கருப்பு பலூன்

கருப்பு பலூன்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்
Published on

ஒருவர் மீதொருவராய் நிற்க வைத்தால் நான்கைந்து பேர் அதற்குள் நிற்கலாம். அவ்வளவு பெரிய ராட்சத கறுப்பு பலூன் அது. பலூன்களுக்கான இயல்பில் இல்லை. ஒரு புயலைப் போல அவளை துரத்திக் கொண்டிருந்தது. ஒளி புக முடியாத நெருக்கத்தில் மரங்கள் நின்றிருந்த நீண்டு வளையும் காட்டுக்குள் அவளை அது ஆக்ரோஷமாக துரத்திக் கொண்டிருந்தது. அவளை உறிஞ்சி தன்னுள் புதைத்துவிடும் பெருவேகம். மரங்களின் மேலேறி பறந்து கொண்டிருந்த அந்த பலூன் அத்தனை இருட்டிலும் அவ்வளவு துல்லியமான ஒரு கறுப்பில் தெரிந்தது. கயல் மூச்சிரைக்க மரங்களுக்கு இடையில் ஓடிக் கொண்டிருக்கிறாள். அவளது நிர்வாணத்தை மறைக்கக் கூட தோன்றாமல். எப்படியாவது அந்த பலூனிடமிருந்து தப்பித்துவிடும் எத்தனங்கள் அவளிடம் இருந்தன. திரும்பிப் பார்க்க தோன்றவில்லை. திடீரென்று பலூன் அவள் முன்னால் பேரிரைச்சலுடன் இறங்கி நின்றது.

போர்வைக்குள்ளிருந்த அவளது நைட்டியணிந்திருந்த உடல் முழுவதும் வியர்வையில் சட்டென்று நனைந்துவிட, கயல் அவசர அவசரமாய் எழுந்து விளக்கை ஆன் செய்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்றை தாண்டியிருந்தது. அருகில் மேஜையில் இருந்த மாத்திரை குப்பியை திறந்து கையில் வைத்துக் கொண்டு ஏ.சி. ரிமோட்டை தேடினாள்.

“இதுக்கு மேல அதை அதிகமா வைக்க முடியாது” என்றபடி தனக்கு அருகிலிருந்த மேஜை விளக்கை மீனு ஆன் செய்தாள். “ஏசியும் fullஆ வச்சிட்டு, இழுத்து போர்த்திகிட்டு தூங்கிற”

“சாரி மீனு”

“அதை விடு, திரும்பவும் அதே கனவா?”

மீனுவின்குரலில் பரிச்சயம் இருந்தது. எரிச்சல் இல்லை.

“ஆமா” என்றபடி கயல் மாத்திரையை விழுங்கினாள்.

“அவசரத்துக்கு போட சொல்லி உன் சைக்கியாடிரிஸ்ட் கொடுத்த மாத்திரை. தினமும் போடற. நீ தெரபிஸ்ட்டை பார்க்கலாம்ல, எனக்கென்னவோ வெறும் மாத்திரையிலேயே இது சரியாகும்னு தோணல.”

அடுத்த நாள் மீனு பரிந்துரைத்த தெரபிஸ்ட்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கும் விபரத்தை சொல்லி தூங்கப் போனாள் கயல்.

“வாயேன், மழை பெய்யுது. கொஞ்சம் பால்கனியில நின்னுகிட்டு வேடிக்கை பார்க்கலாம், எப்படியும் தூக்கம் வர இன்னும் டைம் ஆகும்ல” என்று மீனு சொன்னதை கயல் யோசிக்காமல் நிராகரித்தாள்.

“நான் ஒன்னும் உன்ன மாதிரி ஹோப்லெஸ்லி இன் லவ் இல்ல. அப்படி இருக்கிறவங்கதான் இதெல்லாம் பண்ணுவாங்க, கசகசன்னு மழையில நனையறதெல்லாம்”

“உனக்கு ஏன் ஒரு சின்ன மழையில, ஒரு சாரல்ல நனையறது பிடிக்க மாட்டேங்குது?”

“தெரியல, எதுக்கு உடம்பு மேலே எதோ ஒன்னு படனும்? அது எதுவா இருந்தாலும்?”

“நீ குளிக்கவே மாட்டியா?” மீனுவின் குரலில் எள்ளல் துள்ளியது.

“அதை ஒண்ணும் நீ மழையில நனயற மாதிரி ரசிச்சு செய்ய மாட்டேன். உடம்பு அழுக்கு போகணும். அவ்வளவுதான். தவிர பாத்ரூமில் அடைப்பட்ட குளியல்ல ஒரு பிரைவசி இருக்கு, அங்கு எல்லாம் என் கட்டுப்பாட்டுல இருக்கு.”

மீனுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. குட்நைட் சொல்லிவிட்டு தூங்கப் போனாள்.

*

நிஜத்தில் நடப்பது போல அவ்வளவு துல்லியமாய் தினமும் வரும் கனவை தெரபிஸ்ட்டிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் கயல். அந்த

அறையின் இரண்டுஏசிக்களையும்மீறிஅவளுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது.

தொடர்பில்லாதது போன்ற சில கேள்விகளை தெரப்பிஸ்ட் கேட்டு வைத்தார்.

“உங்களப் பத்தின உங்கள் முதல் நினைவு?”

சில துணைக் கேள்விகளுக்கு பின் கயல் பகிர்ந்து கொண்டாள்.

சிவப்பு நிற கவுனில் கூட சில பிள்ளைகளுடன் விளையாடிய ஒரு மாலைப் பொழுது. பிறகு அம்மா, அப்பா, சகோதரனுடன் சென்ற ஒரு விடுமுறையில் ஹோட்டலின் சோபாவில் முழங்கால் வரை மட்டுமே நீளும் ஸ்லீவ்லெஸ் கவுனில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த புகைப்படம். அது அவளுக்கு மிகப்பிடித்த புகைப்படம். அதன் பிறகு எந்த புகைப்படமும் நினைவில் இல்லை.

“அதற்கு அப்புறம் எந்த போட்டோவும் எடுக்கலையா?”

“எடுத்திருக்கலாம், எதாவது நிகழ்ச்சிகளில்ல..”

தெரபிஸ்ட் விடுவதாயில்லை.

*

கொஞ்சமாய் கொஞ்சமாய் அவளை நெகிழ்த்திய உரையாடலில் ஒரு மங்கிய திரையை போல அந்த நாள் நினைவுக்கு வந்தது. அப்போது

தான் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பி இருந்தாள்.

எதிர்வீட்டில் இருந்த ரகு அண்ணன் ஹால்சோபாவில்அமர்ந்துகாப்பி குடித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் காலியாயிருந்த வீட்டை பார்க்க வந்திருந்தார். நண்பருக்கு வேண்டும் என்றார்.

வீட்டுக்கு சொந்தக்காரர் தூரத்து உறவினர் என்பதால் சாவி வீட்டில் இருந்தது.

அம்மா சாவியை கயலிடம் கொடுத்து “அண்ணனோடு போயிட்டு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

திரும்பி வரும்போது கயல் வேறொருத்தியாக வந்தாள்.

படிக்கட்டில் உட்கார்ந்து தலையை சீவிக் கொண்டிருந்த அம்மா கேட்டாள்

“என்ன ஒரு மாதிரியிருக்க?”

“அம்மா. அது வந்து”

கயலால் அதற்கு மேல் பேச முடியவில்லை. அழத் தொடங்கினாள்.

பதற்றமடைந்த அம்மா ஓரளவுக்கு ஊகித்தாள். அப்பாவிடம் சொல்லி ரகு அண்ணனின் சட்டையைப் பிடித்து அறைந்து அப்பா அழுதாலும் அதன் பிறகு ஒன்றும் நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில் வேறு வீடு மாற முடிவெடுத்தார்கள்.

*

“அந்த கறுப்பு பலூன்ல ரகுதான் இருப்பானு நினைக்கிறியா?”

“அந்த சம்பவம் என்ன ரொம்ப தொந்திரவு பண்ணுச்சுதான். அப்புறம் என் பள்ளிக்காலம் முழுக்க நான் அதிகமா யாரோடவும் பேச மாட்டேன். ஆண்கள பார்த்தாலே பயம் இருந்துச்சு. ஆனா கல்லூரியில ஒரு சில நண்பர்கள் கிடச்சாங்க. லைப்ரரிக்கு போவேன், சில கூட்டங்களுக்கு போவேன். சில விஷயங்கள் புரிஞ்சுது. உங்கள மாதிரி ஒரு கவுன்சிலர கூட பார்த்தேன். அதை கடந்துட்டேனுதான் நினைக்கிறேன்.”

“இதெல்லாம் எப்போ?”

“ஒரு 3,4 வருஷம் இருக்கலாம்.”

“ஆனா கனவு உங்களுக்கு சில வாரங்களாதான் வருதுனு சொன்னீங்கல?”

“ஆமா”

“இன்னொரு செஷன் போகலாமா?”

கயல் அதற்கு தயாராக இல்லை. அயற்சியாயிருந்தது.

ஒரு புன்னகையுடன் தெரப்பிஸ்ட் வேறொரு நாள் குறித்து அனுப்பி வைத்தார்.

*

அன்றிரவு மாத்திரை போடலாமா வேண்டாமா என்று யோசித்து வேண்டாம் என்று முடிவெடுத்தாள் கயல்.

மீனு அவளது காதலனுடன் டின்னருக்கு போயிருந்தாள். சொமாட்டோவில் கயல் தனக்கான உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து, டிவியை கொஞ்ச நேரம் துழாவிவிட்டு தூங்கச் செல்லும் வரையில் மீனு வரவில்லை. அவளிடம் வீட்டுக்கு இன்னொரு சாவி இருந்தது. அதனால் தூங்கலாம்.

சரியாக ஒரு மணியளவில் அதே கனவு. குப்பென்று வியர்த்து கண்விழித்தாள் கயல்.

“அதே கனவுதானே?” மீனு வந்து உடைமாற்றி அப்போதுதான் தூங்கப் போயிருந்தாள்.

“ஆமா. ஆனா.”

“என்னடி, ஆனா?”

அவளருகில் வந்து உட்கார்ந்தாள் மீனு.

“இல்ல, அவ்வளவு பெரிய பலூனிலிருந்து ஒரேயொரு சின்ன உருவம் இறங்குச்சு. அத்தன இருட்டுல கண்ண கூச வைக்கிற மாதிரி பளீருன்னு. அந்த உருவம் யாருனு தெரியல. ஆனா ரொம்ப சோகமா இருந்துச்சு.. எனக்கு ஏன் இப்படி நடந்துச்சுன்னு கேட்கிற மாதிரி.. என்னை ஏன் இப்படி பண்ணேனு கேட்கிற மாதிரி..”

மீனுவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

தன்னுடைய தோழியான அந்த தெரப்பிஸ்டுக்கு கனவில் ஒரு சின்ன முன்னேற்றம், கயலை சீக்கிரம் பார்த்தால் நலம் என்று செய்தி அனுப்பிவைத்தாள்.

தெரப்பிஸ்டிடமிருந்து அடுத்த நாள் காலையே பதில் வந்தது – அன்றே பார்க்கலாமென்று.

*

“அடுத்த செஷனுக்கு தயாரா, கயல்?” தெரப்பிஸ்ட் கேட்டார்.

எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள் கயல்.

கனவின் கூடுதல் விவரங்களைக் கேட்டுக் கொண்டு தெரப்பிஸ்ட் சொன்னார்.

“அந்த சம்பவம் பத்தி இன்னும் கொஞ்சம் பேசலாம், அது என்ன எப்படினு இல்லை. அந்த விஷயமெல்லாம் நமக்கு இப்போ தேவையில்லை. ஆனா அந்த ரகு பத்தி சொல்லுங்க”.

கயலுக்கு அவள் குடும்பம் அப்போது தங்கியிருந்த அந்த ஒற்றை படுக்கையறை வீடு நினைவுக்கு வந்தது. பல நினைவுகள் புதைந்திருக்கும் வீடு அது. இப்போது அங்கு யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அண்ணன் கனடாவுக்கு அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான். கயலுக்கு கல்யாணம் எதாவது அமைந்தால்தான் இந்தியா வருவார்கள். கனடாவில் அப்பா அம்மாவுக்கு என்று தனியாக விசாலமான ஒரு அறை. எல்லா வசதிகளும் கொண்டது. அவர்கள் இருந்த பழைய வீட்டில் அப்படியில்லை. ஒற்றை படுக்கையறையில் துணிகளை வைக்கவே சரியாக இருக்க, ஹாலில்தான் படுத்துறங்குவார்கள். கனடா வீட்டில் வார்ட்ரோப்களுக்கென்றே தனியறை இருக்கிறதாம், அம்மா சொல்லி சொல்லி குதூகலிப்பாள்.

கீழிரண்டும் மேலிரண்டுமாக நான்கு வீடுகளைக் கொண்ட அந்த காம்பௌண்டை விட்டு வெளியே வந்தால் சாலைக்கு எதிர்புறம் ரகு அண்ணன் தங்கியிருந்த வீடு.

நல்ல பெரியவீடு. அப்போதெல்லாம் கயலுக்கு அப்படியொரு வீட்டில் தங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். மாடிப்படிகள் கொண்ட மூன்று படுக்கையறை தனி வீடு அது. மாடியிலிருந்த படுக்கையறையை ஒட்டி சின்னதாக ஒரு மொட்டை மாடி. அதில் ரகுவின் அம்மா பல செடிகளை வளர்த்துக் கொண்டிருந்தார். ஒரே மகன் என்பதால் ரகுவுக்கு ஏகப்பட்ட சுதந்திரம். அப்போதுதான் படிப்பு முடித்து ரகு அண்ணன் ஒரு வேலையில் சேர்ந்திருந்தார்.

அன்று வந்ததும் புதிய அலுவலகத்தில் வேறொரு மாநிலத்திலிருந்து வந்திருக்கும் நண்பர்களுக்காக வீடு கேட்டுதான்.

“சார், சாரி சார். தெரியாம செஞ்சுட்டேன்” என்றுதான் ரகு அண்ணன் சொல்லுவார் என்று அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் ரகு அண்ணன் ஒரேடியாக தான் எதுவும் செய்யவில்லை என்று சாதித்துவிட்டார். “உங்க பொண்ணு பொய் சொல்றா” என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு பின்னால் நின்று அழுதபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்த கயலுக்கு அப்போது பத்து வயது. “பச்ச புள்ள பொய் சொல்லுமா?” அம்மா அரற்ற

“இந்த காலத்து புள்ளங்கள பச்ச புள்ளனு சொல்லாதீங்க, அதுங்களுக்கு என்னென்னவோ தெரியும். நான் எதுவும் செய்யல, அவ்வளவுதான். உங்களால என்ன முடியுமோ பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினார்.

*

நீண்ட மௌனத்தை தெரப்பிஸ்டின் குரல் மீண்டும் கலைத்தது.

“அப்போ உங்க மனநிலை என்னனு உங்களுக்கு நினைவு இருக்கா?”

“எனக்கு தெரியல மேடம், அந்த நேரத்துல, அதுக்கு அப்புறம் சில வருடங்கள் எனக்கு ஒரேயொரு விஷயம்தான் திரும்ப திரும்ப தோணிக்கிட்டு இருந்துச்சு.”

ஒரு இடைவெளிவிட்டு கயலே தொடர்ந்தாள்.

“உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறக்காமலா போயிடும்? அது பெண் குழந்தையா பிறந்து என்னைய மாதிரி இல்லை என்னை விட மோசமா ஒரு சூழல் அதுக்கு அமையும் பாரு. அப்போ தெரியும் உனக்கு” இப்படிதான் ரொம்ப வருஷம் யோசிச்சேன், கோவிலுக்கெல்லாம் போயி வேண்டுவேன்”

கயலின் குரலில் குற்றவுணர்ச்சி இருந்தது.

“எனக்கே இப்போ என்னைய நினைச்சா அசிங்கமா இருக்கு. அந்த புள்ள என்ன செய்யும் பாவம்? நான் எவ்வளவு மோசமானவளா இருந்திருக்கேன்.”

“இந்த புரிதல்தான் முக்கியம் கயல். உங்க தவற நீங்க உணர்ந்துட்டீங்க. விடுங்க”

“சரி, நீங்க வீடு மாறிட்டீங்க. அப்புறம் அந்த ரகுக்கு கல்யாணம் ஆச்சா?”

“ஆமா, வீடு மாறினாலும் ஏதும் சேதி காதுல விழுந்துகிட்டுதான் இருக்கும். அக்கம் பக்கம் இருந்தவங்க இப்பவும் எப்பவாவது அம்மாவோட பேசுவாங்க.”

ரகுவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை பிறந்த கதை வரை அவளுக்கு சமீபத்தில்தான் தெரியும். ஒருமுறை தொலைபேசியில் பேசும் போது பேச்சுவாக்கில் அம்மாசொன்னாள். அதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அது பற்றி இதுவரை பேச்சு வந்ததில்லை என்றும் சொன்னாள். “எப்படியோ போய்த் தொலையறாங்க, உனக்கு ஒரு மேட்ரிமோனியல் ப்ரொபைல் அனுப்பி வைச்சேன், பார்த்தியா?” என்று அம்மா கேட்கவும் கயல் ரகுவை மறந்து அந்த ப்ரொபைலை துழாவியது நினைவுக்கு வந்தது.

கயல் சரேலென்று திரும்பிப் தெரபிஸ்ட்டை பார்த்தாள்.

*

அந்த காம்பௌண்ட் வீடு ஒன்றில் இன்னும் வசிக்கும் சித்ராக்காவிடம் பேசி ரகுவின் மனைவி பற்றியும் மகள் பற்றியும் விவரங்களை சேகரிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமாக இல்லை. அம்மா கனடாவிலிருந்து அவளுக்கு எதாவது அனுப்பும் போது எப்போதாவது சித்ராக்காவுக்கும் சேர்த்தே சில பரிசுகளை அனுப்பி வைப்பாள்.

ரகு ஏதோ வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். இப்போது ரகுவின் மனைவியும் மகளும் மட்டும் அதே வீட்டில் இருக்கிறார்கள். மனைவியும் ஏதோ கம்பனி நடத்துகிறாள், வீட்டில் வேலை பார்க்க ஆட்களுக்கா குறை என்று சித்ராக்கா அங்கலாயித்தாள். மகளின் பெயர், பள்ளிக்கூடம் பற்றிய விவரங்களை சேகரித்துவிட்டு கயல் இணைப்பை துண்டித்தாள்.

“இப்போ உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?” மீனு கேட்டாள்.

“இல்ல சும்மா அந்த புள்ளைய போய் பார்க்க போறேன். நான் கொடுத்த சாபத்தில பாதி பலிச்சிடுச்சு, கஷ்டமா இருக்கு”

“அய்ய, நீ சாபம் கொடுத்துதான் அந்த கேடு கெட்டவனுக்கு பெண் குழந்தை பொறந்துச்சா? அப்போ பெண் குழந்தைனா சாபமா? போடி வேலைய பார்த்துகிட்டு” என்று மீனு சொன்னது சரியென்று பட்டாலும், கயலுக்கு மனம் கேட்கவில்லை.

*

பள்ளிக்கூடம் விடும் நேரம் பார்த்து அங்கு போய் நின்றாள் கயல். சித்ராக்கா ரகு மனைவி, மகளின் புகைப்படத்தை வாட்சப்பில் அனுப்பி வைத்திருந்தாள். புத்தக மூட்டையை சுமந்து கொண்டிருந்தாலும் முகம் கொள்ளா புன்னகையுடன் யாருடைய கையையோ பிடித்துக் கொண்டு குதித்து குதித்து அந்த குழந்தை வந்து கொண்டிருந்தது. குழந்தைத்தனத்தை இன்னும் தொலைக்காத நடை ஆசுவாசத்தையளித்தது.

“யுகி, ஹாய்!” என்று கயல் குரல் கொடுத்தாள்

ஒரு நிமிடம் நின்று யோசித்த யுகி, “உங்களுக்கு என் பேரு எப்படி தெரியும்?” என்றது.

கயலுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“நான்... நான் உங்க அப்பாவோட பிரெண்டு” என்றாள், சொல்லும் போதே குரல் கசந்து தொண்டைக்குள் இறங்கியது.

“அப்பாவா?” யுகி நெற்றியை சுருக்கினாள்.

கையோடு கொண்டு சென்றிருந்த சாக்லேடுகளையும், பொம்மைகளையும் யுகியிடம் நீட்டினாள் கயல்.

“தெரியாதவங்ககிட்ட எதுவும் வாங்க கூடாதுனு அம்மா சொல்லியிருக்காங்க” என்று யுகி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரிய கார் வந்து அவர்களருகில் நின்றது.

பரபரப்பாய் அதிலிருந்து இறங்கினாள் மதி.

“சாரி செல்லம், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ஆபீஸ்ல..” என்று பேசிக் கொண்டே கயல் அருகில் நிற்பதை கவனித்தாள்.

சட்டென்று யுகியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு “நீங்க யாரு?” என்றாள் சற்று அதட்டலான குரலில்.

“என் பேரு கயல்.”

“நீங்க இருக்கிற வீட்டுக்கு எதிரில அந்த காம்பௌண்ட் வீட்டுலதான் முன்னாடி இருந்தேன்” சொல்லி முடிப்பதற்குள் கயலுக்கு மூச்சு முட்டியது.

யுகியின் மீதான பிடியை தன்னிச்சையாக விலக்கிக் கொண்டாள் மதி. முகத்தில் பரிச்சயம் தெரிந்தது.

“கேள்விப்பட்டிருக்கேன், அங்க இருக்கிறவங்க சொல்லுவாங்க, வாங்க ஒரு காபி சாப்பிடலாம்” என்று சொன்னவள் மகளிடம் திரும்பி

“தெரிஞ்சவங்கதான் யுகி குட்டி, அவங்க கிப்டெல்லாம் நீ வாங்கிக்கலாம்” என்று அனுமதி வழங்கினாள்.

பள்ளிக்கூடத்துக்குஅருகிலேயே இருந்த ஒரு விசாலமான காபிபாரில், ஒதுக்கமான இடத்தில் மூவரும் அமர்ந்து கொண்டார்கள். தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய யுகி நோட்டமிட சென்று விட, கயலும் மதியும் ஆளுக்கொரு காபி மட்டும் சொன்னார்கள்.

“சொல்லுங்க கயல், எப்படி இருக்கீங்க? அம்மா அப்பா கனடாவுலதான இருக்காங்க? கல்யாணத்துக்கு கூட வரல” என்றவள் சின்ன இடைவெளி விட்டு “அதை எதிர்பார்க்கிறதும் சரியில்லை” என்றாள்.

ஏன் அப்படி சொல்கிறாள் என்று கயலுக்கு புரியவில்லை.

“ஆமா” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டவள், யுகி பற்றி கேட்கத் தொடங்கினாள். யுகி பாதுகாப்பாயிருக்கிறாள் என்பதுதான் அவள் அப்போது கேட்க விரும்பியதெல்லாம்.

ஆனால் மதி அதோடு நிற்கவில்லை.

“எனக்கும் ரகுவுக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு” என்றாள்.

“டைவர்ஸா?” கயலுக்கு விக்கித்தது.

“ஆமா,புடிக்கல. கொலை செய்யறது லீகல்னா நான் அதைதான் செஞ்சிருப்பேன். ஆனா அந்த அளவுக்கு தைரியம் இல்லை” என்று சொல்லி ஒரு மிடறு காப்பியை விழுங்கி தொடர்ந்தாள்.

“அவனோட அம்மா அப்பா முழுமையா புரிஞ்சுகிட்டாங்க. அவங்கதான் அந்த வீடு யுகி பேர்ல இருக்கணும்னு முடிவு பண்ணி மாத்திக் கொடுத்தாங்க”.

“ஓ.. அதனாலதான் வேற நாட்டுக்கு போயிட்டாரா?”

“வேற நாட்டுக்கா?” மதி வறட்சியான ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

“அது மத்தவங்களுக்கு.”

“ரகு ஆபீஸ் வேலையா வெளியே போயிருக்கும் போது ஒரு ஆக்ஸ்டிடண்ட்ல கழுத்துக்கு கீழ செயல்பட முடியாம போயிடுச்சு. எங்க டைவர்சுக்கு அப்புறம்தான் நடந்துச்சு. இப்போ மதுரைக்கு பக்கத்துல இது மாதிரியிருக்கிறவங்களுக்கான ஒரு ஹோம்ல தான் இருக்கான். சாகுற வரை அங்கதான். அந்த ஹோமுக்கு அவங்க அம்மா அப்பா ஒரு பெரிய டொனேஷன் கொடுத்திருக்காங்க. பெத்தகடன். மகன் லைப் இப்படியாகிடுச்சுனு கவலையிலேயே அடுத்தடுத்து செத்தும் போயிட்டாங்க”

கயலுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கிறுகிறுவென்று வந்தது. அவள் காலடியிலிருந்து பூமி நழுவிக்கொண்டிருந்தது.

பெரிய சாக்லேட் கேக்குடன் வந்த யுகியின் சிரிப்பு அவளை கலைத்தது.

“ஒரு ஸ்பூன் வாங்கிக்குங்க” என்றபடி கொஞ்சம் கேக்கை மதிக்கும் கயலுக்கும் ஊட்டினாள்.

காபி குடித்து முடித்து வெளியேறும் போது லேசாக மழை பெய்யத் தொடங்கியிருந்தது.

கயலின் பரிசுகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு யுகி சொன்னாள்

“எல்லா கிப்ட்சும் ரொம்ப புடிச்சி இருக்கு ஆண்டி. உங்களையும்தான். வீட்டுக்கு வாங்க ஆண்டி. அங்க உங்க பிரெண்ட் அப்பா இருக்க மாட்டாரு. ஆனா நானும் அம்மாவும் உங்க பிரென்ட்ஸ்தான். இல்லையா மா?” என்றபடி மதியை பார்க்க, மதி ஆமாம் என்பது போல சிரித்தாள்.

“பெண்ணுக்கேயுரிய துயரத்தின் விரலளவு நிழல் கூட படராமல், வாழ்க்கை முழுவதும் உனக்கு நல்ல கனவுகள் மட்டும் வாய்க்கட்டும், மகளே” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு யுகியை கட்டியணைத்து, “நிச்சயம் வரேன், குட்டி” என்றவள், விடைபெற்று இறங்கி மழையில் நடக்கத் தொடங்கினாள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com