இடப்பெயற்சி

இடப்பெயற்சி

Published on

பொதுவாக கடையடைப்பு என்றால் கடைத்தெருக்கள் வெறிச்சோடி கிடக்கும். சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் சாலையைப் பிரிக்கும் கோடுகளை வெள்ளை நிற வண்ணத்தால் மிக சிரத்தையாக வரைந்து கொண்டிருப்பார்கள். அன்றாடம் குடிக்கும் சுவையில்லா தேநீரைத் தேடி, பறக்கும் கூட்டம் ஒன்று சாலையின் நீள அகலத்தை அளந்து கொண்டிருக்கும். நாய்களும், காகங்களும் ஜம்பமாக சாலையின் குறுக்கே நடமாடிக்கொண்டிருக்கும். எந்த இலக்கும் இல்லாத நானும், அன்றைக்குத்தான் வீடு போரடிப்பதாக நினைத்துக்கொண்டு பிரதான சாலைக்கு வந்திருந்தேன். வடலூர் அப்படி ஒன்றும் பெரிய ஊர் என்று சொல்ல முடியாது. வள்ளலாரின் சத்திய ஞானசபை சாதாரண நாட்களில் கூட பேரமைதியுடன்தான் இருக்கும். இன்றைக்கு கடையடைப்பு என்பதால் நூலக அமைதியுடன் காட்சியளித்தது. சாலையின் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு பரபரப்பைத் தொலைத்திருந்தன.

நகரின் பிரதானமான ராமபவன் உணவு விடுதி அனேகமாக இன்றைக்குத்தான் கூட்டமில்லாமல் அனாதையாக கைவிடப்பட்டுக் கிடந்தது. அதன் படிகளில் மிகுந்த பொறுப்புடன் முதியவர் ஒருவர் தரை துடைப்பானால் துடைத்துக்கொண்டிருந்தார். நிச்சயம் 60 முதல் 70 வயதுக்குள் இருக்கலாம். மங்கோலிய முகம் அவர் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்தியது. சாப்பிடப் போகும்போது அவ்வப்பொழுது பார்த்த முகம்தான். வேறு போக்கிடம் இல்லை அவருடன் பேசிப் பார்க்கலாம் என்று எனக்கு ஏனோ தோன்றியது. மெல்ல அவர் அருகில் சென்று படிகளில் ஒன்றில் அமர்ந்தேன். அவர் என்னைத் திரும்பி ஒருகணம் பார்த்துவிட்டு, பின்னர் மறுபடியும் கர்மமே கண்ணாக துடைக்க ஆரம்பித்தார். எப்படியும் பேசிவிடுவது என்று முடிவெடுத்து வந்து அமர்ந்தாயிற்று. நாமாக தொடங்கிவிட

வேண்டியதுதான். “மணிப்பூரா?”

இல்லை என தலையாட்டியபடி “அஸ்ஸாம்” என்றார்.

“பெயர் என்ன மகந்தாவா?” என்று கேட்டேன். எனக்குத் தெரிந்த அஸ்ஸாமிய பெயர் அதுதான்.

“பூபேன்” மறுபடி கர்மமே கண்ணாயிரம்.

“நல்ல பேர்.. தமிழ் தெரியுமா?”

மீண்டும் இல்லை என தலையாட்டல்

“இந்தி?”

மறுபடி இல்லை மறுபடி கண்ணாயிரம்

“எனக்கும் தெரியாது”

அவருக்கு புரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே கண்ணாயிரம் அப்படியே..

“தமிழ் தெரியாது... இந்தி தெரியாது அப்புறம் எப்படி?” என்று வாய்மொழி, சைகை என

எல்லாவற்றையும் பிரயோகித்தேன்.

அவர் தெரிந்த வார்த்தைகளுக்கு நடுவே, தெரியாத வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இட்டு நிரப்பும் வித்தைத் தெரிந்தவராக இருந்தார். வாய் மற்றும் வயிற்றைத் தொட்டுக் காண்பித்தார்.

“ஒ வாயில அள்ளிப்போட்டா நேரா வயித்துக்கு போகப்போகுது. இதுக்கு எதுக்கு மொழி

அப்படிங்கறீங்க” என்று நானும் என் பங்குக்கு கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பினேன். அவர் புரிந்தது போல தலையாட்டினார். ஒருவேளை அவர் வயித்து பிழைப்புக்கு, பேசத்தெரியாத ஊர்ல வாழ வேண்டி இருக்கு என்று கூட சொல்லி இருக்கலாம். என்ன பேசுகிறோம் என்பதா முக்கியம் என்ன புரிந்து கொண்டோம் என்பதுதானே முக்கியம் என்று நானே எனக்கு ஒரு சமாதானத்தைச் சொல்லிக் கொண்டேன்.

முழுவதுமாகத் துடைத்தபின், துடைப்பானை ஓரமாக வைத்துவிட்டு என்னருகே வந்தமர்ந்தார். என் பக்கம் கைகளை நீட்டி என்ன என்பது போல கையசைத்தார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார் போலும் என நானாக யூகித்துக்கொண்டு “ரிட்டயர்ட் டீச்சர்” என்றேன். ஓ என்று இரு கைகளையும் படிப்பது போல மூடித்திறந்து தான் புரிந்து கொண்டதை உணர்த்தினார். இந்த சைகை மற்றும் கோடிட்ட இடத்தை இட்டு நிரப்பும் விளையாட்டு வெகுவாகப் பிடித்திருந்தது. இன்னிக்கு பொழுது போக நல்ல மெட்டீரியல் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு அடுத்தக் கேள்வியைத் தொடுத்தேன்.

“அஸ்ஸாமில் எந்த ஊர்?” என்னவோ எல்லா ஊரும் தெரிந்தவன் போல கேட்டேன்.

“கரீம் கஞ்ச்”

அஸ்ஸாமிய மொழியில் என்னவோ சொல்லிவிட்டு பிறகு “ஶ்ரீபூமி” என்றார்.

“ஶ்ரீ பூமியா இல்லை கரீம் கஞ்ச் -ஆ எது உங்க சொந்த ஊர்?”

இரண்டு விரல்களை தனித்தனியாகப் பிரித்து பின்னர் ஒன்றாக இணைத்துக் காண்பித்தார். “ஒ

இரண்டும் ஒன்றுதானா?”

ஆமாம் என்று தலையாட்டினார்.

“அதெப்படி ரெண்டு பேர்.. அதுவும் இது வேற அது வேற போல தெரியுதே?”

“ஆமாம் அது அப்படித்தான்” நெற்றியில் முதலில் ராமத்தையும் பிற்பாடு தலையில் தொப்பி வைத்தும்

காண்பித்தார்.

“இந்து, முஸ்லீம் ரெண்டு பேரும் அதிகம். அதனால முதல்ல ஒரு பேரு அப்புறம் ரெண்டாவதா

இன்னொரு பேரு அதானே?

“ஆமாம்” சைகை உரையாடல் தொடர்ந்தது,

“உங்களுக்கு வொய்ஃப் ..சில்ட்ரன்?”

இல்லை என்று தலையாட்டினார்.

“தனி ஆளா? அடப்பாவமே?”

துடைப்பானைக் காண்பித்து ஏதோ சொன்னார். “நானே துடைக்கிறேன் எனக்கு எதுக்கு

அதெல்லாம்?”

“அதுவும் சரிதான். கூடப்பொறந்தவங்க.... பிரதர்.. சிஸ்டர்?”

“இரண்டு பிரதர்.. பிக் பிரதர்”

“அவங்க எங்கே?”

“ஈஸ்ட் பாகிஸ்தான்” கைகளைப் பெரிதாக விரித்து பின்னர் நடுவே ஒரு கையால் பிரிப்பது போல

சைகை செய்தார்.

“என்னது பாகிஸ்தான் பிரியும் போது, அங்க போயிட்டாங்களா?” தலையில் தொப்பி வைத்துக் காட்டினார்.

“முஸ்லீமா மாறிட்டாங்களா?’

”யெஸ்.. யெஸ்” என்று திடீரென்று ஞாபகம் வந்தது போல சொன்னார். ஆக ஆமாம் என்பதற்கு

யெஸ்.. யெஸ் என்று சொல்லுங்கள் என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். சமயத்தில் அவருக்கு நினைவுக்கு வரவில்லை.

“சரி, நீங்களும் அவங்க கூட போக வேண்டியதுதானே?”

அம்மாவுடன் ராத்திரியில் தூங்கும்போது விட்டுவிட்டு கிளம்பிவிட்டதாக அவர் சைகையில் சொன்னபோது அதிர்ந்தேன். அடப்பாவிகளா? இரண்டு தரப்புக்கும் சண்டை, வெட்டு, குத்து, கொலை ஆகையால் அம்மா பெண் என்பதாலும், தான் ஒரு குழந்தை என்பதாலும் அழைத்துச் செல்ல பயந்து அவர்கள் மட்டும் கிளம்பிவிட்டார்கள்

“இப்ப உங்களுக்கு என்ன வயசு?”

“81”

“என்னது 81 -ஆ நம்பவே முடியலை.. இந்த வயசுலேயும் வேலை செஞ்சுதான் பிழைக்கனுமா?”

“யார்கிட்டேயும் சொல்லாதீங்க எனக்கு வயசு 65 ன்னு சொல்லி வெச்சிருக்கேன். 81 ன்னு சொன்னா

வெரட்டி விட்ருவாங்க”

“இது இன்னும் கொடுமையா இருக்கே?”

“டீ சாப்படறீங்களா?” என்று கேட்டார்

“இருக்கா?”

இரும்பு ஷட்டரைத் தூக்கி குனிந்து சென்றவர். சில நிமிடங்களில் உள்ளிருந்து டீ ஃபிளாஸ்க்கையும், இரண்டு தம்ளர்களையும் நகர்த்தி வெளியே வைத்து விட்டு, சென்றது போலவே குனிந்து வந்து ஷட்டரை மூடினார்.

திக்கான பாலில் அருமையான டிக்காஷன் ஊற்றி சுடச்சுட எடுத்து வந்திருந்தார். அற்புதமாக

இருந்தது.‘சூப்பர்’ என்று வாய்விட்டு சொன்னேன். பாராட்டைத் தலைகுனிந்து ஏற்றுக்கொண்டார்.

“ஏன் பந்த்?” என்று கேட்டார்.

“விலைவாசி ஏறிவிட்டதாம்.. ரேட்...... ரேட்” என்றேன்

“ஓ ஹோ” என்பது போல தலையாட்டிவிட்டு “அஸ்ஸாம் பந்த்.. கரிம் கஞ்ச் ஆர் ஶ்ரீ பூமி பிராப்ளம்”

“ஓ பேரு பிரச்சினைக்கா? இப்ப என்ன பேர் கரீம் கஞ்ச் தானா?”

“யெஸ்.. யெஸ் எலக்‌ஷன் ..வோட்.. கரீம் கஞ்ச் நேம்”

“பேரு வைக்க ஒரு எலக்ஷன் வச்சாங்களா ஓ அப்படியா?.. நீங்க ஒருத்தர்தானே? அப்புறம் எதுக்கு

இவ்வளவு தூரம்?”

“போர்சோன்..... போர்சோன்” என்று வானத்தையும் குடையையும் அபிநயம் செய்தார்

“மழையா?”

“ஜூன்... நவம்பர் ... மழை ... வேலை இல்லை சாப்பாடு இல்லை”

“நீங்க படிக்கலையா?”

“இல்லை”

சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தவர். வானத்தையே நெடுநேரம் பார்த்துக்

கொண்டிருந்தவர், இங்க அவ்வளவு மழை இல்லை என்பது போல பாவனை செய்துவிட்டு என்பக்கம் திரும்பி

”கான்... கான்” என்றார்.

“புரியவில்லை”

“பாட்டு .. பாட்டு.. பாடத்தெரியுமா?”

“எனக்கா.. பாட்டு கேக்கத்தான் தெரியும்”

“நான் பாடட்டுமா?”

“ஓ பாடுவீங்களா? அஸ்ஸாமிஸ் பாட்டா?”

“யெஸ் யெஸ்”

“பாடுங்களேன் கேப்போம்”

“ஜுகே ... ஜுகே ப்ரோதி குஜே” என்று சோகம் ததும்பும் குரலில் அழகாகப் பாடத் தொடங்கினார்.

“இருங்க இருங்க.. நீங்க பாடப் பாட நான் எழுதிக்கறேன்” என்று அவசரமாக சட்டைப்பையிலிருந்து

ஒரு துண்டுத்தாளையும், பேனாவையும் எடுத்துக்கொண்டேன்.எனக்காக இடைவெளி விட்டவர் மீண்டும் பாடத்தொடங்கினார்.

“ஜுகே ... ஜுகே ப்ரோதி குஜே
துமாதே மோய் ஹிம் பிலின்
அந்தரோரே சுக்கே சுக்கே
ஆசு மோய் துமாதேலின்
ஒனுராதா... ஒனுராதா ஆ.. ஆ..

 சோமோயோரே காஜே காஜே
போயி ஆஹே ராத்தின்
ஹிடோயோரே சிமோநாட்டே ஒஸ்ரு
நோகோரோ பின்
ஒனுராதா... ஒனுராதா ஆ.. ஆ..

 அர்த்தம் புரியவில்லை. ஆனால் கேட்கும்போது இதயத்தைப் பிசைவது போல இருந்தது. சோகத்தைப் பிழிந்து தன் குரலில் வடித்தார் பூபென். என்னை மறந்து கைதட்டினேன்.

“அற்புதம்.. அற்புதம் சூப்பர்... சினிமா பாட்டா?”

“தெரியாது. அங்க டீ கடைகளில் அதிகம் போடுவார்கள். குட் குட் கான்”

“ஓ.. ரொம்ப மாடர்னா இருக்கே.. இங்க இதை எல்லாம் கேட்கமுடியாதே”

“ஆமாம் ...”

உறவுகளை எல்லாம் இழந்ததைவிட தனக்குப் பிடித்தமான பாடலையும் இசையையும் இழந்த துக்கம்தான் அவரை பெரிதும் வாட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திடிரென்று எதிர்பாராத நிமிடத்தில்

“எங்கே செல்லும் இந்தப் பாதை
யாரோ.. யாரோ..
தானா தானா நானா
தானா தானா தனத்தானா”

என்று தமிழ்க்குரல் அவரிடமிருந்து கேட்டபொழுது ஒருகணம் இதயம் நின்று மீண்டும் துடித்தது போல இருந்தது.

“தமிழ்ப்பாட்டு தெரியுமா?”

“ரெண்டு லைன் ரெண்டு லைன்.. அவ்வளவுதான்” என்று சிரித்தார்.

“எங்க.. மறுபடி பாடுங்க”

கொஞ்சம் வெட்கத்துடன் அதே இரண்டு வரிகள் அதே தானா தானாவைப் பாடினார். பிறகு சரியா என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“பர்ஃபெக்ட்.. ஹண்ட்ரட் பெர்சன்ட்” பெருமிதமாக சிரித்தார். பிறகு ஏதோ நினைவுக்கு கொண்டு வரும் முயற்சியில் நெற்றிப்பொட்டை ஒருகணம் தட்டினார்.

“ஆ.. தனன்னா தானன்னா தனனன்ன தானன்னா” வரிகள் நினைவுக்கு வரவில்லை என்றாலும் முடிந்தவரை அந்த ராகத்தைக் குரலில் கொண்டுவந்தார்.

“அட தெனம் தெனமும் உன் நெனப்பு ..”

சட்டென்று என் திறன்பேசியை எடுத்து அந்தப்பாடலைத் தேடி ஒலிக்கச் செய்தேன். அந்தக் காணொளியை அவர் பார்க்கவே இல்லை. அந்தப் பாடலையும் இசையையும் கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கினார்.

தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே

கனம் கனமும் எனை இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே

வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை

வரிகளின் பின்னே அதே போல் பாடும் முயற்சியில் உதடுகள் அசைந்தன. அவரது கண்களில் இருந்து நீர், பெருகி ஓடியது. அவரது சகோதரர்கள் அவரை விட்டுச் சென்றது நினைவுக்கு வந்திருக்கலாம். அவரது தாய் இறந்துபோனது,நினைவுக்கு வந்திருக்கலாம். இப்படி உறவுகளற்ற, மொழி தெரியாத நிலத்தில்,வயிற்றுப்பசி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு வாழவேண்டிய துர்ப்பாக்கியத்தை நினைத்திருக்கலாம்.

அவர் பாடிய அஸ்ஸாமிய பாடலின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. அதே போல் தினம் தினமும் உன் நெனப்பு பாடலின் அர்த்தம் அவருக்கு புரிந்திருக்காது. அதனால் என்ன? மொழியை, குரலின் அழகை, மன உணர்வுகளை என எல்லாவற்றையும்தானே இசை கடத்துகிறது......

தனிமையின் துயரை சிறிது நேரம் கலைக்க வேண்டாம் என்று நினைத்து, அதே பாடலைத் திரும்ப ஒலிக்கும்படி செய்துவிட்டு, அவர் கையில் திறன்பேசியை கொடுத்துவிட்டேன். சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு வந்து, பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று யாருமற்ற சாலையில் நடக்க ஆரம்பித்தேன். அவர் என் பெயரைக் கேட்கவும் இல்லை. நான் அரசன் என்று சொல்லவும் இல்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com