'எங்கள் கஸ்தூாிபா இல்லத்தில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது..’ இப்படித்தான் உதயா தங்கள் கதையை சொல்லத் தொடங்கினாள்..
‘இல்லத்தை நடத்துபவர்களால் எங்களுக்கு உணவளிப்பதே பெரிய சுமையாக இருக்கும்பொழுது மின் கட்டணம் செலுத்துவது என்பதெல்லாம் பெரிய சவாலாகிப் போனது’ .. இது எலிசபத் மேரியின் குரல்.
இத்தனை பெரிய கூட்டம் தங்களது இல்லத்தில் கூடும் என்று ஒருபோதும் அந்தக் குழந்தைகள் கனவு கண்டிருக்க மாட்டார்கள்.. கஸ்தூாிபா இல்லத்திற்கு வெளியே நின்ற கார்களின் எண்ணிக்கையை ஆசிரம சிறுவர்கள் முப்பத்தி ஆறு முப்பத்தி ஏழு என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.. அத்தனை பெரிய கூட்டம்.
நாம் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்றுதான் முதலில் அவர்களுக்குத் தோன்றியது.. வந்திருப்பது எல்லாம் விஞ்ஞானிகள் என்பதோ அதிலும் சிஎஸ்ஐஆர் எனும் இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் ஆய்வுத்துறையின் விற்பன்னர்கள் என்பதோ அவர்களுக்கு இப்போதும் தெரியவில்லை.
‘இது எப்படி வெளியில் பரவியது?’ என்று மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார் அந்தோணி சார். அவர் படுத்த படுக்கை ஆகியதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம். ஆனாலும் அந்த இருளில் கஸ்தூாிபா இல்லத்தில் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருந்தன.
மங்கை மேடம் ஓடி ஓடி அங்கு வந்தவர்களுக்கெல்லாம் பக்கத்துக் கடையில் கடன் சொல்லிவிட்டு வாங்கி வரப்பட்ட தேநீரை காகிதக் கோப்பைகளில் பரிமாறிக் கொண்டிருந்தார்.. ஏனோ அவருக்கு வியர்த்து கொட்டியது.. இருந்தாலும் இன்று குழந்தைகளுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்தபொழுது நிம்மதியாக இருந்தது.
‘நாங்கள் குறை எதுவும் சொல்ல வரவில்லை’ முனைவர் சேஷாத்திரி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெரிய தாடி வைத்த மனிதர் திரும்ப ஒருமுறை சத்தமாக சொன்னார்.
‘தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.. எத்தனை நேரமானாலும் பரவாயில்லை.. இந்த விளக்கு எப்படி எரிகிறது என்பதை சொன்னால் போதும்..’ பெரும்பாலானவர்களின் கைகளில் இருந்த கைபேசிகள் ஒளிப்பதிவு மோடில் இருந்தன..
அவர்கள் சும்மா வரவில்லை.. இல்லத்தில் இருந்த 42 குழந்தைகளுக்கும் உடைகள் உணவுப் பண்டங்கள்.. விளையாட்டு சாமான்கள் என்று பலவற்றை வாங்கி வந்திருந்தார்கள். எனவே குழந்தைகளின் பார்வை அவர்கள் வாங்கி வந்த பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மேசை மீதே இருந்தன என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.
மங்கை மேடத்துக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது.. உண்மைதான் கடந்த 40 நாள்களாக நடந்த சம்பவங்களை அசைபோட்டுப் பார்த்தால் பல வகையான ஆச்சரியங்களை உதயாவும் அவளுடைய தோழிகளும் சாதித்தே இருந்தார்கள்.. இருளில் மூழ்கி இருந்த அந்த 172 நாள்களை எப்படி மறக்க முடியும்.. தீபாவளி மாதத்தில் ஊரே பிரகாசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தைகள் பழிவாங்கப்பட்டன.. அவர்களுடைய தவறுதான்.. இரண்டு தவணையாக மின்சார பில் கட்டவில்லை.
முயற்சி செய்யாமல் இல்லை.. யார் யாரையோ கெஞ்சி எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்தும்.. இந்த முறை அமையவில்லை. எப்போதும் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்னாலேயே குழந்தைகளுக்கு துணிமணிகள் கிடைத்துவிடும் உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் சமூக அமைப்புகள் எப்படியோ உதவிக்கு வந்து விடுவார்கள்.. இனிப்புகளும் தின்பண்டங்களும் இந்தக் குழந்தையோடும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்..
ஆனால் மின்சாரக் கட்டணம் கட்ட முடியாமல் போன அந்த நாள்களில் முன்பெல்லாம் அந்தோணி சார் தன் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு வந்து தன் உறவினர்களைக் கெஞ்சி எப்படியோ பணம் சேர்த்து கஸ்தூாிபா இல்லத்தைக் காப்பாற்றி விடுவார்..
உடல்நிலை சரியில்லாமல் அவரும் படுத்துவிட்டார். எங்கே பார்த்தாலும் பரவிய டெங்கு காய்ச்சல் ஆசிரமத்தையும் தாக்கியதில் மூன்று குழந்தைகள் மோசமாக பாதிக்கப்பட்டன.. ஆசிரமத்தை இழுத்து மூடிவிடுவோம் ஊருக்கே டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு நீங்கள் தான் காரணம் என்று யார் யாரோ இவர்கள் மீது ஆத்திரத்தோடு பாய்ந்தார்கள். ஆனால் ஆசிரமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் எப்போதுமே தூய்மையை பராமரிப்பதில் இந்த குழந்தைகளின் உழைப்பு மகத்தானது.. குறை சொல்ல தங்கள் அதிகாரத்தை தூக்கிக் கொண்டு வந்தவர்களால் ஒன்றும் சொல்லமுடியாத அளவிற்கு அங்கே தூய்மை பேணப்பட்டது..
இரண்டு நாள்களுக்கு முன் நேரில் வந்த அந்த இரண்டு மருத்துவர்கள்.. காய்ச்சலுக்கான மருத்துவம் பார்த்ததோடு.. நீண்ட நேரம் குழந்தைகளோடு தங்கள் நேரத்தைச் செலவிட்டார்களே.. இப்போது இத்தனைப் பெரிய கூட்டம் வந்ததற்கு அவர்கள்தான் காரணமாக இருக்க வேண்டும்.. என்று அந்தோணி சாருக்கு தோன்றியது.
சில வருடங்களுக்கு முன் தீபாவளி என்றால் குழந்தைகள் குதூகலத்தோடு காத்திருக்கும்.. ஊரில் உள்ள ரோட்டரி லயன்ஸ் கிளப் என்று யாராவது பட்டாசுகள்கூட கொண்டுவந்து குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களோடு சற்று நேரம் தீபாவளி கொண்டாடி புகைபடம் எடுத்துக் கொள்வார்கள்..
‘இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவது மிக கடினம்’ என்று மங்கை மேடம் அறிவித்தபோது அதுகுறித்து குழந்தைகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. காரணம் கடும் காய்ச்சலில் இருந்து அந்தோணி சாரும் ஏனைய தம் மூன்று சகாக்களும் எழுந்து உட்கார்ந்தால் போதும் என்பதுதான் அவர்களுடைய பிரார்த்தனையாக இருந்தது.
அந்தோணி சார் இப்போதும் கடைபிடிக்கும் மிகச் சிறப்பான காந்திய சிந்தனை எனும் காலை வழிபாடு நிகழ்ச்சி.. ஏனோ இரண்டு நாள்களாக மகாத்மா காந்தி தீபாவளி பற்றி என்ன கருத்து சொன்னார் என்பது குறித்தே அமைந்திருந்தது.. ‘ஒரே ஒரு விளக்கை ஏற்றுங்கள்.. தீண்டாமை.. மதவெறி எனும் இருளை அப்புறப்படுத்தும் ஒற்றை விளக்கு.. அது நிரந்தரமாக எரியட்டும்’ காந்திய சிந்தனையை நெஞ்சிலே வைத்துக்கொண்டு எப்படி கண்ணை மூடி காந்திய வழியில் மௌன தியானம் செய்யவேண்டும்.. என்பதோடு காந்தியின் பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை இணைந்து பாடுவதிலும் அந்தக் குழந்தைகளுக்கு இணை இல்லை.
‘பட்டாசு வேண்டாம்.. துணிமணிகள் வேண்டாம்.. இனிப்பு வேண்டாம் எல்லாம் சரி ஒரு விளக்கு வேண்டாமா’ என்றாள் அகல் விளக்கு வெளிச்சத்தில் ஒரு நாள் உதயா.
‘மின்சாரம் இல்லாத வீட்டில் விளக்கு எரிய வேண்டுமென்றால் அது அகல் விளக்கு தான்’ என்று பலரும் குரல் கொடுத்தார்கள்.
‘மின்சாரம் வேண்டாம் எண்ணெய் வேண்டாம் எதுவும் வேண்டாம்.. ஒரு விளக்கை எரியவைத்துக் காட்டட்டுமா.. எங்களால் முடியும்?’ கிறிஸ்டினா மேரி சவால் விட்டாள்.
இப்படித்தான் அது தொடங்கியது.. அவர்களுடைய இல்லத்தில் ஒரு பழைய மரப்பெட்டி இருந்தது அதில் மிகச் சிறிய பித்தளை விளக்கு இருந்தது.. ‘இது போதும்’ உதயாவும் மேரியும் கூவினார்கள்.
பழைய ரேடியோ உடைந்த ஸ்பீக்கர் பழுதடைந்த பேனாக்கள் எப்போதும் விளையாடப் பயன்படும் காந்த துண்டுகள் சைக்கிள் டைனமோ இவையெல்லாம் உதயாவின் பொக்கிஷங்கள்..
அந்தோணி சார் பயன்படுத்தும் இருசக்கர மிகச்சிறிய வாகனம் கிறிஸ்டினா மேரியின்.. ஆய்வுக் கருவி.. அவர்கள் இருவரும் அடிக்காத லூட்டி கிடையாது.. நடுவில் ஏதாவது உதவிக்கு என்று அல்லது சிறு நிகழ்ச்சி பிறந்த நாள் என்று இவர்களிடம் உணவு கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வருபவர்களின் வண்டிகளைக் கூட விட்டு வைக்க மாட்டாள் கிறிஸ்டினா மேரி.. எவ்வளவு மைலேஜ் தருகிறது என்று தொடங்கி பல வகையாக அவர்களைத் துளைத்து எடுத்து ஏதாவது ஒன்றைச் சொல்லி அட்ஜஸ்ட்மெண்ட் செய்யத் தொடங்கிவிடுவாள்.
உணவு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் அடுப்பு முதல் அங்கிருக்கும் அனைத்து வகையான கருவிகளையும் கழட்டிப் போட்டு எல்லாவற்றையும் துடைத்து மாட்டுவதில் உதயாவுக்கு இணை உதயா தான்.. வெறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான இவர்கள் இருவரும் அங்கு இருப்பதால் எது பழுதடைந்தாலும் வெளியில் இருந்து மெக்கானிக் யாரையும் அழைக்க வேண்டிய அவசியமே ஆசிரமத்திற்கு ஏற்பட்டதில்லை.
ஆனால் மங்கை மேடம் கவலைப்படும் அளவிற்கு சில சமயம் நிலைமை எல்லை மீறிப் போய்விடும்.. ஊருக்குள் இருந்து யார் யாரோ வந்து அவர்கள் வீட்டின் பழுதடைந்த எலக்ட்ரானிக் சாதனங்களை உதயாவிடம் கொடுத்து ரிப்பேர் செய்து வாங்கிக் கொண்டு போவதைப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாக இருக்கும்.. எவ்வளவு மறுத்தாலும் எப்படியோ அவர்கள் கொஞ்சம் பணம் உதயாவிடம் கொடுத்து விட்டுப் போவார்கள்.. உடனே அதை மங்கை மேடத்திடம் ஒப்படைத்து விடுவாள் உதயா.
திடீர் திடீரென்று காணாமல் போய்... பக்கத்து ராவுத்தர் மெக்கானிக் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் கண்டுபிடிக்கப்படுவாள் கிறிஸ்டினா மேரி.. ‘இவ்வளவு அழுக்கு செய்து கொண்டு வந்தால்.. பார் சோப்பு வீணாகிறது’ என்பது மங்கை மேடமின் கவலை. சோப்புக்கட்டி தீர்ந்து போனால் அந்த மாதத்தில் வாங்க முடிய வேண்டுமே.. எனவே தான் கவலை.
அவர்கள் இருவருமாக இணைந்து தீபாவளிக்கு ஒளியேற்றுவது என்று முடிவு செய்தார்கள் என்பது ஆரம்பத்தில் யாருக்குமே தெரியாது... செப்புக் கம்பிகள்... பழைய உடைந்த மின்விசிறியில் இருந்து கழட்டப்பட்ட மின் மோட்டார் உதிரி பாகங்கள்... காயில் கம்பிகள்... ஏதோ ஒரு வாகனத்திலிருந்து கழட்டி வரப்பட்ட எல்இடி பல்புகள் என்று சில பொருட்கள் கண்ணில் பட்டன. இப்போது எவ்வளவு பெரிய கூட்டம் கூடிவிட்டது.
‘இந்த விளக்கை ஒளிர வைத்ததாவது யார் என்று சொல்கிறீர்களா ப்ளீஸ்’ முனைவர் சேஷாத்திரி கெஞ்சத் தொடங்கினார்.. ‘பாதி தீபாவளியில் கிளம்பி உங்களைப் பார்க்க வந்துவிட்டோம்..’ என்றார் பிறகு.. ‘போனவாரம் உங்களைப் பார்க்க வந்த டாக்டர் சுலோச்சனா என் மகள்தான்’
அவர் சொன்னபோதுதான் வந்திருந்த விஞ்ஞானிகளில் 2….3 பேர் தங்கள் கைக்கடிகாரத்தை பரிசோதித்தார்கள்.. இரவு மணி ஒன்பதரை ஆகியிருந்தது.
விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. குழந்தைகளின் பார்வையோ இன்னமும் தங்களுக்கு வாங்கி வரப்பட்ட பொருட்களின் மீதே இருந்தன.. மூன்று விஞ்ஞானிகள் விளக்கைச் சுற்றி சுற்றி வந்தார்கள்..
மின்சார இணைப்பு இல்லை.. சோலார் இல்லை.. ஒருவேளை வீட்டிற்கு வழங்கப்படும் உணவு சிலிண்டரை பயன்படுத்தி இருப்பார்களா என்றால் அதுவுமில்லை எண்ணெய் ஊற்றப்படவில்லை வேறு ஏதாவது ஒரு வாயு விளக்காக இருக்குமா என்றால் அதுவும் இல்லை.. எல்இடி பல்புகள் பிரகாசமாக எரிகின்றன. அறையே பிரகாசமாக இருக்குமாறு விளக்குகள் எரிகின்றன.. மேசைக்கு அடியில் ஒரு தரை விரிப்பு அதற்கு அடியில் என்ன என்று தேடுவதில் தான் அந்தக் கூட்டத்தின் ஆர்வமே இருந்தது.
‘இந்த விளக்கு எப்படி எரிகிறது சொல்லுங்கள் ப்ளீஸ்’ அடுத்தடுத்து குரல்கள் வரவே அந்தோணி சார் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.
மேரி மேடம் உதயாவின் தோள்களை தொட்டார்... கிறிஸ்டினா மேரி புன்னகைத்தாள்.
‘இன்னும் இரண்டு நாள்கள் கழித்து நீங்கள் வந்தால் இன்னொரு விளக்கு அந்த அறையில் எரிந்து கொண்டிருக்கும்’ என்றான் இஸ்மாயில். இருப்பவர்களிலேயே கடைக்குட்டி அவன்தான். அப்பா அம்மா இருவரையுமே ஒரு விபத்தில் பறிகொடுத்த அவலக்குழந்தை.
பெண் விஞ்ஞானி ஒருவர் எல்லா குழந்தைகளுக்கும் பை நிறைய தான் கொண்டு வந்திருந்த இனிப்பு பூந்தியை கைநிறைய எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். உதயாவின் அருகே வந்தபோது அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள் உதயா.
‘இந்த விளக்கை இங்கே எரிய வைத்துக்கொண்டிருப்பது மின்சாரம் அல்ல சூரியன் அல்ல வாயு அல்ல.. பூமிதான்’ என்றாள் உதயா
‘ஏனென்றால் பூமி எங்களிடம் மின்சார பில் கேட்கப் போவதில்லை’ கிறிஸ்டினா மேரி சிரித்தாள்.
அனைத்து விஞ்ஞானிகளும் எழுந்து நின்றார்கள்.. அவர்களுக்குக் கடைசியாக புதிர் விடுபடுவது போல் இருந்தது. சுற்றிலும் உட்கார்ந்திருந்த குழந்தைகளிடமிருந்து இரண்டு காந்தத் துண்டுகள் வந்து நடுவில் விழுந்தன.
‘இந்த பூமி ஒரு பிரமாண்ட காந்தம். காந்தப்புல மாற்றத்தைச் சிறிது சிறிதாக சேகரித்து இந்த விளக்கை ஏறிய வைத்திருக்கிறோம்..’ உதயா விவரிக்கத் தொடங்கினாள்.
‘பூமி என்கிற காந்தப்புலத்தை ஆற்றலாகப் பயன்படுத்த முடியும் என்று இதுவரை ஏன் மனிதர்கள் நினைக்கவில்லை.. வானத்திலிருந்து சூரிய மின்சாரத்தையும் காற்றிலிருந்து காற்றாலை மின்சாரத்தையும் பூமிக்கு அடியிலிருந்து எப்போதுமே புதைபடிவ எண்ணெய்களையும் எடுத்துக் கொண்டிருக்கும் மனிதன் பூமித்தாய் தன்னகத்தே கொண்டிருக்கும் காந்தப்புல ஆற்றலை நினைக்கவே இல்லை. மின்சாரமின்றி விளக்குகளின்றி நாங்கள் கதறியபொழுது எங்களுக்கு பூமித்தாய் தன்னுடைய ஆற்றலை கொடுத்து உதவியிருக்கிறாள். பூமிக்கு அடியாழத்தில் இருந்து வரும் ஆற்றல்...’ கிறிஸ்டினா மேரி தொடர்ந்தாள்…
குழந்தைகள் விளக்கிக் கொண்டிருக்க விஞ்ஞானிகளோ பள்ளிக்கூட மாணவர்களைப் போலக் குறிப்பிடுத்துக் கொண்டிருந்தார்கள்..
‘பூமிக்கு அடியில் இருந்தா எப்படி சாத்தியம்?’ நீல நிற சட்டை அணிந்திருந்த ஒருவர் ஏறக்குறைய அலறினார்.
‘ நாங்கள் எங்கள் இல்லத்திற்காக போடப்பட்ட போர் கனெக்சனைப் பயன்படுத்திக் கொண்டோம்... அதுதான் தரைவிரிப்புக்கு அடியில் உள்ளது... பூமியைச் சுற்றி காந்தப்புலம் உள்ளது. ஆனால் இந்த காந்தப்புலம் மட்டும் ஒரு கம்பிச் சுருளில் தொடர்ந்து மின்சாரத்தை வழங்கிவிடாது. பழைய மின்மோட்டாரிலிருந்து எடுத்த செம்புக்கம்பியைச் சுற்றி ஒரு சுருளை நான் உருவாக்க வேண்டும். காந்தப்புலம் மாறும்போது சுருளில் மிகச் சிறிய மின்னழுத்தம் உருவாகும். இதுதான் மின்காந்தத் தூண்டல்..’ தீபாவளி பூத்திரி போல சடசட என்று பொறிந்தாள் உதயா.
‘இந்த சிறிய ஆற்றலை ஒரு மின்னணுச் சுற்று மூலம் சேமிப்புக் கருவியில் நாம் சேகரிக்க வேண்டும். உண்மையான கருவியில் ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பதையும் அது எவ்வளவு கிடைக்கிறது என்பதையும் அளவிட வேண்டும். சேமித்த ஆற்றல் போதுமான அளவு சேர்ந்ததும் ஒரு சிறிய எல்இடி விளக்கு எரியும். கடந்த 80 நாள்களாக நாங்கள் சேமித்த மின்சாரம் பூமிக்கு அடியில் இருந்து வந்த காந்த மின்சார தொகுப்பு’ கிறிஸ்டினா மேரி ஒரு சரவேடியைத் தூக்கிப் போட்டாள்.
பிறகு இருவருமாக இணைந்து முழுமையாக விளக்குவதற்கு அரை மணி நேரத்திற்கும்m மேல் ஆகிவிட்டது.
இப்போது சேஷாத்ரி எழுந்தார்.. ‘அற்புதம் மிக அற்புதம்’ என்றார்.. ‘நீங்கள் முடிவில்லாத மின்சாரத்தை நோக்கி இந்த உலகத்தைத் திசை திருப்புகிறீர்கள் மிக அற்புதம்.. மிக சிறிய அளவில் கிடைக்கும் ஆற்றலை சேகரித்து நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தும் புதிய உத்தி ஒன்றை எங்களுக்கு காட்டியிருக்கிறீர்கள்.. இது முழுமையான கண்டுபிடிப்பு அல்ல என்றாலும் ஒரு முக்கிய திருப்பம்; தொடக்கம் அதை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். துன்பம் ஒன்று வரும்போது அது குறித்து புலம்பிக் கொண்டிருக்காமல் தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தீர்களே.. அதுதான் அறிவியல் பகுத்தறிவு சிந்தனை.. நீங்கள் தீபாவளி குழந்தைகள் அல்ல; புதிய மின்சாரத்தின் குழந்தைகள்’ உணர்ச்சிப்பூர்வமான அவருடைய குரல் இல்லத்தை நிறைத்தது கூடவே..
‘கவலைப்படாதீர்கள் இனி உங்கள் இல்லத்தில் என்றென்றும் மின்சாரம் நிலைக்கும்’ என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
பிறகு ஒவ்வொரு விஞ்ஞானியும் என்ன பேசினார்கள் என்பதில் பாதிக்குமேல் குழந்தைகளுக்குப் புரியவில்லை. ஆனால் இறுதியாக 1000 வாலா வெடி போல கரவொலியில் கஸ்தூாிபா இல்லமே அதிர்ந்தபோது... டப்... ஏய்… அனைத்து விளக்குகளும் எரிய அந்த ஆசிரமத்திற்கு மின்சாரம் திரும்பியிருந்தது.