
தனது தனித்த கவி மொழியிலும் வடிவத்திலும் பார்வையிலும் நம்பிக்கை தரும் கவிஞராக இருப்பவர் சம்யுக்தா மாயா. அவருக்கு இந்தாண்டுக்கான விஷ்ணுபுரம் வட்டத்தின் இளம் கவிஞருக்கான குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் ஒரு கலந்துரையாடல்!
வாசிப்புக்குள் வந்தது எப்படி?
சிறுவயதிலிருந்து எனக்கு வாசிப்பு ஆர்வம் அதிகம். சிறுவர் புத்தகங்கள் மட்டுமல்லாது பெரியவர்கள் வாசிக்கும் இதழ்களையும் படிக்கும் பழக்கம் இருந்தது. பெரிய தடிமனான புத்தகங்களை வைத்துக் கொண்டு இரவு முழுக்க தூங்காமல் வாசித்ததெல்லாம் உண்டு. என் தாத்தாவுக்குச் சமய இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு.கம்பராமாயண செய்யுள்களைப் பாடலாகப் பாடுவார். அதற்கான அர்த்தமும் விளக்குவார்.என் மாமாவும் தீவிரமாக வாசிப்பவர். உலக இலக்கியங்கள் எல்லாம் அவர் புத்தக அலமாரியிலிருந்து நான் எடுத்து வாசித்தவை தான்.நான் படித்த பள்ளியில் நல்ல நூலகம் இருந்தது. என் ஆங்கில ஆசிரியர் நோபல் செல்லத்துரை எனது வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டி ஊக்கப்படுத்தியவர். அவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் வாசிப்பவர். இன்றும் அவர் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். நிறைய புத்தகங்களை, நவீன இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.
அந்த வயதில் உங்களைப் பாதித்த எழுத்தாளர் யார்? எழுத்தாளர்களில் ஆதர்சம் என்று யாராவது இருக்கிறார்களா?
அந்தச் சிறு வயதில் எழுத்தாளர் யார் என்று கவனித்து வாசிக்கும் பழக்கம் இருக்கவில்லை. தமிழ், ஆங்கிலம் என கண்ணில் பட்டதையெல்லாம் அதி தீவிரத்துடன் வாசித்த நாட்கள் அவை. நிறைய வாசித்தாலும் அதை எழுதியது யார், புத்தகத்தின் பெயர் போன்ற தகவல்களை விட, அந்த படைப்புகளில் உள்ள கதாபாத்திரங்கள், உணர்வுகள், சிந்தனைகள், நிகழ்வுகள் பற்றி தான் நன்றாக நினைவு இருக்கும்.
ஆனால், விவரம் தெரிந்து வாசிக்க ஆரம்பித்த பின், எனக்கு ஜெயமோகன் அவர்களும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும், தங்களுடைய நீண்ட காத்திரமான தொடர் இயக்கம், எழுத்தின் வீச்சு, தத்துவ விசாரணை கொண்ட கவித்துவமான நடை, அரிய விசாரங்களும் அவதானிப்புகளும் நிறைந்த பார்வை, அதன் பின் புலப்படும் ஆழமான விரிவான தேடுதல், இவற்றின் பொருட்டு என்னைப் பிரமிக்கச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிரவும் நிறைய நல்ல எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் என்னை பாதித்தவர்களாக இருக்கிறார்கள்.
கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்? இளம் வயதில் நவீன கவிதைக்குள் வந்தது எப்படி? யார் ஆற்றுப்படுத்தினார்கள்?
நல்ல தீவிரமான வாசிப்பின் வழியே அப்படியே வந்து சேர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். தனிப்பட்ட ஒருவர் என்னை ஆற்றுப்படுத்தினார் என்று கூற முடியாது. பலரும் சேர்ந்து அவர்களை அறியாமலேயே ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார்?
அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும். அனைவரையும் குறிப்பிடுவது சாத்தியமில்லை. குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்ல வேண்டுமெனில் கமலாதாஸின் கவிதைகள் மிக நெருக்கம்.
அவரது கவிதைகளில் இருக்கும் தனித்துவமான கவித்துவம், மீறல், விடுதலையுணர்வு, புரட்சிகரமான குரல் என்னை மிகவும் கவர்ந்தவை. பலரும் எழுதத் தயங்கிய விஷயங்களை அபாரமாக எழுதியவர்.
முதல் கவிதைத்தொகுப்பு வெளியான பின்னணி பற்றி?
2010ன் இறுதிவாக்கில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். சிற்றிதழ்களில் தொடர்ச்சியாகக் கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. உயிர்மைக்குக் கவிதைகள் அனுப்பி விட்டு மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் பேசிய போது உங்கள் கவிதைகளைத் தொகுப்பாகப் பிரசுரிக்கலாம் என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தில் 2016ல் உயிர்மை மூலம் எனது 'டல்ஹௌசியின் ஆரஞ்சு இரவு' முதல் தொகுப்பு வெளி வந்தது.
அது என்ன 'டல்ஹௌசி'யின் ஆரஞ்சு இரவு?
அந்தத் தொகுப்பு வெளியிடுவது என்று முடிவு செய்த பின்பு தலைப்புக்காக மிக யோசித்துக் கொண்டிருந்த போது மனுஷ்யபுத்திரன் அந்த தொகுப்பிலிருந்த ஒரு கவிதையின் தலைப்பான டல்ஹௌசியின் ஆரஞ்சு இரவையே தொகுப்பிற்கான தலைப்பாக வைத்து விடலாமென்றார். அது நல்ல யோசனையாக இருந்ததால் அப்படியே வைக்கப்பட்டது.
டல்ஹெளசி என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஊர். ‘டல்ஹௌசியின் ஆரஞ்சு இரவு’ கவிதை டல்ஹௌசியில் தங்கி இருந்த ஓரிரவின் அனுபவத்தை வைத்து எழுதப்பட்டது. மிகவும் குளிரான இடமாகையால் குளிரைச் சமாளிக்க விடுதி அறைகளில் ஆரஞ்சு நிற ஹீட்டர் உபயோகிக்கும் வழக்கம் இருந்தது. மனதில் ஆழமாகத் தங்கிவிட்ட அந்த இரவின் அனுபவத்தை ஊர் திரும்பியதும் ஒரு நாள் கவிதையாக எழுதினேன். அதுதான் அந்தக் கவிதை.
இரண்டாவது கவிதை நூல் 'தீ நின்ற பாதம்' அனுபவம் எப்படி?
முதல் தொகுப்பு வந்த பிறகு தொடர்ந்து நான் எழுத முடியாத மனச்சூழல் இருந்தது. பிறகு சால்ட் இதழுக்காக கவிஞர் நரன் கவிதை கேட்டபோது நான் எதையும் எழுதியிருக்கவில்லை என்று சொல்ல வேண்டியிருந்தது. ஏதோ ஒரு மனத்தடை என்னை அழுத்திக் கொண்டிருந்தது. ஆனால், நரன் நல்ல நண்பனுமாகையால், உன்னால் எழுத முடியுமென கூறி தொடர்ச்சியாக வலியுறுத்தி இதழுக்குக் கவிதைகள் கேட்டதால் திடீரென ஒரு நாள் அந்த மனத்தடை விலகியது என்று சொல்ல வேண்டும். அப்படித் தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குள் எழுதியவை தான் இரண்டாவது தொகுப்பான 'தீ நின்ற பாதம்'.
இரண்டு நூல்களுக்குள் ஏன் 7 ஆண்டு இடைவெளி?
எனது சொந்த வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள், அனுபவங்கள் என்னை மனதளவில் உறையச் செய்திருந்தன. அதனால் தான் இந்த இடைவெளி. அப்படிப்பட்ட நிலையில் எழுதுவது எழுத்துக்குச் செய்யும் நியாயமாக இருக்காது என்று தோன்றியதால் எதையும் எழுத முயற்சிக்கவில்லை.
உங்கள் கவிதை மொழி வசப்பட்டது எப்படி?
மொழி செறிவாவதற்கு தொடர்ந்த வாசிப்பும் தேடலும் தான் முக்கியமான காரணம் என்று சொல்லலாம். என் சொற்கிடங்கின் சேகரம் சிறு வயது வாசிப்பு மூலமாகத் தான் உருவானது என்று எண்ணுகிறேன். தன்னை வெளிப்படுத்துவது தான் என் கவிதைகளின் நோக்கம் எனும் போது அந்த குறிப்பிட்ட உணர்வைச் சொல்லும் படிமங்களை, சொற்களை, சித்திரங்களை, மென்மையான வன்மையான வார்த்தைகளை என் மனம் அந்த சேகரத்திலிருந்து சீட்டெடுத்து தரும் கிளி போல் உள்ளிருந்து கொண்டு வந்து தருகிறது என்று நினைக்கிறேன்.
உங்கள் கவிதைகளில் தனிமையும் துயரமும் நிறைந்துள்ளதாகக் கூறப்படுவதை ஒப்புக்கொள்வீர்களா?
அவை நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை மட்டுமே என் கவிதைகள் இல்லை என்று தேர்ந்த கவிதை வாசகர்கள் கண்டு கொள்வார்கள்.
காசி பற்றி நிறைய எழுதத் தோன்றியது எப்படி?
எழுதத் தோன்றியது என்பதை விட எழுதாமல் இருக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சுமார் பத்து வருடங்களாகக் காசி என்னை காத்திரமாக அழைத்தபடி இருந்தது. வாழ்வின் சூழலால் பயணம் தள்ளிப் போய் கொண்டேயிருந்தது. இதற்கு மேல் தாள முடியாது என்ற நிலை வந்த போது அனைத்தையும் நிறுத்தி விட்டுக் கிளம்பி விட்டேன்.
காசி மிகவும் புராதனமான நகரம். அங்கே சென்றபோது ஆயிரம் வருடங்கள் முன்னே சென்றது போன்ற உணர்வு. காசியில் காலடி வைத்ததும் எனக்கு ஏற்பட்ட மனவெழுச்சியை விவரிக்க முடியாது. முற்றிலும் சுயம் மறந்து தனியாகச் சுற்றித் திரிந்தேன். மொழியில் விவரிக்க முடியாத சில தனிப்பட்ட ஆன்மிக அனுபவங்கள் அங்கு நிகழ்ந்தன.
காசியில் இருந்து திரும்பி வர புறப்பட்ட போது ஏதோ உதிரத்தோடு சதையைப் பிய்த்துக்கொண்டு வருவது போல் தோன்றியது. ஊர் திரும்பிய பின்னும் அந்த கொந்தளிப்பான மனநிலை அடங்கவில்லை. அப்போது எழுதப்பட்டவை தான் காசி கவிதைகள். ஆனாலும், இன்னும் முழுமையாக எழுதப்பட்டு விடவில்லை. பின்பொரு காலகட்டத்தில் மீண்டும் எழுதுவேனாயிருக்கும்.
உங்கள் கவிதைகளில் தத்துவப் பார்வை வந்தது எப்படி?
சிறு வயதிலிருந்து எனக்குத் தத்துவத்தின் மீது ஆர்வம் வந்ததற்கு என் தாத்தாவுடனான உரையாடல்கள் காரணமாக இருக்கலாம். பல்வேறு காலகட்டங்களில் மரணம் பற்றிய கேள்விகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக உள்ளே நிகழ்ந்தபடியே தான் இருந்தன. அதற்குத் தூண்டுதலாக இருந்தது ஒரு இளவயது அனுபவம்.
எங்கள் ஊரில் இடுகாட்டுக்குப் பெண்கள் செல்லலாம். உறவுக்கார முதியவர் ஒருவரைத் தகனம் செய்ய கொண்டு போன போது நானும் உடன் சென்றிருந்தேன்.
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து உடலை விறகுக்கட்டைகள் போட்டு மூடி எரியூட்டுவது வரை பார்த்துக் கொண்டிருந்தேன். மறு நாள் அஸ்தி சேகரிக்கச் சென்ற போது, அது நாள் வரை எல்லோரையும் கேலி செய்து பேசிக் கொண்டிருந்த, உணவின் மீது பெரு விருப்பம் கொண்டிருந்த ஒருவர் முற்றிலும் சாம்பலாகியிருந்தார்.
மரணம் அடைந்தபோது அவர் என்ன உணர்ந்து இருப்பார்? உயிர் பிரியும் போது வலித்திருக்குமா? சிதை எரியும்போது சுடுமா? உயிர் என்று சொல்லப்பட்ட ஒன்று எங்கே சென்றிருக்கும்? அந்த உடல் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்த போது எனக்குள் கேள்விகளும் அச்சமும் மாறி மாறி வந்தன. அதன் பிறகு எனது சிந்தனைகள் எல்லாம் மரணம் பற்றியதாகவே இருந்தது. அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. என் அம்மாவிடம், நானும் ஒரு நாள் இறந்து விடுவேனா என்று கேட்டு அழுதபடி இருந்தேன். இந்த கேள்வியால் அவர் அதிர்ச்சி அடையவில்லை. ஒரு குழந்தையிடம் சொல்கிறோம் என்றில்லாமல் அநாயசமாகப் பதில் சொன்னார், “இந்திரா காந்தியே போன பிறகு நீ எல்லாம் எம்மாத்திரம்” என்று. எனக்கு அவ்வளவு கறாரான உண்மை தேவையாகயிருந்தது. மரணம் ஒரு நாள் நிச்சயம் என்று உறுதியாக புரிந்ததும் அதை ஏற்றுக் கொள்ள மனம் துணிந்தது. வாழ்வு ஒரு வேளை எனக்கு ஏற்படுத்தியிருக்க கூடிய பல மனத்தளைகள் அப்போது அகன்றன. அவையே வாழ்வின் பொருள் குறித்தான தேடலுக்கான தூண்டல்கள். இன்னமும் பல கேள்விகளுக்குப் பதில் தேடியபடியும் சுயப்பரிசோதனைகள் செய்தபடியும் தான் வாழ்வு நகர்கிறது.
'பிணவாடை குடித்துப் பேய் துரத்தும் சாத்திரங்கள் கற்க முயல்கிறாள் பாகீரதி'. இது மீறல் ரகமா ?
பாகீரதியான கங்கையின் ஆற்றல் பெரியது. ஆனால், ஏன் அவள் சிவனின் தலையில் சதா கட்டுண்டு கிடக்க வேண்டும் என்ற கேள்வி வருகிறதில்லையா..?
சிவன் சுடுகாட்டில் நடனமாடுபவர். பேய்களுடன் திரிபவர். இது அவளுக்கு உவப்பான ஒன்றாக இருக்க முடியுமா…? அவளைச் சிரசில் வைத்துக் கொண்டே அனைத்தையும் செய்கிறார் அவர். ஆனால் அவளது விருப்பம் என்ன என்று அவருக்குத் தெரியுமா?
பாகீரதி கவிதை மூலம் நான் எழுப்புவது சமகாலப் பெண்களுக்கான விடுதலை எனும் தோற்றம் குறித்தான வினாவைத்தான். இன்று எவ்வளவோ மாற்றம் அடைந்து, கல்வி கற்று, பேச்சுரிமை, எழுத்துரிமை, பொருளீட்டும் உரிமை போன்றவை கிடைத்திருந்தாலும் ஒரு பெண்ணால் தான் நினைத்தபடி இயங்க முடிகிறதா? வீடு, குடும்பம், சமூகம் என்ற அமைப்புகள் அவளுக்கு உண்டாக்கியிருக்கும் தளைகள் அனைத்தையும் அவளால் விலக்க முடிந்திருக்கிறதா என்ற கேள்விதான் அக்கவிதையில் உள்ளது.
பல கவிதைகள் பற்றற்ற தன்மையைக் கூறுகின்றனவே?
பற்றற்ற தன்மையைப் பேசினாலும் இன்னும் நான் பற்றற்ற வாழ்வை வாழவில்லை. அந்த மனநிலையை அடையவில்லை. அதனால், என் கவிதைகள் பற்றற்ற நிலைக்கான ஏக்கம் என்று கூறலாம். அந்த ஏக்கமே என்னைத் தொடர்ந்து அதைப் பற்றி எழுதச்செய்வதாக இருக்கின்றது என்று நினைக்கிறேன்.
தலைப்புக்காக மிகவும் யோசிப்பீர்களா? தலைப்பு எப்போது வைப்பீர்கள்?
பொதுவாக, தலைப்பை வைத்துவிட்டு கவிதை எழுத முடியுமென்று தோன்றவில்லை. கவிதையை எழுதிவிட்டுத்தான் தலைப்பு வைப்பது வழக்கம். சில நேரங்களில் கவிதையை விட தலைப்பு தான் கூடுதலான நேரம் எடுத்துக் கொள்ளும். அப்புறம் சில கவிதைகளில், கவிதைக்கான முழுமையே தலைப்பிலிருந்து வருவது போல் ஆவதெல்லாம் உண்டு.
உங்களது வேளாண்மைப் படிப்பு, வங்கி வேலை, கவிதை மூன்றும் பொருந்தாத சேர்மானமாக இருக்கிறதே? படிப்பையும் பணியையும் பற்றிப் பேச முடியுமா?
வாழ்வு முரண்களின் சங்கமம் தானே. இப்படி மாறுபட்ட பின்புலங்கள் வாழ்வுக்குச் செழுமை சேர்க்கக்கூடியவை தானே.
மனதுக்குப் பிடித்ததாக இயற்கை சார்ந்து இருந்ததால் வேளாண்மையைப் பட்டப்படிபிற்காகத் தேர்வு செய்தேன். இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப் பதக்கம்.
மதுரை வேளாண் கல்லூரியில் படித்த காலம் பொற்காலம் போல் தோன்றும். வழிநெடுக மஞ்சள் வாகை மரங்கள் சூழ்ந்த கல்லூரி ஒரு காட்டிற்குள் இருப்பதுபோல்தான் இருக்கும். நூற்றுக்கணக்கான ஏக்கர் கொண்ட பரந்த வெளி கொண்ட பிரமாண்டமான வளாகம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சைக்கிளில் தான் செல்ல வேண்டும். வழியிலே மயில்கள் மறித்துக்கொள்ளும். நான் மிகவும் மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் நிறைய கற்றுக் கொண்ட வருடங்கள் அவை.
பிறகு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலராகத் தான் முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்தேன். மேட்டுப்பாளையத்தில் பணி. காலை 6 மணிக்கு பைக் எடுத்தால் 18 கிராமங்களையும் சுற்றி விட்டு அலுவலகம் வருவேன். அங்கே சிறுகுறு விவசாயிகள் எளிய மனிதர்களாயிருப்பினும் மிகுந்த அன்பை அளித்தவர்கள். அக்ரி அம்மா என்று அவர்கள் அன்போடு அழைத்தாலும் எனக்கு அப்போது 23 வயதுதான். அவர்கள் குடும்ப விழாக்கள், விவகாரங்கள் முதற்கொண்டு அனைத்திற்கும் எனக்கு அழைப்பு உண்டு. சில சமயங்களில் சொந்தப் பிரச்சினைகளுக்கும் ஊர் பிரச்சினைகளுக்கும் கூட நமது கருத்துக்களைக் கேட்டு வாங்குவார்கள். அப்படி ஒரு அனுபவம் எனக்கு மிக இள வயதிலேயே தந்தது இந்த வங்கிப் பணி தான்.
அங்கே மனநிறைவு தந்த அனுபவம் ஏதாவது ?
மானாவாரி விவசாயம் மட்டுமே செய்து வந்த சுமார் ஆறேழு கிராமங்களை நீர்வரத்து ஏற்படுத்திப் பசுமையாக்க முடிந்த பேறு எப்போதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய அத்தியாயம். இதற்காக மாதக்கணக்கில் பொறியாளர்களுடனும் விவசாயிகளுடனும் தொழில்நுட்ப வல்லுனர்களுடனும் களத்தில் இருந்திருக்கிறேன்.
நான் அங்கே சென்றபோது ஓரிரு சுயஉதவிக்குழுக்கள் தான் இருந்தன. அவையும் இழப்பில் இருந்தன. தன்னார்வத் தொண்டு நிறுவங்களுடன் இணைந்து அவர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்தி, பின்பு தொடர் சந்திப்புகள், வழிகாட்டுதல்கள் மூலம் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி குழுக்களைச் சீரமைத்தோம். எனது ஊக்கத்தாலும் முயற்சியாலும் இரண்டு வருடங்களில் அங்கு பதினைந்து இருபது குழுக்கள் உருவாகின. கிராமப் பெண்களிடம் தற்சார்பு எண்ணத்தை வளர்த்து ஒரு தன்னம்பிக்கை அலையை உருவாக்க முடிந்தது ஒரு நிறைவான அனுபவம்.
பயணங்களில் ஆர்வம் வந்தது எப்படி?
பயணங்கள் என்னை இரக்கமற்ற தினசரியின் பிடியிலிருந்து விடுவிப்பவையாக, புதிதாக உணர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பவையாக உணர்கிறேன். நாம் போகும் வேறு வேறு இடங்கள் நம் அகப்பரப்பை விரிவுசெய்பவையாகவும் இருக்கின்றன.
நான் யார் என்று யாருக்கும் தெரியாத, எனக்கு யாரையும் தெரியாத ஓர் ஊருக்குச் செல்லும்போது என்னை என் அடையாளங்களிலிருந்து விடுவித்து, தளைகளற்ற ஒரு பறவை போல் எனை மாற்றும் இரசவாதம் நிகழ்கிறது. சுயத்தோடு எனக்கு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகவும், என் சுயத்தை முற்றிலும் அழிப்பதுமான விந்தை ஒரே சமயத்தில் நடக்கிறது. ஆகையால், குழுவாகச் செல்வதை விடவும் தனியாகச் செல்லும் பயணங்களே எனக்கு உவப்பானவையாக இருக்கின்றன.
ஒவ்வொரு நிலமும் தனக்கென்று ஒரு இசையைக் கொண்டது. வெயிலும், காற்றும், பனியும், மண்ணும் சேர்ந்திசைக்கும் Symphony-யை கேட்டவாறு ஒரு புது ஊரில் இலக்கின்றி நடந்து செல்வது எனக்குப் பிடித்தமான ஒன்று.
உங்கள் கவிதை பற்றிக் குறிப்பாகப் பெண்கள், தங்களுக்காக எழுதப்பட்டதாகவும் அதில் தங்களைக் காண்பதாகவும் எழுதுகிறார்கள். அப்படி உங்களுக்கு வந்த கடிதங்களில் மறக்க முடியாதது?
இலக்கியத்தின் பணிகளுள் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது மானுடத்தை அது இணைக்கும் விதத்தைத்தான். எத்தனையோ நல்ல நூல்கள், சில வரிகள் என்னைக் கடைத்தேற்றியிருக்கின்றன. நான் உணர்வதை இன்னொருவரும் உணர்ந்திருக்கிறார் என்ற அறிதல் அல்லது ஒருவரின் எழுத்து இன்னொருவருக்குப் பற்றுக்கோடாக ஆகிறது என்பது எவ்வளவு உன்னதமானவொன்று.
மிகுந்த வலியை நாம் அனுபவித்திருக்கும் பட்சத்தில் இன்னொருவருடைய வலி நம்மை மிக எளிதாகப் பாதிக்கும். அதை நாம் அதன் நுட்பத்தோடும் காரணங்களோடும் எல்லாத் தளங்களிலிருந்தும் உணர்ந்துகொள்வோம்.
அவ்வகையில் ‘ஆழ்’ கவிதை பற்றி எழுதப்பட்ட கடிதம் எனக்கு மிக நெருக்கமான ஒன்று. கவிதையைக் குறிப்பிட்டு எழுதிய அந்தச் சகோதரியின் கரங்களைப் பற்றிக் கொள்ள வேண்டுமெனெ அந்த நாள் முழுக்கத் தோன்றிக் கொண்டே இருந்தது. மூன்று வருடங்களாக நான் அந்தக் கவிதையின் வடிவிலாவது அவருடன் இருந்திருக்கிறேன் என்பது ஆறுதல் தருவதாக இருந்தது.
குமரகுருபரன் விருது பெறுவது பற்றி?
என் முதல் தொகுப்பு வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டாலும் அதற்குப் பின் இரண்டாவது தொகுப்பு வெளிவர ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் எனக்கு இவ்விருது வழங்கப்படுவது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக இருக்கிறது.
இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருதை என் கவிதைகளுக்கு அறிவித்திருப்பதை எனக்குக் கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரமாக நான் கருதுகிறேன். விருதுக்குழுவினருக்கு என் நன்றி.