தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காளைகளை மட்டும் கட்டி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான்.
பூங்கோதை அவனுக்கு வட்டில் நிறைய சோளக் கஞ்சியை வைத்தவள் ஒரு சொம்புத் தண்ணீரை அவன் முன் வைத்தாள். பிறகு தோல் உரிக்காத வெங்காயத்தை ஒரு கை அள்ளி அவன் முன்னால் போட்டு விட்டு, “இந்தாரும், இத உரிச்சி மென்னுக்கிட்டு கஞ்சியை குடியும்.” என்று சொல்லி முடிக்குமுன்பே திருமனுக்கு பசியை விட கோபம் அதிகமானது.
இரண்டு பச்சை மிளகாயும், உப்பும் போட்டு அந்த வெங்காயத்தை வதக்கி வைத்திருந்தால் கூட அவன் பேசாமல் கஞ்சியைக் குடித்திருப்பான். இவள் வெறுமே, அதும் உரிக்காத வெங்காயத்தை அள்ளிப் போட்டதில் அவனுக்கு கோபம் எகிறியது.
சாப்பிடுவதற்காக உட்கார்ந்தவன் வெறியோடு எழுந்து, “கண்டார...லி, வீட்டுல உக்காந்திருக்க உனக்கு ஒரு வெஞ்ஞனம் கூட வைக்க முடியலயா?” என்று கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை, அறைந்தான். அவள், “அய்யய்யோ..” என்று அலறும் முன்பே அவள் இடுப்பில் ஒரு மிதி, மிதித்தான். அவன் மிதித்ததில், பூங்கோதை வாசல்படியில் வந்து விழுந்ததால் இடுப்பில் நல்ல அடி. இதற்குள் அக்கம், பக்கத்திலிருந்த ஆட்கள் கூடி திருமனை தடுத்தார்கள். அப்போதும் அவனுக்கு கோபம் தாங்க முடியாமல், அவள் உச்சி மயிரை கூட்டிப் பிடித்து தூக்கி சுவரில் ஒரு முட்டு வைத்ததில் பூங்கோதை மயக்க நிலைக்கே போய் விட்டாள்.
இரண்டு, மூன்று ஆண்களும், சில பெண்களுமாக அவனோடு மல்லுக்கட்டி பூங்கோதையை அவனிடமிருந்து விடுவித்தார்கள். அவளின் அம்மா வீட்டுக்கு கூட்டி வந்து, அவள் முகத்தில் தண்ணீர் அடித்து குடிக்கவும் கொடுத்தார்கள். கொஞ்சம் தெளிச்சியான பூங்கோதைக்கு புருசனை நினைக்க, நினைக்க வயிற்றுக்குள் அனல் காற்று சூறாவளியாய் புகுந்து அவளை கோபத்தீயில் எறிந்தது.
“நானு சேட்டமில்லாத ஒன்னர வயசுப் புள்ளயவும், கால் கொள்ளாம வீட்டுக்குள்ள ஆடி, ஓடி விளையாடுதப் புள்ளைகளயும் வச்சிக்கிட்டு பால் மாட்டுக்கு புல் புடுங்கியாந்து போட்டு ரெண்டு ஆட்டுக்கும் கொள கொண்டு வந்து, ரெண்டுபடி சோளம் குத்தி காச்சி அப்படி சீரளிஞ்சி சீப்பட்டுக்கிட்டு கெடக்கேன். இவனுக்கு நித்தமும் வெஞ்ஞனம் வச்சி அழுவ முடியுமா? ஒரு நாளைக்கு வெங்காயத்த உரிச்சி கஞ்சியக் குடிச்சா பேதியா வருது? இருக்கட்டும். இனி இவன் எனக்குப் புருசனுமில்ல, நானு அவனுக்கு பொண்டாட்டியுமில்ல. குமரி இல்லாம வாக்கப்பட்டுட்டேன், மலடு இல்லாம புள்ளயும் பெத்துட்டேன். இனி என்ன எனக்கு வாழ்வு வேண்டிக் கெடக்கு? என் புள்ளைகள் நெனச்சாத்தேன் எனக்கு ஈரக் கொலய புடுங்கிப் போட்டாப்பல இருக்கு. இதுக தலவிதி அப்படித்தேன்னா, என்னால் என்ன செய்ய முடியும்? இனி அவன் வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டேன்.” என்று தனக்குள்ளேயே சபதம் செய்தபடி பிறந்த வீட்டிலேயே இருந்து விட்டாள்.
பக்கத்து ஊர் என்பதால் திருமன் தனக்கு வேண்டிய பெரியம்மாவின் துணையோடு பிள்ளைகளை அனுப்பி வைத்தான். பூங்கோதை தன் பிள்ளைகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அப்படி பார்த்தால், தன் மனம் மாறி விடும் என்று நினைத்தவள், “நானு என்ன, என் வீட்டுல இருந்தா புள்ளைகள் கொண்டு போனேன். அவன் வீட்டுல போயி தானே பெத்தேன். அதனால புள்ளைகள அவனே வச்சிக்கிடட்டும்.” என்று சொல்லி அப்படியே அனுப்பி விட்டாள்.
பிள்ளைகளோடு போன பெரியம்மா, திரும்பவும் பிள்ளைகளோடு வருவதைப் பார்த்து விக்கித்துப் போனான், திருமன். பூங்கோதை கோபித்துக் கொண்டு போன இரண்டு நாட்களிலேயே அவன் பிள்ளைகளை வைத்துக் கொண்டு திண்டாடித்தான் போனான்.
பூங்கோதை போனதிலிருந்து வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. பிள்ளைகளின் முகத்தில் எந்த நேரமும் அழுகை தான். தன் பெரியம்மாவைத் தான் அவன் கெஞ்சி, கதறி அவள் காலில் விழாத குறையாக பிள்ளைகளின் துணைக்காக வைத்திருந்தான். ஆனாலும் வீடு, வீடாக இல்லை. கஞ்சியும் அவன் தான் காய்ச்ச வேண்டியிருந்தது. பிள்ளைகளை வைத்திருந்த பெரியம்மாவும் இப்போது சலித்துப் போனாள்.
“எப்பா திருமா. உன் பிள்ளைகள வச்சிருக்க என்னால் முடியாது. ஒரு சொன்னபடி கேக்க மாண்டேங்காக. பூங்கோதை கெட்டிக்காரியாங்காட்டி இதுகள வச்சிக்கிட்டு இருந்திருக்கா. வயசான காலத்தில எனக்கென்ன கிரகசாரமா… உன் பிள்ளைகள வச்சிக்கிட்டு பரிதவிக்கணுமின்னு? என் பேரன், பேத்திகள புடிச்சி வைக்க ஆளு இல்லாம, மந்தையில அனாதயா அலயதுக” என்று சொல்லி விட்டு அவள் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள்.
திருமனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் பிள்ளைகளை வைத்துக் கொண்டிருப்பதால் காட்டு வேலையைப் பார்க்கவே முடியவில்லை. அம்மாவை நினைத்து, நினைத்து அழும் பிள்ளைகளுக்கு தினமும் காய்ச்சல் வந்து சோர்ந்து போய் கிடந்தன.
அவனும் ஊருக்குள் இருக்கும் பெரிய ஆட்களையெல்லாம் பூங்கோதையை கூட்டி வரச்சொல்லி ஆளனுப்பி வைத்தான். ‘இனிமே அவளை அடிக்க மாட்டேன். அவள் காடுகளுக்குக் கூட வர வேண்டாம். அவள் அடுப்பு வேலையப் பார்ப்பதோடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதும். இப்போது நான் அவளை அடித்ததற்கு மன்னிப்புக் கூட கேட்பதாக’ சொல்லி விட்டான். ஆனால், பூங்கோதை திரும்பி வருவதாக இல்லை.
ஒருத்தன் மாமியார் பிஞ்சையில் கடலைச் செடி பிடுங்குவதாக கேள்விப்பட்டு, அங்கே போய் பூங்கோதையை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும்படி சொன்னான். ஆனா, “எய்யா நானும் எம்புட்டோ சொல்லிட்டேன். அவ கேக்க மாணேங்காளே. நானு என்ன செய்ய? நீங்களும் அவள கோவத்தில கண்ணு மூக்கு தெரியாமத்தேன் அந்த அடி, அடிச்சிருக்கீக. உங்க விரலுப்பட்டு அவளுக்கு வலது கண்ணு கலங்கிப் போச்சி. நெத்தியில இன்னமும் வீக்கம் லேசா இருந்துக்கிட்டுத்தேன் இருக்கு. பொம்பளயப் போட்டா கையத்தேன் ஏந்துவா. அவளால உங்கள திருப்பி அடிக்க முடியுமா?” என்று கேட்க திருமனுக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தது.
“சரி அத்த. அப்ப பிள்ளைகள கொண்டாந்து விடுதேன். நீங்க வச்சிக்கோங்க.” என்றான்.
“பூங்கோத என்னக் கொன்னே போடுவா. வயசான காலத்தில என்னால புள்ளய வளக்க முடியுமா? அதெல்லாம் அவபாடு, உங்க பாடு” என்று சொல்லவும் திருமனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.
பூங்கோதைக்கு இப்போது மீண்டும் குமரியாகி விட்டது போல இருந்தது. புருசன் அடித்த அடியின் வேதனையும், பிள்ளைகள் மேலிருந்த பாசமும் அவளை ஒரு மாதத்துக்கு பாடாய்படுத்தியது. குன்னி, குறுகி வீட்டின் மூளையிலேயே சுருண்டு கிடந்தாள். தன் அம்மாவின் வற்புறுத்தல் தாளாமல் கஞ்சி குடித்தும், குடியாமலும் ஆளே அரை உயிராகிப் போனாள். நடுச்சாமத்தில் பிள்ளைகள் அழும் சத்தம் போல கனவு கண்டு, உடனே தன் புருசன் ஊருக்குப் புறப்பட்டு விடுவாள். ஆளாளுக்கு அவளைப் பிடித்து வைத்து அவளுக்கு ஆறுதல் கூற, பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்துக் கொண்டு உறக்கம் வராமல் தவித்தாள்.
ஆனால் நாள் ஆக, ஆக பிறந்த வீட்டில் இருப்பதே ஒரு சுகமாகிப் போனது. தினமும் தன் வயசு ஒத்த குமரிகளோடு வேலைக்குப் போவது, வருவது, அம்மா செய்து வைத்த சமையலை சாப்பிடுவது, இரவுகளில் சில நேரம் கனவு, அதுவும் பிள்ளைகளைப் பற்றி கண்டாலும் பின் நிம்மதியாக தூங்குவது என்பதில் அவளுக்கு வாழ்க்கை ரொம்ப திருப்திகரமாயிருந்தது.
அதோடு அந்த ஊர் பெண்களும், குமரிகளும் சும்மா இருப்பதில்லை. பக்கத்தில் இருக்கும் டவுனுக்கு இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு கிளம்பி விடுவார்கள். வேறு எந்த படத்துக்கும் போக மாட்டார்கள். எம்.ஜி.ஆர். நடித்த படமென்றால் ஊர்ப் பெண்கள் எல்லாருமே கிளம்பி விடுவார்கள். எம்.ஜி.ஆர். மீது எல்லாப் பெண்களுக்கு அவ்வளவு பிரியமும், மதிப்பும் இருந்தது.
அன்று டவுனில் ‘அலிபாபாவும், நாற்பது திருடர்களும்’ என்ற படம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது தான், ஊரே கலகலத்துக் கிடந்தது. எல்லோரும் அவசர, அவசரமாய் வேலைகளை முடித்து விட்டு, ஊர் கிணற்றிலும், குளத்திலும் குளித்து விட்டு, வீட்டுக்கு வந்து சமையல் செய்கிறவர்களுக்கும் வேலைகள் மட, மடவென்று நடந்தன.
பூங்கோதைக்கு ரொம்ப சேத்திக்காரியான சீதா வந்து, “ஏ… பூவு, நாங்கள்ல்லாம் டவுனுல நடக்கிற எம்.ஜி.ஆரு படத்துக்குப் போறோம்.” என்று சொன்னதும் பூங்கோதைக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. “எம்.ஜி.ஆருன்னா எனக்கு உசுரு. பிறந்து இம்புட்டு நாளாச்சி. அவரு படத்துக்கு போனதே இல்ல! ஆத்தா வீட்டுலதேன் வேலயா செஞ்சோமின்னா, புருசன் வீட்டுல அதுக்கு மேல. சினிமாவுக்கு எங்க போறது? நல்ல வேள துன்பத்த தொலச்சிட்டு ஆத்தா வீட்டுக்கு வந்தேன். இப்பத்தேன் நிம்மதியா இருக்கேன். அதனால நானும் வாரேன் உங்கக்கூட.” என்று படத்துக்குப் புறப்பட்டு விட்டாள்.
‘மாசிலா உண்மை காதலே! மாறுமோ செல்வம் வந்த போதிலே!!’ என்று எம்.ஜி.ஆர். பானுமதியோடு ஆடிய போது பூங்கோதைக்கு உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. ‘ம்.. புருசன். பொண்டாட்டின்னு இருந்தா இப்படில்ல ஒத்துமையா நகமும், சதையும் பொருந்துனாப்புல இருக்கனும். நம்ம புருசனும் இருக்கானே. எடுத்ததுக்கெல்லாம் வஞ்சிக்கிட்டும், அடிச்சிக்கிட்டும்’ என்று ஏங்கியதோடு அவள் கண்களில் கண்ணீரும் திரண்டது.
பூங்கோதை புருசன் திருமனும், ஆள் விட்டு அனுப்பி தவித்துப் போனான். ‘இனி நாமே போய் அவள் காலில் விழுந்தாவது கூட்டிக் கொண்டு வந்து விடலாமா?’ என்று நினைத்தான். அந்த அளவுக்கு குடும்பப் பாரம் அவனை ஆட்டி வைத்தது.
பக்கத்து ஊரான டவுனில் மீண்டும் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்ற ‘எம்.ஜி.ஆர்.’ படம் போடுவதாக கேள்விப்பட்டு வழக்கம் போல பெண்களும், குமரிகளுமாக கிளம்பி விட்டார்கள். இதில் சீதாவுக்கு ரொம்பவும் கோபம்.
“அப்பவும் பத்து நாளைக்கொருக்கா
‘எம்.ஜி.ஆர்.’ படத்த போட்டா என்னவாம்? மாத்தைக்கொருக்காதேன் போடுதான்.” என்று சடவாக சொல்லிக் கொண்டு பூங்கோதையை கூப்பிட வந்தாள். சேத்திக்காரியோடு சந்தோசமாக படம் பார்க்க வந்த பூங்கோதை, ‘எம்.ஜி.ஆர்.’ சரோஜா தேவியோடு ஆட்டம் போடுவதைக் கண்டு திடுக்கிட்டாள்.
“அய்யய்யே என்னடி சீதா, நானு நம்ம எம்.ஜி.ஆர எம்புட்டோ நல்லவருன்னு நினச்சிக்கிட்டு வந்தேன். அவரு என்ன அந்தப் படத்துல ஒருத்தி, இந்த படத்தில ஒருத்தின்னுல்ல படத்துக்கு ஒரு பொண்டாட்டி கட்டிக்கிட்டு இருக்காரு. இதுக்கு எம் புருசன் எம்புட்டோவில்ல தாவல. நானு படமும் பாக்கல. ஒன்னும் பாக்கல. பாவம் எம் புருசன், புள்ளைகள் வச்சி என்னம்மா தவிச்சிக்கிட்டு இருக்காரோ. நானு இப்பவே எம்புருசன் வீட்டுக்குப் போறேன்.” என்றவள், தன் ஊரை நோக்கி நடந்தாள்.
பாரததேவி
கரிசல் மண்ணின் பண்பாட்டுக் கதைகளை அதே மொழியில் எழுதி கவனத்தை ஈர்த்தவர் பாரத தேவி. கிராமங்களி்ன் விவசாயப் பண்பாடும் அங்கே புழங்கும் தொன்மங்களுமே அவரது கதைக்களன். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிக் குவித்திருக்கிறார்.