எங்க அண்ணனும் உங்க அண்ணனும்

enga annanum unga annanum
ஓவியம்: பி.ஆர். ராஜன்
Published on

முப்பிடாதி அம்மன் கோவிலில் வாசலில் தன் கால் செருப்பைக் கழட்டிப் போட்ட முத்துமாரிக்கு பின்னால் வந்து நின்ற வண்டியின் சத்தம் பழக்கமானதாகத் தோன்றியது. தலையைத் திருப்பிப் பார்த்தாள். வடகாசியை இறக்கி விட்டுவிட்டு அவளுடைய கணவன் திரும்பிப் போவது தெரிந்தது.

"ஏ மயினி! பார்த்து எம்புட்டு நாளாச்சு? எப்படி இருக்கீக? என்ன எங்க அண்ணே வெரசா எங்க போறாக? நின்னு பேசக்கூட நேரமில்லையாக்கும்?" என்று தூரத்து உறவில் அண்ணி முறையான வடகாசியை வாயார வரவேற்றாள் முத்துமாரி.

"உங்க அண்ணே எப்பவும் அப்படித்தானே! கால்ல வென்னிய கொட்டிக்கிட்டு அலைவாக.. நீ என்ன இப்படி மெலிஞ்சு போய் இருக்கே? எங்க அண்ணன் உன்னை ஒழுங்கா கவனிக்கலயா?" என்றபடி முத்துமாரியின் செருப்பை ஒட்டியே தன் செருப்பையும் கழற்றிப் போட்டாள் வடகாசி.

"உங்க அண்ணனைப் பத்தித் தெரியாதா? அவுகளுக்கு வேலையைக் கட்டிக்கிட்டு அழவே நேரம் பத்தாது. என்னமோ கடையே இவுக தலைல தான் ஓடுற மாதிரி நினைப்பு. ஒம்போது மணிக்குக் கடையைத் திறக்குறதுக்கு எட்டு மணிக்கே வீட்டை விட்டுப் போயிருவாக"

"என்ன அப்படி சொல்லிட்ட! எங்க அண்ணன் அப்படிப் பாடு பார்த்துத் தானே உன்னைத் தங்கமா இளைச்சிருக்காக. கைல கூட வளையல் புதுசா மின்னுது போல" என்ற வடகாசி முத்துமாரியின் பதிலை எதிர்பார்க்காமல் குனிந்து பயபக்தியுடன் கோவில் வாசலின் நிலைப்படியைத் தொட்டு கும்பிட்டுவிட்டு, படியில் கால் படாமல் லாவகமாகத் தாண்டி உள்ளே சென்றாள்.

"நீங்க தான் மெச்சிக்கிடணும் உங்க அண்ணனை. இது எங்க அம்மா எனக்குக் கல்யாணத்துல போட்ட வளையலு. மூணு தரம் மாத்திட்டேன். நாலாவதா இப்ப இது. நகைக்கடையையே காத்துக் கிடந்தாலும் நகையைத் தூக்கி சும்மாவா தாராக உங்க அண்ணனுக்கு?" என்றாள் முத்துமாரி சலிப்புடன்.

"என்னதான் பழைய நகையை மாத்தினாலும் கூலி, சேதாரம் கூடக் கொஞ்சம் தங்கம்னு எங்க அண்ணன் தானே செலவழிக்கணும். பளபளன்னு போட்டுகிட்டு சுத்தும் போது பெருமையா இருக்குல்ல உனக்கு? நானும் இருக்கேனே.. சடங்கானப்ப எங்க ஆச்சி போட்ட வளையலு.. உங்க அண்ணன் ஒத்த கொலுசு வாங்கி தந்துருப்பாகளா? அதை விடு.. ஒரு மூக்குத்தி வாங்கித் தந்திருப்பாகளா? அதே பழைய மூக்குத்தி" என்றபடி தன் மூக்கைக் காட்டினாள் வடகாசி.

"அட! எங்க அண்ணனைச் சொல்லலேன்னா உங்களுக்குத் தூக்கமே வராதே.. எங்க அண்ணன் தான் உங்களுக்கு டைல்ஸ் போட்டு வீடு கட்டிக் குடுத்துருக்காகளே.. பளபளன்னு பாத்ரூம் கூட மின்னுதே உங்க வீட்ல" தன் வீட்டில் நாற்பது ஐம்பது அடி பின்பக்கமாக நடந்து போய் கழிப்பறைக்குச் செல்ல வேண்டி இருப்பதன் சிரமத்தைச் சொல்லாமல் சொன்னாள் முத்துமாரி.

"நீ வேற! வீட்டை எடுத்து கழுத்துல போட்டுட்டா திரிய முடியும்? செயின் வளையல்னு இருந்தாத் தானே நம்ம பவுசை நாலு பேருக்குக் காட்டலாம்"

"மயினீ… சைடு காது குத்துனீங்களே.. அதுக்கு ஒரு தோடு.. அப்புறம் பெரிய தோட்டுக்கும் சின்ன தோட்டக்கும் நடுவுல ஒரு மாட்டல். இதெல்லாம் எங்க அண்ணன் தானே வாங்கித் தந்தாக?"

"எங்க? பலசரக்குச் சாமான் லிஸ்ட் கொடுத்து நாலு நாளாச்சு. இன்னும் வாங்கிட்டு வராக உங்க அண்ணன். சைடு காதுக்கு கம்மல் வாங்கிக் குடுத்தா அடுப்பு எரிஞ்சிருமா? இப்ப நான் தான்.. போதும்யா நீரு வாங்கினது.. நானே பார்த்துக்குறேன்னு லிஸ்ட் வாங்கிட்டு வந்தேன். நேரம் இருந்தா வாறியா? கோயிலை முடிச்சுட்டு கடைக்குப் போவோம்?"

பேச்சு வாக்கில் இரண்டு பெண்களும் கோவிலின் இடது புறமாக இருந்த பிள்ளையாரின் அருகில் வந்திருந்தனர். தன்னிச்சையாக வடகாசியின் கைகள் நெற்றியின் இரு பக்கமும் பயணித்து பிள்ளையார் குட்டு குட்ட, அதே அனிச்சைச் செயலாக முத்துமாரி காதுகளைப் பிடித்துக் கொண்டு மூன்று தோப்புக்கரணங்களைப் போட்டாள்.

"உங்களுக்காவது லிஸ்ட்ட குடு வாங்கிட்டு வரேன்னு சொல்றாரே எங்க அண்ணன். உங்க அண்ணன் இருக்காகளே.. எனக்கு இதெல்லாம் பார்த்து வாங்கத் தெரியாது. ஆயிரம் குறை சொல்லுவ. நீயே வாங்கிக்கோன்னு ரூவாயை நீட்டிட்டுப் போயிருவாக. அவுகளுக்கு என்னமோ இந்தப் புள்ளையாரை மாதிரி இன்னும் பிரம்மச்சாரியாவே இருக்கதா நினைப்பு.. இவரை மாதிரியே புடிச்சு வச்சாப் போல இருக்காக" கணவனுடன் சேர்த்து பிள்ளையாரையும் அர்ச்சித்தாள் முத்துமாரி.

அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு அப்படியே அடுத்திருந்த நவகிரக சந்நிதிக்குச் சென்றார்கள் பெண்கள் இருவரும். "கையில காசைக் குடுத்து செலவழிச்சுக்கோன்னு சொல்றதுக்கும் ஒரு மனசு வேணுமே.. எங்க அண்ணன் ஐநூறு ஆயிரம்னு உன்ட்ட நீட்டுறதை பார்த்திருக்கிறேனே.. உங்க அண்ணன் தொட்ட தொண்ணூறுக்கும் கணக்கு கேப்பாக.. அன்னிக்கு பலசரக்குக்கு எழுநூறு ரூபாய் தானே ஆச்சுன்னு போன ஜென்மத்துல வாங்குன கதையை ஞாபகம் வச்சுக்கிட்டு கேப்பாக.. விலைவாசி என்ன அப்படியேவா இருக்கு? உங்க அண்ணன் தலை வழுக்கை மாதிரி ஏறிக்கிட்டேல்லா போகுது?" தன் நகைச்சுவையை நினைத்துத் தானே சிரித்தவாறு நவகிரகத்தை நோக்கி ஒரு வணக்கத்தைப் போட்டாள் வடகாசி.

"ஏன் மயினீ.. கோயிலை விட்டு வெளியே வர்ற இடத்துல தானே நவகிரகம் வைப்பாக? நம்ம கோயில்ல மட்டும் ஏன் அது இங்கனேயே இருக்கு?" என்று முத்துமாரி கேட்க,

"அது என்னமோ இந்த வாஸ்து எல்லாம் நமக்கு எங்க தெரியுது? அதது இருக்கிற இடத்துல நின்னு கும்பிடு போட்டுக்கிட வேண்டியது தான், ஒரு சுத்து சுத்திக்கிட வேண்டியது தான்.. எங்க அண்ணனை நீ தினமும் சுத்திச் சுத்தி வாறியே.. அதே மாதிரி நவகிரகத்தையும் சுத்து.. நல்லதே நடக்கும்" என்று வடகாசி சொல்ல,

"சே.. போங்க மயினீ.. கோயில்ல வச்சு பேசுத பேச்சைப் பாரு. நீங்க எங்க அண்ணனை சுத்தாமத் தான் நாலு புள்ள பெத்து வச்சிருக்கீகளோ" என்றாள் முத்துமாரி வெட்கத்துடன்.

நவகிரகம் சுற்றி முடிக்கையில் "முத்துமாரியக்கா! சேலை புதுசா? என் மகள் கிட்ட சொல்லிக்கிட்டே வந்தேன்.. வெள்ளி செவ்வாய்னா முத்துமாரி அக்கா ஒண்ணு மஞ்சச் சேலை கட்டும், இல்ல.. சிகப்புச் சேலை கட்டும் அப்படின்னு.. சொன்ன மாதிரியே மங்களகரமா நிக்கீக.." என்று போகிற போக்கில் ஒரு பாராட்டு வழங்கி விட்டுச் சென்றாள், முன்பு முத்துமாரி குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் வசித்த காளியம்மாள்.

"ஆயிரம் குறை சொல்லுதியே மாரி எங்க அண்ணனை.. சேலை துணிமணிக்கு என்னைக்காவது குறை வச்சிருக்காரா?" தன் அண்ணன் புராணத்தைப் பெருமையாகப் பாடினாள் வடகாசி.

"ஏன் எங்க அண்ணனும் தான் உங்களுக்கு வாங்கி வாங்கிப் போடுதாகளே..? போன தீவாளிக்கு நீங்க கட்டியிருந்த வாடாமல்லி கலர் சேலையை ஊரே ஆன்னு பாத்துச்சு.. ஜவுளி எடுக்க என்னைக்காவது ஆரெம்கேவி போத்தீஸுன்னு எங்களைக் கூட்டிட்டு போயிருப்பாகளா உங்க அண்ணே? எங்களுக்கு வாச்சது கணபதி கடை தான். மிஞ்சிப் போனா இப்ப ரெண்டு மூணு வருசமா கார்த்திகா சில்க்ஸு, விகாஸு.."

துர்க்கை அம்மன் சன்னதி நெருங்கியிருக்க பயபக்தியுடன் தான் கொண்டு வந்திருந்த கூடையைக் கீழே வைத்தாள் முத்துமாரி.

"நல்ல பரும் எலுமிச்சம்பழமா இருக்கே? எனக்கு பொடிப் பழத்தைக் குடுத்து ஏமாத்திப்புட்டான் கடைக்காரன்.. உங்க அண்ணன் தினமும் வசூலுக்கு புளியங்குடி பக்கமாத் தான் போறாங்க.. அங்கனெ எங்கேயாவது ஒரு தோட்டத்துல நல்ல பழமா கிடைக்கும்.. வாங்கிட்டு வாங்கன்னா காதுல வாங்குதாங்களா?" வடகாசி இன்னும் தன் கணவனைச் சாடுவதை நிறுத்திய பாடாக இல்லை.

"எலுமிச்சம் பழம் வாங்கிட்டு வரலைன்னா என்ன? கறி வாங்குறதுக்கு எங்க அண்ணன்கிட்ட தானே பாடம் படிக்கணும்.. அவுகளை மாதிரி குழம்பு வைக்க தனியா எலும்புக் கறி.. பிரியாணிக்குத் தனியா, வறுவலுக்குத் தனியான்னு அழகா பிரிச்சு, நல்ல இளங்கறியா வாங்க முடியுமா? உங்க அண்ணனையே, 'ஏங்க! நம்ம வடகாசி மயினி வீட்டு அண்ணன் கூடப் போய் கறி வாங்குங்க.. போங்க'ன்னு தான் தீவாளிக்கு தீவாளி வெரட்டி விடுவேன்" என்ற முத்துமாரி கீழே அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த எலுமிச்சையை இரண்டாக நறுக்கிக் கீழே வைத்தாள். பின் அம்மனை வேண்டிக்கொண்டு இரண்டு பகுதிகளையும் வட்டவடிவில் தரையில் பிழிந்து விட்டாள்.

கையுடன் கொண்டு வந்திருந்த குங்கும மறவையிலிருந்து குங்குமத்தைக் கையில் கொட்டி, பிழிந்து விட்ட எலுமிச்சைச் சாற்றின் மேல் இரண்டு முக்கோணங்களை நட்சத்திரம் போல் வரைந்தாள்.

"நீயும் ஏழெட்டு மாசமா எலுமிச்சம் பழத்தில் விளக்கு போடுதே.. எதுவும் நல்ல செய்தி வந்துச்சா? மக எதுவும் முழுகாம இருக்காளா?" வடகாசி இவ்வளவு நேரமாகத் தொண்டையை அழுத்திக் கொண்டிருந்த கேள்வியை வெளியில் விட,

"அதை ஏன் கேக்கீக மயினி? கல்யாணம் முடிஞ்சு வருஷம் மூணு ஆச்சு. எல்லா டாக்டரும் என் மக, மருமகன் கிட்ட ஒரு குறையும் இல்லைன்னுட்டாங்க.. நல்லா ஜாதகம் பார்த்தீங்களா.. மாப்பிள்ளைக்கு பிள்ளை யோகம் இருக்கான்னு நாலு பேர் கேக்கையில என்னமோன்னு இருக்கு! உங்க அண்ணன் எதைத்தான் உருப்படியா பாத்தாக? இடைகால்ல யாரோ நல்லா ஜோசியம் சொல்லுதாங்களாம். போய் ஜாதகம் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னா இங்க எங்கேயோ லோக்கல்லையே கம்ப்யூட்டர் ஜாதகம்னு வேலையை முடிச்சாச்சு. அவுக அலைய சோம்பேறித்தனப் பட்டதுக்கு நான் கோயில் கோயிலா சுத்துதேன்.. பாப்போம்! முப்பிடாதி ஆத்தா நமக்கு என்ன வச்சிருக்கான்னு" என்று பிழிந்த எலுமிச்சம் பழத்தோட்டை வெளிப்புறமாகத் திருப்பி எண்ணெய் விட்டு, திரியை வைத்து விளக்கை ஏற்றினாள் முத்துமாரி.

"உனக்கு ஜாதகம் பார்க்காம பிரச்சனைன்னா எனக்கு நூறு ஜாதகம் பார்த்து கூட்டிட்டு வந்த மருமகளோட பிரச்சனை. தனியாத்தான் போகணும்னு நிக்கா. கழுதையை.. போகட்டும் விடுங்கன்னு சொன்னா உங்க அண்ணன் விட மாட்டேங்காக. நான் மண்டையப் போடுற வரைக்கும் ஒண்ணாத் தான் இருக்கணும்காக.. உனக்குத் தெரியாதா உங்கண்ணன் பிடிவாதம்" என்றவாறு முத்துமாரியுடன் சேர்ந்து தானும் துர்க்கை அம்மன் எதிரில் விழுந்து எழுந்தாள் வடகாசி.

வெளிப்பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டு மெதுவே முப்பிடாதி அம்மனுக்கு இடது புறமாக இருவரும் வர, "எக்கா எக்கா! அபிஷேகம் ஆகப்போகுது சீக்கிரம் வாங்க!" என்று இருவரையும் அழைத்தாள் அம்மனுக்கு அருகில் நின்றிருந்த காளியம்மாள்.

இருவரும் விரைந்து செல்லவும் அபிஷேகம் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. கண் குளிர அபிஷேகத்தை பார்த்து முடித்தவுடன் அலங்காரம் செய்வதற்காக திரை போடப்பட, "அங்கன வா! செத்த உட்காருவோம். காலையிலேயே எந்திரிச்சது காலெல்லாம் வலிக்கி" என்று முத்துமாரியை பக்கவாட்டில் நிழலாக இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றாள் வடகாசி. அங்கு புதிதாக ஒரு பலகை வைக்கப்பட்டு ஏதோ எழுதப்பட்டிருந்தது.

"மயினி! இங்கே பாருங்களேன்.. உங்க அண்ணன் வேலை பார்க்காகல்ல.. அந்தக் கடையோட முதலாளி தான் இந்த போர்டு வச்சிருக்காக.. இதை படிச்சா புண்ணியமாம்.. நானும் அப்பப்ப வரும்போது படித்துக்கிடுவேன்" என்றபடி அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களின் மேல் பார்வையை ஓட்டினாள் முத்துமாரி.

வடகாசியும் படிக்கத் துவங்கினாள். "முப்பிடாதி அம்மன் வரலாறு" என்றிருந்தது அந்தப் பலகையில். தொடர்ந்து, "ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமான் கண்களைத் திறந்து கொண்டே தியானத்தில் அமர்ந்திருக்க, விநாயகர் தன் தாயான பார்வதி தேவியிடம், 'தாயே! ஏன் தந்தை கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்கிறார்?' என்று கேட்டிருக்கிறார். ஈசன் கண்ணை மூடினால் அண்ட சராசரங்களும் இருட்டாகிவிடும். அதனால் தான் ஈசன் எப்பொழுதும் கண் திறந்தே இருக்கிறார் என்று பதில் உரைத்தார் பார்வதி தேவி. 'நான் ஒரு முறை கண்ணை மூடிப் பார்க்கட்டுமா? என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன்' என்று விளையாட்டாய்க் கேட்டார் முருகப்பெருமான். நீ மூட வேண்டாம் நானே மூடுகிறேன் என்று சிவபெருமானுக்கு பின்னால் சென்ற பார்வதி தேவி, பின்புறம் இருந்து ஈசனின் இரண்டு கண்களையும் மறைத்தார். ஈரேழு உலகங்களும் இருட்டாகி விட்டன. பதறிப்போய் கையை எடுத்து விட்டார் பார்வதி தேவி. தியானம் கலைந்த சிவபெருமானுக்குக் கோபமான கோபம். ஏன் இப்படிச் செய்தாய்? என்று கோபத்துடன் கேட்க, பார்வதி தேவி அங்கிருந்து எழுந்து செல்லப் பார்த்தார். ஈசனுக்கு இன்னும் கோபம் வந்தது. 'நில்!' என்றவர் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து வெளிவந்த நெருப்புக்கங்குகளின் வெப்பத்தால் பார்வதி தேவியின் உடல் எட்டு துண்டுகளாக ஆனது. இந்த நிலையில் பூமியில் நாக கன்னிகை ஒருத்தி குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து வந்தாள். அந்த நாக கன்னிகையின் முன் தோன்றிய சிவபெருமான், தேவியின் உடலின் எட்டு துண்டுகளையும் முட்டைகளாக்கி நாககன்னியிடம் கொடுத்து அடைகாக்கச் சொன்னார். அடுத்த நான்காம் நாள் அதிலிருந்து எட்டு தேவியரின் வடிவங்கள் வெளிவந்தன. மூன்றாவது வடிவம் மூன்று தலைகளுடன் இருந்தது அதுவே (மூன்று பிடாரி) முப்பிடாரி என்று பெயர் பெற்றது. இந்த எட்டு தேவியரும் வளர்ந்து பின்னாளில் ஒரே உருவம் எடுத்து, பூமியில் அட்டகாசங்கள் செய்து கொண்டிருந்த மகிஷன் என்ற அரக்கனை வாதம் செய்து மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் எடுத்தனர்.

திரிபுரங்களான இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகிய நகரங்களை ஆண்ட அசுரர்களைக் காப்பதாலும் முப்புராரி என்று பெயர் பெற்றார் அம்மை. அதுவே மருவி முப்பிடாதி என்று ஆனதாகவும் கூறப்படுகிறது" என்றும் அந்தப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

இருவரும் பொறுமையாக இதைப் படித்து முடிக்கவும் அலங்காரம் முடிந்ததற்கான அறிகுறி கேட்கவும் சரியாக இருந்தது. இருவரும் சன்னதியை நோக்கி விரைந்தனர். தீப ஆராதனை காட்டி பூஜையும் நிறைவாக முடிந்தது. யாரோ வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்ததால் அங்கே பிரசாதமாய் சர்க்கரைப் பொங்கல் வழங்கப் பட, அதற்கான வரிசையில் நின்றனர் வடகாசியும் முத்துமாரியும்.

முத்துமாரி தொன்னையில் தனக்கு வழங்கப்பட்ட சர்க்கரைப் பொங்கலை ரசித்து சாப்பிட்டாள். வடகாசி தன் பங்கை இன்னொரு தொன்னையால் மூடி, தான் கொண்டு வந்திருந்த கூடைக்குள் பத்திரமாக வைத்தபடி,

"உங்க அண்ணனுக்கு சர்க்கரைப் பொங்கல்னா ரொம்பப் பிடிக்கும்.. அவுக தான் போற இடத்துல நம்மள மறந்துருதாக.. நமக்கு மனசு கேக்கா.. அதான் எடுத்து வைக்கேன்" என்றாள்.

"எங்க வீட்டில எனக்கு மட்டும் தான் சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும். உங்க அண்ணனுக்கு மாவிளக்கு தான் பிடிக்கும். தெரியாத ஆள் கிட்ட போய் எப்படி கேட்க? வெக்கமா இருக்கு" என்றாள் முத்துமாரி, சற்றுத் தள்ளி மாவிளக்கிட்டு முடித்து எழுந்த பெண்ணைப் பார்த்து.

"இதுக்கு ஏன் வெட்கப்படுற? இரு நான் வாங்கிட்டு வரேன்" என்ற வடகாசி அந்தப் பெண்மணியின் அருகில் சென்று ஓரிரு வார்த்தைகள் பேசி, "கொஞ்சம் மாவிளக்கு குடுங்க" என்று வாங்கி வந்து முத்துமாரியின் கைகளில் திணித்தாள். "அந்த பொண்ணோட வீட்டுக்காரர் நிறைய கடன் வச்சிருக்காராம். அது கழியணும்னு தான் வேண்டிக்கிட்டு மாவிளக்கு போட்டிருக்கா" என்று கூடுதல் தகவலையும் தந்தாள் வடகாசி.

"அடப் பாவமே! உங்க அண்ணன் அப்படி எல்லாம் ஒத்த பைசா கடன் வைக்க மாட்டாக மயினீ.. பக்கத்து வீட்ல உப்பு, சீனி கடன் வாங்கினாக் கூட சத்தம் போடுவாக. அஞ்சு பைசா வீணா செலவழிக்க மாட்டாகளே.. ரோட்டுக் கடைல ஒரு டீ கூட குடிக்கிற பழக்கம் கிடையாது. இனிப்புன்னா கொஞ்சம் விரும்பி சாப்பிடுவாக.‌ இருந்தாலும் சுகர் இருக்கேன்னு பயமா இருக்கு" என்றபடியே மாவிளக்கு மாவைத் தன் கூடையில் பத்திரப்படுத்தினாள் முத்துமாரி.

"ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது.‌ அதுதான் எங்க அண்ணன் விடாம வாக்கிங் போறாகளே.. மாத்திரையும் போடுதாகளே"

"அது என்னமோ சொல்லுங்க மயினி.. உண்மைதான். பீடியா, சிகரெட்டா, பாக்கா ஒரு கெட்டப் பழக்கம் கிடையாது உங்க அண்ணனுக்கு. ரத வீதியை மூன்று தரம் சுத்தச் சொன்னாலும் சுத்திருவாக.. அவுகளுக்கு எதுவும்னா நமக்கு குலை நடுங்குதுல்ல.. என்ன சொல்லுதீக.."

"அதுவும் சரிதான். போன வாரம் ஒரு நாளு.. லேசா நெஞ்சக் கரிக்குது.. கொஞ்சம் மோர் கரைச்சுக் கொண்டான்னு உங்க அண்ணன் கேட்டாக பாரு.. எனக்கு ஒரு நிமிஷம் நெஞ்சே நின்னுடுச்சு. மோரைக் குடிச்சிட்டு அவங்க ஏப்பம் போடுத வரைக்கும் எனக்கு தொண்டை குழிக்குள்ள என்னமோ நிக்கின்னா பாத்துக்கோ.. அப்பமே இருக்கன்குடிக்குப் போகணும்னு ஒத்த ரூபாய் முடிஞ்சு வச்சுட்டேன். அடுத்த வெள்ளிக்கிழமை எங்க தெருக்காரங்க வேன்ல இருக்கன்குடி போறாங்க. நீ வாரியா?"

"எங்க மயினி.. உங்க அண்ணன் எத்தனை ஊர் சுத்தினாலும் என் கையால சாப்பிட்டா தான் அவங்களுக்கு நிம்மதி. டாண்ணு ஒண்ணரை மணிக்கு, 'மாரீ .. தட்டு எடுத்து வையி' அப்படின்னு வந்துருவாக உங்க அண்ணன்"

"ஆமா.. உங்க அண்ணனுக்கும் தான் வெளிய சாப்பிட்டா ஒத்துக்கிடாது.. நானும் வெள்ளிக்கிழமைன்னு அவியல் சாம்பார் எல்லாம் வச்சுட்டுத் தான் வந்தேன். நான் இல்லைனாலும் அவுகளே போட்டு சாப்பிட்டுக்கிடுவாக.. வயசும் அறுவது ஆச்சு இல்ல..

"அறுவது வயசா ஆச்சு எங்க அண்ணனுக்கு.. வயசு தெரியலையே?" என்று முத்துமாரி மூக்கின் மேல் விரலை வைக்க,

"இந்த ஐப்பசி வந்தா அறுவது முடிஞ்சு அறுவத்தொண்ணு.. அந்தக் காலத்துல அவுக என்னைப் பொண்ணு பாக்க வரையில மாப்பிள்ளைக்கு இருபத்தெட்டு வயசாம், ஆனா இருவது தான் மதிக்கலாம்னு சொந்தக்காரங்க எல்லாரும் சொன்னாங்க" இப்போது வெட்கப்படுவது வடகாசியின் முறையாகிற்று.

"உங்க அண்ணனுக்குமே அப்படித்தான் மயினி.. வழுக்கை விழுந்தாலும் ஒத்த முடி நரைக்கலை.. மத்த ஆளுகளுக்கு எவ்வளவோ பரவாயில்லை"

"சரி வாரேன் கடைக்குப் போயிட்டு வீட்டுக்குப் போகணும்.. அப்பளம் மட்டும் பொரிக்கணும் அப்பளம் இல்லைன்னா சோறு எறங்காது உங்க அண்ணனுக்கு. நாக்குத் தான் நாலடி நீளமாச்சே.." வடகாசி விடை பெற ஆயத்தமாக,

"பார்த்துப் போங்க மயினி. நம்ம கஷ்டத்தை எல்லாம் முப்பிடாதி ஆத்தாட்ட சொல்லியாச்சு.. இனிமே அவ பார்த்துக்கிட‌ மாட்டா?"

மீண்டும் ஒருமுறை முப்பிடாதியை வழிபட்டு தங்கள் செருப்பு பத்திரமாகக் கிடக்கிறதா என பார்ப்பதற்காக வாசலை நோக்கி நடந்தனர் இருவரும்.

கருவறைக்குள் மஞ்சளும் சிவப்பும் கலந்த பட்டில் ஜொலித்தவாறே அருள்பாலித்த முப்பிடாதி குழம்பிப் போயிருந்தாள்.

"இப்ப ரெண்டு பேரும் அவங்கவங்க புருஷனைத் திட்டுனாங்களா.. இல்ல பாராட்டுனாங்களா? நான் என்ன செய்ய? நானே என் புருஷன் என்னை எட்டா பிச்சு போட்டுட்டாரேன்னு கோவம் இன்னும் தீராமக் கிடக்கேன். இதுல இவங்க பஞ்சாயத்து வேறயா?" என்று நினைத்தாள்.

பின் அவளே, "எங்க அண்ணன் கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லி இருக்காரு தெரியுமா.. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுன்னு சொல்லி இருக்காரு.. எது நடக்குமோ அதுவும் நல்லாவே நடக்குமாம்.. அதனால நாம எப்பயும் போல நடக்குறதைப் பார்த்துகிட்டே இருப்போம்" என்றபடி தானும் சிவபெருமானைப் போலவே கண்திறந்து தியானத்தில் ஆழ்ந்தாள் முப்பிடாதி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com