கரங்கள் தேடல்
ஓவியம்: வேலு

கரங்கள் தேடல்

ஊரே அமளிதுமளி ஆகிட்டு இருந்துச்சு மூர்த்திக்கு பிஆர்சில ஓட்டுநர் வேலை கிடைச்சதால் அதை கொண்டாடும் விதமாக தன் குலதெய்வம் அருள்மிகு மலையாண்டி கருப்பசாமி கோவிலில் ஊருக்கே கறிவிருந்து ஏற்பாடு பண்ணிருந்தார் குருசாமி தாத்தா.

ஒறவு முறையெல்லாம் ஊர்வலமா போகுறப்ப கொடுத்த அலப்பறையால் ஏதோ திருவிழானு நினைச்சு நெடுஞ்சாலையில் வண்டிலபோற மக்களெல்லாம் வேடிக்கையா எட்டிப்பாத்தாய்ங்க, ஆனா கொண்டாட்டம் மட்டும் நிக்கவே இல்லை. மதுரை பக்கட்டு இருபது கிமீ தொலைவுல இருக்ற அல்லிக்குளத்துல தான் இந்த களேபரம். இந்த ஊர்லயே முதல்முறையா அரசாங்க வேலைக்கு போறான்ங்ற ஊர்ப்பெருமைல தான் அம்புட்டு ஜனமும் கொண்டாடுது. இனிமேலாவது நம்மூர்க்காரய்ங்க அரசு வேலைக்குப் போய் பெரும்தட்டு அதிகாரிகளா வரனுமேப்புனு எல்லா பெருசுகளும் சாமியைக் கும்பிட்டுச்சு. இவுகளப் பொறுத்தமட்டு இன்னைக்குத்தான் அதாவது 1997ஆம் வருசம் தை மாசம் கடைசிவாக்கி்லதான் நெசமான சுதந்திரம்.

மூர்த்தி-மீனாட்சி தம்பதியர்க்கு கொள்ள சந்தோசம். இந்த அஞ்சாறு  வருசத்ல வேலைக்காக அலைஞ்ச அலைச்சல்களும் பட்ட அவமானங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல, மனசுல ரணமாவே தங்கிக்கொல்ற பல சொல்லணா செயல்கள் நடந்தேறிய வலியின் வெளிப்பாடுதான் இந்த திருவிழா ஆற்றுப்படுத்தல். மூர்த்தி இம்புட்டு காலம் வைராக்கியமா போராடுனதுக்கு காரணம் இந்த தலைமுறைல நாம இந்த வேலைக்காவது போயட்டோம்ன்னா அடுத்து வர்ற நம்ம பையன் அன்பழகன் எப்படியாவது அதிகார மட்டதுக்கான பதவிக்கு படிச்சிடுவான், நம்ம தலைமுறையும் ஆளாகிரும்னுதான்.

மூர்த்தி தினந்தோறும் நிறைய மனிதர்களை சந்திக்கிற ஓட்டுநர் வேலையில இருக்கிறதுனால, எதிர்காலம் படிப்பும் தொழில்நுட்பமும் சார்ந்துதான் இருக்கப்போவுதுங்றத கேட்டு உணர்ந்திருந்தார். அதனாலதான் தன் பையன் அன்பழகனுக்கு நல்லா படிப்பதற்கான சூழ்நிலையும் வாழ்வியலும் அமைச்சு கொடுத்திடோம்ன்னா அவனுக்கு நல்ல பரந்துவிரிந்த பார்வையும் சிறந்த அனுபவமும் கிடைச்சிடும்னு நினைச்சார். இந்த வேலை கிடைச்சதும் மனசுக்கு ரொம்ப நிறைவு மகனோட வாழ்க்கைக்கு மதுரை நகரம் சரியா இருக்கும்னு நினைச்சார். வண்டிக்கு போயிட்டு வரும்போதெல்லாம் அன்பழகன் விரும்பி சாப்பிடுற பரோட்டாவோ இல்ல படிப்பு சம்பந்தமா எது கேட்டாலும் மதுரைல இருந்து வாங்கிட்டு வர சங்கடப்படவே மாட்டார்.

மதுரை-அருப்புக்கோட்டை மார்க்கமா ஓடுற தனியார் பேருந்துல ஓட்டுநரா இருக்குற தன் அப்பாவோட நிசமான உழைப்பும் எந்நேரமும் முகமலர்ச்சியோட பயணிகள அணுகுற குணமும் தான் அன்பழகன் கத்துக்கிட்ட முதல் பாடம்னு சொல்லலாம். எப்போதாவது மதுரைக்கு தன் அப்பாகூட பேருந்துல போகும்போது பயணிகள் எல்லோரும் அவர் பெயர் சொல்லி உருத்தா அழைக்கிறத பார்த்து பார்த்து அன்பை கட்டமைக்குற யுக்தியையும் வளத்துக்கிட்டான்.

அன்பழகன், அல்லிக்குளம் மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். தன் நகைச்சுவை பேச்சாலயும் எல்லார்கிட்டேயும் அன்பு பாராட்டுகிற குணத்தாலும் மொத்த பள்ளியையும் ஆட்சிசெய்கிறான் என்று சொன்னால் மிகையாகாது. தேடிப்போய் நட்புகொள்ள வைக்கும் ஈர்ப்பு சக்தி எல்லாருக்கும் அமையாது தானே, அந்தப்பள்ளியில் 8ம் வகுப்போ 12ம் வகுப்போ எல்லா வகுப்பு மாணவர்களும் கலகலப்பா இருக்கும் இடத்தில் அன்பு கண்டிப்பா இருப்பான் என்று அத்தனை ஆசிரியர்களும் உறுதியாக நம்புவாங்க. படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சி எல்லாத்திலும் அவனின் பங்கெடுப்பு சிறப்பா இருக்கும். ஒருவேளை அப்போட்டியில் பரிசுபெற்றால் கூட தோற்றவர்களே கொண்டாடுற அளவுக்கு அந்நிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக்கிடுவான். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அவ்வூரையேச் சார்ந்தவர்கள் ஆகையால் உணவு, உடை, பேச்சு, பழக்கவழக்கம் எதிலுமே வேறுபாடின்றி அல்லது மாற்றிக்கொள்ளத் தேவையின்றி வாழ்ந்த அன்பு தன் தந்தைக்கு அரசுப்பணி கிடைத்ததால் மாநகர்க்கு கிளம்பவேண்டிய சூழ்நிலை.

மீனாட்சியின் தாய்மாமன் வெள்ளைத்துரை மூலமா மதுரை பழங்காநத்தத்தில் குடிபெயர வீடு பார்த்தாச்சு. தன் மகன் அன்பழகன மட்டும் பத்தாம் வகுப்பு பரிச்சை முடிய இன்னும் இரண்டு மாசம் இருக்றதுனால அப்பத்தா வீட்லயே விட்டுட்டு கிளம்புறதா பெற்றோரின் முடிவு. இந்த முடிவு அன்புக்கு பெருத்த இடியாகவும் ஏமாற்றமுமா இருந்துச்சு. ஏன்னா அந்த ஊர்ல இருக்கி்ற இருநூறு குடும்பங்கள்ல இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே மதுரைல குடியேறி இருந்தாங்க, இவன் சித்திரை திருவிழாக்கு அந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு போனப்ப பார்த்த கூட்டம், கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், மாநகர பிரமிப்பு தந்த மயக்கத்தால அலாதியான பிரியம் மதுரை மாநகர்மீது. அதனால் என்னையும் இப்போவே கூட்டிட்டுப்போங்கனு ரொம்ப அடம்பிடித்தான். போரில் ஈடுபடும் இரண்டு நாடுகளுக்கு இடையேகூட ஐநா சபைல இவ்வளவு சமரச கூட்டங்கள் நடந்திருக்காது, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் சம்மதிச்சான் வாரம் ஒருமுறை வந்து கூட்டிட்டு போகனும்ங்ற உடன்படிக்கையோடு.

கிராமத்துல இருந்து நகருக்குப் போன மீனாட்சிக்கு அந்தத் தெருவே வெகுசீக்கிரமா நட்பானது மட்டுமல்லாம அவங்க பழக்கவழக்கம் வாழ்க்கை முறைலாம் ரொம்ப அதியாழமா ஆக்கிரமிச்சிடுச்சு. அதிகாலையில் அடிகுழாயில தண்ணி அடிக்றது முதல் அடிவானத்தில் சூரியன் மறையுற வேளையில் உதிரிப்பூ கட்ட உக்கார்ற சாயங்காலம் வரையான கூட்டுக்குடித்தன கட்டிட வாழ்க்கைமுறை பிடிச்சிருந்தது அவளுக்கு. அப்படி கும்பலா உக்காரும் பெண்களின் பேச்சுக்குள்ள கண்டிப்பா வந்துபோகும் தங்கள் குழந்தைகளின் படிப்பு, வேலை, எதிர்கால ஆசைகள் பற்றிய நிரந்தரமான பேச்சுக்கள். அதுல ஒன்னுதான் விவிஎஸ் நகர் விவிஎஸ் பள்ளிகளில் மட்டுமே தன் குழந்தையை படிக்க வைச்சே ஆகனும்ங்ற வறட்டு கவுரவக்குடைச்சல்.

அந்தப் பெண்கள் கூட்டத்தை கடந்துபோகுற யாரோ ஒருவர் தன் காதை லேசா தீட்டினாலே போதும் அதில் ஏதாவது ஒரு பெண் ஒருத்தி தன் பிள்ளை படிக்கும் அந்தப்பள்ளியை பற்றி சிலாகிப்பதும் இன்னொருத்தி அங்கலாய்க்கிறதும் ஈசியா காதுல விழும். விவிஎஸ் பள்ளிகளில் இலட்சுமி, சுந்தரம்னு இரண்டு பள்ளி இருந்தாலும் அதிலும் லட்சுமியில் புதுசா தன் குழந்தையை சேர்த்த தாய் யாராவது டீக்கடைக்கோ மளிகைக் கடைக்கோ வீதியில் நடந்து வரும் நடை உடை மிடுக்கை அவரின் தோரணையை பேச்சின் நூனாயத்தை வைத்து முன்பின் வரலாறுகள் என ஒப்பீட்டு இலக்கணமே எழுதலாம்.

அந்தப்பள்ளியைப் பொறுத்தவரை பெரும்பாலும் நடுத்தர, மேல்தட்டு மக்களின் குழந்தைகளால் ஆக்கிரமிச்சிருக்ற பள்ளி ஆனாலும் அங்கதான் சேர்த்தே ஆகனும்னு அத்தனை அத்தனை வன்முறைகள் தங்கள் குழந்தைகள் மீது நடத்திக்கொண்டிருப்பார்கள் ஒவ்வொரு வீதிகளிலும். அப்பள்ளிக்கு எல்கேஜீல ஆரம்பிக்கி்ற தகுதித்தேர்வு 5, 8 மற்றும் 10ம் வகுப்பு வரை தொடரும் ஒவ்வொரு ஆண்டும், கோடை விடுமுறை என்பது கொடூர விடுமுறையா இருக்கும் குழந்தைகளுக்கு. பலபேருக்கு முகம் கிழிந்து ரத்தக்காவு வரை போயிருந்தாலும் வேளாவேளைக்கு சோறும் கூடவே வேறு ஒரு குழந்தையைச் சுட்டிக்காட்டி இடித்தல்களும் ஒருசேர நடக்கும்.

மீனாட்சி மட்டும் விதிவிலக்கா என்ன ஒவ்வொரு வாரமும் தன் மகன பழங்காநத்தத்துக்கு கூட்டிட்டு வரும்போதெல்லாம் அந்தப்பள்ளில படிக்ற மாணவமாணவிகளைக் காட்டி அவன் மனதில் பதியம் போட்டுகிட்டே இருப்பாள். எப்படியாவது 450 மதிப்பெண்ணுக்கு மேல எடுத்திட்டின்னா போதும் ராசா அந்த பள்ளி முதல்வரே கூப்பிட்டு சீட்டு குடுப்பாரு அப்புறம் உன் வாழ்க்கை ஆகாயம் விமானத்தில தான்னு உற்சாக பால் ஊட்டுவாள். அல்லிக்குளம் மேனிலைப்பள்ளில பத்தாம் வகுப்பு படிக்ற அன்பழகன் மனசுல அதைவிட பவுசா மதுரை மாநகர் மீதானப் பிரமிப்பும் காதலும் அதிகமா இருந்ததுனாலயும் நல்லா படிச்சதுனாலயும் 465 மதிப்பெண் எடுத்திருந்தான்.

ஊர் மந்தைல போடுற பட்டறைல பாதிநேரம் இவனுடைய மதுரைசார்ந்த விவரிப்புகள்தான் அதிகம் இருக்கும். வெள்ளந்தியா கேக்கிற நண்பர்களை லந்து பண்ணியே கடத்துவான் தன் பேச்சின் சுவாரசியங்களை. நிரந்தர மதுரைவாசியா ஆகப்போற மகிழ்ச்சியில் தன் பகுமானத்தை காட்றேன்னு ராத்திரி முழுக்க கசகசன்னுட்டே இருக்குறதுனால இவன் மந்தையில இருக்கான்னு தெரிஞ்சாலே நண்பர்கள் பூராப்பேரும் தெறிச்சு ஓடிடுவாய்ங்க. என்னதான் அன்பு கடுப்பேத்துனாலும் சின்ன வயசுல இருந்தே ஒன்னுமண்ணா விளாடிட்டு இருந்தவெய்ங்களால இவன் வேற ஊருக்கு போகப்போறத நினைச்சு விசனப்படாமலும் இருக்கமுடியல.

ஒன்றரை மாத விடுமுறை, மதுரையில் சிலபல உலாத்தலுக்குப்பின் விவி௭ஸ் சுந்தரம் பள்ளியில் சேர்ந்த அன்றே அன்பழகனின் தினப்போராட்டமும் பின்நோக்கிய தீர்வற்ற நடையும் தொடங்கிடுச்சு. அல்லிக்குளத்து பள்ளிக்கூடத்தை சுற்றி வயக்காடுகளா இருக்றதுனால பெரும்பாலும் களையெடுக்கவோ கருதறுக்கவோ தன் வீட்டு உறவுகள் கடந்துபோகுறத பாக்கமுடியும், இவர்களின் பெருங்கூச்சலே அவர்களுக்கு எசப்பாட்டாகவும் அமையும். விவிஎஸ் பள்ளியைச்சுற்றி மதில் என்பதை விட பெரிய அகழி கட்டிய ஒரு கட்டிடத்தீவுக்குள் மாட்டியிருக்ற மனநிலை இவனுக்கு. ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைங்கள நல்லா ஜோடிச்சு வரிசையா வந்து அடைச்சுட்டு போறாய்ங்க தத்தம் பெற்றோர்கள்னு நினைச்சான்.

மாநகரப்பள்ளி மாணவனாக மீண்டும் தன் வாழ்க்கையினை பைய்ய தொடங்கினான் அன்பு. வகுப்பறையில் முதல்நாள் தன் பக்கத்ல இருந்த சுமந்த் கேட்ட முதல் கேள்வி, அன்பு நீ பத்தாம் வகுப்பு ஸ்டேட் போர்டா? மெட்ரிக் போர்டா? அப்படின்னா என்னனு அறியாமையில் கேட்டான் அன்பு. எந்த பாடமுறையில் படிச்சேனு நகைப்புடன் மீண்டும் கேட்க, தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் பாடம்னு அவன் அளித்த பதிலால் மொத்த வகுப்பறையும் சிரிப்பொலியால் சிதறியது. சிலபல அக்கப்போர்களுக்குப் பின் புரிந்துகொண்டான், முறையே ஸ்டேட், மெட்ரிக், சிபிஎஸ்ஸி இன்னபிற போர்டுகள் இருக்குனு.

பச்சைப்பயிர பிடுங்கி வேறு இடத்ல நட்டுனா நாளாகும்ங்ற பக்குவம் இல்லாததுனால சீக்கிரம் எல்லாரையும் நட்பாக்கிக்கனும்னு இவன் எடுக்ற முயற்சிகளை கேலிகிண்டல்னு முடித்துவைத்து பெரும் சந்தோசப்பட்டார்கள் சக மாணவர்கள். தினமும் ஏதாவது ஒரு மனச்சங்கடம் நடக்கும், சத்தமா பேசுனா பைய பேசுடா ஏன் கத்துற காட்டான் மாதிரிங்றதும் பைய்ய பேசுனா ஏன் ஜாரி மாதிரி குசுகுசுன்னு பேசுறேன்னு லந்து பண்ணுறதும் தொடர்ந்துகிட்டே இருக்கும். இவன் அவர்களில் ஒருவனாக வேண்டுமென மெனக்கெடுவதும் தன் நடை உடை பேச்சுவழக்க மாத்திக்க முற்படுவதும் அன்புக்கு ஒப்பவே இல்லை. திடீர் ஃபேசன் நிகழ்ச்சியில கலந்துக்ற குழந்தை மாதிரி அந்நியத்தை உணர்ந்து உணர்ந்து புதுசாக வந்த கூச்சத்தை வைத்து மறைத்துக்கொண்டு நகர்ந்தான்.

வகுப்பறையில் ஒருநாள் ஆங்கில ஆசிரியர் the car is going on the bridgeங்ற கட்டுரையை வாசிக்கச் சொல்ல அன்பு pridge என்றும் ஆசிரியரின் ஒன்றிரண்டு முறை திருத்தலுக்குப்பின்னும் fridge என்றும் ஆனதால் மொத்த கூட்டத்தின் குண்டக்க மண்டக்க லந்துகளால் புழுவாய் மட்டுமே நின்றிருந்தான் நடு வகுப்பறையில். ஒவ்வொரு நாளும் ஆங்கிலமொழி உச்சரிப்பால் ஏற்படுற போராட்டம் சக நண்பர்களின் குதறலால் கிட்டத்தட்ட போர்முடிஞ்ச பின் அநாதையாக கிடக்கும் குற்றுயிர் மனுசனாவே ஆகிப்போயிருந்தான். ஏதாவது ஒரு பாட ஆசிரியர் வரலன்னாக்கூட ஆங்கில ஆசிரியரை கூப்பிடுவோமாங்ற மாணவிகளின் ஆர்ப்பரிப்பும் அதைத்தொடர்ந்து நடக்கும் ஓரங்க நாடகத்திலும் பபூனாகவே ஆக்கப்பட்டிருந்தான். அதன்பின் மாணவிகளிடம் பேசக்கூட எண்ணியதுமில்லை, யாரிடமும் பேசுவற்காக நெருங்கியதும் இல்லை, யாரும் அவனுக்காக தேவதைகள் அவதாரம் சூடவும் இல்லை. ஒவ்வொரு நாள் விடியலிலும் இந்த அகராதி புடிச்சதுங்க இன்று என் வாழ்க்கையில என்ன கும்மியடிக்கப் போறாய்ங்களோ ஆண்டவாங்ற பயத்தோடுதான்  முழிப்பான் படுக்கையறையிலிருந்து. சக மாணவர்களின் தொடர் லந்துகளால் பள்ளி வகுப்பறை நெருப்புசூழ் குமிழாகவே இருந்தாலும் தன் போலியானச் சிரிப்பைக் காட்டி கடக்கும் நரக வேதனையையும் கற்றுக்கொண்டான்.

இது பத்தாதுன்னு இவன் அம்மா மீனாட்சி வீதில சாயங்காலம் வர்ற பால்காரண்ணா, உதிரிப்பூ விக்றக்கா, வறுத்தகடலை விக்கவர்ற மதி அண்ணா கூடலாம் சண்டை போட்டுட்டே இருப்பது பெருத்த எரிச்சலைக் கொடுத்தது.  எம்மவன் விவி௭ஸ்ல படிக்கிறான், எக்கச்சக்க மதிப்பெண் எடுப்பான் உங்க சத்தத்தால அவன் படிப்பு கெடுதுனு அவ கொடுக்ற பஞ்சாயத்து ரொம்பரொம்ப கடுப்பேத்தும். அது மட்டுமா வெள்ளென உசுப்பிவிட்டு படிபடின்னு அல்லிக்குளத்ல என்றுமேயில்லாத அர்ச்சனைகள இங்கு கேட்டுக்கேட்டு  கொள்ளக்கோபம் கொண்டு திரிஞ்சான் அன்பு. பள்ளியில் தான் படும் அவமானங்கள் தெரியாம தன் தாயின் பகுமானப் பேச்சுக்களால் தன் சுயத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவான் ஒவ்வொருநாளும்.

வாரவிடுமுறை கூட அவனுக்கான நாளாக அமையாது, கிராமத்தில் கோலி, பம்பரம், கபடி இன்னும்சில விளாட்டுகளிலே ஊறியவன் இந்தப்பள்ளிலதான் முதல்முதலா புட்பால், ஹாக்கி, டென்னிஸ்னு விளாடுறதப்பார்த்தான். அதுமட்டுமா ஊர்ல வெறும் மட்டைய வச்சு சந்தோசமா விளாண்ட கிரிக்கெட் கூட இவெய்ங்க வச்சிருக்ற பேட், கிட் பைகளைப் பார்த்து மிரண்டு ஒதுங்கிப் போகுற நெலமயே அன்புக்கு. அடிக்கடி அல்லிக்குளம் போயிட்டு வந்துட்டு இருந்த அப்பா அம்மா கூட இவன் இங்க வந்தபின் போகவே இல்லை. எப்போடா நம்ம ஊருக்கு கூட்டிட்டு போவாய்ங்கங்ற நெனப்புலயே கொஞ்சூண்டு உசிர மிச்சம் வச்சிருந்தான். அந்த அளவுக்கு தன் பால்யத்தை இழந்து பரிதவித்துப்போனான்.

திடீர்னு ஒரு சுகந்தநாள் அவனுக்கு தங்கள் சொந்தக்கார கிழவர்  ஒருத்தர் இறந்திட்டதா தாக்கல் வந்ததும் குடும்பத்தோட கிளம்பி போயிட்டிருந்தாங்க, இறந்தவர் தன் நண்பனோட பூட்டன். கல்யாணச்சாவுங்றதுனால ஊரே அவரோட அருமை பெருமைகளை சொல்றேன்னு அழுகையே இல்லாம காமெடி பண்ணிட்ருந்தப்ப இவன் நண்பர்கள பார்த்து ஒரே ஓட்டமா ஓடிப்போய் தன் நண்பன கட்டிப்பிடிச்சு வச்ச ஒப்பாரிய பார்த்து ஊரே ஒரு நிமிசம் அடங்கி, ஆர்ப்பரிச்சது. இவனுக்கு அந்த மனிதமுகங்கள் நடுக்காட்டில் ரத்தவெறி உருமலுடன் அலையும் புலியின் கோரப்பல்லாகவும் அதில் சிக்கிய மானின் இடர்நிலை இவனாகவும் காமிச்சது.

இரவெல்லாம் மந்தைல உக்காந்துகிட்டு அன்புவின் பள்ளியைப் பற்றியும் சக நண்பர்களைப் பற்றியும் மாணவிகளின் அழகியலைப் பற்றியுமான கதைகளை சொல்லச்சொல்லி நசநசன்னு நச்சரிச்சிட்டே இருந்தாய்ங்க தன் நண்பர்கள். முன்பே அன்புவின் அம்மா தன் மகன் பற்றியும் அவன் படிக்கும் பள்ளியைப் பற்றியும் பெருமையாக ஊர்முழுக்க தம்பட்டம் அடிச்சிருந்ததும் இவன் இங்கிருந்து கிளம்பும் முன் கொடுத்த பில்டப்புகளும் ரொம்ப ரொம்ப அதிகங்றதுனாலயும் அமைதியாகவே உக்காந்திருந்தான். அன்பு தான்படுற அவமானங்களை யார்கிட்டேயும் பகிர்ந்துக்க முடியாத வேதனையிலும், எங்கே மனம்திறந்தால் எல்லாத்தேரமும் நாமதான் இவெய்ங்களுக்கு ஊறுகாய்ங்ற இயலாமையிலும் ஊமையாகவே அவ்விடுமுறை முழுக்க உழன்றான். மதுரைக்கு போன இம்புட்டு நாளிலே ரொம்ப மாறிட்டேப்புனு தன் நண்பர்கள் முணுமுணுத்துக் கொண்டது மேலும் கஷ்டத்தைக் கொடுத்தது. 

மீண்டும் பள்ளிக்கூடம் போக மதுரைக்கு போகணும்னு நினைச்சாலே கண்ணீர் தானா வடியுது அன்புக்கு. அம்புட்டு  காதலிச்ச மதுரையை இப்போலாம் நினைச்சாலே உடம்பு நடுங்குது. எங்காவது ஓடிப்போயிருவோமா இந்த மனச்சிக்கலோடு வாழ்வது எதற்குனு தொடர்ந்து தனக்குத்தானே கேட்டுட்டே இருந்தாலும் விடையோ விடுதலையோ அவன்கையில் இல்லை என்பதால் அவனுடைய இருநிலை கொடும்நிலையாகவே தொடர்ந்தது. மாநகர வாழ்க்கை, பெருங்கூட்டம், கேளிக்கை, சுற்றல்கள்னு பகுமானமா வாழலாம்னு ஆசைப்பட்டு அவனா இந்நிலையை தேடிக்கிட்டதா நினைச்சான், பாவம்.

பார்க்கும் முகங்கள் யாவும் படி படின்னு படிக்கச்சொல்லுதே தவிர ஒருநாள்கூட ஏன்ய்யா ஒருமாதிரியா இருக்கேன்னு கேட்கமாட்டேங்றாய்ங்களேனு பெரும் ஆதங்கப்பட்டான். 12ம் வகுப்பு அறுவடைக்கான தார்க்கம்புச் சொற்கள் மட்டுமே தினமும் துரத்த ஆரம்பிச்சது, இந்த அழுத்தங்கள் பெரும் கவலையையும் தனிமையையும் கொடுத்தது அன்பழகனுக்கு. உறவுகளின் சுற்றங்களின் எல்லாம் உன் நல்லதுக்காக தான்னு பேசும் பேச்சுக்கள் எல்லாம் பொருளற்றப் பேச்சுக்களாய் எண்ணினான். ஆசிரியர்களின் தொடர் குற்றச்சாட்டுகளும் பெற்றோரின் வைதலும், அழுத்தங்களும், வரட்டுக்கவுரவுமும் தன்னை விரட்டுவது இனி ஒருநாளும் நிற்கப்போவதில்லைனு நம்புனான். உனக்கு என்ன வேணும்ன்னு கேட்கிறதுக்கோ நாங்க இருக்றோம்னு கைகோர்க்கிறதுக்கோ நண்பர்கள் வட்டாரம் நம் பள்ளியில் கிடைக்கப்போவதுமில்லை என தீர்க்கமா உணர்ந்தவன்.

தன் தேடலை நோக்கி வெளியில் நகர்ந்தான்.

வீட்டுக்கும் பள்ளிக்கும் சென்று வருகிற ஒரு மாணவனாக தேமேன்னு தன்னிருப்பை அங்குள்ள மேஜைகளில் இருத்தி கணக்கு காட்டிவிட்டு தொலைந்த தன் உலகத்தை தேட ஆரம்பிப்பது என்று ஒரு முடிவுக்கு வந்தான். வகுப்பறைக்குள்ளவே நெடுந்தூரமாக தன்னை சுருக்கிக்கொண்டு யாரும் எளிதில் அணுகாத அளவுக்கு மூர்க்கத்தை காட்ட ஆரம்பிச்சான். தன் இயல்பான சிரிப்பை மறந்து சிடுமூஞ்சிக் கோபக்காரனா தனக்குத்தானே வேலிகள் இட்டு யாரும் நெருங்கிடாதவாறு வெகுதூரம் சென்றான்.

தன் வாழ்விற்கான நட்புவட்டம் பழக்கவழக்கம் இவிங்ககிட்ட இல்லையென்று பள்ளி நண்பர்களுக்கு அப்பாற்பட்டு தனக்கான கரங்களைத் தேட ஆரம்பித்தான். விளைவு, படிப்பின் கரங்கள் அன்பழகனை விட்டுப்போய் இருந்தன. முந்தைய நல்லபிள்ளைங்ற குணத்தை விட்டு பின்னோக்கி நகர ஒரு எட்டு வெளியுலகில் நடக்க ஆரம்பித்தான், எல்லா திசைகளிலிருந்தும் கரங்கள் பற்றின, எந்நிலை நோக்கிய பயணமோ, அறியா வயதில்...!

இராஜகுமார் கந்தப்பழம்

வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று தற்பொழுது இரஷ்யாவில் சவுத் உரல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராக (senior research scientist) பணிபுரிந்து வருகி்றார். பள்ளிப்பருவம் முதல் கவிதை எழுதுவதில் ஓரளவு நாட்டம் கொண்டவர் மூன்று கவிதை புத்தகங்களை எழுதியுள்ளார். முதல்முதலாக அந்திமழை இதழின் சிறுகதைப் போட்டி விளம்பரத்தைப் பார்த்ததும் எழுதச்சொல்லி தன் மனைவி ஊக்கம் தந்ததாகக் கூறுகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com