதக்கின்றனர்,. சக மனிதர் பற்றிய புரிதல் இல்லாமல் எதுவும் செய்ய முடியும் என்ற திமிர் மனநிலைதான் பெண்ணுடலை வேறு ஒன்றாக மாற்றிட முயன்ற பொள்ளாச்சி சம்பவத்திற்கு அடிப்படையான காரணம். சமூக வலைத்தளங்களில் பெண் பற்றிய மதிப்பீடுகளை உருவாக்கிட அரசு முயன்றிட வேண்டும். பெண்ணைச் சக்தியின் அம்சமாகக் கருதுகின்ற பிஜேபி அரசு இணையத் தளங்களை ஆண்களை உசுப்பேற்றுகிறவகையில் இணையத்தில் மலிந்துள்ள போர்னோ தளங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
பெண்கள் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் ?
ஒப்பீட்டு நிலையில் பெண்கள் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்தான். அண்மைக்காலத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் பிரமாண்டமான வளர்ச்சியடைந்துள்ளனர். ஒருவிதமான சுதந்திரமான மனநிலையுடன் செயல்படும் பெண்கள், ஏற்கனவே நிலவும் சமூகக் கட்டுப்பாடுகளைத் தூக்கியெறிந்திட முயலுகின்றனர். அது சரிதான். சில பெண்கள் ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட் போன்ற ஆண்கள் அணிந்திடும் ஆடைகளை அணிவதாலும் சிகரெட் புகைப்பதாலும் மது அருந்துவதாலும், விரும்பிய ஆணுடன் உறவு கொள்வதாலும் ஆண்-பெண் சமூக மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கை ஏற்புடையதல்ல. போலியானது. சமூகத்தில் புறத்தில் பெண் பற்றிய பார்வை மாறியுள்ளது; அதேவேளையில் அகரீதியில் பெண்ணுக்கான தனித்துவம் அங்கீகரிக்கப்படவில்லை. பெண்ணுக்கான சுயத்தை நம்புகிற பெண்கள் பொருளாதாரரீயில் ஒடுக்குமுறையுடன் பாலியல்ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்த அளவில் பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமிது.
பேட்டி: ம. தினோவிகா, தா. கீர்த்தி