
ஊர் வந்து சேர்ந்தபோது உச்சிவெயில். 5 மணிநேரப் பயணம். முன்பு அரைமணி பயணத்தில் இருந்தோம். நினைத்தால் வந்துபோக முடியாத அளவு தொலைவாகி இப்போது குடும்பமாகச் சென்னை வந்துவிட்டோம். முன்பெல்லாம் ஊருக்கு வருவதாயிருந்தால் கோடை விடுமுறைதான். நானும் என் தம்பியும். ஊரிலிருக்கும் மாமன் மகன்கள் இருவர். எங்கள் நால்வரோடு தெருவிலிருக்கும் பொடிசுகள் எல்லாம் சேர்ந்து பொழுதுபோவது தெரியாமல் விளையாட்டே கதியென்று கிடப்போம்.
எங்கள் மாமாவின் குடும்பம் சிவலிங்கம் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்தது. இருவரும் பலகால நண்பர்கள். ஒருமுறை என் பாட்டி திட்டியதற்காக டில்லிக்கு ஓடிப்போனார் மாமா. அங்கிருந்து சிவலிங்கத்தோடு மட்டும்தான் கடித உறவு வைத்துக்கொண்டார். சிவலிங்கம் அந்தக் கடிதங்களைப் பத்திரமாக வைத்திருந்து எங்களிடம் காட்டி ‘உங்க மாமன் எழுதுனது’ என்று அடிக்கடி சொல்லுவார். நாங்களும் உரிமையாக அவரது வீட்டிற்குப் போவோம். அவர் மனைவி கற்பகத்திற்கு அது பிடிப்பதில்லை. எப்போதாவதுதான் எங்களிடம் நன்றாகப் பேசுவாள். மற்றபடி சிடுசிடு. அரிதான சிரிப்பு. எங்களுக்கு அவளைப் பார்க்கவே பயம். வெடுக்கென்று ஏதாவது சொல்லிவைப்பாள். யாருக்கும் அவளையும் அவளுக்கும் யாரையும் பிடிக்காது. என் மாமன் மகன்களிடமாவது எப்போதேனும் கரிசனம் காட்டுவாள். குடிக்கூலிக்காரர்கள், அழைத்தவுடன் உதவிக்கு வருவார்கள். என்னிடம் கரிசனம் காட்ட அவளுக்குப் போதுமான காரணங்கள் இல்லை. குடித்தனக்காரரின் உறவினன் என்பதைத் தவிர. நேரடியாகச் சொல்வதானால் என்னிடம்தான் அதிக கடுமை.
ஆனால் அருண் அண்ணனைக் கூப்பிட எங்களுக்கு வேறு வழி? அவளுக்குத் தெரியாமல் ஏதேதோ செய்துதான் அவரை வெளியே வரவைப்போம்.
அவர் எங்களைவிட ஆறேழு வயது மூத்தவர். டிகிரி வரை முடித்தவர். கழனி வேலைகள் நன்றாகப் பார்ப்பார். வீட்டுப் பின்புறம் இருந்த கொஞ்ச இடத்தில் சம்பங்கிப்பூ தோட்டம் போட்டிருந்தார். அதன் வரிசைகளுக்கு நடுவில் புதினாவும் மல்லியும் ஊடு கீரைகளாக இருந்தன. தண்ணீர் தெளித்து மனிதர்களை நிறுத்தினால் மனித முளைவிடும்படி நிலத்தைப் பக்குவம் செய்து வைத்திருப்பார். நான் நட்ட ஒரு சம்பங்கி கிழங்குகூட அவர் நிலத்தில் முளைத்துப் பூக்கத் தொடங்கியதை ஒரு முறை காட்டினார். என் கைக்கு அதிகமாக மொட்டு வைப்பதாகவும் சொல்லிச் சிரித்தார்.
தனியாளாகக் களையில் மருந்தடிப்பார். சில நாள்களில் நாங்களும் போவோம். கவிதாவும் உமாவும் உடன் வருவர். இருவருக்கும் இடையில் பிறந்தவர் அருண் அண்ணன். மதியம் தொடங்கி மாலைவரை வேலை நீளும். சம்பங்கிப் பூவின் தித்திப்பிற்கு வெட்டுக்கிளிகள் மிகுதியாக வரும். அவை கண்ணில் பட்டால் பாவம் பார்க்காமல் தலையைக் கிள்ளிவிடுவார். எங்களையும் கிள்ளச் சொல்லுவார். நான் பயந்தேன். ஒருமுறை என் கையைப் பிடித்து அவராகவே கிள்ளி எறிந்தார். வழுவழுவென்று கருப்பாகத் தலையோடு குடலும் அழுக்குமாக ஒட்டிக்கொண்டு வந்தது. எனக்கு அதைப் பார்த்ததும் பெரிய பயம். அதற்குமேல் அங்கு இருக்கவே முடியவில்லை. ஓட்டமாக ஓடியேவிட்டேன். பின்னர் அந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி அனைவரும் சிரித்தோம்.
தோட்டம் நீங்க, தனியாகப் பெரிய கழனியும் அவருக்கு இருந்தது. வீட்டிலிருந்து ஹைவே ரோடு வழியாகச் சைக்கிள் மிதித்தால் பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம். ஹைவே சாலையை ஒட்டிய மாதிரி அகன்றிருந்தது ஏழு ஏக்கர். பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் நாட்களில் துண்டும் சோப்புமாக அவர் வீட்டில் இருப்போம். இரண்டு, மூன்று சைக்கிள்கள் கொடுத்து எங்களை அழைத்துச் செல்வார். அந்த நிலத்தின் கிணற்றில்தான் நாங்கள் முதன்முதல் நீச்சல் பழகியது. அந்த நிலத்திலிருந்துதான் முதன்முதலாகப் பட்டம் விட்டது. நல்ல பாம்பைச் சந்தித்து. செடியோடு பிடுங்கிக் கலக்காய் சாப்பிட்டது. மரம் ஏறப் பழகியது. நெல் தூற்றும் களத்தின் நிழலில் அமர்ந்து தாயம் உருட்டியது. இதுபோல எங்கள் வாழ்வின் பல முதல்கள் அந்தக் கழனியிடம் இருந்தது.
பெரும்பாலும் கலக்காயும் நெல்லும்தான் விளைச்சல். ஒருபக்கத்தில் மாமரங்களும் உண்டு. மாங்காய்ப் பருவங்களில் கற்பகத்தின் கொடுவாளுக்கும் வெட்டுக் கட்டைக்கும் ஓய்வே இருக்காது. மாங்காய்களை நறுக்கி உப்புக் கண்டமாக்கிக் காயப் போடுவாள். மாங்காய்கள் மூட்டை மூட்டையாக வீடு வரும். ஊறுகாய்க்குச் சில மூட்டைகளும் பழம் பழுக்க சிலவும் பாதீடு. கற்பகத்தின் கைவலிக்குப் பிறகு மரங்களை ஏலம் விட்டனர். கை வலி என்பாளே தவிர எவ்வளவு மாங்காய்களையும் சலிக்காது வெட்டுவாள். கொஞ்ச நாள்களாக கைவலியோடு எல்லோரையும் திட்ட ஆரம்பித்தாள். ஏல விரைவுக்கு அது உடனடி காரணம். பெரிய லாபம் இல்லை. எனினும் கற்பகத்தின் பேச்சுக்கான விலை அது.
உமாவும் சில நேரங்களில் கற்பகத்திற்கு உதவுவாள். மாங்காய்த் துண்டங்களைக் காய வைக்க, மீண்டும் எடுத்து உள்ளே வைக்க, திட்டுகளை வாங்கிக் கொள்ள என. அருண் அண்ணனும் கற்பகத்திற்கு உதவிகள் செய்வார். அவளது காரணமில்லாத கடுகடுப்பு மட்டும்தான் அவருக்குப் பிடிக்காது. என்னிடம் கடுமையாகப் பேசியதை நான் அருண் அண்ணனிடம் சொல்வதில்லை. சொன்னால் அவளிடம் சண்டை பிடிப்பார். அதன் பிறகு என்னிடம் வந்து ‘நான் அப்படியா பேசினேன். நல்லா சொன்னடா பையா…’ என்பாள். ஆனாலும் மாற்றம் எதுவும் இருக்காது.
மூன்று வருடத்திற்கு முன்னர் வந்தபோதுகூட கழனியில் கலக்காய் பிடுங்கினார்கள். நாங்கள் சென்றிருந்தோம். பெரிய பெரிய மூட்டைகளில் பிடித்து சொசைட்டியில் போட்டது போக, சில மூட்டைகள் விதைப்புக்கு. காயவைத்து பருப்பும் தொலும்புமாக உரித்து பின்னர் புடைத்துப் பயிரிட காலம் பிடிக்கும். அதுவரை வீட்டின் தாழ்வாரத்தில் கிடக்கும். ஈரமண்ணுடன் கட்டிய கலக்காய் மூட்டைகள் வீடு முழுதும் மணக்கும். இரண்டு கலக்காய் எடுத்துச் சாப்பிட ஆசை தோன்றும். நான்தான் முதலில் மூட்டை வாயில் கைவைத்து ஒரு கை எடுத்தேன். என்னைத் தொடர்ந்து எல்லாரும் ஒரு கை. கற்பகம் உள்ளிருந்து என்னை முறைத்தாள். வந்து என்னிடம் கேட்டும் தொலைத்தாள். அருண் அண்ணனுக்கும் அவளுக்கும் பெரிய வாக்குவாதம். சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே கலக்காய்களைப் போட்டுவிட்டு ஓடிப்போனேன்.
அதன் பிறகு இப்போதுதான் ஊருக்கு வருகிறேன். பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து அருண் அண்ணனின் வீட்டிற்கு வந்தேன். சிவலிங்கம் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் ‘வா’ என்பது போல் தலையசைத்தார்.
“எப்படி அங்கிள்?”
“அதுதான் ஒன்னும் தெரியல. எல்லாம் கையை மீறி நடந்து முடிஞ்சுபோச்சு.”
அவரிடம் துக்கம் பொங்கியது. மூன்று வருடத்தில் கவிதாவைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தார். அதற்குக் கடனும் வாங்கியிருந்தார். அடுத்து உமாவுக்கு. அதற்கும் கடன். ஆறு மாதமாக அருண் அண்ணனுக்கு மருத்துவச் செலவு. அதற்கு அதிக கடன். யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான தலை நோயோடு அருண் அண்ணன் திடீரென்று செத்துப்போனார். கடனை அடைக்க கழனியைக் கடந்த போகம் முடித்து விற்றும் தொலைத்தார்.
“என்னால அந்தச் சமயத்துல வர முடியலே அங்கிள். எவ்வளவோ ட்ரை பண்ணேன்.”
“எல்லாரும் எல்லாத்துக்கும் வரணும்னு நெனச்சா எப்படிப்பா. அதெல்லாம் ஒன்னுமில்லை.”
“நீங்க ஸ்ட்ராங்கா இருங்க அங்கிள்.”
“எல்லாக் கடனும் அடைஞ்சிடுச்சு. வி.கே. சேடு கிட்டருந்து கழனி வித்த காசு 2 லட்சம் பாக்கி வந்தா கணக்கு தீர்ந்திடும்.”
எனக்கு இதிலிருந்து இறப்புக்கான காரணம் என்னவென்றுதான் பெரிதாக மனதிற்குள் ஓடியது. எந்தக் கணக்கு யாரிடம் பாக்கி இருக்கிறது. யார் கடன் கொடுத்தது. கடன் மூலப்பொருள். உடலும் உயிருமா? இருப்பே நீண்ட கடன். இருப்புக்கான அசல் எல்லோரிடமும் வந்துசேர்கிறது. அதன் வட்டி. வட்டியைத் திருப்புவதுகூட கலை. அதைச் சரிபார்ப்பது ஜீவ தத்துவம். பாக்கியுடன் செல்லும் சிலர். பலர் தலையில் பிரித்து வைக்கும் சிலர். மிச்சம் வைக்காமல் கணக்கு தீர்க்கும் சிற்சிலர்….
இப்படியெல்லாம் ஒரு விசாரம் மனதிற்குள் இவ்வேளையில் நிகழ்ந்து கொண்டிருப்பது சரியா? இறப்பு நடந்த வீட்டுக்குத் தனியாகச் சென்று துக்கம் விசாரிப்பது எவ்வளவு தர்ம சங்கடமான காரியம். எங்கிருந்து தொடங்குவது? எந்தச் சொல் சமாதான அஸ்திரம். எப்படி இழப்புக்கு ஈடு சொல்வது. அவர்களைத் தேற்றுவது. சில சமயங்களில் பழைய நினைவுகளை நாமாகக் கிளறி விடவும் கூடும். துக்க முடிச்சுகள் தொண்டையை இறுக்கும். ‘நம்மோடு எப்போதும் அவர்கள் இருப்பார்கள்’ என்று சொல்வது ஓரளவு ஆறுதலைத் தரலாம். நிதர்சனம் உணரும்வரை. அதைவிடச் சங்கடமானது அங்கிருந்து புறப்படுவது. கிட்டத்தட்ட மீண்டும் அவர்களை பழைய வேதனைப் பாழில் தள்ளிவிட்டுச் செல்வதுபோல.
இதையெல்லாம் யோசித்தபடி நான் மெதுவாக எழுந்தேன். கற்பகம் உள்ளிருந்து எழுந்து வந்தாள். சிறுவயதில் பார்த்த அதே பயம் எங்கிருந்தோ வந்து என்னைப் பற்றியது. ஆனால் அவள் என்னிடம் உற்சாகத்தோடு சிரித்தபடிதான் கேட்டாள்.
“அருணைப் பாத்தியாடா பையா?”. சுவரில் இருக்கும் படத்தைக் காண்பித்தாள்.
“ம்… பாத்தேன்.”
“என்ன சிரிச்ச முகமா இருக்கான் பாத்தியா!”
“ஆமா” என்று சொல்லிக்கொண்டே வெளியில் செல்ல தாழ்வாரத்தில் மூட்டைகள் பக்கலில் வந்து நின்றேன்.
“கலக்கா எடுத்துக்கடா பையா.”
“இல்ல. இருக்கட்டும்.”
“பஸ்ல ரொம்பதூரம் போறல்ல. தின்னுக்கிட்டே போடா பையா.”
அவளே விடை தந்ததுபோல ஒரு கவர் நிறைய கலக்காய்கள் என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளா என்னிடம் இப்படிப் பேசியது. கலக்காய் கொடுக்கிறாள். நான் பார்த்த கற்பகம் நூறு மடங்கு எட்டாதவள். சிரித்தபடி கொடுத்ததை நான் கவனித்தேன். இவ்வளவு துக்கத்திலும் அவளுக்கு எப்படி முடிகிறது?... இப்போது இந்த நிதானமும் நிச்சலனமும்.
பஸ்ஸில் ஏறி ஜன்னலோரமாக அமர்ந்து கலக்காய்களை உரிக்கத் தொடங்கினேன். வெளியே சாலையோரத்தில் ‘வி.கே. பில்டர்ஸ்’ போர்டு பெரிதாகத் தெரிந்தது. கையில் வைத்திருந்த கலக்காய் மணிகளை அந்த போர்டு பக்கத்து மண்ணில் வீசினேன். அடுத்த கலக்காய் விதைப்புக்கு வருவதாகத்தான் அருண் அண்ணன் உயிரோடு இருந்தபோது சொல்லியிருந்தேன்.
இன்னொரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். அருண் அண்ணனிடம் சமீபத்தில் போனில் பேசியபோது, தலைக்குள் வெட்டுக்கிளிகள் அலறுவதுபோலக் கேட்கிறது என்றுதான் சொன்னார். சொல்லி ஒரு வாரத்தில் இறந்துபோனார்.