
'எங்கட நினைப்பில் கடல் இல்லை தெரியுந்தானே?" என்றான் அவன், நான்காவது சுற்று மதுவிற்குப் பிறகு. "என்ட நினைப்பிலும். எங்கட அப்பனன்ட நினைப்பிலும். எங்கட தாத்தனன்ட நினைப்பிலும்"
அதுவரை ‘திருப்பத்தூர் லாரி டிரைவர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவனது தமிழ் உச்சரிப்பு இப்போது வேறு மாதிரி இருந்தது.
மேலே மரப்பொந்துகளில் பொதிந்து கொண்டிருந்த ஆந்தைகளின் அலறல் அக்காட்டில் எங்கெங்கோ சென்று எதிரொலித்து வலம் வந்தபடி இருந்தது. அருகே அருவி நீர் வழிந்தோடும் இரைச்சல். பதமான குளிர் உடலைத் தழுவி இருந்தது. பகல் வெயில் சுத்தமாகத் தெரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்னர் வரை வீழும் அந்த அருவியில் மூழ்கி குளித்துவிட்டு வந்தேன். 60 அடி உயரத்தில் இருந்து பொழிந்து கொண்டிருந்தது அருவி. கனத்த நீர் தலையில் விழுந்தபடி இருந்தது. பிறகு எதிரில் அருவி ஏற்படுத்தியிருந்த சிறுகுளம் போலான பள்ளத்தில் விழுந்து நீந்தி கொஞ்ச நேரம் ஊறிவிட்டு வந்தேன். பின்னர் நான் கரை ஏறிப்போய் ஒரு காட்டு மரத்துக்கு கீழிருந்த பாறையின் மேல் முன்னரே அங்கு வைத்துவிட்டு வந்திருந்த என் முதுகுமாட்டு சுமைப்பையைத் திறந்து ஒரு படுதாவை விரித்து அதில் கால் நீட்டி வெற்றுடம்புடன் அப்பாறையில் சரிவாகப் படுத்துக்கொண்டேன். அக்காட்டிலும் அவ்வருவிக்கரையிலும் அப்போது நான் மட்டுமே இருந்தேன். கொண்டு வந்திருந்த மது பாட்டிலைத் திறந்து கிளாசில் ஊற்றி மெதுவாக வானைப் பார்த்தபடி அவ்வப்போது எனக்குத் தோன்றிய பாடலை முணுமுணுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டிருந்தேன். பிறகு தான் சில மணி நேரம் கழித்து இவன் வந்தான். வந்தவனும் அருவிக்குளியல் போட்டுவிட்டு கரை ஏறி என் பக்கமாக வந்தான். அவனும் மதுவருந்த தான் ஒதுங்கி இருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.
"ஒரு ராயல் என்பீல்ட் பைக் பார்த்தேன். அது உங்களோடதா?"
"ஆம்"
"நம்ம லாரியும் அங்க தான் நிறுத்தி இருக்குது. திருப்பத்தூர்லேந்து சோடா பாட்டில் ஏத்திட்டு வந்த லாரி. சிக்கபல்லபூர்ல டெலிவரி கொடுத்துட்டு திரும்ப போயிட்டிருக்கேன். நீங்க?"
"நான் பெங்களூரு. சும்மா பைக்க எடுத்துட்டு ட்ரிப் வந்தேன். அப்பப்ப இப்படி கிளம்பி வருவேன்"
"ஓ.. சரி.. சரி"
எதிரே வேறொரு பாறை பக்கமாக அவன் கைப்பையுடன் ஒதுங்கிப் போனான். "சரக்கு சாப்பிடவா தலைவா? இங்க வாங்க. சேந்து சாப்பிடுவோம். திறந்து வச்சிருக்கேன் பாருங்க ஒரு ஃபுல்லு. ரெண்டு பேரும் சேந்து காலி பண்ணுவோம் வாங்க. உங்க பைய பிரிக்க வேணாம்" என்றேன்.
அவன் ஒரு மாதிரி கூசி நெளிந்தபடி பார்த்தான்.
"அட பரவாயில்லை வாங்க" என்றேன்.
இன்னொரு கிளாஸில் முதலிலேயே கலந்து நிரப்பி வைத்திருந்தேன். அதை எடுத்து அவன் கையில் கொடுத்து அவனை அமர வைத்தேன்.
நாங்கள் இருந்தது ஓர் உலர் இலையுதிர் காடு. ஆந்திர - தமிழக - கர்நாடக - எல்லையில் அமைந்த காப்புக் காடு. ஆந்திர மாநிலம் பலமனேருக்கும் தமிழகத்தின் குடியாத்தத்துக்கும் இடைப்பட்டு விரிந்திருக்கிறது, குட்டை மரங்கள் நிறைந்த இக்காடு. கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தப் பருவகாலத்தில் குட்டை மரங்களின் கிளைகளில் எல்லாம் பசுமை ஏறி அலை அடித்துக்கொண்டிருந்தது. எந்நேரமும் மேகக்குவைகள் மென்சாரலை தூறிவிட்டுப் போகலாம் என்கிற அளவுக்கு அன்று வானிலை அமைந்திருந்தது. நான் பெங்களூருவில் இருந்து இரண்டரை மணிநேரம் பயணப்பட்டு வந்திருந்தேன். அக்காட்டுக்கு இடைப்பட்ட சாலையில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு மூன்று நான்கு கிலோமீட்டர் மலை ஏறி இந்த அருவிக்கரைக்கு வந்திருந்தேன்.
"திருப்பத்தூர்ன்னீங்க ஆனா உச்சரிப்பு வேற மாதிரி இருக்கே இப்போ?"
"ஹாஹா. கண்டுபிடிச்சுட்டீகள். இது உள்ளே போயிருக்கிறது இல்ல. இது உள்ள போயிட்டதென்டால் உள்ளே ஆழ அழுந்திக் கிடக்கறது எல்லாம் வெளியே வாரத் தானே செய்யும்.” என்றான் சிரித்தபடி மதுக்குவளையை தட்டிக் காட்டி. பிறகு தொடர்ந்தான். “திருப்பத்தூரென்டால் திருப்பத்தூர் தான்.. ஆனால் அகதி முகாம். மின்னூர் அகதி முகாம். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்களா? தெரிய இல்லை."
"சாரி. நான் கேள்விப்பட்டதில்லை"
"நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, பட்டதாரி ஆனது எல்லாம் அங்கிருந்து கொண்டு தான். இப்போ ஆகிபோச்சு எனக்கு வயசு நுப்பது."
"ஈழத்திலேந்து இங்கு வந்தவர்களா?"
"ஆமாம். எங்கட தாத்தனண்ட காலத்திலே. எனக்கு இங்கே தான். எனக்கு ஈழமும் தெரியாது. இலங்கையும் தெரியாது."
"ஓ.."
"எங்கட தாத்தன் தமிழகத்துக்கு வந்த மூத்த அகதிகளில ஒருவர். 83, 84 களில் உள்நாட்டுப் போர் மூண்ட போது ராமேஸ்வரம் மண்டபம் கேம்புக்கு என் அப்பா அத்தையுடன் வந்திருந்தது. சில வருடகாலம் அங்கே இருந்தோம். பிறகு திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டோம். அங்கே எங்கட தாத்தன் வயது மூப்பில் இறந்தும் போனார். பிறகு சென்னை காவங்கரை கேம்பிற்கு மாறி வந்தோம். அங்கே எங்கட அப்பன் அம்மையைச் சந்தித்தார். திருமணமும் முடிந்தது. பிறகு வேலை வாய்ப்புகள் தேடி திருப்பத்தூர் கேம்புக்கு வந்தோம். கடந்த 30-35 வருடங்களாக அங்கே தான். நான் அங்கு வந்து தான் பிறந்தனன். பி.ஏ. வரை படித்திருக்கிறன். குடியுரிமை இல்லாததால் அரசு வேலைக்கு வாய்ப்பில்லாமல் போகவே லாரியோட்டிக் கொண்டிருக்கிறன். டிப்பர் லாரி முதல் சின்ன யானை வரை என்று எல்லா சைசு லாரிகளையும் சீராக இயக்கி ஓட்டுவன்."
"லங்காக்கு திரும்புற நினைப்பு இன்னமும் இருக்கா உங்களுக்கு?"
"இல்லை திரும்பிப் போற நினைப்பு வாறதில்ல. ஏன்னா லங்காவும் இந்தியாவும் எங்களப் பொறுத்தவரை வேற வேற நிலம் இல்லை. ஒரே நிலம் தான். உங்களுக்கு தான் அது வேற நாடு. இது வேற நாடு. நாங்க எல்லாம் உங்களுக்கு அகதிகள். ஆனால் எங்களுக்கு அப்படி இல்ல. கடல் பிரிச்சுட்டா வேற நாடென்டு ஆகிடுமா சொல்லுங்கோ? எங்கட நினைப்பில் அந்தக் கடலே இல்லை. எங்கட தாத்தண்ட நினைப்பில் அது இருந்தது இல்லை. எங்கட அப்பனண்ட நினைப்பிலும். என் நினைப்பிலும் கூட இப்போ கடல் இல்லை"
உளறல் தான் என்றாலும் வேறொருவித உளறல் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
"யாழ்ப்பாணத்தில் இருந்து எங்கட தாத்தன் எங்களை நடத்தியே கூட்டி வந்திருக்கிறார் தெரியுமா? ஏனென்டால் அவர் நினைப்பில் அந்தக் கடலே இல்லை."
போதை உச்சிக்கு எறிவிட்டது போல.
"சொன்னால் நீங்கள் நம்பணும். உண்மையில் நடந்தது தான் அது. இயேசு நாதர் நீரில் நடந்தது போல எங்கட தாத்தன் அப்படியே எங்களை நடத்திக் கூட்டி வந்திருக்கிறாரென்டு சொல்லுவினம். ஐம்பது அறுவது பேர் அவரை நம்பி நடந்தே தனுஷ்கோடிக்கு வந்திருக்கிறாங்கள். பிறர் எல்லாம் நாவாய், படகு என்கிற கலங்களில் தொத்தி ஏறி தப்பிப்பிழைத்து வந்தவங்கள். நாங்கள் அப்படி அல்ல. சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அங்குமே யாரும் எங்கள நம்ப இல்ல. எங்கட தாத்தனுக்கு கடலே மறிக்காமல் வழி விட்டுட்டது. இங்கயிருந்து போய்டுங்கோ என்று சொல்லி விட்டுட்டது. அது விட்ட வழியில தான் இப்போது நாங்கள். நாங்கள் ஏன் திரும்பப் போக வேணும் ?
தனுஷ்கோடி பக்கம் போயிருந்தால் நீங்கள் ஒன்றை கண்டு கொண்டிருக்கலாம். சிலர் சொல்லி கேட்டுமிருக்கலாம். அங்கிருப்பது ஒரு கடலே இல்லை. இரண்டு கடல்கள். வடக்குப்பக்கம் ஓர் கடல். தெற்குப் பக்கம் ஓர் கடல். ரெண்டும் சேர்ந்து ஒன்றை ஒன்று பொருதிப் பொருதி வாரி அடித்து உருவான மணல் திட்டு அது. கடல் அங்க மேடு கண்டிட்டிருக்கும். ஆனால் அனுகணமும் மாறும் மேடு அது. எங்கட தாத்தனுக்கு கடல் நல்லா புரியும். தெரியும். போலவே அனுகணமும் மாறும் அந்த மேட்டு வழியும் புரியும். அது வழியே எங்கட மக்களை நடத்திக் கூட்டி வந்திருக்கிறார். கலத்தில் ஏறி கரை கடந்தவர்களில் கூட உயிர்ச்சேதம் உண்டு. கடலும் சேர்ந்து கொண்டு அவர்களைத் தண்டித்தது. ஆனால் எங்கட தாத்தனோட வரநேர்ந்தவர்களுக்கு அப்படி ஏதும் நிகழ இல்லை. அத்துணைப் பேரும் வந்துவிட்டிருந்தோம். ஒன்றரை நாள் நடைப் பயணம். கடல் இல்லாமல் ஆகும் வழியும் அக்கடலுக்குள்ளே உள்ளது. அது எங்கட தாத்தனுக்குத் தெரிந்திருந்தது. அவரண்ட அந்த நினைப்பு தான் எங்கட பிழைப்பாய் ஜீவிதமாய் இப்போ மாறி இருக்கறது"
அப்படியே சொல்லிக்கொண்டே முழு மப்பில் பாறையில் சரிந்துவிட்டிருந்தான். நானும் அப்படியே ஒருக்களித்து சாய்ந்துவிட்டேன். பிறகு ஓரிரு மணி கழித்து விழிப்பு தட்டியது. முன்னிருந்த போதை சற்று தெளிந்திருந்தது போல இருந்தது. அவன் பக்கமாக கண்கள் தேடித் துழாவிய போது அருகே அவனைக் காணவில்லை.
பிறகு எழுந்து நின்று பார்த்தேன். அருவிக்குள் பொதிந்தபடி நின்று கொண்டிருந்தான். நான் எழுந்து கொண்டதைப் பார்த்துவிட்டு, அருவியை விட்டு சற்று வெளியே வந்து, "வாங்க பிரதர்" என்றான். அவனுக்கு முழுதும் வடிந்துவிட்டது போல. நான் மீண்டும் சென்று குளித்தேன். இருவரும் அருவி எதிரில் இருந்த சுனையில் டைவடித்து நீந்தினோம். அவன் என்னைவிட வேகமாக நீந்தினான். ஒரு பாறையைத் தொத்தி நின்று கொண்டு "நான் என் லைஃப் பத்தி சொல்லிட்டிருந்தேன். நீங்க உங்க கதையை சொல்லுங்க?" என்றான்.
அவன் சட்டென ஒரு திருப்பத்தூர்க்காரனாக மாறிவிட்டிருந்தான்.
"இல்லை என் லைஃப் அவ்ளோ சுவாரசியமானது இல்ல. அதை சுவாரஸ்யப்படுத்தத்தான் இப்படி கிளம்பி வர்றது. உங்களை மாதிரி ஆட்கள் கிட்ட இப்படி கதை கேக்கறது" என்றேன் நீந்தி வந்ததில் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியே இழுத்து இழுத்து விட்டபடி. அவனும் வாயில் இருந்த நீரை சுனையில் உமிழ்ந்துவிட்டு சிரித்தான். அந்தச் சுனையில் நல்ல ஆழம் இருக்கும் போல. கால்களை உள்நீச்சலில் வைத்திருந்தபடியே பாறையை தொத்திப் பிடித்து நின்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நான் தொத்தியிருந்த பாறையில் சட்டென ஏதோ ஒன்று வந்து விழுந்தது. நான் என் இருகைகளையும் வெடுக்கென எடுத்துக்கொண்டு விட்டேன். அவன் சட்டென நீந்தி வந்து மூழ்கவிருந்த என் உடலைப் பிடித்துக் கொண்டுவிட்டான். இருவரும் விழுந்தது என்னவென்று பார்த்தோம். அது ஒரு தவளை. ஆனால் வேறு மாதிரி இருந்தது. நல்ல ஆரஞ்சு நிறத்தில் நடு முதுகிலும் கால்களிலும் அங்கங்கு கரிய நிறக் கோடுகளுடன் இருந்தது. இதற்கு முன் இப்படி ஓர் தவளையை பார்த்ததில்லை. சட்டென பொறி தட்டி ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. வந்த காட்டுச் சாலையில் ஓர் இடத்தில் வனச்சரகத்தினரால் ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் இந்தத் தவளையின் படம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக அதில் எழுதியிருந்தது. அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டது கூட நினைவு இருந்தது.
நான் அவனிடம், "இந்தக் காட்டுப் பகுதிகள்ல நெறய இந்த மாதிரி தவளை இருக்கும் போல. வர்ற வழியில் போர்டு வச்சுருந்தாங்க. பாத்தேன்"
அந்தத் தவளை அவனையே விழி உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவனும் பாறையை சற்று கீழே பிடித்துக்கொண்டு நின்று அதற்கு நேரெதிராக முகம் காட்டிக்கொண்டு புன்னகைத்தபடி தன் கண்களை அகல விரியவிட்டுக்கொண்டு விழி உருட்டிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்துக்கு அவர்களிடையே அவ்விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது. பிறகு அந்தத் தவளை எகிறித் தாவி எங்கோ சென்றுவிட்டது.
"நீங்க பெங்களூர்ல என்ன வேலை பண்றீங்க ப்ரதர்?"
"நானா? சாஃப்ட்வேர் எஞ்சினியர்."
"ஓ எங்க ஆட்கள்லையும் சில சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உண்டு "
இருவரும் கரை ஏறினோம். மாலை இறங்கிக் கொண்டிருந்தது. இருவரும் தத்தம் உடுப்புகளை உடுத்திக் கொண்டு உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழிறங்கிப் போனோம். சாலையை வந்தடைந்தவுடன் நான், 'பாக்கலாம் பிரதர்' என்றேன். அவனும் 'பாக்கலாம்' என்று கை கொடுத்துவிட்டுப் போனான்.
வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த எதிர் காற்றில் பாதி வழியிலேயே முழு போதையும் இறங்கி விட்டது. வயிறும் பசித்தது. ஹைவேயில் இருந்த ஒரு மோட்டலில் சிக்கன் பிரியாணி வாங்கி உண்டேன். இரவு பத்து பத்தரை போல வீடு வந்து சேர்ந்தேன். தூக்கம் அழுத்தியது. உடை எதையும் களையாமல் அப்படியே படுக்கையில் விழுந்தேன். மறுநாள் காலை உறக்கம் கலைந்து எழுந்துகொண்டு கைபேசியை எடுத்து முதல் நாள் புகைப்படங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அந்தத் தவளைப் படம் போட்டிருந்த அந்த அறிவிப்புப் பலகையின் புகைப்படம் இருந்தது. அதை ஸூம் செய்து ஆங்கிலத்தில் எழுதி இருந்த வரிகளைப் படித்தேன்.
"இந்த வகைத் தவளையினம் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான இந்தக் கவுண்டின்யா காப்புக் காடுகளில் காணப்படக் கூடியது. சமீபத்தில் தான் இப்பகுதியில் இதன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஓர் புதுவகைத் தவளை இனம். பொன்நிற முதுகுடைய இந்தத் தவளைகளை உலகில் இந்த ஓர் இடத்தையும் இலங்கையையும் விடுத்து வேறெங்கும் காண முடியாது. இதற்கு முன் இத்தகு தவளைகள் இலங்கையில் நன்னீர் நிலைகளில் காணப்பட்டு இனங்கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கண்டறியப்பட்டுள்ளதும் அவற்றை ஒத்தே அமைந்திருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பால், 10000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும், ஊடே கடல் புகாமல் சேர்ந்திருந்தது என்று சொன்னால் மிகையாகாது. ஆய்வாளர்களும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்"
லோகேஷ் ரகுராமன் பெங்களூரில் பணிபுரிகிறார். திருவாரூர் மாவட்டம், நாடாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர். விஷ்ணு வந்தார், அரோமா, உலராதிருக்கும் வரை, பரத்தை மறைத்தது, அநிச்சயக் கரை என இதுவரை இவரது 5 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘விஷ்ணு வந்தார்’ எனும் முதல் புத்தகத்திற்காக, தமிழில் 2024 ஆண்டு சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் வென்றவர்.