சதாசிவம் வீட்டின் முன்பு வந்து கல்பனா நின்றபோது மணி நாலு இருபத்தியாறு ஆகியிருந்தது. அவளாகத் தேர்வு செய்து எடுத்து வந்திருந்த வுதரிங் ஹைட்ஸ் நாவலை கையில் வைத்திருந்தாள். நிச்சயம் அவருக்குப் பிடிக்கக் கூடும் என்று தோன்றியது.
சதாசிவம் வீட்டினை சேர்மன் ஹவுஸ் என்று அழைத்தார்கள். சதாசிவத்தின் அப்பா நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அவர் யானை சின்னத்தில் நின்று தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். அதன் நினைவாக வீட்டுத் தோட்டத்தில் யானை சிலை செய்து வைத்திருந்தார்கள்.
வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள். அதில் இரண்டு பெரிய மாமரங்கள். பணியாளர்களுக்கான குடியிருப்பு. பெரிய போர்டிகோவுடன் கூடிய வீடு. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கதவுகள். தர்பார் மண்டபம் போன்ற பெரிய ஹால். அதில் தொங்கும் பெல்ஜியம் லாந்தர் விளக்குகள். அகலமான பெரிய ஜன்னல் கொண்ட அறைகள். வீனஸ் சிலை ஒன்றுடன் கூடிய நீருற்று யானை சிலையை ஒட்டி அமைக்கபட்டிருந்தது.
***
கல்பனா வாடகை நூலகம் ஒன்றில் வேலை செய்தாள். அவள் படித்த பி.ஏ. விற்கும் இந்த வேலைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. சேகரன் மாமாவின் சிபாரிசால் இந்த வேலையில் சேர்ந்து கொண்டாள். மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம். வாரம் வியாழக்கிழமை விடுமுறை.
ஒரு நாளைக்குப் பத்து பேருக்கும் குறைவாகவே வாடகை நூலகத்திற்கு வருகை தந்தார்கள். வாடிக்கையாளர்களில் பலருக்கும் வீட்டில் கொண்டுபோய்ப் புத்தகம் கொடுத்துவிட்டு வர வேண்டும். அதுதான் கல்பனாவின் அன்றாடப் பணி. புத்தகம் கொண்டுபோவதற்கென்றே கல்பனா தனது சைக்கிளில் ஒரு இரும்புக்கூடை செய்து மாட்டியிருந்தாள்.
***
வாடகை நூலகம் என்றாலும் காலை எட்டரை மணிக்குத் திறந்துவிட வேண்டும் என்பதில் உரிமையாளர் குமாரசாமி உறுதியாக இருந்தார். ஒரு காலத்தில் அந்தக் கட்டடம் யூரியா குடோனாக இருந்தது. இப்போது தடுப்புச் சுவர் வைத்து மாற்றியமைத்திருந்தார்கள். நீண்ட வரிசையாகப் புத்தக ரேக்குகள். புதிய புத்தகங்களை வைப்பதற்காக ஆள் உயர மர ஸ்டேண்ட் அவளது இருக்கையின் எதிரில் வைக்கப்பட்டிருந்தது.
அவள் அமர்வதற்காக எஸ் டைப் சேர். முன்னால் பெரிய மர மேஜை. அதன் மீது மூன்று பதிவு நோட்டுகள். டெலிபோன். ஒரு டேபிள்வெயிட், ரூல்தடி, பேனா பென்சில் போட்டு வைக்கும் குவளை. டேபிள் காலண்டர் இருந்தன. மதிய உணவைச் சாப்பிடும் போது மேஜையில் பழைய பேப்பர் ஒன்றை விரித்துக் கொள்வாள். உயரமான இரும்பு ஸ்டேண்ட் ஒன்றில் தண்ணீர் பானை வைக்கப்பட்டிருந்தது அதன் மீது ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் டம்ளர்.
அந்த நூலகத்தில் அவளுடன் முத்துகண்ணுவும் வேலை செய்தார். அவருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். புத்தகங்களை அடுக்கி வைப்பது. தூசி தட்டுவது நூலகத்தைச் சுத்தம் செய்வது, டீ வாங்கி வருவது, தண்ணீர் பிடித்து வருவது போன்றவை அவரது வேலைகள்.
முத்துகண்ணுவிற்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவரது மனைவி அமுதா ஜின்னிங் மில்லில் வேலைக்குச் சென்றாள். முத்துகண்ணுவிற்கு அடுத்தவர் சொல்லாமல் தானாக எந்த வேலையும் செய்யத் தெரியாது. எண்களை நினைவு வைத்துக் கொள்வதும் சிரமம். ஆகவே அவரிடம் பணம் கொடுத்து அனுப்பினால் கணக்கு சொல்ல தடுமாறி விடுவார். எப்போதும் சாயம் மங்கிய அரைக்கை சட்டை அணிந்திருப்பார். இடது காலில் சிவப்பு கயிறு ஒன்றை கட்டியிருந்தார். அது எதற்காக என்று கல்பனா கேட்டுக் கொண்டதில்லை.
முத்துகண்ணுவின் வீடு ராதா தியேட்டர் பின்புறம் இருந்தது. அங்கிருந்து நடந்தே வேலைக்கு வருவார். அதுவும் அவள் வருவதற்கு முன்பாக முதலாளி வீட்டிற்குப் போய்ச் சாவி வாங்கிக்கொண்டு வந்து திறந்து வைத்துக் காத்திருப்பார்.
கல்பனா அவரைவிட வயதில் இளையவள் என்றாலும் அவர் அக்கா என்றே அழைத்தார்.
`` உங்களை விட எனக்கு வயசு கம்மிண்ணே`` என்று கல்பனா சொல்லியிருக்கிறாள்.
``அதனாலே என்னக்கா.. எனக்கு இப்படித் தான் வருது`` என்பார்.
``முத்தண்ணே`` என்றே அவளும் அழைத்தாள்.
பிரகாசம் லெண்டிங் லைப்ரரியின் உறுப்பினர்களில் பலரும் வணிகர்கள். இல்லத்தரசிகள். ஆகவே அவர்கள் நூலகத்திற்கு வந்து புத்தகம் எடுக்க மாட்டார்கள். போனில் என்ன புத்தகம் வேண்டும் என்று சொல்வார்கள். அதை அவர்களின் வீட்டிற்குக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். இதில் டாக்டர் நளினா மட்டும் தனது மருத்துவமனைக்குக் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுவார்.
ஒருவர் என்ன புத்தகம் எடுக்கிறார் என்பதை அவரது தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. எதற்காக ஒரு புத்தகம் படிக்கிறார் என்பதும் அறிய முடியாதது. நூலக உறுப்பினர்களில் அதிகமும் சரித்திர நாவல் படிக்கிறவர்கள். சிலர் துப்பறியும் கதைகளை விரும்பிக் கேட்டார்கள். பங்கஜம்மாள் எழுதிய செட்டிநாட்டு உணவு வகைகள் புத்தகம் தொடர்ந்து இரவல் போய்க் கொண்டேயிருந்தது. ஒரேயொரு கல்லூரி மாணவி உறுப்பினராக இருந்தாள். அவள் எப்போதும் தனது அப்பாவோடு தான் வருவாள்.
டாக்டர் நளினா போல ஒன்றிரண்டு பேர் ஆங்கிலப்புத்தகம் கேட்பார்கள். அதுவும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள். ஒரு மகப்பேறு மருத்துவர் ஏன் இவ்வளவு ஆசையாகத் துப்பறியும் நாவல்களைப் படிக்கிறார் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பஜாரில் ஜவுளிக்கடைவைத்திருக்கும் ரங்கன் அண்ணாச்சிக்கு எப்போதும் பேய்க் கதைகள் வேண்டும். போன் செய்து கேட்கும் போதே ``புதுசா ஏதாவது பேய்க்கதை வந்துருக்கா பாப்பா`` என்று தான் கேட்பார்.
பாப்பா என்று அவளை அழைப்பது பிடிக்காது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ``இல்லை அண்ணாச்சி`` என்பாள்
``நல்ல பேய்க் கதை எழுத ஆள் குறைஞ்சி போயிட்டாங்க. நீயா பாத்து நல்ல திகில் கதை ஒண்ணு கொண்டுகிட்டு வா`` என்பார்.
``நீங்க எல்லாப் பேய்க்கதையும் படிச்சி முடிச்சிட்டீங்களே`` என்று சிரிப்பாள்.
``பேய்க் கதையை மட்டும் திரும்பப் படிக்க முடியாது. பயமில்லாமல் போயிடும்`` என்று சிரிப்பார்.
***
பிரகாசம் வாடகை நூலகத்தை 1982இல் துவக்கியிருக்கிறார்கள். குமாரசாமியின் மனைவி படிப்பதற்குப் புத்தகம் வேண்டும் என்பதற்காக அதை ஆரம்பித்தார்கள் என்றார்கள். குமாரசாமி ஊரின் மிகப் பெரிய பணக்காரர். லட்சுமி டவர்ஸ், லட்சுமி சூப்பர் மார்க்கெட், லட்சுமி டெக்ஸ்டைல், உள்ளிட்ட அத்தனையும் அவரது நிறுவனங்களே. வேறு தொழில்களின் மூலம் வருவாய் கொட்டுவதால் அவர் வாடகைநூலகத்தின் வருமானத்தைப் பெரிதாக நினைக்கவில்லை.
அதே நேரம் நூலகத்திற்கு அதிகம் செலவு செய்யவும் விரும்பவில்லை. மாதம் அவர் தரும் தொகைக்குள் நூலகத்தின் பராமரிப்பு. ஊழியர்களின் சம்பளம், புதிய புத்தகங்களை வாங்குவதைச் செய்து கொள்ள வேண்டும். அந்தக் கணக்கைக் காட்டுவதற்கு மாதம் ஆறாம் தேதி அவர் வீட்டிற்கு நேரில் வரவேண்டும். அதுவும் காலை ஏழு மணிக்கு.
நேரம் தவறாமல் கல்பனா கையில் கணக்கு நோட்டுடன் அவரது வீட்டிற்குச் செல்வாள். ஒவ்வொரு செலவினையும் துல்லியமாகக் கணக்கு பார்த்தபின்பு சிவப்பு மை பேனாவால் கே எனக் கையெழுத்துப் போடுவார்.
நூலக உறுப்பினர்கள் ஏதும் குறை சொல்கிறார்களா என்று கேட்டுக் கொள்ள மாட்டார். அவளைச் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லுவார்.
பின்வாசல் வழியாக அவள் வீட்டிற்குள் போவாள். பதினாறு பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய பெரிய டைனிங் டேபிள். மரநாற்காலிகள். அதில் அவள் ஒருத்தியாக அமர்ந்திருப்பாள். எப்போதும் இட்லி தான். அதுவும் அவளுக்காக ஒரு குழித்தட்டில் நாலு இட்லி எடுத்து வைத்திருப்பார்கள். அதில் இட்லிப் பொடி எண்ணெய் ஊற்றி குழைத்து வைக்கபட்டிருக்கும். ஒரு கரண்டி சட்னி அளவாக வைக்கபட்டிருக்கும். கொடுக்கப்படும் நாலு இட்லிக்கு மேலே பசித்தாலும் கேட்க முடியாது.
அவசரமாக அந்த இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு கணக்கு நோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது தான் அவமதிக்கப் படுவதாகவே கல்பனா உணருவாள். ஆனால் அதை யாரிடமும் சொன்னதில்லை.
குமாரசாமி ஒரு போதும் வாடகை நூலகத்திற்கு வர மாட்டார். எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் போனில் அழைத்துச் சொல்லுவார். அவரது குரலில் எப்போதும் இறுக்கமிருக்கும். தனது உத்தரவின்படி நடக்காவிட்டால் கோவித்துக் கொள்ளுவார்.
``என்ன மயிருக்கு நீ வேலைக்கு இருக்கே’’ என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார். முதலில் அப்படியான சுடுசொல்லைக் கேட்டபோது அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. ஆனால் நாட்கள் போகப்போக அது பழகிவிட்டது. யாரையோ திட்டுவதைப் போல எடுத்துக் கொள்வாள்.
இவ்வளவு வசைகள் கோபம் இருந்தாலும் மாதம் ஒன்றாம் தேதி அவள் சம்பளம் கைக்கு வந்துவிடும். உடல்நிலை சரியில்லை என்று லீவு போட்டாலும் சம்பளம் பிடிக்க மாட்டார்.
வாடகை நூலகத்தில் அவளை வேலைக்குச் சேர்க்கும் நாளில் குமாரசாமி ``உனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்காம்மா`` என்று கேட்டார்.
``இல்லை`` எனத் தலையாட்டினாள்.
``நல்லது`` என்று சிரித்துக் கொண்டார்.
``படிக்கிற பழக்கம் இல்லேண்ணாலும் புத்தகம் பேரு. எழுத்தாளர் யாருங்கிற விபரம் எல்லாம் தெரிஞ்சி வச்சிகிடணும். புத்தகம் படிச்ச ஆள் மாதிரி பேசணும் புரியுதா`` என்றார்.
கல்பனா தலையாட்டிக் கொண்டாள். அவர் சொன்னது போல இந்த மூன்று ஆண்டுகளில் நூலகத்தில் இருந்த புத்தகங்களின் பெயர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பெயர்களை நன்றாக அறிந்திருந்தாள். புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவள் போலவே பேசக் கற்றிருந்தாள்.
புத்தகம் எடுக்க ஆள் வராத நேரங்களில் சாலையை வேடிக்கை பார்ப்பது அவளது வழக்கம். பெல்ட் ரேடியோவை தோளில் தொங்கவிட்டபடி தினமும் ஒருவர் போவதைக் கண்டிருக்கிறாள். எச்சில் வழிய நாயின் நாவு துடித்துக் கொண்டிருப்பது போல அந்த வீதி தீராத ஆள் நடமாட்டம் மற்றும் வாகன வேகத்தால் துடித்துக் கொண்டிருந்தது.
***
ஒரு காலத்தில் பிரகாசம் நூலகத்தில் ஆறாயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். கல்பனா வேலைக்குச் சேர்ந்த போது ஆயிரத்து நாற்பது உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த மூன்று வருஷங்களில் அது பாதியாகக் குறைந்துவிட்டிருந்தது..
வாடகை நூலகத்தில் வேலை செய்கிறாள் என்றாலும் அவளுக்குப் புத்தகம் படிப்பதில் ஆர்வம் கிடையாது. பொம்மைகளை அடுக்கி வைப்பதை போலவே புத்தகங்களையும் கையாளுவாள். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்பது அவளுக்குப் பிடிக்கும். ஆனால் தியேட்டருக்குப் போய்ச் சினிமா பார்க்க பிடிக்காது.
அவளுக்கு இருபத்தியெட்டு வயது நடந்து கொண்டிருந்தது. சில வருஷங்களாகவே திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. ஒரு சில மாப்பிள்ளை கேட்கும் வரதட்சணையை அவளின் அய்யாவால் தர முடியவில்லை. தனது திருமணத்திற்கு என்று அவளாக மாதச் சீட்டு போட்டு வந்தாள். மாதம் இரண்டாயிரம் கட்ட வேண்டும்.
அவளுக்குள் கல்யாணக் கனவு துளிர்த்து மலர்ந்து வாடியிருந்தது. மாலையும் கழுத்துமாகத் தனது தெருவைக் கடந்து செல்லும் மணமக்களைக் காணும் போது அவளுக்கு வருத்தமாக இருக்கும். யாராவது ஒருவரைக் கட்டிக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள். தன்னை ஏன் எவருக்கும் பிடிக்காமல் போகிறது என்ற குற்றவுணர்வு அவளுக்குள் ஆழமாக இருந்தது.
தனித்திருக்கும் நேரத்தில் ஹேண்ட்பேக்கில் வைத்திருந்த வட்டக்கண்ணாடியை வெளியே எடுத்து தனது முகத்தைப் பார்த்துக் கொள்வாள். அவளுக்குத் தன்னைப் பிடித்திருந்தது. தான் அழகாக இருப்பதாகவே உணர்ந்தாள். ஆனால் இடைவெளி உள்ள பற்களைக் கொண்ட முகத்தை. மெலிந்த தோற்றத்தை, யாருக்கும் பிடிக்கவில்லை என்பது வருத்தமளித்தது.
வெயிலோடு மழை பெய்யும் நாளில் காக்காவிற்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கிறது என்பார்கள். அப்படி ஏதேனும் அதிசயம் தனது வாழ்விலும் நடந்துவிடாதா என ஏங்கினாள்.
நரியைக் கல்யாணம் செய்து கொண்ட பின் காக்கா பறப்பதை நிறுத்திக் கொண்டுவிடுமா என யோசித்தாள். இந்த உலகில் எந்தக் காகமாவது தனக்குக் கல்யாணம் நடக்கவில்லையே எனக் கவலைப்படுகிறதா என்று மனதில் நினைத்துச் சிரித்துக் கொள்ளவும் செய்வாள்.
***
சேம்பியன் ஸ்டோர் உரிமையாளர் தனசேகரின் மனைவியான மோகனா புத்தகத்தில் தனக்குப் பிடித்த பக்கங்களைக் கிழித்து வைத்துக் கொள்ளுவாள். அதைக் கண்டுபிடித்துச் சொன்னால்கூடத் தான் கிழிக்கவே இல்லை என்று சத்தியம் செய்வாள். இது மட்டுமின்றிச் சில நேரங்களில் புத்தகத்தினுள் நூறுரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்து தனது தம்பியின் வீட்டில் கொடுத்து விடும்படியாகவும் சொல்வாள். பிடிபட்டுவிட்டால் என்ன ஆகும் எனக் கல்பனாவிற்குப் பயமாக இருக்கும்.
மணீஸ் ஹோட்டலை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்த பூரணி நோயுற்றுப் படுக்கையில் கிடந்த தந்தைக்குப் படித்துக் காட்டுவதற்காக வாடகை நூலகத்திலிருந்து புத்தகங்களைப் பெற்றுவந்தாள். ஒரு நாளைக்கு ஐந்து பக்கம் மட்டுமே படிப்பாள். ஆகவே அவளிடம் புத்தகம் கொடுத்தால் திரும்பி வர மூன்று நான்கு மாதங்களாகிவிடும்.
பூரணியின் அய்யா இறந்தபோது அவர் ஆசையாகப் படித்த புத்தகம் என்பதால் பட்டாம்பூச்சி நாவலை திரும்பத் தர மறுத்ததோடு அவரது நினைவாகப் பூஜையில் வைத்துள்ளதாகத் தெரிவித்தாள்.
இதைக் குமாரசாமி அண்ணாச்சியிடம் சொன்ன போது அவர் ``கேடுகட்ட நாயி’’ என மோசமான வசையில் திட்டியதோடு ``அவங்களுக்கு இனிமே புத்தகம் கொடுக்க வேண்டாம்’’ என்றும் உத்தரவிட்டார்.
வாடகை நூலகம் இப்படிக் கல்பனாவிற்கு நூறு வகை அனுபவங்களை உருவாக்கியிருந்தது. ஆனால் அவள் புத்தகம் எதையும் படித்ததில்லை என்று கண்டுபிடித்தவர் சதாசிவம். அதுவும் முதன்முறையாகப் போனில் பேசிய போதே அதைக் கண்டுபிடித்துவிட்டார்
``நீ பொய் சொல்றம்மா. உனக்குப் புக் படிக்கிற பழக்கம் கிடையாது. ஹோட்டல் சப்ளையர் மாதிரி புக் பேரை வேகமா கொட்டுனா நீ படிச்சிட்டதா அர்த்தமா.. படிச்ச ஆளோட பேச்சை கேட்டதும் கண்டுபிடிச்சிரலாம். இங்கிலீஷ் தெரியுமில்லே நான் சொல்ற புத்தகம் பேரை எழுதிக்கோ’’
அவர் ஒவ்வொரு எழுத்தாகப் புத்தகத்தின் பெயரைச் சொன்னார். ``The History of the Decline and Fall of the Roman Empire’’ என்ற அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து அவருக்குக் கொடுக்கச் சென்ற நாளில் சதாசிவத்தின் மீது மனதில் கோபமிருந்தது.
அதைக் காட்டிக் கொள்ளாமல் அவரது வீட்டிற்குச் சென்றாள். காலிங் பெல்லை அழுத்தியதும் ஒரு வேலையாள் கதவைத் திறந்து உள்ளே அழைத்துக் கொண்டு போனான். ஹாலில் பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வலது பக்க அறை வழியாகச் சக்கர நாற்காலியினைத் தள்ளிக் கொண்டு வேலைக்காரப் பெண் வந்தாள். .
சதாசிவம் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எழுபது வயதைக் கடந்த தோற்றம். முக்கால் கையளவு உள்ள கதர்சட்டை. கதர் வேஷ்டி. முற்றிலும் நரைத்த தலை. தங்க பிரேம் போட்ட கண்ணாடி.
தான் கொண்டு வந்த புத்தகத்தை அவரிடம் நீட்டினார்.
``அப்படி உட்காரு’’ என மரநாற்காலியைக் காட்டினார்
அவள் தயங்கியபடியே நின்றாள்.
``உன் பேரு கல்பனா தானே’’ என்றபடி உட்கார் எனச் சைகை காட்டினார். அவள் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டாள்.
``இது என்ன பொஸ்தகம் தெரியுமா’’ எனக்கேட்டார்
``இங்கிலீஷ் நாவல்’’ என்றாள்.
`` இல்லை. எட்வர்ட் கிப்பன் எழுதின ஹிஸ்டரி புக்’’.
புரிந்து கொண்டது போலத் தலையை அசைத்தாள்.
`` என் மேல உனக்குக் கோபமா’’ என்று கேட்டார்.
பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
``ஆயிரம் ரூபா பணத்தை வாங்கிட்டு இல்லைனு சொல்றவனைக் கூட நான் மன்னிச்சிருவேன். ஆனால் புத்தகம் படிக்காமல் படிச்சவன் மாதிரி பேசறவனை என்னால் மன்னிக்க முடியாது. அது அயோக்கியதனம்,’’ என்றார்.
``எனக்கு படிக்கிறதுல ஆர்வம் கிடையாது சார்’’ என்றாள்.
``அப்படி சொல்லு.. ஏத்துகிடுவேன். ஏம்மா உனக்குப் புத்தகம் படிக்கிறது பிடிக்கலை. அது மேல என்ன கோவம்’’ எனக்கேட்டார்.
``பழக்கம் இல்லை சார்’’ என்றாள்.
``பழகிகிட வேண்டியது தானே. நீ இருக்கிற இடம் லைப்ரரி. பூக்கடைல உட்கார்ந்துகிட்டு பூ பிடிக்காதுனு யாராவது சொல்வாங்களா.’’ எனக் கேட்டார்.
அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவரை ஏறிட்டுப் பார்க்காமலே சொன்னாள்.
``நான் படிச்சி என்ன செய்யப்போறேன்’’
``நல்லா கேட்டே. ஐம்பது வருஷதுக்கு மேல புத்தகம் படிக்கிறேன். என்னையும் இப்படிக் கேட்டுகிட்டேதான் இருக்காங்க. செடிக்கு தண்ணி ஊத்துறதில்லையா. அப்படித் தான் எனக்குப் படிப்பு. அன்றாடம் எதையாவது படிக்கணும். இல்லேண்ணா வாடிப்போயிடுவேன். இந்தப் பொஸ்தகம் இருக்கே அது பைசா செலவு பண்ணாம நம்மளை உலகத்தைச் சுத்திப் பாக்க வைக்குது. வாழ்க்கைல இத்தனை ஆயிரம் பேரை பார்த்து பழக முடியுமா. கதை புஸ்தகம் படிச்சா அந்த அனுபவம் கிடைச்சிருது. இப்போ நீ ஒரு பொஸ்தகம் கொண்டு வந்தயே. அது ராஜாக்களோட வாழ்க்கை. ஒவ்வொண்ணையும் படிக்கப் படிக்கத் தான் உலகத்தைப் புரிஞ்சிகிடுறேன். நம்ம பிரச்சனை எல்லாம் சின்னதாகிடுது. ``.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது காபி வந்தது. அவள் சூடான காபியை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தாள். நல்ல வாசனை.
`` ஹோட்டல் காபியைவிட நல்லா தான் இருக்கும்’’ எனக் கேலி செய்தார். அவள் காபியை குடிக்கத் துவங்கிய போது கேட்டார்
``உனக்குக் கல்யாணம் ஆகிருச்சா’’.
அவள் இல்லையெனத் தலையாட்டினாள்.
``இந்த ஊர்ல எத்தனை கல்பனா இருப்பாங்க தெரியுமா’’ எனக்கேட்டார்
``தெரியலை சார்.’’
``உன்னை தவிர வேற வேற கல்பனா எப்படி இருக்காங்க. என்ன செய்தாங்கன்னு தெரிஞ்சிகிடுறதுக்காவது நீ புக் படிக்கணும்.’’ என்றார்.
அதைக்கேட்டதும் சட்டென அவளுக்குள் ஒரு அதிர்வு உருவானது. அவர் சொல்வது உண்மை. உலகம் என்பது ஒரு கல்பனாவின் இடம் மட்டுமில்லையே. வேறுவேறு கல்பனாக்கள் என்ன செய்கிறார்கள். எப்படி வாழுகிறார்கள். இப்படி ஒரு கேள்வி ஏன் தனக்கு வரவில்லை.
``நம்ம பிரச்சனை எதுவும் நம்மோடது இல்லேனு எனக்குப் புத்தகம் தான் புரிய வச்சது. நீயும் படிச்சி பாரு.. புரியும்`` என்றார்.
அவள் சைக்கிளில் வாடகை நூலகத்திற்குத் திரும்பி வரும் போது அதைப்பற்றியே நினைத்துக் கொண்டு வந்தாள். முத்துகண்ணு கூட அவளிடம் ``ஏங்க்கா ஒரு மாதிரியா இருக்கீங்க`` எனக் கேட்டார்.
``முத்தண்ணே என் பேர்ல வேற யாரையாவது உங்களுக்குத் தெரியுமா``
``எங்க தெருவுல ஒரு கல்பனா இருக்கு. அது நர்ஸா வேலை பாக்குது``
``அதுக்குக் கல்யாணம் ஆகிருச்சா. ``
``ஆகிருச்சி. மாப்பிள்ளை வாத்தியார். ``
``அந்த கல்பனா என்னை விட அழகா இருக்குமா``
``அதுவும் அழகு தான். நீங்களும் அழகு தான்கா``..
அப்படிக் கேட்கப் பிடித்திருந்த்து. ஆனாலும் அது உண்மையில்லை. உலகில் எத்தனையோ கல்பனாக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராவது தன்னைப் போல இருப்பாரா. தன்னைப் போல இப்படி வாடகை நூலகத்தில் வேலை செய்வாரா. கைவிடப்பட்டவளாகத் தன்னை உணர்வரா.
அன்று தான் முதன்முறையாக அவள் நூலகத்தின் நாவல் பிரிவில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அதில் கல்பனா என்ற பெயர் உள்ள கதாபாத்திரம் இருக்கிறதா எனத் தேடத் துவங்கினாள்.
அந்த விளையாட்டு ஒவ்வொரு நாளும் நீண்டது. ஒரு வங்காள நாவலில் கல்பனா என்ற பெண் வழக்கறிஞராக இருந்தாள். இன்னொரு நாவலில் கல்பனா பாடகியாக இருந்தாள் . வேறு ஒரு கல்பனா பெண் கைதியாகச் சிறையில் வதைபட்டாள். ஒரு கல்பனா துப்பாக்கி ஏந்தினாள். இன்னொரு கல்பனா படகோட்டினாள். இப்படிப் பல்வேறு கல்பனாக்களை அவள் அறிந்து கொள்ளத் துவங்கினாள். ஒரே பெயரில் ஆயிரம் வாழ்க்கை இருப்பதை உணர்ந்தாள்.
கல்பனாவை தேடத் துவங்கிய அவளது ஈடுபாடு மெல்ல வேறு பெயர் கொண்டிருந்தாலும் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வைப் போல வேறு யாருக்காவது நடந்திருக்கிறதா என மாறியது. ஆச்சரியமாக அவள் சி.கே.ரமணன் எழுதிய நாவலில் அச்சு அசலாக அவளைப் போலவே ஒரு கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவளது பெயர் கல்பனா இல்லை. மதுபாலா.
நாவலில் வரும் மதுபாலா அவளைப் போலவே வாடகை நூலகத்தில் வேலை செய்தாள். ஆனால் சமூக மாற்றத்திற்காகப் போராடினாள். துணிச்சலாக நடந்து கொண்டாள். போராளி ஒருவனைக் காதலித்தாள்.மோட்டார் சைக்கிள் ஒட்டினாள். அந்தப் பெண்ணாகத் தான் மாற முடியாதா எனக் கல்பனாவிற்கு ஏக்கமாக இருந்தது
அன்றாடம் தொடர்ந்த புத்தக தேடலுக்கு பின்பு அவள் உருமாறியிருந்தாள். வீதியை வேடிக்கை பார்ப்பதை விடவும் புத்தகங்களில் ஆழ்ந்து போகத் துவங்கினாள்.. மனதில் இருந்த கவலைகள். ஆழமான வருத்தங்கள் ஈரத்துணி காற்றில் உலர்ந்துவிடுவதைப் போலப் புத்தகம் படிப்பதன் மூலம் மாறத் துவங்கின. படித்த விஷயங்களைப் பற்றிச் சொல்வதற்காக அடிக்கடி சதாசிவத்தைத் தேடிப் போகத் துவங்கினாள். சதாசிவம் நிறையப் படித்திருந்தார். ஆகவே அவளது கேள்விகளுக்கு எளிதாகப் பதில் தந்தார். புத்தகம் அவளை மாற்றியிருப்பதை அவளுக்கே அடையாளம் காட்டினார்.
``புத்தகங்களைப் போல மனிதர்களை எளிதாகத் திறந்துவிட முடியாது`` என்று ஒருமுறை சிரித்தபடியே சொன்னார் சதாசிவம்
வாசிப்பை தொடர்ந்த நாட்களில் அவளுக்குள் இருந்த குற்றவுணர்வு குறைந்து போனது. சிறிய மகிழ்ச்சிகளை அனுபவித்தாள். உருவாக்கினாள்.பகிர்ந்து கொண்டாள். புத்தகம் கொடுத்துவிட்டு அவசரமாக நூலகம் திரும்பாமல் சைக்கிளில் ஊரைச் சுற்றினாள். நகர வீதிகளும் அதன் மனிதர்களும் புதிதாகத் தெரிந்தார்கள். முன்னை விடப் பிரகாசமாக, தெளிவாக, எல்லாமும் தெரிவது போலிருந்தது. நகரம் என்பது திறந்து வைத்துள்ள பெரிய புத்தகம் போலத் தோன்றியது.
***
கல்பனா ஒரு வியாழக்கிழமை முத்துகண்ணுவின் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அவளது வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை.
``என்னக்கா.. திடீர்னு’’ எனப் பதற்றமாகக் கேட்டார்
``ஏன் நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா?’’
``அதுக்கில்லை.. என் வீட்டுக்காரி வேலைக்குப் போயிருக்கா.. பிள்ளைகளும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க’’
``நீங்க என்ன செய்யுறீங்கன்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.’’
``சும்மா தான்கா இருப்பேன்’’
``பகல் பூரா எப்படிச் சும்மா இருக்க முடியும்’’
``ஏதாவது பொஸ்தகம் படிச்சிகிட்டு இருப்பேன்’’
``நீங்க புக் படிப்பீங்களா’’..
``ஆமாக்கா. படிப்பேன். நிறைய விஷயம் புரியாது. ஆனாலும் தண்ணிக்குள்ள காலை வச்சிகிட்டு இருக்கிறது மாதிரி அதுல ஒரு சுகம்’’.
இப்படிப் பேசுகிற மனிதன் தானா இத்தனை நாளா வாடகை நூலகத்தில் மௌனமாக நடமாடியவர் எனக் கல்பனாவிற்கு வியப்பாக இருந்தது.
``நம்ம லைப்ரரில இருந்து ஒரு புக்கை ஒளிச்சு எடுத்துட்டு வந்து படிச்சிட்டு திரும்ப வச்சிருவேன். நீங்க அண்ணாச்சி கிட்ட சொல்லிறாதீங்கக்கா.’’
``அதெல்லாம் சொல்ல மாட்டேன். நாளைக்கு நான் லீவு. அதைச் சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்’’
``பொண்ணுபாக்க வர்றாங்களாக்கா’’ என்று முத்துகண்ணு கேட்டார்
எப்படிக் கண்டுபிடித்தார் என்பது போலத் தலையாட்டினாள்.
``உங்களை மாதிரி என்னாலே எல்லோர் வீட்டுக்கும் போயி புக் குடுக்க முடியாதுக்கா.. எனக்குப் பழக்கமில்லே’’ என்றார்
``நான் வந்தபிறகு கொடுத்துகிடலாம். அண்ணாச்சி கிட்ட நான் சொல்லிடுகிறேன்’’
முத்துகண்ணு சரியென்றார். அவரை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்தில் உள்ள டீக்கடையில் தேநீர் குடிக்க விரும்பினாள். முத்துகண்ணு மறுத்துவிட்டார்.
``வேணும்னா.. உங்களுக்குப் பார்சல் டீ வாங்கிட்டு வரவா’’
``பரவாயில்லைண்ணே.. நான் கிளம்புறேன்’’
வீடு திரும்பும் வரை அவள் ஏதேதோ யோசனையுடன் வந்தாள். வீட்டில் தனித்திருக்கும் போது சினிமா பாட்டு ஒன்றை சப்தமாகப் பாடினாள். அப்படிப் பாடுவது அதுவே முதல்முறை.
அடுத்த நாள் திண்டுக்கல்லில் இருந்து பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை அவளது வேலையைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறதா எனக் கல்பனா கேட்க விரும்பினாள். ஆனால் கேட்கவில்லை. பதினைந்து பவுன் நகை போடுவதாக அய்யா ஒத்துக் கொண்டார். உள்ளூர் முருகன் கோவிலில் திருமணத்தை நடத்திவிடலாம் என முடிவு செய்தார்கள்.
***
சதாசிவம் வீட்டின் காலிங்பெல்லை அவள் அழுத்திக் கொண்டேயிருந்தாள். யாரும் கதவை திறக்க வரவில்லை. அய்யா. அய்யா. எனச் சப்தமாக அழைத்தாள்.
உள்ளே இருந்து வேலைக்காரப் பெண் தூக்கிச் சொருகிய புடவையோடு வெளியே வந்தாள்
``அய்யாவை மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போயிருக்காங்க. வர்றதுக்குப் பத்து பதினைந்து நாள் ஆகும்’’
``என்ன ஆச்சு’’ எனக்கேட்டாள் கல்பனா
``நேத்து திடீர்னு வலிப்பு வந்துருச்சி. கை கால் வரலை’’ என்றாள்.
அவருக்காகக் கொண்டு வந்த புத்தகத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் கல்பனா நின்றிருந்தாள்
``இந்த பொஸ்தகத்தை அவர் ரூம்ல வச்சிருங்க’’ என நீட்டினாள்
வேலைக்காரப் பெண் வாங்கிக் கொண்டு கதவை மூடினாள்.
தனது திருமணம் பற்றிச் சதாசிவத்திடம் பேச வேண்டும் என நினைத்திருந்தாள். அதைச் சொல்ல முடியாமல் போய்விட்டது வருத்தமளித்தது. இனி சதாசிவத்தால் படிக்க முடியுமா. மருத்துவமனையில் இருந்து நலமாகத் திரும்பி வந்துவிடுவாரா எனக் குழப்பமான எண்ணங்கள் மனதில் வந்து போயின.
திருமணத்திற்குப் பின்பு திண்டுக்கல்லில் வசிக்க வேண்டும். ஆகவே இந்த மாதத்துடன் வேலையை விட்டு நின்று கொள்கிறேன் எனக் குமாரசாமி முதலாளியிடம் பேச வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.
வீட்டுவாசலில் நின்ற தனது சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்த போது தன்னுடைய வாழ்க்கை புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கதை போலிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
***