1970களின் பிற்பகுதியிலிருந்து மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டும் வரும் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான ஆர். சிவகுமாரை கொண்டாடும் விதமாக எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் ஒருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கருத்தரங்கம் பிப்.22ஆம் தேதி சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற உள்ளது.
‘இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் நரேனும், எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதனும் பேசவுள்ளனர். ‘உருமாற்றம்’ நூல் குறித்து கவிஞர் றாம் சந்தோஷ் வடார்க்காடு, மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு, ‘அந்த நாளின் கசடுகள்’ நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் அசதா, ‘வசைமண்’ நூல் குறித்து மொழிபெயர்ப்பாளர் இல.சுபத்ரா, ‘சோஃபியின் உலகம்’ நூல் குறித்து கவிஞர் சபரிநாதன், எழுத்தாளர் தூயன், ‘விஜய நகரம்’ நூல் குறித்து விமர்சகர் விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.
நிறைவாக எம்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் க. மோகனரங்கன், எழுத்தாளர் செல்வேந்திரன் ஆகியோரும் பேச உள்ளனர்.
எழுத்தாளர்களை கொண்டாடும் ஆகுதி
எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி அமைப்பு வருடந்தோறும் எழுத்துலகின் முன்னோடிகளைக் கொண்டாடி வருகிறது. இதற்கு முன் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் நிர்மல்யா ஆகியோரை சிறப்பிக்கும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியிருந்தது.
ஆர். சிவக்குமார் பற்றி….
பிரான்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ கதையை தமிழுக்கு கொண்டுவந்ததான் மூலம் பரவலாக அறியப்பட்ட ஆர். சிவக்குமார், சில லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், மாய ஆஞ்சலு, சல்மான் ருஷ்டி ஆகியோரது படைப்புகளையும் தமிழுக்கு கொண்டுவந்துள்ளார். பதேர் பாஞ்சாலி (திரைக்கதை), ‘இலக்கியக் கோட்பாடு’ (ஜானதன் கல்லர்), சோஃபியின் உலகம் (யொஸ்டைன் கார்டெர்), மார்க்ஸின் ஆவி (சார்ல்ஸ் டார்பர்) ஆகியவை இவருடைய மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
‘மீட்சி’ இதழ் வழியாகத் தொடர்ந்து இயங்கியவர். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
சங்கப் பாடல்கள் சிலவற்றையும், நகுலனின் சில கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.