கவிஞன்

கவிஞன்
ஓவியம்: பி.ஆர்.ராஜன்
Published on

இன்னும் பனிரெண்டு வருடங்களில், பெரும் புகழும் பணமும் தனக்கு வரப்போகிறது என்பதை இன்றைய பொழுது அறியாத கவிஞன், தேய்ந்து போன ரப்பர் செருப்பு பின்னங்காலில் மோதும் ‘ப்ளக் ப்ளக்’ சத்தத்துடன் அவசர கதியில் எங்கள் அலுவலகத்தை நோக்கி வந்தான். நெருங்க இன்னும் இருபது அடி இருக்கும் போதே பசி வாடை வீசியது.

சரியான உணவு இல்லாத போது ஒட்டகம் உடல் கொழுப்பை எரித்து உயிர் வாழ்வது மாதிரி பசியில் இருக்கும் மனித உடம்பும் ஏதோ செய்து பிழைக்கிறது. இந்த ரசாயன நிகழ்வில் உடம்பு தனக்கு உணவு வேண்டுமென்பதைச் சொல்லாமல் சொல்ல பசி வாடை தோலில் உருவாகிறது என்று தோன்றியது. நான் டாக்டருக்குப் படித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதற்குள் பக்கம் வந்த கவிஞன், “சாரிண்ணே… ஸ்டாப்புல எறங்கி தப்பா அந்தப் பக்கம் போயிட்டேன். அதான் லேட்டாயிடுச்சு” என்று மன்னிப்புக் கேட்டுப் பழகிய குரலில், கண்ணில் லேசான பயத்துடன் சொன்னான்.

“பரவால்ல… வாங்க. இன்னும் சார் வரல.” என்று அவனை அப்படியே அலுவலகத்திற்கு உள்ளழைத்து, “இந்த ரூம்” என்று வலது பக்க அறையைக் காட்டினேன். கருப்பான கால்தடம் பதிந்த செருப்பைக் கழட்டியவன், “செருப்புப் போட்டுக்கலாம்” என்று நான் சொன்னதும் கழட்டிய வேகத்திலேயே மாட்டிக் கொண்டான்.

அறைக்குள் நுழைந்ததும் ஜன்னலைத் திறந்து மின் விசிறியைச் சுழல விட்டு நெடி குறைந்ததாக நினைத்துக் கொண்டேன். கவிஞன் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து துணிப்பையிலிருந்து கோடு போட்ட நோட்டுப் புத்தகமும், ரேனால்ட்ஸ் பேனாவும் எடுத்துப் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டு, “சொல்லுங்கண்ணே” என்று ஆர்வமாகக் கேட்டான்.

பன்னிரண்டு வருடங்கள் கழித்து நான் கவிஞனின் புதிய அலுவலகத்தின் வாசலில் என் பைக்கை நிறுத்தி, இரும்புக் கதவைத் திறந்தவுடன், மாலை போட்டுப் பொட்டு வைத்திருந்த அவுடி காரின் அடியில் இருந்து திடீரெனப் பாய்ந்த கருப்பு நாய் கழுத்து வரை குதித்தது. “ஏய் ஏய் என்ன இது” என்று நடுங்கிய குரலில் அதட்டினேன். பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்த கவிஞன் “டேய் அல்பசினோ, பாவம் விட்டிரு. அவரு ஹார்ட் பேஷண்டு” என்று சிகரெட் புகை குமுறி வரச் சிரித்தான். அல்பசினோ என்னை நக்கி விட்டு மீண்டும் காருக்கு அடியில் அவசரமாக ஓடியது.

கவிஞனின் அலுவலகம் ஆயுத பூஜை முடிந்து ஊதுபத்தி, விளக்கெண்ணை, டீ, பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் சிகரெட் எல்லா மணமும் கலந்து லேசான புகையுடன் இருந்தது. கவிஞனின் பெர்கென்ஸ்டாக் செருப்புக் கழட்டியிருக்கும் நுழைவாசலில் ஒரு நொடி நின்றபோது “அங்கயே செருப்ப விட்டிடுங்க” என்று அசரீரியாகச் சொல்லியபடியே படியிறங்கினான்.

அலமாரியிலும் மேஜையிலும் சுவர்களெங்கும் விருதுகளும் பட்டயங்களும் நிறைந்து தொங்கின. சுழல் நாற்காலியில் அமர்ந்து காலைத் தூக்கி மேஜையில் வைத்துக் கொண்டு, “வெரிகோஸ் வைன். ரொம்ப நேரம் தொங்கப் போட்டா கால் வீங்கிடுது” என்றான்.

நேபாளப் பையன் கொண்டுவைத்த டீயைக் கையிலெடுத்தபோது, “ராம்லால்… பாய் கடையிலருந்து சமோசா கொண்டு வா” என்ற படியே என்னிடம் திரும்பி “அருமையா இருக்கும். அண்ணிக்கும் பார்சல் போடச் சொல்றேன்” என்றான். Maker’s Mark விஸ்கி பாட்டிலை எடுத்து முன் வைத்தான். 

பிள்ளையார் சுழி போட்டு  “சொல்லுங்கண்ணே” என்று ஆர்வமாகக் கவிஞன் கேட்டவுடன் “டீ?” என்றேன். “பரவால்லண்ணே. டிபன் சாப்டுட்டு அப்பறமா டீ குடிக்கலாம்” என்றான்.  மீண்டும் பசி வாடை அடித்த மாதிரி இருந்தது. புரிந்து கொண்டு தோசை வாங்கிவர அலுவலகப் பையன் சுரேஷிடம் சொல்லிவிட்டுக் காசட்டை உள்ளிட்டேன்.

அலமாரியிலிருந்த புத்தகத்தைக் காட்டி “Man’s search for meaning. உங்களுதா?” என்றான்.

“இல்லைங்க. எல்லாம் போன படம் செட் வர்க்குக்கு வந்த புக்ஸு. ஆஃபீசுல வச்சா வெயிட்டா இருக்குமேன்னு கொண்டு வந்திட்டேன். படிக்கணும்”

“விக்டர் ஃபிராங்கல் ஒரு யூத டாக்டர்… பொண்டாட்டி புள்ளய நாஜிக்கள் கைல சாகக் குடுத்திட்டு இவரு ஆஸ்விச்சு காம்புல எல்லாக் கொடுமையும் அனுபவிச்சிருக்காரு.'’

சுரேஷ் திடுமென உள்ளே வந்து “வொயிட் சட்னி இல்லையாம்ணே” என்று அறிவித்தான். “எக்ஸ்டிராவாகத் தக்காளி சட்னி” வாங்கிக் கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் கவிஞனைப் பார்த்தேன்.

“உலகப் போர் முடிஞ்சு வெளிய வந்ததும் வியென்னா திரும்பப் போறாரு. தன் வாழ்க்கைல எல்லாம் முடிஞ்சு போச்சு. ஆனா தான் ஏன் தற்கொலை செஞ்சு சாகலன்னு அவரே அலசி ஆராய்ஞ்சு இந்தப் புத்தகத்த எழுதறாரு.”

தோசைக்குப் பதிலாக பொங்கல் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. அதற்குள் சுரேஷின் மோபெட் கிளம்பும் சத்தம் கேட்டவுடன், தோசையும் பரவாயில்லைதான் என்று நினைத்துக் கொண்டேன்.

“இவருக்கும் மத்தக் கைதிகள் மாதிரி ஒரு ரொட்டித் துண்டுதான். முழு நாளைக்கும். அதுல ஒரு கடிகடிச்சிட்டுப் பாண்டுக்குள்ள வச்சிக்கிறாரு. நாள் பூரா மிச்சமிருக்குற ரொட்டியத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிறாரு. நம்பிக்கை. ஏதோ இன்னும் இருக்குங்குற அந்த ஹோப்புதான் அவர எல்லா வேதனயயும் தாங்க வைக்கிது… அருமையான புக்குண்ணே.  ”

“படிக்கிறேன்” என்று சுருக்கமாகப் பதில் சொல்லி காசட்டை ஓட விட்டேன்.

கவிஞன் விஸ்கியில் தண்ணீர் கலந்து மடக்கென்று பாதி அளவு முழுங்கினான். “என்னதிது காலங்கார்த்தாலயே…” என்று என் அசூயையைச் சிரிப்பில் கலந்து மறைக்க முயன்றேன்.

“காலைல சாயங்காலம் எல்லாம் மனுசங்க உருவாக்கினதுதான! இப்பப் பாருங்க பாஸ்... மணி பத்து இருவது. இந்த ஜன்னல இழுத்து மூடிட்டு செக்ஸு வச்சுக்கிட்டா சமூகம் தப்பாப் பேசும். ஆனா நல்லாத்தான இருக்கும்?” என்று உரக்கச் சிரித்தான்.

“காலம் நேரம் ஏது கலவி செய்ய... காதல் கொஞ்சம் போதும் காமம் பெய்ய - அருமையான பாட்டு. அந்த டைரக்டர் ராம்குமார் ஒரு கேனையன். பாட்ட எடுக்கத் தெரியாம எடுத்து வச்சு மக்கள சுத்தமா ரீச் ஆவல. இப்பப் பசங்கல்லாம் கேட்டிட்டு எப்படி இவ்வளவு நல்ல பாட்ட வந்த போது மிஸ் பண்ணோமுன்னு மெசேஜ் போடறாங்க.”

நான் ராம்குமாரிடம் உதவி இயக்குநராக அந்தப் படத்தில் வேலை செய்ய முயற்சி செய்து வேலை கிடைக்காததைச் சொல்லிக் கொள்ளாமல் டீயை உறிஞ்சினேன். கவிஞன் ஆப்பிள் இயர் பாட் மாட்டிக் கொண்டு, “ஆரம்பிக்கலாம்” என்ற தோரணையில் லேசாகத் தலையாட்டினான்.

காசட்டுகளில் மெட்டு கேட்ட காலத்தில்தான் கவிஞனுக்கு முதல் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தோம். கரகரகரவெனக் காசட் சத்தத்துடன்  இசை அமைப்பாளரின் கம்மக் குரலும் ஹார்மோனியமும் கலந்து மெட்டு துவங்கிய உடன்…

“அண்ணே…. இது டைரக்டர் சொன்ன அந்த சிச்சுவேஷனில்ல.. ஹீரோயின் ரயில்ல போவாங்க…”

“ஹீரோ அவுங்க ஊர்ல இருக்காரு… அந்த சிச்சுவேஷன்தான்… பல்லவி மட்டும் ஆப்ஷன்ஸ் குடுங்க… சார்கிட்ட ஓகே வாங்கிடுவோம்… அப்பறம் சரணம் பண்ணுங்க”

“சாயங்காலம் வரையில டைம் குடுங்கண்ணே. பண்ணிடுவோம்.” என்று சொல்லியபடியே சுரேஷ் கொண்டு வந்த தோசையை ஒரு கையால் விண்டு விண்டு வாயிலிட்டு, இடது கையால் திரும்பத் திரும்பப் பல்லவியின் மெட்டை ஓட விட்டான்.

நான் கை கழுவிவிட்டு மீண்டும் மேஜையில் வந்தமர்ந்த போது, என் கண்ணில் படாமல், சில வரிகளை, சொற்களை ஏதோ செலுத்தப்பட்டவன் போல தன் புத்தகத்தில் குறித்துக் கொண்டான். நான் சிகரெட் பிடிப்பதற்காக அறையை விட்டு வந்ததை அவன் கவனிக்கவில்லை.

சென்னை கார்ப்பரேஷன் ஒப்புதல் செய்த மெட்டை என் செல்பேசியில் பாட வைத்த போது உடனடியாகக் காதிலிருந்து இயர் பாடை எடுத்த கவிஞன், மேஜையில் இருந்த புகைப்படத்தைக் கையில் கொடுத்து, “பையன். காளிதாசன்” என்று லேசான பெருமையுடன் சொன்னான்.

பாட்டை ஆரம்பித்த வேகத்தில் நிறுத்தி விட்டு “என்ன வயசு? துறுதுறுன்னு இருக்காப்புல!” என்றேன்.

“மூணறை. ரைம்ஸெல்லாம் தானா எழுதுவாரு”

“வீட்டுலயே கவிஞருக்குப் போட்டி”

“உங்களுக்குப் பசங்க?””

“படம் பண்ணிட்டுதான் பிள்ளைங்கன்னு வச்சிருக்கேன்”

“அதான் இப்பப் பண்றீங்களே. மூட்ஸ் பாக்கெட்ட தூஊஊஊக்கிப் போடுங்க.” என்று சத்தமாகச் சிரித்தான்.

“இது படம் இல்லைங்க. சென்னை கார்ப்பரேஷன் டாகுமெண்டரி”

“டாகுமெண்டரியா?”

“ஆமாம். நீங்க என்ன நெனச்சீங்க?”

“தெரியலயே… உங்க பேர் சொன்னதும் மீட்டிங்குக்குச் சரின்னிட்டேன்.”

“கார்ப்பரேஷனுக்கு 30 நிமிஷப் படம். உங்க மானேஜர்ட்ட தெளிவா சொன்னேனே! நீங்க பாட்டு எழுதறீங்கன்னு கமிட் பண்ணிட்டேங்க.” லேசாகக் கெஞ்சினேன்.

“அதெல்லாம் ஒரு மாட்டரே இல்ல. நான்தான் எழுதறேன். ஆக்சுவலா படம்னு நெனச்சு நம்ம ரெகுலர் சம்பளம் கேட்டுட்டேன். டாகுமெண்டரின்னா பட்ஜெட்டு கம்மியா இருக்குமில்ல.”

“உங்க சம்பளம் நான் குடுத்திடறேன். என் பொறுப்பு”

“நீங்க உங்க கைக் காசக் குடுப்பீங்க, தெரியும் பாஸ். அதெல்லாம் வேணாம். உங்க பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரிப் பாத்துக்கலாம்.”

அடுத்த மடக்கு குடித்த அதே வேகத்தில், இன்னும் ஒருமுறை விஸ்கியும் தண்ணீரும் ஊற்றிக் கொண்டான்.

மதியம் நான்கு மணிக்கு அலுவலகம் திரும்பிய இயக்குனர் “என்னய்யா, அந்தப் புதுப் பையன் தேருவாரா?” என்று கேட்ட போதுதான், கவிஞன் வலது பக்க அறையில் இருப்பது நினைவுக்கு வந்தது.

சுரேஷ் மதியம் வாங்கிக் கொடுத்திருந்த பிரியாணியில் எலும்பும் வாழை இலையும் மட்டும் மிச்சம் இருந்தது. கவிஞன் என்னைப் பார்த்ததும் “மறந்திட்டீங்கன்னு நெனச்சேண்ணே…”

“டைரக்டர் வெயிட்டிங். பல்லவி ரெடியான்னு கேக்கறாரு”

“நீங்க மொதல்ல கேளுங்க - காதல் பருவம் கரைந்து கங்கை நீரில் செல்லும்… சாதல் மட்டும் நம்மை அங்கும் கொண்டு சேர்க்கும்”

“பல்லவிலயே சாவுன்னு வரக் கூடாதுங்க” என்ற என் அறிவுரையை மதித்து, இயக்குனரிடம் வேறு வரிகளைக் கவிஞன் படித்துக் காண்பித்தான்.

லேசாக முகம் சுளித்த இயக்குனர், கொஞ்சம் யோசித்து, “நீங்க பாத்தீங்கன்னா… மேகதூதத்தில ஒருவரி வரும்…” என்று ஆரம்பித்தார்.

“சார்…” என்று சந்தோஷத்தில் கத்திய கவிஞன், “நான் அப்படியே மேகதூதத்திலருந்துதான் எடுத்தேன். கரெக்டா புடிச்சிட்டீங்க சார் - சாதல் மட்டும் நம்மை அங்கும் கொண்டு சேர்க்கும் - ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கு” என்று  சொன்னான்.

“பர்ஃபெக்ட்… அதான் வேணும்” என்று இயக்குனர் புன்னகைத்தார்.

மூணரை வயதுக் காளிதாசனின் படத்தைத் திரும்பவும் மேஜையில் வைத்து என் செல்பேசியில் மெட்டை ஒலிக்க வைக்க முயற்சித்தேன்.

என்னைப் பார்த்து “அன்புக்கும் சுவை ஒன்று தெரிகிறதே… அன்னையின் ஒரு கை உணவினிலே” என்ற கவிஞன், “உங்க பாட்டுதான் பாஸ். எழுதிக்கங்க” என்று ஒரு பேனாவையும், வெள்ளைத்தாள் இருந்த அட்டையையும் என் பக்கம் விரலால் நகர்த்தினான்.

அடுத்த 15 நிமிடங்களில் அவன் வரிகளை ஓரிரு இடங்களில் மெட்டுக்கு ஒட்டாது என்று தோன்றினாலும் சொல்லத் தைரியம் இல்லாமல் சந்தேகத்தை விழுங்கிப் பேசாமல் குறிப்பெடுத்துக் கொண்டேன். இடையில் அல்பசினோ ரப்பர் பந்தைக் கவ்விக் கொண்டு வந்தபோது “இவன் ஒருத்தன்…” என்று செல்லக் கோபத்துடன் பந்தைப் பிடுங்கி எறிந்தான். “ஆட்டிக் கிட்டு ஓடுறதப் பாருங்க” என்று அல்பசினோவின் துள்ளலை ரசித்து விட்டு “இந்தப் பூமியில் சிறந்தது எது… பல புண்ணியம் செய்தது எது…” என்று தன் பாடலைத் தொடர்ந்தான்.

மாலையில் இசை அமைப்பாளர் படித்துப் பார்த்து விட்டு, “பிறவிக் கவிஞன் சார். எவ்வளவு கச்சிதமா எழுதிருக்காரு. அவருக்கு டியூன் பிடிச்சதா?” என்று கேட்டார். கவிஞன் மெட்டின் ஒரு வரியைக் கூடக் கேட்கவில்லை என்று சொல்லாமல் “ரொம்ப ரசிச்சாரு” என்று பொய் சொன்னேன். “மீட்டர் ஓகேவா?” என்று கேட்டேன். “ஓகேவா? பக்கா சார்!!!” என்று புல்லரித்தார்.

எங்கள் இயக்குநர் கிளம்பிய பின் அலுவலகத்தின் பின் புறம் நின்று சிகரெட் பற்ற வைத்துக் கொடுத்தேன். பவ்வியமாக வாங்கிக் கொண்ட கவிஞன் “நீங்க கைட் பண்ணலன்னா ரொம்பத் தடுமாறி இருப்பேண்ணே. சரணமும் நீங்களே என் கூட இருந்து ஹெல்ப் பண்ணுங்க” என்று நன்றியுடன் சொன்னான்.

“அதெல்லாம் சொல்லணுமா… என் வேலையே அதான…” என்று அடக்கத்துடன் நன்றியை ஏற்றுக் கொண்டேன்.

அக்கவுண்டண்ட் தலைய நீட்டி “மழை வரதுக்குள்ள விருகம்பாக்கம் போணும் சார்” என்று அவசரப் படுத்தினார்.

வேகவேகமாகச் சிகரட்டை இழுத்து விட்டு உள்ளே வந்து வவுச்சரில் கையெழுத்துப் போட்டுக் கவிஞன் காசு வாங்கிக் கொண்டான். 15000 ரூபாயை எண்ணும் போது அக்கவுண்டண்ட் காஷியரை நோக்கி “மாசம் முழுக்க வேலை பாத்து நாம பாக்கற காச, ஒரே நாள்ள சம்பாதிச்சுட்டாரு சாரு. நாமளும் பாட்டெழுதப் போலாமா செந்தில்?” என்று கேட்டார். செந்தில் பதில் சொல்லவில்லை.

அல்பசினோ என்னைக் கொஞ்சி முடித்ததும் என் கையில் சமோசா பொட்டலத்தை வைத்த கவிஞன், “நீங்க இந்நேரத்துக்கு நாலு படம் பண்ணிருக்கணும். மிஸ்ஸாயிடுச்சு. விடுங்க. பாத்துக்கலாம். நான் ஒரு துபாய் பார்ட்டிட்டப் பேசறேன். நீங்க சப்ஜெக்ட ரெடி பண்ணுங்க!” என்றான்.

“நீங்க குடிக்கிறதக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணணும். காளிதாஸ் கல்யாணம் கட்டி நீங்க தாத்தாவாக வேண்டாமா?”

“கண்டிப்பா… கண்டிப்பா… இந்த வருஷம் மாலை போடும்போது குடிக்கும் சேர்த்து ஒரேயடியாக் கும்பிடு.” என்றான்.

நான் பைக்கில் ஏறி ஹெல்மட் மாட்டியதும் என் அருகில் வந்து, “இந்தப் பாட்டுக்குப் பேமண்ட் வேணாம், படம் பண்ணும் போது சேத்து வாங்கிக்கிறேன்” என்று சொல்லி என் மறுப்பைக் காதில் வாங்காமல் “டேய் வாடா” என்று அல்பசினோவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

கவிஞனின் மானேஜர் தீபாவளிக்கு அடுத்த நாள் அழைத்த போது துபாய் பார்ட்டியை சந்திக்கத் தயாராக ஃபோனை எடுத்தேன். மஞ்சள் காமாலையுடன் Makers Mark முழு பாட்டிலை முடித்திருந்த கவிஞன் அந்த மழை நாளில் மரித்த தகவலைச் சொன்னார்.

அக்கவுண்டண்டும் காஷியரும் ஒரே பைக்கில் விருகம்பாக்கம் கிளம்பிய பின், கவிஞன் பிரகாசமான முகத்துடன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த 15000 ரூபாயைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தபடியே கிளம்பிச் சென்றான்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com