கத்திப்பாரா சிக்னலில் கார் நின்றிருந்தது.
பாலத்தின் முன்பாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக வாகனங்கள் எதுவும் நகரவேயில்லை. விமானத்தைப் பிடிக்க வேண்டும். ஐந்து இருபதுக்கு மும்பை விமானம். போர்டிங் பாஸ் எடுத்தாகிவிட்டது. கையில் சிறிய பை. ஆகவே நேரடியாகப் பாதுகாப்பு சோதனைக்குப் போய்விடலாம் என அசோக்குமார் சற்றே பதற்றமாக இருந்தார்
“பாலம் ஏறுற இடத்துல பைக்கும் வேனும் மோதியிருக்கு… ரோடு கிளியராக அரைமணி நேரம் ஆகும் சார்’’ என்றார் டிரைவர்
“வேற வழியில போக முடியுமா’’ எனக்கேட்டார் அசோக்குமார்
“திரும்பிப் போக முடியாது சார்... வெயிட் பண்ணித்தான் ஆகணும்’’
மணி இப்போதே மூன்றைத் தாண்டியிருந்தது. காரில் அமர்ந்தபடி சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது போன் அடித்தது. தெரியாத எண் என்பதால் எடுத்துப் பேச தயக்கமாக இருந்தது. அழைப்பை எடுக்கவில்லை. ஆனால் அதே எண்ணில் இருந்து திரும்பத் திரும்பப் போன் வரவே யார் என அறிந்து கொள்வதற்காகப் போனை எடுத்தார்
“ஏய்.. அசோக்.. எப்படியிருக்கே. ரொம்பப் பிசியா. போன் எடுக்க மாட்டேங்குறே’’ என மறுமுனையில் குரல் கேட்டது.
குரலை வைத்து யாரெனத் தெரியவில்லை
“நீங்க யாருனு தெரியலை’’
“மகுடு.. சேவியர் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சமோ... மறந்துட்டயா’’
“மகுடபதியா’’ எனத் தயக்கத்துடன் கேட்டார்
“ஆமாண்டா.. நீ செகண்ட் பெஞ்ச். நான் தேர்ட் பெஞ்ச். ஒண்ணா கிரிக்கெட் விளையாடுவமே’’ என்றார் மகுடபதி.
“எப்படியிருக்கீங்க’’
“மரியாதை எல்லாம் வேணாம். நீ என்னை மகுடுன்னே கூப்பிடு.. ’’
“நான் ஏர்போர்ட் போய்கிட்டு இருக்கேன். பிறகு பேசவா’’ என அழைப்பைத் துண்டிக்க முயன்றார்
“பிளைட் ஏறிட்டயா.. அஞ்சு நிமிஷம் பேச முடியாதா.. ஒரு வேலையா சென்னை வந்துருக்கேன். உன்னைப் பாக்கணும்.. வீடு எங்கேயிருக்கு’’
“நான் மும்பை போயிட்டு இருக்கேன்.. வர்றதுக்கு மூணு நாள் ஆகும்’’
“அப்போ அடுத்த தடவை வரும்போது மீட் பண்ணுவோம். நாம ஒண்ணா பிலால்ல போயி பிரியாணி சாப்பிடுவோம் ’’என மகுடபதி போனைத் துண்டித்தார்.
நாற்பது வருடங்களுக்கு முன் பள்ளியில் உடன் படித்த மகுடபதி இப்போது எப்படி போன் நம்பரைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டான் எனப் புரியவில்லை.
அசோக்குமாருக்கு பள்ளி நண்பர்கள் எவரோடும் எந்தத் தொடர்பும் இல்லை. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு பழனிக்கு மாறிப் போய்விட்டார். திருச்சியில் பொறியியல் கல்லூரி. அதன்பிறகு இரண்டு வருஷம் பெங்களூரில் வேலை. பின்பு கொல்கத்தா ஐஐஎம்மில் எம்பிஏ. அதனை முடித்தவுடன் கோல்மன் கம்பெனியில் வேலை. பெங்காலிப் பெண்ணுடன் திருமணம். அங்கிருந்து டாக்காவில் பதினாறு வருஷங்கள். மூன்று வருஷங்கள் கென்யா. இரண்டு வருஷம் டெல்லி. எனச் சுற்றியலைந்து முடிவில் சென்னை வந்து சேர்ந்து கம்பெனியின் உயரதிகாரியாகிருந்தார்.
கல்லூரியில் படித்த ஒரு சிலரோடு மட்டும் இப்போதும் தொடர்பு இருந்தது. ஆனால் பள்ளி நாட்களை முற்றிலும் மறந்திருந்தார். அதுவும் அப்பா அம்மா இருவரும் இறந்த பிறகு சொந்த ஊரோடு இருந்த உறவு முற்றிலும் துண்டிக்கபட்டிருந்தது.
மகுடபதியின் அழைப்பும், அந்தக் குரலில் வெளிப்பட்ட உரிமையும் ஸ்கூல் புகைப்படத்தை மறுபடி பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
மகுடபதியின் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொண்டார். விமானநிலையத்தின் பாதுகாப்பு சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்ற போது மறுபடியும் மகுடபதியிடமிருந்து அழைப்பு வந்தது
“நம்ம சின்னலோகு.. மும்பையில தான் இருக்கான். அவன் உன்னைப் பாக்க வர்றேன்னு சொன்னான். எந்த ஹோட்டல்ல தங்கப் போறே’’
“தெரியலை. கம்பெனி ஏற்பாடு பண்ணியிருக்கு’’ எனப் பொய் சொன்னார்
“உன் நம்பரை சின்ன லோகுகிட்ட குடுத்துருக்கேன். அவன் கூப்பிடுவான். மீட் பண்ணு.. ’’
“யார் சின்ன லோகு’’ எனத் தெரியவில்லை. அப்படி ஒருவன் அவர்களுடன் பள்ளியில் படித்தது போல நினைவேயில்லை. இது என்ன தொல்லை என நினைத்தபடியே வரிசையில் நின்றார்.
விமானத்தில் ஏறி உட்கார்ந்தபோது சின்னலோகுவிடமிருந்து போன் வந்தது
“அசோக்கு.. எப்படியிருக்கே. இப்போ தான் மகுடு பேசினான். உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா.., என்னைத் தெரியுதா’’
“குரலை கேட்டா தெரியலை“
’’நான் டென்த் பி. நீ மகுடு எல்லாம் ஏ செக்சன்.. நாம ஒண்ணா விளையாடியிருக்கோம். சினிமா பாத்துருக்கோம். “
’’ஞாபகமில்லை“
’’மும்பைல எங்கேயாவது போகணும்னா.. சொல்லு.. என்கிட்ட கார் இருக்கு“.
’’அதெல்லாம் என் கம்பெனி பாத்துகிடும். “
’’எந்த ஹோட்டல்ல தங்கப் போறே.. நான் எப்ப வர்றது உன்னைப் பாக்க. என் வீட்டுக்கு காலைல டிபன் சாப்பிட வர்றயா…“
’’எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை. பாக்கலாம்“ என அவசரமாகப் போனைத் துண்டித்தார்.
மும்பையில் அவரை வரவேற்க கம்பெனி ஆட்கள் வந்திருந்தார்கள். ஓபராய் ஹோட்டலில் தங்குவதற்குப் பெரிய அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவு சிறிய விருந்து இருந்தது. அந்த விருந்திற்காக சென்றிருந்த போது மறுபடி மகுடபதியிடமிருந்து போன் வந்தது
’’நான் ஒரு பார்ட்டில இருக்கேன்“
“நீ தண்ணி போடுவியா. . பியரா.. இல்லை விஸ்கியா’’
“பிறகு பேசுறேன்’’
“பியர் நிறைய குடிச்சா கிட்னி பிராப்ளம் வந்துரும்… பாத்துக்கோ.. நம்ம பிரசாத்துக்குகூடக் கிட்னி பெயிலியர் ஆகிருச்சி..டயாலிசிஸ் போய்கிட்டு இருக்கான்’’
“ப்ரீயானதும் பேசுறேன்’’ என மகுடபதியின் அழைப்பைத் துண்டித்தார்.. மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு வாட்ஸ்அப் எண்ணில் குட்மார்னிங் என ரோஜா பூ படம் அனுப்பி வைத்திருந்தார் மகுடபதி.
காலை குளித்து உடை மாற்றிக் கொண்டிருந்த போது சின்ன லோகு மாறி மாறிஅழைத்துக் கொண்டேயிருந்தார். அசோக்குமாருக்கு எரிச்சலாக வந்தது. அலுவலகப் பணிக்காகப் புறப்பட்ட போது ஹோட்டல் ரிஷப்சனில் ஒருவர் அவரைக் காண காத்திருப்பதாகச் சொன்னார்கள்
அது சின்னலோகுவாக இருக்கக் கூடும் என நினைத்தபடி அவசரமாகக் கிழே சென்ற போது சாம்பல் நிற சபாரி சூட் அணிந்து சின்ன லோகு உட்கார்ந்திருந்தார். முழுவதும் நரைத்த தலை. அகலமான பிரேம் போட்ட கண்ணாடி. கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ். அப்படி ஒருவர் தன்னோடு படித்த நினைவேயில்லை.
’’அசோக்கு.. போன்ல உன்னைப் பிடிக்கவே முடியலை. ரொம்பப் பிசியா’’
“தொடர்ந்து மீட்டிங். ’’. என அசடு வழிந்தார்
“உன்ன வீட்டுக்குக் கூப்பிட்டேன் நீ வரலை. அதான் நானே வந்துட்டேன். இந்தா ஸ்வீட்.. எங்க ஏரியா கடைல வாங்கினேன். மில்க் ஸ்வீட் நல்லாயிருக்கும்’’
எனப் பாக்ஸை நீட்டினார்.
“இதெல்லாம் எதுக்கு’’ எனத் தயங்கியபடி அசோக்குமார் வாங்கிக் கொண்டார்
“உனக்குச் சுகரா.. எவ்வளவு இருக்கு’’
“சுகர் எல்லாம் இல்லை.. ஆனா நான் ஸ்வீட் சாப்பிடுறது கிடையாது’’
“மகுடு நிறைய ஸ்வீட் சாப்பிடுவான். ரெண்டு மாசம் முன்னாடி இங்கே பேமிலியோட வந்திருந்தான். நான் தான் சீரடிக்கு அழைச்சிட்டு போனேன். ’’
“நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க’’
“நான் ரிடயர்ட் ஆகிட்டேன். பொண்ணு பிரைவேட் ஆஸ்பிடல்ல நர்ஸா வேலை பாக்குறா.. மருமகன் ஷேர்மார்க்கெட். என் பேரனுக்குத் தான் வேலை கிடைக்கலை. உன் கம்பெனில தள்ளிவிடேன்’’
“என்ன படிச்சிருக்கான். ’’
“பாலிடெக்னிக்’’
“என் கம்பெனில அதுக்கு வேலை இருக்காது’’
“உனக்குத் தான் நிறைய பேரத் தெரியுமே. எங்கேயாவது தள்ளிவிடுப்பா’’
பதில் சொல்லாமல் அசோக்குமார் சிரித்தார்.
“மகுடு ஏற்பாடு பண்ணுறேனு சொல்லியிருக்கான். அவனும் பெரிய பிசினெஸ்மேன் தெரியுமில்லே’’
“அப்படியா.. ’’
“மகுடு சொந்தமா ஸ்டீல் கம்பெனி வச்சிருக்கான். அவன் மாமனார் பெரிய ஆளு.. மகுடு வருஷத்துக்கு ஐந்தாறு கோடி சம்பாதிக்கிறான்’’
“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு... கிளம்பணும்’’ என அவசரமாக ஸ்வீட் பாக்ஸை மறந்து போனவரை போன நடக்க ஆரம்பித்தார். காரில் ஏறுவதற்குள் மகுடபதியிடமிருந்து போன் வந்தது. அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஹோட்டல் பணியாளர் ஸ்வீட் பாக்ஸை எடுத்துக் கொண்டு காரை நோக்கி வந்தார். அவரையே வைத்துக் கொள்ளும்படி சொன்னார் அசோக்குமார்.
மும்பையில் இருந்த நாள்களில் மட்டும் பதினாறு முறை மகுடு அழைத்திருந்தார். ஒருமுறையும் அவரோடு பேசவில்லை.
சென்னை திரும்பி வீடு வந்து சேர்ந்தபிறகு மகுடபதியை பற்றியும் சின்னலோகு பற்றியும் மனைவி மகளிடம் சொன்னார். அவர்கள் வெடித்துச் சிரித்தார்கள்
“டாடி நீங்க எப்பவோ டென்த்தை தாண்டி வந்துட்டீங்க. அவங்களாலே வர முடியலை’’ என்றாள் சின்ன மகள். ரேணு
“அவங்களுக்கு எப்படி உங்க நம்பர் கிடைச்சது ’’எனக்கேட்டாள் அசோக்குமாரின் மனைவி கிரிஜபாலா.
“அதான் தெரியலை. நான் யார்கூடயும் டச்சிலே இல்லை’’
“நம்பர் கண்டுபிடிக்கிறது எல்லாம் ஈஸி டாடி’’ என்றாள் ரேணு
இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் மகுடபதி புதிதாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்து அதில் பழைய நண்பர்கள் அனைவரையும் இணைத்திருந்தார். பழைய சினிமா. பழைய பாடல்கள். அந்தக் கால நினைவுகள். பள்ளி நாள்களில் நடந்த வேடிக்கைகள் எனப் பலரும் பகிர்ந்து கொண்டார்கள். கூடவே ஏராளமான மருத்துவ ஆலோசனைகளும், ஆரோக்கியக் குறிப்புகளும் அரசியல் செய்திகளும் இடம் பெற்றன. அதிலிருந்து விலகிவிட நினைத்த போதும் தயக்கமாக இருந்தது.
ஒரு நாள் அந்த வாட்ஸ்அப்பில் குழுவில் இருந்த முருகேசன் போனில் அழைத்திருந்தார்
“அசோக்.. உன் ஜாதகம் இருந்தா அனுப்பி வையேன்.. பாத்து சொல்றேன்’’
“அதெல்லாம் வேணாம்’’.
“காசு தர வேண்டாம். நம்ம பிரண்ட்ஸ் எல்லோருக்கும் ப்ரீ தான். நான் நல்லா ஜாதகம் பார்ப்பேன். நம்ம தண்டபாணி மகளுக்குக் கூட நான் தான் ஜாதகம் பாத்து கொடுத்து தான் கல்யாணம் நடந்துச்சி’’
“எனக்கு இதெல்லாம் பிடிக்காது“
“அப்படிச் சொல்லாதே. உன்பிறந்த நேரம் நாள் இடம் சொல்லு. நானே ஜாதகம் ரெடி பண்ணிகிடுவேன்’’
“என் ஜாதகத்தைப் பாத்து நீ என்ன செய்யப்போறே’’… எனச் சற்றே கோபமாகக் கேட்டார் அசோக்குமார்
“நம்ம பிரண்ட்ஸ் நல்லா இருந்தா.. அது எனக்குச் சந்தோஷம்.. ’’
“நான் நல்லாதான் இருக்கேன்.. நீ தான் தேவையில்லாம தொல்லை பண்ணுறே ’’என அந்த அழைப்பைத் துண்டித்தார்
மறுநாள் மகுடபதி அழைத்திருந்தார்
“முருகேசனை கோவிச்சிகிட்டயாமே. ரொம்ப வருத்தப்படுறான். அவன் கிட்ட ஒரு சாரி கேட்டிரு.. ’’
“எனக்கு இதெல்லாம் பிடிக்காது மகுடு’’
“நீ சின்னவயசிலயே சாமி கும்பிட மாட்டயே.... முருகேசன் உன் நல்லதுக்குத் தானே ஜாதகம் பாக்குறேனு சொன்னான், அவன் சொல்றது அப்படியே நடக்கும். ஒரு தடவை டெஸ்ட் பண்ணி பாரு’’
“அதெல்லாம் வேணாம்’’ எனப் போனை வைத்தார் அசோக்குமார். இவர்கள் எதற்காகத் தன் மீது இத்தனை உரிமை எடுத்துக் கொள்கிறார்கள் என எரிச்சலாக வந்தது.
அன்றிரவே அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து அசோக்குமார் விலகிக் கொண்டார். அதனை மகுடபதி பெரிதுபடுத்தவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின்பு போனில் அழைத்துக் கேட்டார்
“நாங்க எல்லோரும் ஒண்ணா திருவண்ணாமலை பாதயாத்திரை போறோம். நீயும் வர்றயா’’
“என்னைத் தொந்தரவு பண்ணாதே. நான் எங்கேயும் வரமாட்டேன் எனக்கு நிறைய வேலையிருக்கு..’’
“பாத யாத்திரை ஜாலியா இருக்கும்.. கூட வாப்பா. ’’.
“சொன்னா புரிஞ்சிகிட மாட்டியா ’’ என அசோக்குமார் கோபமாகப் போனைத் துண்டித்தார். ஆனால் அந்தக் கோபம் மகுடபதியை எதுவும் செய்யவில்லை. மறுநாள் மதியம் திரும்பவும் அழைத்தார்
“நேத்து கோவமா இருந்தே போல. அதை நான் மனசுல வச்சிகிடலே. நம்ம ஞானதுரை இருக்கானே. அவன் சின்ன மகளுக்கு வேலை வேணுமாம். உன் கம்பெனில ஏதாவது வேலை இருந்தா பாரேன்.’’
“மகுடு.. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் பேசு. எனக்கு ஆபீஸ் வேலை நிறைய இருக்கு. நான் ஆபீஸ்ல நூறு பேரை சமாளிக்கணும்’’
“இவ்வளவு டென்ஷனா இருந்தா பிரஷர் ஜாஸ்தியாகிடும். நீ லீவு போட்டுட்டு வா. நாம கொடைக்கானல்ல போயி ரெண்டு நாள் பேசிகிட்டு ஜாலியா இருப்போம். ரிலாக்ஸ் பண்ணிகிடலேன்னா. ஹார்ட் பிரச்சனை வந்துரும். ’’
“அதெல்லாம் நான் பாத்துகிடுவேன் நீ போனை வை’’
அதன்பிறகு மகுடபதி போன் பண்ணவில்லை. ஆனால் பள்ளியில் படித்த பலரும் நேரம் கெட்ட நேரத்தில் பேச ஆரம்பித்தார்கள். சிலர் சென்னை வந்துள்ளதாகச் சொல்லி நேரில் பார்க்க விரும்பினார்கள். அசோக்குமார் எவரையும் சந்திக்கவில்லை.
அதன் சில மாதங்களுக்குப் பிறகு மகுடபதியிடமிருந்து போன் வந்தது
“பையனுக்குப் பொண்ணு பாத்துட்டு இருக்கேன். உனக்குத் தெரிஞ்ச இடம் ஏதாவது இருந்தா சொல்லு’’
“எனக்கு யாரையும் தெரியாது’’
“உன் பெரிய மக அமெரிக்காவுல தானே வேலை பாக்குறா.. . அவ வயசு என்ன. ’’
அதைக்கேட்டவுடன் அசோக்குமாருக்கு எரிச்சல் வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்தார்.
“ நான் சாதிகீதி எல்லாம் பாக்கிறவன் கிடையாது உன் மக போட்டோவை அனுப்பிவை.. என் மகன் பாக்கட்டும். பிடிச்சிருந்தா கல்யாணத்தை நடத்திருவோம். . ’’
பதில் சொல்லாமல் அசோக்குமார் போனை துண்டித்தார். இதைப்பற்றித் தனது மனைவியிடம் சொன்னபோது அவள் கோபித்துக் கொண்டாள். அதன்பிறகு மகுடபதி பலமுறை போன் செய்த போதும் அவர் பதில் பேசவில்லை. பின்பு ஒரு நாள் மகுடபதி வேறு ஒரு போன் நம்பரில் இருந்து கூப்பிட்டார்
“மகனுக்குக் கல்யாணம் பேசிட்டேன். நீ தான் உன் மகளைக் குடுக்கமாட்டேனு சொல்லிட்டே…. எனக்குப் பொண்ணு கிடைக்காமலா போயிடும்’’ என்றார்
“என்ன பேசுறேனு தெரிஞ்சி தான் பேசுறயா மகுடு’’
“நீ என் பிரண்டு. பொண்ணு கேட்டது தப்பா’’
“பிரண்டு இல்லை. கூடப் படிச்சவன். ’’
“ரெண்டு ஒண்ணு தானே’’
“இல்லை’’
“அப்போ உன்வீட்ல பொண்ணு கேட்க எனக்குத் தகுதியில்லைனு சொல்றயா’’
“அப்படியில்லை. இதெல்லாம் கேட்க கூடாதுனு உனக்கு நாகரீகம் தெரியலை’’
“ இதுல நாகரீகம் எங்கே கெட்டு போச்சு. என் மகளை நீ கேட்டு இருந்தா நான் குடுத்துருப்பேன்’’
“நான் ஒரு நாளும் இப்படிக் கேட்க மாட்டேன். ’’
“ஏன்டா கோவிச்சிகிடுறே. என் பையன் சாப்ட்வேர் கம்பெனில ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குறான். நாலு இடத்துல பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம். அதுல உன் வீட்ல பொண்ணு இருக்குனு தெரிஞ்சது. கேட்டேன், நான் கேட்டதுல ஒரு தப்புமில்லை. உன் பொண்டாட்டி வேணாம்னு சொன்னாளா. பெங்காலிக்காரி.. அப்படி தான் பேசுவா’’..
தன் மனைவியை இப்படி மகுடு பேசுவது அசோக்குமாருக்கு ஆத்திரத்தை உருவாக்கியது. மகுடு எண்ணை தனது தொடர்பிலிருந்து உடனே நீக்கினார். ஆனால் அன்றிரவே வேறு எண்ணில் அழைத்த மகுடபதி தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். அசோக்குமார் மன்னிக்கவில்லை.
அடுத்த வாரம் பழனி கோவிலில் இருந்து பஞ்சாமிர்தம் விபூதி என ஒரு பார்சல் அனுப்பி வைத்தோடு உன் மகளுக்கு நல்ல இடத்துல கல்யாணம் நடக்கணும்னு வேண்டிகிட்டேன் என மகுடபதி குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார்.
அவரை எப்படிக் கையாளுவது என்றே அசோக்குமாருக்குப் புரியவில்லை. இந்த இம்சையை அசோக்குமாரின் மனைவியும் மகளும் வெகுவாக ரசித்தார்கள். கேலி செய்தார்கள். நீ தப்பிக்கவே முடியாதுப்பா.. என்றாள் மகள்.
பத்து நாள்களுக்குப் பின் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அசோக்குமார் போனை எடுத்த போது மறுமுனையில் ராஜராம் என்றொருவர் பேசினார்
“மகுடு பத்திரிக்கை குடுக்க என் வீட்டுக்கு வந்திருக்கான். உன் வீடு எங்கே இருக்கு.. நாங்க ரெண்டு பேரும் வர்றோம்… நம்ம செட்டில நீயும் மாதவனும் தான் லவ்மேரேஜ். அவன் இப்போ கொச்சியில இருக்கான். அவன் பொண்டாட்டி மலையாளி. ’’
“எந்த மாதவன். ’’
“நீ எல்லோரையும் மறந்துட்டே. இப்போ போட்டோ அனுப்புறேன் பாரு’’
எனப் பழைய பள்ளிக்கூடப் புகைப்படம் ஒன்றை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.
அந்தப் போட்டோவில் அசோக்குமார் ஒல்லியமாக உயரமாக இருந்தார். இப்படி ஒரு போட்டோ அவரிடமேயில்லை. அதிலிருந்த எவரது முகமும் நினைவிற்கு வரவில்லை. தன்னைத் தவிர யாரையும் தெரியவில்லையே எனக் குற்றவுணர்வாகவும் வந்தது.
“உன் அட்ரஸ் சொல்லு. நாங்க நாளைக்கு வர்றோம். மகுடு மேல நீ கோபமா இருக்கேனு சொன்னான்.. ஒரு வார்த்தை அவன்கிட்ட பேசிடு.. கல்யாணம் வச்சிருக்கிவன்.. மனசு கஷ்டப்படக்கூடாது’’
எனப் போனை மகுடபதியிடம் கொடுத்த போது அசோக்குமார் விருப்பமில்லாமல் பேசினார். மகுடபதி உற்சாகமாக குரலில் சொன்னார்
“பத்திரிக்கை குடுக்க வர்றேன். நீ குடும்பத்தோட வந்துரணும்’’
“வர்றேன். எந்த ஊர்ல கல்யாணம்?’’
“சேலத்துல.. பொண்ணு வீடு நடத்துறாங்க உன் வீடு எங்கே இருக்கு.. அட்ரஸ் அனுப்பி வை.. ’’
“வீடு நீலாங்கரையில.. நாம ஆபீஸ்ல மீட் பண்ணலாம்’’
“ஏன் வீட்டுக்கு வரக்கூடாதா.. கல்யாணம் பத்திரிக்கை எல்லாம் ஆபீஸ்ல வச்சி குடுக்கக் கூடாது. அது மரியாதையில்லை, ’’
“நீ பத்திரிக்கையை வாட்ஸ்அப்ல அனுப்பி வை.. அது போதும்’’.
“வாட்ஸ்அப்லயே அட்சதை போட்டிருவியா. நம்ம பிரண்ட்ஸ் எல்லோரும் கல்யாணத்துக்கு வர்றாங்க. முப்பது ரூம் போட்டிருக்கேன். கல்யாணம் முடிஞ்ச மறுநாள் நாம ஒண்ணா ஏற்காடு போறோம். ரம்மி ஆடுறோம் ’’
“ எனக்கு நேரம் இருக்காது’’
“அப்படி ஒட முடியாது. நீ வர்ற. உன் சட்டை சைஸ் என்ன சொல்லு’’
“எதுக்கு’’
“கல்யாணத்துல நாம எல்லோரும் ஒரே கலர்ல சட்டை போடணும். திருப்பூர்ல நம்ம மணி இருக்கான். அவன் ரெடி பண்ணித் தர்றேனு சொல்லியிருக்கான். ’’
“அதெல்லாம் வேணாம்’’
“சந்தனக் கலர் சட்டை. அதுல சேவியர் சூப்பர் பாய்ஸ்னு போடச் சொல்லியிருக்கேன். ’’
“அதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அந்த மாதிரி சட்டை எல்லாம் போடமாட்டேன்’’. என்று சப்தமாகச் சொல்லியபடி போனை துண்டித்தார்
“நல்லா மாட்டினீங்களா.. நல்லவேளை உங்களை ஸ்கூல் யூனிபார்ம் போட்டுட்டு கல்யாணத்துக்கு வரச்சொல்லாம விட்டாங்க’’ எனக் கேலி செய்தாள் ரேணு
அதன் நான்கு நாள்களுக்குப் பிறகு அசோக்குமார் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் ஹாலில் இரண்டு தட்டு நிறைய ஆரஞ்சு பழங்கள். ஆப்பிள் பழங்கள் இருந்தன. அதன் மீது ஒரு மஞ்சள் தடவிய திருமணப் பத்திரிக்கை. இரண்டு ஸ்வீட் பாக்ஸ்கள்.
“மகுடபதி வந்திருந்தானா ’’என மனைவியிடம்கேட்டார்
“ஆமா.. ஆறேழு பேர் கூட வந்திருந்தாங்க. எனக்கு ஒரு மஞ்சள்கலர் பட்டுப் புடவை. உங்களுக்கு வேஷ்டி சந்தனக்கலர் சட்டை குடுத்தாங்க. ’’
“அவனுக்கு எப்படி அட்ரஸ் கிடைச்சது’’
“அதை நான் கேட்கலை. உங்க பிரண்டுக்கு என்ன பேசறோம்னே தெரியலை. லொட லொடனு எதையோ பேசிகிட்டு இருக்கார். இதுல எனக்கு தனி அட்வைஸ். உங்க மகளுக்கு நிறைய அட்வைஸ் பண்ணிட்டுப் போயிருக்கார். ’’
“என்ன சொல்றான்’’
“நீ ஏன் பாப்பா இவ்வளவு குண்டா இருக்கேனு. உடம்பை குறைக்க வெறும் வயிற்றுல தேன்சாப்பிடுனு அட்வைஸ். அவ செம கடுப்பாகிட்டா’’
“அவங்களை எதுக்கு வீட்டுக்குள்ளே விட்டே’’
“கல்யாண பத்திரிக்கை குடுக்க வந்தவங்களை எப்படி வெளிய போகச் சொல்றது. அவரோட வந்த ஒரு பொம்பளை நான் என்ன டைப் தாலி போட்டிருக்கேனு காட்டச் சொல்றாங்க. ’’
“நான்சென்ஸ். ’’
கோபத்தில் அவள் பெங்காலியில் ஏதோ சொன்னபடியே உள்ளே சென்றாள். மகுடபதியின் மீதான கோபம் அதிகமாகியது. அவன் திருமணத்திற்குப் போகக் கூடாது என உறுதியாக முடிவு எடுத்தார்.
கல்யாணத்தின் முதல்நாள் மதியம் மகுடு போன் செய்தான். அசோக்குமார் எடுக்கவில்லை. அன்றிரவு வரை தொடர்ந்து அந்த அழைப்பு வந்தபடி இருந்தது.
மகுடபதியின் மகன் கல்யாணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை மகுடு அனுப்பி வைத்திருந்தான். சந்தனக் கலர் சட்டை போட்ட பதினாறு பேர் ஒன்றாக நின்றிருந்தார்கள். சட்டையில் சேவியர் சூப்பர் பாய்ஸ் என முத்திரை. எல்லோர் கழுத்திலும் ரோஜா மாலை. தான் போயிருந்தால் இந்த வரிசையில் ஒருவனாக நின்றிருக்கக் கூடும்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு வேறு சின்னலோகு போனில் அழைத்தான்
“நீ தான் கல்யாணத்துக்கு வரலை. மகுடு.. நம்ம பிரண்ட்ஸ் எல்லோருக்கும் மகுடு ஐபோன் வாங்கிக் குடுத்திருக்கான்.. ரெண்டு நாள் ராஜ உபசாரம். அப்படியே எல்லோரும் ஏற்காடு போயி ஜாலியா இருந்தோம்.. உன் மக கல்யாணத்துக்காவது எங்களைக் கூப்பிடுவியா. ’’
அசோக்குமார் பதில் சொல்லவில்லை
மறுநாள் மகுடுவிடமிருந்து ஒரு கூரியர் வந்தது. அதில் பிரேம் செய்யப்பட்ட பெரிய புகைப்படம். கல்யாணத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படம். ஆச்சரியமாக அதில் அசோக்குமாரும் இருந்தார். புகைப்படத்தின் கூடவே மகுடு சிறிய கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தான்
“போட்டோஷாப்ல உன்னையும் சேர்த்துட்டேன். இந்தப் போட்டோ நம்ம பிரெண்ட்ஸ் எல்லோர் வீட்லயும் இருக்கணும். நாம எல்லாம் சேவியர் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவங்க. அதை மறந்திரக்கூடாது ’’
அந்தப் புகைப்படத்திலிருந்த முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே இருந்தார். பள்ளிவயதின் கனவுகளை எவரும் அடையவில்லை. ஆளுக்கு ஒரு வேலை. அவரவர் அளவில் வாழ்க்கை. பத்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே அவர்களை மகிழ்ச்சிப்படுத்தப் போதுமானதாகயிருக்கிறது.
தனக்கோ அந்த நினைவுகள் உதிர்ந்த சிறகினை பறவை வேடிக்கை பார்ப்பதைப் போலிருக்கிறது. பழைய நண்பர்களிடம் எதற்காக சம்பிரதாயங்களை எதிர்பார்க்கிறோம். வயதை ஒருவன் எளிதாக கலைந்துவிடுகிறானே என்ற கோபமா. வயதை மறந்து அவர்கள் ஆடும் விளையாட்டில் பங்குபெறுவதற்கு ஏன் மறுக்கிறோம். சுயமதிப்பீடும். அதிகாரமும் தான் தடுக்கிறதா.
மகுடு தன்னுடைய வயதை மறந்து நினைத்த நேரம் பத்தாம் வகுப்பிற்கு திரும்ப போய்விடுகிறான். சந்தோஷமாக அந்த நாள்களை நினைவு கொள்கிறான். அந்த மகிழ்ச்சியைப்- பரவவிடுகிறான். அது போல ஏன் தன்னால் செய்ய முடியவில்லை? நிறைய படித்ததால் ஏற்பட்ட விளைவா?
மகுடு உரிமை எடுத்துக் கொள்வதை ஏன் நிராகரிக்கிறோம் என அசோக்குமாருக்கு குழப்பமாக இருந்தது.
யோசிக்க யோசிக்க மகுடின் செயல்களுக்கு பின்னிருந்த மாறாத பள்ளி நினைவுகளும் அதன்வழியே வெளிப்பட்ட வாஞ்சையும் உணர முடிந்தது.
மகுடு அனுப்பிய புகைப்படத்தை எங்கே மாட்டுவது எனத் தெரியாமல் அலமாரியின் அடித்தட்டில் கொண்டுபோய் வைத்தார். திருமணப் பத்திரிக்கையோடு மகுடு கொடுத்துப் போன சந்தனக்கலர் சட்டையை மனைவி எங்கே வைத்திருக்கிறாள் எனத் தெரியாமல் தேட ஆரம்பித்தார்.
அதனை அணிந்து பார்க்கும் ஆசை வந்திருந்தது.