short_story
ஓவியம்: ரவிபேலட்

கதை சொல்லிக

Published on

இந்த இடத்துல சொந்தமா வீடு கட்டி வந்ததுக்கு சத்யா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்னு தோணுச்சு. சத்யா வீட்லயிருந்து ரொம்ப கொஞ்ச தூரத்துலதான் அந்த ஆலமரம் இருந்துச்சு. ஆலமரம்னா சாதாரண ஆலமரம் இல்ல. அசுரத்தனமா, நூத்துக்கணக்கான மலப்பாம்பு சைஸ் விழுதுகளோட சூரியனுக்குப் போட்டியா எப்பவுமே நிழல மட்டுமே தர்ற ஒரு குளிர் சூரியன் மாதிரி பெரிய பச்ச நெற ராட்சதக் கொட போல இருந்துச்சுன்னா, அதிலயிருந்தே அந்த ஆலமரம் எவ்வளவு பிரம்மாண்டம்னு தெரிஞ்சுக்கலாம். கூடவே, எப்போதும் வத்தாத பால்மாதிரியான கம்மாய். அந்தக் கம்மாய்க்குள்ள முங்கி எந்திரிச்சு இராப்பகலா சிலுசிலுன்னு அந்த ஏரியா முழுதும் வீசுற சுகமான காத்து.

ரொம்ப ரொம்ப மனசுக்கு இதமான சூழல். நாகராஜனுக்கு வெவரம் தெரிஞ்சு அம்பது அறுபது வருசமா அந்த மரத்தைப் பாத்திருக்கான். அப்பப் பாத்த மாதிரி இப்பவும் அப்படியேதான் இருக்கு.

அந்த ஆலமரம் இருக்குறதும் ஒரு பெரிய நீள அகலமான கம்மாய் கர தொட்டு, கம்மாய்க்கு இரு பக்கத்திலயும் பரவிக் கிடக்கிற கிராமத்து நுழைவாயில்லதான். ஆலமரத்திற்கு சப்போட்டா கம்மாய் முழுசுலயும் எப்பவுமே செவலை நெறத்துல தண்ணீ பால்போல நெறஞ்சு கெடக்குறதுனால, கம்மாய்க்குள்ள ஊணிக் கெடக்குற ஏராளமான விழுதுகள் மூலமா தண்ணிய உறிஞ்சி உறிஞ்சி அந்த ஆலமரமும் எப்பவுமே பசும மாறாம குளுகுளுன்னு, சிலுசிலுன்னு காத்து வீசிக்கிட்டிருக்கும். மரத்துக்குக் கீழ மொரட்டு முனீஸ்வரர் உருட்டுக் கண்ணுகளோட, கெடா மீச வெச்சுக்கிட்டு கையில பெரிய அருவாளோட ஆக்ரோக்ஷமா நின்னுக்கிட்டிருப்பாரு. பாக்குறதுக்குத்தான் முனீஸ்வரர் மொரடனாத் தெரியுறாரே தவிர, அந்தக் கிராம மக்களுக்கு கேக்குற வரங்கள அள்ளிக் கொடுக்குறதில ரொம்பவும் எளகிய மனசுக்காரருன்னு அந்தக் கிராம மக்கள் சொல்லுவாங்க.

வெயிலு கொளுத்தி எரியிற உச்சி மண்ட கொதிக்கிற ஒடம்பெல்லாம் சுட்டுப் பொசுக்குற பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள்லாம் அந்தக் கிராம மக்களுக்கு இந்த ஆலமரம்தான் நூறு டன் ஏ.ஸி.மாதிரி ஊரு பூராத்துக்கும் காத்தக் கொடுத்துக்கிட்டிருக்கும். கிராமத்து வீடுகள்னால, எல்லா வீடுகளுமே வாசல்ல திண்ண வெச்சுத்தான் கட்டியிருப்பாங்க. வாசல்லயும் சாணம் தெளிச்சு தண்ணி ஊத்துறதுனால அந்த எடங்களும் சூடு இல்லாம இருக்கிறதுனால கிராமத்துல முக்காவாசி சனங்க இந்த எடங்கள்லதான் பாய விரிச்சு, இராத்திரி வேளைகள்ல படுத்துத் தூங்குவாங்க. அதுனால அவுகளுக்கு பேன் கூட தேவப்படாது. ஊர்சனங்கள்ல கொஞ்சம் வயசான பெரிசுக, பகல் வேளைகள்ல நேரா ஆலமரத்தடிக்கு வந்து ஊர்க் கதைகளைப் பேசுனபடியே துண்டுகள விரிச்சுத் தூங்குங்க. மத்தியானம் பழைய கஞ்சிய வயிறாரக் குடிச்சுட்டு வந்து படுத்தாச்சுன்னா, பொழுது சாய்ற வரைக்கும் கதையும், தூக்கமும்தான்.

இந்த ஆலமரத்தடில வந்து படுத்துத் தூங்காதவங்க ஊருல ஒருத்தர்கூட இல்லைன்னு சொல்வாங்க. இங்க வந்து ஒக்காந்து ஊரு சனங்க பேசிக்கிட்டிருக்கிறதிலயிருந்து ஊர்ல உள்ள எல்லா வெசயங்களும் இந்த ஆலமரத்துக்குத் தெரியும். இது மட்டும் பேச ஆரம்பிச்சிசுன்னா நூத்துக்கணக்கான கதைகள இதால சொல்லமுடியுங்கிறதால இந்த ஆலமரமே ஒரு நல்ல “கதை சொல்லி”யா இருக்கும்கிறதுதான் நெசம்.

இந்த ஆலமரத்தடிக்கும் ஊருக்கும் நாகராசன் ஒண்ணாவது படிக்கிறப்ப ரெத்தினம் வாத்தியார் எக்ஸ்கர்க்ஷன் கூட்டியாந்திருக்காரு. ரெண்டு நாளக்கி முன்னாடியே அவரு ஒன்னாம் வகுப்புப் பசங்களுக்கு இந்தக் கிராமத்துக்கு எக்ஸ்கர்க்ஷன் வர்றதப்பத்திச் சொல்லியிருந்தாரு. பசங்கள்லாம் காலைல வீட்ல சாப்பிட்டுட்டு, மத்தியானத்துக்குப் புளியோதரையோ, லெமன் ரைசோ எடுத்துக்கிட்டு காலைல எட்டு மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு வந்துடணும்னு சொல்லியிருந்தாரு. ஸ்கூல்ல இருந்து இரண்டு மைல் தூரம் தான் இந்த ஆலமர ஊரு. அப்பல்லாம் இதுவே பெரிசு ஸ்கூல் பசங்களுக்கு. பசங்களோட ஊரும் அப்படியொண்ணும் பெரிய ஊரு இல்ல. நகரத்துலயும் சேராம, கிராமத்துலயும் சேராம நடுக்கட்டான் ஊரா இருந்துச்சு. இப்ப ஊட்டி, கொடைக்கானல் போற மாதிரி அந்த ஸ்டேஜ்ல இந்த ஸ்கூல், இந்தக் கிராம எக்ஸ்கர்க்ஷன் பசங்களுக்கு. ரத்தினம் வாத்தியாரோட, ரெண்டாம் கிளாஸ் புக்ஷ்பம் டீச்சரு தொணக்கி வந்திருந்தாக. ஸ்கூல்லயிருந்து ரெண்டு ரெண்டு பேரா கியூ வரிசையா நாங்க நடந்து போனோம். அப்பல்லாம் ஸ்கூல்லயே பெரிய தோட்டம் இருந்துச்சு. பெரும்பாலும் மஞ்சனத்தி மரங்கதான் ஜாஸ்தி. மஞ்சனத்திப் பழங்க கருப்பு நிறத்துல நாவல் பழ சைசில சாப்பிடறதுக்கு புளிப்பும் காரமும் சேந்த சுவையாயிருக்கும். நாங்க போன சீசன்ல மரம் காய்க்கலை. தோட்டத்தத் தாண்டி வெட்டவெளி தரிசு நில பாதை வழியா உற்சாகத்தோட நாங்க போனோம்.

மொதல்ல நேரா ரயில்வே ஸ்டேசனுக்கு எங்கள கூட்டிக்கிட்டுப் போனாங்க. ரொம்பவும் பழைய ரயில்வே ஸ்டேசன். ஓடு வேய்ஞ்ச கட்டடம். ரெண்டு, மூணு சிமெண்ட்டு பெஞ்சுக. ஸ்டேசனுக்கு வெளிய மூணு குதிர வண்டிக. ஸ்டேசனுக்கு வெளில இருந்த வேப்ப மரத்தடில குதிர வண்டிக நிக்க, வண்டிகள்ளயிருந்து குதிரகள அவுத்து கீழ கொஞ்சம் புல்லத் தூவி மேய விட்டிருந்தாங்க வண்டி ஓட்டிக. ஸ்டேசனுக்கு எதுத்தாப்ல ஒரு சின்ன டீக்கடை இருந்துச்சு. தொந்தியும் தொப்பையுமா ஒரு பெரியவரு மேல்சட்டை இல்லாம “பாய்லர்” கேண்லயிருந்து சுடு தண்ணி புடிச்சு, டீ போட்டுக்கிட்டிருந்தாரு. ரெத்தினம் சாரும், புஷ்பம் டீச்சரும் கண்ணாடி கிளாஸ்ல டீ வாங்கிக் குடிச்சாங்க. ரயில்வே ஸ்டேசன சுத்திப்பாத்துக்கிட்டிருந்தப்ப ஒரு ரயிலு கரிப்பொகைய அள்ளி வீசிக்கிட்டு விசில் மாதிரி கூவிக்கிட்டே வந்துச்சு. எங்களயெல்லாம் கொஞ்சம் தூரமா தள்ளி நிக்கச் சொல்லிட்டு, “இது தான் பசங்களா ரயிலு. ராமேசுவரத்துல இருந்து மெட்ராசுக்குப் போகுது. இந்த ஸ்டேசன் வழியா ஓடுற ஒரே ஒரு ரயிலு இதுதான்”னு சொல்லிட்டு, நாம இப்ப புதூர் ஆலமரத்தடியப் பாக்கப் போறம். வாங்க, போகலாம்னு” சொல்ல, நாங்களும் கௌம்புனோம். இரயில்வே ஸ்டேசனிலிருந்து மேற்கு நோக்கி நடந்து போனோம். அங்கயிருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரம் மண் சாலைல நடந்து போயி வலதுபுறம் திரும்பிக் கொஞ்ச தூரம் நடந்தாக்க புதூர் கிராம எல்லை வந்துரும். அதிலயிருந்து அஞ்சாறு வயலுகளத் தாண்டுனா ஆலமரமும் அது இருக்கிற கம்மாக்கரையும் வந்துரும். பசங்கள்லாம் ரொம்ப உற்சாகமா ஆலமரத்தடிக்குப் போனோம். அவ்வளவு பெரிய மரத்தப்பாத்து பசங்களுக்குலாம் ஒரே சந்தோசம். ஆலமரம் முழுவதையும் நாங்க சுத்திப் பாத்தோம். அதோட பெரிய பெரிய விழுதுகளயும் தொட்டு தடவிப் பாத்தோம். “டேய்... பசங்களா... கம்மாய்க்குள்ள யாரும் போயிரக் கூடாது. ஓராளு ஒசரத்துக்குத் தண்ணி கிடக்கு. ஏதாவதாச்சுன்னா யாரும் பதிலு சொல்ல முடியாது” என்று சாரும் டீச்சரும் அதட்டுனாங்க. நேரமும் மதிய நேரமாயிருச்சு. ஆனா, அந்த ஆலமரத்தோட நெழல்ல கொஞ்சம் கூட பொழுது கழிஞ்சதே தெரியல. “சரி.. எல்லாரும் வரிசையா ஒக்காந்து அவங்கவங்க கொண்டு வந்திருக்கிற மதிய சாப்பாட்டப் பிரிச்சுச் சாப்பிடுங்கன்னு” சொன்னாங்க. பசங்க எல்லாம் ஒண்ணா ஒக்காந்து அந்த மரத்தடில சாப்பிட்டது இன்னக்கி வரைக்கும் கண்ணவிட்டு மறயல. ரெத்தினம் சாரும், புக்ஷ்பா டீச்சரும் கொஞ்சம் தள்ளிப்போய் ஒக்காந்து சாப்பிட்டாங்க. “சரி... எல்லாரும் கௌம்பலாம், வாங்க”ன்னு சொல்ல, வந்த மாதிரியே வரிசைல ரெண்டு ரெண்டு பேராக் கௌம்புனோம். இப்ப திரும்பி வர்றபோது ஊருக்குள்ளயிருந்து டவுனுக்குப் போற வேற வழியில கூட்டியாந்தாங்க.

கிராமம் முடியுற இடத்தில நெறைய ஆவரஞ்செடி மஞ்சப்பூக்களோட பூத்துக் கெடந்துச்சு. அதை ஒட்டின வேலிக்காத்தான் மரங்கள்ள கொவ்வைப் பழக்கொடி அடர்த்தியாப் படந்து செவப்பு மிளகாய் கலர்ல கட்ட விரலத்தண்டி கொவ்வைப்பழம் பழுத்துக் கெடந்துச்சு. ரத்தினம் வாத்தியாரு ரொம்ப லாவகமா கையில வேலிக்காத்தான் முள்ளுக் குத்தீராம ஏழெட்டுப் பழங்களப் பறிச்சு, டீச்சருக்கும் நாலஞ்சு கொடுத்துட்டு, பழத்த வாய வச்சு உறிஞ்சிட்டு, தோலத்துப்புனாரு. டீச்சரும் அதே மாதிரி சாப்பிட்டு ரெண்டு பேரும் குசுகுசுன்னு ஏதோ சிரிச்சுப் பேசிக்கிட்டே வர நாங்களும் நடந்து பள்ளிக்கூடம் வந்து சேந்தோம்.

சத்யாவும், அவங்க வீட்டுக்காரர் நாராயணனும் நாகராஜனுக்கு ரொம்பவும் நெருங்கிய பழக்கம். அவங்க டவுன்ல ஒரு கம்ப்யூட்டர் சென்டர் நடத்திக்கிட்டிருக்காங்க. அவங்களோட சென்டர்லதான் நாகராஜன் அவனோட கதைகளையும், கவிதைகளையும் டி.டி.பி பண்ணுவான். அதுகளப் பத்திரிகைகளுக்கு அனுப்பி மூணு புத்தகங்களே வந்திருச்சு. சென்னையிலயிருந்து வந்து ஊர்ல இருக்கிற நாளுகள்ல அடிக்கடி டி.டி.பி சென்டருக்குப் போற வேலை வந்துரும். இல்லாட்டியும் அந்தப் பக்கம் போறப்ப அப்டியே சென்டருக்குள்ள போயிப் பாத்துப் பேசிட்டு வருவான். அந்த வகையில அந்நியோன்யமான பழக்கம். போன மாசம் அவங்க சொந்த வீடுகட்டிக் குடி போனப்ப, நாகராஜனால ஊருக்கு வர முடியாததால அப்பப்போக முடியல. இப்ப ஊருக்கு வந்திருக்கிறதுனால சத்யா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு கௌம்பினான். கிரகப்பிரவேசப் பத்திரிகையப் பாத்து விலாசம் தெரிஞ்சுகிட்டு போனப்பதான் அவனுக்குத் தெரிஞ்சிச்சு, அந்தப் பெரிய ஆலமரம் இருக்கிற புதூர் கிராமத்திலதான் அவங்க வீடு கட்டியிருக்காங்கன்னு. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்துச்சு.

கௌம்பி ரயில்வே ஸ்டேசன் வழியா அவங்க வீட்டுக்குப் போற வழியில அந்த ஆலமரம், நாகராஜன் ஒன்னாம் வகுப்புப் படிக்கிறபோது எக்ஸ்கர்க்ஷன் போன சமயத்தில பாத்த மாதிரியே அப்பிடியே கம்பீரமா நெழல் பரப்பி நின்னுக்கிட்டிருந்துச்சு. சித்திர மாச கோடை வெயில் காலமிங்கிறதால, கிராமத்துப் பெரியவங்க, ஆம்பளங்க, பொம்பளங்கன்னு இருபது முப்பதுபேரு அந்த மரத்தடில தாயம் வெளயாடிக்கிட்டும், துண்ட விரிச்சுப் படுத்துத் தூங்கிட்டுமிருந்தாங்க. கண்மாயிலயும் தண்ணி முழுக்க நெறஞ்சு ஆலமரக் காத்துல அலை அலையா சலம்பிக்கிட்டிருந்துச்சு. இதமான ரொம்ப இயற்கையான எதார்த்தமான இந்த இடத்துல ஒரு நாள் பகல் பொழுதில துண்ட விரிச்சுத் தூங்கணும்னு நெனச்சுக்கிட்டே டூவிலரை ஓட்டிக்கிட்டு சத்யா வீட்டுக்குப் போனான். ஊருக்கு வந்த ஒடனயே மறக்காம வீட்டுக்கு வந்ததில சத்யாவுக்கும் நாராயணனுக்கும் ரொம்பவே சந்தோசம். சத்யா போட்டுக் கொடுத்த பில்டர் காபிய குடிச்சிக்கிட்டே பேசிக்கிட்டு இருநதான் நாகராஜன். “சத்யா… நீங்க ரொம்பவே குடுத்து வெச்சிருக்கணும் இந்த இடத்துல சொந்தமா வீடு கட்டி வந்ததுக்கு. இந்தக் கிராமத்துக்கே நெழல் கொடுக்குற கடவுளா இருக்கிற ஆலமரத்துக்குக் கூப்பிடு தூரத்துல, ராப்பகலா எப்பவுமே சிலுசிலுன்னு குளுந்த காத்து, அதுவும் ததும்பிக்கிடக்கிற கம்மாய்க்குள்ள முங்கியெழுந்து ஈரவாசனையோட வீசுற ஆலமரக் காத்துல வசிக்கிறதுக்கு ரொம்பத்தான் குடுத்து வெச்சிருக்கணும். ஒரு நாளைக்கு இங்க வந்து இந்த மரத்தடில படுத்து நிம்மதியாத் தூங்கணும். அதுலயும், ஒரு மத்தியான வேளயில சில்லுனு ரெண்டு பீரக்குடிச்சிட்டு மெய்மறந்து பேன், ஏசிலாம் தாண்டுன சொகமான இந்த ஆலமரக் காத்துல அடிச்சிப் போட்ட மாதிரித் தூங்கணும்னு எனக்கொரு ஆசை”ன்னு நாகராஜன் சொன்னான்.

“தூங்கலாம் சார். ஆனா என்னன்னா இப்பல்லாம் மரத்துலயிருந்து நெறயப் பாம்புக கீழ விழுதுகளாம் சார். அதுதான் பயம்”ன்னு நாராயணன் சொன்னான். “அதுலாம் இல்லங்க சார். டிரிங்ஸ் எதுவும் குடிக்காமயோ வேற தப்புத்தண்டா எதுவும் பண்ணாமலயோ வந்து, மரத்தடி முனீஸ்வரரக் கும்பிட்டுட்டுப் படுக்கறவங்க மேல பாம்புலாம் விழுகாதுக சார்”ன்னு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே சத்யா சொன்னாங்க.

நாகராஜன் யோசிச்சான். குடிக்கக் கூடாதுங்கிறதயும், வேற தப்புத்தண்டா எதுவும் செய்யக் கூடாதுங்கிறதுயும் வாழப்பழத்தில ஊசி ஏத்துன மாதிரி என்னவொரு நாசுக்கான, மென்மையான அட்வைஸ். கூடவே “முனீஸ்வரர வணங்கிட்டு படுங்க சார்”ன்னு, கடவுள நம்புனா எல்லாமே நல்லபடி நடக்கும்னு” சொல்ற அர்த்தமான புத்திமதி சொல்ற பக்குவம் இந்தப் பொண்ணுக்குன்னு” சத்யாவ நெனச்சு நாகராஜன் ஆச்சர்யப்பட்டான்.

“இவங்ககிட்ட வந்து நாம எழுதுற கதையயெல்லாம் டி.டி.பி பண்ணி பத்திரிகைல வருது. பேச்சோட பேச்சா, இந்தப் பொண்ணு எதார்த்தமாச் சொல்ற அட்வைசே ஒரு கதையாவுல இருக்கு. இந்த ஆலமரத்தயும், சத்யா சொல்றதயும் வச்சே ஒரு அழகான கதை எழுதணும்கிற ஆசையோட, ஆலமரமும், கூடவே சத்யாவும் ஒரு தேர்ந்த “கதை சொல்லிக”தான்கிற எண்ணமும் ஒருசேர நாகராஜனின் மனசுக்குள் எழுந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com