இலக்கியவிழாவில் ப.சிதம்பரம் கேட்ட அந்த கேள்வி! ஆச்சர்யப்பட்டுப்போன பார்வையாளர்கள்!

கவிஞர் சக்திஜோதி எழுதிய சங்க இலக்கியம்- மனம் -மொழி- உடல் நூல் வெளியீட்டு விழா
கவிஞர் சக்திஜோதி எழுதிய சங்க இலக்கியம்- மனம் -மொழி- உடல் நூல் வெளியீட்டு விழா
Published on

அது சங்க இலக்கியம் பற்றிய ஆய்வு நூல் வெளியீட்டு விழா. கலந்துகொண்டவர் மூத்த அரசியல்வாதியான ப.சிதம்பரம். தலைமைஉரை ஆற்றுகையில் அவர் வைத்த ஒரு கேள்வி அரங்கில் இருந்த எல்லோரையும் சட்டென புருவம் உயர்த்த வைத்ததுடன் விழாவின் போக்கையும் மாற்றி அமைத்தது. இவ்வளவு ஆழமாகப் படித்துவந்திருக்கிறாரே என்ற வியப்பும் ஏற்பட்டது. அது கவிஞர் சக்திஜோதி எழுதிய சங்க இலக்கியம் –உடல் மனம் மொழி நூல் வெளியீட்டு விழா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.

“ நூல் வெளியீட்டு விழா ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. ஏன் எல்லோரும் உம்மென்று இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டுப் பேச்சைத் தொடங்கிய ப.சி. “ முன்பெல்லாம் பயணங்களின்போது எங்கு பார்த்தாலும் புத்தகங்களைப் படிப்பவர்களைப் பார்க்கமுடியும்., விமானப்பயணங்களில் இப்போதெல்லாம் பத்துக்கு பனிரெண்டு பேர் செல்போனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று குறைப்பட்டுக்கொண்டார்.

”சக்திஜோதியை எழுத்தாளராக எனக்குத் தெரியாது. பெண்கள், தொழில்கள் சார்ந்து செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தலைவராகத்தான் அவர் அறிமுகமானார். பிறகுதான் அவர் எழுதிய நூல்களைக் கொடுத்தார். இந்த  சங்க இலக்கியம் மனம் உடல் மொழி என்ற நூல் ஆழமாகப் படிக்கப்பட வேண்டியது. எடுத்தேன் படித்தேன் முடித்தேன் என்றெல்லாம் படிக்கமுடியாது. இந்நூல் சங்க இலக்கியத்தில் பெண்ணை முன்னிலைப் படுத்தி பாடப்பட்ட பாடல்களைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி. சங்ககால தமிழ்ப் பண்பாட்டின் உயிர்ப்பாக பெண் இருப்பதாக நூலாசிரியர் கூறுவதாக இதற்கு எழுதிய அணிந்துரையில் பேராசிரியர் எல்.இராமமூர்த்தி எழுதி இருக்கிறார். இந்நூலிலே பெண்கள் நிலை என்று வருகிற இடத்தில் பண்பாடு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சங்ககாலத்தில் தமிழ்ப்பண்பாட்டின் உயிர்ப்பு என்பது பெண் என இந்த நூலில் அழுத்தமாகப் பதிவாகிறது. பெண்களை ஒடுக்குவது என்பது சங்ககாலத்திலேயே இருந்தது என்று நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார். அடிமைப்படுத்தியோ ஆயுதங்களைக் கொண்டோ அந்த அடிமைத்தனம் உருவாக்கப்படவில்லை. காதல், காமம், தாய்மை போன்றவற்றைக் கொண்டு கருத்தியல் ரீதியாக ஆணாதிக்கம் நிலைபெற்றது என்பது ஆசிரியர் கருத்து. இது விவாதத்துக்கு உரிய கூற்று.  நாணமும் கற்பும் பெண்ணுக்குரியது, பெருமையும் வலிமையும் ஆணுக்குரியது என்பதை தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலச் சமுதாயம் முன்னிலைப்படுத்தியது என்கிறார் ஆசிரியர். ஆண்மைய  சிந்தனைகளுகு ஏற்பச் செயல்படுவதுதான் பெண் உடல் என்ற கருத்தியலும் அப்போது பரவலாக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். இதுதான் சங்ககாலப் பெண்களின் நிலையா என எடுத்துக்கொள்வதா என்ற கேள்வி எழுகிறது. அப்படியெனில் 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் அவர்களின் நிலை எந்த அளவுக்கு மாறி இருக்கிறது? இப்பவும் அப்படித்தானே இருக்கு? இந்நிலையில் சங்ககாலப் பண்பாட்டின் உயிர்ப்பு பெண் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆணைச் சார்ந்து பெண் இருக்கவேண்டும். பெண்ணுடல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இந்நிலையில் அப்பண்பாட்டின் உயிர்ப்பு பெண் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? இந்த உயிர்ப்பு என்பது கற்பனைவாதமா? இலட்சியவாதமா? இந்த கேள்விக்கு பதில் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்’ என உரையை முடித்தார் ப.சிதம்பரம்.

இதைத் தொடர்ந்து பேசவந்த ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறப்பானதொரு வாழ்த்துரையை தன் சிந்துவெளி ஆய்வுகளின் பின்னணியின் இந்த நூலின் மீது நிகழ்த்தினார். “ இந்த நூலில் சக்திஜோதி பலகோணங்கள் சார்ந்ததொரு ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். மிகவும் முக்கியமான ஆய்வுநூல்” என்று பாராட்டிய அவர், “ தமிழில் நால்வகை நிலங்களே உண்டு என்றும் பாலை என்பது மாயை போல் நிகழ்வது என்றும் நூலாசிரியர் கருதுகிறார். ஆனால் ஒட்டகம் எலும்பைத் தின்னும் காட்சி சங்க இலக்கியத்தில் எப்படி வந்தது என்ற கேள்வி எனக்குள் நீண்டகாலம் இருந்ததுவந்தது. அது பின்னாளில் என் ஆய்வுகளில் ஜெய்சால்மீர் பாலைவனத்தில் தெரிய வந்தது. ஒட்டகம் எலும்பைத்தின்னும். அதை சங்கப்புலவர்கள் தெரிந்திருக்கிறார்கள். உண்மையில் சங்க இலக்கியம் என்பது தமிழ் மண்ணின் இலக்கியம் மட்டுமல்ல.இந்திய துணைக்கண்டத்தின் இலக்கியம்” என்று குறிப்பிட்டார் அவர்.

எல்.இராமமூர்த்தி பேசவந்தபோது ஆரம்பத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் எப்படி நடக்கின்றன என்பதற்கு உதாரணமாக ஒரு கதையைச் சொன்னார். “ ஒரு தவளையின் ஒருகாலை வெட்டி ஜம்ப் என்பார்கள். அது குதிக்கும். அது போல் ஒவ்வொரு காலாக வெட்டி ஜம்ப் என்று சொல்லி அது குதிப்பதைப் பார்ப்பார்கள். நான்காவது காலையும் வெட்டிவிட்டு குதிக்கச் சொன்னால் அது குதிக்காது. உடனே தவளைக்கு காது கேட்காது என்று எழுதுவார்கள். ஆனால் அதுபோல் அல்லாமல் இந்த இலக்கிய ஆராய்ச்சியை சக்தி ஜோதி மிக சிறப்பாக செய்துள்ளார்’ என்றவர் ப.சிதம்பரத்தின் கேள்விக்கு வந்தார். “ சங்ககால தமிழ்ப்பண்பாட்டின் உயிர்ப்பு என்று பெண்ணைச் சொல்வதற்கான காரணம் கணவன் போரிலே இறந்த பின்னரும் மகனை வாளைக் கொடுத்து அனுப்புகிறாள் தாய். கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏறாமல் உயிர்வாழ்ந்து தன் குழந்தைகளைக் கவனித்து இந்த சமூகத்துக்குப் பங்களிக்கும் கடமையுடன் தமிழ்ப்பெண் வாழ்ந்தாள். அதன் அடிப்படையில்தான் பண்பாட்டின் உயிர்ப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.

பெண் காலகாலமாக ஒரே வாழ்க்கையைத் தான் வாழ்கிறாள் என்று என்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டது , இதற்கு முந்தைய சக்தி ஜோதியின் “ சங்கப் பெண் கவிதைகள் “ நூலைப் பற்றி எழுதப்பட்டது. அந்த நூலில் ஒரு சங்கப் பெண் பால் புலவர் ஒருவரை எடுத்துக் கொண்டு சம கால வாழ்க்கையோடும் படைப்புகளோடும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அதனைக் குறிப்பிட்டு இந்த நூலில் மொழி சார்ந்து கருத்தியல் ரீதியாக பெண் மனம் கட்டமைக்கப் படுவதைக் குறிப்பிட்டுள்ளேன் என்றும் கூறினார்.

விமர்சகர் ந.முருகேசபாண்டியன் பேசுகையில் எல்.இராமமூர்த்தியின் தொடர்ச்சியாக வைதிக அவைதிக பண்பாடுகளின் வித்தியாசத்தைப் பற்றிப் பேசினார். “கைம்பெண்ணாக இருந்தும் கண்ணகியை வழிபடுகிறார்கள். வடக்கே தெய்வம் அவதாரம் எடுத்து  மனிதனாக வரவேண்டி இருக்கிறது. இங்கே மனிதன் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறான். நம் பண்பாடு அப்படி இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

இறுதியாக தன் நூலைப்பற்றிய இவ்வளவு கேள்விகளையும் விவாதங்களையும் கவனித்து நெகிழ்ந்துபோயிருந்த நூலாசிரியர் சக்திஜோதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பேசியதைக் குறிப்பிட்ட அவர், “தொல்காப்பியம் நான்கு நிலங்களைத்தான் குறிக்கிறது, தமிழில் நிலங்கள் நமக்கு நான்கு, திணை என்பது ஐந்து. பாலை எனும் திணையில் குறிப்பிடப்படுகிற “உரிப்பொருள் “ - பிரிவு. எந்த நிலத்தில் பிரிவு நிகழ்ந்தாலும் , எந்த மனத்தில் பிரிவின் துயரை உணர்ந்தாலும் அது பாலை என்று சக்தி ஜோதி குறிப்பிட்டார் .

மேலும் எந்த மனத்தில் அன்பு வற்றிப்போகிறதோ அது பாலை , ஆய்வாளராக மட்டுமன்றி கவிஞராகவும் இருப்பதால் பாலை என்பது ஒரு “மாய நிலம் “ என்றும் புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார் .

நிகழ்ச்சியில் என்சிபிஎச் நிறுவன மேலாண்மை இயக்குநர் சந்தானம் வரவேற்புரை ஆற்றினார். அ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com