இலக்கிய விபத்து
ஓவியம்: ரவி பேலட்

இலக்கிய விபத்து

வாடிவாசல்' வழியே வேகமாக வந்த ‘மரப்பசு' அவனை முட்டித் தள்ளுகிறது. கீழே விழுந்தவன் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடுகிறான். ‘சித்திரப்பாவை'யும், ‘நந்திபுரத்து நாயகி'யும் அவனை விடாமல் துரத்துகின்றனர். அரண்மனையை நோக்கிச் செல்கிறான்.

‘அரக்கு மாளிகை'யின் கதவுகள் மூடிக் கொள்கின்றன. ‘இரும்புக் குதிரைகள்' மீதேறி வீரர்கள் அவனைத் தாக்க வருகின்றனர். தப்பித்துக் கொள்வதற்காக அருகிலிருந்த கிராமத்துக்குள் நுழைகிறான். ‘கோபல்லபுரத்து மக்கள்' அவனை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். கிழக்குத் திசை வழியாக நடந்து போகிறான். ‘சங்கர்-லாலும்', ‘துப்பறியும் சாம்பு'வும் அவனைப் பின்தொடர்கின்றனர். கடற்கரையை அடைகிறான். ‘யவன ராணி' அவனை மயக்கி தண்ணீருக்குள் அமிழச் செய்கிறாள். கொந்தளித்துக் கொண்டிருக்கும் ‘பாற்கடல்' அவனை உள்வாங்கிக் கொள்கிறது. வானத்தில் ‘கிருஷ்ணப் பருந்து' வட்டமிடுகிறது.

நெடுநாள் ஏக்கத்தை மனதில் சுமந்து கொண்டு அவன் ‘ஓலைச்சுவடி பதிப்பகத்திற்குள்' நுழைந்து சுற்றுமுற்றும் பார்வையிட்டான். அலமாரிகளில் தலைப்பு வாரியாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மூலையில் பிரிக்கப்படாத புத்தகக் கட்டுகளிடம் ‘புக் பிரிண்ட்' வாசனை பரவிக் கிடந்தது.

உரிமையாளர் அறைக்குள் சென்று ‘‘நான் ஒரு ரைட்டர்..'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

‘‘எந்த போலீஸ் ஸ்டேஷன்ல..'' என்றார் பதிப்பாளர்.

‘‘அது இல்லிங்க.. எழுத்தாளர்னு சொன்னேன்..''

‘‘ஓஹோ.. படைப்பாளியா..''

‘‘ஆமா.. ‘சித்ரகுப்தன்'ங்கற புனைப்பெயர்ல ரெண்டு மூணு வருஷமா எழுதிட்டிருக்கேன்..''

‘‘பலே.. என்னவெல்லாம் எழுதியிருக்கீங்க..'' கையிலிருந்த நாவலை மூடி ‘புக் மார்க்'கை அடையாளத்திற்கு வைத்தார். அதன் முன்னட்டையில் ‘பகவானைப் படைத்தவன்' என்றிருந்தது.

‘‘நூத்துக்கணக்குல சிறுகதைகள் எழுதியிருக்கேன்.. எல்லாத்தையும் தொகுத்து புஸ்தகமா வெளியிடணும்.. அதுக்குதான் உங்களைப் பார்க்க வந்தேன்..''

‘‘உங்க கதைங்க எந்தெந்தப் பத்திரிகைகள்ல பிரசுரமாகியிருக்கு..''

‘‘ஃபேஸ்புக்லயும், குழுக்கள்லயும் மட்டும் எழுதிட்டிருக்கேன்..‘‘

முகநூல்ல ‘போஸ்ட்' போடறது எல்லாம் இலக்கியத்துல சேராது.. அதெல்லாம் வெறும் பதிவு.. அவ்வளவுதான்..''

‘‘ரெண்டு மூணு க்ரூப்ல நான் தீவிரமான மெம்பர்.. ஒரே நாள்ல காலை, மதியம், இரவுன்னு மூணு வேளையும் கதை எழுதியிருக்கேன்..''

‘‘மாத்திரை சாப்பிடற மாதிரி சொல்றீங்க..'' என்றார் பப்ளிஷர். அவரது மேசைக் கணினிக்கு அருகில் பிரசுரத்தின் புத்தகப் பட்டியலும், ‘BAPASI'யிலிருந்து வந்த கடிதமும் இருந்தன.

‘‘எனக்கு ஒரு குழுவுல ‘சிறுகதைச் சக்ரவர்த்தி' பட்டமும், நிறைய சர்டிஃபிகேட்டும் கிடைச்சிருக்கு.. என்னோட ஒவ்வொரு பதிவுக்கும் குறைஞ்சது ஐநூறு பேராவது லைக் பண்ணி.. கமெண்ட் போடுவாங்க..''

‘‘அதையெல்லாம் வெச்சுகிட்டு நாக்கு கூட வழிக்க முடியாது.. நீங்க எவ்ளோ மொக்கையா எழுதினாலும் உங்க நண்பர்கள் முகதாட்சண்யத்துக் காக ‘சூப்பர்'.. ‘அருமை'.. ‘வேற லெவல்'.. ‘பிரமாதமா எழுதறீங்க'.. அப்படி இப்படின்னு பின்னூட்டம் எழுதத்தான் செய்வாங்க..''

‘‘க்ரூப்ல என்னை ‘இரண்டாம் பாலகுமாரன்', ‘வாழும் தி.ஜா',னு நிறைய பேர் புகழ்ந்திருக்காங்க.. கூடிய சீக்கிரமே ‘சாகித்ய அகாடமி' விருது கூட கிடைக்க வாய்ப்பு இருக்காம்..'' என்று பெருமிதம் கொண்டான் சித்ரகுப்தன்.

‘‘அடடே..‘‘ என்றார் பிரசுரகர்த்தா. ‘‘ஃபேஸ்புக் பிரண்ட்ஸ் அப்படிதான் சார் உசுப்பேத்தி விடுவாங்க.. அந்த பாராட்டு மழையில நனைஞ்சு உங்களுக்கு புகழ் போதை உச்சிக்கு ஏறியிருக்கும்.. அதெல்லாமே மாயை..‘‘

‘முகநூல் குழுக்கள்ல என் எழுத்துக்கு பெரிய ‘ரீச்' இருக்கு..''

‘‘அய்யா.. உங்க படைப்புகள் அச்சுல வரணும்.. வார, மாத இதழ்கள்ல பிரசுரமாகணும்.. அனுபவம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியர்கள், விமர்சகர்கள், மூத்த எழுத்தாளர்கள் உங்க எழுத்தைப் பாராட்டணும்.. அதுதான் உண்மையான அங்கீகாரம்..‘‘

‘‘அப்படின்னா.. ஃபேஸ்புக்.. க்ரூப்ல எல்லாம் எழுதவே கூடாதுங்கறீங்களா..''

‘‘அதை கொஞ்ச நாளைக்கு விமான ஓடுதளம் மாதிரி பயன்படுத்தலாம்.. ஒரு கட்டத்துக்கு அப்புறம் மேலே எழும்பி வானத்துல பறக்க முயற்சிக்கணும்.. அப்பதான் சிகரங்களைத் தொட முடியும்.. நல்ல எழுத்தாளர் முகநூல்லயே தேங்கிட மாட்டார்..''

அப்போ.. என் கதைகளைத் தொகுப்பா போட முடியாதா..''

‘‘எங்க ‘ஓலைச்சுவடி பதிப்பகத்துல' பத்திரிகைகள்ல பிரசுரமான படைப்புகளை மட்டுந்தான் தொகுத்து வெளியிடறதுன்னு ஒரு கொள்கை வெச்சிருக்கோம்.. உங்களோட பத்து, பதினைந்து சிறுகதைகளாவது வெவ்வேற இதழ்கள்ல வந்த பிறகு கொண்டு வாங்க.. புத்தகம் போடறது பத்தி யோசிப்போம்..‘‘

சித்ரகுப்தன் தனது வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் குளம் போல தேங்கியிருந்த மழை நீரில் தன் பிம்பத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘‘பப்ளிஷர் சொன்னதுல என்னடா தப்பு..'' என்று கேட்டான் லட்சுமணன்.

‘‘பத்திரிகைகளுக்கெல்லாம் அனுப்பினா.. வாரக்கணக்குல, மாசக்கணக்குல காத்திருக்க வேண்டியிருக்கு.. நம்ம கதையை அவங்க பிரசுரம் பண்ணுவாங்களா இல்லையான்னே தெரியாது.. ஆனா.. முகநூல்ல போஸ்ட் போட்ட அடுத்த நிமிஷமே லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்து கொட்டும் பாரு.. அதுல கிடைக்கற சந்தோஷமே தனி..''

‘‘அது ஃபாஸ்ட் ஃபுட் மாதிரிடா.. உடனே கிடைக்கும்.. அந்த சமயத்துக்கு ருசியா இருக்கும்.. அவ்வளவுதான்.. மேகஸின்ஸ்ல கதை வரதுதான் எழுத்தாளனுக்கு நிஜமான கௌரவம்.. ஃபேஸ்புக் புகழ்ச்சி எல்லாம் போலி..''

‘‘பத்திரிகையில வெளியானா.. படிச்சவங்களோட அபிப்ராயம் என்னன்னு நமக்கு தெரியாதே.. முகநூல்ல உடனுக்குடனே கருத்து

 சொல்லி.. நல்லா ஊக்கப்படுத்தறாங்க..‘‘ என்றான் சித்ரகுப்தன்.

‘‘உன்னோட எழுத்துல.. ஒருமை - பன்மை குழப்பம், வல்லின, இடையின தவறுகள், ஒற்றுப்பிழை இதையெல்லாம் கண்டுபிடிக்கற அளவுக்கு ஃபேஸ்புக் குரூப்ல எல்லாருக்கும் தமிழ்ல புலமையோ, இலக்கண அறிவோ இருக்காதுடா.. நீ எவ்ளோ மோசமா எழுதினாலும் ‘ஆஹா ஓஹோ'ன்னு கொம்பு சீவி விட்டுடுவாங்க.. உன் தப்பையெல்லாம் திருத்திக்க வாய்ப்பே கிடைக்காது..‘‘

‘‘சரி.. சரி..'' என்று அலுத்துக் கொண்டான். ‘‘எந்த மேகஸினுக்கு கதை அனுப்ப சொல்றே..''

‘‘தமிழ்ல பத்திரிகைக்கா பஞ்சம்.. வாரா வாரம் ‘அமுதம்' ‘விதூஷகன்' ‘சந்தனம்' ‘தினப்புதிர்' ‘அரசி'ன்னு நிறைய இருக்கு.. மாசத்துக்கு ஒரு தடவை ‘மோதிரம்' ‘கலைவாணி' ‘அட்சயப்பாத்திரம்' எல்லாம் வருது,.. எதுக்கு வேணா அனுப்புடா..'' என்றான் லட்சுமணன். ‘‘ஆனா.. பொறுமை வேணும்.. அனுப்பின அடுத்த நாளே எடிட்டர்கிட்ட ‘எப்ப பிரசுரமாகும்'னு கேட்டு நச்சரிக்கக் கூடாது...''

‘‘மாசக்கணக்கா ஆகியும் பப்ளிஷ் ஆகலேன்னா என்ன செய்யறது..''

‘‘அப்ப உன் கதை தட்டையா இருக்குனு அர்த்தம்.. ‘நெருப்புன்னு எழுதினா அந்தக் காகிதம் பத்திகிட்டு எரியணும்'னு ஒரு முதுபெரும் படைப்பாளி சொல்லியிருக்கார்.. அந்தளவுக்கு எழுத்துல வீரியம் வேணும்டா..''

‘‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, சோழர் குல மாமன்னர் கிருஷ்ணமூர்த்தி பராக் பராக்..'' என்று கட்டியம் ஒலிக்கிறது. மூடு பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு பேரரசர் வெளியே வந்து சிம்மாசனத்தில் அமர்கிறார்.

அவையின் மையப்பகுதியில் இருபுறமும் ஈட்டி ஏந்திய காவலாளிகளின் நடுவில் சித்ரகுப்தன் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிற்கிறான்.

‘‘அமைச்சரே.. இவன் மீது சாட்டப்பட்ட குற்றம் என்ன..'' என்று வினவுகிறார்

சக்ரவர்த்தி. வட்டமான மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கிறார்.

‘‘இந்த மானிடன் தன்னை பிரபலமான எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான் அரசே..''

‘‘அப்படியா..'' என்று கர்ஜித்து விட்டு அவனைப் பார்த்து ‘அலை ஓசை' படித்திருக்கிறாயா..'' என்கிறார்.

‘‘இல்லிங்க.. பீச்சுல அலைகளோட ஓசையைக் கேட்டிருக்கேன்.. அவ்வளவுதான்''

வேறு சில வரலாற்று நாவல்களின் பெயர்களை மன்னவர் பட்டியலிடுகிறார்.

‘‘இதையெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை.. பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே எனக்குச் சரித்திரம் பிடிக்காது..'' என்கிறான் சித்ரகுப்தன்.

கடுஞ்சீற்றமடைந்த மாமன்னர் கிருஷ்ணமூர்த்தி ‘‘இவனை இழுத்துச் சென்று பாதாளச் சிறையில் அடையுங்கள்..'' என்று உத்தரவிடுகிறார். ‘‘இவனுக்கு உணவளிக்காதீர்கள்.. தமிழில் வெளிவந்த புதினங்கள் அனைத்தையும் கொடுத்து அவற்றை முழு நேரமும் வாசிக்கச் செய்யுங்கள்..''

அவன் பயந்து போய் சங்கிலியை அறுத்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறுகிறான். மூச்சிரைக்க நெடுந்தொலைவு ஓடி வந்த சித்ரகுப்தன் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குள் வேகமாக நுழைகிறான்.

அங்கே மர நாற்காலியில் அமர்ந்தபடி சாய்வுப் பலகையில் மும்மரமாக எழுதிக் கொண்டிருந்தவர், ‘‘ஏன் இவ்ளோ அவசரம்.. பைய்ய வாரும்..'' என்கிறார். அவரது மேசையில் ‘விருத்தாசலம், உதவி ஆசிரியர்' என்ற பெயர்ப்பலகை காணப்படுகிறது.

மீசை இல்லாத முகமும் தூக்கி வாரியத் தலைமுடியுமாய் இருக்கும் அவர் ‘‘எமது சஞ்சிகைக்கு சந்தா செலுத்த வந்தீரா..'' என்கிறார். ‘‘நுப்பது ரூபா தான்.. ஆயுள் முழுமைக்கும்..''

‘‘இல்லையில்லை'' என்ற சித்ரகுப்தன் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான்.

‘‘சபாஷ்.. ‘ஆத்தங்கரை பிள்ளையார்' வாசித்தது உண்டா..''

‘‘ஆற்றங்கரையில விநாயகர் சிலையைப் பார்த்திருக்கேன்.. அவ்வளவுதான்..‘‘

‘‘காஞ்சனை.. பொன்னகரம்.. ஞானக்குகை..''

‘‘இதெல்லாம் என்னன்னே எனக்குத் தெரியாது..''

கடுப்படைந்த விருத்தாசலம் ‘‘செத்த சவமே..'' என்றபடியே வேகமாக எழுந்து கையிலிருந்த கட்டைப் பேனாவினால் அவனைக் குத்த முயல்கிறார்.

 சித்ரகுப்தன் அவரிடமிருந்துத் தப்பித்துச் செல்கிறான்.

தலைதெறிக்க ஓட்டம் பிடித்தவன் களைத்துப் போய் மவுண்ட் ரோட்டில் வந்து நிற்கிறான். இரட்டை நிர்வாணக் குழந்தைகள் டிரம்பெட் வாசிக்கும்

சிலையை ரசித்துவிட்டு, அந்தப் படப்பிடிப்புத் தளத்திற்குள் சென்று வேடிக்கை பார்க்கிறான்.

ஓர் அறையின் வாசலில் ‘ஜெ.தியாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி, ஜெமினி ஸ்டுடியோ, மெட்ராஸ்' என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே அவர் மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டு நரைமுடியுடன் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார். மேசையில் கையெழுத்துப் பிரதிகள் படபடக்கின்றன.

அவனைப் பார்த்து ‘‘ரெண்டி'' என்று வரவேற்கிறார். ‘‘ஆந்திராவுல பிறந்ததுனால அடிக்கடி தெலுங்கு வந்துடறது..''

சித்ரகுப்தன் தனக்கு சினிமாவிலும் கதையெழுத ஆர்வமிருப்பதைத் தெரிவிக்கிறான்.

‘‘உனக்கு ‘அப்பாவின் சிநேகிதர்' தெரியுமா..'' என்று கேட்கிறார்.

‘‘என் தகப்பனுக்கு ஃப்ரெண்ட்ஸே கிடையாது..''

தியாகராஜன் அவனுடைய காதைத் திருகி ‘‘நான் சொன்னது சிறுகதைத் தொகுப்பு பத்தி..'' என்கிறார். ‘‘மானஸரோவர்.. பதினெட்டாவது அட்சக் கோடு.. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கியா..''

‘‘பூகோளத்துல படிச்ச ஞாபகம் இருக்கு..''

‘‘தேவுடா.. இந்த ரெண்டும் புதினங்களோட பேரு..'' என்று கோபமாக பேப்பர் வெயிட்டை எடுத்து அவன் மீது வீச முயல்கிறார். சித்ரகுப்தன் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடுகிறான்.

நீண்ட தூரம் வந்த பின்னர் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கூரை வேயப்பட்டு இருப்பதைப் பார்க்கிறான். ஏதோவொரு ஈர்ப்பில் படியேறிச் செல்கிறான். அங்கு ஒருவர் வெள்ளை கிருதா, மீசையுடன் லுங்கியும் ஜிப்பாவும் அணிந்து கொண்டு, தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

சித்ரகுப்தனைப் பார்த்து ‘‘யாருப்பா நீ..'' என்று கர்ஜித்தபடியே தபாலை பெஞ்சின் மீது வைக்கிறார். உறையின் மேல், பெறுநர் திரு.முருகேசன் என்றும் விலாசமும் எழுதப்பட்டிருக்கிறது.

அவன் தன்னை சுய அறிமுகம் செய்து கொள்கிறான்.

‘‘சில நேரங்களில் சில மனிதர்கள்..'' என்று அவர் ஆரம்பிக்கிறார்.

‘‘படம்தானே.. பார்த்திருக்கேன்..''

‘‘முதல்ல அது ஒரு நாவல்.. அப்பறம் தான்

சினிமா..‘‘ முருகேசன் தனது மீசையை முறுக்கியபடி ‘‘பாரீஸுக்கு போ..'' என்கிறார்.

‘‘பாரிஸ் கார்னருக்கு அடிக்கடி போயிருக்கேனே..''

அவரது கண்கள் சிவக்கின்றன. ‘‘கரிக்கோடுகள் கேள்விப்பட்டிருக்கியா..''

‘‘இரு கோடுகள் தெரியும்.. இதென்ன புதுசா இருக்கே..''

‘‘அடேய் ஞானசூன்யமே.. நான்  சொல்ல வந்தது சிறந்த இலக்கியப் படைப்புக்களைப் பற்றி..‘‘ என்று ஆவேசமாக பக்கத்திலிருந்த ஆஷ் டிரேயை எடுத்து சித்ரகுப்தன் மீது எறிகிறார். அவன் பயந்தவாறே வேகமாக படிகளில் இறங்கி வீதிக்கு வந்து ஓட்டம் பிடிக்கிறான்.

மூச்சிரைக்க தொலைதூரம் வந்தவன் வெட்ட வெளியில் வினோதமான ஒரு வாகனம் ஆகாசத் திலிருந்து தரையிறங்குவதைப் பார்க்கிறான். கால எந்திரம் மாதிரி தெரிகிறது. அதன் கதவைத் திறந்து கொண்டு ஆஜானுபாகுவாக ஆறரை அடி உயரத்தில் மெலிந்த தேகத்துடன் ஒருவர் வெளியே வருகிறார். அவரது இரண்டு காது மடல்களிலும் உரோமம் அடர்த்தியாகக் காணப்படுகிறது.

அவர் சில அடிகள் நடந்தவுடன் எந்திரக்குரல் கரகரப்பாக அறிவிக்கிறது ‘‘மிஸ்டர் ரங்கராஜன்.. உங்களுக்கு இந்தக் கிரகத்தில் உலவுவதற்கு அறுபது வினாடிகள் தான் அனுமதி.. சீக்கிரம் திரும்புங்கள்..''

சித்ரகுப்தன் அவரைப் பிரமிப்புடன் பார்க்கிறான். அவனது மனதைப் படித்தவர் போல ‘‘கனவுத் தொழிற்சாலை தெரியுமா..'' என்று கேட்கிறார்.

‘‘அதென்ன ஃபேக்டரி.. அங்கே என்ன தயாரிக்கறாங்க..''

அந்த உயர்ந்த மனிதர் மெலிதாகப் புன்னகைக்கிறார்.

‘‘இருபது நொடிகள் ஓவர்..'' பின்னணி ஒலிக்கிறது.

ரங்கராஜன் அவனிடம் ‘‘ஓலைப்பட்டாசு..?'' என்கிறார்.

‘‘வெடிச்சதில்லையே..''

‘‘தலைமைச் செயலகம்?''

‘‘பார்த்திருக்கேன்.. உள்ளே போனதில்லை..''

கொதிப்படைந்த அந்த மாமனிதர் கையிலிருந்த லேசர் துப்பாக்கியால் அவனைக் குறி பார்க்கிறார். சித்ரகுப்தன் தப்பித்து ஓட முயற்சிக்கிறான்.

கால எந்திரத்தின் கதவு மூடுவதற்கு ஆயத்தமாகிறது ‘‘மிஸ்டர் ரங்கராஜன்.. இன்னும் ஐந்து வினாடிகள் தான் பாக்கி.. சீக்கிரம்.. பால்வெளியில் அடுத்த கோளுக்கு நாம் செல்ல வேண்டும்..''

அவர் சுடுவதை ரத்து செய்துவிட்டு வேகமாக அதில் ஏறிக் கொண்டு காணாமல் போய் விடுகிறார்.

சித்ரகுப்தன் நீண்ட நெடிய கனவிலிருந்து விழித்துக் கொண்டான். கைபேசியின் கேமராவை ‘ஸெல்ஃபி மோடு'க்கு மாற்றி தன் உருவத்தை உற்றுப் பார்த்தான்.

லட்சுமணன் ‘‘என்னடா.. பேய் அறைஞ்ச மாதிரி இருக்கே..'' என்றான்.

‘‘அடிக்கடி விதவிதமா சொப்பனங்கள் வருது.. அன்னிக்கி ஒரு மாடு என்னை தள்ளிவிடற மாதிரி ஆரம்பிச்சு.. அப்பறம் என்னென்னமோ நடந்திச்சு.. இப்ப ரொம்ப நேரத்துக்கு பெரிய கனவு.. யார் யாரோ வந்தாங்க.. அவங்க முகம் தெளிவா தெரியலை.. எங்கெங்கயோ போறேன்.. ஆளாளுக்கு என்னவோ சொல்றாங்க.. ‘‘

‘‘யாருடா வந்தது.. என்ன பேரு...''

‘‘எல்லாம் கேள்விப்படாததா இருந்தது.. கிருஷ்ணமூர்த்தி, விருத்தாசலம், தியாகராஜன், முருகேசன், ரங்கராஜன்..''

சற்றே சிந்தித்த லட்சுமணன் கேட்டான் ‘‘அவங்க என்னடா பேசினாங்க..''

‘‘எல்லாரும் ஒரே விஷயத்தை தான் சொன்னாங்க.. ஒவ்வொருத்தரும் சில புஸ்தகங்களைச் சொல்லி ‘அதைப் படிச்சிருக்கியா.. இதை வாசிச்சுப் பாரு' னு ஒரே உபதேசம்..''

‘‘அந்தப் புத்தகங்களோட தலைப்பு எல்லாம் ஞாபகமிருக்கா..''

சித்ரகுப்தன்  நினைவுபடுத்தி அவற்றைப் பட்டியலிட்டான்.

‘‘அடப்பாவி மனுஷா.. உன் கனவுல வந்தவங்க எல்லாரும் மூத்த எழுத்தாளர்கள்டா.. இலக்கிய ஜாம்பவான்கள்..''

‘‘அப்படியா..''

‘‘ஆமான்டா.. நீ சொன்ன வரிசைப்படி பார்த்தா.. அவங்க வேற யாருமில்லை.. கல்கி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா..'' என்றான் லட்சுமணன்.

‘‘எனக்கு அவங்களோட நிஜப் பேரெல்லாம் தெரியாதே..''

‘‘எழுத்துலக ஆளுமைகள் எல்லாரும் உனக்கு காட்சி குடுத்திருக்காங்கடா.. அவங்களோட சிறுகதைத் தொகுப்பு, நாவல்கள் பேரைச் சொல்லி உன்னைப் படிக்கச் சொல்லியிருக்காங்க..''

‘‘இப்ப நான் என்ன செய்ய..''

‘‘நாளைக்கே புக் ஃபேருக்கு போயி.. அஞ்சு பேரும் சொன்ன எல்லா புத்தகங்களையும் வாங்கிட்டு வாடா. ஒண்ணு விடாம படி.. நிறைய பேரோட படைப்புகளை வாசிச்சாதான் நீ நல்லா எழுத முடியும்.. உன் எழுத்து மேம்படும்.. உன்னோட கதைகள் எல்லாம் பத்திரிகையில பிரசுரமாகும்..''

டுத்த வாரம் ஒரு நாள் காலையில் சித்ரகுப்தன் ஆளுயுர நிலைக்கண்ணாடியைப் பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தான். லட்சுமணனின் உருவம் தெரிந்தது.

‘‘என்னடா.. பத்திரிகைகளுக்கு கதை அனுப்பினியா..''

‘‘இல்லை.. எழுதி முடிச்சு அனுப்பலாம்னு நினைக்கும் போது ஃபேஸ்புக் குழுவுல ஒரு சிறுகதைப் போட்டி அறிவிச்சாங்க.. அதுல போஸ்ட் பண்ணிட்டேன்.. இன்னிக்கி முடிவு தெரிஞ்சுடும்.. அநேகமா எனக்குதான் முதல் பரிசு கிடைக்கும்..''

‘‘நீ முகநூல்ங்கற மாயா லோகத்துல இருந்து மீண்டு வரப் போறதில்லை..'' என்றான் லட்சுமணன் வெறுப்போடு. ‘‘கனவுல.. அந்த அஞ்சு ரைட்டர்ஸ்

சொன்ன புத்தகங்களையாவது வாங்கிட்டு வந்தியாடா.. படிக்க ஆரம்பிச்சுட்டியா..''

‘‘புக் ஃபேர் முடியற அன்னைக்கு போகலாம்னு கிளம்பினேன்.. அந்தச் சமயம் எங்க க்ரூப் மெம்பர்ஸ் போன் பண்ணாங்க.. ‘எல்லாரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போகப் போறோம்.. நீங்களும் வரீங்களா'ன்னு கூப்பிட்டாங்க.. அவங்களோட போயிட்டேன்..''

‘‘ம்.. அங்க போயி வெட்டியா அரட்டை அடிச்சதை ஒரு பதிவா எழுதியிருப்பே.. சாப்பிட்ட எச்சில் தட்டை போட்டோ எடுத்து அதையும் ஃபேஸ்புக்ல போட்டிருப்பே.. அதானே..''

‘‘ஆமா.. அந்த போஸ்ட்டுக்கு எவ்ளோ லைக்ஸும் கமென்ட்ஸும் வந்தது தெரியுமா.. நானே எதிர்பார்க்கலை..''

‘‘இப்படி குண்டு சட்டியில குதிரை ஓட்டிட்டே இரு.. உன்னை திருத்தவே முடியாதுடா..'' என்ற லட்சுமணன் ஆத்திரத்துடன் கனமான செல்போனை சித்ரகுப்தன் மீது வீசி எறிந்தான். மொபைல், நிலைக்கண்ணாடியில் பட்டு அது சுக்குநூறாக உடைந்தது. அதிலிருந்து கூரான கண்ணாடிச்

சில்லுகள் அவன் கண்ணில் தெறித்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.

ட்சுமணன் என்பது multiple personality disorder எனப்படும் ‘பல்வகை ஆளுமை நோயால்' பாதிக்கப்பட்டு, அவ்வப்போது தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ‘சித்ரகுப்தனின்' இயற்பெயர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com