எழுத்தாளரை போர்ஜெரி பண்ணத் தூண்டும் வாசகர்! என்னய்யா இப்படி ஆரம்பிச்சிட்டீங்க...
அடடா... இப்படியொரு வாசகரா…! என ஆச்சரியப்பட வைக்கிறார் ஒருவர்.
புனைவு, வரலாறு, தொலைக்காட்சி தொடர் என அனைத்து வகை எழுத்திலும் ஒரு வலம் வந்தவர் எழுத்தாளர் பா. ராகவன்.
எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கப் பல புது முயற்சிகளை செய்துபார்ப்பவர். தன்னுடைய பிறந்தநாளுக்கு தான் எழுதிய புத்தகங்களை சலுகை விலையில் கொடுப்பதோடு, அதில் கையெழுத்திட்டும் தருவார். சமீபத்தில் அவரது ஜந்து, ஜென் கொலை வழக்கு ஆகிய இருநூல்கள் எழுத்து பிரசுரத்தால் வெளியிடப் பட்டுள்ளன.
இந்த நிலையில், முகநூலில் அவருக்கு அப்துல் காதர் என்ற வாசகருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் நெகிழ வைக்கிறது. புத்தகம் வாங்கும் வாசகர் எழுத்தாளரின் கையெழுத்துக் கேட்டால் பரவாயில்லை. எழுத்தாளரின் அப்பாவின் கையெழுத்தைப் போட்டுத்தருமாறு கேட்கிறார். உலகில் எங்கும் இப்படி நடந்திருக்காது.
அந்த உரையாடல் பின்வருமாறு:
அப்துல் காதர்: ஆசானே! ஒரு சின்ன விண்ணப்பம். உங்களை வாசிப்பதில் இருந்து எனக்கு ஒரு ஆவல் உள்ளது. இரண்டில் ஒரு புத்தகத்திலாவது உங்கள் தகப்பனாரின் கையெழுத்தை நீங்கள் இட்டு தர இடலுமா? உங்கள் வாசகனாக, உங்கள் தந்தையை கவுரவித்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கும்.
அதற்கு பா. ராகவன் அளித்த பதில்: அடக்கடவுளே.
அப்துல் காதர்: ஆசானே நீங்கள் மறுக்க கூடாது… ஆர்டர் செய்துவிட்டு ஆர்டர் ஐடி தருகிறேன்.
பா. ராகவன்: அப்பாவின் கையெழுத்தை ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுகளில் போட்டிருக்கிறேன். அந்தத் திருட்டுத்தனம் அதோடு தொலைந்ததென்று நினைத்தேன். உங்கள் வேண்டுகோள் வினோதமாக உள்ளது. அது எதற்கு என்று மட்டும் சொல்லி என்னை கன்வின்ஸ் செய்யவும்.
அப்துல் காதர்: ஆசானே! அப்பாவின் கையெழுத்தை ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுகளில் பெரும்பாலான பிள்ளைகள் போட்டிருக்கிறார்கள், ஆனால் அந்த செய்கை ஏதோ ஒரு தருணத்தில் அந்த அப்பாவிற்கு தெரிய வரும்போது, அவரது மனநிலை தன் மகனின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்திவிடும், அப்படி கையெழுத்திட்ட தன் பிள்ளை, எழுத்துலகில் தவிர்க்க இயலாத ஒரு சக்தியாக மாறி, மேற்கண்ட விசயங்களை அறிந்த ஓர் உண்மையான வாசகன், இந்த வேண்டுகோளை வைக்கும் பொழுது, இந்த நிகழ்வை மறு உருவாக்கம் செய்யும் வேளையில், அந்த எழுத்தாளன், அவரின் தந்தை, அவ்வாசகன், அந்த புத்தகம் என அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள்...
பா. ராகவன்: சரி. உங்களுக்கு வரும் பிரதி ஒன்றில் அது இருக்கும்.
இந்த உரையாடலை தன் முகநூலில் பகிர்ந்திருக்கும் பா. ராகவன், “எழுதுபவனைத் தவிர வேறு எவனுக்கு இதெல்லாம் வாய்க்கும்?நன்றி, அப்துல் காதர். உங்களை என்றென்றும் மறக்க மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.
மறக்கக்கூடிய கோரிக்கையா இது?